உள்சுழித்து வளரும் அலை
வாசனை
தூங்கமுடியாத நோயைப் பரப்புகிறது
இருக்கைக்குப் பின் அமர்ந்து
உந்தித் தள்ளுகிறது காமம்
வாகனங்கள் சீறிப் பாய்கின்றன.
ஒவ்வொரு வீட்டையும்
ஏக்கத்தோடு பார்த்து நகர்பவன்
மெல்லிய ஒளி கசியும் அறைகளிலிருந்து
வெளிவரும் காற்றை
நுரையீரலுக்குள் இறக்குகிறான்
ஓரிடத்தில் நில்லாமல்
விளையாடும் குறுஞ்சுடர்
பாலைமணலாக உடைக்கிறது அவனை.
தற்காப்புக்காக வைத்திருக்கும் கத்தியால்
சுடரை வெட்டுகிறான்
அது அவனை ஊதிச் சிரிக்கிறது.
உள்சுழித்து வளரும் அலை
காயங்களின் இச்சை மீது
கத்தியைச் செருகும் கணங்களில்
நுரைத்துப் பொங்குகிறது கடல்.
விண்மீன்களைப் பிய்த்தெறியும் வேகத்தில்
மேல்நோக்கிச் செல்லமுடியாமல்
வீடுகளை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும்
பூமியை முத்தமிடுகிறான்
விடியல் வந்து கொண்டிருக்கிறது
அவன் மிகவும் புதியவனாக
அதே வீடுகளின் வழி
போர்வைகள் விற்பவனாக
செல்லும் போது
குரைப்பதை மறந்து
சிரிக்கின்றன நாய்கள்
எறும்புகள் விசேஷமானவை
கோடிக்கணக்கான
கவிதை எறும்புகள்
பூமியெங்கும் நகர்ந்து செல்கின்றன.
ஒரு முறை நகர்ந்தாலே
தடங்கள்
கூகுள் மேப்பில் வந்துவிடுவதால்
வானத்திலிருந்து கடவுள் கவனித்துக் கொண்டிருப்பதாக நம்பிய பிறகு
விஷேச எறும்புகளாக மாறி
மரங்கள் தோறும்
துளையிட்டு ஊதுகின்றன.
எறும்புகள் வாசிக்கும் இசை
காட்டு விலங்குகளுக்கு
பெரும்பாலும் புரிவதில்லை
கோபத்துடன் உறுமும் போது
எறும்புகள்
தலையைக் காப்பாற்றிக் கொள்ள
பூமிக்கடியில் பதுங்குகின்றன.
எறும்புகளுக்கு
டைனோசராக மாறி
அச்சுறுத்தும் விலங்குகளைத்
தெறிக்க விட வேண்டும் என்பது
கால்கள் முளைத்த நாளிலிருந்து
சொல்லித்தரப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
நசுங்குதல் தவிர
வேறெதுவும் பெரிதாக
நிகழ்ந்து விடுவதில்லை.
எப்போது எங்கு சென்றாலும்
எறும்புகளைத் தேடிப் பிடித்து
தின்று செரிப்பவர்கள்
எறும்புத்திண்ணிகள் அல்ல
அவர்கள்
எறும்புகளை விடவும் விஷேசமானவர்கள்
லட்சம் எறும்புகள் சேகரித்தும்
வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சி செய்தும்
ஒரு எறும்பாக மாறமுடியாதது குறித்து
கோபத்தில் இருக்கும் போது
அவர்களின் தலையிலிருந்து
முடியைப் பிடுங்கி விளையாடும்
இந்தக் குறும்பு எறும்புகளை
என்னதான் செய்வது ?