தேர் என்றவுடன் அனைவருக்குமே ஒரு திருவிழா கொண்டாடும் குதூகலம் எப்படியோ ஒட்டிக் கொண்டு விடுகிறது. எந்தக் கோவிலோ, எந்த ஊரோ, தேரோட்டம் என்றாலே அது ஒரு மகிழ்ச்சி பொங்கும் விஷயம்தான். ஒரு கோவிலின் திருவிழா பத்து நாட்கள் என்றால், பத்தாவது நாள் தேர்த்திருவிழாதான். இந்தப் பத்தாவது நாளை நோக்கியே மொத்தத் திருவிழாவின் மகிழ்ச்சியும் கரை புரண்டோடும். தேர் அழகழகான வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழையும், கமுகும் கட்டப்பட்டு, சுற்றிலும் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, அசைந்து வருவதே ஒரு அழகுதான். ஊத்துக்காடு வெங்குடுசுப்பையர், கண்ணனை, ‘ஆடாது அசங்காது வா கண்ணா” என்று அழைக்கும், பாடல் ஒலிப்பது போலவே ஒரு தேர் அசைந்து வருவது இருக்கும். தேரோட்டம் ஏன் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது??. கோவிலுக்குப் போக முடியாமல் இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், கை கால் முடியாதவர்களுக்கும், கோவிலுக்குச் சென்று இறைவனைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் நிறைய இறைவனையே நினைத்து ஏங்குபவர்களுக்கும், அவர்களுடைய ஆசையைத் தீர்த்து வைப்பதற்காகவே இறைவன் தேரில் ஏறித் தெருவில் வருகிறான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால். ஒரு தேரை உருவாக்கி அதைத் தெருவில் ஓட வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அந்தத் தேரை வடிவமைப்பதிலிருந்து, அதனை அலங்கரித்துத் தெருவில் ஓட வைப்பது வரை அத்தனைக்கும் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள். இறைவன், எளியோரைக் காண ஓடோடி வருகிறேன் என்றாலும், மனிதர்களாகிய நாம் பிடித்துக் கொண்டு தொங்குவது மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட தேவையற்ற சம்பிரதாயங்கள் தானே? ஆனால், காலம் காலமாக கட்டமைப்பவர்கள் மேலோர் என்றும், மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுபவர்களாகவும், முன்னவர் ஆண்டைகளாகவும், பின்னவர் அடிமைகளாகவும் கருதப்படுகிறார்கள்.
இந்த மேலோர், கீழோர் என்பது பணம், பொருள் என்ற அடிப்படையிலும், சாதி, மதம் என்ற அடிப்படையிலும் அமைந்து விடுகிறது. கற்சிலை வடிப்பவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அதே சிலை கருவறைக்குள் இருக்கும்போது பூசை செய்பவன் மேலோனாகவே இருக்க வேண்டும். கோயிலையும், கருவறையையும் கட்டுபவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருவறைக்குள் செல்லும் உரிமை மோலோனுக்கே உண்டு. இந்தப் பாகுபாடு காலம் காலமாக இன்னும் கூட வழக்கொழியாமல் இருந்துதானே வருகிறது???
தரமனிட்டி என்ற வடகன்னட கிராமத்தில் பாண்டுரங்கர் கோவிலில் வெகு காலமாக ஓடாத தேரை ஓட வைக்க நரபலி கொடுக்க வேண்டும் சாஸ்திரம் கற்றவர்கள் ராஜா ராணியிடம் தெரிவிக்கின்றனர். அந்தத் தேர் கல் சக்கரங்களாலானது. நரபலி கொடுக்க சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினரிலிருந்து ஒருத்தரைக் (ஆணோ, பெண்ணோ, குழந்தையோ) கொண்டு வரும்படி ராஜா கட்டளையிடுகிறார். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் கசிந்து, சேரி ஜனங்கள் இரவோடிரவாக ஊரையே காலி செய்து கொண்டு போய் விடுகிறார்கள். ஆளே கிடைக்காமல் இருக்கும்போது, ஆள் பிடித்து வர வேண்டிய பொறுப்பிலுள்ள கணக்குப் பிள்ளையின் மனைவி கோவிலுக்குப் போகிறாள். அங்கு கோவிலின் ஓரத்தில் தன் கர்ப்பிணி மனைவியோடும், ஆறேழு குழந்தைகளோடும், பசியோடு உட்கார்ந்திருக்கிறான் தோல்பாவை கூத்து நடத்தும் ஒருவன். அவனுக்கு, சோளம், அரிசி எல்லாம் மூட்டை, மூட்டையாக தருவதாக ஆசை காட்டி, அவர்களுடைய ஒரு குழந்தையை, தேருக்கு பலியிடத் தர வேண்டும் என்று கேட்கிறாள். தந்தை ஒத்துக் கொள்கிறான்; தாய் ஒத்துக் கொள்ளவில்லை. எப்படியோ ஒத்துக் கொள்ள வைக்கப் படுகிறாள். தேரோட்டத்தன்று குழந்தை தேர்க் காலில் பலியடப் படுகிறான். அதற்கு ஈடாக, ராஜா, அவனுடைய குடும்பத்திற்கு, கள்ளிக்குத்தி என்ற கிராமத்தில் நிலமும், வீடும் எல்லாம் ஒதுக்கித் தருகிறான். பத்திரம் எழுத்தி தந்து விடுகிறான். இது நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ரத்த சேவை என்ற பெயரில், அந்த வம்சத்துக் குடும்பத்தில், மூத்த பையன், தேரோட்டம் தொடங்குமுன், அந்த கல் தேர்ச்சக்கரத்தில் தலையை முட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தில், தேர்ச்சக்கரத்தில் திலகமிட வேண்டும் என்ற வழக்கம் கொண்டு வரப்படுகிறது. முதல் தலைமுறையில், பதினைந்து நாட்கள் விரதமிருந்து, பல கோயில்களுக்கு யாத்திரையாகச் சென்று, சரியாக தேரோட்டத்திற்கு முதல் நாள் அந்த கிராமத்தில் சென்று தங்கி, அடுத்த நாள், ரத்த சேவையை ஆற்றி, பொருளீட்டி வருவது என்ற வழக்கம் நடக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளில், இந்த வழக்கம், கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுகிறது. இவர்களும் அதை கடனே என்று செய்கிறார்கள். அவர்களும், அதை புனித சேவையாகக் கருதி பொருள் தருவதில்லை. நான்காவது தலைமுறையில் வரும், தேவப்பா பற்றியதாக நாவல் விரிகிறது.
தேவப்பா, இந்த தொன்மைப் பழக்க வழக்கங்களை விடுத்து, மனிதர்களை நேசிப்பதையும், சமூகத்திற்குச் சேவை செய்வதையும் இறைப்பணியாக எடுத்துக் கொண்டான் என்பதை நாவல் மறைமுகமாகக் கூறி முடிவடைகிறது.
பிறப்பாலேயே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று அடையாளப்படுத்தும் வழக்கம் இன்றளவும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஒரு தேரும், கிராமமும், கோவிலும் பற்றிச் சொல்வது போல இருந்தாலும், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும்,, கருத்துருவாக்கத்தையும் நாவல் பேசுவதை வாசகனால் உணர முடிகிறது.
நூற்றியைம்பதாவது தேரோட்டத்தின்போது நடைபெறும் கொந்தலிகர் கதை மூலமாக ரத்தசேவை ஆரம்பித்த கதை விவரிக்கப்படுகிறது. எடுத்தவுடனே, அவர்கள் தேரின் அடுக்குகளை விவரிக்கிறார்கள்.ஒருபுறம், பரிணாம வளர்ச்சியின் அடுக்குகள் போல் அவை இருக்கின்றன. மறுபுறம், உச்சியில் ஒரு பிரிவினர் உட்கார்வதற்கு, கீழே இத்தனை பேர் அமுங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தேர் நகர்வதற்கு நரபலி வேண்டும் எனும் போது, மேல் சாதியினர் என்று சொல்லக் கூடியவர் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, அறியாமையினாலும், வறுமையினாலும் வாடும் கீழ்சாதியைச் சேர்ந்த கூத்து நடத்துபவனைப் பயன்படுத்திக் கொள்வது மேல் சாதியினரின் கயமைத்தனத்தைக் காட்டுகிறது.
ஒரு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் என்பவர், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறியாமையையும், அவர்களோடு அவர்களின் வறுமையையும் சேர்த்தே பயன்படுத்திக் கொண்டது மேல் சாதி. வயிற்றை நிரப்பி, வஞ்சகமாக ஏமாற்றி வந்தது. காலம் மாற மாற, அவர்களிடம் விழிப்புணர்வு தோன்றியபோது, அவர்களை வேறு விதமாக ஏமாற்றுகிறது.. தவறான அரசியல் செய்வதற்கும், அவர்கள் நேரடியாகச் செய்யாத தவற்றின் பழி ஏற்பதற்கும் அவர்களப் பயன்படுத்திக் கொள்கிறது. தேவப்பா குடும்பத்திற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட நிலத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது மேல்சாதி என்று சொல்லக் கூடிய கௌடர் குடும்பம். அதோடு, இறந்து போன குமரப்பாவின் மனைவியையும் தான் பெண்டாள அடிமைபடுத்தி கொள்கிறது. தொடர்ந்து இப்படி கீழ் சாதியினரை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் அவர்களின் ரத்த வேவை என்ற கட்டுக்களை மீறிக் கொண்டு ஒருவன் அந்தச் சாதியிலிருந்து வெளி வருவது கட்டுடைத்தலின் குறியீடாகும். அவன் தனக்குப் பிடித்தமான சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் இவை போன்ற செயல்கள் உயர்ந்த குலத்தில் பிறந்தோர்க்கு மட்டுமே சொந்தமானது என்பது போன்ற தோற்றத்தை உடைக்கிறான். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் போய் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான்..
அதே போல, நாவலில் இன்னொரு அழகான சித்திரமும் வரையப்பட்டிருக்கிறது. உயர்ந்தோர் எனச் சமுதாயத்தில் மதிக்கப்படும் கௌடர் பிறன் மனைவியையும், சொத்துக்களையும் வஞ்சகமாகச் சேர்த்து வைத்துக் கொள்கிறான். கோவில் நகைகளையும் கூட கொள்ளையடிக்கிறான். ஆனால், சமூகத்தில் கீழ்சாதி என்றும், தவறான பழக்கங்கள் கொண்டவன் என்றும் ஒதுக்கப்படும், தேவப்பா ஹோலிப் பண்டிகையில் நீர் ஊற்றுவதற்கு என்று நேர்ந்து விடப்பட்டிருக்கும் குலத்தைச் சேர்ந்த கைம்பெண்ணை, அவளுடைய இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏற்றுக் கொள்கிறான். தாலி கட்டித் திருமணம் செய்து கொள்ளாமலும், உடலால் கூடவே இல்லாமலும் கூட மனதளவில் மனைவியாக ஏற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். மனம் சார்ந்த உறவே முக்கியம் என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறான். இந்த இடத்தில் சமுதாயத்தில் உயர்ந்தோர் யார், தாழ்ந்தோர் யார் என்ற கேள்வி வாசகன் மனதில் தோன்றுகிறது.
தரமனிட்டி கிராமத்தில் வாழும், சோமப்பா எனும் பெரியவர், தான் ஜைன மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், பாண்டுரங்கர் கோயிலின் மீதும், அந்தக் கிராம நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும், அவர் சார்ந்த மதத்தினைச் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்தப்படுகிறார். இறுதியில், திருட்டுப் பழிக்காகவும் காவல் நிலையம் சென்று, தங்கள் மத வழக்கப்படி, சல்லேகண விரதமிருந்து உயிர் விட ஆயத்தமாகிறார்.
அன்பு, ஒற்றுமை, கருணை எல்லாவற்றையும் விட சாதி, மதம், பொருள், இவற்றை முன் நிறுத்தும் பொருள் வயமான ஒரு வட்டத்துக்குள் சுற்றி வருவதையே இந்தச் சமுதாயத்தில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்தக் கதையின் பின்னிணைப்பாக, ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்த தேவப்பாவின் குழந்தையைப் பலியிடுவதற்காக தேர்க்காலில் வைக்கும்போது, அந்த பாண்டுரங்கனே கருடனில் பறந்து வந்து, அந்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு போனானாம் என்று.
இந்த உயிர்த்தியாகம், பற்றுதலின்மையின் ஒரு வடிவமாகும். கபீர்தாசர், அதிதிகளுக்கு அமுது படைக்க வேண்டித் திருடப் போனபோது, கடைச் சொந்தக்காரன் கையில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக, தன் புதல்வனின் தலையை வெட்டி விடுகிறான். திருநீலகண்டர், ஈசன், பிள்ளைக்கறி கேட்டான் என்பதற்காக பாலகனாகிய தன் மகன் சீராளனை வெட்டி அமுது படைக்கிறான். இந்த இடங்களிலெல்லாம், இறைவன், அவர்களுடைய பற்றின்மையையும், பக்தியையும் சோதிக்கவே இப்படிச் செய்கிறான். நெஞ்சத்தில் தூய்மையாக இருந்து கொண்டு, துர்புத்திகள் இல்லாமல் இருப்பதே இறைத்தனமையை அடையும் மார்க்கம் என்பதை அகங்காரமும், ஆணவமும் கொண்டு பாகுபாட்டில் திளைக்கும் மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்பதையும் நாவல் பேசுகிறது என்பதை வாசகனால் உணர முடியும். சக்கரங்கள் உருண்டோடாமல், கலசம் தாங்கிய தேர் எப்படி ஓட முடியும்? தேர் என்பது வெறும் அடுக்குகளும் கலசமும் மட்டுமன்று. சக்கரங்கள் மண்ணில் அழுந்தி விடாமல் ஓட வேண்டும். ஓடினால்தானே தேரோட்டம்; நின்றால் அது வெறும் நிலைத்தேர். இது ஒரு படிமமாக இந்த நாவலில் அமைந்திருப்பது சிறப்பு.
ஏதோ ஒரு நாட்டுப்புறக் கதை போலத் தோன்றினாலும், இந்த நாவல், மிக நுட்பமாக, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் பேசுகிறது. மிகவும் சுவாரசியமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொந்தலிகர் சொல்லும் கதை வடிவில் சொல்லப்பட்டிருப்பது, நம் தமிழ் நாட்டின் வில்லுப் பாட்டு போல இருக்கிறது. அதன் பிறகும் கதை விவரணை, வாசகனைக் கட்டிப் போடுகிறது. ஏதோ கர்நாடாகவின் ஒரு கிராமத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு உணர்வைப் பெற முடிந்தது.
ஒரு நாட்டுப் புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாவலைப் புனைந்திருக்கும் கன்னட எழுத்தாளர் ராகவேந்திர பாடீல் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். மொழிபெயர்ப்பு என்று தோன்றா வண்ணம் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல், தங்கு தடையில்லாத மொழிபெயர்ப்பாகச் செய்திருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். 2003 ல், கன்னடத்தில் வெளிவந்துள்ள இந்த நாவல், 2011 ல் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கூட அதிகமாக ஒன்றும் மாறிவிடவில்லை என்ற மனத் தாங்கலோடு புத்தகத்தைக் கீழே வைக்க வேண்டியிருக்கிறது.