சரியாக மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் அப்பா பட்டாம்பூச்சியாக மாறிப்போனார். மாறிய கையோடு காற்றில் கலந்து மறைந்தும் போனார். எனக்கும் அவருக்குமான இடைவேளை பல ஒளி ஆண்டுகளாக ஆகிப்போனது. மறைந்து போனவர் சிலவற்றை விட்டும் சென்றிருந்தார். சில கடன்களை, பல சொத்துக்களை. அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. அவர் விட்டுச்சென்ற வேறொன்று இத்தனை நாள் மறைந்திருந்தது. இப்போது தான் வெளிவந்தது. அது ஒரு தவிப்பு. அணையாத தீச்சுடர் போலான பரிதவிப்பு. இதோ இந்த டாக்டர் முன் அமர்ந்திருக்கும்போது கூட நான் அறிந்திருக்கவில்லை. இனி வரும் நாட்கள் இப்படி மாறிப்போகும் என்று.
இடது கை மேற்புறம் வீங்கிய கொப்பளங்களுடன் இந்த கிளினிக்குக்கு வந்தேன். கண்களால் அளந்து பார்த்த டாக்டர் கையுரையை மாட்டிக்கொண்டார். கோபளங்களை நீவிப்பார்த்து பிதிக்கினார். நான் அவர் முக உணர்ச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய கணநேர கீற்றென ஒரு அருவருப்பான சுளிப்பு அவர் கண்களில் தோன்றி மூக்கு வழியாக இறங்கி உதட்டுக் கோணலாக முடிந்தது. ஏனென்று தெரியாமலேயே என் அகம் அதை படம்பிடிக்க புறம் அதை பிரதி செய்தது. அவர் பழக்கப்பட்ட சகஜ பாவனைக்கு மீண்டார், நான் அந்த பிரதியிலேயே நின்றேன்.
“ம்ம்ம்….” என்று உறுமி ஒரு முடிவுக்கு வந்தார். பெட்ரோலியம் ஜெல்லி என்ற களிம்பை எடுத்து கொப்பளங்கள் மீது தடவினார். காற்று புகாத வன்னம் அதை இறுக கட்டினார்.
“என்ன ஆச்சுங்க?” என்று கம்மலாக கேட்டேன்.
அவர் ஒன்றும் பேசாமல் ஃபோர்செப்ஸை ஸ்டரிலைஸ் செய்தார்.
“சார்…..”
“சமீபமாக எங்கயாவது போனீங்களா?”
நான் “பெருசா எங்கேயும் இல்லீங்களே” என்று சொல்லிவிட்டு யோசித்தேன். “வீடு கடை அவ்வளவுதான்.”
என் கையின் மேற்புறம் இட்ட கட்டு இறுகி வந்தது.
“வீடு எங்கே இருக்கு? ஏதாவது தோட்டங்காட்டுக்கு உள்ளேயா? அங்க ஏதாவது பட்டாம்பூச்சி தேனீ ஈ அந்த மாதிரி தொந்தரவு ஏதாவது இருக்கா?”
புரியாதது போலவும் இல்லை என்பது போலவும் தலையசைத்தேன்.
அந்த கட்டை தொட்டு “இந்த இடத்தில ஏற்கனவே புண்ணு இருந்துச்சா?” என்று கேட்டார்.
“ஆமாங்க டாக்டர். அது சும்மா கீறல் தான். ஆனா கொஞ்சம் ஆழமா.”
கொப்புளங்களுக்கு உள் ஏதோ குடைந்தது. ஊரியது.
“இருங்க காமிக்கிறேன்” என்றவாறு கட்டை அவிழ்த்தார்.
அதற்குள்ளாகவா என்று யோசித்தேன்.
கொப்பளங்கள் வீங்கி சிவந்திருந்தது. அதன் நுனி வெடித்திருந்தது. ஏதோவொன்று கொப்பளங்களுக்குள் இருந்து அதன் தோற்றுவாய் வழியாக உமிழ் நீர்போல வெளித்தளியது.
இம்முறை நான் முகம் சுளித்தேன்.
டாக்டர், “பொறுங்க இதுக்கே இப்படின்னா?”
ஒரு கையில் கொப்பளங்களை லேசாக பிதுக்கி மறுகையில் அந்த இடுக்கி போலுள்ள ஃபோர்செப்ஸைக் கொண்டு கொப்பளங்களின் தோற்றுவாய்க்குள் விட்டு அதை இழுத்தார். அது ஜவ்வு போல வெளியே வந்தது. அதை மேஜை மேல் உள்ள ட்ரேயில் போட்டார். அது கீழே கிடந்து நெளிந்தது. என் வயிற்றிலிருந்து அமில நீர் கிடுகிடுவென மேலே வந்ததை கட்டாயப்படுத்தி உள் அழுத்தினேன்.
புழு
“சார்! என்ன சார் இது!!”
“இது லார்வா. ஏற்கனவே இருந்த காயத்தின் மேல ஏதோ ஒரு பூச்சி முட்டை வச்சிருக்கு. அது உங்களுக்குள்ள வளர்ந்துட்டு இருந்திருக்கு. காயம் ஆச்சுன்னா டிரீட்மெண்ட் எடுக்கணும். கண்டுக்காம விட்டா இப்படித்தான். இருங்க இன்னும் முடியல”
அவர் மீண்டும் என்னுள் நுழைந்து மேலும் இரண்டு புழுக்களை பிரசவித்தார்.
மீண்டும் மேலெழுந்து வந்த அமில நீரை வெளியே ஓடி சென்று கக்கினேன். அப்பாவின் ஞாபகம் வந்தது.
சுத்தம் செய்துகொண்டு உள்ளே வந்தேன். உபகரணங்கள் எடுத்துக்கொடுக்கும் பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டு அருந்தினேன்.
அந்த டிரேவில் உள்ள புழுக்களை ஒரு முறை பார்த்தேன். அது உயிரற்ற கிடப்பது போலிருந்தது. டாக்டர் ஏதேதோ சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என் பார்வையை அவற்றின் மீது இருந்த விளக்குவதுமாக பதிப்பதுமாக இருந்தேன்.
பொறுண்மயாக வெளியே வந்தவை சூட்சுமமாக என் உள்ளே சென்று கொண்டிருந்தது.
பார்வையைத் திருப்பி டாக்டரை பார்த்தேன். டாக்டர் என்னை பார்த்துவிட்டு அந்த அம்மாவை பார்த்து கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார். அவள் அந்த டிரேயை எடுத்துக்கொண்டு வெளியே உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றாள். டாக்டர் என் கொப்பளங்களை சுத்தம் செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டேன். வெளியே அந்த அம்மாள் சிறிய குழி ஒன்றைத் தோண்டி அந்த புழுக்களை உள்ளே போட்டு மூடிக்கொண்டிருந்தாள்.
புதைக்கிறாளா நட்டுவைக்கிராளா?
கொப்பளங்களை பிளந்து புண்ணாக்கி சுத்தம் செய்து மருந்திட்டு கட்டுப் போட்டார். எனக்கு அப்பாவின் புழுக்கள் ஞாபகம் வந்தது. அவை என்னுடைய புழுக்களை விட சிரியவைகள். ஆனால் உயிர்ப்புடயவைகள். இப்படி செத்தது போல் கிடைக்காது.
அதை நினைக்கும் போது மூச்சு கனத்து வந்தது. சட்டென்று போனை எடுத்து அதன் பக்கங்களை திருப்பி அப்பாவுடைய புழுக்களின் படங்களை எடுத்து டாக்டரின் முகம் முன் நீட்டினேன்.
“டாக்டர்! அப்பாவுக்கும் இந்த பிரச்சனை இருந்திருக்கு. இங்க பாருங்க..”
அவர் கையை சுத்தம் செய்து கொண்டு வந்து போனை வாங்கி உற்றுப் பார்த்தார். “இது லார்வா மாதிரி தெரியலையே.”
நான் போனை வாங்கி மீண்டும் பல பக்கங்களை திருப்பி அப்பாவுடைய பழைய ரிப்போர்ட்டை அவருக்கு காண்பித்தேன்.
அவரும் கொஞ்சம் ஆர்வமாக சற்றுநேரம் போனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இது ஒருவகை கிருமி. உங்க பிரச்சனை வேற. ஏன் இவ்வளவு சீரியஸ் ஆகற வரைக்கும் விட்டீங்க? அவரோட கிருமிகள் முத்தி புழுக்களை உண்டாகிடுசே.”
அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினார். அதில் கடைசி பக்கத்தில் அப்பாவின் புண்ணுகள் அழுகிய நிலையிலும் அதிலிருந்து ஒரு புழு வெளிவரும் நிலையிலும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு போனை என்னிடம் நீட்டியவாறு, “ஏன் இந்த கண்டிஷனுக்கு விட்டீங்க? என்ன ஆச்சு?” என்றார்.
“சார் அவர் ஒரு சாமியார் மாதிரி சார்.”
“ஓ…” என்றவாறு லேசாக சிரித்துவிட்டு, “அவரது வேற உங்களுக்கு வேற. உங்களுக்கு லார்வா; அவருக்கு இன்பெக்சன்.”
“ஆமா சார் அவர் கடைசி வரைக்கும் என் பேச்சைக் கேட்கவே இல்லை. கடைசி நேரத்தில் எப்படியோ அட்மிட் பண்ணினோம். ஆன்டிபயாடிக்ஸ் கூட வேலை செய்யல. குணப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தத்துல கலந்திடுச்சு.”
“ஒன்னும் பயப்பட வேண்டாம். யூ ஆர் ஆல்ரைட்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். வீடு வரும் வரை எல்லாம் புழுக்களே. என் புஜங்களில் இருந்து வெளியே வந்த புழுக்கள் மீண்டும் என் எண்ண அடுக்குகளில் போய் அமர்ந்து இருந்தன. என் தலையில் நீந்தின; மூக்கில் ஊரின; கண்களில் மிதந்தன; தொண்டையில் சுருண்டன; வயிற்றில் இறங்கின. ஐயோ என்னென்னமோ செய்தன. வழி நெடுகிலும் எச்சில் துப்பிக் கொண்டே வந்தேன்.
வீடு வந்து கதவை அடைத்துக்கொண்டேன். ஒரு சின்ன விடுதலை. வீடு அலங்கோலமாக இருந்தது. அம்மா இருக்கும் வரை வீடு அழகாய் இருந்தது. அப்பா இருக்கும் வரை ஏனோ இருந்தது. இப்போது பீடை பிடித்திருக்கிறது.
அவசர அவசரமாக சுத்தம் செய்தேன். பழைய சாமான்களை வெளியே வீசினேன். ஏறக்குறைய அனைத்தையுமே தான். சமையலறையை மூன்று முறை சுத்தம் செய்தேன். கழிவறையை நான்கு முறை. எல்லா அறைகளும் சுத்தம். நக்கி எடுக்காத குறை மட்டும்தான். இனி கிருமிகளும் இல்லை புழுக்களும் இல்லை.
“முருகா….”
இரண்டொரு நாட்களில் எச்சில் துப்புவது நின்றிருந்தது. யோசித்துப் பார்க்கையில் அப்பாவும் இப்படித்தான் துப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பீங்கான் இருந்தது. அவர் துப்புவதை நிறுத்தி விழுங்க ஆரம்பிக்கும்போது முற்றிலுமே புழுவாக மாறியிருந்தார். அவர் புழுவாக மாறியிருந்தது எங்களுக்கோ ஏன் அவருக்கோ வெகுகாலம் தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் அவருக்கு தெரிந்திருக்கக் கூடும் அதனால்தான் என்னவோ பட்டாம்பூச்சியாக மாறி எங்களை விட்டுப் பிரிந்து சென்றார்.
அப்பாவுக்கு வலி சகிப்புத்தன்மை அதிகம். அவரது வலிகளுடன் அவர் சமரசம் செய்து கொண்டவர். அம்மா இருக்கும்போது அவரை மகரிஷி என்று கிண்டல் செய்த ஞாபகம். ஒருமுறை வெளியே சென்றவர் பாதங்கள் அனைத்தும் இரத்தக் கறையுடன் வந்து நின்றார். “எதுத்தாப்புல வந்த வண்டி இடிச்சிருச்சு. சுண்டுவிரல் பிஞ்சு தனியா வந்துருச்சு.” என்று கையில் வைத்திருந்து சுண்டுவிரலை காண்பித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் எனது மன்றாட்டலை சிரித்தவாறே புறந்தள்ளினார். அந்த சுண்டுவிரலை தோட்டத்துத் தென்னை மரத்தடியில் புதைத்து வைத்தார். அவரை அவரே கிள்ளி எடுத்து புதைத்து வைத்தது போல. அப்படித்தான் அவரது முதல் புண் உருவானது. முதல் புழுவும் அப்படித்தான் இருக்கும். இப்போது அந்த தென்னை மரத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அப்பாவாக கற்பனை செய்து கொண்டிருந்தேன். இப்போது அப்பாவின் புழுக்களாக.
“அப்பா!! காயம் பெருசாகிகிட்டே இருக்குது. ஒழுங்கா ஆஸ்பத்திரி வந்து பாருங்க“
“இந்த காயம், என் காயத்தை திங்கும்“
நான் எரிச்சலுடன்,”சும்மா லூசு மாதிரி உளறிட்டு இருக்காதீங்க. அம்மா போனதிலிருந்து இப்படி கொஞ்சம் கொஞ்சமா உங்களையும் அழிசிகிட்டு என் நிம்மதியும் கெடுக்காதீங்க. சாகரதா இருந்தா ஒரேடியாக செத்திடுங்க” என்று சொல்லி முடித்து விட்டுத்தான் அதன் நியாயத்தை உணர்ந்தேன்.
அவர்,”ப்ராப்த கர்மா…..”
“கருமம்பா… அங்க பாருங்கப்பா அந்த காயம் அழுகி புழு புடிச்சு கிடக்குது. அப்புறமா காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. இந்த அவஸ்தை வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.”
“எனக்கு என் புழு, உனக்கு உன்னுது, அவனவனுக்கு அவனது” என்று சொன்னவரை பார்க்க பைத்தியம் போல் இருந்தார்.
நான் சலிப்புடன், “அப்பா! உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக. உங்க பிரெண்ட்ஸ்காக, வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோம். இவ்வளவு ஆஸ்தி இருக்கு, அனுபவிக்கனும்னு ஆசை இல்லையா.”
“நான் வானின் பிரஜை. மண்ணவர்கள் மீது எனக்கு பிடிப்பு இல்லை.”
“அரக்கிருக்கு..” என்று அவர் காதில் படும்படி சொல்லிவிட்டு வெறுப்பாய் வெளியேறினேன்.
அவரது வாக்கு முகூர்த்தம்! இப்போது என் புழுவை நான் கண்டுகொண்டேன்.
சித்ராவின் அழைப்பை துண்டித்து விட்டு வீடு புகுந்தேன். மீண்டும் அவைகள். செய்த சுத்தம் அரை நாட்களுக்குள்ளாகவா காலாவதியாகும். என்னையும் வீட்டையும் மீண்டும் சுத்தம் செய்தேன். களைத்திருந்தேன். டிவியில் தோணி விளாசி கொண்டிருந்தார். படுத்துக் கொண்டிருந்த நான் சோறு உண்ணாமலேயே தூங்கிப்போனேன்.
பின்விடியலில் எழும்போது புழு என்னை முந்தியிருந்தது. ஓடிச் சென்று குளித்து புழு நீக்கம் செய்தேன். ம்ஹீம்ம்!!! முடியவில்லை!!!. புந்தியில் புழு படம் எடுத்து ஆடியது. அப்பாவின் கிறுக்கு எனக்கும் பிடித்துக்கொண்டது.
வீடு முழுதும் துப்பினேன். சமையலறையில் முற்றத்தில் கழிவரையில் ஒரு இடம் விடாமல். தோட்டம் முழுதும் துப்பி அலைந்தேன். அப்பா விரல் நட்ட இடத்தில் துப்பிக் கொண்டே இருந்தேன். என்மேல் துப்பினேன். கால்களில் துப்பினேன் கைகளில் துப்பினேன். கட்டை அவிழ்த்து கொப்புளங்கள் மீது துப்பினேன். கத்தி எடுத்து கொப்பளங்களை கீறினேன். பெரிய விரிசலாக்கி உள்ளே தேடிப்பார்த்தேன். அங்கே புழுக்கள் இல்லை. எப்படி இருக்கும்? அவைகளைத்தான் அந்த ஆஸ்பத்திரியில் நட்டு வைத்துள்ளார்களே. அவைகள் துளிர்விட்டு முளைப்பதர்க்குள் களையெடுத்தாக வேண்டும்.
சித்ரா பலமுறை அழைத்திருந்தாள். அவளிடம் பேச பிடிக்கவில்லை.
விரைந்து சென்று ஆஸ்பத்திரி பூந்தோட்டத்தில் அவைகளை புதைத்த இடத்தில் தேடினேன். காணவில்லை. ஐயோ காணவில்லை. எங்கோ தப்பித்து விட்டது. தப்பித்து மறைந்திருக்கின்றன. மறைந்து உற்பத்தி ஆகின்றன. உற்பத்தியானது என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இனி விடுதலை என்பதே இல்லையா?
வீடு வந்து சேர்ந்தேன். சோர்ந்திருந்தேன். கொஞ்சமேனும் கவன மாற்றம் தேவை. கணினியை கிழப்பி ஆபாச படம் பார்த்தேன். அமெரிக்க வகை ஜப்பானிய வகை கருப்பினம் அடிமைத்தனம். என்னை நானே உசுப்பிவிட்டு அயர்ந்தேன். கொஞ்சம் விடுதலை. எப்படியோ, ஏதோ ஒரு புழு நாசினி.
சித்ராவுடன் அவ்வப்போது பேசினேன். ஆனாலும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். அவள் என்ன யூகித்திருந்தாள் என்று சொல்ல முடியவில்லை.
ஆபாசம் என்னும் நாசினியும் சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டது. திக்கற்று இருந்தேன். சித்ரா வீடு வந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடைந்து அழுதேன். விழப் போனேன். ஓடிவந்து என்னை தாங்கினாள்.
பிதற்றி அழுதேன்.
“வேண்டாம்டா… வேண்டாம்டா… எல்லாம் சரியாகி போய்விடும்” என்று என்னவென்று தெரியாமலேயே சமாதானம் சொன்னாள். என்னை ஏந்திக் கொண்டாள். கைத்தாங்கலாக என்னை உள்ளே அழைத்து சென்று அமரவைத்தாள். என்னை எதுவும் கேட்காமலேயே சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“நான் இருக்கேன் உனக்கு. அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பீல் பண்ணாத. உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காத. நான் இருக்கும் போது நீ அப்படி நினைக்கலாமா? ”
தன் இருப்பை தேவைக்கு அதிகமாகவே பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தாள். அருகில் இன்னும் ஒரு ஜீவன் இருப்பது ஒரு வகையில் சமரசம் தான். அவள் என்னை கவனித்துக் கொண்டாள். நான் அவளை கவனித்தேன். சமைத்தாள்; பரிவோடு பரிமாறினாள்; அருகிலேயே இருந்தாள்; இருந்து புழுக்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு?” என்று கேள்விக்கு நான் அமைதியாக இருந்தேன். “மனசுல இருக்கறத சொல்லு. ஷேர் பண்ணாத்தான ஆகும்.”
“என்னன்னு கேட்டா என்னன்னு சொல்றது? கொஞ்ச நாளாவே…”
“கொஞ்ச நாளாவே?”
“அது இதுன்னு யோசிக்க தோணுது. தலைக்குள்ள ஏதோ ஒன்னு கெடந்து கொடையுது” என்று தலையைக் கீழே போட்டவாறு சொன்னேன்.
“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன்” என்று என் முகவாயை தூக்கிக் கேட்டாள்.
அவளது அக்கறை வழக்கமான காதல் பாசாங்கு காட்டியது. அந்த பாசாங்கின் உந்துவிசையால் நான் அடி ஆழத்திற்கு சென்று அமைதியாக இருந்தேன். அங்கிருந்து தொடங்கினேன்.
“நாம என்ன செய்றோம் எதுக்கு இங்க வந்திருக்கிறோம். இதெல்லாம் என்ன. நம்மளோட இச்சை…. இந்த இச்சை இருக்கே அது தான் அடிப்படை. அது தான் இவ்ளோ இம்சை. புழு மாதிரி பிறக்கிறோம். சாப்பிடுறோம் தூங்குறோம் பெருசாறோம். ஆனா வளர்றோமா? மறுபடியும் ஏன் புழு மாதிரியான வாழ்க்கை. நாம பொழைக்கிறதுக்கு இந்த இச்சை தேவை. ஆனா அதிலேயே தான் சுத்திகிட்டு இருக்கனுமா. இச்சையின் விளைவு இச்சை தானா. விடுதலையே இல்லையா. புழுக்களாக பிறந்தா புழுக்களாக தான் சாகணுமா. அந்த சட்டகத்துக்குள் நம்மை யார் அடைச்சது. அந்த இறுக்கத்தில் இருந்து எப்படி வெளியே வர்றது.” என்று பிதற்றி முடிக்கும்போது சோர்வுற்று இருந்தேன்.
“டேய் என்னடா இதெல்லாம்… ஏன் இப்படி உளர்ர …வேண்டாம்டா… பயமா இருக்கு…”
“இல்ல சித்ரா எதைப் பார்த்தாலும் எனக்கு ஒரு வெறுப்பா இருக்கு. உன்ன பார்த்தாலும் என்ன பார்த்தாலும் நமக்குள்ள இருக்கிற உறவு பார்த்தாலும். உண்மையிலேயே நமக்குள் இருக்கிறது என்ன. இது என்ன உறவு.”
அவள் “காதல்” என்று பரிதாபமாகச் சொன்னாள்.
அவள் பதிலைத் தாண்டி நான் பேசிக்கொண்டு சென்றேன் “நமக்குள் எவ்வளவு சாத்தியம் இருக்கு. ஆனா நாம ஒரு புழு மாதிரி வாழ்ந்திட்டு இருக்கோம்.” அவளிடம் சொல்ல சொல்ல எனக்கு திரண்டு வந்தது. இந்த பாசாங்கு இப்போது எனக்கு ஒரு புழு நாசினி. என் குரல் லேசாக தழுதழுத்தது.
அவள் “அழாதே” என்றாள். என்றவுடன் நான் அழ ஆரம்பித்தேன்.
அவள் என்னை அணைத்தாள். அணைத்துக்கொண்டதால் ஆக்கிரமித்தேன். ஆக்கிரமித்ததால் நெகிழ்ந்தாள். நெகிழ்ந்ததால் எல்லை மீரினேன்.
அவள் கீழ்படிந்தாள் நான் வன்முறை செய்தேன்.
அவளது அங்க திரட்சி எனக்கான இடைக்கால விடுதலை. உறவாடி முடித்தோம். சக்தி விரயம் ஏதோ ஒருவகையில் சமரசம். உறவுக்குப் பின்னான வெறுமை ஒரு ஆசுவாசம். நோக்கங்கள் இல்லை அதனால் தத்தளிப்பு இல்லை. அவஸ்தைக்கு சற்றுநேரம் விடுமுறை. சுற்றி யாரும் இல்லை. நானும் என் புழுக்களும் மட்டுமே. எங்கள் ஆதார விசையின் மேல் அமர்ந்திருந்தோம்.
செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகையால் என் புழுக்களை நேர்கொண்டு சந்தித்தேன். அதன் வடிவம்; இயங்குவிசை; ஆற்றல். அதன் சார்பு; காரணகாரிய சுழற்சி என்று விஸ்வரூப தரிசனமாக என்மேல் கவிழ்ந்தது.
என் புழுக்களை வெளித்தள்ளாது, அதனோடு உள்ளடங்கிய நான்.
சமரசம்
அவைகளும் நானும் மட்டும். ஏதோ நீண்ட நாள் பழகியவர்கள் போல. ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போல. உண்மைதான் அவைகள் என்னோடு பிறந்து என்னோடு வளர்ந்தவைகள். ஒருவிதத்தில் என்னை கட்டுமானித்தவைகள். கட்டுமான கச்சாப் பொருட்கள். என்னுடைய சிறிய வடிவங்கள். அவைகளுடைய சிற்சில சுழற்சிகள் எனது மொத்தமான சுழற்சி. எப்போதும் இருப்பவைகளை சமீபமாகத்தான் கண்டுகொண்டேன். பல நூறு பல ஆயிரம் புழுக்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது வளர்கிறது முழுப் பரிமாணம் கொள்கிறது. பின்பு தேய்ந்து சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகி மற்றொன்றை உருவாக்குகிறது.
நான் கண்கள் மூடி படுத்திருந்தேன். அவைகள் மேலும் அணுக்கமாக தெரிந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் அடிப்படை விசை என்னவோ ஒன்றுதான்.
காமப் புழு உயிர் பெருக்கம். ஆசைப் புழு அனைத்தின் உள்ளடக்கம். வீரப் புழு வீண்வேலை. கருணைப் புழு அரவணைப்பின் பெருஞ்செயல். பயப் புழு உருவப் பாதுகாப்பு. பக்திப் புழு அருவப் பாதுகாப்பு. மேல் அடுக்கின் புழு. அடி ஆழத்தின் புழு. இன்னும் எவ்வளவோ.
நான் அமைதியாக இருப்பதயே உரையாடலின் சமிஞ்ஞையாக எடுத்துக்கொண்டு “என்னாச்சு? ஏன் அமைதியா இருக்க? ஹாப்பியா தான இருக்க?” என்றாள்.
நான் உதடுகளை அழுத்தி சின்னதாக சிரித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டேன்.
சில வினாடிகள் அமைதியாக கடந்தன.
அவள் என்னை நோக்கி திரும்பி, இடது கையை தலையணையில் ஊன்றி பாதி உடலை மேலெழுப்பி என்னை கண்களால் அளந்தாள். இப்போது கேள்விகளே இல்லையென்றாலும் நான் பதில் சொல்லும் இடத்தில் வந்த நின்றேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஓரிரு வினாடிகள் உக்கிரமாக கடந்தன.
“சும்மா ஏதோ டிப்ரஷன்…”
“என்ன டிப்ரஷன்?”
“சரியா சொல்ல தெரியல…”
“ட்ரை பண்ணேன்…” என்றாள்.
……..
“நீ ஹேப்பியா தான இருக்க? உன் சந்தோஷம் எனக்கு முக்கியம். உன் கஷ்டத்தை என் கூட ஷேர் பண்ணிக்கோ.” என்று வளவளத்தாள்.
மெல்லிய கோபப் புழு என் முன் வந்து நின்றது. அவள் பேச்சை துண்டிக்கும் பொருட்டு நான் ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். “நான் சொல்றது உனக்கு புரியுமான்னு தெரியல. கொஞ்ச நாளாகவே எனக்கு இப்படி தோணிட்டு இருக்கு. இதோ இந்த காயம் ஆனதுல இருந்து.”
அவள் ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.
நான் சொற்களால் என்னை நானே கிளறிக் கொண்டேன். “நாம நினைக்கிற மாதிரி இல்லை இந்த டிசைன். இங்க வேற ஒன்னு இருக்கு. நம்மளுக்கு உள்ளேயே வேற சில விஷயங்கள் வாழ்ந்துகிட்டு இருக்கு. நம்ம உடம்புக்கு உள்ள பாக்டீரியாக்கள் இருக்கில்ல; அத மாதிரி. அதுங்களுக்குன்னு லைப் சைக்கிள் இருக்கு. அது சொல்ற மாதிரி தான் நாம நடந்திக்கிறோம். நம்ம வாழ்க்கையும் அமையுது. நாம தப்பிக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து சுழற்றி சுழற்றி வெவ்வேறு சொற்களில் தொடர்பற்று நீட்டிக்கொண்டிருந்தேன். என்னை நானே தோண்டிக் கொண்டிருந்தேன்.
மெல்லிய விசும்பல் ஒலி கேட்டுத்தான் நிறுத்தினேன். அவளை நோக்கி திரும்பினேன். அவள் கண்களை சந்தித்தேன். அதில் துக்கமும் தண்ணிறக்கமும் கருணையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது. அது வெறும் பாசாங்கு தான் என பளிச்சென்று தெரிந்தது. குற்றமற்ற பாசாங்கு. அவளிடமும் என்னிடமும் அனைவரிடமும் இருக்கும் பாசாங்கு. தூய்மையானதும் கூட. இப்பிரம்மாண்டமான உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பாசாங்குகள்.
அப்படியான ஒரு கனமான திரையை அக்கணமே எடுத்து என் மேல் கவிழ்த்துக் கொண்டேன்.
அவளையும் அவளது புழுக்களையும் அணைத்துக் கொண்டேன்.
அவள் விசும்பியவாரே, “ஏன் இப்படி எல்லாம் பேசுற எனக்கு பயமா இருக்கு. நீ ஹாப்பியா இல்லையா? ஏதாவது சைகார்டிஸ்ட்ட பாக்கலாமா? ப்ளீஸ் சொல்லு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”
நான் அவளை அணைத்தவாறே வேண்டாம் என்பது போல் தலை ஆட்டினேன்.
அவள், “ப்ளீஸ் எனக்காக!!!”
நான் வேண்டாம் என்றேன்.
“வேண்டாம்னா? என்ன பண்ணலாம்; நீயே சொல்லு; எதுவா இருந்தாலும் பரவால்ல சொல்லு.”
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”
அதை கேட்ட மாத்திரத்திலேயே அவள் அழுகையும் சிரிப்புமாக ஏதோ பாவித்தாள். “நெஜமாவா?”
“ஆமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்; நான் அதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்; அதுதான் என்னோட மருந்து. நீதான் என்னோட மருந்து. கல்யாணம் பண்ணிக்கலாம். குழந்தை பெத்துக்கலாம். நல்ல முறையா சம்பாதிக்கலாம். சந்தோசமா வாழலாம்.”
அவள் என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவளை அன்பாக விலக்கி அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி அவளை நோக்கினேன். அவளுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. வழிந்த தடத்தில் வழிந்தது. புதிய தடத்தில் வழிந்தது. என்மேல் ஒரு கரிசனை புழு. எனக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. உச்சம் தொட்டு தரை தொட்டு உச்சம் தொட்டது.
அவள்,”ஆமாண்டா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ இப்படி டிப்ரஸ்டா இருக்கக்கூடாது. உனக்கே தெரியும் எனக்கு வீட்ல எவ்ளோ பிரச்சனைன்னு. அப்பா ஒருமாதிரி, சித்தி வேறமாதிரி, தம்பி என்கூட பேசவே மாட்டான். ஆபீஸ்லயும் பாலிடிக்ஸ். நீ மட்டும் தான் எனக்கு நார்மல். நாம சந்தோசமா வாழனும்; புது வாழ்க்கை; சந்தோஷமாக கவலையே இல்லாம; நீயும் நானும் மட்டும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை. நீ பக்கத்துல இருந்தா எல்லாம் ஆட்டோமேட்டிக்கா சால்வ் ஆயிடும்.” என்று தழுதழுத்த குரலில் ஆரம்பித்து தெளிவாக முடித்தாள்.
“ஆமா, எல்லாமே மறந்து ஒரு நார்மல் லைஃப் வாழனும். நல்ல சம்பாதிக்கணும். புது வீடு வாங்கணும். ஒரு கார் வாங்கணும். பூர்வீக சொத்து ரெடி பண்ணனும். பேங்க் பேலன்ஸ் ஏத்தணும். பெருமையா வாழனும். ஆமா! ஆமா! ஆமா! ஆமா சித்ரா.” என்று நான் சொல்லி முடிக்கும்போதே தெரிந்தது நான் மெல்ல மெல்ல சமரசமாகிக் கொண்டிருக்கிறேன் என்று.
ஆனால் சித்ரா அவளது ஞாபக அடுக்குகளில் இருந்த துயரங்களை பட்டியலிட ஆரம்பித்தாள். முதலில் அவள் அப்பாவிலிருந்து ஆரம்பித்து அம்மா வழியாகவும் சித்தி வழியாகவும் வந்து தம்பியில் ஒரு வட்டம் சுற்றி அலுவலகத்தில் நீட்டி நிறுத்தினாள். நான் “ம்” கொட்டியவாறு அவைகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தேன்.
இரவு முழுவதும் நான் எனது புழுக்களுக்கும் அவள் அவளது புழுக்களுக்கும் தீனி சமைத்தோம். நாங்கள் உறவில் திளைத்தோம். பந்தத்தில் கட்டுண்டோம்.
எல்லாம் முடிவானது; நானும் முடிவு செய்திருந்தேன்.
சில நாட்கள் கழித்து பெண் பார்த்தல் என்ற சாங்கிய நிகழ்வு ஒரு சுபதினத்தில் நடந்தது. அப்பா ஸ்தானத்தில் சில மிடுக்குகளையும் அம்மா ஸ்தானத்தில் சில மோஸ்தர்களையும் சித்ரா வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். என் அப்பாவின் சொத்து சித்ரா வீட்டாரை ஏற்கனவே சம்மதமும் சாந்தமும் அடைய வைத்திருந்தது. சிலர் குதூகலிக்க கூட செய்தார்கள். என் வீட்டார்கள் யார் அவள் வீட்டார்கள் யார் என்று பிரித்து அறியமுடியவில்லை. எல்லாம் ஒரே போல் மினுக்கினார்கள். இப்போது நானும் அவர்களில் ஒருவன். அதுவே என் மருந்து. அவர்களுள் ஒருவனாகத்தான் இருந்தேன். கொஞ்ச நாட்களாகத்தான் இந்த நோவு. இனி மீண்டும் அவர்களாகவே ஆகிவிடுவேன். சிறந்த ஏற்பாடு சிறந்த தீர்வு சிறந்த மருந்து.
நான் சுற்றிலும் கவனித்தேன். வசதியானவர்கள் தான் போலும். அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தது. அங்கே மென்மைகள் அலங்காரமாகவும்; அலங்காரங்கள் பகட்டாகவும் இருந்தது. அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கடந்தகால மேன்மைகளையும் நிகழ்கால வசதிகளையும் வருங்கால வாய்ப்புகளையும் முகத்தில் பூசினார் போல் காணப்பட்டார்கள். இனி நானும் இவர்களில் ஒருவன். நினைக்கும் போதே குமட்டியது அடிவயிற்றிலிருந்து அமில நீர் மேல் எழும்பி தொண்டையைத் தொட்டு கீழ் இறங்கியது.
என்னை சுற்றி எங்கும் அவர்களே நிறைந்திருந்தார்கள். கொசகொசவென்று. எனக்கு ஏதோ இருப்பு கொள்ளவில்லை. ஒரு கடும் நெடி அடித்தது. ஏதோ அழுகிய சீழ் பிடித்த காயத்தின் நெடி. இல்லை இல்லை, அதில் மொய்க்கும் புழுக்களின் நெடி. நான் முகம் அகம் சுளித்தேன்.
என்னருகில் பட்டாடை உடுத்திய ரோலக்ஸ் வாட்ச் கட்டிய தங்க காப்பு பூட்டிய ஒரு புழு “ஏங்க!! நல்ல நேரம் முடிய போகுது. சம்பிரதாயத்தை எல்லாம் முதல்ல முடிச்சுடுவோம்.” என்றது.
அதற்கு பச்சை பட்டு சேலை உடுத்திய நகைகளால் போர்த்திய பொருந்தா உதட்டுச் சாயம் பூசிய மற்றொரு புழு “ஒரு ரெண்டு நிமிஷம்; பொண்ணு வந்துவிடும்” என்றது.
என் காதருகே வந்து இன்னொரு புழு, “நல்ல பெரிய இடமாத்தான் புடிச்சிட்ட” என்று சிரித்தவாறு சொன்னது.
சில கிழட்டுப் புழுக்கள் வந்து அமர்ந்தன. சில இளைய புழுக்கள் பேசி மகிழ்ந்தன.
அப்போது வெண் மஞ்சள் சேலை உடுத்திய அலங்காரம் செய்த அழகிய புழு ஒன்று சபையில் வந்து நின்று அனைவருக்கும் நமஸ்கரித்து அமர்ந்தது.
அருகில் ஒரு புழு, “பொண்ணு லட்சணமா இருக்குல்ல” என்று பொதுவாக சொன்னது. சபையிலுள்ள மூத்த புழு ஒன்று அனைவருக்கும் கேட்கும்படியாக கல்யாண நிச்சய வாசகங்களை உரக்கப் படித்துக் காண்பித்தது.
எனக்கு எல்லாம் மங்களாகவே தெரிந்தது மங்களாகவே ஒலித்தது. சபை முழுக்க புழுக்கள். புழுக்களால் ஆன புழுக்கள். ஒவ்வொரு புழுக்களுக்கு ஒவ்வொரு சுழற்சி ஒவ்வொரு விசை.
அப்போது ஒரு புழு, “என்ன மாப்பிள்ளை சந்தோஷமா?” என்றது.
அதற்கு மற்றொரு புழு,”சந்தோசம் இல்லாம என்ன இப்போ..”
“அப்புறம் என்ன கம்முனு இருக்காரு. வாழ்க்கையை நினைத்து கவலைபடுறாரோ…”
“அட கல்யாணம் ஆகப் போவதில்லை! கவலையும் வரும் சந்தோஷமும் வரும்; அதெல்லாம் போகப் போக சமாளிச்சுக்குவாங்க. இல்ல நம்மல பார்த்து தெரிஞ்சு கிட்டும்; என்ன இப்போ.”
எனக்கு இருப்பு கொள்ளாமல் தன்னிலை தாண்டவமாடியது. கடும் நெடி என்னைச் சுற்றி வீசியது. எனக்கு அப்பாவின் நினைவு ஒரு மின்னல் போல் வந்தது.
இனி எனக்கு கல்யாணம் நடக்கும். சந்தோஷங்கள் நிகழும். பொறுப்பு கூடிவரும். வாரிசுகள் பிறக்கும் அல்லது பிறக்காமலும் போகும். ஆனால் கவலை பிறந்தே தீரும். பொருள் ஈட்டுவேன். ஈட்டிய பொருளுக்குத் தக்கவாறு ஆளுமை முடைவேன். ஆணவம் சமைப்பேன். அதிகாரம் செய்வேன். தின்று கொழுப்பேன். இளைத்துச் சாவேன். புழுவாய் வாழ்வேன். ஆனால் பெரிய புழுவாய். எங்கும் ஊர்ந்தே செல்வேன் நெளிந்தே கிடப்பேன்.
என்னைச் சுற்றிலும் பார்த்தேன். நூறு–ஆயிரம் புழுக்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. நூறு–ஆயிரம் வாய்ப்புகள்; நூறு–ஆயிரம் சாத்தியங்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. ஆனால் அத்தனையும் சாத்தியங்கள். புழுக்கள் மண்ணில் உழல்பவை. பட்டான் வானிற்க்கு செல்பவை. அப்பாவைப் போல.
அத்தனையும் வாய்ப்புகள் அத்தனையும் வாய்ப்புகள். பட்டான் வாய்ப்புகள்.
“அட சொல்லுங்க மாப்பிள்ள! கம்முனு இருக்கீங்க!”
எனக்கு உரக்க கத்த தோன்றியது. “நான் வானத்தின் பிரஜை” என்று.