ஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை

அவன் ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஏறும் வழக்கமே குமாருக்கு கிடையாது. அதுவும் அன்றைக்கு ஒட்டுமொத்த மகிந்திரா வேர்ல்ட் சிட்டியும் பரனூர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அறிவித்துவிடுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சிலர் அறிவித்துவிட்டார்களென்றார்கள். இரண்டு ரயில்களை விட்டுவிட்டு மூன்றாவது வரும்வரை அப்படி ஒன்றும் பிரச்சனை வராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

குமாருக்கு காலையிலிருந்தே மனது சரியில்லை. ஒற்றைத் தலைவலி உயிரை வாங்கியது. கூட்டம் குறைந்தது மாதிரியே தெரியவில்லை. அடுத்து வந்த ரயிலையும் விட்டால் வீட்டிற்குப்போக நேரம் ஆகிவிடும் என்பதால் எப்படியோ சிரமப்பட்டு ஏறினான். அவன் இருந்தப் பெட்டியில் குறைந்தது நூறு பேராவது ஏறியிருப்பார்கள். ஒருவர்மேல் ஒருவர் உரசிக்கொண்டும், இடித்துக்கொண்டும் வரும் மக்களைப் பார்க்கும்போது குமாருக்கு வளைக்குள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் எலிகளைப் பார்ப்பதுபோலிருந்தது. பரனூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வருவதற்குள் பல முறை அவன் பின்னால் நின்றிருந்த மனிதர் அவன் மேல் விழுந்தார். சாதாரன நாட்களில் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். தெரியாமல் கை கால் பட்டால் கூட விஷத்தைக் கொட்டுவதுபோல் இருக்கும் பேச்சு. இன்று வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தான். அசாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்க முயல்கிறார்கள். மற்றவர்களின் கைகளை இறுக்கப் பற்றிக்கொள்கிறார்கள். தனக்குத்தானே சமாதானாம் சொல்லிக்கொண்டான்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்நாளில் வரும் கனவு இந்த வருடமும் வந்தது என்பதுதான் அவன் தலைவலிக்குக் காரணம். ஊரே பதட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலும் அவன் மனம் முழுவதும் அதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

முதன் முதலில் கனவு வந்தபோது அம்மாவிடம் சொன்னான். விபூதி போட்டு கையில் ஒரு கயறு கட்டிவிட்டாள். “பயப்படாத, சித்திக்கிட்ட வேண்டிக்க” என்று அவன் சித்தியின் படத்தின் முன் நிறுத்தி வணங்க வைத்தாள். அடுத்தடுத்த வருடங்களில் அவளிடம் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சொன்னால் பயந்துபோவாள். வேறு யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

காலையில் எழுந்ததும் மொபைலில் தேதியைப் பார்த்தான். நினைத்ததுபோலவே ஆகஸ்ட் ஏழு. குமாரின் நினைவடுக்குகளில் மிக ஆழமாக ஊடுருவியிருக்கும் நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு அவன் சித்தி மண்ணென்னையை ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொண்ட நாள்.

*

காயத்ரி சித்தி சாகும்போது அவளுக்கு வயது முப்பத்தி எட்டுதான். வீட்டில் எல்லோருமே நன்றாக தூங்கி எழுந்திருந்த ஒரு அதிகாலையில் குமாரின் சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.அவன் அம்மாதான் போனை எடுத்தாள். ஒரு நிமிடம் பேசியிருப்பாள். “ம்ம்.. ம்ம்ம்” என்பதைத் தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே போனை வைத்துவிட்டு குமாரிடமும், அவன் தந்தையிடமும்,”கிளம்புங்க.. காயத்ரி அக்னி ஸ்னானம் பண்ணிட்டா” என்றாள்.

காயத்ரி குமாரின் அம்மாவின் தங்கை. கூடப் பிறந்த ஏழு பேர்களில் கடைக் குட்டி. அவள் பிறந்தபோது இனி குழந்தை வேண்டாம் அதனால் சாவித்ரி என்று பெயர் வைக்கலாம் என்று குமாரின் தாத்தா சொன்னாராம். அந்தக் காயத்ரியைத்தான் இவள் வயிற்றில் இருந்த நாள் முழுவதும் ஜபித்துக்கொண்டிருந்தேன் எனவே காயத்ரிதான் என்று பாட்டி பெயர் இட்டிருக்கிறார். காயத்ரி, பி.எஸ்.சி அக்ரி முடித்தக் கையோடு அரசாங்கத்தில் வேலைக் கிடைத்து; தஞ்சாவூர் போய்விட்டாள். பதிமூன்று வருட அரசாங்க வேலை. கடைசியாக கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தையில் அதிகாரியாக வேலைப் பார்த்தாள். வருடத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவாள். இடையில் திருமணத்திற்கு கேட்டு வந்த பல இடங்களைச் சொந்த சாதியில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டாள். “எல்லாம் கோழப் பசங்க” என்ற ஒரு வரிதான் எப்போதுமே அவளின் பதிலாக இருக்கும் என்று குமாரின் அம்மா அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பதைக் கேட்டிருக்கிறான்.

கோழப் பசங்க…முதன் முதலில் கேட்டபோது கோபமாக வந்தது அவனுக்கு. சித்தி எப்படி அப்படிச் சொல்லலாம் என்று முறுக்கிக்கொண்டிருந்தவனை வீட்டில் யாரும் சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக “அவகிட்ட கேட்டு வச்சுராதடா.. அதுக்கப்றம் நீதான் ரொம்ப பீல் பண்ணுவ” என்று பயமுறுத்தினார்கள். “அது எப்படிமா அப்படி சொல்லலாம்..ஏன் அப்படி சொன்னா…” “விடுடா.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி… உன் சித்தி ஒரு மாதிரி.. அவ மனசுல எப்படியோ ஒரு எண்ணம் அப்படி வந்துருச்சு… ஒரு காலத்துல எங்கப்பா வெளிய போனா இடுப்புல கத்தி இல்லாம இருக்காது..ஊர்ல ஒரு பெரியவர் கூப்ட்டு.. பொம்பளப் புள்ளைங்கள பெத்து இருக்க.. இதெல்லாம் வேண்டாம்ன்னு” சொல்லிருக்காரு.. அன்னைக்கு மாறுனவரு அதுக்கப்றம் ஒரு சொல் தேவைக்கு அதிகமா வெளியவிட மாட்டாரு.. எல்லாத்துக்குப் பின்னாடியும் காரணங்கள் இருக்கும்.. அதல்லாம் எல்லாருக்கும் புரியவைக்க முடியாது..அவசியமும் இல்ல” அம்மாவின் பேச்சிலிருந்து தாத்தாவிற்கும் சித்திக்கும்தான் ஏதோ பிரச்சனை ஆகியிருக்கிறது என்று நினைத்தான். எப்போதும் பூஜை அறையில் பார்த்த தாத்தாவை கத்தியோடு குமாரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்றிருந்தது.

“என்னைக்காவது ஒரு நாள் கேட்க்காம விட மாட்டேன்மா” என்றான். கடைசி வரை அவளிடம் அதைப் பற்றிக்கேட்க்கவில்லை.

*

ரயில் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குமாரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீண்டும் சிரித்தார். பரனூரில் ஏறியதிலிருந்தே அவரைக் கவனித்துக்கொண்டு வந்தான். திடீர் திடீரென சிரித்தார். யாரைப் பார்த்து எதற்கு சிரிக்கிறார் எனத் தெரியாததால் அவரைக் குழப்பத்துடனேயே கவனித்து வந்தான் குமார். “இருக்கும் கூட்டத்தில் எள்ளைப் போட்டால் எண்ணையைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தாளுக்கு மட்டும் எங்கிருந்துதான் சிரிப்பு வருமோ” என முனகிக்கொண்டே பின் தாங்க முடியாமல். “என்னாச்சு சார்?” எனக் கேட்டான்.

“திரும்பிப் பாருங்க.. அங்க ஒருத்தர் நிக்குறார்ல…” ஒரு ஊரே நின்றுகொண்டிருக்கும் இடத்தில் யாரைச் சொல்கிறாரென பார்த்தவனிடம் “கருப்பு கலர் சட்ட..சொட்ட மண்ட.. போனத் திருடப் பாத்தார்.. ஏறுறப்ப கூட்டமா இருக்கேன்னு போன பாக்கெட்ல போட்ருந்தேன்.. போன் வரவும் எடுப்போம்ன்னு பாக்கெட்ல கையவிடுறேன் இவர் கை உள்ள இருக்கு.. கையப் பிடிச்சுட்டு திரும்புனா விருட்டுன்னு உருவிட்டு படிக்கட்டுப் பக்கம் போய் நிக்குறார்”. என்றார்.

குமார் பயந்துபோய் தன் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். போன் இருந்தது. அவருக்கு ஒரு ஐம்பது வயதேனும் இருக்கும் போலிருந்தது.

“இவங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடயாதா சார்.. பத்திரமா வீடு போனா தேவலன்னு அவன் அவன் ஓடிட்டு இருக்கான்.. இப்பக் கூட…”

அவர் அதற்கும் சிரித்தார். பின் தன் கைப்பேசியில் மூழ்கிப்போனார்.

மறைமலை நகர் தாண்டி ரயில் ஓடத்தொடங்கியது.

*

குமாரும் அவன் பெற்றோரும் தஞ்சாவூர் போய் சேர்ந்தபோது காயத்ரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அவன் சித்தப்பா. சமைத்துக்கொண்டிருக்கும்போது சேலையில் தீப்பற்றிவிட்டது என்று போனில் சொன்னவர் நேரில் பார்த்தபோது ஒரு வார்த்தைப் பேசவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் காயத்ரி சித்தி. குமாரின் குடும்பம் போனபின்பு அவன் அம்மாதான் உடன் இருந்தாள்.ஐசியூவிற்கு வெளியேயே நின்றான் குமார். கதவுகள் திறக்கும்போதெல்லாம் சித்தி தெரிகிறாளா என்று பார்க்க முயன்றான். நான்காவது நாள் அம்மாவே அவனை அழைத்துக்கொண்டுபோனாள். உள்ளே யாரையோ காட்டி “இதுதான் உன் சித்தி பார்த்துக்கோ” என்றாள்.

பிறந்த மேனியாய்க் கிடந்தாள் காயத்ரி சித்தி. இல்லை… இப்படியா பிறந்திருப்பாள்… கருகிப்போய்.. சதைக் குவியலாய்க் கிடக்கும் இவளா காயத்ரி சித்தி.. எரியாத பாகம் ஏதேனும் இருக்கிறதா.. அதில் சித்தியைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில் தட்டி மீண்டும் வெளியே அழைத்து வந்தாள் அவன் அம்மா.

*

பொத்தேரியில் கூட்டம் சற்று குறைந்தது. இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அதைவிடக் குறைவான வயதிருக்கும் பெண்ணும் ஏறினார்கள். அவர்கள் ஏறியதிலிருந்தே பெட்டியிலிருந்த பலரின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதுதான் இருந்தன. துக்க வீட்டில் வாய் நிறையப் புன்னகையோடு வரும் குழந்தையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் சிறு அமைதியை குமார் அவளைப் பார்க்கையில் உணர்ந்தான். தமிழ்ப் பெண்போல் இல்லை முகம். பால் நிறம். சுருட்டை முடி. கண்களில் லேசான பயம். கூட வந்தனவனின் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டாள். ஏதோ முணுமுணுத்தாள். அவன் தலையில் தட்டிக்கொடுத்தான். “நான் இருக்கும்போது ஏன் பயப்படுகிறாய்” என்று அவன் சொல்வது குமாருக்கு கேட்டது.

குமாருக்கு அவன் சித்தப்பாவின் முகம் கண் முன்னே வந்துபோனது. ஏறக்குறைய இதையேதான் காயத்ரியை அழைத்துக்கொண்டு முதன் முதலாக வீட்டிற்கு வந்தபோது மகாலிங்கமும் சொன்னார். திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை என்றிருந்த காயத்ரியை இரண்டு வருடங்கள் துரத்தி, சம்மதிக்க வைத்தது மகாலிங்கத்தின் சாதனைதான். குமாரின் அம்மாவிற்கு தன் தங்கையின் மீது அலாதிப் பிரியமும், மரியாதையும் உண்டு. வீட்டில் அதிகம் படித்தவள் என்பதோடு இத்தனை வருடங்கள் தனியாக எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்ட அவளின் மன தைரியத்தைப் பாராட்டாமல் இருந்த நாளே இல்லை. நிச்சயம் நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்பினாள். ஆனாலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டுப் பெரியவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னிடம் வந்து நிற்கும் தங்கைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு அவள் நம்பிக்கை பெரியதாய் இல்லை.

மகாலிங்கமும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். “உங்கள் தங்கையைப் போன்ற தைரியசாலிப் பெண்ணிற்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்” என்றார். உண்மைதான். அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள் காயத்ரி சித்தி. இல்லையென்றால் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டப் பின் சிலையைப்போல் இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றிருப்பாளா…

*

காயத்ரி ஏழு நாட்கள் மரணத்தோடு போராடிவிட்டு இறந்துபோனாள். முதல் நாளே “சிக்ஸ்டி பெர்சன்ட் பர்ன், பிழைக்க வாய்ப்பில்லை” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “உன் கூட வந்தர்றேன்க்கா.. என்னக் கூட்டிட்டுப் போயிடு.. இனி நீ தான் என்னப் பாத்துக்கனும்..இப்படி ஆகிருச்சு.. என்னால எதுவும் செய்ய முடியாது இனிமே” என்று உயிர் பிரியும் கடைசி நொடி வரை சொல்லிக்கொண்டே இருந்தாள் என அம்மா சொன்னபோது குமார் உடைந்து அழுதான். யாரின் துணையும் தேவையில்லை என்று இருபது வயதிலிருந்தே வாழ்ந்து வந்தவள் முடிவில் இப்படியா பேசவேண்டும் என்று புலம்பியவனைத் தேற்ற முடியாமல் அவன் குடும்பம் தவித்தது. குமாருக்கு காயத்ரி சித்தி என்றால் தனிப் பிரியம். “எப்போ ஊருக்கு வந்தாலும் அவ மடி மீது ஏறிக்கிட்டு இறங்கவே மாட்ட.. திரும்பக் கிளம்பும்போது பஸ்ல ஏறி உக்காந்துட்டு உன்ன ஜன்னல் வழியா தூக்கிப் போடுவா” எத்தனை முறை அம்மா சொன்னாலும் ஒவ்வொருமுறையும் புதிதாய்க் கேட்பதுபோலவே கேட்பான். சிறிது காலம் அவள் சொல்லாமல் இருந்தால் இவனே, “அப்போ சித்தி அடிக்கடி என்னப் பாக்க வருவாளாமா” என எடுத்துக்கொடுப்பான். ஆறேழு வயதில் “மயில் மாதிரி இருக்காமா சித்தி” என அவளைக் கொஞ்சுவான். ஒரு நாள் அவள் குரல் மயிலின் குரல் போலவே மாறிப்போகுமென்பது தெரியாமல்…

“கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உன்ட்ட சொல்லிட்டுத்தானமா பண்ணிக்கிட்டா.. ஒரு வார்த்த நம்மள்ட்ட சொல்லிருந்தா நாம விட்ருப்போமா” “சுடு சொல்க்காரிடா.. அவ வாக்குதான் அவள வாழவும் வச்சது.. இப்போ சாகவும் அடிச்சிருச்சு.. யாருமே வரலனாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்னு சொல்லிட்டுப்போனா..எப்படி நம்ம கிட்ட வருவா… கொள்ளி கூட அவளே வச்சுக்கிட்டா.. பாவி” குமாரின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சிறுவயதிலிருந்தே அவளின் துடுக்குத்தனத்தையும், முன் கோபத்தையும் அவர்கள் வீட்டிலிருந்த எல்லாரையும் விட அவள் நன்றாக புரிந்துவைத்திருந்தாள். காயத்ரியும் அதனலாதான் “யாரும் வரலன்னாலும் பரவால்ல நீ என்ன சொல்ற” என்று மகாலிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அவளிடம் வந்து நின்றாள். மரண வாக்கு மூலம் வாங்க வந்த பெண் நீதிபதியிடம் சமையல் செய்யும்போதுதான் சேலையில் நெருப்பு பிடித்தது என்று அவள் சொன்னபோது “நானே உன்ன கழுத்த நெறிச்சுக் கொன்றுவேண்டி” என்று ஆத்திரப்பட்டுக் கத்தினாள். காயத்ரியின் உதடுகள் பிரிந்து மூடின. அவள் எதையோ சொல்ல முயன்றாள். பின் முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

சாகப்போகும்போது கூட கணவனைப் பற்றி ஒரு வாய்த் திறக்காத அவளை நினைத்து அவளின் குடும்பம் நொந்துபோனது.

*

குமாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துக்கொண்டே இருந்தது. காயத்ரி எரிந்தபோது அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த ஒரு வேளையோடு போயிருக்கும். இப்படிக் கனவில் ஏன் வந்து தீயாய் நிற்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சாவை வலியத் தேடிப்போகும் பெண்கள் ஏன் தங்களின் உடலை தாங்களே அழித்துவிட்டுப் போகிறார்கள். தீக்குளிப்பவர்களின் கணக்கெடுத்தால் பெண்கள்தான் அதில் அதிகம் இருப்பர்..

*

ரயில் தாம்பரத்தை நெருங்கியது. “பயந்து சாவுறானுங்க.. இப்போ என்னா ஆச்சு.. எல்லாரும் அமைதியாத்தான் நடக்குது.. இந்த மீடியாக்காரனுங்க சும்மாவே மக்கள பயமுறுத்துறாங்க..” குமாரின் நினைவலைகளை அறுத்தது ஒரு குரல். தலைமுடிகள் நரைக்கத் தொடங்கியிருந்த மனிதர் ஒருவர் போனில் திட்டிக்கொண்டிருந்தார். போனை வைத்தப்பின்பும் திட்டுவதை நிறுத்தவில்லை.

“முன்ன மாதிரிலாம் இல்லங்க.. எல்லாருமே மாறிருக்காங்க..எதுக்குப் பயப்படனும்.. நாம பயந்தாதான் அத வச்சுக்கிட்டு எவனாவது எதாவது பண்ணுவான்..” அவர் பேசிக்கொண்டே போனார். “பயம்.. பயந்தாகொள்ளிங்க…” குமாருக்குத் தன் கனவின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது.

இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காயத்ரி குமாரின் அம்மாவிடம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுப் போய்விடும்படி சொன்னாளாம். “இத மட்டும் எனக்காக செஞ்சுருக்கா.. உன்ட்ட வேற இனிமே எதுவும் கேக்கல… இனி எங்க கேக்குறது…”

“அதச் சொன்னப்ப அவ கண்ணோரம் கண்ணீர் வழிஞ்சதுடா… கடைசியா ஒருவாட்டி அழுதா.. நாம் சாகுற வர இனி அழனும்”

காயத்ரி மரணப் படுக்கையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவள் இல்லாதுபோன இத்தனை வருடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி அவளை நினைவில் நிறுத்திக்கொண்டது குமாரின் குடும்பம். குழந்தைகள்தான் பாவம் என்று இரண்டு வருடங்கள் முன் வரைக்கும் கூட வருத்தப்பட்டனர். ஒருவகையில் கையாலாகாதத்தனத்தை, குற்றவுணர்ச்சியை மறைக்க மீள மீள அவளைப் பற்றி பேசுகிறோமா என்று அவ்வபோது குமாருக்கும் தோன்றும். அப்படி எண்ணம் வரும்போதெல்லாம் தனக்காக கடுமையாக வாதாடிக்கொள்வான். அப்போது இருந்த குடும்ப சூழ்நிலையில் எப்படிச் சாத்தியம்.. மகாலிங்கம் பிரச்சனை வரலாம் என்று எதிர்பார்த்து ஆட்களை வரச் சொல்லியிருந்தான். அவர்களையெல்லாம் மீறி என்ன செய்திருக்க முடியும்.. அவன் என்ன சமாதானம் சொல்லிக்கொண்டாலும் “எங்கள விட்டுட்டுப் போகாத பெரிம்மா” என்று அழுத அந்தக் குழந்தைகளின் முகங்கள் அவன் நிம்மதியை அவ்வபோது வந்து கலைத்துப்போட்டுக்கொண்டே இருந்தன. “என் பிள்ளைய விட்டுட்டீங்கள்ல” என்று தீப்பிழம்பாக காயத்ரி கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

*

தாம்பரம் சானடோரியமில் இறங்கினான் குமார். உடலளவிலும் மனதலளவிலும் சோர்ந்துபோயிருந்தான். நடைமேடை முழுவதும் ஓட்டமும், நடையுமாக மக்கள் போய்க்கொண்டிருந்தனர். சட்டென்று அவனுக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடியே ரயிலில் அந்த மனிதர் சொன்னதுபோதுபோல் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்றும் நினைத்தான். இருந்தும் அவனால் தைரியத்தை வரவைத்துக்கொள்ள இயலவில்லை.பைக்கை மறுநாள் வந்து எடுத்துக்கொள்ளலாமா, ஆட்டோ எடுப்போமோ என யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு பத்தடியில் ஒரு கூட்டம் கைகளில் கொடியுடன் வருவதைப் பார்த்தாபோது வியர்க்கத் தொடங்கியது. அவர்கள் கடந்துபோகும் வரை அமைதியாக நின்றான். கூட்டம் அமைதியாகத்தான் போனது. இருந்தும் குமாருக்கு அவர்கள் தலைகள் மறைந்தபின்தான் மூச்சே வந்தது.

பைக்கைக் கிளப்பியதிலிருந்து எதிரில் போவோர் வருவோர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டினான். இரண்டு வண்டிகளுக்கு மேல் சேர்ந்தார்போல் எதிரில் வந்தால் ஓரமாக நிறுத்தி அவர்கள்போனபின் கிளம்பினான். எப்போதும் எஞ்சின் மேல் வைக்கும் ஹெல்மெட்டை ஸ்டாண்டிலியே போட்டுக்கொண்டான். ஐந்து நிமிடத்தில் வரும் வீடு ஏன் இன்னும் வரவில்லை என வாய்விட்டுப் புலம்பினான். அவனை யாரேனும் பார்த்தால் எங்கேயாவது திருடிவிட்டு வருகிறாயா என்று கேட்ப்பார்கள். ஒருவழியாய் வீட்டை அடைந்தவுடன் ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியிலேயே வைத்துவிட்டு கதைவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் அறைக்குள் நுழந்தவுடன் பையைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்துவிட்டு பெட்டில் விழுந்தான். சிறிது நேரம் அப்படியே கிடந்தான். தலைவலிவிட்டதுபோல் இருந்தது. காலையிலிருந்து உணர்ந்த அழுத்தம்போய் அவன் மனம் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தது.

அப்போது அவனுக்கொரு குரல் கேட்டது. சரியாகக் காதில் விழவில்லை. சட்டென்று எழுந்துகொண்டான். அசையாமல் அப்படியே நின்றான். நிச்சயம் பரிச்சியமான குரல்தான். அவன் காதில் விழுந்தது கூட ஏற்கனவே கேட்ட விசயம் மாதிரிதான் இருந்தது. இரண்டாம் முறை அந்தக் குரல் கேட்டது. இம்முறைத் தெளிவாகக் கேட்டது.

“எல்லாம் கோழப் பசங்க…..”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.