தொடர்ந்து விடாமல் பெருமழையாகவும் தூரலாகவும் நின்று நிதானித்து பெய்த மழையால் துறையூர் கலைத்துப்போடப்பட்டிருந்தது.ஈர அதிகாலையில் அந்தசிறுநகரில் நடைப்பயிற்சி செல்வதற்காக குடையுடன் தன்வீட்டு வாசலில் நின்ற வெங்கட்ராமன் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தார்.அடைமழைநாள் எப்படியோ தன்குளிரோடு நசநசப்போடு அவனை கொண்டுவந்துவிடுகிறது.
துன்பம் இனியில்லை..சோர்வில்லை.துன்பம் இனியில்லை சோர்வில்லை…என்ற வரிகளை மந்திரம் என மனம் அனிச்சையாய் சொன்னது.விஸ்வாவின் இறுதி நாட்களில் இந்தவரிகளை பிடித்துக்கொண்டமனம் உள்ளேயே எந்தநேரமும் நிரப்பமுடியாத ஒன்றை நிரப்பிக்கொண்டிருந்தது.அவன் இறப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த பத்துநாட்களில் இந்தவரிகளின்றி எதுவும் துணையிருந்திருக்க முடியாது.தயவுசெஞ்சி செத்துபோடா கண்ணா.. இவ்வளவு வலி வேண்டாம்..என்று நூறுமுறையாவது மனதால் சொல்லிய நாட்கள்.
குடையை மடக்கி கையில் பிடித்துக்கொண்டு நடந்தார்.நாய் ஒன்று அசதியில் தெருவிளக்கின் அடியில் படுத்திருந்தது.நடுவயதுடையது. செவலை நிறம்.மூச்சு ஏறிஇறங்கும் வயிற்றின் தசைகளில் இளமையின் பூரணம். சற்று நேரம் நின்றார். மணிவிழி திறந்து அவரைப்பார்த்து வாலையசைத்து கண்களை மூடிக்கொண்டது.
தெப்பக்குளத்தை சுற்றி நடந்தார்.பெரியஏரியிலிருந்து வரும் புதுநீர் நிரம்பித் தழும்பிக்கொண்டிருந்தது.நீரில் கலங்கல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.ஆனால் நாசி கண்டுகொண்டது.ஒருபுலன் இல்லாவிட்டால் ஒருபுலன் உதவுவதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.இருபுலன் சேர்ந்து ஒருபுலனாய் பரிணாமம் வளர்ந்தால்!… அழகு என்பதும் நாம் அறிந்த உயிரியல் என்பதும் என்னவாகும்? என்று மனதில் தோன்றியது.
எப்பொழுதும் நடக்கும் வழியில் சாக்கடை சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு வழியெங்கும் நீர் கணுக்கால் வரை சென்றது.திரும்பிவிடலாம் என்ற எண்ணம் எழும் பொழுதே அதுமுடியாது என்பதை அவர்மனம் அறிந்திருந்தது.
பழையப்பாதையில் நடந்தார்.இந்தப்பாதையில் வந்து ஆண்டுகளாகின்றன.சிறுதயக்கத்துடன் வாயில்கதவைப்பிடித்து நின்று அந்தப்பள்ளிக்கட்டிடத்தைப் பார்த்தார்.இத்தனை ஆண்டுகளில் விரிந்து பரந்து உயர்ந்திருந்தது.அவர் கால்களுக்கடியில் சிறுகூச்சம் போல ஒருஉணர்வு.உயரமான இடத்தில் ஒட்டில் நிற்பதைப்போல.கால்களை மாற்றிமாற்றி தூக்கி பின்புறமாக மடித்து நீட்டினார்.
அலைபேசி ஒலித்துக்கலைத்தது.எடுத்ததும், “குட்மானிங் டாக்டர் .இன்னிக்கு நீங்க லீவான்னு கேட்டு கால் வந்துட்டேயிருக்கு.கெம்பியப்பட்டிக்காரர் நல்லாருக்கார்.வீட்டுக்கு அனுப்பலாமா டாக்டர்.இங்க எக்ஸ்ட்ரா பெட் போட்டும் சிரமமா இருக்கு டாக்டர்,”என்றது.
“நீ சர்ச்க்கு போகலையாம்மா..”
“பக்கத்திலதானே டாக்டர். போயிட்டு திரும்பிருவேன்.மது நைட் இருந்தா..”
“சரிம்மா.இந்தவாரத்துக்கு சன்டே இல்லன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..ஸார்ப்பா நைன்க்கு இருப்பேன்,”என்றப்பின் அலைபேசியை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.பள்ளிவளாகம் அமைதியாக இருந்தது.மைதானத்தில் மழைபெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்தகண்கள் என நீர் தேங்கிக்கிடந்தது.
உள்ளுக்குள் ஏற்பட்ட ஒருசொடுக்கலால் அவர் உடல் ஆடியது. “டாடி..”என்று விஸ்வா ஓடிவருகிறான். பள்ளியை அடுத்திருந்த நந்திகேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தபடி நடந்தார்.பள்ளிசுற்றுசுவர் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த அசோக, பன்னீர் மரங்களிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.எதிரே இருந்த மணிக்கூண்டு பிள்ளையார் கோவிலின் மணியோசைக் கேட்கிறது.தேர்நிலையில் சற்று நின்றார்.
ஆலயத்தினுள்ளிருந்து சிறுவன் அம்மாவின் கையை உதறி ஓடிவந்து சாலைஓரத்தில் தயங்கி நின்றான். கோயில் குருக்களின் மகன்தான் என கண்டுகொண்டார்.அவர் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தார்.கோரைமுடி நன்குபடிந்து திருநீற்றுக்கு மேல் நெற்றியில் ஒட்டியிருந்தது.நீளவாக்கு முகம்.வெள்ளை டீசர்ட்.அவன் எதையோ எதிர்பார்த்து வலப்புறம் ஓட அம்மாவின் கைகளில் சிக்கிக்கொண்டான்.
அம்மாவா! நாமளா முடிவுபண்ணிக்கலாமா? அம்மாதான் என்று அவர் உள்மனம் சொல்ல சாலையைப் பார்த்து நடந்தார்.இரும்புக்கடையின் முன் நிற்கும் குட்டிவேம்பை தொட்டுப்பார்த்து எப்படியோ வளரப்பிடாதுன்னு தோணிடுச்சு என்று அதன் கிளையை அசைத்துவிட்டு நடந்தார்
பாலக்கரையில் கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருப்பதை பார்ப்பதற்கு சுட்டிநாய்க்குட்டி உறங்குவதைப்போல இருந்தது.விஸ்வா அந்த ஐஸ்பேக்டரி முன் நிற்கிறான்.வளையும் இளம்மூங்கில் என உயரமாக.பள்ளி சீருடையில் சற்று முதுகை குனித்துக்கொண்டு சிரிக்கிறான்.கையில் இளம்சிகப்புநிற குச்சிஐஸ்.கைகால்கள் நிலையில்லாமல் பதின்வயதிற்கே உரிய குதூகளிப்பில் அசைந்து கொண்டிருக்க எண்ணெய் மின்னும் முகத்தை திருப்புகிறான்.இவர் குடையை இறுக்கிப்பிடித்தபடி கனமான கால்களை எடுத்து வைத்து நடக்கத்தொடங்கினார்.பாதையெங்கும் ஈரம்.
பாலக்கரைக்கு இடதுபுறம் நடந்து சின்னஏரியின் பின்புறம் வந்திருந்தார்.நீர் நிரம்பி அலையடிக்க மினுமினுத்துக் கிடந்தது.கழிவுகள் சேர்ந்து நாற்றமடிக்க மூக்கைப்பொத்திக்கொண்டு வேகமாக நடந்தார்.பாதிக்கரையைக் கடந்ததும் நாற்றம் குறைந்தது.அந்த மருத்துவமனையின் பின்புறம் நின்று தலையுயர்த்திப் பார்த்தார்.அது ஐந்துதளமாக உயர்ந்திருந்தது.பல ஆண்டுகளுக்குமுன்பு இதுதான் வாழ்வின் இலக்காக இருந்தது.யாருடைய இலக்கோ யாரோலோ நிறைவேற்றப்படுகையில் அது யாருடையது? என்று நினைத்தபடி நடந்தார்.
“நம்ம ஹாஸ்பிட்டல கிருஷ்ணாக்கு குடுக்கப்போறீங்களா டாடி,”என்ற விஸ்வாவின் கம்மிய குரல் கேட்டது.அப்பொழுது அவன் சிகிச்சையிலிருந்தான்.நீண்டமுகத்தில் மென்தாடியிருந்த இடங்கள் வற்றத்தொடங்கியிருந்தன.
கல்லூரியில் மருத்துவிடுப்பெடுத்து வந்தவன் வேறொருவன்.தீவிரமான கண்கள்,நீண்டமுகத்தில் மினுமினுப்பும்,உயர்ந்த சதையில்லாத உடலும்,புன்னகையை ஔித்து வைத்திருக்கும் இதழ்களுமாக காண்பவர்களின் கண்களுக்குள் நிற்பவன்.
ஏரியைக்கடந்து முசிறி பிரிவுப்பாதையை வந்தடைந்ததும் திரும்பிவிடலாம் என்று நிமிர்ந்து பார்த்தார்.பெருமாள் மலைக்குப்பின்னாலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தான்.சற்றுநேரம் நின்றுவிட்டு நடந்தார்.
எம்.ஆர்.ஐ ஸ்கேனிலேயே நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்தாலும் ஆவேசம் விடாமல் அமெரிக்கா வரை போகச்செய்தது.திரும்பி வரும்போது மகனை, மருத்துவமனையை, வீட்டை இழந்திருந்தார்.வீட்டிலேயே இருந்தார்.வீட்டை வாங்கியவர் ஒருநாள் தன் உடல்நலப்பிரச்சனையை சொல்லித்தீர்க்க வந்தார்.
அவர்,“இனிமே தனியா இங்கருக்க முடியாதுங்க டாக்டர்.பையனோடதான்.வீட்ட வாடகைக்கு விடலான்னு இருக்கேன்.கைமாறிப்போனாலும் உங்கவீடு.இருக்கனுன்னு நெனப்பிருந்தா இருந்துக்குங்க,”என்றார்.
விட்டுட்டு வந்தாச்சு இனிமேல் அந்த திண்ணைகளில் சாவகாசமாக அமரமுடியுமா? பரந்துகிடக்கும் உள்முற்றத்தில் தனியாக இரவுபடுத்தால் உறக்கம் வருமா? பின்கிணற்றின் நீர் சுவைக்குமா? என்ற எண்ணங்கள் அவரையும் துணைவியையும் வதைத்தன. வீட்டை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் அல்லாடிய மனங்களுக்கு வீட்டை மருத்துவமனையாக்கலாம் என்ற எண்ணம் இந்தஅடிவாரத்தில் வைத்துதான் தோன்றியது.
“நம்ம வீட்ட வாடகைக்கு எடுத்து ஹாஸ்பிட்டலா மாத்திண்டா என்ன?”என்றார்.
அந்த அம்மாள்,“நல்ல விஸ்தாரமான இடம்தான்..”என்றாள்.
இரண்டுநாட்கள் யோசனைக்குப்பிறகு கணேசனை, ஜான்சியை அழைத்தார்.அடுத்தப்பத்துநாட்களில் மருத்துவம் பார்த்துக்கொள்ள ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.அந்தவீட்டின் மகிமையோ என்னவோ சுற்றுவட்டார கிராமத்து ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.நின்று நிதானித்து மருத்துவம் பார்த்தார்.தொடர்ந்து வந்தவர்களின் உடலை மனதை புரிந்துகொள்ள முயலும் சாகசம் அவருக்குப் பிடித்திருந்தது.
காலையுணவை முடித்து மருத்துவமனையின்முன் காரை நிறுத்தி இறங்கியவர் பெயர்ப்பலகையை பார்த்தார்.விஸ்வநாதன் மருத்துவமனை.அந்தப்பயலை இன்னும் சிலநாட்களுக்கு மனதிலிருந்து பிடுங்கி எறியமுடியாது என்று நினைத்துக் கொண்டு படிகளில் ஏறினார்.
திண்ணையை அடைத்து போடப்பட்ட கேட்டினுள் கிடந்த பெஞ்சுகளில் ஆட்கள் எழுந்து நின்றார்கள்.அவர் புன்னகைத்துக் கடந்தார்.அந்தத்திண்ணைகளில் விஸ்வா பெம்மைகளின் பின்னால் மண்டியிட்டுத் தவழ்ந்தான்.
முன்கட்டிலிருந்த மருந்தகத்திற்கு வந்தார்.கணேசனிடம் பேசியபடி நின்றார்.அங்கு விஸ்வா புத்தகத்துடன் அமர்ந்திருந்தான். உள்ளே விஸ்தாரமான பகுதியில் கிடந்த மேசைமுன் அமர்ந்தார்.பக்கவாட்டில் திரைகளால் பிரிக்கப்பட்டு படுக்கைகள்.அவருக்கு இடப்புறம் உள்முற்றத்தில் ஜான்சி மேசையில் அமர்ந்திருந்தாள்.பக்கத்திலிருந்த சீலாவை அழைத்தார்.
கழுத்தைப்பிடித்துக்கொண்டு தன்முன் அமர்ந்திருந்த பெண்ணிடம், “அவ சொல்லிக்கொடுக்கற பயிற்சிய தினமும் காலையிலயும் சாயறச்சையும் செய்யனும்.செல்போனை கொஞ்சமாச்சும் கையிலருந்து எறக்கனும்,”என்றார்.அடுத்ததாக பெஞ்சில் காத்திருந்த சிறுமி சிரித்தாள்.
“இங்கவா அம்மணி..உனக்கென்ன? ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்காக இங்க வந்திருக்கியா?”என்று அவளை அழைத்தார்.அவள் அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.
“என்ன?”என்று ரகசியமாகக் கேட்டார்.
“அம்மாட்ட சொல்லக்கூடாது,”என்றாள்.
“ம்,”
அவர் நெற்றியிலிட்டிருந்த நாமத்தைக்காட்டி, “பீம் இந்தமாதிரி வரஞ்சிருந்தான்,”என்று வாய்மூடி சிரித்தாள்.
கும்பல் குறையாமல் வந்துகொண்டிருந்தது.பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்.அவர்களிடம், “பாராசிட்டமால் போட்டு பாத்துட்டு வாங்கன்னு சொன்னா கேக்கறதில்ல,”என்று உரிமையோடு வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.வீடு மருந்துவமனையான இந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
வலிப்பிரச்சனைகளுடன் வந்தவரிடன், “மருந்து சாப்பிடு.சீலா சொல்லிக்கொடுக்கற பயிற்சிகள செஞ்சா என்ன?அதுக்கு முன்னாடி உன்னோட மகளுக்கு வரன் பாரு.எல்லா வலியும் காணாப்போயிடும்,”என்று தோளில் தட்டினார்.
வெளியிலிருந்து, “டோக்கன் முடிஞ்சுது சார்,”என்ற குரல் கேட்டது. சாய்ந்தமர்ந்தார்.ஜான்ஸி சிற்றுண்டியுடன் வந்தாள்.படுக்கையிலிருப்பவர்களின் விவரங்களை சொன்னாள்.
“என்னாச்சு சார்..நீங்க இன்னிக்கி எங்கக்கூட சரியா பேசல,”
“அசதிம்மா..”
“டாக்டர் ஃபீஸ் இல்லன்னுதான் டக்குன்னு எதுன்னாலும் ஓடி வந்திடறாங்க.நீங்க கொஞ்சமாச்சும் சார்ஜ் பண்ணினா ரீசனபிலான கூட்டம் வரும் சார்,”
அவர் புன்னகைத்தபடி எதிரேயிருந்த விஸ்வாவின் படத்தைப் பார்த்தார்.ஜான்ஸி படுக்கையிலிருந்தவர்களிடம் சென்றாள். உண்ணாமல் எழுந்து பின்பக்கம் வந்தார்.கழிவறையிலிருந்து வெளியே வந்தவர் இவரைக்கண்டு முகம் மலர்ந்தார்.
“வீட்டம்மாவ நாளக்கி கூட்டிப்போலாம்.ரொம்ப வயக்காட்டுல போட்டு வறுக்காதய்யா,”என்றபடிநடந்து வந்து துளசி, திருநீற்றுப்பச்சை செடிகள் செழித்த மதிலருகே நின்றார்.இலைகளெல்லாம் மழைநீர் கழுவிய பசுமையிலிருந்தன.
விஸ்வா குளிக்க அடம் செய்து உள்ளாடையுடன் கிணற்றை சுற்றி ஓடிவந்து கொண்டிருந்தான்.அவன் பாட்டி பின்னால், “ஓடி விழுந்திறாத..” கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
தலையை மெதுவாக உலுக்கிக்கொண்டார்.அவருக்குத் தெரியும் இது எங்கு செல்லும் என.எத்தனையோ நாட்கள் இப்படியாகக்கிடந்து மீள்பவர்தான்.அந்த நேரங்களில் மருத்துவஅறிவு சுமையா என்ற கேள்வி தலைமேல் கனக்கும்.அந்த எண்ணம் தரும் சோர்வு மேலும் உறக்கத்தக்கெடுக்கும்.உறக்கம் கெட்ட வேளைகளில் அவன் அவரைச் சுற்றி வியாபிப்பான்.
மதிலின் சிறுவாயிலைத் திறந்தார்.சுமையேற்றிய மாட்டுவண்டி மெதுவாக நகராட்சி சந்தைக்கு நகர்ந்து கொண்டிருந்தது.வண்டியோட்டி துண்டால் மிகமெல்ல மாடுகளை தட்டிக்கொடுத்து நடத்தினான்.
“ந்தா..ந்தா..வந்திருச்சு.எடம் வந்திருச்சு,”என்று மாடுகளுடன் பேசிக்கொண்டிருந்தான்.
திரும்பிநின்றார்.ஈரத்தரையில் பாசிபடர்ந்திருந்தது.
“டாடி..தயிர்லேந்து வெண்ண வராப்ல..மழத்தண்ணியிலந்து இந்தபாசி வந்து ஒட்டிக்குமா..
“ம்..இருக்குமாயிருக்கும்..”
“அப்ப யாருப்பா மழத்தண்ணியக்கடையறா..”
“ஜகன்மாதா…சுத்தறாலான்னோ..”
“அவளாட சேந்து நாமாளுந்தானே..”
“ஆமா..”
“எதுக்குப்பா…”
“ஜனிச்சுட்டோமோல்லிய்யோ கண்ணா..” விஸ்வா தொடர்ந்து, “அப்ப ஜனிக்காதவாள்ளாம் காத்தில இருக்களா மழபேஞ்சா வருவளா..”கேட்டுக்கொண்டேயிருந்தான்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் மனம் கேள்விகள் கேட்பதை நிறுத்தியது. கண்களை மூடித்திறந்தார்.முன்னால் கொய்யா அங்கங்கே இலைமறைவில் கனிந்திருந்தது.காய்களும் பிஞ்சுகளுமாய் இலைகளுக்குப்பின்னே காத்திருந்தது.
ஜான்சி அவரை அழைத்துக்கொண்டே வருவது கேட்டது.அவர் உள்நோக்கி நடந்தார்.தயங்கியப்பின் தென்கிழக்குப்பக்கம் சென்றார்.அறை வாயிலருகே நின்றார்.
விஸ்வாவிடம் அம்மா, “நன்னா சாப்பிடு கோந்தே,”என்று தலையைத்தடவினாள்.
அதே இடத்தில் கிடந்த விஸ்வாவின் பழைய டேபிளில் தோட்டத்தை வேடிக்கைப்பார்த்தபடி சீலா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.இவரைக்கண்டதும் கண்களை விரித்தாள்.“நல்லா சாப்பிடும்மா..”என்று திரும்பினார்.
அலைபேசியின் அழைப்பு நடையை துரிதப்படுத்தியது.டாக்டர் ரவிதான்.மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்டார்.ரவி மனசுக்கு அகப்படாத கேஸா இருக்கும் என்று காரில் ஏறினார். குழந்தைகள் மருத்துவர் டாக்டர் இளங்கோவின் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.வெளியே மழைமுடிந்த வெள்ளை வெயில்.மழையை அர்த்தப்படுத்தும் வெயில்.