இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மணி எட்டரைதான் ஆகியிருந்தது. ஆனால் ஊரே அடங்கிக் கிடந்தது. கேட்ட ஒரே சத்தம் பக்கத்து வீட்டு தென்னமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து கரைந்த சத்தம் மட்டுமே. குடித்துவிட்டுச் சாலையோரம் விழுந்துக் கிடக்கும் குடிமகன்களைப் போல் சுய நினைவற்றுக் கிடந்தது வானம். சுற்றிலும் யார் வீட்டு மாடியிலும் யாரும் இல்லை என்பதைக் கவனித்தேன். இந்த ஊர் இதற்கு முன் இப்படி இல்லை. எப்போதும் எல்லார் வீட்டிலும் அடுத்தவீட்டுக் கதைதான் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் வீட்டில் சாப்பிட்ட தட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாதவர்கள்கூட பக்கத்துவீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அது தொந்திரவாக இருந்தாலும் பல நேரங்களில் பெரிதும் உதவியிருக்கிறது. ‘அது’ வந்த பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இப்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது.
பல நினைவுகள் வந்து அலைக்கழித்தன. பின் எப்போதோ தூக்கிப்போனேன்.
மறுநாள் காலை சீக்கிரமே குளித்து முடித்துவிட்டுக் கிளம்பினேன். ‘அங்கு’தான்.
“என்னம்மா சொல்ற… வெளிய வந்து சொல்லு… சமையக்கட்டுல இருந்து கத்தாதன்னு எத்தனவாட்டி சொல்றது”
அம்மா சரியாக வெளியே கிளம்பும்போதுதான் எதேனும் சொல்லுவாள். பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க்கவில்லை. அப்படியென்றால் கோபமாக இல்லை. ஆனாலும் ஆளைக் காணோம். நானே சமையக்கட்டிற்குச் சென்றேன்.
“சொல்லுமா.. என்ன சொன்ன”
அடுப்பில் இருந்தப் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்துக்கொண்டே “பக்கத்து வீட்டு ரேவதிய ரெண்டு நாளா காணமாடா… கணேசன் அண்ணன் வந்து காலைலயே விடிஞ்சதும் விடியாததுமா விசாரிச்சிட்டுப் போனாரு.. நீ எந்திரிச்சதும் உன்ன வந்துப் பாக்க சொன்னாரு” என்றாள்.
ரேவதி அக்காவை காணவில்லை என்று அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு ஏன் அதிர்ச்சியாகவில்லை என்பதை நினைத்துதான் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இப்படி ஏதேனும் நடக்கும் என்று முன்னரே எதிர்பாத்தேனா. ச்ச.. நான் ஏன் அப்படி நினைக்கப்போகிறேன். எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை. தெருவில் அதிகம் அவள் யாரிடமும் பேசிக் கூடப் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை, யாருமே அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். ஆனால் பிறகு ஏன் அந்தச் செய்தியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பயமாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றேன். பின் ஒரு முடிவெடுத்தவனாய், “போய்ப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.
கணேசன் அண்ணனின் மனைவிதான் ரேவதி. ஓராண்டுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்தது. கணேசன் அண்ணனின் தூரத்து சொந்தம் என்று அம்மா சொன்னாள். ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாய் ஒருவருடனும் பேசாமல் எப்போதும் கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பாள். எப்போதும் “ஊர் வம்புக்கு நான் போக மாட்டேன்பா..” என்று பெருமைப் பேசும் அம்மாவே ஒரு நாள் “என்னடா இந்தப் பொண்ணு வீட்ட விட்டு வெளியவே வர மாட்டேங்குது..” எனக் கேட்டாள்.
“புதுசா வந்துருக்காங்கள்லம்மா.. அதுனால அப்படித்தான் இருப்பாங்க..போக போக சரி ஆகிடுவாங்க” இதைச் சொன்னபோது எனக்கே நம்பிக்கை இல்லை.
கணேசன் அண்ணன் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே துபாய் சென்றுவிட்டார். வீட்டில் ரேவதி அக்கா, கணேசன் அண்ணனின் அண்ணன், அவரின் மனைவி மூன்றுபேர் மட்டுமே இருந்தனர்.
அண்ணன் துபாய் போவதற்கு முன் சில தடவைகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது கூட ஒரு தடவைதான் ரேவதி அக்காவை பார்க்க முடிந்தது. அதுவும் அந்த அண்ணன் காப்பி கொண்டு வரச் சொன்னதால்.
ஒரு வேளை பிடிக்காமல் நடந்த திருமணமோ என்றெல்லாம் சில சமயம் தோன்றும்.
நான் முதன் முதலாக ரேவதி அக்காவிடம் இங்குதான் பேசினேன். நண்பர் ஒருவர் ஒரு சுவரில் பதியப்பட்டிருந்தக் கவிதைகளைக் காண்பித்து இந்தக் கவிதைகள் யார் எழுதியது என்று கேட்டார். ‘நகுலன்’ என்றேன்.
“இல்ல இவங்கள நான் கொஞ்ச நாளா தொடர்ந்து பாலோ பண்ணிட்ருக்கேன்.. பேரு ரேவதி. கவிதைகள் நல்லா எழுதுறாங்க.. ஒரு வேள இவங்களே வேற பேர்ல எழுதுறாங்களோன்னு டவுட்டாகிருச்சு” அவர் பேசியதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் அந்தக் கவிதைகளின் மேல்தான் இருந்தன.
“எனக்கு
யாருமில்லை
நான்
கூட..”
“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்”
இதற்கு முன் பல தடவைகள் இந்தக் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுபோல் எப்போதும் இவை இவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்ததில்லை.
ரேவதி அக்கா!!
அந்தக் கவிதைகளின் கீழே பெயர் போடவில்லை என்பதால் நான் “நகுலன்!” என்று எழுதினேன்.
உடனேயே “ஆம்” என்று பதில் வந்தது. எங்கள் நட்பு நகுலனிடமிருந்து தொடங்கிற்று.
சில நாட்களிலேயே மிக நன்றாக பேசத்தொடங்கிவிட்டோம். எப்போது இங்கு வந்தாலும் அவரிடம் “ஒரு குட் மார்னிங்” அல்லது “குட் ஆப்டர்நூன்” அல்லது ஒரு “குட் ஈவ்னிங்” சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவே போவேன். ரேவதி அக்காவும் அப்படித்தான். எங்கள் பேச்சு முழுக்க முழுக்க தீவிர இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எதைப் பற்றியும் விவாதிக்க கூடியவராக ரேவதி அக்கா இருந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே போனது. என்னையும் “எழுது. எழுத எழுத தன்னால் எழுத்து பிடிபடும்” என ஊக்கப்படுத்தினாள்.
ஒன்றை நான் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் இங்கு நன்றாகப் பேசினாலும் அக்கா வீட்டிற்குப்போனால் முற்றிலுமாக மாறி, சரியாகச் சொன்னால் அதே பழையப் பெண்ணாகத்தான் இருந்தாள். எப்போதும் அவள் அறைக்குள்தான். ஒன்றிரண்டு தடவை வெளியே வந்தாலும் ஒரு ஹாய் ஹல்லோ மட்டும்தான்.
எனக்கு இந்த விசயம் ஆச்சர்யமாய் இருந்தது. ஒரே ஆள் இங்கு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் ஏன் இருக்கவேண்டும். இத்தனைக்கும் கணேசன் அண்ணனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள். கலகலப்பானவர்கள். கணேசன் அண்ணனின் அண்ணனுக்கும் அவருக்கும் பத்து பதினைந்து வயது வித்யாசம் இருக்கும். தம்பியைத் தன் பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்பவர் அவர். ரேவதி அக்காவை ஒரு சொல் கடுமையாகப் பேசிப் பார்த்ததில்லை. இருந்தும் அக்கா தன் கூண்டிற்குள்தான் எப்போதும் இருந்தாள்.
இங்கு எதிர்பார்த்த மாதிரியே எல்லா இடங்களிலும் ஒரே அமைதி. இன்றைக்கு முழுவதும் இதைப் பத்திதான் பேசுவார்கள். எல்லா சுவர்களிலும் #சேவ்ரேவதி என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.
எனக்குப் புரிந்தது… நான் ஏன் அவள் காணாமல் போனது பற்றி அதிகம் கவலைக்கொள்ளவில்லை என.
நாங்கள் பேச ஆரம்பித்த புதிதில் ரேவதி அக்காவிற்கு அதிக நண்பர்கள் இங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எண்ணிக்கைக் கூடத் தொடங்கியது.
ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் தன் படத்தை சுவரில் பகிர்ந்திருந்தாள். அன்று மட்டும் அவளுக்கு முன்னூறுக்கும்மேல் நட்பு அழைப்புகள் வந்தன. அனேகமாக ஊரில் இருந்த எல்லோருமே அந்த லிஸ்ட்டில் இருந்தனர். அதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும் யாராவது புதிதாக நட்பாக வேண்டினால் என்னிடம்தான் முதலில் சொல்வாள். நான் அவரின் சுவர் பக்கம்போய் ஆராய்ச்சி செய்து அவரின் நட்பை ஏற்கலாமா வேண்டாமா என்று சொல்வேன். ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. அம்முறை நட்பு அழைப்பு கொடுத்தவர் பக்கத்து தெருவில் இருக்கும் கீர்த்தி. பெண் என்பதாலும் அதுவும் பக்கத்து தெருவில் இருப்பவள்தானே என்பதாலும் ரேவதி அக்கா என்னைக் கேட்க்காமலேயே அவளின் நட்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள். எனக்குத் தெரிந்தபோது நான் அவளை நன்றாகத் திட்டினேன். ஏனென்றால் அந்த கீர்த்தியை பற்றி ஊரில் ஒருவர் கூட நல்லவிதமாக பேசவில்லை. வாராவாரம் அவள் வீட்டிற்கு புதிது புதிதாக பொருட்கள் எப்படி வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அவள் அதை பெறுவதற்கு எந்த தப்பான விசயங்களையும் செய்வதில்லைதான். “எனக்கு இதெல்லாம் வேண்டும்.. ஏழையாய் பிறந்துவிட்டதால் இதற்கெல்லாம் ஆசைப்பட முடியுமா” என்பது மாதிரி ஏதாவதுதான் சொல்லுவாள் யாரேனும் ஒரு தர்மவான் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவான். வேடிக்கை என்னவென்றால் அதைப் பார்த்து கீர்த்தியையும், வாங்கிக்கொடுத்தவனையும் திட்டித் தீர்க்கும் புண்ணியவான் அடுத்த முறை முதலில் ஓடிப்போய் சீர்வரிசை செய்வான். கீர்த்திக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் யார் திட்டுவதைப் பற்றியும் கவலைப்படமாட்டாள். இப்படி வாங்கிக்கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றோ, வாங்கிக்கொள்வதில் கீர்த்திக்கு என்ன ஆசை என்றோ புரியவில்லை.
ரேவதி அக்காவிடம் இதைச் சொன்னபோது என்னை ஆணாதிக்கவாதி எனத் திட்டினாள். நானும் மற்ற ஆண்களைப்போல்தான்.. ஒரு பெண் பொது வெளியில் சகஜமாகப் பழகினாலே சந்தேகப்படும் மோசமான வக்கிர புத்திக்காரன் அது இது என என்னவெல்லாமோ சொல்லித் திட்டினாள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட்டேன். ஒரே வாரத்தில் நீ சொன்னது சரிதான் என்று என்னிடம் வந்து சொன்னாள்.
புகைப்படத்தை ஏன் பகிரவேண்டும்.. உடனே அதை நீக்குங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் பொறாமையால் பேசுகிறேன் என்றும் என் எல்லையை மீறாமல் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தாள்.
இது ஒரு வினோத உலகம். வந்த சில நாட்களிலேயே உணர்ந்தாலும் விட்டு வெளியேறும் வழிதான் தெரியவில்லை. இது வந்த பின்னர் எல்லோருக்கும் மூன்று முகங்கள் ஆகி விட்டன. இங்கு காண்பிப்பது ஒரு முகம், வெளி உலகில் ஒரு முகம் மற்றும் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மூன்றாவது முகம்.
மேலும் சில சுவர்களில் சில போராட்ட அழைப்புகள் இருந்தன. உலகில் பல நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாய் இவ்விடம் இருப்பதால் எல்லோரும் முடிந்தவரை இவ்விடத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். வாரத்திற்கு ஒரு போராட்ட அறிவிப்பையேனும் பார்க்கலாம். நம்மில் சிலருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்விடம் சொர்கபுரி.
இப்போது யோசித்தால் எனக்கு ரேவதி அக்காவைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்வான் என்று சொல்வார்கள். கட்டுப்பாடுகள் அற்ற, அதே சமயம் சிறிதளவு பாதுகாப்பாய் உணரும் இடத்தில் கூட ஒரு பெண் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக்கொள்கிறாள். எனக்குப் புரிந்தது ஆனால் என்னைப்போல் பலரும் நட்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ரேவதி அக்காவின் சுவரை அடைந்தபோது கணேசன் அண்ணனின் அண்ணன் அங்கிருந்தார். “காணாமல்போனவளைத் தேடாமல் இங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்” இருந்தும் அவரைப் பார்த்தவுடன் எழுந்த குற்றவுணர்ச்சியை மறைக்க முடியவில்லை.
கடைசியாய் அவளுடன் சண்டைப் போட்டபின் இரண்டு நாட்கள் மனதில் வேறெதுவும் ஓடவில்லை. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அநியாயமானவை. அவளின் நல்லதிற்கு சொன்னதை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்திவிட்டாள். பதிலுக்கு திருப்பி திட்டியிருந்தால் ஒருவேளை மனம் சமாதானம் ஆகியிருக்கும். அதற்கு அவள் வாய்ப்பே குடுக்காததால் அவள் வீட்டிற்குப் போனேன். கணேசன் அண்ணனின் அண்ணந்தான் இருந்தார். சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.
“அண்ணா.. ரேவதி அக்கா இருக்காங்களா” அவள் அங்கு இல்லையென்பது தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டேன்.
“இல்ல சிவா.. அவ அங்கதான் போயிருக்கா” என்றார்
ஒன்றும் பதில் சொல்லாமல் தலையை குனிந்து நின்றேன்.
“என்னாச்சுப்பா…? அவகிட்ட எதுனா கேக்கனுமா”
“வந்து..உங்ககிட்டதான் ஒன்னும் சொல்லனும்…” என்று இழுத்தேன்.
“சொல்லு.. என்ன சொல்லனும்” அதுவரை அசிரித்தையாக இருந்தவர் என் முகத்தைக் கவனமாகப் பார்த்தார்.
“நான் சொல்றத எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க.. ரேவதி அக்கா பத்தி ஒன்னு சொல்லனும்ன்னுதான் வந்தேன்.. தப்பா எதுவும் இல்ல..அக்கா நல்லவங்கதான்.. அதுனால அவங்க மேல் இருக்குற அக்கறைலதான் சொல்றேன். அக்காவ ‘அங்க’ அனுப்பாதீங்க அண்ணா அது கல் மனசுக்காரங்களுக்கான இடம்.. சரியாத்தான் சுவர்களால அந்த உலகத்த உருவாக்கிருக்காங்க.. அங்க பாதிபேரு மோசமானவங்களா இருக்காங்க.. இது அக்காவுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது.. அவங்க எல்லாரையும் நம்புறாங்க.. யாரு எப்படின்னு பாத்து பழக மாட்றாங்க.. நான் சொன்னாலும் என்னயத்தான் திட்றாங்க.. இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்.. நேத்து பொறந்த கொழந்தல இருந்து நாளைக்கு சாகப்போறவங்க வரைக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருப்போம்.. ‘அது’ வந்ததுக்கு அப்றம் எல்லாரையும் புதுசா பாக்குற மாதிரி இருக்கு.. எது உண்மை எது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியல..எதுக்கு வம்பு பாருங்க.. அதான் உங்ககிட்ட ஒருவார்த்த சொல்லிரலாம்ன்னு வந்தேன்.. நான் சொன்னேன்னு எதுவும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க.. அதுக்கும் என்னதான் திட்டுவாங்க..நான் வர்றேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன். கணேசன் அண்ணனின் அண்ணன் என்னைக் கூப்பிடவில்லை. அதிலிருந்து நான் சொன்னதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டார் என்பது புரிந்தது. உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோசம்.
அடுத்த ஒரு வாரத்திற்குளெல்லாம்….
கணேசன் அண்ணனின் அண்ணனிடம், “சாரி அண்ணா.. என்றேன்” என்னைப் பார்த்தவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். “பாவி மக.. இந்தப் பாழாப்போன சொவத்துங்கப் பக்கம் வராத வராதன்னு சொன்னேன்.. என் பேச்சக் கேக்கலயே.. இவ்ளோ வீம்பா ஒரு பொம்பளைக்கு இருக்குறது.. எம் தம்பி வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. எங்க போனாளோ.. என்னாச்சோ தெரியலயே” அழுது தீர்த்தார்.
ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
“தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம புருசன் இல்லாதப்பா ஊர் மேயிரியான்னு கேட்ருக்கான் பாவி.. சொல்லு பொறுக்க மாட்டாம வீட்ட விட்டுப் போயிட்டா” வரும் வழியில் ஏதோ ஒரு சுவரோரம் இருவர் பேசிக்கொண்டார்கள்.
இங்கு காணாமல் போன எத்தனையோ பேர் திரும்பி வந்திருக்கின்றனர். திரும்பி வரவே மாட்டார்கள் என்று ஊர் உலகமே சொன்னவர்கள் எல்லோரும் மறுபிறவி கிடைத்து மீண்டிருக்கின்றனர். “உலகமே இங்கிருக்கிறது, இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாதவர்களே இனி இருக்க மாட்டார்கள்” என்று என்னை இங்கு முதன் முதலில் அழைத்து வந்தபோது ஒருவர் சொன்னார். ரேவதி அக்காவும் திரும்பி வருவாள். அவள் வரவேண்டும். “#சேவ்_ரேவதி_அக்கா” என்று என் சுவரில் எழுதிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.
“சுவர்களின் உலகத்திற்கு வந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக” என்ற செய்தி கண் முன் தோன்றி மறைந்தது.