பேரூந்துகள் அதனதன் நேர கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப வந்து நின்று சென்று கொண்டிருந்தது, பயணிகள் வருவதும் தன் பேருந்திற்காக காத்திருப்பதும் பின் ஏறிச்செல்வதுமாக இருந்தனர், நேர குறிப்பட்டையில் இருந்த தாள்களில் பஸ் வந்த நேரத்தை நடத்துனர்கள் வந்து குறித்து செல்வதுமாக இருந்தனர், அருகில் இருந்த பெட்டிக்கடை போன்ற தோற்றத்தில் இருந்த டீ கடையில் இருக்கும் பையன் இப்போது வரைக்கும் எப்படியும் 40 டீ க்கு மேல் விற்றிருப்பான், ஒரு நாய் வந்து பயணிகள் இருக்கைக்கு கீழே போய் இருந்து ஒரு தூக்கம் போட்டுவிட்டு கூட போனது, இவ்வளவுகளுக்கிடையிலும் நீள சிமிண்ட் இருக்கையில் ஓரத்தில் அம்பிகா சிலை போல துளி கூட அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள், அவள் பார்வை சலனமற்று வெறித்திருந்தது.
நேரம் செல்ல செல்ல அவள் மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது, ஆனால் அதை சற்றும் வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தேன், எப்படியாவது இவளிடம் தப்பி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன், அவள் அருகில் அமர்வதும் சற்று தள்ளி போய் நிற்பதுமாக இருந்தேன், இந்த இடத்தில் அணைத்து மூலைகளிலும் நின்றுவிட்டேன், என்ன ஒன்று நாய் ஆக இருந்தால் அங்கெல்லாம் ஒன்றுக்கு அடித்து வைத்திருக்கும், நான் அதற்கு பதில் அங்கிருக்கும் சுவர்கள், தூண்களில் என் பைக் சாவியை வைத்து கீறி கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் ஆனாலும் நானாக ஏதும் பேச வாயெடுத்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் அல்லது அவளில் சிறு சலனமாவது தோன்றுவதை காண காத்திருந்தேன், அது அவள் இலகுவாவதன் சமிஞ்சை, அப்போது மெதுவாக பேச ஆரம்பித்தால் இலகுவாக போய் விடும் , மாறாக நானாக பேச ஆரம்பித்து விட்டால் பிறகு நானே எல்லாவற்றையும் கெடுத்து விட வாய்ப்புண்டு, அவள் என்னை விட்டு நீங்கி விட்டால் போதும் என்றிருந்தது.
நான் இவளை சந்தித்த முதல்கணம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் தாண்டி விட்டது, அப்போது இவள் ஒரு தேவதையாக இருந்தாள், என் பார்வைக்கு மட்டும் என்றும் கூட சொல்லலாம், ஏனெனில் இவளை sb பிரிண்டரில் முதலில் கண்டபோது இவளை பற்றி பிறர் சொன்ன வார்த்தை கொடுத்த அதிர்ச்சி இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. அங்கு இருந்த மேலாளர் ராஜுவும் நானும் ஒன்றாக பணி கற்றவர்கள், அவனுக்கு தான் இருக்கும் நிலையே போதும் என்றிருந்தாதால் பணியாளனாகவே நீடித்து அப்போது மேலாளர் பொறுப்பை அடைந்திருந்தான், நான் தொழில் முனைவோன் ஆக வேண்டும் என்ற வெறியில் வெளியே வந்து அப்போதே 40 லட்சம் கடனாளியாக வளர்ந்திருந்தேன். இன்னும் இன்னும் ஓடி கடனையும் அடைத்து நானும் மேலேற வேண்டும் என்ற வெறியில் வேறெதிலும் கவனம் போகாமல் வேலை வேலை என்று அதிலேயே பைத்தியமாக சுற்றி கொண்டிருந்தேன், எல்லாம் இவளிடம் சிநேகம் கொள்ளும் வரைதான், இவள் என் வாழ்வில் வந்த பிறகு தொழில் என்பது வேண்டா விருந்தாளியாகி போனது.
நானும் ராஜுவும் அவன் அறையில் பேசி கொண்டிருந்த போது இவள் ஒரு பைல் தருவதற்காக வேண்டி கண்ணாடி கதவை திறந்து உள்ளே வந்தாள், வந்தவள் நேராக பைல் வைத்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வெளி சென்றாள், செல்லும் போது அவள் என்னை யதேச்சையாக பார்த்து செல்வதை போல கடந்து சென்றாள், அவள் என்னை பார்க்க வில்லை அளந்தாள் என்பது இப்போதுதான் யோசிக்கும் போதுதான் தெரிகிறது.
ராஜு ” எப்படி இருக்கா ” என்று சிரித்தான், நான் ” டே வந்த வேலையை பார்ப்போம் ” என்று கடுப்பாக சொன்னேன், அவன் சிரித்து ” மேட்டர்டா அவ” என்றான், அதை கேட்ட போது அதிர்ச்சி அடைந்தேன், ” அப்படி பார்த்தா நீ மகா கொடூரமான மேட்டர் டா “என்றேன் அவனிடம், அவன் அதை துளியும் வாங்கி கொள்ளாமல் ” ட்ரை பண்ணி பாரு, மாட்டுவா ” என்றான், நான் ஏதும் பதில் சொல்லாமல் தொழில் விஷயத்தில் நுழைத்து அவன் கவனத்தையும் அதில் திருப்பினேன்.
பிறகு இரு மாதங்கள் கழித்து அவளை மதுக்கரை முருகன் கோவிலில் யதேச்சையாக சந்தித்தேன், பார்த்த போது என்னை மிக தெரிந்தவன் போல புன்னகைத்து என்னை நோக்கி வந்து பேச துவங்கி விட்டாள், அவளது சங்கோஜமின்மை ஆச்சிர்யமளித்தாலும் அவளிடம் பேசும் போது அவள் முன்பே மிக பழக்கமானவள் போல உணர்ந்தேன், என்னை பற்றி என் தொழில் பற்றி எல்லா வற்றையும் அறிந்து வைத்திருக்கிறாள் என்பது மேலும் ஆச்சிரியம் தந்தது, திருமணம் ஆகி சில வருடங்களே ஆகியிருக்கும் என தோன்றும் உடல் கொண்டிருந்தாள், குழந்தைமை சிரிப்பு, சிரிக்கும் கண்கள், லேசாக இடது பக்கத்தில் மட்டும் குழி விழும் கன்னங்கள், வட்ட முகம், அளவான 5அடி உயரம், முகத்திற்கு வந்து அவ்வப்போது என்னாச்சு என கேள்விகள் கேட்டும் ஓர முடிகள், அதை அடிக்கடி பொருட்படுத்தாது தள்ளி விடும் அவளது இடது கைவிரல்கள், ஆம் அவள் இடது கை பழக்கம் கொண்டவள், அந்த விரல்கள் மஞ்சள் வண்ணமடிக்கும் பசு வெண்ணையால் உருவாக்க பட்டிருந்தது போல, தொட தொட உருகி விடும் போல இருந்தன, நான் அவளிடம் பேசும் போது கிட்டத்தட்ட மிதந்து கொண்டிருந்தேன், என்ன பேசினேன் என்றெல்லாம் இப்போது எதுவுமே ஞாபகமில்லை, ஆனால் கடைசியாக கேட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது, திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டேன், ஏனெனில் அவளில் திருமனம் ஆனதற்கான குறிப்பு பொருட்கள் எதுவும் காண முடியவில்லை, ஆனால் அவளிடம் இருந்த சகஜம் அது தாண்டி என்னை ஒரு அடுத்த ஆன் என காணாத குணம் கண்டிப்பாக இவளுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று எண்ண வைத்தது, அவள் ‘ஆம் ‘ என்று சொன்னாள், ஆனால் அந்த கேள்விக்கு பிறகு அவளில் இருந்த பேச்சின் உற்சாகம் குறைந்து போனது, அதன் பிறகு ஒன்றிரன்டு சொற்களுக்குளாக பேச்சு முறிந்து “பார்ப்போம் “என சொல்லி கொண்டு பிரிந்தோம்.
அடுத்த இரண்டு நாட்கள் உள்ளாகவே ராஜுவின் பணியிடமான sb பிரிண்டர் க்கு சென்றேன், அவளை பார்க்கவேண்டும் என்பதற்காகவே, ராஜு தீவிரமாக தொழில் பற்றி பேசிக்கொண்டிருந்தான், ஏன் இப்படி அறுத்து தள்ளி கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே அவன் சொல்வதை கவனமாக கேட்பவன் போல பாவனை செய்து கொண்டிருந்தேன், மனம் முழுதும் அவளை காணும் விளைவுதான் இருந்தது, அவள் அறைக்குள்ளேயே வரவில்லை, பின் சோர்ந்து” சரி வருகிறேன் ” என்று சொல்லி அறை விட்டு வெளியே வரும் சமயத்தில் சரியாக அவள் வந்து கொண்டிருந்தாள், என் மனம் பரிட்சை தாள் முடிவை அறியும் தத்தளிப்பில் ஆடி கொண்டிருந்தது, அவள் அதற்கு முன்பு என்னை பார்த்திராதவள் போல எந்த சலனமும் அற்று என்னை கடந்து ராஜுவின் அறைக்குள் சென்றாள்.
கோபம் கோபமாக வந்தது, மனதிற்குள் “தேவிடியா ” என்று சொல்லி கொண்டு அங்கிருந்து வெளியேறினேன், பின் இரண்டு நாட்கள் உள்ளாவே அவளை மறந்து போனேன், அவள் ஜாடையில் யாரையாவது பார்த்தால் மட்டும் அவள் ஞாபகம் வரும், கூடவே அவள் மீது ஒரு வசை சொல்லும் என் மனதில் எழுந்து நிற்கும்.
பிறகு இரு மாதங்கள் கடந்திருக்கும், ஞாயிறு காலை அன்று, செல்பேசியில் பெயர் பதியாத ஒரு எண் தொடர்ந்து அழைத்து கொண்டிருந்தது, யாராவது கடன்காரனாக இருப்பான் என்று எடுக்காமல் இருந்தேன், பிறகு அந்த என்னில் இருந்து நான் அம்பிகா என்ற ஒரு குறுந்செய்தி வந்தது, அதுவரை அது அவள் பெயர் என்று கூட தெரியாது, ஆனால் அந்த பெயர் அவள்தான் என்று உள்ளுணர்ந்தேன், அது சரியாகவும் இருந்தது. திரும்ப நானே அழைத்து ” யார் நீங்கள் ” என்று கேட்டேன், அவள் உடைந்த குரலில் ” உங்களை சந்திக்க முடியுமா ” என்று கேட்டாள், உடனே ” எங்கு இருக்கிறீர்கள் “என்று கேட்டேன்.
அன்று மதியமே அவளை டவ்ன்ஹால் அருகில் இருக்கும் ஒரு உயர்தர உணவகத்திற்கு விற்கு வரவழைத்து பேசினேன், அவள் நான் ஆர்டர் செய்திருந்த எதையுமே உண்ணாமல் வெறுமனே சிலை போல தலை கவிழ்ந்து சோகத்துடன் அமர்ந்திருந்தாள், இப்போது இங்கு எப்படி அமர்ந்திருக்கிறாளோ அப்படியே அன்றும் அந்த உணவகத்தில் அமர்ந்து என் பொறுமையை மென்மேலும் சோதித்து கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட மன்றாடி கொண்டிருந்தேன், இனி மேலும் ஏதும் சொல்லா விட்டால் எழுந்து போய் விடுவேன் என்று சொன்னேன், அப்போது லேசாக அசைவு தெரிந்தது, உடையும் உறைபனி கட்டிக்கள் போல, அந்த கணம் அவளை மிக விரும்பினேன், எல்லா நாளும் எல்லா கணமும் அவள் எண் உடனிருக்க வேண்டும் என்று விரும்பினேன், அவள் என்னிடம் மெதுவான குரலில் ஆனால் உறுதியான சொற்களில் ” எனக்கு ஒரு தொந்தரவு தராத துணை வேணும், நீங்க எனக்கு ஆதரவாக இருக்க முடியுமா ” என்றாள்,நான் ” இதற்கேன் இவ்வளவு தயங்கனீங்க, கண்டிப்பா ” என்றேன்.
அதன் பிறகு அவள் வேலையை விட்டு கம்பெனியில் சேர்ந்து கொண்டாள், ராஜு நான் நாசமாக போவேன் என்று பயமுறுத்தினான், ” இதெல்லாம் வேணாம்டா என்று கெஞ்சினான், என்ன இருந்தாலும் நான் வாழ்வில் மேம்பட வேண்டும் என மனதார விரும்பும் நண்பன் அவன், ஆனால் அதன் பிறகு அவன் பணி செய்த sb பிரிண்டர் க்கு போவதையே தவிர்த்தேன், வேறு பிரிண்டர்க்கு என் ஆர்டரை அளித்தேன், அவன் செல்பேசி எண்’னையே பிளாக் செய்தேன். என் மனம் முழுதும் வசந்தம் மட்டுமே இருந்தது, அதை சிதைக்கும் எதையுமே நான் உள்ளேயே வர விடாமல் செய்தேன்.
அவள் என் நிறுவனம் மேம்பட பாடுபட்டாள், அவள் அலுவலக நேரம் 6மணிக்குள் முடிந்து விடும், ஆனால் 8 மணி வரை வேலை பார்ப்பாள், ஆனால் கம்பெனியில் மற்ற நபர்கள் 7மணிக்குள் வெளியேறி விடுவார்கள், அதிகன் பிறகு அவளை பணி செய்ய விடாமல் நான் ஆட் கொள்வேன், எங்களுக்குள் இருக்கும் உறவு வெளியே காம்பௌண்ட் வாசல் வாட்ச்மன் வரை வெளியே தெரிய பரவியிருந்தது. அவள் எப்போதும் என் எண்ணங்களுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் ஆட்படுவாள், ஆனால் இந்த நாள் வரை ஒரு கணத்திலும் அவளில் இருந்து ஒரு தன்முனைவு கூட வெளிப்பட்டதில்லை, நான் விரும்பும் படியாக அவள் உடல் மாறும், அவ்வளவுதான், போலவே கெஞ்சியோ அல்லது விட்டு விடாதீர்கள் எனும் அபலை குரலோ அவளில் என்றுமே வெளிப்பட்டதில்லை, அதே சமயம் அவள் பிடி என்னை கட்டு படுத்துகிறது என்று எப்போதும் நான் சிறு அளவில் கூட உணர்ந்ததில்லை. அவள் வருகை என் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது, அவள் சொல்லுக்கு பணியாட்கள் மட்டுமல்ல மிசின் கூட கட்டுப்பட்டது, அவள் யாரையும் அதட்டி ஒரு சொல் கூட சொல்லி நான் பார்த்ததில்லை, அவளுக்கு நேர்மாறாக நான் முன்பு கோபம் வந்தாள் கெட்டவார்த்தைகளாக கொட்டுவேன், பிறகு கெஞ்சி கொண்டிருப்பேன், அவள் வந்த பிறகுதான் தொழில் என்பது மாடு பிடிக்கும் வேலையல்ல என்பதையெல்லாம் உணர்ந்தேன்.
அவளை விட்டு விலக நினைத்த முதல் கணம் கூட அப்படியே ஞாபகம் இருக்கிறது, அந்த அதிர்ச்சியை எல்லாம் என் கட்டை வெந்து அழிந்தாலும் மறக்க முடியாத நினைவுகளாக நின்றிருக்கும், ஒரு நாள் ஒரு பையனுடன் கம்பெனி வாசலில் பேசி கொண்டிருந்தாள், அவனை பின்பக்கமாகதான் முதலில் பார்த்தேன், அவளை விட்ட சற்று உயரமாக ஸ்டைலான உடையில் இருந்தான், மனம் பார்த்தவுடனே உள்ளிற்குள் பறையடிக்க ஆரம்பித்து விட்டது, மெதுவாக அவர்கள் பக்கம் வந்தேன், அவள் நான் வருவதை உணர்ந்ததும் மகிழ்ச்சியான முகத்துடன் ” என் பையன், +2 படிக்கிறான் ” என்று அறிமுக படுத்தினாள், அவன் என்னை பார்த்து சிரித்து வணக்கம் வைத்தான், எனக்கு அதிர்ச்சி தூக்கி வாரிப்போட்டது, அதை வெளிக்காட்டாமல் எந்த ஸ்கூல் என்று விசாரித்து பிறகு அவளிடம் ” நான் உள்ளே போகிறேன் ” என்று நகர்ந்தேன்.
அவளின் வயதை பற்றி நான் யோசித்ததே இல்லை, 32-33 இருக்கும் என்று நினைத்திருந்தேன், முக்கியமாக என் வயது எல்லாத்துக்கும் என்னை விட சற்று இளையவள் என்று இது வரை எண்ணியிருந்தேன், ஆனால் இந்த வயதில் ஒரு மகன் இருப்பான் என்று எண்ணியதே இல்லை, முன்பு ஏதோ ஒரு சமயத்தில் எனக்கு ஒரு மகன் உண்டு என்று சொல்லியிருக்கிறாள், அது சற்று உறுத்தினாலும் மேற்கொண்டு அதை பற்றி அவளிடம் பேசியதே இல்லை, அவள் கடந்த கால வாழ்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதிகம் போனால் அவள் வீடு பூமார்க்கெட் பக்கம் எங்கோ இருக்கிறது என்று மட்டும்தான் தெரியும். இந்த ஒரு விஷயம் இவளை என்னிடம் இருந்து வெகுதூரம் நகர்த்தி விட்டது அல்லது நான் மனதால் விலகி ஓடினேன்.
பிறகு அவளை தவிர்க்க ஆரம்பித்திடேன், அதன் பிறகு அவள் உடல், அவள் இருப்பு எல்லாமே சலிக்க ஆரம்பித்து விட்டது, காரணமில்லாமல் திட்ட ஆரம்பித்தேன், அப்போதெல்லாம் மவுனமாக அழுவாளே தவிர சத்தம் போட்டு சண்டை எல்லாம் போட மாட்டாள், ஒரு வேளை என்னை சிறிது மிரட்டினாலும் அவளுக்கு அடங்கி போய்விடுவேன் என்பதை என்னை விட அவள் நன்குணர்வாள் என்றாலும் கூட. பிறகு அலுவலகம் செல்வதையே குறைத்தேன், தாபா சென்று விடுவேன், காலை பத்து மணி போனால் 1 மணி வரை அங்கு இருப்பேன், இரு பீர்கள் தாங்கும் உடல் என்னுடையது, மூணாவதற்க்கு முயன்றால் மட்டையாகி விடுவேன், சாயங்காலம் அலுவலகம் போய் அரைமணி நேரம் மட்டும் கூட இருக்க இருப்பு கொள்ளாமல் எழுந்து ஓடி விடுவேன், ஆனால் அலுவலகம் என்னை சற்றும் பொருட்படுத்தாமல் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்தது. நானும் அம்பிகாவும் பேசுவதே கிட்டத்தட்ட நின்று மாதங்கள் ஆகி இருந்தது. அப்படியே நகர்ந்து கொண்டிருந்தது,
பிறகு நேற்று மாலை அலுவலகம் நான் சென்று உள்ளே அமர்ந்ததும் அவள் உள்ளே வந்து அறை கதவை சாத்தினாள், என் போதை எல்லாம் இறங்கி அவளையே பார்த்து கொண்டிருந்தேன், நான் எதிர்பார்த்தது எல்லாம் அவளிடம் இருந்து இரு அறைகள், கூட நான்கு மிரட்டல் வார்தைகள், அப்படியே அவளிடம் சரணடைந்து மீண்டு விடுவேன். ஆனால் அவள் இருக்கையில் அமராமல் நேரடியான வார்த்தைகளில் என்னிடம் பேசினாள் ” நான் உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும்”, நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். ” ஊருக்கே போயிடலாம் னு இருக்கோம், பையனும் சரினு சொல்லிட்டான், அங்க வீடு சும்மா கிடக்கு, இனி இப்படி ஊரை விட்டு இருக்காம அங்கேயே இருந்தடலாம் னு இருக்கோம், பையன் முன்னாடியே கிளம்பி போயிட்டான், நான் நாளைக்கு காலைல கிளம்ப இருக்கேன், என்ன வழியனுப்ப வருவீங்க னு நம்பறேன் ” சொல்லி என் பதிலை எதிர்பார்க்காமலேயே கதவை வேகமாக திறந்து வெளி கிளம்பினாள்.
மெதுவாக அவள் முகம் நிமிர்வது தெரிந்தது, முடியை தடவி சரி செய்து கொண்டாள், முகத்தில் சோகம் அப்பி கிடந்தது, அப்போது அவளில் இருந்த நிசப்தத்தை அறுக்கும் வாளாக ஒரு வெண்ணிற தனியார் பேரூந்து வந்து நின்றது, அவள் வேகமாக எழுந்து தன் கைப்பையை இடது தோளில் போட்டு அதன் மீதே அவள் அருகில் இருந்த இன்னொரு பெரிய துணி பையை போட்டு பேரூந்து நோக்கி நடந்தாள், நான் தன்னிச்சையாக அவள் அருகில் சென்று நின்றேன். எனை பார்த்ததும் அவள் வர விருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு மறைத்து புன்னகையை வரவழைத்து கொண்டு என்னை நோக்கினாள், அப்பொழுது அனிச்சையாக அவளது வலது கரம் என் கேசத்திலும் கன்னங்களும் மிருதுவாக அலைந்தது.