கனநீரின் சுவையாய்
ஊற்றெடுக்கிறது
உச்சிவெயிலில்
கோணிய தென்னையின் கீழ்
நிற்கும்
கிணற்றின்
நீலநிற ததும்பல்.
ஆலிங்கனத்தின்
வெம்மையாய்
உடல் எங்கும்
பரவி நிறைகிறது
நிரம்பிய நீள் சதுரத்தின்
குளுமை.
சென்ற பிறவியின்
நினைவு போல
நாசியில் ஆழத்திலிருந்து
கிளர்ந்து எழுகிறது
நீந்திக்கடந்த
குளத்து நீரின்
மீன் மணம்.
சகதி படிந்த
பாதங்களின்
நீர் ஊறிய வெளுப்பு,
மோட்டார் அறையின் மேலிருந்து
ஓடிவந்து குதித்து
மூழ்கும்போது
உண்டாகும்
செவியின் அடைவு,
தெறித்து அறையும்
அலைகளில் நனைந்து
பளபளப்பு கூடிய
கிணற்றுச் சுவரின்
கருங்கல் அடுக்கு,
அலையாடித் தளும்பும்
நீர்ப்பரப்பின்
விளிம்பில்
சிவந்த பிளவால்
துளாவி
காற்றின்
ஒரு பருக்கையை
அவசரமாய் அள்ளிக்கொண்டு
கல்லிடுக்குள் மறையும்
கருத்த நீர்ப்பாம்பு.
நெடிய
ஜலக்கிரீடையின் முடிவில்
நிழலை நீளமாக்கிக்காட்டும்
வெயிலில்
நடுங்கியபடி,
நீர் ஊறி வெளுத்த கைகளை
கட்டிக்கொண்டு
மூச்சு வாங்கி
நிற்கையில்,
மார்பு மேல் இறுக்கிய
நாடாவின் நழுவலில்
காணக்கிடைத்த குவைகளின்
காம்புகள் முறைக்கும்
முழுமையின் அசைவு,
அனைத்தும்
இன்னொரு
தூர தேசத்தின்
மலையடியில்
இது வரை கண்டிராத
ஓடையின்
ஒரு துளியில்
ஒளிந்திருக்கிறது.
எவர் சொன்னது?
தூய நீர்
மணம் நிறம் சுவை
அற்றதென?