வியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி

கற்பனாவாதத்தின் அழகியல் இந்த நாவல். கற்பனை தொட முயலும் உச்சம் தான் இத்தகைய நாவல்களை இரசனைக்குரியதாக ஆக்குகிறது. இது இயற்கையுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது.நதியும்,காடும், வயலும், பறவையும் மீன்களும்,மிருகங்களும் கதைப் பின்னலில் நம்முடன் வந்து கொண்டே இருக்கின்றன.’மேஜிக் ரியலிஸம்என்ற வகைமையில் இது வருகிறது.லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு முன்னே மாய யதார்தத்தை அதீன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்.

இது வங்காள மொழியில் அதீன் பந்த்யோபாத்யாவால் 1961 முதல் 1971 வரை 18 சிறுகதைகளாக எழுதப்பட்டு நாவலாக உருவெடுத்தது. நூலின் பெயர்நீல்கண்ட் பகீர் கோஞ்சேஇவர் 1930-ல் டாக்காவில் ராயினாதி கிராமத்தில் பிறந்து இந்திய விடுதலையை ஒட்டி இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.இவரது முழுப் பெயர் அதீந்த்ரசேகர் பந்த்யோபாத்யாயா.

பெப்ப்ர்ஸ் தொலைக்காட்சியில்படித்ததும் பிடித்ததும்நிகழ்ச்சியில் வண்ணதாசன் இந்த நாவலைக் குறிப்பிட்டுஇதைப் போன்று ஒன்று எழுத முடியுமா என்னால்?’ என்று வியக்கிறார். ஜெயமோகன் கொண்டாடும் நூல் இது.

இந்த நாவலை தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் யெஸ் க்ரிஷ்ணமூர்த்தி.இவர் 1929-ல் புதுக்கோட்டையில் பிறந்தார்.பி. ஏ புதுகை மன்னர் கல்லூரியில், எம். நாக்பூரில்.சிறிது காலம் கல்லூரிப் பேராசிரியர் பின்னர் ஒய்வு வரை ஏஜீஸ் அலுவலகம். கல்கத்தாவில் தான் பெரும்பாலும் வசித்தார்.ஆறு மொழிகள் அறிந்தவர். 60 நூல்களுக்கு மேல் மொழியாக்கம் செய்தவர். சிறுகதைகள் எழுதியவர். சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றவர். இலக்கிய சிந்தனை விருது, மற்றும் பல விருதுகள். சென்னையில் 07-09-14-ல் காலமானார்.திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

அமுதக் கடலில் குளிக்க வந்தேன், தோழி, அது விஷமாக மாறியதேன்?’ இப்பாடலை இந்தநாவலின் கருத்தென்று சொல்லலாம்.வாழ்க்கையெனும் பகடை ஆட்டத்தில் ஏணியும் பாம்பும் இருந்து கொண்டே இருக்கின்றன.முடிந்த முடிவாகத் தெரிவதெல்லாம் உண்மையாகவே முடிந்து விட்டதா இல்லை காட்சிப் பிழையா?

நீலகண்ட பறவை என்பது என்ன? அது உண்மையிலே ஒரு பறவைதானா? பாலின் என்ற பெண்ணா? அதை மணீந்தரனாத்(மணீ) ஏன் தேடுகிறார்?அது பறவையின் நிழலைப் பற்றிக் கொண்டு அதை உண்மையாகப் பிடிப்பது போலவா?அவரின் உயிரிசை ஏன் இசைக்கப்படவில்லை?ஒரு மாபெரும் வீரனைப் போல் காட்டிலும், மேட்டிலும் இரு கைகள் விரித்து அவர் கூவி அழைப்பது எதை அல்லது யாரை?

பாலின் ஒரு மனிதப் பிறவியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவள் கற்பனையான நிஜம். அவளை அவர் தன் வீட்டு நெல்லி மரத்தடியில் தெளிவாகப் பார்க்கிறாரே! தன் அப்பாவிடம் அவர் மனதளவில் சொல்வதாக ஒரு அழகு.’பாலினுக்கு நீண்ட மூக்கு, நீலக் கண்கள், பொன்னிற கேசம். அப்பா நீங்கள் அவளை தூர விரட்டிவிட்டீர்கள். நான் கடலைப் பார்த்ததில்லை. ஆனால் வசந்த காலத்து நீல வானைப் பார்த்திருக்கிறேன்.சோனாலிபாலி ஆற்றில் அவள் முகம்;ஏதேனும் விண்மீன் ஆற்றில் பிரதிபலித்தால் அது அவளேகாதலின் உருக்கம். மேலை நாட்டின் உன்மத்தமான காதல் வகை. ஆனால், அதீன் அதையும் காட்டி பெரிய மாமி மூலம் அவள் அவர் மேல் கொண்டுள்ள அழியாத காதலை அழகாகச் சொல்கிறார்.மணீ வாழும் கவித்வமான காதல் கதையில் காமம், பசி என்று மண்ணில் புரளும் கதாபாத்திரங்கள் அதன் உன்னதத்தை மேம் படுத்துகின்றன.

நூலின் தொடக்கத்தில் ஈசம் ஷேக் மாலைச் சூரியனின் அழகான தோற்றத்தோடும் , அக்ராண் மாதத்து பின் பனிக் காலத்தோடும், தானியங்களின் மணமோடும், பறக்கும் பூச்சிகளோடும், தன் படகோடும்,ஹூக்காவோடும் அறிமுகமாகிறான். தனபாபுவிற்கு(சசீ) பிள்ளை பிறந்ததற்கு அவன் மேற்கில் வணங்கிசோபான் அல்லாஎனச் சொல்கிறான்.கிராமக் குடிகளிடையே இருந்த மத நல்லிணக்கத்தை ஆசிரியர் திறமையாகக் கையாள்கிறார்.அவன் நன்றி சொல்கையில் மறையும் ஆதவன் அவன் முகத்தில் பாய்ச்சும் ஒளி அவனை தேவன் என ஆக்குகிறது.குழந்தை பிறந்த வீட்டிற்குப் போன அவன் மூடாபாடாவிலிருக்கும் தன பாபுவிற்கு தான் செய்தி சொல்லப் போவதாகச் சொல்கிறான். அவர்கள் வீட்டில் பைத்தியக்காரப் பெரிய பாபுவின் மனைவிஅவனுக்கு திருப்தியாக சாப்பாடு போடுகிறாள். குழந்தை பிறந்த அறையை இவர் வர்ணிப்பதே அழகு. பிரம்பு இலைகள்,மட்கிலா மரத்தின் கிளை, அறைக்குள் விளக்கு, குழந்தையின் அழுகை, தகரத்தாலும், மரத்தாலும் ஆன வீடு,சகட மரத்தின் நிழல், ஆனால் பெரிய பாபு இல்லை. அவன் அவரையும் வழியில் ஆலமரத்தடியில் பாகல் வயலுள்ள மேட்டுப் பகுதியில், புதர்களில் அலையும் மின்மினிகளினூடாக தேடி விட்டு மேலும் நடக்கிறான்.வழியில் சந்திப்பவனிடம் எனக்கும், உனக்கும் சிறு கஷ்டங்கள் தான் என பெரியபாபுவின் மனைவியையும் அந்த பாபுவையும் பற்றிக் கவலைப்படுகிறான்.அவன் பாவுசா ஏரியைக் கடந்துவிட்டால் பின்னர் குதாராவில் படகு கிடைக்கலாம்.இருட்டில் கிழட்டு இலவமரமும் அதன் குச்சிகளும் சமாதிகளும் அவனுக்குக்கூட பயம் தருகின்றன.அவன் பராபர்திப் பாதையிலிருந்து வலது பக்கமாகச் செல்கிறான்.மைதானம் சூல் கொண்ட பசு போல அரவமற்றிருக்கிறது.மீனவப்படகு தான் இருந்தது. அந்த மீனவன் சொன்னான்நாளைக்கு கர்மாமீனைக் கொண்டு கொடுத்துவிட்டு சட்டை கேட்டு வாங்கப் போகிறேன் தனபாபு வீட்டில்அந்த மீன் நீலக் கண்களோடு பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு பெரிய பாபுவையும் அவரது மனைவியையும் நினைவுபடுத்தியது.ஏரியின் மறுகரையில் அவன் சணல் வயல்களைக் கடக்கிறான். கேசரி, உளுந்து பயிர்கள் இருக்க வேண்டும், ஆனால் இல்லை தரிசு நிலம்.ஜோகிபாடாவில் நெசவு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.மீனவப் படகில் வலைக்கு மேல் மூங்கிலில் காணும் விளக்கு துருவ மீனைப் போல் வழி காட்டுகிறது.நாணல் குடிசை, மாந்தோப்பு,மைதானம்,கோலா காந்தால் பாலம், பூரிபூஜா மைதானம், மேலும் கிராமங்கள் ஈசம் தலைசுற்றி விழுகிறான். தனபாபு (சசீ) தன் மனைவி உடல் நிலைசரியாக இல்லையென்று கடிதம் எழுதியதால்,தன் 2-வது அண்ணனிடம் சொல்லிவிட்டு சுந்தர் அலியின் துணையோடு சீதலக்ஷா ஆற்றின் கரையோரமாக வந்து பாவுசா ஏரியைக் கடந்து வீட்டிற்குச் செல்லலாம் என வருகிறார்.ஆண்குழந்தை பிறந்திருப்பது அவருக்கு இன்னமும் தெரியாது.தனபாபு ஈசத்தை காப்பாற்ற, அவருக்கு பிள்ளை பிறந்ததைச் சொல்கிறான். இருளும்ஒளியுமாக மைதானத்தில் இதை எப்படி எடுத்துக் கொள்வது என அவர் தவிக்கிறார். தயங்கித் தயங்கி ஈசம் அவரிடம் தனக்கு துணி தரவேண்டுமென்கிறான். அவர்கள் பாகல் வயல்களைத்தாண்டி தானிய வயலிற்கு வருகையில் பெரிய பாபுஅந்த வயலில் இருப்பதைப் பார்க்கிறார்கள்.’கச் கச்என்ற சப்தம். அந்த பெரிய பாபு ஒரு ஆமையை மல்லாத்திப் போட்டு அதன் மார்பின் மேல் உட்கார்ந்திருக்கிறார்.’காத் சோரத் சாலாஎன்று கத்துகிறார். இந்தப் பிரயோகம் அடிக்கடி வருகிறது.பிள்ளை பிறந்த செய்தி கேட்டு தம்பியுடன் வீட்டிற்கு வரும் அவர் திடிரென ஓடப் பார்க்கிறார். 40 வயது கடந்த இந்த மனிதன் தன் கைகளைக் கொட்டுகிறார். கைகளை நீட்டி வானத்தைத் தொடுவார் போலும், ஆயிரக்கணக்கான நீலகண்ட பறவைகளை அழைப்பது போலவும் கதையின் நாயகன் மணீந்திர நாத் இங்கே அறிமுகம். இருட்டு. பெரிய பெரிய கண்களும், விசாலமான நெற்றியில் ஒரு மச்சமும்,நீண்ட மூக்கும், சூரிய தேஜஸ்ஸில் நிறமும்இரவின் இருளில் பாவங்களைத் தேடி தண்டிப்பது போன்ற தோற்றமும், அந்த வசவும், மீண்டும் கொட்டும் கைகளும்,, அது எழுப்பிய ஒலியில் அவரது அத்தனை பட்சிகளும் வந்து விடவேண்டும், ஆனால், தர்மூஜ் வயல்களின் மேல்,ஸோனாலி பாலி ஆற்றைக் கடந்து அந்த ஒலி தொங்கியது.மேலே வானில் எவ்வளவு விண்மீன்கள்,ஏன் ஒன்றும் அவருடைய பைத்தியக்கார எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை?

சடுகுடு விளையாட்டில் பல பரிசுகள் பெற்ற பேலு,பட்டணத்திலிருந்து கிராமம் வரை வெற்றி ஊர்வலம் வந்த பேலு, இன்று தோற்றுவிட்டான்.அவன் அந்தக் கோபத்தில் தன் மனைவி ஆன்னுவை அடித்துக் கொண்டிருக்கலாம்.மணீ தன் அரச மரத்தடிக்கு வருகிறார். 100க்கணக்கான கங்கா மைனா பறவைகள். சில இன்னமும் ஆற்றில் சில ஆற்றங்கரையில்.அவர் தன் கற்பனை உலகிற்குப் போய்விடுவார்.ஒரு புதருக்குள் மறைந்து கொண்டு அவர் மட்கிலாவின் குச்சியால் பல் தேய்த்தார்.ஆபேத் அலி அவரை, தான் வீட்டிற்கு தொட்டுக் கூட்டிச் சென்றால் தீட்டு என்று நினைக்கிறான்.ஆனாலும்,அவர் நிலைக்கு அவன் கவலைப்படுகிறான். சிறு சிறு கீற்றுகளில் ஆசிரியர் மனிதப் பண்புகளை, மதம் சார்ந்த உணர்வுகளைச் சொல்கிறார்.வானம் இருண்டு, காற்று நின்று மழை ஆரம்பிக்கிறது, இவரின் மழை நடனமும். தன்னை அதிலிருந்து பிரித்துவிடுவார்கள் என்று ஆலமரத்துடன் முடி போட்டு பிணைத்துக் கொண்டு அவர் ஆடுகிறார், நமக்கும் அந்த உன்மத்தம் ஏறுகிறது.

இது இப்படி இருக்க, ஈசத்திடம் செய்தி சொல்ல முடியாமல் ஆபேத் அலி தன் வீட்டிற்கு வருகிறான். பிள்ளை ஜப்பர் மட்டும் இருக்கிறான், மனைவி சாமு வீட்டில் ஏதோ வேலையாகப் போயிருப்பது அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகிறது.ஜப்பரை பெரிய பாபு இடுகாட்டு மைதானத்தில் இந்தப் புயலில் இருப்பதை அவர் வீட்டாருக்குத் தெரிவிக்கச் சொல்கிறான்.அவன் லீக்கில் பெயர் கொடுத்திருப்பதாகச் சொல்வது ஆபேத் அலிக்கு மேலும் கோபத்தை உண்டாக்குகிறது.டாக்காவின் கலவரம் அவனுக்கு பீதி. முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் அவனுக்கு கொதிக்கிறது. ஆனால், இந்த பாபு மற்றும் இதர இந்துக்கள் எவ்வளவு பரிவுடன், பாசத்துடன் நம்மையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்? என் அருமை தேசமே, என்னவாயிற்று உனக்கு? சாமு வீட்டில் இதற்காகத்தான் கூட்டம் என ஊகித்து வருந்துகிறான்.சமுதாய அமைப்பில் தலைமுறைகளின் மாறுபடும்சிந்தனையை ஆசிரியர் அருமையாகச் சொல்கிறார். தனபாபுவும், ஈசமும் அதற்குள் பெரிய பாபுவைத் தேடி வருகிறார்கள். மன்சூர் அதைப் பார்த்துவிட்டு தானும் தேட முன்வருகிறான். போகும் வழியில் சாமுவின் வீட்டில் காணப்படும் கூட்டமும், ஒளியும் அவருக்கு ஏதோ உணர்த்துகிறது. மன்சூர், லீகின் கூட்டம் நடப்பதையும், சாமு புதிய கிளையொன்றை இந்தக் கிராமத்தில் தொடங்க உள்ளதையும் சொல்கிறான்.சாமுவை சந்திக்கும் தனபாபுசிஷ்யப் பிள்ளைகளைச் சேர்ப்பதாக கிண்டல் செய்தாலும் சாமுவும் அவர்களுடன் இணைந்து பெரிய பாபுவை தேடச் செல்கிறான். மனிதர்கள் உண்மையாக ஒருவரைஒருவர் பகைப்பதில்லை; ஒரு இனத்தை, மதத்தை வெறுக்கிறார்கள் போலும்.

வழியில் ஆபேத் அலியின் குடிசையின் வாயிலில் ஒரு சிறு குடிசை; அவன் அக்கா ஜோட்டன் விதவையெனத் திரும்பிவிட்டாள். தலாக்கோ, மரணமோ அவள் பிறந்த வீடு வந்து விட்டால் ஆபேத் அவளுக்கு வடக்கு வாசல் வைத்து ஒரு குடிசை கொடிகளால் கட்டிக்கொடுப்பான்; அதுவரை அவன் பொறுப்பு பின்னர் அவள் நெல் இடித்தும், அவல் வறுத்தும் இந்துக்களின் பண்டிகைகளில் சம்பாதிப்பாள். பண்டிகை முடிந்துவிட்டால் அல்லிக் கிழங்கு தான் உணவு அவளுக்கு. வறுமை, ஏழ்மை, எளிமை..

மாட்டேன் என்ற ஜப்பாரும் பெரிய பாபு இடுகாட்டில் இருப்பதாகச் சொல்லி தேடும் குழுவில் இணைந்து கொள்கிறான். ஆலமரத்தில் கயிற்றில் தொங்கும் மணீ.. கயிறு இடுப்பில்; தன் பறவையைத் தேடும் மயிலென அவர். பறவை பறந்து போய்விட்டது, தீவு, தீவாந்திரங்களைக் கடந்து,வியாபாரிகளின் நாட்டைக் கடந்து ஜல தேவதைகளின் தேசத்திற்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையிலமர்ந்து அழுகிறது.அவர் தம் கையைக் கடித்துக்கொண்டிருக்கிறார். ஈசம் தவழ்ந்து மட்கிலாப் புதரில் நுழைந்து அவரை விடுவித்தான். அவர் கைகளிலும், கால்களிலும் இரத்தம் வடிகிறது. தனபாபு அருகம் புல்லைப் பிடுங்கி அதன் சாற்றை காயங்களில் ஊற்ற வலியால் முகம் சுளித்தாலும் குழந்தை போல் சிரிக்கிறார் அவர்.

எத்தனை வேண்டுதல்கள், எத்தனை பரிகாரங்கள், சிகிச்சைகள். அந்தப் பிரதேசத்தின் பெரிய மனிதாரக வரும் தகுதி படைத்தவராக எல்லோராலும் கொண்டாடப்பட்டவர்அவருக்கு ஏன் இந்த நிலை?

வீட்டிற்குத் திரும்புகையில் அவர்கள் குறுக்கு வழியே நரேந்திர தாசின் கட்டாரி மரமருகே அவன் வீட்டில் விளக்கு இல்லாததைப் பார்க்கிறார்கள் அவன் தங்கை மாலதி மணமாகி டாக்கா கலவரத்தில் கணவனைப் பறி கொடுத்து அண்ணனிடம் வந்துவிட்டாள் .நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவள் பட்டணம் சென்றாள். ஏரியில் முதலை வந்த வருஷம் அவள் கல்யாணம்.ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல் அவள் சுற்றாத பகுதியில்லை இங்கே. அவளும் நீலகண்ட பறவையைத் தேடுகிறாளோ?சாமுவும், ரஞ்சித்தும் அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள்.

வீட்டில் பெரிய பாபுவைக் குளிப்பாட்டி சாதம் போடுகையில் தனித்தனியே பருப்பு, மீன், காய் எனச் சாப்பிடுகிறார்; எலும்பையும் சேர்த்து விழுங்குகிறார். தன் அம்மாவின் குரல் கேட்டு அவர் கம்பீரமாக ஆங்கிலக் கவிதை ஒன்றைச் சொல்கிறார். தன் பெரிய கண்களால் அவர் மனைவி அவரையே பார்த்திருக்கிறாள்.

ஆபேத் அலியின் அக்கா ஜோட்டனுக்கு இரு நாட்களாக உணவில்லை. கொஞ்சம் போலும் அல்லிக்கிழங்கு இந்தக் காலையில் பசியில் அதைத் திங்க உலர்ந்து தொண்டையில் அடைக்கிறது. அவள் தம்பியிடம் தன்னை அழைத்துச் செல்வதாக சொன்ன ஆள் வரவில்லையே என்றவுடன் இவளுக்கு இன்னமும் கல்யாண ஆசை பார் என கடுத்துக் கொள்கிறான்.ஆனாலும்,அவள் இரு நாட்களாகச் சாப்பிடவில்லையென்பது அவனுக்கு கலக்கமாக இருக்கிறது. இன்று நம்ம வீட்டில் சாப்பிடு என்கிறான். அவன் பீவி ஜாலாலியின் முகம் புட்கா மீனைப் போல் உப்புகிறது. அவர்களுக்கும் வறுமை. ஜோட்டன் மறுத்துவிடுகிறாள்.அவள் வரப்புகளின் ஈர மணலில் ஆமை முட்டைகளைத் தேடுகிறாள். அதை பச்சிம் பாடாவில் கொடுத்து ஒரு தொன்னை அரிசி வாங்கலாம். அவள் தயாராகமிருந்தும்கூட அவளை அழைத்துச் செல்வதாக சொன்ன மௌல்வி சாயபு வரவில்லை.முஸ்கிலாசான்(பிரச்சனைகள் தீர்ந்துவிடும்) விளக்கை எடுத்துக் கொண்டுஅவர் அங்கே வந்த அன்றே ஜோட்டன் அவர் மீது காதல் கொண்டுவிட்டாள். அவர்தான் என்ன உயரம், எத்தனை நீண்ட தாடி, எத்தனை ஒட்டு போட்ட ஜிப்பா, எத்தனை கலரில் கழுத்தில் மணிமாலைகள், தலையில் சிறுபாகை,தாயத்துக்கள்!

ஜோட்டன் அங்குமிங்கும் பார்த்துவிட்டு வயலில் இறங்கி சில தானியக் கதிர்களை அறுத்துக் கொள்கிறாள்.13 குழைந்தைகளின் தாய் அவள் மீண்டும் தாயாகத் துடிக்கிறாள்.அவள் அல்லாவிற்கு வரி கொடுக்க வேண்டுமே? முஸ்கிலாசான் மனிதனைக் காணோமே? கதிரறுக்கும் மனிதர்களின் பாட்டு, மாலதியின் மன வேதனை, தன் பசி, தான் திருட்டுத்தனமாகக் கதிர் அறுப்பது எல்லாம் அவளை சோகத்தில் ஆழ்த்தின. நெசவு செய்யும் நரேந்தாஸின் தங்கை மாலதிக்கு இன்னொரு கல்யாணம் நடக்காது. அது பாவமல்லவா? வயலைப் போலத்தான், உடலையும் தரிசாக விடக்கூடாது.போன்னா மரத்தடியில் தனியே நிற்கிறாள் மாலதி, ஏதோ குற்ற உணர்வினால் ஜோட்டனால் மாலதியிடம் பேச முடியவில்லை.குளத்தில் நீந்தும் வாத்துக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அவளைப் பாராதது போல் டாகுர் வீட்டு பாக்குத் தோட்டத்தில் மஞ்சள் குலைகளிலிருந்து ஒரு பாக்கு கூட அந்தமரங்கொத்திப் பறவை போடாதா என ஏங்கினாள் ஜோட்டன்.வெகு நேரத்திற்குப்பின் மூன்று மாணிக்கங்கள் போல் பாக்குக் கொட்டை!, அல்லாவின் கருணை. தாகூர் வீட்டிற்குப் போய் ஆமை முட்டை தந்து ஒரு தொன்னை அரிசியும், வெற்றிலையும் கேட்கிறாள்.நீரிலும், சேற்றிலும் நடந்து திரும்பி வரும் அவளால் மாலதி வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டவுடன் பேசாமல் போக முடியவில்லை. ஆனால், அழுது கொண்டிருக்கும் மாலதியால் பேச முடியவில்லை.இன்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று வயலோரக் கீரைகளையும் பறித்துச் சென்றவளுக்கு முஸ்கிலான் மனிதர், யாரை எதிர்பார்த்து நேற்றெல்லாம் உறங்கவில்லையோ,அந்த மனிதர் இருக்கிறார், குதிரைப் பந்தயத்து பீர் போல். ஜாலாலி குடிசை மூலையில் முக்காடு போட்டு உட்கார்ந்திருக்கிறாள். ஜோட்டன் தான் இந்த விருந்தாளியை கவனிக்க வேண்டும்.’ஜாலாலி, இரண்டு பூன்ட்டி மீன் வத்தல் கொடு’.சமைத்துக் கொண்டே அவரைப் பார்க்கிறாள்; தனக்கு ஏற்றவர், தன் மூன்று திருமணங்களும் அவளுக்கு ஏற்றதில்லைஇவர் அமைவார்.என்ன என்ன ஆசைகள்!அத்தனை அரிசியையும் சமைத்தாள்இருவர் சாப்பிடலாம்மீன் வத்தலை சுட்டு சிட்டகாங்க் மிளகாயை நிறைய வைத்து வெங்காயத் துண்டுகளோடு துவையல்அவளுக்கு நாவில்நீர் ஊறியது. ஆனால் விருந்தாளிஇப்போது அவர் பீர் சாயபு எனத் தோன்றியது. சாதம் வடித்த கஞ்சியில் உப்பு போட்டு கடகடவெனக் குடித்த பிறகுதான் அவளுக்கு உயிரே வந்தது.பக்கிரி குளிக்கையில் அவள் வீட்டின் பின்புறம் விழும் மஞ்சள் நிழல்,போன்னா காடு, பிரப்பம் புதரில் குளவிக்கூடு அதன் பழங்களில் வழியும் இரசம்ஹாசீம் வீட்டுக் குளம்இந்த ஆசிரியர் பார்க்காத தோற்றம் ஒன்றுமில்லையோ? அவள் அவசரமாகக் குட்டையில் குளிக்கிறாள்கட்டம் போட்ட புடவைஉடைந்த கண்ணாடிகாட்டும் பல்வரிசைஅது அவளுக்கு பீரின் தர்க்காவில் இரவில் ஒலிக்கும் ஹீராமன் பட்சியை நினைவுறுத்துகிறது.சம்பிரமாக உட்கார்ந்து ஒரு தட்டு, இரண்டு தட்டு, இன்னும் மேலும் என்று எல்லாவற்றையும் அவரே சாப்பிட்டுவிடுகிறார். பாவம், ஜோ. பசி தலையைச் சுற்றுகிறது; யாரிடம் கேட்பாள்? கொஞ்சம் பருப்புக் கீரை, பழுக்காத சில பிரப்பம் பழங்கள்

மாலை வந்ததுசாத்பாயீசம்ப பறவைகள் சுரைக்காய் பந்தலிலிருந்து கரைகின்றன. பக்கிரி மூட்டை முடிச்சுக்களோடு தயார். அவள் தாள முடியாமல் பக்கிரியை தன்னைக் கூட்டிச் செல்ல மாட்டீர்களா என்கிறாள்.அவர் கோர்பான் ஷேக்கின் படையலுக்குப் போவதாகவும் பின்னர்தான் இயலும் என்று போய்விடுகிறார்.

ஒரு ஹாட்கிலாப் பறவை வெகு நேரமாக கூவுகிறது. மாலதிக்கு உறைப்பாக சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சீதாப்பழ மரத்தடியில் நிற்கிறாள் அவள்பிரம்பு புதரில் குளவிக்கூடு..புதரின் அசைவில் பாம்பு ஒன்று ஒரு பெரிய பறவையை முழுங்கவும் இல்லாது, துப்பவும் இல்லாது தவிக்கிறது. பறவை அதைவிட.. இது என்ன மாதம் பால்குனா அல்லது மாக மாதக் கடைசியா?ஆபாராணிமாலதியின் அண்ணி இவளை அழைப்பது கேட்கவில்லை. தறியில் அண்ணாவின் உதவியாளன் அமூல்யன் பாடிக்கொண்டே வேலை செய்கிறான்.அவள் சாமுவும், பேலுவும் வருவதைப் பார்க்கிறாள் அவர்கள் லீக் நோடீசை மரத்தில் ஒட்டுகிறார்கள். சாமு அவளுக்காகப் பிரப்பம் கொழுந்து பறித்துத் தருகிறான்.துரட்டி அவன் கையில்.சட்டை போடக்கூடாத கட்டுப்பாடு அவளுக்கு.அவள் உடலையும் அந்த சீதாப்பூ மணத்தையும் நுகர்ந்து கொண்டே சாமு வருவது அவளுக்குத் தெரியும். ஆனால், அவன் எவ்வளவு தூரம் வருவான்?அவன் அவளைப் பின் தொடர்கிறான் என்று நினைக்கும் போதே அவள் உடம்பில் காலநேரம் பார்க்காமல் கிரௌஞ்ச பட்சி கூவுகிறதே! அவள் அவனை அனுப்பிவிடுகிறாள்.சிறு வயதில் சாமு,ரஞ்சித் கொணர்ந்த பசலிப் பழம், மஞ்சத்திப் பழம், பிரப்பம் பழம்பகலின் இனிய நினைவுகள் இவை ஆனால் இரவில்.. அவள் கடைசி ஜாமத்தில் தான் உறங்குவாள்.அவள் தூக்கத்தில் ஒரு பறவை ஓலமிடும்என்னை படகில் ஏற்றிக்கொள், நான் ஏரி நீரில் இரவில் மூழ்கவேண்டும்

கணவனை, அவன் கண்களை, உதடுகளை நினைத்து அழும் அவள் சாமு ஒட்டிய நோடீஸைக் துரட்டியால் கிழித்தெறிகிறாள். ஹாட்கிலாப் பறவையையும் பானசப் பாம்பையும் இவ்விடத்தில் காட்டி மதங்கள் மனிதர்களை இரையாக்கும் கொடுமையை சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.அவள் தான் எத்தனை அழகு; இளமை கொப்பளிக்கும் உடல்.வாத்துக்கள் தண்ணீரில் விளையாடுகின்றான, மேலே வந்ததும் ஆண் வாத்து மற்றவற்றை விரட்டுவது அவள் கணவனுடன் ஆடிய விளையாட்டல்லவா?அவளுடைய அழகிய பாதம் மாச்ராங்கா மீனைப் போல் நீரிலிருக்கிறது.

அடிக்கடி பெரிய மாமியின் தம்பி ரஞ்சித்தின் நினைவு வருகிறது. எத்தனை வகை மீன்களை அவள் பிடித்திருக்கிறாள்சேலா, டார்க்கீனா, பூன்ட்டி. நரேந்தாஸ் மேற்கு பாடாவிலிருந்து வந்து கொண்டிருக்கிறான்அவன் கையில் ஒரு சிங்டி மீன்.

மூடாபாடாவின் யானையின் மணியோசை கேட்டு எத்தனை நாளாயிற்று?பறவைகளும், புல் பூண்டுகளும் சைத்திர மாதத்து அனல் காற்றைப் பொறுத்துக் கொண்டு காலபைசாகிக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.ஆகாயம் வெண்கலப் பாத்திரம் போல் பழுப்புசூர்யனோ சிவந்த ஆரஞ்சுத் தோல்.

மாலதி தன பாபுவின் பிள்ளை சோனாவை வைத்துக் கொண்டு இருக்கையில் ஒரு மௌல்வி அவர்கள் வீட்டு வழியே செல்கிறான்அவன் சாமுஎவ்வளவு மாறிவிட்டான்தாடியும், ஜிப்பாவும்கடினமான முகபாவமும்ஹாட்கிலாப் பறவையும், பாம்பும்பராமர்தி சந்தையில் முசல்மான்கள் இந்துக்களிடமிருந்து நூல் வாங்கமாட்டார்களாம்என்னருமை நாடேஎங்கே போகிறாய் நீ?

மழைக்காலம்அறுவடையான சணல் வயல்கள்,ஏரி போல் காட்சிதரும். கர்ண பரம்பரைக் கதைகளில் வரும் ராஜகுமாரி அந்த நீரில்தான் மிதந்து வருவாள். அவள் பெயர் சோனாயிமீமி. பொன் படகு, வெள்ளித்துடுப்பு. படகு நீரில் மூழ்கி விடுகிறது. கல்யாணம் ஆகி தன் கணவனுடன் பெரிய படகில் புக்ககத்திற்கு முதலில் வருகையில் கணவன், பெரிய மாமிக்கு சொன்ன கதை இது.அப்போதே அவனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்.ஓரகத்தியின் பிள்ளை சோனா பெரிய மாமியின் கணவரை ஒத்துப் பிறந்திருக்கிறான்.பெரிய மாமி கல்கத்தாவில் பிறந்து கான்வென்ட்டில் படித்து இந்த கிராமத்தில் வாழ்க்கைப்பட்டுகல்யாணம் நடந்த அன்று அவள் தன் அக்காவிடம்இப்படி ஒருத்தரைஏன் மணம் செய்து வைத்தீர்கள்?’ என அழுதாள். மணமேடையில் தன்னை வெறித்துப் பார்க்கும் இந்த அழகன் தன்னை துளைத்துச் சென்று பார்ப்பது யாரை?ஆனால், அவரைப் புரிந்து கொண்டுவிட்டாள் இப்பொழுது. அவன் கிரேக்க வீரன்,நிர்மலன், புனித மோசஸ்.அவளுடைய மாமனார் அவளிடம் சொல்கிறார்நீயாவது நம்பு.அவனுக்கு கல்யாணத்திற்கு முன் பைத்தியமில்லை; உன் மாமியார் சொல்லைக் கேட்டு நான் அவனை அவன் விருப்பத்தின்படி விட்டிருக்கலாம். மதமும், குலமும்நான் என்ன சொல்ல?நீ சங்கும் சிந்தூரமுமாய் தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்.

விட்டிற்கு வந்த மணீ மனைவி தூங்குகையில் தோட்டத்தில் உதிர்ந்த, உதிர இருக்கிற, காத்திருக்கிற பவழமல்லியைப் பார்க்கிறார்.கோஷா படகை எடுத்துக் கொண்டுஅவர் ஏரியைக் கடந்து ஆற்றிற்குப் போனார்.பாலின் ஏன் ஆற்றுக்குள் காணாமல் போனாள்?அந்தப் பெரிய மைதானம் நினைவில் எழுகிறது. அந்தக் கோட்டை, வில்லோ மரங்கள் கீட்ஸ்ஸின் கவிதைகள், தன்னை மறந்து பாலின் இவர் சொல்லக் கேட்ட கவிதைகள்.

அவர் இப்பொழுது முஸ்லீம் படகுத் துறைக்கு,வந்துவிட்டார்.அவரை அந்த ஏழைகள் தான் எத்தனை பாசத்துடன் வரவேற்றனர். புதிது, அரிது பறங்கிக்காய், வர்த்தமான் வாழைக்குலை, ஒரு துறவி போல் வாங்கிக் கொள்கிறார். அவர் படகில் அவர்களே எல்லாவற்றையும் வைக்கிறார்கள்.அவருக்கு தன் மனைவியை விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வருகிறது.ஆனால் ஏரிக்குள் படகு நுழைந்ததும் ஆவல் போய் தண்ணிரில் குதித்து நீந்துகிறார்.

மணீயின் அடுத்த தம்பி பூபேந்திர நாத்.அண்ணன் பைத்தியம்,அப்பாவிற்கு வயதாகிவிட்டது. இந்த நிலையில் அவர் தன் கனவுகளான இந்திய விடுதலையெல்லாம் விட்டுவிட்டார். வெறும் ப்ரோகிதத்தில் வரும் பணம் போதவில்லை; அவர் ஜமீந்தாரிடம் வேலை செய்கிறார்.தம்பி சசிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்.அவர் மூடாபாடாவிலிருந்து கிராமம் திரும்பினால் படகில் இப்போது அரிசி,ஜீனி, கத்மா, பெருங்கரும்புகள் இருக்கும்.மஞ்சள் கரும்புகள் லால்ட்டு, பல்ட்டுவிற்கு ரொம்பப் பிடிக்கும்.அந்தக் கிராமமே அவர் சொல்லும் ஆனந்த் பஜார் பத்திரிக்கை செய்திகளுக்காக,லீக் நிலவரத்துக்காகக் காத்திருக்கிறது. சாமு லீக்கில் இருப்பதும் தோடர்பாக்கில் அவன் கிளை தொடங்குவதும் சொல்லப் படுகிறது.காந்தியைப் பற்றி, இங்கிலாந்து லீகை ஆதரிப்பதுப் பற்றி, ஜமீந்தாரியில் வசூல் இல்லாதது பற்றி,காந்தியின் சட்ட மறுப்பு இயக்கம் பற்றிசமுதாயம் தன்னைச் சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.’காட்டுக்குள்ளே ஆன்ந்த மாயீ கோயிலுக்குப் பக்கத்திலே ஒரு பழைய கட்டிடம். ஒரு குளம் அதை இத்தனை நாள் யாரும் சீண்டியதில்லைஇப்போ மௌல்வி அது தர்க்கா என்கிறார். அந்த இடமோ அமர்த்த பாபுவோடது

பெரிய மாமி பாதையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.மரத்தின் உச்சியில் வெள்ளி நிலா.மணீ படகின் மேற்பலகையில் படுத்துக் கொண்டு கிரௌஞ்ச பட்சியின் குரலுக்குக் காத்துக் கொண்டு, கற்பனையில் கல்கத்தாவில் ஒரு ஐரோப்பிய குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், வீடு அவரைப் பார்க்க ஏங்குகிறது.பெரிய மாமி நெருங்காத தங்கள் இதயத்துடன் தன்னை அவர் தொட்ட மிகச் சில நாட்களை நினைக்கிறாள். அவள் அவரிடம் அன்பாக இருக்கிறாள், குழந்தை என நினைக்கிறாள். பூனயவரைப் பந்தலில் டுப் டுப் என்ற ஒலி,சுவர் கோழிகள் கந்தபாதால செடிகளிருந்து கத்துகின்றன. மாமி வீட்டிற்குத் திரும்பிய பிறகு படகின் ஒலிஅவர்தான். ஆடைகளற்று தேவ தூதன் என நிற்கிறார்; கள்ளமில்லாமல் சிரிக்கிறார்

பாத்ர மாதம். ஜோவெகு நேரம் தண்ணீரில் சளைத்திருக்கிறாள். மழைக்கால அவல் வறுபடும் வாசம். பனங்காயை சுட்டு வடை செய்யும் வாசம். அவள் இப்போழுது அவல் இடித்தால் நல்ல வரும்படி. அவள் டாகூர் வீட்டிற்கு வருகிறாள். இரண்டாம் பாபு அவளைப் பார்த்துப் பரிதாபப் படுகிறார். அவள் சொல்கிறாள் –“துணை தேடாத ஜீவன் இல்லைஆனால், நான் வாய்விட்டுச் சொல்கிறேன், நீங்கள் சொல்வதில்லை”.அவல் இடிக்கிறாள். மழைக்காலம் முழுதும் பனம்புட்டு செய்கிறார்கள் . சசியின் மனைவியின் உறவுகள் மழைக்கால விருந்தினர்கள்.நாவல் மரத்தில் இஷ்டி கத்துகிறதுவிருந்தினர் வருகை.பத்மா நதியில் இலிஷ் மீன்கள் எத்தனை கூட்டம்வெள்ளியைப் போல் என்ன பளபளப்பு! ஜோவிற்கு ஆசை ஆசையாக வந்தது.. ஜோவை அவர்கள் சாப்பிடச் சொல்கிறார்கள். ஒரு பருக்கை வீணாக்காமல் வதக்கிய கத்திரியுடன் இலிஷ் மீன்.அவள் மனது நன்றியால் நனைகிறது. தொன்னை அவலையும், பாக்கையும் அவள் முடிந்து கொள்கிறாள்.முட்டமுட்ட சாப்பிட்டதில் அவளுக்கு வேறு ஆசைகள் வருகின்றா. பக்கிரி சாயபுஆனால் இப்போ மன்சூர் அவளைப் பார்த்துவிட்டான்; தன் நோயாளி மனைவி. படகில் கொண்டாட்டம்,, வயல் வெளியில் நிலா ஒரு மாயத்தைப் பூசியிருந்தது.அழுகைக் குரல் கேட்கிறதுமன்சூரின் வீட்டிலிருந்து.

மழைக்காலத்தின் இறுதி.பைத்தியக்கார டாகூர் படகில் குழந்தை சோனவுடன்சிராவணபாத்ர மாதங்களின் தெளிவு இல்லை நீரில்இறந்த நத்தைகள்,அழுகிய பயிர்கள்.மணீ சர்க்கார் வீட்டு வயலில் படகை நிறுத்திய போது நாய் நட்பாகிறது. இரண்டு வயல்களைத் தாண்டிவிட்டால் ஹாசான்பீரின் தர்க்கா. அங்கே வந்த மணீ பீர்சாஹேப் ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனக் கேட்க நினைக்கிறார். இது அவரது சமாதி. மனித மனதின் விசித்திர எண்ணங்கள்என்ன சொல்ல?சோனாவைப் புல்லில் படுக்க வைக்கிறார்நாய் காவல் நிற்கிறது. இவர் உள்ளே தாண்டிக்குதிக்கிறார்.சப்தபர்ணி மரத்தின் உச்சாணிக்கிளையில் சில பருந்துகள் கூடு கட்டிக் கொண்டிருக்கின்றன.பீர் சாகிப்பிடம் ஏதோ சக்தி இருந்திருக்கிறது. திருடனாய் இருந்த ஹாசான் பக்கிரியாகி பிறகு பீரும் ஆகிவிட்டார். அவர்தான் சிறு பிள்ளை மணீயைப் பார்த்து நீ பைத்தியமாகிவிடுவாய். உன்கண்கள் பிறரைப் பைத்தியம் செய்யும்அது இல்லாவிடில் யாருமே சாமியாராக முடியாது.

ஃபோர்ட் வில்லியம் மதில் சுவரில் உலாவும் போது பாலின் சொல்வாள்யுவர் ஐய்ஸ் ஆர் க்லூமிவா நாம் இருவரும் கீட்ஸ்ஸின் கவிதையைச் சொல்வோம்There is none I grieve to leave behind but only only thee’1925-26 முதல் உலக யுத்தத்தில் அவள் அண்ணனின் மரணம். அவர்கள் வீட்டில் ஏற்றப்பட்ட மெழுகுவத்தி.முழந்தாளிட்டு உட்கார்ந்திருக்கும் பாலின்-‘பீர், நான் அந்த நாட்களுக்குப் போக முடியாதா?’

பின்பனிக்காலத்து வெயில் இறங்கிவிட்டது.சாந்தாமீன்களும், பொய்ச்சா மீன்களும் வயல் நீர்ப்பாசிகளைத் தின்கின்றன.மணீ ஃபோர்ட் வில்லியமில் கொண்டைப்புறாக்களையும்,ஒளிரும் சூரியனையும் பார்க்கிறார். சோனா தூங்குகிறான், நாயும் தூங்குகிறது. உருக்கிய ஒளியாய் ஆதவன்அந்த ஒளி பெருகும் ஊற்றை அவர் கைகளால் பிடிக்க ஓடுகிறார். சூரியன் தேரிலேறி ஓடுகிறான், இவர் துரத்துகிறார்.அந்தத் தேரில் ஏறிக்கொண்டு பாலின் இருக்கும் இடத்திற்கு சூரியன் இவரை அழைத்துப் போக வேண்டும், இல்லையெனில் அவர் கயிற்றால் அவனைக்கட்டி ஆலமரத்தில் தொங்கவிட்டு உலகின் இருளை நிரந்தரமாகப் போக்கிவிடுவார்.அவர் நீரில் நீந்திக்கொண்டு குளக்கரையை அடைந்தபோது சூரியன் ஓடியேவிட்டான்.அவர் தோற்றுவிட்டார். யதார்தத்தின் நடுவே நாட்டுப்புறக் கதைகளில் ஊடாடும் மாயங்கள் நாவலை மகத்தானதாக்குகிறது.மரத்தில் சாய்ந்து நிற்கையில் குழந்தை அழும் சப்தம்; ஆனால்,எங்கே? எதையோ விட்டுவிட்டு வந்த உணர்வு, ஆனால் எதை?அவர் வீடு திரும்பியதும் குழந்தை இல்லை என உணர்ந்தார். மீண்டும் ஓடினார். சோனா அழுதழுது குரல் கம்மிற்று. நாய் ஈனஸ்வரம்.அவர் படகில் மீண்டும் உட்கார்ந்து கொண்டுவானத்தைப் பார்த்தார். அதில் பாலின் முகம் மற்றும் சோனாவின் கண்கள்.

சிறிது காலம் போயிற்று. சிறுவன் சோனா ஆற்றின் ஈரப் பகுதியில் சிறு குழி தோண்டி(குளமாம்) அதில் மாலினி மீனைப் போடுகிறான். தர்மூஜ் கொடிகள் அவனை மறைக்கின்றன.சோனாலி பாலி ஆறு, சோள, கோதுமை வயல்கள், கம்பளம் விரிக்கும் அரளிப் பூக்கள். வழியில் பெரிய மியானின் இரண்டு பீபீக்களையும் பார்த்து பயப்பட்டு, முகத்திரை விலகியதும் துர்க்கையைப் போல் என்ன அழகு; மூக்குத்தி, கால்களில் ஒலிக்கும் கொலுசு. ஈசத்திற்கு தன் நொண்டி மனைவியின் நினைவு வருகிறது.பெரிய மியான் அதிர்ஷ்டக்காரன்இரு அழகிய மனைவிகள்.சோனா வீடு திரும்புகையில் தான் தோண்டிய பள்ளத்தில் தண்ணீரின்றி மாலினி மீன் செத்துக்கிடப்பதைப் பார்க்கிறான்.

சில வருடங்கள் சென்றுவிட்டன.சைத்ர மாதத்தின் நடுப்பகுதி. அறுவடையான வயல்கள் காய்ந்து கிடக்கின்றன.ஏழைகள் சருகுகளைச் சேர்க்கிறார்கள். வானம் கறுக்கிறதா எனப் பார்க்கிறார்கள் ஜோ மழைக்காலம் வந்தவுடன் தன்னை புக்ககத்திற்குச் கூட்டிச் செல்லுமாறு ஆபேத் அலியிடம் கேட்கிறாள். உன் புள்ளைகள் கூட உன்னை நினைப்பதில்லை என்கிறான் அவன். 5 வருடங்களுக்கு முன் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுச் சென்ற பக்கிரி என்ன தான் ஆனார்?அலியிடம் நிலமில்லை, மாடு இல்லை, கூரை வேய்ந்த இடத்தில் தகராறு ஏற்பட்டு ஒன்றும் கிடைக்கவில்லை.அவன் மனைவி ஜாலாலி வயிற்றை அழுத்திக்கொண்டு குப்புறப் படுத்திருக்கிறாள். ஒரு சாப்பாடுமில்லை. ஜப்பர் கச்சேரி கேட்கப் போய்விட்டான்.ஜாலாலியும், அலியும் கொஞ்சுவது ஜோவிற்குப் பிடிக்கவில்லை. அவள் மன்ஸுரை நினைத்தாள்.வறட்சியால் நீரில்லை. நாமசூத்ராபாடாவில் பெண்கள் சிறு பாத்திரங்களால் நீர் மொண்டு குடங்களை நிறைக்க முயற்சிக்கிறார்கள்.ஜோ குடத்தில் தண்ணீர் எடுத்துப் போனால் கிழட்டு ஹாஜி வீட்டில் ஒரு தொன்னை நெல்லாவது கிடைக்கும். அடுப்பில் சாதத்தை வைத்துவிட்டு இப்படி ஜாலாலி அலியுடன் ஆடுகிறாளே, ஏதாவது பற்றிக் கொண்டால்?.பிஸ்வாஸ்பேடாவில் வாந்தி பேதியாம்.அவர்கள் ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.வாந்தி பேதி அம்மனை தலையிலோ, கழுதை மீதோ தப்பட்டையுடன் ஊர்வலம்.கல்யாண முருங்கை மரங்களில் லீக் நோடீஸ்கள்.

ஆன்னுவின் புருஷனைக் கொன்றுவிட்டு அவளுடன் குடித்தனம் நடத்தும் பேலு ஜோவிடம் பேச ஜோவிற்குப் பிடிக்கவில்லை.சாமு தன் குழுவுடன் போனான். அடுத்த வாரம் மௌல்வி சாயபு வருகிறார்.

ஜோ பயந்தது நடந்துவிட்டது.அலியின் குடிசை எரிந்து இவளது குடிசையும் எரிகிறது.மளமளவென எங்கும் பரவுகிறது.நரேந்தாஸ் தீ பரவும் வாய்ப்புள்ள கூரைகளை அரிவாளால் வெட்டுகிறான்.ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு கிராமத்தில் தீ பற்றிக்கொள்கிறது. கோபால் டாக்டருக்கு கொண்டாட்டம். மருந்தும் தருவார், கடனும் வட்டிக்குத் தருவார்.ஜோ ஹாஜி சாயபுவின் களஞ்சிய வீட்டிற்குத் திருடப் போனாள்.அங்கே நெல்லும், பருப்பும் எரிந்த வாசனை. ஹாஜி வீட்டின் எரியாத அறை தேடி அவள் போகையில் யாரோ ஒரு மனிதனின் அரவம் கேட்டதுஅது பேலுவாக இருக்கக் கூடும், ஹாஜியின் 2-ம் மனைவியிடம் அவன் நெருக்கம்.பேலுவிற்கு இன்னமும் என்ன தான் வேண்டும்? ஆன்னு பீவி நல்ல அழகு; ஆல்தாப் பாயின் மனைவி அவள். அவரைக் கொன்று இவளைக் கவர்ந்தவன் இவன் 40 வயது ஆகிறது ஆனால், ஹாஜியின் 2-ம் மனைவியுடன் கள்ளக் காதல்.

ஜோ கிடைத்ததை எடுத்து வந்தாள்; ஜாலாலி அதற்கு காவல். பாழடைந்த குடிசையை மட்டும் இழந்தவர்கள் கோராய்ப்புல்லில் படுத்துவிட்டார்கள்.நாளை இந்துபாடவிற்குப் போய் மூங்கில் வாங்க வேண்டும்.சணல் வயல்கள், மூங்கில் எல்லாம் இந்துக்களிடம். ஜோ ஒரு பித்தளைக் குவளையை எடுத்து வந்தாள்; அது நிறையத் தண்ணீர் குடிக்கும் ஏக்கம் ஏற்பட்டது அலிக்கு.

வைசாக மாத முடிவு. பக்கிரி வேப்ப மரத்தடியில் காற்று வாங்குகிறார் மாமரங்களில் நல்ல விளைச்சல்.ஆனால், பலி எண்ணிக்கை குறைந்து மாமிசமும் குறைந்துவிட்டது. காகங்கள் ஆலாப் பறக்கின்றன.பிஸ்வாஸ்பாடாவின் காலூபிஸ்வாஸின் அழகிய குதிரை உடல் முழுக் கறுப்பு,நெற்றி வெள்ளை,தங்க நிற மணி கழுத்தில்.வெயில் நேரங்களில் சணல் இளம் தளிர்களை சமைத்து ஒரு தட்டு சாதத்துடன் சாப்பிட்டால் என்ன ஒரு ருசி!ஏழைகளின் பஞ்சம் கொஞ்சம் குறையும்.’கடேசிக் காலத்திற்கு ஆதரவாக ஜோவை அழைத்துக் கொள்ளலாம், அவள் மலிவு தான்பக்கிரி100 இடங்களில் தைத்த துணி செருப்புகளை அணிந்த போது கட்டைவிரல் ஆமை ஒட்டிலிருந்து எட்டிப் பார்ப்பது போல் கிழிசலில் எட்டிப்பார்த்தது. அவர் ஆபேத் அலியின் வீட்டு வாசலில் வந்து ஜோவைத் திருமணம் செய்யத் தயார் என்கிறார். ஜாலாலி ஜோவைத் தேடிஹாஜி சாயபுவின் வீட்டிற்கு ஓடுகிறாள்.வெற்றிலை, பாக்கு, புகையிலை, ஜோ திருடிய பித்தளைக் குவளை,உடைந்த கண்ணாடி, டாகூர் வீட்டின் பழைய மரச் சீப்பு, பாபர்ஹாட்டில் வாங்கிய கட்டம் போட்ட சேலை,ஹாஜியின் மனைவி கொடுத்த கிழிந்த முகத்திரைஅவ்வளவுதான்நிக்காஹ் முடிந்துவிட்டது.பக்கிரியின் நீண்ட அங்கியில் பல்வேறு துணிகளைக் கொண்டு ஒட்டுஅல்லா படைத்த உலகைப் போல்ஆம் உலகத்தில் எங்கே எது கிடைக்கிறதோ அது அங்கேயே வைக்கப்பட்டிருப்பதைப் போல. வயல்கள், செடி கொடிகள்,பறவைகள் எல்லாம் ஒட்டுப் போட்ட துணி போல, செழிப்பான மண்ணாலும்,நீராலும் அல்லா இதைத் தைத்திருக்கிறார்.பக்கிரியின் முஸ்கிலாசான் மூன்று முகமுள்ள சிங்கடாப்பழம் போல மை சேர்த்து வைக்க குழி, எண்ணை ஊற்ற ஒரு குழி, காசு வாங்க ஒரு குழி. ஜேஷ்ட மாதமாதலால் ஆற்றில் நீர் அதிகம்.

திருவிழாக் காலத்தில் பூண்டு எண்ணையைக் கண்களில் விட்டுக் கொண்டு அவர் மக்களைப் பயமுறுத்தி பொருள் பெறுவார்.(முஸ்கிலாசானுக்கும் அதே எண்ணைதான்)’என் வீடு சிறு குடிசை. கல்லறையும், புதர்களும் தான். மனிதர்கள் எப்போதோ,புதைக்கப் ப்ரார்த்திக்க வருவார்கள் ஜோ, உனக்குப் பயமாக இருக்கும்காதலில் அவளுக்கு இதெல்லாம் பெரிதில்லை.மேகனா ஆற்றில் சூரியன் மறைகிறான். அவளுக்கு சுல்தான்பூரில் முதல் கல்யாணம். அவள் பிள்ளைகள் இப்பொழுது வயலில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.அவர்கள் ஆஸ்தான சாகேபின் தர்க்காவை அடைய இரவாகிவிட்டது.என்னபயங்கர இருட்டு, அச்சுறுத்தும் அமைதி.பெரிய மருத மருதங்களுக்கு அடியில் குழி தோண்டுகிறார்கள்புதிய சவப்பெட்டியின் மணம். அவள் பிள்ளையைத்தான்அவர்கள் தான் சொல்கிறார்களேசுல்தான்பூரின் பெரிய பிஸ்வாஸின் சிறிய பீவியின் மூத்த பிள்ளை என்றுஅவள் மணமாகி வந்திருக்கிறாள்பிள்ளை சவமாகி வந்திருக்கிறான்இது என்ன சொல்கிறதுவாழ்வின், சாவின் தொடக்கப்புள்ளி ஒன்றே என்றா?

சோனாவின் அம்மா சமைக்கிறாள்பச்சரிசி சாதம், கொய்னா மீன் வதக்கல்நெய்அவனுக்கு இப்பவே பசிக்கிறதுலால்ட்டுவிம், பல்டுவும் படித்து முடித்தவுடன் தான் அம்மா சாதம் போடுவாள். அவன் காசித்தும்பை செடியின் கீழ் பெரியப்பா படுத்திருப்பதைப் பார்க்கிறான்.சாமு தன் மகளான பாதிமாவுடன் பெட்றோமாக்ஸ் விளக்கு கேட்டு வாங்கிச் செல்கையில் சோனாவையும், மணீயையும் பார்த்துவிட்டு மகள்விருப்பத்திற்காக அவளை அங்கே விட்டுச் செல்கிறான்.அவள் தவழ்ந்து எலுமிச்சை புதரூடாக வந்து பல வண்ணப் பூக்கள்,பூச்சிகள், வெள்ளையான பூக்களுடன் கந்த ராஜச் செடி ஆகியவற்றைப் பார்க்கிறாள்பாத்ர மாதம். வானின் மேகக் கூட்டங்களில் பாலினின் முகம் அவர் இரு சிறார்களையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்கு வந்துவிட்டார்.

அலியின் மனைவி ஜாலாலி திண்ணையில் இருக்கிறாள், அவள் கணவன் வேலைக்குப் போனவன்பணமோ, பொருளோ இல்லை வாத்துக்கள் நீரில் சப்தம் செய்கின்றன.பண்ணை வீட்டில் ஜாம்ரூல் மரத்தில் தொங்கும் பழங்கள்பறவைகளைப் போல். காத்திருந்த ஜாலாலிக்கு ஒரு பருக்கை கிடைக்கவில்லை.எத்தனை நல்ல விருந்து?ஆனால் அவளுக்கு யார் கொடுக்கிறார்கள்?

சாமு தன் மனைவி அலிஜானிடம் சொல்கிறான்லீக் சார்பாக அவன் சின்ன டாகூரை எதிர்த்து தேர்தலில் நிற்கப் போவதாக.அவன் மீண்டும் தனுசேஷ்கோடு படகிற்கு வருகிறான். மாலதியின் ஆண் வாத்தை நீருக்குள் அழுத்திக் கொண்டு காணப்படும் ஜாலாலி ஒணாயைப் போல்அவள் அதை சாப்பிட்டவுடன் அவள் முகம் தான் எப்படி ஒரு நிறைவில் இருக்கிறது! பசி எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது.மாலதியின் பிரியமான ஆண் வாத்துஅவள் மழையில் இன்னமும்தொய் தொய்எனக் கூப்பிடுகிறாள்ஜாலாலியின் தட்டிலுள்ள அந்த வாத்து மாமிசம் உயிர் பெற்று மாலதியிடம் போய்விடப் போகிறது!புதிய சிந்தனையும், புதிய மத ஆவேசங்களும் மனிதர்களைக் குறுக்கிவிட்டதாக சாமு நினைக்கிறான்.

குளிர் காலத்தில் மணீ மேலே போர்வை போர்த்தியுள்ளார். வெல்லம் தடவி வர்த்தமான் வாழையைச் சாப்பிடுகிறார்.சோனாவுடன்,நாயுடன் சோனாலிபாலிக்குப் போகிறார்.அவர் ரூப்சாந்த் பறவையைப் பற்றிப் பேசுகிறார்.நடந்து நடந்து அவர்கள் பல கிராமங்கள், வயல் வெளிகளைக்கடந்துவிட்டார்கள்அவர் அவனை தோளில் தூக்கிக் கொண்டு நடக்கிறார். வானத்தை தொடலாம் எனப் பார்த்தால் அது விலகி விலகிப் போகிறது. பக்ஷிராஜா குதிரையும் காணோம். ஒலி கேட்கிறதுயானை மூடாபாடா ஜமீனிலிருந்து வந்துள்ளது மாவுத்தன் அவன் பிள்ளையுடன், இவர்களை யானை மீது ஏறச் சொல்கிறான்.

மணீக்கு வேறு கனவுஅவர் இந்த யானையைப் பிடுங்கிக் கொண்டு ஆகாயத்தைக் கிழித்து பாலினிடம் போய்விடுவார். இதற்கிடையில் முசல்மான்கள் பெரிய பந்தல் போட்டு மாநாட்டு ஏற்பாடுகள் நடக்கிறதுஅவர் ராஜாவைப் போல் யானையில் வருகிறார்யானை லஷ்மிஅது டாகூரின் பிரியமான செம்பருத்தி மரத்தையும் சர்வ நாசமாக்கிவிட்டது.

மௌல்விகள் குழும ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய பெரிய தரை அடுப்புகள் , பால், அக்ரோட் எல்லாம்;இந்தமுறையும் சாமு யுனியன் பிரஸிடென்ட் தேர்தலில், சசி டாகூரிடம் தோற்றுவிட்டான்.டாக்காவிலிருந்து ஷாஹாபுத்தீன் சாஹேப் வருகிறாராம்; நம்ம ஊருக்கு பெரிய மனிதர் வந்தும் தான் வரவேற்க முடியவில்லையே என்று அவருக்கு வருத்தம். எல்லாம் மத சம்பந்தமாகி வருகிறது.

யானை டாகூர் வீட்டிற்கு வந்துவிட்டது. பாகன், அவன் மகன், சோனா எல்லோரும் இறங்கிவிட்டார்கள் ஆனால். பெரிய பாபுஇந்த யானை பாலினின் நினைவு மரத்தைத் தின்றுவிட்டது,அவர் ஏன் இறங்க வேண்டும்? அது அவரைச் சுமந்து கொண்டு மூடாபாடவை நோக்கிப் போகிறது.ஊரே அலறிக்கொண்டு பின்னால் ஓடுகிறது.முஸ்லீம் கூட்டத்தில் பிரிவினை பேச்சுக்கள்.அந்தப் பந்தலில் யானை மதம் பிடித்து நுழைந்து விட்டது.பேலு யானையிடம் மாட்டிக்கொண்டான்;அது அவன் கையை முறித்துவிட்டது. பைத்தியக்கார மனிதர் உனக்கு இது தேவை என்பது போல் அதன் மீது அமர்ந்து கொண்டு பார்க்கிறார்.அவர் யானையிடம் ஏதோ சொல்ல அது பேலுவை பொம்மை போல் கீழே விடுகிறது. அவர் கட்டளைப்படி அது இன்னமும் மேலே செல்கிறது.ஆற்று மணல்வெளியைத் தாண்டி அது இருளுக்குள் செல்ல இனி நீ மெதுவே போகலாம் என்கிறார்.

சாமு வேண்டுமென்றே பெரிய பாபு தன் சமூகத்தை பழிவாங்கியதாக நினைக்கிறான்.’நீங்கள் உங்கள் கட்சிக் கூட்டம் நடத்துங்கள். பேலுவை விட்டு நெருப்பு வைக்கிறேன் பார்என்று கறுவுகிறான் அவன்.ஆனால், ஈசம் அவரை பாகனுடன் தேடிச் செல்கிறான், பெரிய பாபு ஒரு முறை நிறைந்த வெள்ளத்தில் சோனாலிபாலியில் படகில் ஏறி அது கங்கைக்கோ, கப்பலுக்கோ ஃபோர்ட் வில்லியமிற்கோ பாலின் இருக்குமிடத்தில் சேர்த்துவிடும் என தண்ணீரில் மிதக்கும் கனவெனச் சென்றாராம்.அவர் இப்போது யானையிடம் சொல்கிறார்படகில் ஏறி பாலினை காணேன்; நீயாவது கூட்டிப் போநெல்லிமரத்தில் கட்டப்பட்ட பொன்மான். படகோ, யானையோ அங்கே போகும் முன் பொன்மான்கள் ஒடிவிடும். ஒரு வாரம் ஆகிவிட்டது.யானையோ, மனிதரோ வரவில்லை. ஆனால் ஒரு முன்மாலை நேரத்தில் பட்டினியால் களைத்து வந்தாலும், யானை மீதிருந்து இறங்கவில்லை அவர். பெரிய மாமி கண்ணீர் விழிகளுடன் ஒரு வார்த்தை பேசாமல் யானையின் முன் சென்று நின்றதும் அவர் சாதுவைப் போலெப்படிப் பணிந்தார்?

குளிர்காலம். மாலதி அதி காலையில் உடலின் வெப்பம் குறையைக் குறையக் குளிக்கிறாள்.அவள் மதுமாலா, அந்த மதனன் எங்கே?யாரோ படிக்கிறார்கள்.’பாதாய், பாதாய் படே நிசிர் சிசிர்அவளுக்குத் தெரியும் ரஞ்சித் வந்திருக்கிறான்.அவனைப் பார்க்க வேண்டும் ஆனால் எப்படி?அவன் பெரிய மாமியின் தம்பி. சிறுவயதில் ஆற்றில் அவன் அவளை முத்தமிட்டதற்கு அவள் டாகூர் வீட்டில் சொல்லிவிடுவதாகப் பயமுறுத்துகிறாள் அந்தசெல்ஃபிஷ் ஜெயண்ட்அம்மா, அப்பா இல்லாதவன் அன்று இரவு ஓடியவன் தான். தான் எவ்வளவு அழகாக இருக்கிறோமோ அப்படித்தானே அவனும் இருப்பான். அவள் ஒருமுறை பெரியமாமியிடம் அவன் கடிதம் எழுதுவதைப் பற்றி கேட்டாள் அவன் தேச சேவை செய்கிறானாம், ஆகவே முகவரி அனுப்புவதில்லையாம்.

அமூல்யன், அண்ணனின் உதவியாள், குளிர் காய்கிறான்.அவன் போன வருடம் நாங்கல்பந்து அஷ்டமி குளியலுக்கு மூன்று தட்டு பெரிய படகில் சென்ற போது மிகவும் உரிமை கொண்டாடினான். என்ன ஒரு கூட்டம், எத்தனை மூர்த்திகள்? பைரவரின் வயிறு நீல நிறத்தில்! எத்தனைப் பாவங்களைத் தொலைக்க எத்தனை மனிதர்கள்?. அவள் இளமை துணை கேட்கிறது.மேலும் பொலியும் அழகு நல் வாழ்வு கேட்கிறது ஆனால், அவள் அரிசியும், கீரையும் மட்டுமே சாப்பிட்டு ஆசாரத்திற்காக உடலின் மொழியைக் கேட்கக்கூடாது.

சாமுவின் பெண் பாதிமா பருவமற்ற பருவத்தில் சோனாவிற்காக மஞ்சத்தி பழக் குலைகளை மாலதியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்கிறாள். அந்த அன்பு மாலதியை அசைக்கிறது.பாதிமாவை அணைத்துக் கொள்ளச் சொல்கிறதுஆனால் ஆசாரம் என்னவாவது?

மறைந்து உட்கார்ந்து ரஞ்சித்தைப் பார்க்க அவள் காத்திருக்கிறாள்; அவன் அவளைக் கண்டுபிடித்துவிட்டான். இனி அவளுக்கு அமூல்யன், ஜப்பர் இவர்களின் பயமில்லை.மெல்லிய மீசை, நீண்ட கண்கள் ,உடலில் தேஜஸ், கச்சம் வைத்த வேஷ்டி,சுருள் கேசம்,ஆஜானுபாவனான தோற்றம்.அவன் இரவில் அரிக்கேன் விளக்கில் எவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் படிக்கிறான்? மூங்கில் தடி தயார் செய்கிறான்சிலம்பம், கழி சுற்றல் எல்லாம் கிராமத்தில் சொல்லித்தரப் போகிறான்.அவள் தனக்கும் சொல்லித்தரச் சொல்லி கேட்கிறாள் பெண்கள் தான் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறான் அவன்.

இரவில் வெகு இரகசியமாக சொல்லித்தருகிறான் அவன் இளைஞர்களுக்கு.மாலதியிடம் சொல்வான் உனக்கு முனைப்பே இல்லை, கவனமற்று இருந்தால் தடி மண்டையில் இறங்கிவிடுமென்று. அவள் அவனுக்காகத்தானே பயிற்சிக்கே வருகிறாள்; இதை எப்படிச் சொல்ல? சின்ன மாமி குளிர் காலத்தில் தன் பிறந்த வீடு போவாள்.பருப்புப் பயிரில் பருப்பு முதிர்ந்திருக்கும். கடுக்குப்பூக்களால் வயல் மஞ்சள் பூசியிருக்கும்.எத்தனை மீன்கள்பாப்தா,கலி பாவுஷ்,பால், கத்மா, எள்ளுருண்டை.

சாமு ரஞ்சித்தைப் பார்க்க வருகிறான். சிறு வயதில் மாலதியுடனான நட்பு அதை காப்பாற்றிக்கொள்ள நாற்ற ஆற்று வளைவில் வலையை வைத்து கூடை நிறைய கல்தா சிஞ்டி மீன்கள் பிடித்து அவள் அண்ணனை வழிக்கிக் கொண்டு வந்ததை எண்ணி இப்போது சிரித்துக்கொண்டார்கள்.பைத்தியக்கார தாகூர் ஆற்றைக் கடக்கிறார். நீரில் சிதறும் பிம்பங்கள்.

பேலுவிற்கு மஹா கோபம்அவன் இடக்கை தாகூரால் தான் செயலற்றுப் போய் விட்டது. ஆனு, அவன் மனைவி,மற்றொருவனைக் கொன்று அவன் கொண்ட மனைவி, வீடே தங்குவதில்லை.அவன் மீன் வத்தலுக்குக் காவலாக காகங்களை ஓட்டிக்கொண்டுஅவனுக்கு பூச்சி குதறிய ஒரு கண், வலக்கை இன்னமும் குணமாகவில்லை.அவன் கண்களின் பாப்பாவில் கொடூரம் கூத்தாடுகிறது. காகம் அதற்கெல்லாம் பயப்படுமா என்ன?ஓரு காகம் மீனை எடுத்துக்கொண்டு பறந்தது; இவன் துரத்திக்கொண்டு ஓட மீதி காகங்கள் நிறைய மீன்களைத் தின்றுவிட்டன. ஆனு வந்தால் திட்டித்தீர்ப்பாள்.அவன் நினைக்கிறான்: ஹாஜி சாயபுவைப் போல் சில முஸ்லீம் பணக்காரர்கள் இருக்கிறார்கள் தான். சாமுவிற்குக் கூட 2 ஏக்கர் சணல் வயல். தனக்கு ஏழ்மை தவிர, மனைவியின் அவமதிப்பைத் தவிர, அவளுடைய கள்ள உறவைக் கேட்க முடியாத நிலை தவிர?

ஜாலாலி அல்லிக் கிழங்கு பறிக்க பாவுசா ஏரிக்குப் போகிறாள்.இந்த இடத்தின் மிகப் பெரிய ஏரி அது. அதில் முதலை வந்தது,ஏழு மாயப் படகுகள் இரவில் வந்தனமதுகர்கூட வந்தது.

பேலு பார்க்கிறான் சர்க்கார் வீட்டில் வாஸ்து பூஜை செய்கிறார்கள். பட்டும் நகையும் அணிந்த கன்னிகள், சுமங்கலிகள், எத்தனை கொண்டாட்டம்! ஆனால் ஜாலாலி அல்லிக் கிழங்கைத் தேடிச் சாப்பிடவேண்டும். பேலு ஹாஜி சாயபுவின் 2-ம் பீவியிடம் இன்னமும் கொள்ளை ஆசை வைத்திருக்கிறான். அவளைப் பார்ப்பதற்காக உடும்பு போல் புதரில் படுத்திருக்கிறான்.

ஜாலாலி அந்த மர்மமான ஏரியில் இறங்கினாள். நீர் வயிற்றுப்பசியை போக்குமா என்ன?ஈசாகான் தன் சோனாயீ பீவியுடன் மயில் படகில் அந்த ஏரியில் இருக்கிறான். அவர்கள் தனிமையைக் கலைத்தால் அவன் கொன்றுவிடுவான்; என்ன கற்பனைகள், பயங்கள், நம்பிக்கைகள், சுவாரஸ்யங்கள்.அந்த ஏரியில் பாய் விரித்து படகோட்ட மாட்டார்கள். ஜாலாலிக்கு இரு அல்லிக் கொடிகள் தென்பட்டனஆனால் இழுக்கக் கூடாதுகொடி வந்துவிடும்கிழங்கு வராது. அவள் மிகக்கீழே போகிறாள். சற்றுப் பெரிதான ஆனால் சுவை குறைந்த சிவப்புக் கிழங்கு தான் கிடைத்தது.அவள் கூடையில் அதை வைத்து அதையும் பிடித்துக்கொண்டு நீந்தினாள்இல்லையென்றால் யாரவது அந்தக் கிழங்கையும் எடுத்துக்கொண்டுவிடுவார்கள்.அவள் வெகு தூரம் வந்துவிட்டாள்.அவளுக்கு எதிரில் பெரிய பெரிய கஜார் மீன்கள், மலைப் பாம்பைப் போல் உடலில் வளையங்கள், பளபளப்பான கறுப்பு நிறம், வாயிலும், தலையிலும் செந்தூரம் தடவியது போல் சிவப்புஒரு அபூர்வ மீன் அவளையே பார்த்திருந்தது. வயிற்றின் நெருப்பு பெரு நெருப்பல்லவா? ஒரு பெண் மீனுக்கா பயப்படுவாள்?ஏரியின் அடியில் பச்சையான கடப்பம் பூக்களை ஒத்த புல்லிலிருந்து எது அவளை நோக்கி வருகிறது?

பேலு வாஸ்து பூஜை முடிந்ததைப் பார்த்தான். பெரிய கல் ஜாடியில் பாயசம், ஆட்டு மாமிச வாடை. அவன் காத்திருக்கும் ஹாஜியின் 2-ம் பீவி இன்னமும் வரவில்லைகானல் நீர் போல் தோன்றித் தோன்றி மறைகிறாள். பாதிமா சோனாவை அழைத்துபுதரில் ஏதோ அரவம்’ என்கிறாள். பைத்தியக்காரப் பெரியப்பா என நினைத்து கூப்பிடுகிறான். ஆனால் வெளியே வருவது பேலுவேர் தேடுவதாகச் சொல்கிறான்.பாதிமாவின் மீது கோவம் வருகிறது.இவளால் ஆசை கெட்டது.அவன் வீடு திரும்புகையில் அவன் மனைவி தோப்பிலிருந்து வருகிறாள் இவனால் என்ன செய்ய முடியும்?

சோனாவும், பாதிமாவும் இப்போ மகிழம் பழம் பொறுக்க வயல் தாண்டி ஒடுகிறார்கள்அவள் புடவையை மடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள், மூக்கில் மூக்குத்தி, காதில் பித்தளை டோலாக்கு,மூக்கின் நடுத்தண்டில் சந்திரன் மாதிரி சப்பட்டையான தங்கத்திருகாணி. சோனா அதை தொட்டுப்பார்க்கிறான்; அவள் அவன் சந்தன வாசம் வீசும் உடலை.இந்தச் சிறு குழந்தைகள் பேசுவது ஒரு காமிக்ஸ் போல். காட்டில் வழி தவறுகிறார்கள். வாஸ்துவில் பலியிடப்பட்ட எருமையைமூங்கிலில் கட்டி எடுத்துப் போகிறது ஒரு கூட்டம். வெட்டப்பட்ட அதன் தலை அதன் வயிற்றொடு சேர்த்து கட்டப் பட்டிருக்கிறது.சீதலக்ஷ ஆற்றின் கரையிலிருந்து வருகிறார்கள். தன் இரு தோகளிலும் தங்க வெள்ளிப் பல்லாக்குகளைத் தூக்குவது போல் பெரிய பாபு பருந்திடமிருந்து அவர்களைக் காப்பாற்றி விடுகிறார்.

வாஸ்துபூஜைக்குப் பிறகு பூரி பூஜா உற்சவம். சோனாலியில் வியாபாரிகளின் படகுகள்; அவை ப்ரம்ம புத்ராவின் கிளை நதி வழியே அங்கே போய்ச் சேரும். மறு வளைவில் அந்த மர்மமான ஏரி. வயல் வெளியில் அவர்களைக் கொண்டுவந்துவிட்டு பெரிய பாபு ஏரிக்கரைப் பக்கம் போனார்.

வட்ட வடிவமான மிருது மண்ணாலான புற்கள் சுற்றியமைந்த தன் இருப்பிடத்தில் தலை கீழாக வரும் பெண்மலைப்பாம்பைப் போல் வளையமுள்ள மீன்அவளைக் கடித்துக் குதறிவிட்டது. அந்தக் கொடிகள் அவளை வளைத்துவிட்டன.அவள் காற்று, குமிழ்களாக மேலே வந்தது. மறையும் சூரியன் இரத்தச் சிவப்பாக பின்னர் வெளிர் சிவப்பாக, நீலமாக பின் கறுப்பாக. பொறுக்க முடியாத குளிர்.ஜாலாலியின் மரணத்தையும், இளம் எருமையை பலியிட்டதையும் அருகருகே காண்பித்து அதை தர்ம க்ஷேத்திர நடை என அதீன் சொல்வது வலிக்கிறது.

சாமு முதல் எல்லோரும் ஏரிக்கு வந்தாலும் சாமு மட்டுமே நீரில் தேடுகிறான். பெரிய பாபு கைதட்டி படகை அருகே அழைக்கிறார். அது வந்ததும் அதில் ஏறாமல் ராஜ ஹம்சத்தைப் போல் நீரில் நீந்துகிறார்.அவர் ஜாலாலியின் பிணத்தை தோளில் சுமந்து கொண்டு கரையேறுகிறார். எதிரே சூன்ய வெளி வானில் சில நட்சத்திரங்கள். அவருக்கு இது ஃபோர்ட் வில்லியம்; பாண்டு முழங்குகிறது.பாலின் தான் அவரது தோளில்; ஆங்கிலேயச் சிப்பாய்கள் அவளைப் பறிக்க ஒடி வருகிறார்கள். அவர் ஜாலாலியின் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடினார்.ஆனால் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒரு இஸ்லாம் பிணத்தைஎப்படி எடுக்கலாம்?அவர்கள் மத விதியின்படி ஆபேத் அலியே அவளைப்பார்க்கக் கூடாதே. சாமு நெருங்கிக் கேட்டவுடன் சமர்த்து பிள்ளையாகி அவர் உடலைக் கொடுத்துவிடுகிறார்.

எருமையைக் கட்டி தூக்கிக்கொண்டு யக்னேஸ்வர் கி ஜய் என்று இந்துக்கள் கத்திக் கொண்டு போனதைப் போல் இவர்கள்அல்லா ரெஹ்மானே ரஹீம்என்று கத்திக் கொண்டு போகிறார்கள்.

வாஸ்து பூஜையன்று இரவு நிலவில் தன் பிரியமான ஒரு மனிதனுடன் மாலதி வெளியில் நிற்கவிரும்புகிறாள்.ஆனால் அந்த செல்ஃபிஷ் ஜெயண்ட் இவள் வயலின் பூஜைக்கு வரவில்லை.மனதுக்கு நெருக்கமானவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்?தூக்கம் வரவில்லை.தன் கழுத்து எவ்வளவு மிருதுவாக இருக்கிறது. ஏன் ரஞ்சித் வரவில்லை?கணவனை நினைத்து ஏக்கங்களை இப்போது மீற முடியவில்லை.அவள் முகத்தை போர்வையால் மூடி இருளை வரவழைத்தாள். டாக்கா கலவரம் அவளது கனவின் உரிமையைக்கூட பறித்துவிட்டது.இந்தக் காதல் உணர்வுகள் மனிதனுக்குள்ளே எந்த இருட்டிலிருந்து எட்டிப்பார்க்கின்றன?எப்போது அது பாவ புண்ணியங்களுக்கு தலை முழுகிவிட்டு துறவியைப் போல் பைத்தியமாகிவிடுகிறது?

அந்த ஏரியின் ராஜகுமாரி அவள் தங்கப் படகில் வெள்ளித்துடுப்பில் முழு நிலவில் தான் வருவாள் . மாலையில் சூரியனைஎடுத்துக்கொண்டு நீந்தி கடலிலே போய்ச் சேர்ப்பாள்.காலையிலே அவனை கிழக்குல இழுத்து விட்டுட்டு அவள் ஆற்றுக்குள்ளே போய்விடுவாள். சோனா நினைத்தான் ஏரியில் ராஜகுமாரி, வயல் வெளியில் பாதிமா

ஜாலாலியின் பிண ஊர்வத்திற்கு வெகு பின்னே பெரிய பாபு வருகிறார்.மாமி அவரைக் கைபற்றி அழைத்துச் செல்கிறாள். இந்த நல்ல நாளில் அவருக்கென அவள் வெள்ளைக் கல் பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து வைத்துள்ளாள்.அவரோ கப்பலில் வந்த அந்த தேவதையை சரியாக நினைவில் நிறுத்த இயலாமல், மறக்கவும் முடியாமல் தவிக்கிறார்.

ரஞ்சித் இந்துக்களைத் தயார் செய்வது சாமு முதலானவர்க்குத் தெரியும். அவன் தேசத்தைக் காப்பாற்றுவான். அதற்காக என்ன தியாகமும் செய்வான். இரு மதத்தாரிடையே நம்பிக்கை இல்லை.பொருளாதார சூழ்னிலையால் ஒரு மரணம் நடந்துவிட்டது. சங்கத்திற்கு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.தேச விடுதலையுடன், பொருளாதார முன்னேற்றமும் வேண்டும்.

ஒரு சர்க்கஸ்ஸில் குருட்டுக் குதிரை அதற்கு இரு முகம். ஒன்று கிழக்கையும் மற்றொன்று மேற்கையும் பார்க்க அதன் முதுகில் ஒரு மனிதன் திண்டாடுகிறான்.இதை சோனாவும், பாதிமாவும்தான் வேடிக்கை பார்க்கிறார்கள். அழைத்து வந்திருப்பது பெரிய பாபு.

புதைத்துவிட்டு வரும் போது பேலு ஹாஜியின் 2-வது பீவியை மிக இலகுவாக இழுத்துவந்துவிட்டான்.

மணீயின் தகப்பனின் ஆயுள் இந்த வருடம் முடிந்துவிடும் என ஜாதகம் சொல்கிறது.கார்த்திகையில் கிழவர்கள் காலியாகிவிடுவார்கள் பூபேந்த்ரநாத்ஸந்த்ராயணம்செய்துவிடலாம் என்கிறார். பாவங்கள் போய் பஞ்ச பூதங்களுடன் உடல் கரையும் என்ற நம்பிக்கை. அவர் மருத மரத்தடியில் தன்னை தகனம் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளிடம் சொல்லியுள்ளார்.

திருவிழா வந்துவிட்டது. குதிரைப் பந்தயமும். அடம் பிடித்து சோனாவும் தன் அன்ணன்களோடும்,ஈசத்தோடும் விழா பார்க்கப் போகிறான். ரஞ்சித்தின் சங்கம், சிலம்பம், கத்தி விளையாட்டுக்களை ஏற்பாடு செய்துள்ளது.இந்துப் பெண்கள் ஆற்றில் குளித்து கரையேறுகையில் அன்வர் சற்று அத்து மீறிவிட்டான்.அவனை வாலன்டியர்கள் பிடித்து ஆஃபீசில் வைத்து அடித்தார்கள்.ஜப்பர் அதைக் கேள்வி கேட்கிறான். துப்பாக்கி வெடிக்கிறது. இரு சாவுகள். வெடியில் குதிரைகள் மிரண்டு களேபரம்.அன்வரின் செயலின் அநாகரீகம் பற்றி நினைக்காமல் இது இந்துமுஸ்லீம் எதிர்ப்பாடு கொள்கிறது.ஜப்பர் தன் குழுவினை இதுதான் சமயமென உசுப்பிவிடுகிறான். கலகம், சர்க்கஸ் கூடாரத்தில் நெருப்பு. எங்கும் கூக்குரல், திருட்டு, மனிதர்கள் சிதறி ஒடுகிறார்கள். நெருப்பில் புலி, சிங்கம் மாட்டிக்கொண்டுவிட்டது. ஒரு முஸ்லீம் தப்பு செய்து, அதை போலீசிடம் சொல்லாமல் ஒரு இந்து தன் கையிலெடுத்து கலவரங்கள் அப்படித்தான் தொடங்குகின்றன.ஒரு முஸ்லீமான ஈசம், தான் அழைத்து வந்த பையன்களுக்காக அலைகிறான், அழுகிறான்.எல்லோருக்கும் வலி ஒன்றே;அடக்கப்பட்ட சினம் மேலேழுகிறது; திருவிழாவிற்கு சசீ வந்திருந்தால் ஜப்பர் அடங்கியிருப்பான். ஆற்றின் இரு கரைகளிலும் இரு கோஷ்டியினரும் பழி வாங்கக் காத்திருக்கின்றனர்.கலவரத்தை முதலிலே ஊகித்த ரஞ்சித் மாலதியைக் கோயிலில் பார்த்து அவளுடன் வந்த குழந்தைகளை சீக்கிரமாகக் கூட்டி வந்து தனக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு லால்ட்டு,பல்டு, சோனாவை சர்க்கஸ் கூடாரத்தில் தேடுகிறான்.அவர்களை அழைத்துக் கொண்டுஆஃஃபீஸ் கட்டடதிற்கு வருமுன் கலகம் தீவிரமடைகிறது. மாலதி அங்கே இல்லை.ஆபு அழுது கொண்டு நிற்கிறான். இவர்கள் தர்மூஜ் ஏற்றி வந்த படகு துறையிலில்லாமல் சற்று தள்ளி மிதந்து கொண்டிருக்கிறது. ரஞ்சித் நீந்தி அதை அடைந்து மாலதியும், அவள் அண்ணன் மகளும் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதியடைகிறான்.

கலகம் நல்ல வேளையாக அங்கேயே முடிந்துவிட்டது.ஈசம் தான் பாவம், இவர்கள் தப்பியது தெரியாமல் ஆளே துவண்டுவிட்டான்.

கலகத்திற்குப் பிறகு மாலதி பயப்படுகிறாள். தன்னை வெறித்துப் பார்க்கும் ஜப்பர் அவனது சகாக்கள், அவள் நிஜக் கத்தி ஒன்று வேண்டுமென ரஞ்சித்திடம் கேட்கிறாள். அமூல்யன் அவளை அதிகமாக நெருங்கப் பார்க்கிறான்.

ரஞ்சித் எங்கெங்கோ போய் வருகிறான். கத்திப் பயிற்சி இரவில் அதிக ஒளியில்லாமல் நடக்கிறது.சுதந்திரம் வரும் சமயத்தில் உள்நாட்டு கலகம் நடப்பது இயல்புதான் என்கிறார் அவனது ஆசிரியர்.

மூடாபாடா ஜமீனில் துர்க்கா பூஜை நடக்கும். அமலா, கமலா ஜமீன் வீட்டின் பெண்கள் கல்கத்தாவில் படிக்கிறார்கள்.ட்ராய் குதிரைகள் நினைவிற்கு வரும் போதெல்லாம் சோனாவிற்கு மூடாபாடா யானை நினைவிற்கு வருகிறது.

அவன் இம்முறை துர்க்கா பூஜைக்கு மூடாபாடா போவான்.அங்கிருந்து அலிமத்தி பெரிய டாயின் மீனை தூக்கி வந்தான். அதைப் பார்த்து பெரிய பாபு முற்றத்தில் கை கொட்டி ஆடத் தொடங்கினார்.

அவர்கள் மூடாபாடாவிற்கு படகில் ஈசத்துடன் புறப்படும் நாளில் பெரிய பாபுவும் சத்தமில்லாமல் படகில் உட்காருகிறார்.பல்டுவிற்கு தன் அப்பா வருவது பிடிக்கவில்லை.

ஜப்பர் மாலதியின் மேல் கண்ணாக இருக்கிறான். ஆபேத் அலி ஜாலாலியின் மறைவிற்குப் பிறகு மற்றொரு நிக்காஹ் செய்து கொண்டுவிட்டான். அப்பாவிற்கும் பிள்ளைக்கும் ஆகவில்லை.அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் பேலு வீட்டில் தங்குகிறான். ஆனுவிற்கு என்னென்வோ வாங்கித்தருகிறான். அவள் அவன் வந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறாள் பேலு , பயில்வான் பேலு இப்ப பல் பிடுங்கிய பாம்பு.ஆனாலும் அவன் இப்போ பேலுவின் பீவியைத் தேடி வருவதில்லை. மாலதியைச் சுற்றுகிறான்.

மாலதி பொறுக்க மாட்டாமல் பெரிய மாமியிடம் ரஞ்சித் போயிருப்பது டாக்கா என அறிகிறாள்; அதிர்கிறாள்

சோனா&கோ சீதலஷா ஆற்றின் அருகில் அந்தப் பெரிய ஜமீன் மாளிகையை, வரிசையான பனைமரங்களை, நாணல் பூக்களை, யானை லாயத்தை, கடைவீதியை,ஆனந்த மயீ காளி கோயிலைப் பார்க்கிறார்கள்.நடக்கும் வழியின் பூங்காக்களில் எத்தனை மான்கள் சிறுத்தைகள் கூட இருக்கிறதாம்.ஒரு குதிரைச் சவாரியில் சோனாவின் வயதுடைய பெண், வெள்ளை ஃப்ராக், தோள் வரை வெட்டப்பட்ட மிருதுவான கேசம்.அவள் மாளிகையின் உள்ளே போய்விட்டாள்.எத்தனை வேலைப்பாடுள்ள மரச்சுவர்கள்! மாடங்களில் பளிங்கு தேவதைகள்! புல் தரையில் புல்புல் பறவைகள்! கனவு உலகமென அதை நினைத்தான் அவன்.

பூபேந்த்ர நாத்திற்கு அந்த மாளிகையில் நல்ல மரியாதை.சாத்தப்பட்ட இரும்புக்கதவுகள் இவர்களுக்காகத் திறக்கின்றன. சோனாவிற்கு சல்யூட் கிடைக்கிறது.சிறுவர்கள் அதிலும் சோனா வந்திருப்பதில் பூபேந்த்ர பாபுவிற்கு கொள்ளை மகிழ்ச்சி.அவன் நடன சாலையில் அம்மனை வணங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர் நெஞ்சில் ஏதோ சுமை, சோகம்; இவன் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறான்?அவர் நினைக்கிறார்.’துர்க்கை,பூஜையை ஏற்றுக்கொள்ள நாட்டிற்கு வந்திருக்கிறாள்;சோனாவும் வந்திருக்கிறான்.

ஆனந்தமயி கோயிலின் அருகே ஒரு இடிந்த கட்டிடம்; அதில் முஸ்லீம் குடியானவர்கள் தொழுகை நடத்துவார்கள் –அந்தக் கோட்டை ஈசாகான் கட்டியாதாக இருக்கலாம் அல்லது சாந்த்ராய் கேதார் ராய்கட்டியதாக இருக்கலாம். ஆனாலும் அதை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். மௌல்வி சாயபு அதில் தீவிரமாக இருக்கிறார்.ஆனால், தேவியின் மகிமையால் இந்தக் கிளர்ச்சி அடங்கிவிடும்; அவள் கையில் சூலத்துடன் மகிஷனைக் கொன்றவளாயிற்றே!

இங்கே சசீ பாபுவிற்கு மன்ஸூர் மற்றும் ஹாஜிசாயபுவின் வரப்பு, சணல் திருட்டு அறுவடை பஞ்சாயத்து. அவர் கேள்விப்படுகிறார்ஒரு பெரிய படகுஇரு படகோட்டிகளுடன் அங்கே பகலில் கரையிலும், இரவில் நதியிலுமெனக் காணப்படுவதாக எங்கிருந்து வந்திருக்கிறது, ஏன் எனத் தெரியவில்லை.மறு நாள் பெரும் படகை பகலில் எடுத்துக் கொண்டு தேடவேண்டுமென நினைக்கிறார் அவர்.

ஆஸ்வின் மாத இரவு இவ்வளவு புழுக்கமா? மாலதி ரஞ்சித்தை நினைக்கிறாள்; கலக்கமாக இருக்கிறது அவளுக்கு.மாலதியின் அண்ணி பாத்திரம் விளக்க ஆபுவுடன் துறைக்குப் போயிருக்கிறாள். அண்ணா நெசவறையில்; திடீரென்று விளக்கு அணைந்துவிட்டது; பாத்திரம் உருளும் சப்தம், மாலதியை இரு உருவங்கள் வாயில் துணியைக்கட்டி தூக்கிப் போகின்றன.

சோனாவிற்கு இங்கே யாரையும் தெரியவில்லை. ஈசம் இருந்தால் அவன் பயப்படமாட்டான். அவன் படகிலே இருந்து கொண்டு பூன்ட்டி மீன் பிடித்துக் கொண்டு தானே சமைத்துக்கொண்டு இருக்கிறான்.சோனா அந்தக் குதிரைப் பெண்ணை பார்க்க விரும்பினான்.சோனாவின் பெரியப்பா அவனைத் தோட்ட வழியாக அழைத்துச் சென்று எவ்வளவு காட்டுகிறார்.. ஒவ்வொரு அறையுமே ஒரு ஹாலைப் போல. பிறகு மாடிப்படி வந்ததுரத்னக் கம்பளம் விரித்த படிகள். திரைக்குப் பின் இருக்கும் ஒரு ரூமில் எஜமானியம்மாள் அவள் அருகே அந்த குட்டி தேவதைபூஜைக்காக அல்தா இட்டுக்கொண்டிருக்கிறாள்,வளையல்கள், சிவப்புத் திலகம் குட்டையான கேசம் அவள் கமலா. எஜமானியம்மா சோனாவிற்கு பெரியம்மா உறவு. கமலாவும், அவள் அக்கா அமலாவும் இந்த வீட்டின் 2-வது பிள்ளையின் பெண்கள்.அவர்கள் பூஜைக்காக கல்கத்தாவிலிருந்து அப்பாவுடன் வந்திருக்கிறார்கள், அவர்களின் அப்பா பெரிய படிப்பு படித்தவர்; பல வெளி நாடுகளில் வேலை பார்த்தவர், மிகப் பெரிய பதவியில் இருப்பவர்.அவர்களின் அம்மா தங்கள் ஊரில் தேம்ஸ் நதி உள்ளது என்று லண்டன் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.அங்கே லுஜான் என்ற கிராமம்;சைன்ட் பால் மாதா கோயில் பாதையின் இருபுறமும் வில்லோ மரங்கள். ஆனால், தாத்தாவிற்கு இவர்களின் அம்மா, அப்பாவை பிடிக்காது. தனி பங்களா கட்டி கல்கத்தாவில் குடியேற்றிவிட்டர். அம்மா பூஜைக்கெல்லாம் வரமாட்டாள்.பள பளப்பான ஒரு ரூபாய் நாணயம் பெரியம்மா தருகிறாள் சோனாவிற்கு. அவன் இப்போதுதான் பார்க்கிறான்கமலாவின் கண்கள் கறுப்புமில்லை, நல்ல நீலமுமில்லை கறுப்பு அல்லது நீலத்துடன் மஞ்சள் கலந்த நிறம்.கமலாவை அவன் அத்தை எனக் கூப்பிட வேண்டுமாம். அவள் அவனை அழைத்துக் கொண்டு ஓடினாள்; பெரிய தாழ்வரங்கள், அறைகள், தோட்டம், முடிவில் எத்தனை பெரிய பாக்கு மரங்கள் அதனருகே அமலா , கமலாவின் அக்கா நிற்கிறாள்.அவளுக்கு ஆகாயத்தைத் தோற்கடிக்கக்கூடிய நீலக் கண்கள். அவள் உடலில் மல்லிகையின் வாசம்.அவர்கள் அவனை நட்புடனும் அதை விடப் பிரியத்துடனும் பார்க்கிறார்கள். பாட்டியின் அறையில் அவனெக்கென பெட்டியிலிருந்து ஒரு பயாஸ்கோப் பரிசாகத் தருகிறாள் அமலா. என்ன, அவளுக்கு 12 வயதிருக்குமா?அவர்கள் மொட்டை மாடியிலிருந்து சீதலக்ஷா ஆறு, டைனமோ உபயத்தால் பாயும் ஒளி வெள்ளம், ஸ்டீமர் படகுகள் –என்னென்ன காட்சிகள்

மாலதியைக் கடத்திவிட்ட செய்தி ஊருக்குள் இரவில் கொதிப்பை கொண்டுவருகிறது.சசீ, அலிமத்தி, எல்லோரும் படகில் ஏறித் தேடுகிறார்கள்.ஆபேத் அலி ஜப்பரை பெற்றதற்காக அழுகிறான். போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சிலர் போகிறார்கள்.சால மரக் காட்டிலே ஒரே இருள். மேகம் கவிந்து நட்சத்திர ஒளி கூட இல்லை.இந்த அவமானம் நரேனின் குடும்பத்திற்கும் மட்டுமல்ல. சமூகத்திற்கே!இந்த நாட்டிலே நீரிலும் வாழ்வில்லை, நிலத்திலும் இல்லையே?மரங்களின் இடைவெளிவழியே படகு சென்றது, மின்மினிகள் புதரிலும், நீரிலும் மின்னின. இதை அந்த துஷ்டர்கள் கடப்பது எளிதல்ல. ஆனால். கடந்து மேக்னா ஆற்றிற்குள் போய்விட்டால் பிடிப்பது கடினம்.

படகின் அறையில் மாலதியை கைகால் பிணத்துக் கட்டிப்போட்டிருந்தார்கள் மியான், ஜப்பர் மற்றும் இருவர். இப்போது கவலை அவளை எப்படி வசப்படுத்துவது என்று. அவள் புலி போல் உறுமுகிறாள், ஜப்பர் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு அவளை மியானுக்காக வளைக்கப் பார்க்கிறான்.கரீம் பாய் அவளுக்காக ஏங்குவதைப் புரிந்து கொண்டு ஜப்பர் அவளை பகடையாக்கி தனக்கென இரு தறி அமைத்துக்கொள்ளப் பார்க்கிறான்.பேலுதான் இதில் உள்கை. சாமுவும், ரஞ்சித்தும் இல்லாத நேரத்தில் மாலதியைக் கடத்த யோஜனை சொன்னவன் அவன். அவனுக்கும் பணம் கிடைத்தது, அவன் மனைவிக்கு புடவை.

உல்லாசப் படகு அது. சூரியன் மேக்னாவின் நடுவிலிருந்து உதித்தான். மாலதி மசியவில்லை. தண்ணீரிலே சுற்றிக் கொண்டிருந்தார்கள். உணவுப் பொருள் தீர்ந்துவிட்டது. மனதில் பறக்கும் இந்தப் பறவையை கரீமினால் என்ன செய்ய முடியும்?அவன் மாலதியை வசப்படுத்தமுடியுமென நினைக்கிறான்.

படகின் மேல் தளத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவள் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சட்டென்று நீரில் பாய்ந்துவிட்டாள்.படகு துரத்துகிறது. மாலதி கோரை காட்டிற்குள்நுழைந்து பதுங்கினாள்.அவள் கோரைக்காட்டை தாண்டி சமாதி இருக்கும் பக்கம் போவதை ஜப்பர் பார்த்துவிடுகிறான்.அவள் தப்பக்க கூடாது; தப்பிவிட்டால் இவர்களுக்குச் சிறை.ஆஸ்தானா சாயபுவின் சமாதி. மனித அரவமில்லை.இறந்தவர்களின் உலகம் மௌனமாக இயற்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அவள் நினைவிழந்து கிடக்கையில் மூவரும் அவளைச் சிதைத்துவிட்டு அவள் இறந்து விட்டதாகக் கருதி போய்விடுகிறார்கள்.

சோனா கனவில் ஒரு குதிரையைப் பார்த்தான். அதில் அவன், அமலா, கமலா செல்கிறார்கள் ஆற்றில் இறங்கிய குதிரை மரக் குதிரையாகிவிடுகிறது. அது வானை நோக்கி வளர்ந்து கொண்டே போகிறது.அவன் மேகத்தைப் பிய்த்து சாப்பிடுகிறான் என்ன தித்திப்பு. அமலாவிற்கும், கமலாவிற்கும் கொடுக்கிறான். கீழே குதிரையின் கால்களை ஏணி போல் பற்றி மக்கள் ஏறுகிறார்கள்.

உறக்கம் கலைந்துவிட்டது அவனுக்கு. யாருமில்லை அருகில். குளத்தின் கரையோரம் வந்து நிற்பது யார்? பெரியப்பா? மகிழ்ச்சியில் அவனுக்கு வார்த்தை வரவில்லை. அவருடன் அந்த நாயும்.அவன் ட்ராய் குதிரையைப் போல் அவர்களை அழைத்துக்கொண்டு ஓடினான்.அவர் உடலில் பாசியும், பச்சையும். அவன் அகற்றி சுத்தம் செய்கையில் கமலா அங்கே வருகிறாள். பெரியப்பா நினைக்கிறார்ஏன் இவள் கண்கள் நீலமாக இருக்கின்றன?

ஒரு பெருங்காட்டின் வனவாசியாகிவிட்டாள் ஜோ.அவளுக்குத் தெரியும் இது துர்க்கா பூஜை மாதம். அவளுக்கு தன் ஊருக்குப் போக ஆசை. இந்தப் பக்கிரி கேட்டால் தானே!ஆனால் அவர் பலம் குன்றிவிட்டது.சக்ரவாகப் பறவையின் நெஞ்சைத் தின்றால் அவருக்கு பலம் வந்துவிடும் அவ்வளவு தொலைவு படகை செலுத்த முடியாது அவரால். ஜோ உதவுதாகச் சொல்கிறாள்.சரத் காலம் புல்லும் பூச்சிகளும் மண்டியுள்ளன. தர்க்காவின் கிழக்குப் பக்கத்தில் மேக்னா ஆறு ஓடுகிறது.யாராவது இறந்து அந்தக் காட்டில் புதைபட வந்தால் சாயபுவிற்குத்தான் என்ன குஷி! பூமியிலிருந்து பிளந்து வருவது போல் அவர் செய்வதென்ன மாயம்?சுள்ளி பொறுக்க காட்டுக்குள் அலையும் ஜோ இரு வெள்ளைக் கால்களைப் பார்க்கிறாள்.சைத்ர மாதத்தில் கௌரி ஆடும் நடன முத்திரையுடன் இரு கால்கள். ஜோ தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்தாள். மாலதிஉயிர் இருக்கிறதுஉணர்வில்லை.பக்கிரியை கூவி அழைத்துக் கொண்டு புடைவையை மாலதிக்குப் போர்த்தி அவர்கள் சிரமப்பட்டு குடிசைக்கு அவளை எடுத்து வருகிறார்கள்.ஜோவின் வென்னீராலும், மற்ற கை சிகிச்சைகளாலும் மாலதி எழுந்து உட்காருகிறாள்.பசிக்கு பாலை எடுத்து வரச் செல்கையில் பக்கிரிக்கு மாலதியால் போலீஸ் வருமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

சோனாவும், பெரியப்பாவும் இணை பிரியாமல் சுற்றுகின்றனர். நடுனடுவே சோனா கமலாவைப் பார்க்க ஏங்குகிறான்.அப்பா சசீ வருகிறார். தன் மகனைப் பார்க்கையில் தன் மனைவியின் நினைவு அவரைத் தொந்தரவு செய்கிறது.அவர் அண்ணாவை எதிர்பார்க்கவில்லை இங்கே.

அமலா மாடியில் தன் பொன்னிற கேசத்தை உலர்த்திக் கொண்டிருந்தாள் நீலக் கண்கள் வெள்ளையான தேகம். அவளைப் பார்த்தால் அவர் சாதுவாகிவிடுகிறார்.

டைனமோ இயங்காமல் சதி செய்கிறது. சோனா தனியே இருக்கிறான். இப்ரஹீமால் சரி செய்ய முடியவில்லை. சோனாவின் 2-வது பெரியப்பா அதை நேர் செய்கிறார். வெளிச்சத்தில் சோனாவிற்கென்ன பயம்?அவன் அமலாவைப் பார்க்கப் போகிறான்; அதற்காக தன் பெரிய பெரியப்பாவை கூட்டிச் செல்ல வேண்டிய மண்டபத்தைக் கூட மறந்துவிட்டான்.அமலா, கமலா எல்லோரும் இவனுடன் சேர்ந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.இருட்டில் அமலா அவனை சீண்டுகிறாள், அவனது தூய்மையைக் குறைக்கிறாள்.ஆனால் அவனுக்கு இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. அவளைப் பிடித்திருக்கிறது. அவள் தரும் சந்தேஷ், செம்பருத்திப் பூ எல்லாம்.

ஆனாலும் அவன் அவளை தவிர்த்தான். நவமியில் எருமைப் பலி நடக்கும்.அதன் காட்சிகளை ஆசிரியர் வர்ணிப்பதைப் படிக்க வேண்டும். நம்மையும் அங்கே நிறுத்திவிடுகிறார். பத்து ஆடுகள் மற்றும் ஒரு எருமை.இந்த உயிர்ப்பலியை வெறுத்துச் சிரிப்பவர் மணீ மட்டும்தான்.இரத்தச் சிவப்பான கண்களை உருட்டிக் கொண்டு துர்க்கை அவனிடம் கேட்டாள்-‘நீ என்ன பண்ணே, சோனா?’

எருமைப்பலியின் கோரத்தைப் போக்க அவன் பெரியப்பாவுடன் யானையைப் பார்க்கப் போகிறான்.

எத்தனை சொல்லியும், மிரட்டியும் மாலதி எதுவும் சாப்பிட மறுக்கிறாள். பக்கிரி பெரிய மியானிடமிருந்து கோஷாப்படகு வாங்கச் செல்கிறார். அவருக்கு உடல் நிலை சரியில்லை ஆனால், இந்தப் பெண், இந்துப் பெண் இவளை அவர் அவள் வீட்டில் சேர்க்கவேண்டுமே?ஜோ,மாலதி, பக்கிரி கிளம்பினார்கள்சகுந்தலையை துஷ்யந்தனிடம் சேர்பிக்கச் செல்லும் கண்வ மஹரிஷி போல்.சங்கந்தா வழியே போய் கடுபர்தி மைதானத்திற்கு அருகே ஆற்றில் சென்றால் நேரம் குறையும். அவருக்கு வயிற்றில் வலி, நெஞ்சு எரிச்சல் ஆனால், கடமையச் செய்ய வேண்டும் அவர். அல்லாவிற்கு அதுதான் ப்ரீதி.மாலதி வீட்டின் படகுத்துறைக்கு வந்துவிட்டார். ஆனால், நரேனிடம் நேரடியாகச் சொல்வதில் உணர்ச்சி வேகத்தில் எதுவும் நடக்கலாம்; இவரையே கூட சந்தேகப்படலாம். அவர் அங்கியை அணிந்து கொண்டார். முஸ்கிலாசான் மை கண்களில்; ஒளிரும் மணிமாலைகள்வயிற்றில் தாள முடியாத வேதனை.கம்பீரமாகக் கூவுவதாக நினைத்தார் அவர். நரேனிடம் தர்க்காவை நோக்கி அவன் தங்கை ஓடி வந்ததாகவும், தான் காப்பாற்றி அழைத்து வந்திருப்பதாகவும் கூறுகிறார்.அவர் நரேனிடம் அவளை ஒப்படைத்துவிட்டு படகிற்கு அவசரமாக திரும்புகிறார். ஜோ உணர்ந்துவிட்டாள்அவர் இறக்கப் போகிறார்.அவரை அவள் சுத்தம் செய்கிறாள். ஒரு கையில் சுக்கானைப் பிடித்திருக்கிறாள்.தன்னை தர்க்காவில் சேர்த்துவிட்டு ஊரே கூடும்படி அழுது இரவு 2-ம் ஜாமத்தில் தான் இறந்துவிட்டதாக ஜோவைச் சொல்லச் சொல்கிறார்.அவர் முன்னாளில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி.தப்பித்து ஒடி வந்து ஆஸ்தானா தர்க்காவில் தனக்கென தனி வாழ்வு அமைத்துக்கொண்டார். ஒரு அபலையை அவள் உறவினரிடம் சேர்த்த நிறைவில் அவர் அல்லாவிடம் போவார்.

சோனா அமலாவை தவிர்ப்பதற்காக பெரியப்பாயுடனே சுற்றுகிறான். ஆனால் அவர்கள் சாரட்டில் போகையில் பிடித்துவிடுகிறார்கள். பெரியப்பா அமலாவை மிகுந்த பாசத்துடன் நோக்குகிறார். அவர்களின் அன்னையோ தன் நாட்டை, தன் சினேகிதனை எண்ணி ஏங்கி கல்கத்தாவில் இருக்கிறாள். தன் மகள்கள் காளி பூஜையில் கலந்து கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவை அப்பா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் கண்களிலும் சோகம். அவர் ஒரு முஸ்லீம் பக்கிரியிடமிருந்து குழல் மற்றும் கிளாரினெட் வாசிப்பை மேம்படுத்த கற்றுக் கொண்டுள்ளார். அவன் இந்த ஜமீனில் இருப்பான். காலேக் அவன் பெயர். அவன் தன் இசையை வேறு எவருக்கும் சொல்லித் தர மாட்டான்.

மாலையில் நவமி நிலவில் ஆற்று மணலில் வெள்ளைப் பறவைகள் ஒலமிட்டுப் பறக்கின்றன. ஏதோ சோகச் செய்தி போல் அது ஒலிக்கிறது.சோனாவிற்கு தான் ஊர் திரும்பியதும் அம்மாவைப் பார்க்க மாட்டோம் என்று தோன்றுகிறது.இது ஒரு அருமையான மனமயக்கு.ஸ்டீமர் வெளிச்சத்தில் வெள்ளைப் பறவைகளின் நீலக் கண்கள். பெரியப்பா என்ன பாலினின் நாட்டிற்கு வந்து விட்டாரா?அமலா தன்னிடம் பேசவில்லையென்று மணீக்குக் கோபம். யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஆற்று மணல்வெளியில் ஓடி வருகிறது.என்னை விட்டுவிடுங்கள், நான் யானையின் மீதேறி கண்காணாமல் போய்விடுகிறேன் என்பது போல் அவர் பார்க்கிறார். சோனா தான் பெரியவனானதும் அவரை கல்கத்தா அழைத்துச் செல்வதாகக் கூறவும் அவர் அமைதி ஆகிவிட்டார்.ஈடான் பூங்காவில் நீல நிற பர்மியத் தளத்தில் அவர் பாலினுடன் உட்காந்திருக்கிறார்.அமலாதான் சிறுவயது பாலின் எனத் தோன்றுகிறது அவருக்கு. ஆனால், அவள் சோனாவிடம்தான் நெருங்குகிறாள்,’யாரிடமும் சொல்லவில்லையே’ என்கிறாள்.மணீ கவிதை சொல்கிறார்’ Still, still to hear her tender-taken breath and to live ever or else swoon to death, death’ ’

தசமி வந்துவிட்டது. இன்று துர்க்கா விசர்ஜனம். அவள் ஹிமாலயம் போகப் போகிறாள் இன்று இரவு இரண்டாம் பாபு புல்லாங்குழல் வாசிப்பார்.ஆனால், காலேக் வாசிக்கப் போவதில்லை, அவன் கடவுளிடம் போய் வாசிப்பான்.

தசராவின் கடைசி நாள். வண்ண விளக்குகளால் ஜொலித்த மாளிகை இருள்கிறது.புல்லாங்குழலிசை நின்றுவிட்டது. என்னவோ நடக்கிறது.இந்தப் பெரியப்பாவை தேடித்தேடி அவன் யானையின் மீதேறி ஊர்வலம் புறப்பட நேரமாகிவிட்டது. அமலா, கமலாவின் அறை உட்தாழ்ப்பாள் போடப்பட்டிகிறது. அந்தக் குடும்பத்திற்கு ஏதோ கெட்ட செய்தி வந்துள்ளது.அவன் அலுத்து புல் வெளியில் தூங்கிவிட்டான். காலையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது’அமலா கமலா ஸ்டீமரில் அவசரமாக கல்கத்தா திரும்புகிறார்கள். சோனாவிற்கு எல்லாமே போய்விட்டது போலிருக்கிறது.

பூபேந்த்ர பாபு படகுத்துறையில் எல்லோருக்கும் விடை கொடுத்துவிட்டு காளி கோயிலுக்கு வருகிறார். அந்த இடிந்த கோட்டையில் ஏதாவது கோயிலின் தடயம் தென்படுகிறதா? இதை அந்த மௌல்வி எடுத்துவிடமுடியுமா?மகிஷாசுரமர்த்தினி எதற்காக இருக்கிறாள்?

ஈசம் படகைத் தயார் செய்துவிட்டான், படகின் முனையில் மேல் தட்டில் பிடிவாதமாக பைத்தியக்கார பாபு. ஊர் வருகிறர்கள்.சோனாவிற்கு மாலதியிடம் தென்படும் மாறுதல் கலக்கமாக இருக்கிறது. பாதிமாவைச் சந்தித்து அவன் பயாஸ்கோப்பைக் கொடுக்கிறான்,

நரேனுக்கு முன் போல் மாலதியை ஏற்க முடியவில்லை. புலி தொட்டல் 18 காயம், மிலேச்சன் தொட்டல் 32 காயம். மாலதி தண்ணீரிலேயே மூழ்கிக்கிடந்தாள், தன்னை அம்மா கங்கை தூய்மை செய்ய மாட்டாளா? பெரிய பாபு சமர்த்தாக இருக்கிறார், வீட்டிலே இருக்கிறார். சோனாவிற்கு அவர் திருந்த தான் தான் காரணம் என்ற நினைப்பு.

கார்த்திக் பூஜையும் வந்துவிட்டது. வயலுக்கு வயல் சொக்கப்பனை கொளுத்துவார்கள் நன்கு விளைந்த தானியக் கதிர் வேண்டும் அதற்கு எவ்வளவு தொலைவு வந்துவிட்டார்கள்? பேலு, சாமு, பாதிமா எல்லோரும் எங்கே போகிறார்கள்? டாக்காவிற்கா? அங்குதான் இருக்கப் போகிறார்களா?கார்திகேயனின் பூஜையில் அவன் சிலை, குடங்களில் பச்சரிசி அதன் மேல் ஜல்பாயிப் பழங்கள், கோலம், விளக்குகள்.

சோனா சாயங்கால இருட்டில் நீர்துறைக்கு வருகிறான். செம்பஞ்சுக்குழம்பு பூசிய இரு பாதங்கள் மிதப்பதைப் பார்க்கிறான்.மாலதி பூரண சுமங்கலியாக அலங்காரம் செய்து கொண்டு பானைகளைக் கட்டிகொண்டு சாகத் துணிந்திருக்கிறாள். அவளைக் காப்பாற்றி உடல் முழுதும் உப்பினைக் கொட்டி காலையில் அவள் விழிப்பாள் என காத்திருக்கிறது கிராமம்.ரஞ்சித் வந்துவிட்டான். அவன் மாலதியைப் பார்த்துக்கொள்வான்.அவன் நரேனிடம் கோபித்துக்கொள்கிறான். நரேன் அவளை வீட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாமல்தான் தனிக்குடிசை கட்டித்தந்திருப்பதாகச் சொல்கிறான்.

பேலு மூன்று காளைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறதுபைத்தியக்கார பாபு, ஹாஜி சாயபுவின் கோயில் மாடுஅது இவன் கன்றுக்குட்டியையே குறி வைத்திருக்கிறது, மற்றும் ஆகாலுஆன்னுவின் காதலன்.கையில்லையே அவனுக்கு. இந்தப் பனிக்காலத்தின் ஆற்றுப்படுகையில் கோயில் மாடு பேலுவின் வயிற்றில் பாய்ந்து கிழிக்கப் போவதை தெய்வம் தானறியும்.

பின்பனிக்காலம்.மாலதியின் நிலை ரஞ்சித்தை வேதனைக்கு உள்ளாக்குகிறது. ஆனால், அவன் பெரிய இலட்சியங்கள் உள்ளவன். அவன் ஊரைவிட்டுப் போகப் போகிறான். போலீஸ் அவனைத் தேடுகிறது. குமில்லாவில் ஹட்சன் துரையைக் கொன்றுவிட்டு தப்பி வந்திருக்கிறான். இப்போது அவன் மீண்டும் சாகசம் செய்யப் போகிறான். ஆனாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துண்டு நிலமும் உணவும் இல்லையென்றால் தேச விடுதலையால் என்ன பயன்? அவன் மாலதியைக் காப்பற்ற நினைக்கிறான். தன்னுடன் வரச் சொல்கிறான் அவர்கள் கிளம்புகையில் கிராமம்நோக்கி போலீஸ்வருவதைப் பார்த்துஅவளையும் ஆற்று நீரில் குதித்து நீந்தச் சொல்கிறான். மறுகரை அடைந்து முஸ்லீம்கள் போல் உடை மாற்றிக்கொள்கிறார்கள். மாலதி தான் தாயாகப் போவதாகச் சொல்கிறாள்.அவன் துப்பாக்கியை கொடுத்து இயக்கும் விதத்தையும் சொல்கிறான். லுங்கி அணிந்து சணலால்செய்த தாடியை ஒட்டி அவளை ஜோவிடம் விடுவதற்காக அவன் நடக்கிறான். கோபத்தில் வந்தே மாதரம் எனக் கத்துகிறான்.

மாய யதார்தவாதம், கற்பனையியல், அதீத மாயங்கள் நிறைந்த நாட்டுப்புறக் கதைகள்,தூய்மையான காதல்,புரியாத வேதனை, கொஞ்சமாக லாசராவின் அபிதாவின் நினைவு, கொஞ்சமாக மௌனியின் சில கதாபாத்திரங்கள், அருமையான இயற்கை வர்ணனைகள்,நிகழ்வுகளாலான கதை,தாவும் தொடர்பில்லா ஒட்டம் அதைப் பின்னிச் செல்லும் அழகியல்.அனுபவித்து படிக்க வேண்டிய நாவல்.

வங்காளத்தில் நிகழ்கிறது கதை.ஆனால் ஒட்டு மொத்த பாரதப் பண்புகளை திருவிழாக்களை, அதீத நம்பிக்கைகளை, அரசியலின் அந்தரங்கம் முற்றிலும் புரியாத மனிதர்களை, வெற்றி தோல்விகளை அளக்கும் தராசுகளை,எதையும் நிர்ணயிக்கும் விதியை சொல்வதால் இது நம் அனைவருக்குமானது

2 comments

  1. பல வருடங்களுக்கு முன் படித்த அருமையான நாவல்.சிறு சிறு விமர்சன வரிகளோடு அதை திருமதி. பானுமதி நன்றாக எழுதியுள்ளார். எத்தனை மாந்தர்கள், எத்தனை நிகழ்வுகள்,எத்தனை வகையான மீன் கள்.நன்றி உங்களுக்கு.

  2. அருமை அருமை அருமையான் அறிமுகம் = மாய யதார்தவாதம், கற்பனையியல், அதீத மாயங்கள் நிறைந்த நாட்டுப்புறக் கதைகள்,தூய்மையான காதல்,புரியாத வேதனை, கொஞ்சமாக லாசராவின் அபிதாவின் நினைவு, கொஞ்சமாக மௌனியின் சில கதாபாத்திரங்கள், அருமையான இயற்கை வர்ணனைகள்,நிகழ்வுகளாலான கதை,தாவும் தொடர்பில்லா ஒட்டம் அதைப் பின்னிச் செல்லும் அழகியல்.அனுபவித்து படிக்க வேண்டிய நாவல்.

    வங்காளத்தில் நிகழ்கிறது கதை.ஆனால் ஒட்டு மொத்த பாரதப் பண்புகளை திருவிழாக்களை, அதீத நம்பிக்கைகளை, அரசியலின் அந்தரங்கம் முற்றிலும் புரியாத மனிதர்களை, வெற்றி தோல்விகளை அளக்கும் தராசுகளை,எதையும் நிர்ணயிக்கும் விதியை சொல்வதால் இது நம் அனைவருக்குமானது= என்று எவ்வளவு அருமையாக- கச்சிதமாக நிறைவு ச்ய்திருக்கிறீர்கள் = வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.