மனத்தில் என்றும் மன்னனே!
சங்க கால மக்கள் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று தம் வாழ்வை நடத்தினர். அரசன் முறையாக ஆட்சி செய்து குடிமக்களை நன்கு ஓம்பி வந்தால்தான் தங்கள் வாழ்வு சிறக்கும் எனக் கருதினர். ஐங்குறுநூறு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐங்குறுநூற்றின் மருதத் திணையில் அடங்கி உள்ள வேட்கைப் பத்தில் உள்ள பத்துப் பாடல்களிலும் இதைக் காண முடிகிறது. வேட்கை என்பது விருப்பம் என்று பொருள் படும். தாய், தலைவி, தோழி ஆகியோரின் விருப்பத்தைக் கூறுவதால் இது வேட்கைப் பத்தாயிற்று
தலைவன் தலைவியைப் பிரிந்து புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஈடுபட்டான். பின்னர் “இது தகாது” என உணர்கிறான். தலைவியோடு கூடி வாழ வருகிறான். அப்பொழுது அவன், “நான் உங்களைப் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்ன கருதினீர்கள்” என்று கேட்கிறான். அதற்கு விடையாகத் தோழி கூறுவதாகப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன, எல்லாப் பாடல்களுமே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அவினி என்னும் பெயருடைய சேர மன்னனையும் அவன் குடியாகிய ஆதன் என்பதையும் வாழ்த்தி, “வாழி ஆதன் வாழி அவினி” என்றே தொடங்குகின்றன. எந்த ஒரு செயலும் மன்னனை முதன்மைப்படுத்தி அவனை வாழ்த்திய பிறகே மக்கள் தொடங்கினர் என்று இதன்வழி உணரலாம்.
தோழி,
”வாழி ஆதன் வாழி அவினி
பசிஇல் ஆகுக! பிணிசேண் நீங்குக”
என்வேட் டோளே யாயே யாமே”
என விடை கூறுகிறாள். “நாங்கள் மன்னன் வாழ்க என்றும், நாட்டில் பசி இல்லாமல் போகட்டும், நோய் அகன்று போகட்டும் என நினைத்திருந்தோம்” என்பது இதன் பொருளாகும். மன்னன் சிறப்புடன் வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் நாட்டில் பசியும், நோயும் இருக்காது. அப்ப்டிப்பட்ட நாட்டை விரும்பினோம் என்கிறாள். உறு பசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்பார் வள்ளுவர்.மற்றொரு பாடலில், தோழி,
“வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக” என்கிறாள்.
அதாவது நம்அரசனுக்குப் பகை இல்லாமல் போகட்டும், அரசன் பல்லாண்டு வாழட்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு நாட்டுக்குப் பகைவர் இருந்தால் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் அமைதியாய் வாழமுடியாது என்று இது கூறுகிறது. மேலும் தங்கள் மன்னன் பல்லாண்டு சிறப்புடன் வாழவேண்டும் என்றும் விரும்புவதாக அவள் கூறுகிறாள்.
இப்படி ”நாட்டில் தீமை இல்லாமல் போகட்டும்; பால் வளம் பெருகட்டும்; நெல் மிகுதியாக விளையட்டும்; பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருந்தோம் என்று தோழி இப்பாடல்களில் கூறுகிறாள். தலைவனைப் பிரிந்து வருத்தத்தில் இருந்த போதும் மன்னனைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நினைத்த மக்களின் வாழ்வை எண்ணி நாம் பெருமைப்படத் தோன்றுகிறது.