உயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை

இன்று நான் அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்.இளங்கலை மருத்துவம் பயின்ற அதே இடம்.படிப்பை முடித்து கிராமத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றி, யு.எஸ்ஸில் முதுகலை அறுவை சிகிச்சைப் படிப்பும்,’மல்டிபிள் ஸ்க்ளீரோஸ்’ பற்றியும் ஆராய்ந்து, அதற்கான டாக்டரேட் பெற்று அங்கேயே பணியாற்றும் நான் சென்னைக்கு ஒரு மாநாட்டின் பொருட்டு வந்திருக்கிறேன்.உலக மருத்துவர்கள் கூடி முக்கியமாக நரம்புச் சிதைவு, வெண்படலம் எனப் பொதுவாக அறியப்படும் நோய்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்; கருத்தரங்கங்கள் நான்கு நாட்களாக நடைபெற்று நேற்று மாலையுடன் முடிவடைந்தன. என் மரியாதைக்குரிய மருத்துவர் எம் கே எஸ் அவர்களைச் சந்திக்க இப்போது போய்க்கொண்டிருக்கிறேன். நான் சென்னைக்கு மாநாட்டிற்கு வரப்போவதாகவும், அவரை மாநாடு முடிந்த பிறகு சந்திப்பதாகவும் சொன்ன போது’கடவுள் நம் விருப்பங்களை எப்படியோ நிறைவேற்றுகிறார்’ என்றார்.ஆம், நான் அவரது அன்பு மாணவி, அவரோ எனக்கு எல்லாமுமாக இருப்பவர்.என் உழைப்பு, வெற்றி, தோல்வி, நான் பட்ட அவமானங்கள்,என் சொந்த வாழ்வில் சந்தித்த வேதனைகள் எல்லாம் அவருக்கு மட்டுமே முழுதாகத் தெரியும்.

விடுதியை விட்டு வெளி வருகையில் சென்னை அதன் பலக் குரல்களுடன் விழித்துக் கொண்டிருந்தது.வைக்கோல் கன்றுக்குட்டியை இடுக்கியபடி இன்னமும் பசுவை ஒருத்தர் ஓட்டிச் சென்றார்.எட்டும் போதெல்லாம் நாவால் சுவரொட்டிகளை அது நக்கிக்கொண்டே சென்றது.வண்ண வண்ணக் குடங்கள் அணிவகுத்து தாகம், தாகம் என்றன.காகங்கள் திடீரென்று ஒன்றாகக் கிளம்பிப் பறந்து, தங்கள் ஒன்றரைக் கண்களால் சூரியனைப் பார்த்து வந்தனம் செய்தன.முக்கிய வேலை இருப்பதைப் போல் நான்கு நாய்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின.விடுதியின் வாசலில் இருந்த செம்பருத்தி மலர்ந்தும் மலராமல் யோசித்துக் கொண்டிருந்தது.முல்லைக் கொடிகளில் வண்ணத்துப் பூச்சிகள் காத்து நின்றிருந்தன.எதிர் சாரியில் முன்னிருந்த அதே பாழடைந்த வீடு.அதன் சட்டச் சிக்கல்கள் இன்னமும் தீரவில்லை போலிருக்கிறது. முள்வேலியில் கரட்டோணான்உனக்கு இங்கு என்ன வேலை?’ எனக் கேட்பது போல் தலையை நிமிர்த்திப் பார்த்தது.காய்ந்த நத்தைக்கூடுகளையும், எறும்புச் சாரிகளையும் பார்க்கையில் இனம் தெரியா வேதனை வந்து சென்றது.தெருவோர நடைபாதைக் கடைகளில்கௌசல்யா சுப்ரஜா ராமனைஎழுப்பிக் கொண்டிருந்தார்கள்.கோயில் வாசலைக் கடக்கையில் நாகஸ்வரத்தில் பூபாளம் கேட்டது.கதம்ப நினைவுகள், கதம்ப வாசனைகள், என் மண்ணின் மணம் இதை அசை போட்டவாறே நான் மருத்துவ மனையின் நீள் நெடும் பாதையில் சென்று எம் கே எஸ்ஸின் அறைவாயிலைத் தட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

மருத்துவத்தையே ஒரு தவமாகச் செய்யும் மாமனிதர்.கருணையாலேயே பாதி நோய்களைப் போக்கியவர்.நோயின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து குணப்படுத்தும் வெகு சிலரில் இவரும் ஒருவர்.ஸ்டெத் இருந்தாலும் கைகளால் நாடி பார்ப்பதை இன்று வரை கடைபிடிப்பவர்.அதிலும், கழுத்துக் குழியிலும், கணுக்கால் மேல் மூட்டிலும் நாடியைப் பரிசோதிப்பார்.இருப்பவரிடம் அதிகம் பெற்று இல்லாதவர்க்கு இலவச மருத்துவம் பார்க்கும் நவீன ராபின் ஹூட்.எப்போதும் வெள்ளைக் காற்சட்டை, மேல்சட்டை,மருத்துவர் அணியும் வெள்ளை மேலங்கி, தும்பையென வெளுத்த தலை இவ்வளவுதான் அவர்.

வா, வா விரூபாக்ஷி.எப்படி இருக்கிறாய்?உன் அடுத்த கட்ட ஆய்வு எந்த நிலையில் இருக்கிறது?”

நான் அவரைக் கீழே விழுந்து வணங்கினேன்.பொது விஷயங்கள் பேசிய பிறகு அவர் என்னைப் பார்க்க விரும்பிய காரணத்தைச் சொல்வதற்கு முன்னால் ஒரு காணொலிக் காட்சியைப் பார்க்கச் சொன்னார்.

இனிய ஹம்மிங்குடன் அந்தக்காட்சி துவங்கியது.சில வினாடிகளில் இராக ஆலாபனையாக மாறியது. ‘மோக்ஷமு கலதாஎன்று அந்தப் பெண் குரல் கெஞ்சிக் கொஞ்சியது. சாரமதி சிறு மகவெனப் பிறந்து,சிரித்து, நான்கு கால்களால் தவழ்ந்து,திடுமென எழுந்து நின்று சிறு அடிகள் நடந்து, ஒரே பாய்ச்சலில் விரைந்தோடி,காற்சதங்கைகள் குலுங்க,சிறுமியாய், யுவதியாய்,அமைதியான பெண்ணாய் .., எப்படிச் சொல்ல நான்? பாடுபவளுக்கு 30 வயதிருக்கலாம்.சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். மெலிந்த உடல்,தீர்க்கமான கண்கள்,களையான முகத்திற்கு சோபை சேர்த்த கவலையை நான் பார்த்தேன்.மூன்று வயது குழந்தை ஒன்று அவள் மடியில் ஏற முயற்சிப்பதும்,உடனே வழுக்கி ஓடுவதுமாக இருந்தது.எல்லாவற்றையும் விட அந்தக் குரல், அதன் பாவம், நேர்த்தி, கமகம்,ஸ்தாயீ,ஸ்ருதி,ஆதிக் காலம் தொட்டு அவனை வேண்டிக்கொண்டேயிருந்த அத்தனை உயிர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து மன்றாடும் இசைச் செதுக்கல்கள்.ஆணின் குரல் போன்ற அடர் அடுக்குகளும், பெண்மைக்கே உரித்தான இன் குரலும் எப்படி ஒருமித்தன இக்குரலில்!அழுத்தம், கம்பீரம், இனிமை, துயரம்,ஆற்றாமை, கெஞ்சுதல் என வண்ணக் கோலங்கள் காட்டும் குரல். மிகத் தெளிவான உச்சரிப்பு;உள் மனச் செவியில் ஒலிக்கும் நாதம். நான் இதுவரை இப்படி யார் பாடியும் கேட்டதில்லை.

என் உணர்வுகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை.கடலில் சறுக்கி விளையாடி,அலைகள் மேல் எழுந்தேன் ஒரு முறை; மறுமுறை அலைகள் என்னை மூழ்கடிக்கக் கீழே விழுந்தேன்.குறுக்குத்துறை குமரன் கோயிலின் குகை வழியில் செல்வது போல் இருந்தது. மலையின் மேல் உள்ள சுனையில் குளிர் நீரில் முழு நிலா குளிப்பதைப் பார்ப்பது போலிருந்தது.யாருமற்ற வனத்தில் உள்ளே பூத்திருக்கும் சௌகந்தியின் வாசம் வந்தது; இல்லையில்லை இது நிஷாகந்தி. சேற்று வயலாடும் மீன்களின் குதூகலம்;கான் அதிர நடந்து மரக்கிளையை ஒடித்து வாய்க்குள் அடக்கும் பிடி. பொற்றாமரைக் குளத்தின் கரையில் வரையப்பட்ட மாக்கோலங்கள், வண்ண வண்ணப் பூச் சொரியும் பூவாணம். நான் சிரமப்பட்டு நீண்ட மூச்சிழுத்து என்னை சுதாரித்துக்கொண்டேன். ஆனால், கண்ணீர் வழிவதை நிறுத்த நினைக்கவில்லை.

காணொலி முடிந்த பின்னும் நானும் அவரும் ஒரு அரை மணி நேரம் ஒன்றும் பேசவில்லை.எங்களுடைய கல்லூரி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு விருப்பமானவர்களோடு அவர் தென்னிந்தியக் கர்னாடக இராகங்கள்,அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி இவற்றையெல்லாம் பற்றி குறைந்தது இருவது நிமிடங்களாவது பேசுவார். 72 மேளகர்த்தா இராகங்கள் 72 முக்கிய நரம்புகளை உடம்பில் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைச் சொல்வார். வீணை என்பதே நம் முதுகெலும்பும், நரம்புக் கோர்வையும்,உள்ளிருந்து இலங்கும் சக்தியின் புற வடிவம் என்பார்.இசை என்பது கலைகளின் அற்புதம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.இசை உபாசகரான அவருக்கு இசையின் மேதமை கைவரப் பெற்ற ஒரு பாடகி எம் எஸ் நோயால் அவதியுறுவதைப் பொறுக்க முடியாமல்தான் என்னிடம் பேச நினைத்திருக்கிறார். நான் அந்தத் துறையில் உலகளவில் பேர் சொல்லும் ஒரு பெண்; அவருடைய மாணவியாக நான் எப்போதுமே பெருமைப்பட்டிருக்கிறேன்.

இவ பேரு சந்தோஷி.நகை முரணான பேர்ன்னு தோண்றதா?.அவளுக்கு மல்டிபிள் ஸ்க்ளீரோஸ் மிகத் தீவிரமாக இருக்கு. எப்போ ஆரம்பிச்சிதுன்னு அவளுக்குத் தெரியல்ல.என் பரிசோதனை,அனுபவம் இதெல்லம் வச்சுப் பாத்தா ஆறேழு வருஷத்துக்கு மேல ஆயிருக்கும்.அவா ஊர்ல எம் எஸ்ஸைப் பத்தித் தெரிஞ்ச டாக்டர்கள் இல்ல போலிருக்கு. இப்போ அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்.இவ படிச்சவ.கல்யாணத்துக்கு அப்றமும் வேல பாத்திருக்கா.ஒரு கொழந்த இருக்கு.ஆறேழு வருஷமா ஏகமா செலவு பண்ணிருக்கா. வேலைக்கும் போக முடியல்ல; வருமானமும் கொறஞ்சுடுத்து. இப்ப செலவத் தாள முடியல அவ குடும்பத்தால.ஹஸ்பென்ட் நல்லவன்தான்.ஐ டில இருந்திருக்கான். போறாக்குறைக்கு ஆள் குறப்ல அவன் வேல போய்டுத்து”

மிதமான வேகத்தில் வரும் கடலலைகள் சுனாமியின் போது கொள்ளும் பேயுரு என் முன் எழுந்தது.என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்ப டபிள் விஷனாய்டுத்து இவளுக்கு. வெளிச்சமே இடஞ்சலாயிருக்கு.முழங்காலுக்குக் கீழ உணர்ச்சியில்ல.பசி அமோகமாயிருக்கு.”

சின்ன வயசு. நாபிலேந்து ப்ராண சக்திய எழுப்பிக் கரஞ்சு கரஞ்சு பாட்றா.இப்ப என்ன ட்ரீட்மென்ட்ல இருக்கா?’

ஸ்டெராய்ட். ஆனா, அதைத் தொடரப் படாதே; அப்பப்ப மரிஜ்வானா கொடுக்கறோம்.ஓரல் மெடிகேஷன் வேறெதுவும் செல்லுபடியாயில்ல. நீ இந்த ஃபைலப் பாரு. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்.”

சாக்ஷாத் காரணி சத் பக்தி, சங்கீத ஞான விஹினிலுகு’ என்னை அந்தப் பாட்டின் அனுபல்லவி சுற்றிச்சுற்றி வந்தது.பிரணவ மந்திரமான ‘ஓம்’அதிலிருந்து பிரவகித்த சப்த ஸ்வரங்கள்ச ரி க ம ப நி.உயிர் காற்றும் அனலும் இயைந்துஓமி’ன் அதிர்வலைகளைக் கொணரும் இசை.அவள் பாவத்தில் பக்தி இருந்தது, நாதத்தில் அவள் ஜீவன். அவளுக்கு எம் எஸ் அதுவும் மிகக் கடுமையாக! அந்த நாத பிந்துக்கள் இவளின் குரல் மூலம் அத்தனை உயிர்களின் குருதியிலும் கலக்கும் வல்லமை பெற்றவை.இன்றோடு முடியப் போகும் இசை அல்ல இவளுடையது.இதை இன்று பதிவேற்றிவிடலாம்;ஆனால், அவள் இசையில் நாளை செய்யப் போகும் மாயங்களை எப்படிப் பதிவு செய்வது? அவள் பிழைக்க வேண்டும், எப்படியாவது.எப்படிச் செய்யப் போகிறோம் இதை?எம். கே.எஸ் இதில் என்னை மிகவும் முக்கிய இடத்தில் வைத்திருக்கிறார். நான் என்ன செய்யப் போகிறேன்?

கல்லூரியில் முதல் வருடத்தில்ராகிங்போது பயந்து ஊருக்குத் திரும்பிவிட்டேன்.இவர் வீட்டிற்கே வந்துவிட்டார்.’நல்ல மூளைய வீணாக்குவாளா?’ என்ற அவரது கேள்வி எனக்கு நம்பிக்கை தந்தது.துணிச்சலுடன் எதையும் எதிர் கொள்வது அவர் பயிற்றுவித்ததுதான். மூன்றாம் ஆண்டு படிக்கையில் என் தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.பொருளாதாரச் சிக்கல்;படிப்பை நிறுத்த வேண்டிய சூழல்.இத்தனைக்கும் அரசுக் கல்லூரிதான். விடுதிக்கும், மெஸ்ஸிற்கும்,உபகரணங்களுக்கும் செலவு செய்ய முடியவில்லை.அப்போதும் நான் வாய்விட்டுச் சொல்லாமலே என்னைப் புரந்தவர் இவர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்னமும் நினைவில் நடுங்கச் செய்யும் அந்த நள்ளிரவு. அன்று சொந்த ஊருக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் பேருந்து இயந்திரக் கோளாறால் நின்றுவிட்டது.அவர்கள் அதைச் சரி செய்து சென்னைக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு ஆகிவிட்டது.விடுதியை நெருங்கும் போது எங்கிருந்து வந்தார்களோ இருவர் என்னைச் சுற்றி வளைத்தனர். ஒருவன் இடுப்பிலும், மற்றவன் தோளிலும் அழுத்தமாகக் கைகளை வைத்தார்கள்.நான் திமிறிக் கதறுகையில்சர்ப்ரைஸ் ரவுன்ட்முடிந்து திரும்பிக் கொண்டிருந்த எம். கே எஸ் பதறிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். பாஞ்சாலியைக் காத்த கண்ணன்.அவர் எழுப்பிய சத்தத்தில்அந்தக் கயவர்கள் ஓடி விட்டனர்.ஒரு அப்பாவைப் போல் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற உத்தமர்.’ஒரு ஃபோன் பண்ணிட்டு வரமாட்ட நீ, அசட்டுப் பெண்ணேஎன்றார்.’யார்ட்டயும் சொல்லக் கூடாது. மறந்துடணும், என்ன?’ என்றார்.

நல்ல நிலைக்கு வந்த பிறகு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கையில் இவர் சொன்னது இதுதான்பணத்தை யாராவது ஏழயோடப் படிப்புக்குக் கொடு.

இவர் மட்டும் இல்லையெனில் என் வாழ்வு என்னவாகியிருக்கும்?இவருக்குப் பட்ட நன்றிக்கடனை நான் எப்படித் தீர்க்கப் போகிறேன்? பணத்தால் அதை ஈடு செய்ய முடியுமா?

அவருடன் நான் அவளிருக்கும் தளத்திற்கு நடந்து செல்கையில்குறையொன்றுமில்லைஎன்று பாடிக்கொண்டிருந்தாள்.அவள் நிலையில் இந்தப் பாடல் சங்கீத லஹரியாக என்னுள் பிரவகித்தது.அந்தப் பாடல் முடிவடையும் வரை உள்ளே போக வேண்டாம் என்று அறை வாயிலிலேயே நின்றோம். உள்ளே சிறு ஜோதியின் வெளிச்சம் மட்டுமிருந்ததே,அந்த இருட்டிற்குக் கண்கள் பழகிய பிறகுதான் தெரிந்தது.

சந்தோஷி, இவ பெரிய டாக்டர். விரூபாக்ஷின்னு பேரு.உன்னப் பத்தி சொல்லிருக்கேன்.அவ கிட்ட மனம்விட்டுப் பேசு. நான் நாளைக்கி வரேன்.

அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.பிறகுமேம், என் பிரச்சனை என்னன்னு தெரியுமில்லையா?’ என்றாள்.

தெரியும். டாக்டர் எல்லாம் சொன்னார்.”

என்னதான் ஆயிண்டு இருக்கு உள்ள? என்னக் கொல்லப் போறதா?’

இதென்ன பேச்சு?உனக்கு நோய் எதிர்ப்பு கொறஞ்சிருக்கு.அது நரம்பு மண்டலத்த பாதிச்சிருக்கு. குறிப்பா,நரம்புகளைப் போத்திக் காக்கற நரம்புக் கொழுப்ப அழிச்சு நரம்பு நார்கள வீங்க வச்சிருக்கு. இதுக்கெல்லாம் நல்ல மருந்து நிறைய வந்தாச்சு. நீ பயப்படவே வேணாம்

நான் கஷ்டப்பட்டுண்டு,குடும்பத்தக் கவனிக்காம,பாரமாத்தான் இருக்கணுமா?’

அப்படின்னு யார் சொன்னா? உனக்குப் பூரணமா குணமாகும். நம்பிக்கைதான் வேணும்.உன்னப் பத்திச் செல்லு

நான் நன்னாத்தானிருந்தேன்.கல்யாணம் ஆன புதுசில பாடல;அது அவாளுக்கெல்லாம் அவ்வளவா புடிக்கல்லேன்னு புரிஞ்சுண்டு நானாத்தான் நிறுத்தினேன்.கட்டுப்பாடுன்னு சொல்ல முடியாது. ஏதோ புரிஞ்சுக்காம நடந்த வின அது. எங்கள்து லவ் மேரேஜ். எல்லாம் நன்னாத்தான் இருந்தது. தனியா இருக்கறச்சே பாடுவேன், குளிக்கறச்சப் பாடுவேன்.ஆஃபீஸ் ஃபங்க்ஷன்ல பாடுவேன்.அப்றமா வீட்லயும் பாட ஒத்துண்டாங்க.

ஒரு நா ஸ்கூட்டில வீட்டுக்குத் திரும்பி வரச்சே, ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். காயமெல்லாம் பெரிசாயில்ல, வீக்கமில்ல; உள்ள என்னமோ ஆயிருக்கணும்.ஆனா, அப்றமா, தல வலிக்க ஆரம்பிச்சுது,திடீர்ன்னு கண்ணு மங்கலாகும்,அப்றம் எல்லாம் பளிச்சுன்னு இருக்கும்.நடக்கறச்சே தரை சில சமயம் கால்லேந்து நழுவற மாரித் தோணும்.என்னென்னவோ டெஸ்ட் எடுத்தா,ஊசியும், மருந்துமா ஆச்சு. ஒரு நா காலைல ஏந்துக்கப் பாத்தேன் படுக்கைலேந்து. பாதம் ஊணல,சுரண அத்துப் போச்சு.எங்கெங்கோ அலஞ்சு இவரக் கண்டுபிடிச்சோம்.ஆனாலும், இப்ப என் நில எனக்கே மோசம்னு தோன்றது.’

அப்படியெல்லாம் நெனைக்காதே.எம் கே எஸ் மாரி திறமையான டாக்டர்ஸ் அபூர்வம்.உன்ன சரி பண்ணிடலாம்.டயர்டா இருக்கா?தூங்கு. சிஸ்டர் ,பெட்டை சரி பண்ணி இவங்களப் படுக்க வைங்க

அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தாலும் எனக்கு அவள் நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்தது.இங்கே சென்னையில் வைத்து என்ன அட்வான்ஸ்ட் ட்ரீட்மென்ட் தர முடியும்?நான் யு.எஸ்ஸிற்கு அவளை என் செலவில் அழைத்துச் செல்லலாம்,ஆனால், மருத்துவச் செலவுகள்,அதற்கென்ன செய்வது?அவளும், குடும்பமும் இதற்கு ஒப்புவார்களா?ஒருக்கால் அவளுக்கு பெரிய அபாயம் ஏற்பட்டுவிட்டால்,சட்டம் என்னை எந்த விதத்தில் பாதிக்கும் அல்லது பாதுகாக்கும்?இங்கே இவர்கள் செய்யும் அதே மருத்துவத்தைத் தொடர்வதற்காக எம் கே எஸ் என்னைப் பார்க்க நினைத்திருக்க மாட்டார்.அப்படியென்றால் என்ன என்னிடம் எதிர்பார்க்கிறார்?

அவர் மற்ற நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவளது மொத்த மருத்துவ வரலாற்றைப் படித்து குறிப்புகள் எடுத்தேன்.”சாப்பிடப் போகலாம் வாஎன்று அவர் அழைத்தவுடன் நாங்கள் வெளியே போய் சாப்பிடப் போகிறோம் என்று நினைக்கவில்லை. எங்கள் வளாகத்தில் உள்ள உணவுவிடுதியைத் தவிர்த்துவிட்டு அவர் நகரின் புகழ் பெற்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

சந்தோஷிக்கு சி சி ஆர் 5 என்ற மரபணு இல்லை அல்லது இப்போது செயலற்றுப் போய்விட்டது.” என்றார்

ஒரு கணம் நான் திணறிப் போனேன்.டி என் வை எவ்வளவு ஊன்றிப் படித்து அதை நினைவிலும் வைத்திருக்கிறார் இவர்!

சரிதானா, டாக்டர்?” என்றார் சிரித்துக்கொண்டே.

ஜீன் எடிடிங் இங்கு உண்டா, சார்?’என்றேன்

அது அவள் இருக்கும் நிலைக்கு இப்ப ஒத்து வருமான்னு தெரியல. அது இங்கே இன்னமுமில்லை

அப்படின்னாஎன்ன செய்யலாம்?’

நீ தான் சொல்லணும். உன் ஆராய்ச்சிலஎலியிலவெற்றி கடச்சுதுன்னு சொன்னியே?”

டாக்டர்.. அது அது..’

தெரியும்.அது மனுஷங்களுக்கு இன்னமும் செய்யப்படல்ல.ஆனா, உயிர் ஆபத்து இல்லாத முற தான அது

ஆமா,சார்.ஆனா ப்ளாஸ்மா மாத்தறதுங்கறதோட ஜீன் எடிட் செய்ய நேர்ந்தாலும் நேரலாம்; அதை இரகசியமாச் செய்யறதுல ஆபத்து இருக்கே

தெரியும் விரூ.இந்த ஜீனியஸ்ஸ, அவ இறுதிய நெருங்கிண்டு இருக்கான்னு தெரிஞ்சப்றம் எனக்கு இதுதான் வழின்னு தோணித்து

நான் மலைத்துப் போனேன்.ப்ளாஸ்மாவை அவள் குருதியிலிருந்து நீக்கி புது ப்ளாஸ்மாவைச் செலுத்துவது, தேவையென்றால் சிசிஆர்5 எடிட் செய்வது,அதுவும் மனித இனத்திற்கு இப்போது சாத்தியமாக்கக் கூடிய முறையில் சட்டங்கள் இல்லை. ப்ளாஸ்மா மாற்றுதல் சட்டப்பூர்வமானதுதான் ஆனால், மரபணு அமைத்தல், களைதல் வழி முறை, முழுதும் உறுதியான வழிமுறை இருக்கிறது. சட்டம் ஒத்துக்கொள்ளவில்லையே?அவள் பாடல் ஜீவனோடும், லயத்தோடும் உலகின் அத்தனை அரங்குகளிலும் ஒலிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது.

ஆனா, டாக்டர்..’

அவகிட்ட இதைப் புரிய வைக்க முடியும்;அவ ஹஸ்பென்ட ஒத்துக்க வைக்க முடியும்.பாட்றதுக்கு அவளுக்கு வாய்ப்பு தரதாச் சொன்ன பல சபாக்காராளும், திரையிசைக்காராளும் அவளுக்காககிரவுட் ஃபன்டிங்செஞ்சு பணம் கொடுக்கறா.அவ விமானப் பயணச் செலவு என்னோடது.தங்கறத்துக்கும், ட்ரீட்மென்டுக்கும் இந்த ஃபன்ட்ல எடுத்துக்கலாம்.போறாத்துக்கு நீ கொஞ்சம் போடு.”

டாக்டர்…’ நான் தழுதழுத்தேன்.ஒரு பெண்ணிற்காக, அவளின் இசைக்காக மனித நேயம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.நான் நேரில் பார்த்திராத அத்தனை மனிதர்களையும் ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.இத்தனை யோசனையுடன் அனைத்தையும் செய்திருக்கும் இந்த மாமனிதரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

உன்னால முடியும் விரூ. யாருக்கும் என்ன மருத்துவம்னு தெரியாது.அத இரகசியமா வச்சுப்போம். உன் அஸிஸ்டென்ட்ஸ் உன்னக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க இல்லயா? இவ குடும்பத்துக்கு மட்டும் விளக்கிச் சொல்லிடுவோம்.என்ன சொல்ற?”

நான் நினைத்தேன்இதில் நான் பிடிபட்டால் என்ன ஆகிவிடும்? நான் தொடர்ந்து மருத்துவராக இருக்க முடியாது. ஒருக்கால் சந்தோஷி வேறு காரணங்களுக்காக இறந்து போனாலும் நான் குற்றம் சாட்டப்பட்டு சிறை செல்ல நேரிடலாம்.ஆனால், என் மருத்துவம்,மூல இசையைக் காப்பாற்றுமானால், சந்தோஷியின் இசை உலகின் அரங்குகளிலெல்லாம் ஒலிக்குமானால், இதைச் செய்வதில் எனக்கு என்ன குறை?அப்படியே ஒன்று நேர்ந்தாலும் அது நான் என் குருவிற்குச் செலுத்தும் காணிக்கைதானே?

வானம் துடைத்து விட்டதைப் போல் தெளிவாக இருந்தது.தன் குழந்தையையே விமானத்தில் ஏறும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுக்காகச் சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவள் கைகளைப் பற்றித் தட்டிக் கொடுத்தேன்.

பாஸ்டனில் அதிகாலையில் தென்பட்ட வானத்தைப் பார்க்கையில்நீல வானம் தனில் ஒளி வீசும் முழு மதியோ உன் முகமே?’ என்று ஊத்துக்காட்டின் பாடலை அதி அற்புதமாகப் பாடினாள்.மாலையில் தோட்டத்தில் இருக்கையில்தூய தாமரைக் கண்களும்என்ற ஆழ்வார் பாசுரம் தோடியில்.ஆஹீர் பைரவி, யமன் கல்யாணி, மால்கோஷ்,சங்கராபரணம், பஹாட், சாரங்கா, கேதார கௌளை, சஹானா,சிவரஞ்சனி,மஹதி,கீரவாணி,அமிர்த வர்ஷினி அவள் பாடாத இராகம் இல்லை.அதைக் கேட்டு கண்ணீர் சிந்தாமல் என் உதவியாளர்களும் இருந்ததில்லை.

முதல் வாரம் அவளை வெளிச்சம் குறைவான அறையில் வைத்துப் பரிசோதித்தோம்.அவளுக்கு வயதிற்குத் தகுந்த தெம்பில்லை.பாடும் நேரம் தவிர்த்து அவள் தனக்குள்ளேயே தலைவலியாலும்,டபிள் விஷனாலும் சுருங்கிக் கொண்டாள்.வீட்டைப் பற்றிய ஏக்கமும் இருந்தது.என் உதவியாளர் சில்வியா சென்னையில் அவள் கணவனுடன் பேசி அவன் குரலையும்,குழந்தையின் குரலையும் பதிவு செய்து உடனே சந்தோஷிக்குப் போட்டுக்காட்டினாள்;அவள் நிலையில் முன்னேற்றம் சிறிது வந்தது. தினமும் பேச ஏற்பாடுகள் செய்தோம்;அவளுக்கு செல் திரையோ, ஸ்கைப்போ ஒத்துவரவில்லை.

முதலில் ப்ளாஸ்மாவை மாற்றிப்பார்க்கலாம் என்று தீர்மானித்தோம்.அவளை அமைதிப்படுத்துவது என்பது மிகச் சவாலாக இருந்தது.உறக்கமே இல்லாமல் படுத்துக்கிடந்தாள்;லாரன்ஸ் கேட்டான்

உங்கள் இசையில் உறங்க வைக்க ஒன்றுமில்லையா?” அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.’மணி நூபுர தாரி, ராஜ கோபாலாஎன்ற நீலாம்பரி கீர்த்தனை என் நினைவில் வந்தது.அவளையே பாட வைத்து,அவளைக்கேட்க வைத்து தூங்கச் செய்தோம்.

மேத்யூ,ப்ளாஸ்மா சவ்வில் புரதம் அவளுக்கு எதிராகச் செயல்படுகிறது; நல்ல புரதங்களை எதிர்த்து அவளது செல்களை அவைகளே அழித்து வருகின்றன.நம்மிடம் அவள் உடலில் செலுத்தத்தக்க ப்ளாஸ்மா இருக்கிறது;இவள் நாலு மணி நேரம் இதைத்தாங்குவாளா என்பதுதான் கேள்வி

விரூ,பிரித்துப் பண்ணலாம்;பார்க்கலாம்; நம்பிக்கையோடு இருப்போம்

இரு கைகளிலும் ஊசி பொருத்தப்பட்டு அவள் உடலிலிருந்து இரத்தம் ஒரு ஊசி வழியாக மெஷினுக்குச் சென்று அலசி பிரிக்கப்பட்டு மறு ஊசிவழியாக அவள் உடலுக்குள் செல்ல வேண்டும்.அன்று ஒரு மணி நேரம் மட்டும் அதைச் செய்வதாக இருந்தோம்;ஆனால், அரை மணிக்குள்ளாகவேஅலாரம்அடித்தது.அவள் உடலிலிருந்து சென்ற இரத்தம் மெஷினில் உறையத் தொடங்கியது.அவளுடைய இரத்த அழுத்தம் மிக மிகக் குறைந்தது.ப்ளாஸ்மா மாற்றுவதை அப்படியே நிறுத்தி அவள் க்ரூப்ரத்தத்தை நேரடியாக உள்ளே செலுத்தினோம்.;பிழைத்துக்கொண்டாள்.

மறு நாள் மேத்யூவிரூ, உடனே வாஎனப் பதறினான்.

அவள் குருதியில் இரத்தத்தட்டுக்கள் குறைந்து அலர்ஜி ஏற்பட்டு உடலெங்கும் வட்ட வட்ட பளப்பள கொப்புளங்களாகத் தெரிந்தது.மீண்டும் ஸ்டெராய்ட்கள்.

நாங்கள் நால்வரும் குழம்பினோம்;ப்ளாஸ்மா மாற்ற நிலையை இவள் எம் எஸ் தாண்டிவிட்டது எனப் புரிந்தது.ஒரு வழிதான் இருக்கிறது;துணிந்து செய்ய வேண்டியதுதான்.

கிரிஸ்பர் செயல்முறையில் புது நுணுக்கம் என்ற சோதனை என்று சொன்னோம் அரசிடம். மனிதர்கள் மேல் இந்த சோதனை இல்லை எனவும் சொன்னோம்.அனுமதி கிடைத்தவுடன் சி சி ஆர் ஐய்ந்தை எடிட் செய்தேன்;அனைத்தையும் நானே, நான் மட்டுமே, பிறர் அறியாமல் செய்ததாகக் கோப்புகள் ஏற்படுத்தினேன்.அவள் உடலுக்குள் இனி போர் இல்லை.

ஆறு மாதங்கள் கழித்து அவள் ஊர் திரும்புகிறாள். சக்கர நாற்காலியில் வந்தவள் தன் கால்களால் நடந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் ஏறினாள்.மிகுந்த மகிழ்ச்சியுடன் என் மருத்துவ ஆய்வகம் திரும்பினேன். அங்கே *எஃப் டி வின், சி பி ஆர் பிரிவு ஆட்கள் என் உதவியாளர் லாரன்சைக் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

எந்தரோ மஹானு பாவுலு அந்தரிக்கி வந்தனமுஎன்று சந்தோஷியின் ஸ்ரீ இராகம் காதுகளில் ஒலித்தது.

*(FDA- Food and Drug Authority.CBER- Center for Biologics Evaluation and Research)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.