ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை

இன்று ஓப்பன் பண்ணியே ஆகவேண்டும்” என்று அஜய் முணுமுணுத்துக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

*

அஜய் பேட்ஸ்மன் இல்லை. பவுலர். புரொபசனல் கிரிக்கெட்டரும் அல்ல. வாரம் முழுவதும் நைட் ஸிப்ட் பார்த்துவிட்டு சனிக்கிழமை காலையில் கிரவுண்டிற்கு முதல் ஆளாக வரும் ஐடி ஊழியர்களுள் ஒருவன். சென்னைக்கு வந்த முதல் வருடம் அவனது கம்பெனியில் கிரிக்கெட் போட்டி அறிவித்தார்கள். போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடன் அவனது அணியில் எல்லோரும் எப்படி பரபரப்பானார்கள் என்று அடிக்கடி அஜய் நினைத்துப்பார்ப்பான். யாரெல்லாம் புதிதாக சேர்ந்திருந்தார்களோ அவர்கள் எல்லோரிடமும் கிரிக்கெட் விளையாடுவாயா என்று மேனேஜர் கேட்டார். அஜய் “விளையாடுவேன்” என்று சொன்னவுடன் “பேட்ஸ்மனா?” என்றார். “இல்லை பவுலர்” என்றவனை ஒரு நொடி ஆச்சர்யமாய்ப் பார்த்துவிட்டு “சரி, சனிக்கிழமைக் காலை எம்சிசி கிரவுண்டிற்கு வந்துவிடு. ‘நெட்ஸ்’ இருக்கு.. ஈஸ்ட் தாம்பரம் ஆப்போஸிட்டில் இருக்கிறது” ஒரு சிரிப்போடு அவர் சொல்லிவிட்டுப் போனார். அவர் ஏன் சிரித்தார் என்று அஜய்க்கு புரிந்தது.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அஜய்க்கு இது பழகிப்போன விசயம். முதலாம் ஆண்டின் முதல் வகுப்பில் எல்லோரின் பெயரையும் ஊரையும் கேட்டு வந்த பேராசிரியரிடம், “பேரு அஜய், ஊரு எம்.காட்டாம்பட்டி” என்றான். “என்னடா.. பேருக்கும், ஊருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே” என்று சொல்லி சிரிக்க மொத்த வகுப்பும் சிரித்தது. “பேரு அஜய்.. ஊரு காட்டுப்பட்டி.. ஹாஹாஹா..அது என்ன எம்.காட்டாம்பட்டி..ஹாஹ.. ஊருக்கு இனிசியல்லாம்” பேராசிரியர் விடுவதாக இல்லை. அஜய்க்கு கோபம் வந்தது. சட்டென்று,”அது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரோட நினைவா வச்சுருக்காங்க சார்.. அவரு பேரு மணவாளன் தியாகி.. எங்க ஊர்ல இருந்து சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு உயிர் நீத்தவர்.. அவரோட பிள்ளைகளா எங்க ஊர்ல இருக்கவங்க நினைக்குறோம்.. அதான் எம். இனிசியல்..” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான். பேராசிரியர் முகம் சுருங்கியது. வகுப்பில் அமைதி. அஜய்க்கு ஒரே சந்தோசம். தனக்குத் தோன்றிய அந்த திடீர் கதையை நினைத்து சிரிப்பை அடக்கமாட்டாமல் தலையைக் குனிந்து நின்றான். “சரி உட்க்கார்” என்றவர் அதன் பிறகு அவனிடம், கல்லூரி முடியும் வரை, ஒரு சிறு மரியாதையோடு நடந்துகொண்டதாக பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்வான் அஜய்.

சனிக்கிழமை கிரவுண்டிற்குப் போனபோது அனேகமாக எல்லோருமே வந்துவிட்டிருந்தனர். எப்படியும் டீமில் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து அவசரமில்லாமல் பொறுமையாக கிளம்பிப் போனவனிடம் “என்னய்யா இதான் டைம்மா. ஆபிஸுக்குத்தான் டைம்க்கு வர மாட்றீங்க விளையாடக்கூடவா.. இந்தா பவுலிங் போடு“ எனப் பந்தைக் கொடுத்தார் மேனேஜர்.

அஜய் சற்று குழம்பித்தான் போனான். “எப்போதும் தன்னைப் பார்த்துதானே குழம்புவார்கள் இது என்ன புதுக்கதை” என்று நினைத்துக்கொண்டே சுற்றி மற்றவர்களைப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய கிண்டல் மறைந்திருந்தது. இந்த தொப்பையை வைத்துக்கொண்டு ‘என்னத்த போடப்போறான்’ என்பதைப்போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேனேஜர் பவுலிங் போடச் சொன்னது கேப்டனுக்கு. ஒருவேளை நன்றாகப் போட்டால் டீமில் எடுத்தாலும் எடுப்பார்களோ என்று யோசித்துக்கொண்டே ‘ரன்அப்பை’ சரி பார்த்தான்.

பாஸ்ட் பவுலரா” என்று மேனேஜர் கேட்டார். “

ஆமா சாஜி, ரைட் ஆர்ம் மீடியம் பார்ஸ்ட்”, “ம்க்கும்” என்று யாரோ சொன்னதுபோல் அவனுக்கு கேட்டது.

முதல் பால் புல்டாஸானது. ஆனால வேகம் நன்றாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையாய்ப் பார்த்தார் மேனேஜர். அடுத்த பாலைப் போடத் திரும்பியவனிடம். “ஸ்பீட் ஓகே.. பட் குட் லெந்த்ல போடு” என்றார்.

அடுத்தப் பந்து ‘யார்கராய்’ விழுந்தது. சரியாக கேப்டனின் டோவில் அடிக்க அவர் வலியில் காலை உதறிக் கீழே விழுந்தார். “சூப்பர்.. சூப்பர் அஜய்” என நெட்ஸுக்கு வெளியே இருந்து மேனேஜர் கத்துவது கேட்டு அஜய் உற்சாகமானான். “செம யார்க்கர்டா” என டீமில் மற்றவர்களும் பாராட்டினர்.

அடுத்த இரண்டு பந்துகளும் யார்க்கர்ஸ். கேப்டனால் ‘ப்ளாக்’ மட்டுமே செய்ய முடிந்தது. சாஜி இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒரு ஓவர் போட்டுவிட்டு அடுத்தவரிடம் பந்தைக்கொடுத்தவனைப் பார்த்து “வெல் டன் டா.. ஆறு பாலும் கன்டினியஸா எப்படி யார்க்கர் போட்ட.. ஐ எம் இப்ரஸ்ட்.. இந்த வருசம் மேட்ச்சல நீ இருக்க.. ரெடியாயிக்க” என்று சொல்லிவிட்டு கேப்டனிடம் பேசப் போனார்.

அஜய் வாயெல்லாம் பல்லாக சிரித்தாலும் உள்ளூர ஒரு சின்ன உறுத்தல் இருப்பதை வெளியே காட்டமல் இருக்க சற்று சிரமப்பட்டான்.

ஆறு பாலும் எப்படிடா யார்க்கர் போட்ட..?” அவனுக்கே தெரியாது என்பதுதான் உறுத்தலுக்குக் காரணம். பந்தைப் போட ஓடிவரும்போது குட் லெந்தில் போடவேண்டும் என்று குட் லெந்த் இடத்தையே பார்த்துக்கொண்டு ஓடிவந்தாலும் பந்து கையை விட்டு வெளியே போய் யார்க்கராகத்தான் விழுந்தது. அடுத்த பால் நினைத்த மாதிரி போடுவோம் அதற்கு அடுத்தபால் போடுவோம் என்று ஒரு ஓவர் முழுவதும் யார்க்கர்தான்.

எது எப்படியோ மேனேஜர் ஹேப்பி. டீமில் இடம் கிடைத்ததால் அவனும் ஹேப்பி.

அதன் பிறகு அணியில் முக்கிய நபராகிப் போனான் அஜய். டீமில் சேர்ந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. நிறையத் தோல்விகள், சில வெற்றிகள், சின்ன சின்ன சண்டைகள், பல விலகல்கள், புதியவர்கள் வருதல் என பல விசயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அஜயின் பவுலிங் பற்றின சந்தேகங்களும் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருந்தன என்பதில் அவனுக்குத் வருத்தம். அது நன்றாக விளையாடாதபோது அதிகமாகும், நன்றாக விளையாடும்போது அதைவிட அதிகமாகும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு எப்போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையும் துக்கத்தையும்தான் விளையாடும் எல்லோருக்கும் தரும். ஒரு சர்வதேச வீரருக்கும் அஜய் போன்று ஜாலியாக விளையாடுபவருக்கும் ஒரே வித்யாசம் அவர்களின் விளையாட்டில் இருக்கும் தரம் மட்டும்தான். மற்றபடி சந்தோசம், துக்கம், ஏமாற்றம், சோர்வு எல்லாமே விளையாட்டை நேசித்து விளையாடும் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அஜய் விசயத்தில் இது அப்படியே நேர்மாறாக நடப்பதாக நினைத்தான்.

ஒரு மேட்ச்சில், ஒரு இடைவெளிக்குப் பிறகு,பவுலிங்கை ஓப்பன் செய்தான். முதல் பந்தை எதிர்கொள்ள நின்றவர் நல்ல உடற்கட்டுடன் இருந்தார். அடிக்க வசதியாக போட்டால் எல்லா பந்துகளையும் சிக்ஸர்தான் அடிப்பார் என்பதுபோல் இருந்தது தோற்றம். அஜய் அவருக்கு “மிடில் அண்ட் ஆப்பில்” போட வேண்டும் என்று முடிவு செய்து ஓவரின் முதல் பந்தைப்போட்டான். ஆனால் கையிலிருந்து பந்து வெளியேறும்போதே தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது. உள்ளங்கையில் இருந்து போகையில் அது லெக் ஸ்டம்பை நோக்கி போகப்போகிறது என்று தெரிந்தததால் முழுவதுமாக போவதற்குள் நான்கு விரல்களாலும் ஒரு சிறு அழுத்தம் கொடுத்தான். பவுன்ஸ் ஆகும் என்று நினைத்து அப்படிச் செய்தான். பந்து அவன் முதலில் நினைத்தது போலவே லெக் ஸ்டெம்ப் லைனில் விழுந்தது. ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக ஸிவிங் ஆகி உள்ளே வந்து ஆப் ஸ்டம்பைத் தட்டியது. அஜையை போலவே பேட்ஸ்மனும் அதை எதிர்பார்க்கவில்லை முதல் பந்திலேயே போல்ட். போல்ட் எடுத்ததை நம்பமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தான் அஜய். அவன் மட்டுமல்ல டீமில் இருந்த எல்லோருமே சிரித்தார்கள். எல்லோருக்குமே அது மோசமான பந்தாக, பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ போகவேண்டியது, தப்பித்தது என்று தெரிந்திருந்தது.

அஜய் அந்த மேட்ச் முழுவதும் நன்றாகப் பந்து வீசினான். இன்ஸிவிங், அவுட்ஸிவிங் என பந்து இரண்டு பக்கமும் திரும்பியது. “மேட்” புதிதாக இருந்ததும் ஒரு காரணம். அவனின் பந்துவீசும் முறையும் ஒரு காரணம். பந்து வீச ஓடத் தொடங்கும் முன் ஒரு குதி குதித்துவிட்டு ஸ்டம்ப் அருகில் வரும்போது கழுத்தை இடப்பக்கம் திருப்பி கையை வலதுபக்கமாய் சாய்த்து வீசுவான். பந்து தரையில் குத்தியவுடம் பேட்ஸமனை நோக்கித்தான் வரும். வெளியே போகாது. ஆனால் அன்று இரண்டு பக்கமும் எப்படி திரும்பியது என்று வழக்கம்போல் அவனுக்கே தெரியவில்லை. யூடியூப்பில் எப்படி ஸிவிங் செய்வது என்று பார்த்துவிட்டு வந்துபோட்ட போதெல்லாம் கோட்டைக் கிழித்து அதன் மேலேயே போவதுபோல் நேராக போகும், இன்றைக்கு என்ன ஆனது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அதை அருகில் இருந்து கேட்டதுபோல் கேப்டன் “உன் கன்ட்ரோல்லதான் இருக்கா இல்லா அதுவா ஸிவிங் ஆகுதா” என்று கேட்டார். சிரித்துச் சமாளித்தாலும் உள்ளூர எரிச்சல் அடைந்தான். “அது என்ன.. தன்னிடம் மட்டும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி சந்தேகமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி போட்டால் என்ன.. நன்றாக போடுகிறேனா இல்லையா… இவர்கள் பவுலிங் போடும்போதோ பேட்டிங் ஆடும்போதோ நான் இப்படிக் கேட்டால் ஒத்துக்கொள்வார்களா” மனதிற்குள் குமைந்தான். அவரிடம் எதுவும் கேட்க்கவில்லை.

அப்போட்டிக்குப் பிறகு அவன் நன்றாக விளையாடினால் மற்றவர்களின் குறைகளைக் குத்திக்காட்ட ஆரம்பித்தான். டீமில் எப்போதுமே நன்றாக விளையாடியவர்கள் பேசும்போது திரும்ப பேசமாட்டார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையும் விடாமல் பழித் தீர்த்துக்கொண்டான் அஜய். அவர்களும் பதிலுக்கு அவன் ‘பார்ம்அவுட்’ ஆன சமயங்களில் பவுலிங்கை ஓப்பன் செய்யவிடாமல் பந்து நன்றாக தேய்ந்து பழையதானவுடன் கொடுப்பார்கள். எப்படிப் போட்டாலும் பேட்ஸ்மனின் முன் போய் நின்று “ம்ம்.. அடி” என்கும்.

*

அஜய் கிரவுண்டிற்கு போனபோது யாரும் இல்லை. ‘கிட் பேக்கை’ வைத்துவிட்டு ‘ஸ்ட்ரெச்’ செய்தான். கிரவுண்டை சுற்றி ஒரு முறை ஓடி வந்தான்.

நன்றாக வார்ம் அப் ஆகவேண்டும். இத்தனை நாள் போடாத வேகத்தோடு போடவேண்டும்” போன மேட்ச்சில் நான்கு ஓவரில் முப்பத்தி ஏழு ரன்கள் கொடுத்ததிற்கு டீமில் சீனியர்கள் கிண்டல் செய்ததுதான் அவனின் இந்த ஆவேச பயிற்சிக்கு காரணம்.

டாஸில் வென்று அஜய் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் உள்ளே போவதற்கு முன் பேசும்போது இன்னைக்கு “மேட் புதுசு போட்ருக்காங்க பந்து நல்லா வரும். ஒழுங்கா போடலன்னா அடியும் செமயா வாங்குவோம்.. அதுனால சேசிங் எடுத்தேன்.பவுலர்ஸ் ஒழுங்கா போடுங்க” என பவுலர்களைப் பார்த்து பேசினார்.

அஜய் ஆர்வத்தோடு சரி என்று தலையாட்டிவிட்டு எல்லோருக்கும் முன் உள்ளே ஓடினான்.

கீப்பரும், கேப்ட்டனும் பீல்டிங்கை செட் செய்தார்கள். எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு அஜையை பார்த்து, நீ தேர்ட் மேன் போ என்றார்கள்.

ஏமாற்றமாக இருந்தாலும் தேர்ட் மேன்னாய் நிற்பதால் அடுத்த ஓவர் போடச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் போய் நின்றான்.

ஆனால் அஜய்க்கு மேட்ச் முடியும்வரை ஓவரே தரவில்லை. அவனே இரண்டு முறைப் போய் கேட்ட பிறகும் “இரு வெய்ட் பண்ணு” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் இதுதான் முதல் தடவை அவனுக்கு பந்து வீச வாய்ப்பே கிடைக்காமல் போனது. முதல் பாதி முடியும்போது கிளம்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தான். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.

எதிரணியினர் இருபது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு நூற்றி நாற்பத்தி ஏழு ரன்கள் எடுத்தனர்.

அஜய் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட் ஆறாவது ஓவரில் விழுந்தது. ஸ்கோர் 36/1.

பின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.

பவுலிங் தராததால் பேட்டிங் கிடைக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தான். யாரிடமும் எதுவும் கேட்க்கவில்லை. தந்தால் அவர்களாகவே தரட்டும் என்று காத்திருந்தான்.

பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் முடிவில் எழுபது ரன்கள் எடுத்தனர். இன்னும் அறுபது பந்துகளில் எழுபத்தி ஏழு ரன்கள் தேவை.

அஜய்க்கு ஓவர்கள் போக போக கோபமும் எரிச்சலும் அதிகமாகிக்கொண்டே வந்தன. ஒரு மேட்ச் முழுவதும் எதுவுமே செய்யாமல் வீட்டிற்குப் போவற்குப் பதில் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற கடுப்புடன் விக்கெட்டுகள் சீக்கிரம் விழ வேண்டத் தொடங்கினான்.

பதினைந்தாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதுவரை நன்றாக ஆடி வந்த கேப்ட்டன் அவுட்டானார். எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை மாறி அணி தடுமாறத் தொடங்கியது.

ஒரு வழியாக அஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. இருபதாவது ஓவர். அவனுக்குப் பின் ஒரு விக்கெட் இருந்தது. வெற்றி பெற பதினைந்து ரன்கள் தேவை. அனேகமாக மேட்ச் கையைவிட்டு போய்விட்டதுபோலத்தான்.

அஜய்க்கும் பெரிய நம்பிக்கை இல்லை. இப்படி வாய்ப்பு கிடைத்ததிற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே நான் ஸ்ட்ரைக்கரில் போய் நின்றான். எதிர் முனையில் நின்றிருந்த சீனியர் எதுவும் இவனிடம் சொல்லவில்லை. ரிசல்ட் தெரிந்துவிட்டது என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். அஜய் க்ரீசிற்குள் நன்றாக பேட்டை தள்ளி வைத்து நின்றுகொண்டான். போன மாதம் ஒரு முறை ‘மேன்கேட்’ முறையில் அவுட்டானதை அவன் மறக்கவில்லை. முதல் பந்தில் ஒரு ரன் ஓடினார்கள். ஓவரின் இரண்டாவது பந்தை அஜய் எதிர்கொண்டான். ‘ஷாட் பிட்ச்’ பால்தான். ஆனால் பேட்டை தூக்கி பந்திற்கு வருவதற்குள் பந்து எழும்பாமல் வந்து காலில் அடித்து ‘ஷார்ட் பைன் லெக்கிற்குப்’ போனது. ஒரு ரன் ஓடினார்கள். நல்லவேளை ‘எல்பிடபில்யூ’ ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டான். அடுத்த ஒரு ரன் எடுத்தார்கள். மூன்று பந்துகள் மீதமிருந்தன. முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள். வெற்றிக்கு இன்னும் பன்னிரெண்டு ரன்கள் வேண்டும்.

அஜய்க்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்றிருந்தது. ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொள்வதற்கு முன்னால் வெளியே நிற்கும் தன் அணியினரைப் பார்த்தான். எல்லோரும் இவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.

பவுலர் ஓடிவரத்தொடங்கினார்.

அஜய் ஒரு முடிவெடுத்தவனாய் இறங்கி வரத் தொடங்கினான். பந்து வரும்போது ஏறக்குறைய பிட்ச்சின் நடுவில் இருந்தான். ஹெல்மட் போடாமல் அவ்வளவு தூரம் இறங்கி ஆடுவது ஆபத்தான விசயம். வெறி வந்தவன்போல் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்டை லாங் ஆன் திசையை நோக்கிச் சுத்தினான். பந்து அவன் பேட்டில் பட்டவுடன் ரன் எடுக்க ஓடியவன் இரண்டாவது ரன் ஓடி முடித்தபோதுதான் பந்து பவுண்டரிக்கு போனதைப் பார்த்தான்.

வெளியே நின்றுகொண்டிருந்த அணியினர் உற்சாகமானார்கள். “கமான் அஜய்.. யு கேன் டூ யிட்“ என்று கத்தினர்.

அடுத்தப் பந்தையும் அதே மாதிரி இறங்கி வந்து எதிர்கொண்டான் அஜய். இந்த முறை ‘லாங் ஆப்’ திசையில் நான்கு ரன்கள். திடீரென்று பரபரப்பானது ஆட்டம். வெளியே இருந்து “கமான் அஜய் கமான் அஜய்” என்று கத்தத்தொடங்கினர். எதிரணியினர் பவுலரிடம் சென்று பேசினர்.

அவனுக்கு நெஞ்சு பட பட என்று அடித்தது. அவன் காதெல்லாம் அடைத்தது சுத்தி என்ன நடக்கிறது என்று புரியாததுபோல் ஒரு மெல்லிய நடுக்கத்தோடு அடுத்தப் பந்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத்தொடங்கினான். இந்தப் பந்தையும் இறங்கி ஆட வேண்டாம், எப்படியும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியேதான் போடுவார்கள் நின்ற இடத்தில் இருந்தே அடிப்போம் என்று முடிவு செய்தான். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த “சீனியர், என்னடா பண்ற.. ட்ரை பண்ணு” என சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.

கடைசி பந்தைப் போட பவுலர் ஓடி வந்தார். ஒரு பால். நான்கு ரன்கள். அதுவரை எவ்வளவு நன்றாக விளையாடினாலும் கிண்டலாகவும், சந்தேகத்தோடும் பார்த்து வந்த அணியின் முன் நிரூபிக்க, தனக்கு பவுலிங் மட்டுமல்ல. பேட்டிங்கும் வரும் என்று சொல்ல ஒரு வாய்ப்பு.

பவுலர் பந்தை வீசினார். கடைசி நொடியில், இதையும் இறங்கி வந்தே ஆடலாம் என்று முடிவு செய்து ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்குள் பந்து வந்துவிடவே முன்னேயும் போக முடியாமல் பின்னாலும் வர முடியாமல் இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு எந்த திசையில் அடிப்பது என்பதையும் முடிவு செய்ய நேரம் கிடைக்காமல் அப்படியே நின்றுவிட்டான். நான்காவது, ஐந்தாவது பந்துகளை இறங்கி வந்து ஆடியதால் பவுலர் பிட்ச்சின் நடுவிலேயே பந்தைக் குத்தி பவுன்சர் போட்டார். பேட்டை விட்டிருந்தால் எட்ஜ் வாங்கிக் கூட தேர்ட் மேன் திசையில் பவுண்டரி கிடைத்திருக்கும்.

பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது.

நான்கு ரன்கள் வித்யாசத்தில் தோல்வி. அஜயின் கண்கள் கலங்கின. எல்லோரும் வந்து கை கொடுத்தார்கள். நன்றாக முயற்சி செய்தான் என்றார்கள். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சீனியர், அம்பயர்கள், எதிரணியினர், அவனின் அணியினர் என எல்லோருமே பாராட்டினார்கள். அவனுக்குத்தான் மனம் ஆறவேயில்லை. “நல்லா ஷார்ட்டாதான வந்தது .. டீப் ஸ்கொயர் லெக்ல ஒரு புல் ஆடுவீங்கன்னு நினச்சேன்.. ஏன் மிஸ் பண்ணீங்க” எதிரணி விக்கெட் கீப்பர் தோளில் தட்டி கேட்டுவிட்டுப் போனார்.

எப்படி அந்தப் பந்தை விட்டேன்னு தெரியல..” என்று தன் அணியில் ஒவ்வொருத்தரிடமும் புலம்பினான். “எல்லோரும் பரவால்ல விடு…. நல்ல ‘ட்ரை’தான்” என்றனர். ஒருவர் கூட வழக்கமான கிண்டலைச் செய்யவில்லை. அதில் ஒரு சிறு சந்தோசமடைந்தாலும் அவனுக்கே முதன் முறையாக அவன் மேல் சந்தேகம் வந்தது.

தான் நினைத்தபடி ஒரு நாளும் தன்னை விளையாட அனுமதிக்காதா இந்த விளையாட்டு”. என்றிருந்தது அவனுக்கு.

கிளம்பும்போது என்றுமில்லாத அளவு சோர்வாய் உணர்ந்தான் அஜய்.

3 comments

  1. நல்ல கதை, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள்/ மாநில அணியில் இடம் பெறுபவர்கள் சந்திக்கும் அனுபவங்கள். மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

  2. இது முற்றிலுமாக நான் கல்லூரி வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இருந்தது!
    அஜய்க்கு அடுத்த ஆட்டம் முதல் ஓவர் பந்து வீசும் வாய்ப்போடு மட்டும் இல்லாமல், பேட்டிங்கிலும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு சிறப்பான அழுத்தம் கொடுக்கிறது… வாழ்த்துக்கள் ப்ரோ!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.