‘ஆம். . அவர்களுடன் தொடர்பு கொண்டோம். பல முறை நடந்த, கவனமிக்க, நம்பகமான உரையாடல்கள். முடிவில் அவர்களை வரவேற்கத் தீர்மானித்து அவர்களின் விண் ஊர்தியை எங்கள் ‘ரேடியோ ஹட்டின்’ வாயிலில் இறங்கச் செய்தோம். ஆவல்.. எதிர்பார்ப்புகளோடு வெளியே செல்கையில், எதிர்பாராத ஒன்று நடந்தது; அவர்கள் மிகச் சிறு வடிவினர், மிகச் சிறிய ஓடம்; கவனிக்கப் பட முடியாமல், வாயிலில், புற்தரையில் எங்கள் கால்களாலேயே நசுக்கப்பட்டு இறந்த விபரீதம். . ’ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய சிறுகதையின் சுருக்கம் இது.
இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. ’வேற்றுக்கிரக வாசிகள் நம் இருப்பிடத்தின் அருகாமையில் இருந்தாலும் நாம் அவர்களையோ, அவர்கள் நம்மையோ உணர முடிகிறதா?
(பொது ஆண்டு 1037இல் வாழ்ந்த தத்துவஞானியான அபூ அலி ஸினா ஒரு கருத்தைச் சொன்னார். பறக்கும் மனிதன் ஒருவனைக் கடவுள் படைக்கிறார்–அவன் கண்கள் போன்ற எந்த இந்திரியங்களும் இயங்காத நிலையிலும், அவன் தன் உடல் என ஒன்றை உணராத போதிலும் தன்னை அறிவான்–இருத்தலின் சாறாக; இதை இக்கட்டுரையை முழுவதும் படித்த பின்னர் பொருத்திப்பார்க்க முடியும். அத்தகைய ஒரு வேற்றுக்கிரக வாசியை நாம் அடையாளம்தான் காண முடியுமா? தொடர்பு சாத்தியமா? https://www. the-tls. co. uk/articles/avicenna-leading-sage-footnotes-plato/)
2017-ல் ஆஸ்ட்ரேலியாவின் பார்க்கஸ் தொலைநோக்கி அதுவரை கேட்டிராத ஒரு ஒலியை பதிவு செய்தது; அது வேற்றுக்கிரக உயிரினத்திடமிருந்து வந்திருக்கலாம் என ஒரே பரபரப்பு. கடைசியில், அங்கே பணிபுரிந்த வானவியலாளர்கள் அவசரப்பட்டுத் திறந்த மைக்ரோ உலையின் ஓசை அது; மின்காந்தப் புலங்களின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அங்கே செயல் பாட்டில் உள்ளன; ஆனால் போதுமான அளவிலில்லை!!
கணிசமான தடயங்கள் இதுவரை இல்லை. ஆனால், ஏன் நாம் வேற்றுக்கிரக உயிரினங்களைப் பற்றி ஆர்வப்படுகிறோம்?அது நம் பூவுலக வாழ்க்கைக்கு எவ்விதத்தில் உதவும்?
‘குதிரைகளுக்குத் தம் கடவுளின் உரு பற்றிய கற்பனை வந்தால் அது குதிரை வடிவில் தானிருக்கும்,’ கிரேக்க தத்துவவியலாளர் க்ஸெனஃபானிஸ், 2500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இது; வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடுவதில் நாமும் அதைப் போன்றவர்கள்தான். ஏனெனில் நாம் நம்மைப் போன்றவரைத்தானே தேட முடியும்?
‘நீரின்றி அமையாது இவ்வுலகு.’ என்கிறோம். ஆம், அது பூமிக்குப் பொருந்தும். ஆனால், விண் வெளியின் கிரகங்களிலும் நீர் இருப்பதோ, இருந்ததோ , உயிரிகளின் ஆதாரம் என நினைப்போமானால் அது ஒரு வகை அறிவீனமே; இருப்பினும் இன்று எங்காவது அப்படித் தண்ணீர் இருப்பதாக அறியப்பட்டவுடன் நம் அண்டத்தின் புனித துலாக் கோல் நடுங்கி ஆர்ப்பரிக்கும்; செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதும், இருந்திருக்கக்கூடும் என்பதும் அங்கே இருந்திருக்கக்கூடிய உயிரினங்களைப் பற்றிய அறிவைத் தரும் என்று நம்புவது, ஒரு கிரகத்தில் பாதரசமிருந்தால் அங்கே வெப்பமானி இருக்கும் என நினைப்பதைப் போல்.
நமக்கும் வான்வெளிக்கும் இருக்கும் உள்ள உறவை, ‘நாசா’ அனுப்பும் ஏவுகணைகளும், அவை தரும் செய்திகளும் பயமுறுத்துகின்றன. ஒரு ‘சவசவ’ கிரகம் என்றே பூமியை எண்ணினேன். ஜூலை 15, 2015-ல் ‘ந்யூ ஹொரைஸன்’ ப்ளுடோவைப்’ பற்றி சொன்ன பிறகு என் எண்ணமே மாறிவிட்டது– மிகப் பெரும் பனி மலைகளுக்கிடையே மைனஸ்230 டிகிரியில் உறைந்துள்ள நைட்ரஜனும் மீதேனும் ப்ளுடோவில் உள்ளதாம். தப்பிப் பிழைத்த பூமிதான் என்னவொரு ஆறுதல்!
வான்வெளியில் என்னென்ன நடை பெறுகிறது எனப் பார்க்கத்தான் நாசா ஏவுகணைகளை அனுப்புகிறது. ஆனாலும் இன்னொரு நோக்கம் உண்டு–அது வான் வெளியில் அறிவு ஜீவிகளைத் தேடுதல். (Searching for Extraterrestial Intelligence-SETI) ரஷ்யக் கோடீஸ்வரரான யூரி மில்னர் வானிலிருந்து வரும் சமிக்ஞைகளை அறிய கோடி கோடியாய் செலவழிக்கிறார். வானின் அறிவு ஜீவிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவோ மற்ற சிலவற்றுடன் தொடர்பு கொள்ளாவோ, ஏன் நம்மிடம் கூடத் தொடர்பு கொள்ளவோ ஏற்படுத்தும் வானொலியின் மூலம் அவர்களை அறிந்துவிடலாம் என்பதும் திட்டம்.
உங்களுக்குப் புரிந்தது அல்லவா? ஆனால், எனக்குப் புரியவில்லை. நம்மைப் போலவே வேற்றுக்கிரக உயிரினங்களும் வான் அலைகள் மூலம் தொடர்பு கொள்ளும் என்பதே எனக்கு வினோதமாக இருக்கிறது. இந்த சாத்தியம்தான் எதன் அடிப்படையில் ஏற்பட்டது?
நம்முடைய பூமியிலேயே இணைப் பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறதே! மீள மீளக் ’கண்கள் ‘ கண்டு பிடிக்கப்படுகின்றனவே. ஆனால், வான் ஒலிகள்? வெளியின் மற்றொரு இடத்திலிருந்து?உலகின் ஜீவராசியாக நிலை பெறுவதற்கு ஒற்றைச் செல் உயிரினம் எத்தனை எத்தனை முறை தன் வால் நெளிவுகளைச் சேற்றில் சுழட்டிக் கொண்டது? தோலைப் பதப்படுத்த ஏதுவாகக் கூரான அந்தக்கல்லை நாம் வடிவமைக்கும் முன்னர் எத்தனையெத்தனை யத்தனங்கள்?இதே மாதிரி தொடர்புக்கு என்று வானொலியை எப்படியெல்லாம் கொண்டு வந்திருப்போம்?வேறெங்கும் இதைப்போலவே நடை பெறும் சாத்தியக்கூறுகள் எவ்வளவு? ஆனாலும், வானில் தேடுவதை நம்மால் நிறுத்த முடியவில்லை.
கார்லைல் சொன்னர்: ‘இரவின் விண்மீன் வானம். அதில் நாம் வாழ முடிந்தால் அதைப் போல துன்பமும், முட்டாள்தனமும் வேறில்லை; இல்லையெனில் வானம் ஒரு பயனற்ற வெளி!’அகிலம் முழுவதும் மனிதர்களுக்கான இடம் என அவர் நினைத்தார். மனிதனுக்குப் பயனற்ற வெளி இருந்தென்ன போயென்ன என்பது அவர் எண்ணம்.
இது நமக்கு மிக அன்னியமான சிந்தனை. அகிலம் நமது வெளியல்ல. உலகம் நம்முடையதாக இருக்கலாம்; ஆனால், விட்டுக் கிளம்புகையில் நாம் எங்குமே இல்லை. அதாவது, நாம் எங்கும் போக முடியாது. நாம் அனுப்பிய மிக வேகமான(மணிக்கு 2, 52, 000 கி. மீ வேகத்தில் பயணிக்கும்)ஹீலியோஸ்-2 நம் அண்டையிலுள்ள ‘Proxima Centauri ‘யை அடைய 16000 ஆண்டுகள் ஆகும்!
இன்னொன்று–நம்முடைய சூர்ய எல்லை என்பது கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. 1977-ல் வாயேஜர் திட்டம் தொடங்கியது. 2010-ல் நாசா தான் அனுப்பிய ‘வாயேஜர்’ விண்கலம் பற்றி 2013 வரை மூச்சே விடவில்லை. (சல்ஃபர்) கந்தக ஊற்றுக்களைப் பொழியும் எரிமலைகள் குரு கிரகத்தில் இருப்பதை அது படமெடுத்து அனுப்பியது; நெப்ட்யூனின் நிலவான ‘ட்ரைடனில்’அதி உஷ்ணமான 13 கெல்வின்களில் எரிச் சீற்றப் பந்து விளையாடல்கள்!
(வாயேஜர் 1-ன் வானத்தில் சூர்யன் அவ்வளவு பிரகாசத்துடன் இல்லை. இப்போது இருக்கும் தொலைவின் அடிப்படையில் பூமியில் காணப்படுவதை விட 20, 000 மடங்கு குறைந்த பிரகாசம். Quora Answers-Tony Fredericks, None Astrophysics, Univ of California dt Dec8, 2019. வாயேஜர் -2லும் அதே நிலைதான். )
ஜே பி. எஸ் ஹால்டேன் சொன்னார், ‘அகிலம் நாம் நினைப்பதைக் காட்டிலும் வினோதமானது; அது மட்டுமல்ல நாம் கற்பனை செய்ய இயலா வினோதங்களைக் கொண்டது.’
உதாரணத்திற்கு இதைப் பார்ப்போம்–பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தள்ளியிருக்கும் ‘MH 87 விண்மீன்’ கருந்துளையைச் சமீபத்தில் படம் பிடித்தார்களல்லவா?அதன் எடையை அறிவீர்களா? நம் சூரியனைப் போல் 6. 5 பில்லியன்!அம்மாடி, அங்கே இருப்பவை பற்றி எண்ணவும் தான் கூடுமோ?
‘க்ராவிடி’ திரைப்படத்தில், ‘நான் வெளியை வெறுக்கிறேன்’ என்று சாண்ட்ரா புல்லக், காரணமில்லாமல் கூவவில்லை. அதன் சுற்றுப்புறச் சூழல்கள் அப்படி–வசதியில்லாதது–பெரும் அபாயங்களும் அச்சமூட்டும் அழுத்தங்களும் கொண்டது. வெற்றிடத்தின் இடைவிடாத அழுத்தம் உடலைச் சூழ்ந்த, ஒலியற்ற, இருண்ட இடம்.
திரும்பவும் ‘வாயேஜரைப்’ பார்ப்போம். நம்முடைய சூரிய அமைப்பினைத் தாண்டி பயணிக்கையில் அது எரிகற்களையோ, விண்கற்களையோ, தூமகேதுக்களையோ எதிர் கொள்ள நேரிடாது; வெற்றிடத்தில் பயணிப்பதால் சேதாரமும் இல்லை. அதன் அமைப்பு எத்தகைய கதிர்வீச்சுகளுக்கு உள்ளாகும் என எனக்குத் தெரியாது. ஒரு பொருளாக அது மில்லியன் ஆண்டுகள் பயணிக்கக்கூடும். நம் இனமே அழிந்த பிறகு கூட அது பயணிக்கும் என்பதும் ஒரு அதிர்ச்சி தரும் சாத்தியக்கூறல்லவா? அறியமுடியா கல்லறையிலிருந்து ஒரு வணக்கம். வானைக் கண்டுபிடிக்கத் தொடங்கிய அதன் பயணம் விண்வெளியில் வீசியெறியப்பட்ட குடுவையில் அடைத்த செய்தி போல என நினைக்கிறேன். அங்கே இருப்பவருக்கு நம்மைப் பற்றிச் சொல்ல அதில் ஏராளமான செய்திகள் உள்ளன; இது என்னைப் பொறுத்தவரை அறியாமையே– நாம் உணர்ந்து கொள்வது போல், அறிந்து கொள்வது போல், சிந்திப்பது போல் அங்கிருப்பவரும் இருப்பார்கள் என்ற அனுமானம் எவ்வகையில் ஏற்புடையது?அவர்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதெல்லாம் அதிக பட்சம். ஆனால் வாயேஜர் தன்னை ஒரு வினோதமான வஸ்து என்று காட்டிக்கொள்ள முடியும்; இதைப் பாறைகளிலிருந்து வடிவமைக்க முடியாது; வாயேஜர் உங்களை ஆட்கொள்ளும் ஒரு வீட்டுப்பாடம்–நாம் ‘ஒளி’எனச் சொல்வது உங்களுக்குப் பொருள்படாது; ‘காமா’ கதிர்கள்; இருந்தும் வாயேஜர் வசீகரிக்கும்.
ஆமாம், காமாக் கதிரியக்கங்களை மனித இனம் மட்டுமேயா அறிந்திருக்கும்?இந்தத் தத்துவக் கேள்விக்கு விடை எனக்கு, பெரும்பாலும், உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. நம்மை வாயேஜரில் அனுப்பாதவரை கவலை ஏன்?
டேனியல் டென்னெட் தன் சமீபத்திய நூலில் கேட்கிறார்’ வானின் தொலைதூர கிரகத்தில், அதன் கடற்கரையோரங்களில் நீங்கள் மட்டியிலா அல்லது மட்டிக் கட்டிகளிலா(சிப்பிகளை வெயிலில் வாட்டித் தின்னப் பயன்படுத்தும் பாறைக்கற்கள்) உயிரினத்தைத் தேடுவீர்கள்?’ இந்தக்கேள்வி மொத்தமாக அனைத்து அனுமானங்களையும் அசைக்கிறது; வாயேஜரில் இரண்டும் உள்ளதால் அறிவியலாளர்கள் எதைப் பொறுத்து அறிய முற்படுவார்கள்?
நாம் வேற்றுக்கிரக உயிரிகளைச் சந்திப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்களுடன் இலாபகரமான பரிவர்த்தனைகள் இயல்பவையா?நாம் பரிணாம வளர்ச்சி, மறுமலர்ச்சி, சங்கீதம் போன்றவற்றை நம்முடைய நாய், டால்பின் போன்ற செல்லப் பிராணிகளுக்கோ, நம் நெருங்கிய உறவினரான ‘சிம்பன்சி’களுக்கோ சொல்லியிருக்கிறோமா? பயனற்றதுதான்; ஆனால், அவை நம் அருகாமையில்; நாம் தேடுபவையோ வெகு தொலைவில். நாம் வானிலே தேடும் அந்த நட்பு, விரும்பும் இனிய நட்பு, கைகூடாமலே போகலாம்– நம் இருவரிடையே சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதுதானே முக்கியம்?
தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் பெரிய மூலக்கூறுகளின் அடிப்படையில் மற்ற உயிரிகளைத் தேடுவது சரிதானா?நாம் காணப்போவதில்லை. எத்தனையோ சரியான வாத மறுப்புகள் இருந்தும் அதை அறியும் ஆவல் ஏன் உள்ளது?நாம் தேடுவதுதான் என்ன?
கண்டுபிடித்துவிட்டோம் என் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்விளைவுகள் என்ன? நமக்கு ஒரு மீளுறுதி கிடைக்கும். என்னது அது?வாழ்க்கை ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை அது மீளுறுதிப்படுத்தும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்–உருளை வயலில் நீங்கள் அறுவடை செய்கையில் திறமையாகச் செதுக்கப்பட்ட ‘சர்ச்சில்’ வடிவில் ஒரு கிழங்கைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பலப்பல பேச்சுக்களுக்குப் பிறகு அதற்கு சர்ச்சிலைப் போன்ற தோற்றம் இருக்கிறது என நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இது வினோதமானது, நடக்க இயலாதது, முட்டாள் தனமும் கூட; இப்படி ஒன்று எப்படி நடக்கும்?உயிரினங்கள் உலகில் தோன்றியதைப் போன்ற வித்தியாசம் இது.
பொறுங்கள்–ஒரு உருளை அப்படியிருந்தால் இந்த நினைப்பெல்லாம் சரி. ஒரு அல்காரிதத்தை எழுதி, அதன் படி க்ரிஸ்பர் சி ஏ எஸ் உபயோகித்து டி என் ஏவில் மாற்றம் செய்தால் 173 உருளைகளை சர்ச்சில் வடிவிலும், அளவிலும் அறுவடை செய்யலாமே?
வேறெங்கோ இருக்கும் உயிர்களைக் கண்டறிதல் மூலம் ‘உயிரிகள் என்பது ஒன்றும் அப்படி தற்செயலல்ல’ என நிறுவலாமே! பொருட்களின் நெசவில் பொதிந்துள்ள சாத்தியக்கூறுகளுள்ள இது, காலம் வரும்போது வெளிவரலாம்.
ஐயோ, புதுக் கவலை ஒன்று ஏற்படுகிறதே! அந்த மற்றொரு கிரகத்தில் ‘நுண்ணுயிரி’ வரைதான் பரிணாம வளர்ச்சி ஏற்படுள்ளது என்றால் நாம் டென்னெட்டின் ‘மட்டி’யைப் பார்க்கலாம்; அது பாதி மீளுறுதியைத்தான் அளிக்கும்; ஏனெனில், மட்டிப்பாறைகள் வரை வந்துவிட்டோமே!
பாக்டீரியாக்களோ அல்லது வேறு வித உயிரினமோ பற்றிய சிந்தனைகள், அறிதல்கள், நம் தனித்தன்மையான மதிப்பற்ற கவலைகளுக்குள் நம்மை ஆழ்த்திவிடும். நுண்ணுயிரிலிருந்து பிறந்த மிருகம் நாம். எப்படி இப்படி பரிணாமம் அடைந்தோம் என தலை சுற்ற வைக்கும் குழப்பங்களுக்குள் அனாவசியமாகச் சிக்குகிறோம். தன் இக்கட்டான சூழலில் மற்றொரு கிரக வாசியும் இருப்பதில் ஆதரவு தேடும் இந்த மனிதனை என்ன சொல்ல? ஒரு அம்பினையோ, சக்கரத்தையோ, நகையையோ, சித்திரத்தையோ பார்த்து நாம் அடையும் அனுபவம் போல வியர்த்தமான ஒரு ஆறுதலைத்தேடுகிறோம். கிரேக்கச் சிந்தனையாளர் க்ஸெனஃபானிஸ் சிரிப்பது கேட்கிறதா?
நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றைப் பற்றிய குறைந்த விழிப்புணர்வுதான் நம்மை வேறெதையோ தேடச் செய்கிறது. கொல்லைத் துளசிக்கு வீர்யம் குறைவு!! நாம் அறியக்கூடும் என நான் நினைக்கவில்லை.
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! இருக்கும் இடம் எதுவானாலும், நினைக்கும் இடம் பெரிது
ஆங்கில மூலம்: பெர்ட் கைஸர்; தமிழாக்கம்: பானுமதி ந.
***
[மூலம்:https://www. threepennyreview. com/samples/keizer_w20. html
டச்சு நாட்டவரும், தத்துவவாதியும், முதியோர் நல மருத்துவருமான Bert Kaizer மானுட தர்ம விதி முறைகள் சார்ந்த நூல்களை நேஷனல் பதிப்பகத்துக்காக எழுதி வருகிறார். ’சாவைச் சுற்றி அகர வரிசையில் ஒரு பயணம் ‘ என்பது அவரது சமீபத்திய ஆங்கில மொழியாக்கம் செய்யப்படவுள்ள நூல். (From Ashes to Zombies.) ]
Intriguing subject – good choice to translate