தொகுப்பிலிருக்கும் 10 சிறுகதைகளுமே ஒருபாலினச் சேர்க்கையைப் பற்றி அந்தரங்கமாகப் பேசுகின்றன. ‘ இது என் சுயசரிதை’, என்று அறிவித்த எழுத்தாளர் வசுதேந்த்ராவின் தைரியம், அவரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. பல இடங்களில் வாசகரைக் கசியவைக்கும், தொந்திரவு செய்யும் இந்த நூல் இதுவரை ஆங்கிலம், ஸ்வெடிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டத்தில் வியப்பேதுமில்லை. வாசுதேந்த்ரா சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.’மோகனசாமி’, பெங்களூரு சென்ட்ரல் யூனிவர்சிட்டியின் ப்ளஸ் ஒன்றுக்குத் துணைப் பாடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!
நமது மதிப்பீடுகளைப் புரட்டிப் போடும் இந்த அரிய நூலை மொழிபெயர்ப்பு என உணராதவண்ணம் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார் நல்லதம்பி. ஏற்கெனவே விவேக் ஷான்பக்கின் ‘காச்சர் கோச்சரி’ல் நாம் உணர்ந்ததுதான். காமம் சார்ந்த விவரணைகளை விரசமில்லாத மொழி வழுக்கலாக உறுத்தலின்றி சொல்கிறது. அதேநேரம், தேவையான இடங்களில் தகுந்த சொற்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. ‘கம்ஸூ’, ‘கண்டுஸூளே’ போன்ற சொற்களைப் புழங்கி விளக்குவதன் மூலம் கன்னட மணத்தையும் ஆங்காங்கு சாமர்த்தியமாக தக்கவைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.
மோகனசாமி-மயக்கந்தரும் இந்தப் பெயரைத் தவிர வேறெந்த பெயரும் கதைக் களத்தோடு இவ்வளவு இயைந்திருக்காது. நண்பர்களால் அன்போடு ‘மோகனா’ என்றழைக்கப்படும் மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே சமபாலின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களின் மனக்கொதிப்பு, அவர்களுக்கு எதிர்கொள்ள நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், தனிமை…..யாவற்றையும் மனதைத் தொடும் விதத்தில், மிகையில்லாது எளிய சொற்களில் விரித்து வைக்கின்றன கதைகள். நேர்மையும் பண்பும் உடைய மோகனசாமி, வாழ்க்கையில் போராடி கௌரவ நிலையை அடைகிறான். அவன், தான் விரும்பும் ஆண்களோடு ரகசியமான காதல், காம வாழ்க்கையைத் துய்ப்பதிலும் வெற்றியடைவது ஆறுதளிக்கிறது. இதிலுள்ள நோய்த்தொற்று குறித்த அபாயங்களையும் பொறுப்பாகக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். தத்ரூபமான பாத்திரங்கள் உயிரோடு நடமாடுகின்றன.
ஏறக்குறைய 15 வருடங்களில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்பதால் சில கதைகள் தேவையற்று நீளமாக இருக்கின்றன. முதல் கதையான ‘சிக்கலான முடிச்சி’ல், அலுவலகப் பயணம் நிமித்தமாக விமான நிலையம் செல்லுமுன் காதலன் கார்த்திக் இரவு சாப்பிடுவதற்காக சாம்பார் சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டுச் செல்பவன் மோகனா எனும் மோகனசாமி. அந்த நண்பன் கார்த்திக்கிற்கு பெண்ணோடு திருமணம் நிச்சயமானதும் அதிர்ச்சியடைகிறான் மோகனசாமி. பின்னர் நடைமுறையை உணர்ந்து கூடவே தங்கி உறவாடி வாழ்ந்த கார்த்திக்கை, அவனது உதாசீனத்தைக் கண்ணீரோடு பிரிகிறான்.
‘சைக்கிள் சவாரி’யில் தன் உடல்மொழியைக் கேலி செய்யும் பள்ளித் தோழர்கள் மற்றும் சகோதரியிடமிருந்து தப்புவதற்காக தன்னை, தன் பேச்சை, விளையாட்டை-எல்லாம் சுருக்கிக் கொள்கிறான் மோகனசாமி. எந்நேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் முதல் மதிப்பெண் பெறுகிறான். சைக்கிள் கற்றுக்கொண்டால் தன் உடலின் நளினம் விலகக் கூடும் என்றெண்ணி ஹம்பியில் சைக்கிள் கற்றுக் கொள்கிறான் மோகனசாமி. இருள் கவியும் நேரம் கோயில் பிரகாரத்தில் 2 வெள்ளைக் காரன்கள் புணர்ந்து கிடந்ததைக் கண்டதும், தனக்கு மனப் பிறழ்வல்ல என அமைதியடைகிறான்- புகைகூடப் பிடிக்காத மோகனசாமி. மோகனா சுத்தமானவன்; நாசூக்கானவன்.
‘பேசக்கூடாத பேச்சுகள் வதைக்கும்போது ‘ கதையில், மோகனசாமியைப் புரிந்துகொண்ட அவனது பிராமண அப்பா, உள்ளுக்குள் உடைந்து போனாலும் அவன் மனதை நோகடிக்கவில்லை. ஆனால் மோகனசாமியைத் தன் ஆண்மையின் தோல்வியாக அவர் கருதுகிறார். அதிக மதிப்பெண் வாங்கிய அவனுக்கு அரசாங்கப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், வரதட்சிணை வாங்கமுடியாத, வம்சத்தை வளர்க்கமுடியாத மோகனசாமிக்கு எதற்கு சக்தியைமீறி செலவழிக்க வேண்டுமென்று கை கழுகிறார். அதனால் பெங்களூரில் சிறு வேலைகள் செய்தும் வங்கிக் கடனிலும் படித்து முடித்த மோகனசாமி கொடுக்கும் பணத்தைக் கைநீட்டி வாங்கக் கூசுகிறார்.
‘நான்முகன்’ கதையில் 40 வயதான மோகனசாமிக்குப் பணப் பஞ்சமில்லை. ‘முதல் வணக்கம் மற்றும் கடைசி வணக்கத்திற்கு நடுவில் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வதே நம் புத்திசாலித்தனம்’ என்ற கொள்கையுடைய அவன், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் 30 வயதுபோலத் தன்னுடலை வைத்திருக்கிறான். பெருத்துப்போன தன் பழைய கார்த்திக்கை இப்போது அவன் மனம் நாடுவதில்லை. இந்தக் கதையானது ‘கேய்’ வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம். மோகனசாமி துய்த்துக் கடந்துபோகும் பல்வேறு ஆண்களையும் அவர்களோடான உறவுகளையும் ரசனை கலந்த நகைச்சுவையோடு படம் பிடிக்கிறது கதை.
அவனோடு தங்கியிருக்கும் யோகாசன குருவான ராம்தர் திரிவேதி, ‘’யோகாவைப் போலவே இணைவதும் ஒரு சாதனை. நிம்மதியாக இணைய வேண்டும். சூரியன் மேற்கில் இறங்கும் மாலை வேளையில் கங்கையில் ஓசையில்லாமல் மீனுடன் நீந்தும் சுகம் இந்த சேர்க்கையில் நமக்குக் கிடைக்கவேண்டும். சுகம் என்பது ஒரு தியான நிலை.’’ ஆனால் பிறிதொருவனைத் தேடக் கூடாதென்ற ராம்தரின் நிபந்தனையால் ‘கட்டாயத்திற்காக பத்திய உணவைச் சாப்பிடும் நோயாளியைப் போல அவன் தவித்தான்’.
கோயில் வரிசையில் சட்டையைக் கழற்றிவிட்டு நிற்கும் இளம் தந்தையான சாந்தனுவால் கவரப்பட்ட மோகனசாமியின் எண்ணங்கள் : ‘பொதுவாக திருமணம் நடந்து, ஒரு குழந்தையைப் பெற்ற அப்பாக்களின் தேகம் சிறப்பான கவர்ச்சி கூடியிருக்கும். இன்னும் விரியாத அனுபவமற்ற மொக்கு போலவும் இல்லாமல், மாலைவேலையில் வாடிய பூப்போலவும் அல்லாமல்-விடியற்காலையில் இளம் சூரிய ஒளிக்கீற்றுக்கு முழுமையாக மலர்ந்த பூவைப்போல அவர்கள் பக்குவமாக இருப்பார்கள். துணிவுடன் புதியத்தைத் தேடும் உற்சாகம் அவர்களுக்கு இருக்கும். முகத்தில் சிறப்பான நிறைவு தெரியும். சருமத்தில் அழகாகப் பிரகாசம் கூடியிருக்கும்.’ ஓர் ஆணை இவ்வளவு நுட்பமாக வருணித்து நாம் படித்ததில்லை. சாந்தனுவின் ஒரு வயது குழந்தையோடு அவன் வீட்டில் மோகனசாமியும் சாந்தனுவும் கூடும் காட்சிகள், அவற்றிடையே வரும் தொல்லைகள்…..எல்லாம் வாய்விட்டு சிரிக்கவைப்பவை.
மோகனசாமியின் வீட்டிற்கு உறவுக்காக வரும் பரிச்சயமில்லாத இளைஞன், கணிணி உட்பட்ட பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறான். ‘அவயங்களுக்குப் புதிய வடிவம் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் கலைஞன்’, என்று கருத்த தர்ஷன் சிலாகிக்கப் படுகிறான்.
கிளிமஞ்சாரோ: அற்புதமான கதை; தொகுப்பின் கடைசிக் கதை. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறுவதற்காகத் தனியே கிளம்பிவந்த மோகனசாமியின் மன அவசங்கள்,இயற்கையின் ஆகிருதி….எல்லாம் மிக அழகாக சொல்லப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு:
வயிற்றில் அனலின் சுவடுகூட தெரியாததுபோல தன் உடம்பின் மீது பனிப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறது!
புரியாத என் மனது வேறு ஏதாவது இரகசியத் திட்டத்தைத் தீட்டுகிறதோ?
மெல்ல விடியத் தொடங்கியது. வெளிச்சம் அவனை உலகுக்குக் காட்டிவிடும். இருட்டின் இரகசியத்தைக் காக்கும் நல்ல குணம் அதற்குக் கிடையாது.
இப்படிப்பட்டவர்கள் தான் எனக்கானவர்களாக வரமுடியும் என்ற கடினமான கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டால் மட்டுமே நாம் தனிமைப் படுத்தப் படுவோம்.
வாசிப்பின் முடிவில் அலைக்கழிப்பைத் தாண்டி, ஓரினச் சேர்க்கை என்பது வாழ்க்கை முறையின் ஓர் வகைமையே என்கிற எண்ணம் வருகிறது. இதுவே வாசுதேந்த்ராவின் நோக்கம். அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார். போலியற்ற தன்மை வாசுதேந்த்ரா எழுத்தின் பலம். ஒரு கதையைத் தவிர எல்லா கதைகளிலும் மோகனசாமி இருக்கிறான். கதைகளை அதே வரிசையில் படிக்க, வித்தியாசமான அந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி படிப்படியாகத் தெரிகிறது. ஒரு நாவலைப் படித்த முழுமையான உணர்வு கிடைக்கிறது. சிக்கலில்லாத மொழியின் வழியாக தமிழ் வாசகர்களைப் புதிய தளத்திற்கு அழைத்துப் போகும் நல்லதம்பி அவர்களுக்கு நன்றி. படிக்கவேண்டிய புத்தகம்.
கன்னடத்தில்: வசுதேந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி
பதிப்பகம்: ஏகா விலை: 299