என் அலைபேசி ஒலித்த போது அதிகாலை நான்கு மணி. ஒருவிதத்தில் எதிர் பார்த்தும் கொண்டிருந்தேன்.ஆனாலும், சிறு கலவரம் மனதில். மிக இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மெல்லிய குரலில் ‘சொல்லுங்க’ என்றேன்.”மிஸ்டர். பாலசந்திரனின் நிலை கவலைக்கிடம்;நினைவு தப்புகிறது. நீங்கள் உடனே வரமுடியுமா?” என்றாள் மருத்துவமனையின் தொடர்பாளர்.
எனக்குப் போவதற்கு விருப்பமில்லை.’கீதா இருக்கா இல்லையா அவ பாத்துப்பா’
“அவர் உங்களை மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறார்;கீதா மேம் தயங்குகிறார்கள்”.
‘சரியாச் சொல்லும்மா;உயிர் போய்ட்தா?’
“கிட்டத்தட்ட”
என் உயிர் போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்ல நினைத்தேன்,ஆனால் சொல்லவில்லை. ‘வரேன்‘என்று இணைப்பைத் துண்டித்தேன்.தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.என்ன செய்யலாம்? பால்கனி கதவைத் திறந்து கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.பனிக்குளிர்ச்சி நாடிகளில் ஊடுருவியது.மூட்டம் படர்ந்த வானில் ஒன்றும் தெரியவில்லை.பால் வண்டி ஒன்று முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தது.ஒளியென வந்து மூட்டத்தில் தள்ளிய அவன்,என்றுமே ஒரு மாத்திரை குறைவான என் வாழ்க்கை,நானே ஆடுபவளாய், நானே பகடை உருட்டியாய்,என்றுமே பழசு வாய்க்கப் பெற்றவளாய்…இல்லை இதை விரக்தியில் சொல்லவில்லை.முப்பது வருடங்களில் என் வாய் விட்டு மனம் விட்டு ஐந்தாறு முறை மட்டுமே தான் சிரித்திருப்பேன்.அவன் செத்துவிட்டான் என்பதை அவர்கள் நாசுக்காகச் சொல்லிவிட்டார்கள். என்னை எதற்காக மனைவி என்று குறிப்பிட்டான்? தீ வளர்த்து மணந்தவள் மனைவி என்றால், அவனோடேயே வாழ்பவள் யார்?அவளை மனைவி என்று சொல்ல என்ன தடை?ஓ,அவள் புருசன் இன்னமும் அவர்களோடுதான் இருக்கிறான் என்பதுதானா?
போக வேண்டுமா என்ன?மூன்று முடிச்சில் எத்தனை ஆண்டுகள் சிறைப்படவேண்டும்? அவன் என்னோடு இருந்ததே மொத்தமாக ஒரேதரமாக மூன்றே நாட்கள் தானே.நான் நல்ல நிறம்;அவன் மா நிறம்-ஆனால், அழகன்,உயரம் அதற்கேற்ற பருமன், களையான முகவெட்டு,குழி விழும் கன்னங்கள்,எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரம். நான் அவன் மார்பளவிற்குத்தான் இருந்தேன்.என்னிடம் கவர்ச்சி என்பது என் அளவான மார்பகங்களும்,சிறிய பல்வரிசைகளும்தான். இருபத்தியோரு வயதில் எனக்கு வந்த அதிர்ஷ்டம் என உறவு சொல்லியது;தனிமையில் நான் அதைக் குறித்து பெருமிதம் கொண்டேன்.நிச்சயம் ஆகி நடக்க இருந்த இரு மாதங்களுக்குள் அவனுடனான வாழ்க்கைக் கனவுகள்; தனியாகச் சிரித்தும், சிவந்தும்,பித்தியாகி நான் எனக்குள்ளே கொண்டாடிக் கொண்டேன்- இனி எனக்கே எனக்கென ஒருவன்.எதுவும் என்னுடையது, பிறர் உபயோகித்தது இனி எனக்கில்லை.போதும் அந்தக் கடந்த காலம்.அக்காவுடைய ட்ரஸ்,அவள் பேனா,அவள் புத்தகங்கள்,அவள் செருப்பு,அவள் ரிப்பன், வளையல் என எல்லாப் பழசும் எனக்கு.தீபாவளியின் போதுகூட இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் புது ட்ரெஸ்-இரு வேளை சாப்பாடே பெரும்பாடு;இதில் புதிது என்பதற்கெல்லாம் இடமேது?இவ்வளவு ஏன்? என் திரண்ட குளியின் போதுகூட எனக்குப் புத்தாடை இல்லை,பால் பழம் கொடுக்கவில்லை,புட்டு சுற்றவில்லை.அம்மாவிற்கு மனத்தாங்கல் ஏதோ நானே விரும்பி உக்காந்து விட்டதாக.காலைச் சாப்பாடு கூட பழையதுதான்-மத்தியானம் மட்டும் சூடான சாதம், ஜீரா ரசம்;ராத்திரிக்கு மிஞ்சின சாதத்தை இரண்டாகப் பிரித்து மறுநாள் காலைக்குப் பழயதை சேமித்துவிட்டு, மீதியில் தாராளமாகத் தண்ணீர் ஊற்றி மோரில் கலந்து டம்ளரில் அம்மா கொடுப்பாள்.மொத்தம் அம்மா,அப்பாவையும் சேர்த்து நாங்கள் ஒன்பது பேர்.அப்பாவிற்கு மளிகைக்கடையில் கணக்குப்பிள்ளை வேலை;அரிசி, பருப்பு, எண்ணை ஓரளவிற்குக் கடனில் கிடைக்கும்-மாதம் பிறந்ததும் கடன் போக மீதிதான் சம்பளம்.
எனக்கு ஏழு வயது.எனக்கு பிஸ்கெட் திங்க ஆசையா இருந்தது.பக்கத்தாத்து ரமணி தின்னுன்ட்ருந்தான்-நான் வெக்கங்கெட்டு கை நீட்டினேன்;அவன் கொடுத்துருப்பானோ என்னவோ-ஆனா,அதைப் பாத்துண்டிருந்த அக்கா அம்மாட்ட போட்டுக் கொடுத்துட்டா;அம்மா கைல சூடு வச்சுட்டா;அப்றமா அழுதா;பிஸ்கெட்டும் இல்ல அதை அம்மா புரிஞ்சுக்கவுமில்ல.சூடுதான் மிச்சம்.
எல்லாம் பழசுங்கறேனே-வெக்கக்கேடு- கல்யாணப் பொடவ கூட மூத்த அக்காவோடதுதான்-அவ தலைப் ப்ரசவத்ல செத்துப்போனா-அத்திம்பேர் இரண்டாம் கல்யாணம் பண்ணின்டார்-ஆனா, நல்ல மனுஷன்-அவ நகை, பொடவைகளைத் திருப்பித் தந்துட்டார்.அம்மாவும், அப்பாவும் அதுல முக்கா வாசி நகயப் போட்டு காவாசி பொடவையக் கொடுத்து ரண்டு அக்காக்களுடைய கல்யாணத்தை ஒப்பேத்திட்டா.மீந்தது எனக்கு.
ஓசிச் சினிமா காட்டுவா எங்க காலனில-அதுல பாத்திருக்கேன்-ஹீரோ ஹீரோயினுக்கு புதுப்பொடவ, நகயெல்லாம் வாங்கித் தருவான்;தல கொள்ளாம மல்லிப்பூ;எங்காத்ல கிள்ளித்தான் தருவா-அதுவும் மாச முத வெள்ளிக்கிழமைல.கனகாம்பரம், டிசம்பரெல்லாம் கொல்லல மண்டிக்கிடக்கும்-ஆமா, வாசன இல்லாம ஆருக்கு வேணும்?
கல்யாணம் எல்லாவற்றையும் புதிதாக்கும் என நம்பினேன்.அவன் ஊர்வலம் வருகையில் பார்த்துப்பார்த்துப் பூரித்தேன்.தாலி கட்டும் போது ராம சீதா கல்யாணம் என சிலிர்த்தேன்.புகைப்படங்களில் பல் தெரிய சிரித்தேன்;முதலிரவில் அவன் எனக்கெனத் தனிப் பரிசு கொண்டு வந்து தருவானென்று எதிர்பார்த்தேன்.
எனக்கென ஒரு ஆண், அவன் குறும்புகள், அவன் வலிமை, அவன் தன்னம்பிக்கை,கல்யாணம் முடிந்த மறுநாள் தேனிலவு என்று சொர்க்கத்தில் மிதந்தேன்.நான் ஊட்டியில் தேனிலவை அனுபவிக்க ஆசைப்பட்டேன்.ஆனால், அவன் ஏற்காடிற்குத்தான் கூட்டிப்போனான்.சேர்வராயன் மலைக் குன்று.கொண்டை ஊசி வளைவுகளில் அவனை இறுகப்பற்றிக்கொண்டேன்;அவன் சிரித்தான்- வேற வாயிலெடுத்தா சந்தோஷம்-இப்ப எடுத்துடாதே என்றான்;அதற்கு நாணிச் சிவந்தேன்.மரகத ஏரியில் படகுப் பயணம்.அது தானாக ஏற்பட்ட ஒன்றாம்;உள்ளே பெரிய நீரூற்று உள்ளதாம்.அவ்வளவு பெரிய ஏரியை நான் பார்த்ததில்லை;மேகம் ஏரியின் ஒரு கரையில் நின்று தன்னை நீரில் பார்த்துக்கொண்டது;சற்றே சாயும் கதிர்கள் பட்டுஅதன் மேலாடைகள் வெள்ளிச் சரிகையுடன் மின்னின.வானைத் தொட எண்ணி வளர்ந்த மரங்கள் சற்றே வளைந்து அதனுடன் போட்டியிட்டன.காற்று இதமான குளிருடன் இருக்கையில் ஜிவ்வென்று பறவைகள் பறந்து சுழன்று மீண்டும் மரங்களுக்குச் சென்றன.ஆட்கள் குறைவான சிறிய புல்வெளியின் ஓரம் சில தத்தித் தத்தி வந்து எதையோ கொத்திக் கொத்தித் தின்றன. நான் செல்லும் முதல் படகுப் பயணம்.ஏறக்கூட பயப்பட்டேன்-அலாக்காகத் தூக்கி ஏற்றினான்.’படகு கவுந்தா என்ன செய்வ? நா நீந்திப் போயிடுவேன் நீ அவ்ளோதான்’ என்றான்.எனக்கு சுருக்கென்றது.வெண்மையான மேகங்கள் போன இடம் தெரியவில்லை;வானம் இருண்டு ஒளியை மறைக்கப் பார்த்தது.ஒளிச் சிதறல்கள் மேக விளிம்புகளில் சித்திரங்கள் வரைந்தன.மான், புலி, வேடன் என்றும் பயமுறுத்தின.சூரியனின் யாக குண்டத்தில் தீ ஜ்வலிப்போடு எரிய மானும், வேடனும் மறைய புலி மட்டும் நின்றிருந்தது.என்னை முழுங்கப் போகும் புலியா அது? என் தலையை உசுப்பிக்கொண்டேன்.கை கொடுத்து படகில் ஏற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன்-இவன் என்னைத் தூக்கி ஏற்றியவன்-இவனா என்னை நட்டாற்றில் தள்ளுவான்?முட்டாளே,உன் கலவரத்தை அவன் இரசித்துக்கொண்டு இருக்கிறான். நான் செல்லக்கோபத்தோடு அவன் மார்பில் குத்தினேன்.படகில் இருந்த மற்றவர்கள் சிரித்தார்கள்.அங்கே பார்த்த கற்களால் ஆன இராமர் கோயிலை நான் மறக்கவேயில்லை.இந்த அவுட்டிங் தவிர முப்போதும் என்னையே சுற்றினான்;கொங்கைகள் மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனாகக் கிறங்கினான்.கிள்ளியூர் அருவியில் ஆட்களேயில்லை;நாணமற்று என்னோடுதான் குளிப்பேன் என்று ஒரே அடம்
‘உன் கழுத்துக்கு நெக்லஸ் போடப்போறேன் ஊருக்குப் போனதுமே;ஆனா, உன்பேரு என்னக் குழப்பறது.வாசந்தி சரி, அது என்ன வாசந்திகா’ என்றான்
“அது செஞ்சு லக்ஷ்மியோட பேர்.அவ லக்ஷ்மியோட வனத்ல வேல பாத்தா; விஷ்ணுவ மோகிச்சா,அவருக்கும் இஷ்டம்தான்.கோபத்ல லக்ஷ்மி அவள சபிச்சுட்றா,வனராணியா பூமில பொறன்னுட்டு.இங்கயும் அவ விஷ்ணுவயே கல்யாணம் செய்யணும்னு தவிக்றா;அவரும் நரசிம்மரா வந்து காத்துண்டிருந்தார்.அப்றம் லக்ஷ்மியே மன்னிச்சு கல்யாணமும் பண்ணி வைக்கறா;வசந்த காலத்ல, வனத்ல,வாசன வாசனயா மணம்பரப்பினவ அவ;அதுனால வாஸந்திகா; நான் கூட அப்படித்தான்;”
இதைக் கேட்டு அவன் சொன்னான்’தெரிஞ்சோ தெரியாமயோ நல்ல பேரை பொருத்தமா வச்சிருக்கா’.எனக்குப் புரியாவிட்டாலும் சந்தோஷமாக இருந்தது.காலையா,மாலையா எனப் புரியாத உற்சாக உறவு. ஏற்காட்டில் அந்த லாட்ஜில் இரவின் கேளிக்கைகளில் ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகுதான் அது காலை எட்டு மணியெனத் தெரிந்தது.அவன் படுக்கையில், குளியலறையில், வராண்டாவில், ரிஸப்ஷன் ஹாலில், ரெஸ்டாரென்ட்டில் எங்குமில்லை.பணியாளர் வந்தார்- ‘பத்து மணிக்கு காலி செய்யணுங்க; அவரு பணமெல்லாம் கட்டிட்டாரு.ஊருக்கு அவசரமாப் போணுமாம்-ஏதோ கெட்ட சேதி;உங்கள எழுப்பி இதைச் சொல்லப்படாதுன்னு கெளம்பிட்டாரு.நீங்க உங்க ஊருக்குப்போங்க.அவரு வந்து அழச்சுப்பாராம். இந்த டிக்கெட்ட கொடுக்கச் சொன்னாரு’.
எனக்குக் குழப்பமாக இருந்தது; டிக்கெட் கூட வாங்கிக் கொடுத்திருக்கான்-அப்படின்னா முன் திட்டமா?சேச்சே,அவன் நல்லவன்,எனக்கானதை செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஒருக்கால் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ-அவர் கல்யாணத்லகூட சுரத்தா இல்லயே?
என் கடிதங்களுக்குப் பதிலில்லை.அப்பாவும்,அண்ணாவும் நேரில் போனார்கள்.அவன் கீதாவின் வீட்டில் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவனிடம் நேரில் போய் கெஞ்சினேன், கேள்வி கேட்டேன்,அழுதேன்-அவன் மசியவில்லை
‘உனக்கு கீதாவோட பழக்கம்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணின்ட?’
“அப்பாவோட புடுங்கல் தாங்காமத்தான். கேக்கணும்னா அவரக் கேளூ.ஆனா,ஒன்னு, நீ எங்களோட இங்க இருக்கறதுல ஒரு கெடுதியுமில்ல;ஒத்துப்போ;கல்யாணம் பண்ணின்டு கைவிட்டாங்கற பேரு எனக்கு வேணாம்; நீ என்ன சொல்ற கீதா?”
‘இதோ பாரு, வாசு(வாசுவாம், வாசு-இவ வச்ச பேரு மாரி கூப்ட்றா) பாலு நல்லவன்;ஊர விட்டுத் தள்ளு;எங்களோட இரு;உனக்கு கொற வைக்க மாட்டோம்’
‘நீ வாய மூடு;குடும்பத்தோட இருக்க;இவனையும் சேத்து வச்சுண்ட்ருக்க.தேவடியாகூட இப்படி செய்ய மாட்டா.நாங்க பேசறதுல குறுக்கிட்டின்னா செருப்பு பிஞ்சுடும்’
அவன் பளாரென்று கன்னத்தில் அடித்தான்;நான் சுருண்டு விழுந்தேன்”தொலைச்சுடுவேன் யாரப் பாத்து என்ன வார்த்த சொல்ற போடி, கோர்டுக்குப் போ விவாகரத்து கேளு,ஜீவனாம்சம் தந்து தொலைக்கிறேன்.”
நான் அடக்க மாட்டாமல் சிரித்தேன்.
குழந்தை பிறந்திருக்கிறது என்ற மிகை சந்தோஷம் நான் கடைசிக் குழந்தை, அதிலும் நாலாவது பெண் என்பதால் என் பெற்றோர்களுக்கு இல்லை.பழசிலேயே இருபத்தியோரு வயது வரை வாழ்ந்திருக்கிறேன்;கல்யாணம் கூட எனக்குப் புதிதாய்த் தெரிந்த பழசுதான்.வயிற்றில் வளரும் சிசுவாவது எனக்கே எனக்கென இருக்குமா?
ஸர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றேன்.என் மகள் பிறந்தாள்;அவன் வந்து பார்த்தான். மாதங்கியெனப் பேர் வைத்தான்.போய்விட்டான்.என் அம்மாவிற்கு இந்த மட்டும் மானத்தைக் காப்பாற்றினானே என்று ஆஸ்வாஸம்.நான் அவனுடன் சேர்ந்திருக்கவில்லை என அவளுக்கு மன வருத்தம்.
தன் அப்பாவைப் பற்றி என் மகள் கேட்க ஆரம்பிக்கையில் அவள் வயது ஆறு.எங்கள் திருமணஃபோட்டோவை பார்த்துக்கொண்டேயிருப்பாள்- திடீரென்று அவனது படத்திற்கு மட்டும் முத்தம் கொடுப்பாள்.அம்மாஅழுவாள்- நான் முகம் திருப்பிக் கொள்வேன்
“உனக்கு ஏம்மா இந்தப் பிடிவாதம்?அப்பாதான் கூட இருக்கச் சொன்னாராமே?ஏன் மாட்டேனுட்ட?பீச்சுக்கெல்லாம் எல்லா அப்பாவும் கூட்டிண்டு போய் தண்ணிலெல்லாம் வெளயாட விட்றா;நீ முத அல பக்கத்ல கூட போப்படாதுங்கற’
இந்தப்பெண்ணும் எனக்கு மட்டுமேயில்லை எனப் புரிய ஆரம்பித்தாலும்,அவளுக்குச் சிறு வயது, போகப் போகப் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.அம்மாவிற்கு என் ஆண் நண்பர்கள் என்னைப்பார்க்க வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை.சந்தேகப்பட்டாள், பேத்தியைத் தூண்டிவிட்டாள்.
பொறுக்க முடியாமல் ஒரு நாள் சொல்லிவிட்டேன் ‘என்னோட பொறந்தவா ஆறு பேரு’அம்மாவிற்குப் புரியவில்லை.”நா என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?”
‘என் ரணத்த நான் ஆணோட பேசி ஆத்துக்கறேன்;பெத்து ஆத்திக்கமாட்டேன்’
அம்மா இடிந்து போனாள்.மாதங்கி இல்லாத போதுதான் இது நடந்தது.அம்மா என்னுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள்.
பதினாறு வயதில் மாதங்கி அவன் வீட்டில் அவனைப் பார்க்கப் போனாள்.பாட்டியுடன் போனாள், தனியாகப் போனாள்.தெரிய வந்த போது’நீங்க ரண்டு பேரும் அங்கயே போயிடுங்க;அவன் இப்ப உங்களுக்கு முக்யம்’
“ஆமாம்மா, அப்பா எனக்கு வேணும்;அவர் மாரியே நான் இருக்கேன்,உயரம், கண்ணு, கலர்,கன்னக் குழி எல்லாமே;அவர்தான் எனக்குத் தார வாக்கணும்;ஒத்துண்டிருக்கார்.ஆனா,உன்னவிட்டுட்டு போமாட்டோம்.உன்ன கெஞ்சிக் கேக்கறேன்;உன் ஆஃபீஸ் மாமால்லாம் என்னயே அசிங்கமா திருட்டுத்தனமா பாக்கறா;எனக்குப் புடிக்கல.”
அப்பாவின் துரோகம் தெரியவில்லை இவளுக்கு;அம்மாவை சந்தேகிக்கிறாள்.கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டுத் துரத்தலாம்;அங்கேபோய் நிற்பாள்;அவன் ஜெயித்ததாகச் சிரிப்பான்.கீதா உச்சி குளிர்ந்து போவாள்;அம்மாதான் பாவம் தவிப்பாள்,என்னையும் விட முடியாது,இந்த வயதிற்கு அங்கேயும் தங்க மனம் இடம் கொடுக்காது.
“என்னடி, புதுக் கத சொல்ற?”
‘நா கதயெல்லாம் சொல்லல;நீ அப்பாவோட இருந்திருந்தா என் கன்னத்தை உன்ஃப்ரெண்ட் திருட்டுத்தனமா கிள்ளுவானா?இடுப்புலதான் கை போடுவானா?’
‘அப்பவே சொல்றதுக்கென்ன?அவாளை வரவிடாம செய்றதுக்கு அவனும்,உன் பாட்டியும் இதெல்லாம் சொல்லச் சொன்னாளா?’
மாதங்கி என்னை க்ரோதத்துடன் பார்த்தாள்.
இது உண்மையா, பொய்யா? கொஞ்சம் நிஜமோ?சாரங்கன் வழிசல் பேர்வழி,சந்துரு அப்படியில்லையே.
மாதங்கியின் இருவது வயதில் வந்த வரன்கள் சொல்லி வைத்தது போல் அப்பா எங்கே என்று கேட்டார்கள்.அவன் ஒரு முறை துபாயில் இருந்தான்- சிங்கப்பூரில், இலங்கையில், லண்டனில், டெக்ஸாஸில் எங்களுக்குத் தோன்றிய இடங்களிலெல்லாம் அவன் இருந்தான்.ஒரு வரன் அமைந்து அவன் வந்து தாரை வார்த்துக்கொடுத்தான்.
இன்று அவன் இறந்த செய்தி. எனக்கென்ன சந்தோஷம் அல்லது துக்கம் இதில். நான் கீதாவை தொலைபேசியில் அழைத்தேன். ‘மாதங்கி இப்போ தாய்லாந்துக்கு வெகேஷனுக்குப் போயிருக்கா;நீ பேசு, அவ வர வரைக்கும் முடிஞ்சா மார்ச்சுவரில பாடியை வை; நானா? நான் எதுக்கு?யாரோ செத்ததுக்கெல்லாம் நான் போறதில்ல’
நான் வாஸந்திகா; காட்டு வனம்;வசந்தத்தின் அரிய பூ,தனி மணம்,தளிரைத் தொட்டால் பொசுக்கும் தீப் பொறி,குன்றத்தின் காந்தள் மலர்,என்றும் புதியவள்,எனக்கெதற்குப் பழசு?
நான் சிரித்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று பொங்கிப் பொங்கி சிரித்துக் கொண்டிருக்கிறேன்.