சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும். சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்னைக்குச் சென்று திரும்பிய எங்கள் ராமதாஸ் சார் “கலச்சி உட்ட தேன்கூட்டிலேருந்து தேனீக்கள் பறக்கறமாதிரி எந்தப் பக்கம் பாத்தாலும் ஆளுங்க பறந்துகிட்டே இருக்காங்கடா” என்றார். இன்பச்சுற்றுலா சென்று திரும்பிய முத்தம்மாள் பாட்டி “உயிர்காலேஜ் செத்த காலேஜ்னு புதுசுபுதுசா பல விஷயங்கள் அந்த ஊருல இருக்குப்பா” என்று அடுக்கினார். கட்சி மாநாட்டுக்காக போய்வந்த சொக்கலிங்கம் மாமா ”ஒரு ஊடு கூட நம்ம ஊருல இருக்கறமாதிரி கூரை ஊடு இல்ல பாத்துக்கோ. எங்க திரும்பனாலும் வரிசவரிசயா கல்லு ஊடுங்க. எல்லாமே ரெண்டு மாடி மூணு மாடி. எல்.ஐ.சி.னு ஒரு கட்டடம். பதினாலு மாடி. எப்படி கட்டனாங்களோ தெரியலை. உலகளந்த பெருமாளாட்டம் மெளண்ட் ரோட்ல நிக்குது. நிமுந்து பாத்தா கண்ணே கூசுது” என்று சொல்லும்தோறும் அவர் வியப்பு பலமடங்காகப் பெருகியபடி இருந்தது. உடல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கமலக்கண்ணன் பெரியப்பா “மூர்மார்க்கெட்னு ஒரு எடம் ஸ்டேஷன் பக்கத்துலயே இருக்குது. வத்திப்பொட்டி அடுக்கனமாதிரி ஏகப்பட்ட கடைகள். அம்மா அப்பாவ தவிர எல்லாமே அங்க காசுக்கு கெடைக்குது. எல்லாமே கால்விலை, அரைவிலைனு பேரம் பேசி வாங்கலாம்” என்று பெருமையாகச் சொன்னார். அனந்தநாயகி சித்தி “பட்டணத்துல உங்க பெரியண்ணன் சமுத்திரக்கரைக்கு ஒருநாள் சாயங்காலம் அழச்சிட்டு போயிருந்தான். அங்க என்ன மாதிரி காத்து தெரியுமா? எழுந்து வரவே மனசில்ல. அப்படி ஒரு சொகமான காத்து” என்று சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.
சென்னை சார்ந்து சொல்லப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு விதமென்று தோன்றினாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் கண்ட உண்மைகளையே சொன்னார்கள். துண்டுகளாக சிதறிவிட்ட காகிதத்துணுக்குகளைச் சேகரித்து அடுக்கி, அதன்மீது தீட்டப்பட்டிருந்த கோட்டோவியத்தை மீட்டுருவாக்கம் செய்வதுபோல அவர்கள் சொன்ன தகவல்கள் சார்ந்து சென்னை நகரத்தின் சித்திரத்தை மிக எளிதாகத் தீட்டிக்கொள்ள முடியும். வெகுகாலத்துக்குப் பிறகு அந்த நகரத்தைச் சுற்றி அவர்கள் சொன்னதையெல்லாம் நானே பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
காந்தியடிகளோடு சேர்ந்து பணியாற்றியவர்களும் அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியவர்களும் காந்தியடிகளைப்பற்றி எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமானவை. காகா காலேல்கர், சுசிலா நய்யார், மகாதேவ தேசாய், நாராயண் தேசாய், மனுகாந்தி என எண்ணற்றோர் தம் நினைவிலிருந்து காந்தியடிகள் தொடர்பான பல நிகழ்ச்சிகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தையும் மையப்படுத்தி ஒரு வாசகனால் காந்தியடிகளின் உருவத்தைத் தீட்டிவிடமுடியும். பத்மபூஷன் விருது பெற்ற இந்தி எழுத்தாளர் விஷ்ணு பிரபாகர் கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் என எல்லாத் தளங்களிலும் எழுதியவர். காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை பல நூல்களிலிருந்து எடுத்துத் தொகுத்து அவர் 1954இல் இந்தியில் எழுதிய புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1970இல் ’உழைக்காமல் உண்பவன் திருடன்’ என்னும் தலைப்பில் முதல் பதிப்பாக வெளிவந்தது. காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் ஆர்வமூட்டும் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நூலாக எழுதியிருக்கும் விஷ்ணு பிரபாகரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் மா.பா.குருசாமியும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.
ஒருமுறை வங்காளப்பகுதியில் காந்தியடிகள் பயணம் செய்தார். ஒரு ஜமீன்தார் வீட்டில் அவர் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஜமீன்தார் வீட்டில் எண்ணற்ற வேலைக்காரர்கள் நாலாபக்கமும் ஓடி வேலை செய்தபடி இருந்தார்கள். ஒருநாள் வழிபாட்டுக்காக வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தார் காந்தியடிகள். அங்கு வெளிச்சம் கண்ணைக் கூசும் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் விளக்குகளை அணைத்துவிடும்படி காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். ஜமீன்தார் அமர்ந்திருந்த இடத்துக்குப் பின்னால் கைக்கெட்டும் தொலைவிலேயே விளக்குப்பித்தான் இருந்தது. ஆனாலும் அதை அழுத்த அவர் தன் வேலைக்காரரை அழைத்தார். அவர் வராததால் மீண்டும் அழைத்துவிட்டுக் காத்திருந்தார். இதைக் கண்ட காந்தியடிகள் மெளனமாக எழுந்து சென்று தானே விளக்குப்பித்தானை அழுத்திவிட்டுத் திரும்பி வழிபாட்டைத் தொடங்கினார். பிறகு சொற்பொழிவின்போது “மனிதனுக்கு உடலுழைப்பு மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் உடலுழைப்பை வெறுக்கிறார்கள். ஆனால் இது தவறு. உழைக்காமல் உண்பவன் திருடன் என்பது கீதை சொல்லும் வாக்கியம்” என்று சொல்லி முடித்தார். தற்செயலாக, உரை முடிந்து அனைவரும் எழுந்திருக்கும் தருணத்தில் மேசை மீதிருந்த பீங்கான் கோப்பை தவறி விழுந்து சுக்குநூறாக உடைந்தது. உடனே எழுந்துவந்த ஜமீன்தார் குனிந்து தரையில் சிதறிக்கிடந்த பீங்கான் துண்டுகளை எடுக்கத் தொடங்கினார். ஓசை கேட்டு ஓடி வந்த வேலைக்காரர்கள் அக்காட்சியைக் கண்டு நம்பமுடியாதவர்களாக திகைத்து நின்றார்கள். பொதுவில் சொல்லப்பட்ட ஒரு சொல் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
இத்தகு எண்ணற்ற நிகழ்ச்சிச்சித்திரங்களால் இந்தப் புத்தகம் நிறைந்திருக்கிறது. ஒருமுறை காகா காலேல்கர் குழந்தைகள் சொற்களைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் குஜராத்தி மொழியில் நடைவண்டி என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கியிருந்தார். அழகழகான ஓவியங்கள். வழவழப்பான தாள்கள். ஒரு புத்தகத்தின் விலை ஐந்தணா. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆவல் காரணமாக ஒருநாள் அவர் காந்தியடிகளிடம் “நீங்கள் நடைவண்டி புத்தகத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “ஆம். பார்த்தேன். அழகாக இருக்கிறது. ஆனால் யாருக்காக இந்தப் புத்தகத்தை நீங்கள் தயாரித்தீர்கள்?” என்று கேட்டார். காகா காலேல்கர் பதில் சொல்லாமல் குழப்பத்துடன் அவரையே பார்த்தபடி நின்றிருந்தார். கோடிக்கணக்கான ஏழைக்குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டுசென்று சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கடையில் ஏற்கனவே ஒரு புத்தகம் இரண்டணாவுக்கு கிடைக்கிறதென்றால், உங்கள் புத்தகம் காலணாவுக்குக் கிடைக்கவேண்டும். ஏழைக் குழந்தைகள் உங்கள் புத்தகத்தை எப்படி விலைகொடுத்து வாங்குவார்கள்?” என்று மென்மையான குரலில் கேட்டார் காந்தியடிகள். அவர் கேட்ட கேள்வி பொருள்பொதிந்த ஒன்றாக காலேல்கருக்குத் தோன்றியது உடனே ஆமதாபாத் சென்று அப்புத்தகத்தின் மலிவுப்பதிப்பைத் தயாரித்து ஐந்து பைசாவுக்கு விற்கும்படி செய்தார்.
தினமும் இரவில் படுக்கப்போகும் முன்பாக காந்தியடிகளின் தலையில் கஸ்தூர்பா எண்ணெய் தேய்த்துவிடுவார். அது ஒரு பழக்கம். ஒருநாள் கஸ்தூர்பா மிகவும் தாமதமாக வந்தார். காந்தியடிகள் “ஏன் இன்று தாமதம்?” என்று கேட்டார். “சமையலறையில் நிறைய வேலைகள். இன்று இரவு ராம்தாஸ் ஊருக்குச் செல்கிறான் அல்லவா? மூன்று நாட்களுக்கு உதவும் வகையில் அவனுக்குத் தேவையான வழிச்சாப்பாட்டைத் தயாரிக்கத் தொடங்கினேன். அதை முடிக்க தாமதமாகிவிட்டது” என்றார் கஸ்தூர்பா. உடனே காந்தியடிகள் “இன்று ராம்தாஸ் செல்கிறான். நாளை துளசி செல்வான். நாளைக்கு மறுநாள் சுரேந்திரன் செல்வான். இப்படி யாராவது ஒருவர் ஒவ்வொருநாளும் ஆசிரமத்திலிருந்து சென்றுகொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்காகவும் நீ இப்படி உணவு தயாரித்துக் கொடுக்கமுடியுமா?” என்று கேட்டார். அதற்குக் கஸ்தூர்பா “அவன் நம் மகன். அதனால் செய்தேன். மற்றவர்கள் விருப்பத்துக்கு என்னால் எப்படி சமைக்கமுடியும்?” என்று கேட்டார். காந்தியடிகள் அவருக்குப் புரியும் வகையில் “இது சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் தம் பெற்றோரைத் துறந்து வசிப்பவர்களே. நம்மையே பெற்றோராக மனதார நினைப்பவர்கள். தாய்க்கும் மகனுக்கும் இடையிலிருக்கும் உறவை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது ஒரு வீடு என்னும் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவோ சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு எல்லோருக்கும் என்ன கிடைக்குமோ அதுதான் ராமதாசுக்கும் கிடைக்கவேண்டும்” என்று சொல்லி புரியவைத்தார்.
தண்டி யாத்திரையின்போது சத்தியாகிரகிகள் அனைவரும் ஒரு கிராமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவும் வழிபாடும் முடிந்ததும் அனவரும் உறங்கிவிட்டனர். காந்தியடிகளின் படுக்கைக்கு அருகில் ஒரு சின்ன விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. இரண்டு மணியளவில் காந்தியடிகளுக்கு விழிப்பு வந்துவிட்டது. உடனே எழுந்து உட்கார்ந்துகொண்டு திரியை ஏற்றிவிட்டு எழுத உட்கார்ந்தார். எண்ணெய் தீர்ந்துபோய்விட்டதால் விளக்கு அணைந்துவிட்டது. ஆனாலும் காந்தியடிகள் எழுதுவதை நிறுத்தவில்லை. தற்செயலாக உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு தொண்டர் “எப்படி பாபு உங்களால் இந்த இருளில் எழுதமுடிகிறது? யாராவது ஒருவரை எழுப்பியிருக்கலாமே. விளக்கெரிய ஏதேனும் செய்திருக்கலாமே” என்றார். காந்தியடிகள் புன்னகைத்தபடியே “எல்லாரும் சோர்ந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரையும் எழுப்ப மனமில்லை. இருட்டில் எழுதும் பழக்கமுண்டு என்பதால் கவலையில்லை” என்று பதில் சொன்னார்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தியடிகள் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தருணம். உண்ணாவிரதம் தொடங்கி பதின்மூன்று நாட்கள் கடந்துவிட்டன. அவர் உடல்நலம் குன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்றும் யாரையும் சந்தித்து உரையாடக்கூடாது என்றும் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆண்ட்ரூஸ் அறைக்குக் காவலாக நின்றிருந்தார். யாரோ ஒரு கிராமத்துத் தம்பதியினர் தொண்டர்களின் கட்டுக்காவலை மீறி காந்தியடிகள் படுத்திருந்த அறைவரைக்கும் வந்துவிட்டனர். ஆனால் ஆண்ட்ரூஸ் அவர்களைத் தடுத்துவிட்டார். அத்தம்பதியினருக்கு ஒரே மகன். அவனுக்கு பல நாட்களாக காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவர்கள் ஊரில் ஒருவர் தண்ணீர் எடுத்துச் சென்று காந்தியடிகளின் பாதங்களைக் கழுவி, அந்நீரைக் கொண்டுவந்து மருந்தாக அளித்தால் மகன் நோய்நீங்கிப் பிழைத்துவிடுவான் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். அந்த எண்ணத்தோடு தண்ணீர் நிறைக்கப்பட்ட சொம்போடு அவர்கள் வந்திருந்தார்கள். காந்தியடிகளுக்கு அச்செய்தி தெரிவிக்கப்பட்டது. காந்தியடிகள் அத்தம்பதியினரை அருகில் அழைத்தார். மெல்லிய குரலில் “உங்களுக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை இல்லையா? இருக்குமெனில், அந்த நம்பிக்கையை ஒரு சாதாரண மனிதன் மீது இறக்கி, ஆண்டவனை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? என்னுடைய பாதங்களைக் கழுவி, கழுவிய அழுக்கான நீரை மருந்தாகக் குடிக்கவைக்க எண்ணுவது எனக்கும் அவமானம், உங்களுக்கும் அவமானம். முதலில் உங்கள் மகனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் வழியைப் பாருங்கள்” என்று அறிவுரை சொன்னதோடு மட்டுமன்றி, தன் எதிரிலேயே அவர்கள் சொம்பில் இருந்த தண்ணீரைக் கீழே கொட்டும்படியும் செய்தார்.
தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த காலத்தில் காந்தியடிகள் ஒரு சைவ உணவு விடுதியில் காலையிலும் மாலையிலும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அந்த உணவுவிடுதியில் ஆல்பர்ட் வெஸ்ட் என்னும் நண்பர் அறிமுகமானார். அவர் அதே ஊரில் அச்சகமொன்றை நண்பருடன் சேர்ந்து நடத்தி வந்தார். திடீரென அந்த நகரை கொள்ளைநோய் தாக்கியது. எண்ணற்ற இந்தியர்கள் அதில் பாதிப்படைந்தார்கள். காந்தியடிகள் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்வதில் ஈடுபட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவரால் உணவு விடுதிக்குச் செல்லமுடியவில்லை. இரு நாட்களாக அவர் உணவு விடுதியின் பக்கம் வராததால் மூன்றாவது நாள் ஆல்பர்ட் வெஸ்ட் காந்தியடிகளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். கதவைத் திறந்தபடி வந்த காந்தியடிகளைப் பார்த்த பிறகுதான் அவர் ஆறுதலடைந்தார். பிறகு மெதுவாக ‘நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்யட்டுமா?” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் புன்னகைத்தவாறே ”நோயாளிகளுக்கு பணிவிடை செய்வீர்களா?” என்று கேட்டார். “தாராளமாகச் செய்வேன்” என உடனே அவர் ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் அவரை நெருங்கி தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தபடி “உங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலே வரும் என எனக்குத் தெரியும். இந்த வேலைகளைச் செய்ய இங்கு பலர் இருக்கிறார்கள். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைக்குத்தான் எனக்கு உங்கள் உதவி தேவை. டர்பன் சென்று அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். அடுத்த நாளே டர்பனுக்கு வண்டியேறிச் சென்று பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் வெஸ்ட்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் கோகலேயைச் சென்று சந்தித்தார் காந்தியடிகள். ”உங்களுடைய வேலைத்திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக ஓராண்டுக்காலம் நாட்டைச் சுற்றிப் பாருங்கள்” என்று அனுப்பிவைத்தார் கோகலே. சரியாக ஓராண்டுக்கு பிறகு திரும்பி வந்த காந்தியடிகளிடம் “இந்தியாவைப்பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டார் கோகலே. நீண்ட பெருமூச்சு விட்டபடி காந்தியடிகள் “எங்கும் ஒரே பேச்சுமயமாக உள்ளது. யாரும் நாட்டுக்காக உள்ளபடியாக சாகத் தயாராக இல்லை” என்று வருத்தத்துடன் சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் அருகில் அமர்ந்திருந்த டாக்டர் ஹரிபிரசாத் தேசாய் சீற்றமடைந்தார். “பஞ்சாபில் லாலா லஜபதிராய் இருக்கிறார். மகாராஷ்டிரத்தில் திலகர் இருக்கிறார். வங்காளத்தில் புரட்சிகர இளைஞர்கள் பலர் உயிர்த்தியாகத்துக்கு தயாராக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள் “புரட்சிகர இளைஞர்கள் சாகத் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுடைய வழிமுறையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால் அவர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். திலகர் மீது நான் பெருமதிப்பு வைத்திருந்தேன். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தாம் ராஜதுரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் பொருட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முயற்சி செய்தார். அதைக் கண்டு நான் வருந்தினேன். “இன்று இந்தியாவில் நடைபெறும் ஆட்சியின் தன்மையை நான் எதிர்க்கத்தான் செய்வேன். இது குற்றமென கருதப்படுமானால், அக்குற்றத்தை நான் மீண்டும் மீண்டும் செய்வேன். நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள். நீங்கள் என்னை விடுவித்தாலும் கூட இதே குற்றத்தைத் திரும்பத்திரும்பச் செய்வேன் என்று திலகர் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது” என்று சொன்னார். கோகலேயும் தேசாயும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். “தீமையை தீமையால் வெல்லவேண்டும் என்று திலகர் நம்புகிறார். நான் தீமையை சத்தியத்தால் வெல்லமுடியும் என்று நம்புகிறேன். இதுவே எங்கள் இருவருக்கிடையில் உள்ள கருத்து வேற்றுமை” என்று தொடர்ந்து சொன்னார் காந்தியடிகள்.
இப்படி அறுபத்தெட்டு காட்சிச் சித்தரிப்புகளோடு இந்த நூலை உருவாகியுள்ளார் விஷ்ணு பிரபாகர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் காந்தியடிகளின் அர்ப்பணிப்புணர்வு, தியாகம், அனைவரையும் ஒன்றெனக் கருதும் நேய உணர்வு, கடுமையான உழைப்பு, சத்தியத்தின் மீதான அவருடைய பற்று ஆகியவற்றை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. காந்தியடிகளை அறிந்துகொள்ள விழைகிறவர்கள் ஓர் எளிய ஆரம்பக் கையேடாக இத்தொகுதியைப் படிக்கலாம்.
(உழைக்காமல் உண்பவன் திருடன் – விஷ்ணு பிரபாகர். தமிழில்: மா.பா.குருசாமி. காந்திய இலக்கியச் சங்கம். மதுரை. விலை ரூ.120)