கோணம்
நிரம்பி வழிந்த நீர்த்தொட்டி
காலடியில் சிறு தண்ணீர்க்குளம்
அக்கம்பக்கம் பார்த்த புறா மெல்லடியில் தத்தி
அலகு வளைத்து வந்து அருந்தும் நேரமிது
காத்திருக்கலாம் நான் அதன் தாகம் தணியும் வரை
காகத்திற்கு அதன் ஒன்றரைக் கண்ணில் பட்டுவிட்டேன்
அதன் குஞ்சிருக்கும் மரத்தை நான் என்ன செய்துவிடுவேன்?
தலையில் கொட்டும் வாதை
புறாவின் தாகம் தீரவில்லை என அறிவேன்
காகமுண்ட குருதி சிறிது உண்டு;உறையும் முன்
வரச் சொல்ல முடியுமா கண்டவர்கள் யாரும் ?
ஈசி சேர்
சிறகென விரியும் கை தாங்கி
கால் தாங்கும் சொகுசு
முதுகமர்த்தும் குழி
பின்னிருந்து விழும் ஒளி
தோதாக சிறு தலையண
பதிந்த தலை வட்டம்
மூலையில் மடங்கிய நாள்
பரணில் ஏற்றுவதா விற்பதா
இடம் அடைக்கும் நாற வேறு செய்யும்
இரு நாளில் விற்பதாக எண்ணம்
அவர்களுக்கு.
நாலு மூலத் தாய்ச்சி
சதுரத்தின் மூலை
அ,ஆ,இ,ஈ நிற்க
ஏன் ‘அ’ தொடங்கும் சடங்கு?
‘ஈ’ பாய்ந்தோடி ‘இ’யைத் தள்ள
நெடுக்கில் நின்றவர்கள் கிடக்கில்
சதுரம் சமம்தான்.