வெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் நடைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.
ஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.
கிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவரும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.
மற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன்? யார் ஹீரோ? என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வங்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.
மேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.
நாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.
மனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.
மொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு என்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருடுகிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.
நாவலின் கரு – சுவாரசியமான ஒன்று. விமரிசன கட்டுரை விஸ்தாரமாக எழுதப்பட்டிருக்கிறது., நன்று