எனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை

நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும், அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவை என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டன. அவை அனைத்தும்

ஒரே மாதிரி இருந்தன. ஒரே மாதிரி கண்கள், மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பூண்டு போல், நடுவில் மட்டும் ஒரு சிறிய கரிய தீற்றல். ஊசி நகங்களும் கோரப் பற்களும் காவு கொள்ளத் தயாராகின்றன. மரண பயத்தில் பரிதவிப்புடன் அவர்களைப் பார்க்கிறேன். என்னைக் கைவிட்டவர்களுடன் சேர்ந்து நானும் புன்னகைத்தபடி நிற்கிறேன்.

நெடு நாட்களுக்குப் பிறகு வந்தது இப்படியொரு கனவு. எழுந்து அமர்ந்தேன். நான் A-block 52வது அறையில் இருக்கிறேன் என்று உணர சிறிது நேரம் பிடித்தது. தூக்கம் வரவில்லை. தண்ணீர் குடித்தால் தேவலாம் எனத் தோன்றியது. ஆனால், எழுந்து அவ்வளவு தூரம் தனியே நடந்து மெஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். பயம்.

எனக்கு தூக்கத்தின் மூன்றாம் சுழற்சியில் இருந்த தினேஷை எழுப்பிக் கூற வேண்டும் போலிருந்தது.

எனக்கு பூனைகளை பிடிக்காது”

எனக்கு இந்த உலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்தது. யாருமற்ற அந்த பின்னிரவில் என்னிடமே நான் பேசத் தொடங்கினேன்

எனக்கு பூனைகளை பிடிக்காது”

ஏன்?”

தெரியாது, காரணமில்லாமல் வெறுக்கக் கூடாதா?”

இல்லை.”

அவை அருவருப்பாக இருக்கின்றன.”

பொய்.”

உண்மை.”

இல்லை

சரி. பொய். எனக்குப் பூனைகளைப் பார்த்தால் அந்தக் கிழவனின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவன் ஆளும் மூஞ்சியும் சிரிப்பும்.”

யார் ?”

தினமும் சரியாக காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பான்.

அப்பொழுது எனக்கு 5 அல்லது 6 வயது. அது ஒரு நீளமான காம்பவுண்ட், அதன் கடைசியில் தான் எங்கள் வீடு. வாசலில் இருந்து பார்த்தாலே தெரியும். காலையில் கார்பரேஷன் தண்ணீர் வரும்போது தான் குளித்தாக வேண்டும். காம்பவுண்ட் பாதையில் எங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுதான் குளிப்பேன். இல்லை நிற்பேன். அம்மா தான் என் மேல் தண்ணீர் கொட்டி, சோப்பு தேய்த்து விடுவார்கள். மோப்பம் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்.

அவனது முகம் கோணல் வாயுடைய கிழட்டுப் பூனையைப் போல இருக்கும். காதுகள் மட்டும் ஓநாயுடையவை. முள்ளு முள்ளாக மீசை வைத்துக் கொண்டு, நரைத்த தலையுடன் குட்டையாக இருப்பான். வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் எப்பொழுதும். அருகில் இருந்த காளிமார்க் சோடா கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

குளித்து யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வெளியே ஸ்கூல் வேனிற்காக எங்கள் பக்கத்து காம்பவுண்ட் படியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் தவறாமல் வந்து அமர்வான்.

அவன் என்னிடம் பேசியதெல்லாம் ஒரே வாக்கியம், சிரித்தது ஒரே மாதிரி சிரிப்பு, பார்த்தது ஒரே மாதிரி பார்வை.

உன் குஞ்சுமணியை எனக்குத் தருவியா?”

நான் பதிலே பேச மாட்டேன்.

ஒரே ஒரு முறை “ என் கிட்ட குஞ்சு மணி கிடையாது” என்றேன் எரிச்சலுடன்.

நான் இதுவரை கேட்டதிலேயே மிக அசிங்கமான ஒரு சிரிப்பை சிரித்தான்.

குளிக்கறப்ப ஆடுதுல, அது பேரு என்னது?”

நான் ஒண்ணும் குளிக்கலை. உள்ள என்னைய மாதிரியே ஒரு பையன் இருக்கான். அப்படியே என்னை மாதிரி. அவன் கிட்ட தான் அது இருக்கு”

திரும்பவும் அசலாக அதே கிழட்டுப் பூனையின் சிரிப்பு.

லூசு தாத்தா” என்றேன் மகா எரிச்சலுடன்.

அவன் பேசியதில் என்ன அப்படி தப்பாக இருந்துவிட்டது? சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏனோ ஒரு எரிச்சல். ஏதோ காய்ந்த சாக்கடையின் வண்டையில் போட்டு புரட்டியது போல்.

இனி என்னால் நிறுத்த முடியாது,சொல்லித்தான் ஆக வேண்டும்.”

சொல்

எனக்கு குடோன்களையும் super heroக்களையும் கூட பிடிக்காது.”

ஏன் ?”

அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருந்த இடம் ஒரு நகரின் மிக முக்கியமான மையம். அங்கே எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கும், கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள், ரிக்‌ஷாக்கள், மனிதர்கள். எப்போதாவது, தலைக்கு மேல் கொஞ்சூண்டு தெரியும் வானம் போல, தெரியாமல் விழுந்து விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டே விழும் தூறல் போல, அருகில் அணி வகுத்திருந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் இருந்து யாராவது எட்டிப் பார்த்து சிரிப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ப்ளாஸ்டிக் ஸ்டம்ப்பையும், பேட்டையும் பாலையும் வைத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் தனியாக வேர்ல்ட் கப் ஆடிக் கொண்டிருக்கும் என் மேல் பாவப்பட்டு வந்து இரண்டு ஓவர்கள் விளையாடுவார்கள். என் வயதையொத்த யாரும் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாது. அந்த ரோட்டில் மொத்தம் இருந்தது பத்து வீடுகள். ஆனால் மூன்னூறு கடைகள் வரிசை கட்டி நின்றன. ஆட்டோமொபைல், டிராக்டர், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல் உதிரி சாமான்கள் விற்கும் கடைகள்.

அன்று சரியான வெயில்.

நடு நிசியில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த காட்டின் வாயிலில் இருந்த கிராமம். நிலா இல்லாத வானத்தின் கீழ், குதிரைகளுடன் படையெடுத்து வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஊரை சூறையாடினர். நகை, பணம், பாத்திரங்கள் என அனைத்தையும் எடுத்து சுருட்டிக் கொண்டு, எதிரில் பட்டவர்களை வெட்டி வீழ்த்தி, ஊரை தீயிட்டுக் கொளுத்தி தப்பித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இரும்புக்கை மாயாவியான நான் தான் அந்த ஊரின் ஒரே போலீஸ். எதுவுமே அறியாமல் எனது குகையில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள், ஊர் கொள்ளை போனது என்று கதறினார்கள்.

வெகுண்டெழுந்த நான், கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகமூடியாக்கிக் கொண்டு சீறிப் புறப்பட்டேன், கயவர்களை அழிக்க. மலை மேல் ஓடிச்சென்று பார்த்தேன். வெகு தூரத்தில் அவர்களின் தீப்பந்தங்கள் தெரிந்தன. எனது குதிரையை முடுக்கி விட்டு துரத்தினேன்.

இதோ! நெருங்கி விட்டேன்!

என்ன செய்கிறேன் பார்! நான் இருக்கும்போதே இவ்வளவு தைரியமா? முதுகில் இருந்து ஈட்டியை உருவி வீசினேன்.

அம்மா!” என்ற அலறலுடன் சரிந்தது ஒரு குதிரையும் அதன் சுமையும்.

இன்னும் 50 பேராவது இருப்பார்கள்.

பாவம் நீங்கள்! என் கையிலா வந்து சிக்க வேண்டும்? ஹா! ஹா! ஹா!”

கழுத்து முறியும் சத்தம். குதிரையின் கால் முறிந்து கத்தும் சத்தம், மரங்கள் உடையும் சத்தம், இடி வெடிக்கும் சத்தம்.

எனது இரும்புக்கை பட்டவுடன் நொறுங்கித் தூள் தூளாகிப் போய்க் கிடந்தது மொத்த படையும்.

அதோ! ஒருவன் பதுங்கிச் செல்கிறான். கோழை!

நீ கொடுத்து வைத்தவன். என் கையால் சாகப் போகிறாய்!”

மூச்சிழுத்து ஓங்கிய எனது கை, முழு வேகத்துடன் சென்று மெதுவாக இறங்கியது ஒரு நிஜ வயிற்றில்.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய், எனது முகமூடியை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.

ஐய்யோ! விளையாட்டு ஆர்வத்தில் வாசல் வரை கண் மண் தெரியாமல் வந்து விட்டேன்.

யாருடைய வயிறு இது?”

செபாஸ்டியன். பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் அண்ணன். என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும், மேட்ச் பார்க்கும் நல்லவர். 16லிருந்து 19 வயதிற்குள் இருக்கும். அவனுக்கு பூனை மீசை துளிர்த்திருந்தது.

ஆம், எனக்கு பூனைகளைப் பிடிக்காது

அந்த கணத்தில் வெறும் டிரவுசர் மட்டும் அணிந்து, அதற்குத் துணையாக அரைஞான் கயிறும் கட்டியிருந்தேன்.

என்னடா, சட்டை போடாம சுத்திட்டு இருக்க?” என்றபடியே எனது நெஞ்சுக் காம்பை பிடித்து நன்றாக ஸ்க்ரூவை திருகுவது போல திருகி விட்டான் அவன். வலி சுர்ரென்று உச்சந்தலை வரை போனது.

வலிக்குதுண்ணே!” என்று கத்தினேன்.

எங்கள் காம்பவுண்டை ஒட்டியபடி இருந்த ஒரு சிறிய சந்தினுள் இருந்தது அவன் வேலை பார்த்த குடவுன். அங்கே குவியல் குவியலாக இரும்புப் பட்டைகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள்.

என்னைத் தனது இரும்புக்கரங்களால் தூக்கிக் கொண்டு சென்றான். நான் தாவிக் குதிக்கத் துள்ளினேன். இரும்புப் பிடி. வேகமாக என்னை இரு கைகளிலும் தூக்கி, அவன் உடலோடு அணைத்துக் கொண்டு (நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த இரும்பு வியர்வையின் வாசம்) வேகமாகச் சென்று என்னை அந்த குடவுனுக்குள் தூக்கி வீசினான். பட்டைகள் தேய்த்துத் தேய்த்து பிளந்திருந்த தரை என் முதுகை சிராய்த்தது.

சடாரென்று கதவை மூடினான். ஜன்னல்களற்ற அறையின் இருட்டு எங்களை விழுங்கியது. பொதுவாக குடவுன்களில் மின்சார இணைப்பும் இருப்பதில்லை. தீக்குச்சியை பற்ற வைத்து என் கண்களுக்கருகே கொண்டு வந்தான்.

தீக்குச்சி அணைந்து போனது.எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

புது குச்சி. எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிய ஆரம்பித்தது. நான் பயந்து கண்களை மூடிக் கொண்டேன். கன்னத்தில் பளார் என்ற அறையுடன் மயங்கினேன்.

செபாஸ்டியன்” என்று வெகு தூரத்தில், பல மைல்களுக்கு அப்பால் இருந்து யாரோ கூப்பிட்டார்கள். அந்த கூச்சலில் தான் கண் விழித்தேன். சில நொடிகளில் கதவு திறந்து ஒரு உருவம் வெளியேறியது. கதவு தாழிடப்பட்டது. ஒரு வகை அருவருக்கத்தக்க, பனம்பூவின் நெடியை உண்டாக்கக்கூடிய நாற்றம் உடல் முழுவதும் பரவியிருந்தது, குமட்டிக் கொண்டு வந்தது. கூடவே செபாஸ்டியனும் கதவைத் திறந்து வந்தான். மறுபடியும் இருட்டு.

அதன்பின் இருட்டு என் வாழ்வை விட்டு விலகவே இல்லை,அந்த நொடியில் தான் ஒரு பூனையின் குரூர சிரிப்பைப் போல இருட்டும் எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கத் தொடங்கியது.

அந்த மூச்சுமுட்டும் இருட்டில், பிசுபிசுத்த நெடியில், இரும்பாலான ஒரு அறையில், புழுவைப் போல கிடந்த எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் நான் வெறுத்தேன், கடவுள்களை, super heroக்களை, இரும்புக் கைகளை, முக்கியமாக பூனைகளை.

பல ஆண்டுகள் அங்கேயே கிடந்தேன். கத்த வேண்டும் என்று கூட தோன்றவில்லை. எதிர்க்கத் திராணியற்ற ஒரு செடியைப் போல. வலுவற்ற ஒரு நோஞ்சானைப் போல. செத்துப்போன ஒரு சிலையைப் போல. தற்காத்துக் கொள்ள லாயக்கில்லாத முதுகெலும்பற்ற ஒரு கோழையைப் போல.

பல வருடங்கள் கழித்து, ஏதோ புத்தகத்தில் ‘இரும்பு மனிதர்’ என்றிருந்ததை பார்த்தவுடன் எழுதத் தோன்றியது,

இரும்பின் அர்த்தம் வலிமையல்ல. அதிகாரமும் அத்துமீறலும்.”

இரும்பாலானது இந்த அறை, இந்த ஊர், இவ்வுலகு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.