வானெங்கும் நெடுவனம்
நிலவை களிமண்னெனப்
பிசைந்து
குழந்தையிடம் கொடுத்து விட்டேன்
ஒளியற்ற இருள்
புலம்பி புலம்பி
அழுதப்படியே நடக்கிறது.
நட்சத்திரங்களை பிடுங்கி
களிமண்ணில் புதைத்து
வீசியெறிகிறது பிள்ளை.
திமுதிமுவென
கிளர்ந்தெழுகிறது பெருவனம்.
கண்ணீரில் உப்பியக்
கிளையொன்று
அசைந்து அசைந்து
மேகத்தை தூசென துடைக்க,
சிலிர்த்து சிரிக்கிறது வானம்.
இப்போது
மண்ணை கழுவிய குழந்தையின்
கரங்களில் அப்பியிருப்பதெல்லாம்
வெறும் நிலாவாசம்.
புழுத்தாய்
உறக்கத்திற்கும்
உலாவலுக்குமிடையே
அலுத்துக்கிடக்கும்
சிறுஉயிரென்னை
கைகளில் ஏந்தி
மூலையில் கிடத்தி
துளசியூறிய நீரென
எனதெச்சில்லை சுவைக்கும்
ஈயாகிறது நான்
மார்ப்பிடுக்கில் துடைக்காத
ஈமப்பாலொழுக்கை
நக்கியுண்ணும்
சரீரப்புழுவிற்கு
இன்று நான் தாய்