“ஏம் பாய் நிறுத்திட்டிங்க,” என்றான் துரை.
“இன்னும் வண்டி சேந்தப்புறம் மொத்தமாதான் கணவாய தாண்டனும்,” என்றார் ஜலீல்.
“பாய் போன ட்ரிப்பு வந்தப்ப இப்படி எல்லாம் நிக்கலயே,” என்றான் குழப்பமாக.
“இன்னிக்கி அமாசடா. அமாசன்னிக்கி எந்த லாரிகாரனும் ராத்திரில தனியா இந்த கணவாய தாண்டமாட்டான்,” என்றுவிட்டு வண்டியை விட்டு இறங்கி முன்னால் நிற்கும் வண்டிக்காரனிடம் பேசுவதற்கு சென்றார்.
வண்டியின் இன்னொரு டிரைவர் மதியண்ணன் அயோத்தியாபட்டணம் தாண்டியவுடன் பெர்த்தை போட்டு படுத்துவிட்டார். அவர் எழுந்திருப்பதாக தெரியவில்லை.
துரை டார்ச் லைட்டை எடுத்து கொண்டு கீழே இறங்கினான். டயர்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தான்.
சென்னை செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் லாரிகளை சீறிக் கொண்டு கடந்தன. ஒவ்வொரு வண்டி கடக்கும் போதும் துரையின் முகத்தில் காற்றை அள்ளி வீசி அவன் தலையை கலைத்தது. அது அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு, வண்டியின் மேல் சாய்ந்து நின்று அடுத்த வண்டி வந்து தலையை கலைக்க கண்ணை மூடி காத்திருந்தான்.
சற்று நேரத்தில் ஜலீல் வந்தார். “ஏறு,” எனச் சொல்லிக் கொண்டே வண்டிக்குள் ஏறினார்.
துரை வண்டிக்குள் ஏறி கதவோரம் இருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தான். அவர்கள் லாரிக்கு பின்னால் இன்னும் ஒரு பத்து லாரிகள் நின்று கொண்டிருந்தன.
லாரிகள் மெதுவாக கணவாயை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.
“பாய் எல்லா பஸ்ஸிகாரனும் சல்லு சல்லுனு போறான். நம்ம மட்டும் எதுக்கு இப்படி கூட்டம் சேத்துகிட்டு போறம்,” என்றான்
ஜலீல் சிரித்தார். “ பஸ்ல நிறைய ஜனம் இருக்குடா, அப்புறம் என்ன பயம். அதுவுமில்லாம பண்ணெண்டு டன்னு வெயிட்ட வெச்சுகிட்டு வரட்டு வரட்டுனு ஏற முடியாமயா ஏறறான் , அவம்பாட்டுக்கு உட்டடிக்கிறான், காடும் இருட்டும் அவன் கண்ல எங்க படும்,” என்றார்.
“ஏம் பாய் அமாவாசைனா பேய் பிசாசெதாவது திரியுமா இந்த காட்ல,” என்றான்.
ஜலீல் எதுவும் சொல்லவில்லை. துரைக்கு இருப்பு கொள்ளவில்லை.
“இந்த காலத்துல கூட இத்தன பேரு பேய் பிசாசெல்லாம் நம்புறிங்களா?” என்றான்
வண்டிகள் நின்றன. ஜலீல் இன்ஜினை ரன்னிங்கில் வைத்துவிட்டு நியூட்ராலாக்கி ஹாண்ட் பிரேக்கை இழுத்துவிட்டார்.
“அந்த எலுமிச்சம் பழத்த எடுத்துகிட்டு எறங்கு,” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இறங்கி விடுவிடுவென்று நடந்தார். துரை டாஷ் போர்டை திறந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அத்தனை லாரிகளிலும் இன்ஜின் ஆனில் இருந்தது, லோ பீமில் ஹைட் லைட்டுகள் மஞ்சளாய் எரிந்து கொண்டிருந்தது. அந்த இடம் கார்த்திகை தீபத்தன்று அவன் ஊர் தெருக்களில் நிரம்பி இருப்பது போல் மஞ்சள் ஒளி நிரம்பி அழகாக இருந்தது.
லாரி ட்ரைவர்கள் கூட்டமாக காட்டுக்குள் இறங்கிச் சென்று ஒரு சூலம் நட்டு வைத்திருந்த இடத்திற்கு முன் நின்றனர். அனைவர் முதுகும் தங்க முலாம் பூசியது போல ஜொலித்தது. துரை ஜலீலை பின்னால் இருந்தே அடையாளம் கண்டு கொண்டு, அவருகில் சென்று பழத்தை அவரிடம் கொடுத்தான்.
ஜலீல் இடுப்பில் இருந்த பட்டை பெல்டில் இருந்து ஒரு சிறு பேனா கத்தியை எடுத்து பழத்தை இரண்டாக வெட்டினார். சூலத்திற்கு முன்னால் இறைக்கப்பட்டிருந்த மஞ்சள் குங்கும கலவையில் இரண்டு பாதிகளையும் புரட்டி எடுத்து துரையின் கைகளில் கொடுத்தார்.
ஏற்றப்பட்டிருந்த கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு சற்று தள்ளி இருந்த திருநீறை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டார். துரையிடம் இருந்து பழத்தை வாங்கி கொண்டு, “கும்புடு, “ என்றார். துரை கற்பூரத் தீயில் கையை காட்டிவிட்டு, திருநீறை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டான்.
ஜலீல் பழத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “முன்னாடி டயர்ல வையி,” என்றார்.
சூலம் நின்ற இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமலானவுடன் முதல் லாரி கிளம்பியது.
அத்தனை லாரிகளும் மலையை முக்கி முனகி ஏறி , காடு சூழ்ந்த சரிவில் இறங்கின. முக்கால் மணி நேரத்தில் லாரிகள் காட்டை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய நெடுங்சாலையில் இறங்கின.
லாரி ஊத்தங்கரை செல்லும் ரோட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“ஏம் பாய், சாதாரண ரோடு மாதிரிதான இருந்தது இதுக்கு எதுக்கு நின்னு ஒண்ணா வரனும்,” என்றான்.
“அது சாதாரணமான ரோடா தெரியணும்னுதாண்டா தொர,” என்றார் சிரித்தபடி.
“போ பாய். எங்காளுங்க நம்புனா செரி நீங்க கூட எதுக்கு இதையெல்லாம் நம்புறிங்க?”
“ரெண்டு கண்லயும் பாத்தத நம்பாம எப்டி இருக்கிறது,” என்றார்.
“ பேய பாத்தியா பாய்?“
“ பேயா நினைக்காம நம்மெல்லாம் பேய பாக்க முடியாது. ஆனா பேயடிச்சவன பாத்திருக்கேன். அவன அடிக்கும் போது கூட இருந்திருக்கேன் , இதே கணவாய்ல,” என்றார்.
துரைக்கு வேறு கேள்வி ஏதும் எழவில்லை. ஜலீலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “எப்போ பாய்?” என்றான்.
ஜலீல் சொல்ல ஆரம்பித்தார்.
அது ஒரு அஞ்சாறு வருசமுன்னாடி. அப்பவும் கல்கத்தாதான் ரெகுலரு. எங்கூட செகண்ட் ட்ரைவரு மோகன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கொஞ்சம் அரிப்பெடுத்த நாயி. வண்டிய நிறுத்தி சோறு திங்கறானோ இல்லயோ , காலு தரையில பட்டதும் எவளயாவது ஏறணும் அவனுக்கு.
படிக்காசுல பாதி இதுக்கே செலவு பண்ணிருவான்.
ரெண்டு வருசமா நாங்க இதே ரூட்டுலதான் போவோம் ஆனா ஒரு தடவ கூட அமாச அன்னிக்கி க்ராஸ் பண்ணதில்ல, அந்த அமாச நாளு வர வரைக்கும். மோகந்தான் அன்னிக்கு வண்டிய ஓட்டிகிட்டு வந்தான். நான் அயோத்தியாபட்னம் தாண்டுனதும் பெர்த்த போட்டுட்டேன். நல்ல தூக்கம். திடீர்னு தொம்முன்னு ஒரு சத்தம் . நான் ஜெர்க்காகி பெர்த்து சங்கிலில முட்டி எந்திருச்சி ஒக்காந்தேன். வண்டி ஆப் ஆயி நின்னிட்டிருக்கு.
ஹைட் லைட் கூட எரியல. கரி மாதிரி இருட்டு.எங்கைய்யே எங்கண்ணுக்கு தெரியாதளவுக்கு இருட்டு.
நான் பயத்துல “ மோகா” னு கூப்புடுறேன்.
“ஒண்னில்ல பாயி வண்டி ரோட்ல செத்து கெடந்த எது மேலயோ ஏறிரிச்சு, எறங்கி பாக்குறேன்,”னு சொன்னான்.
“எங்க இருக்கோம்,”னு கேட்டேன்.
“கணவா குள்ள” னு சொல்லிட்டு டார்ச்சோட அவனும் கிளீனரும் கீழ எறங்கிப் போனாங்க.
முன்ன பின்ன வண்டி இல்ல இவன் தனியா கணவாகுள்ள ஏறிட்டானு தெரிஞ்சது. எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது.
தனியா எதுக்குடா கணவாக்குள்ள ஏறுனேனு லாரிகுள்ள இருந்தே கத்துனேன்.
அதுனால என்னானு வண்டி முன்னால இருந்து அவனும் கத்துனான்.
பேசி ஒன்னும் ஆக போறதில்லனு நாலு கெட்ட வார்த்தைய வாய்க்குள்ள சொல்லிட்டு அவனுங்க வரட்டும்னு உக்காந்திருந்தேன்.
ரெண்டு பேரும் உள்ள வந்தானுங்க.
“வண்டில எதுவும் அடி படல பாயி, பெரிய கல்லு ஏதாவது ரோட்ல இருந்து டயர் பட்டு காட்டுக்குள்ள உருண்டிருக்கும்னு நினைக்கிறேன்,“னு சொல்லிகிட்டே வண்டியெ ஸ்டார்ட் பண்றான், வண்டி செல்பே எடுக்க மாட்டேங்குது.
கல்லு வொயர்ல ஏதாவது அடிச்சிருக்குமோனான் பாரு, எனக்கு நெஞ்சு அடிக்குற அடில நெஞ்செலும்பே பிச்சிக்கிட்டு வெளிய உழுந்துரும்னு நினைச்சேன்.
மோகா மூடிகிட்டு எந்திரினு அதட்டி அவன எழுப்பிட்டு நான் ட்ரைவர் சீட்ல உக்காந்தேன்.
சாவிய வெளிய எடுத்து திரும்ப உள்ள போட்டு திருப்பிட்டு, ஸ்டார்டர மேல இழுத்தேன். வண்டி செல்ப் எடுத்து ஸ்டார்ட் ஆயிருச்சு.
ஹெட் லைட்டை ஆன் பண்ணிட்டு வண்டிய நகத்த போறேன், மோகன் கியர் ராட புடிச்சிகிட்டு “எந்திரி பாயி இது என் டர்னு,” ன்றான்.
“டேய் வெளயாடாத, கணவாய தாண்டிட்டு வண்டிய உன்கிட்ட குடுத்தர்றேன்,” னு சொன்னேன்.
“ஆமா நான் நேத்து லைசென்ஸ் எடுத்துட்டு இன்னிக்கி லைனுக்கு வந்திருக்கேன் நீ எனக்கு காட் ரோட்ல எப்படி ஓட்றதுனு சொல்லி குடுக்கறதுக்கு, எந்திரி மொதல்ல,”னான்.
அங்க உக்காந்து சண்ட போட்டுட்டு இருந்தா சரி வராதுனு வண்டிய அவன்ட்ட குடுத்தேன்.
வண்டிய எடுத்து ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டியிருப்பான், வண்டி எது மேலயோ ஏறி எறங்கி தொம்முனு சத்தத்தோட நின்னது. இன்ஜின் ஆப் ஆகி, ஹைட் லைட்டும் அதாவே ஆப் ஆயிருச்சு.
இந்த தடவ நானும் கீழ எறங்கிப் பாத்தேன். முன்னாடி ஒன்னுமே இல்ல. வண்டிய சுத்தி சுத்தி பாத்தும் கல்லடியோ, காட்டு மிருகம் அடிபட்ட ரத்த கறையோ ஒன்ணுமே இல்ல.
மோகன் திரும்பவும் வண்டில ஏறி நான் செஞ்ச மாரியே சாவிய எடுத்து போட்டு, ஸ்டார்டர தூக்குனான். வண்டி செல்ப் எடுக்கல.
கோவத்துல ஸ்டேரிங்க போட்டு ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பிச்சிட்டான்.
“நீயா நானானு பாத்திடுரேண்டி இன்னிக்கி உன்ன,”னுஆங்காரமா ஸ்டார்டர புடிச்சி இழுக்க ஆரம்பிச்சிட்டான். அவன சீட்ட விட்டு கிளப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. திரும்பவும் நான் உக்காந்தேன். ஸ்டார்டர இழுத்ததும் செல்ப் எடுத்துருச்சி. நான் பாட்டுக்கு கியர தட்டி வண்டிய கெளப்பிட்டேன். இந்த தடவ ராட்ல கை வெச்சானா ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்னு நினைச்சிருந்தேன், அவன் கைய வெக்கல, பேசாம உட்கார்ந்திட்டிருந்தான். அங்க புடிச்சவன் ஊத்தங்கர வந்துதான் வண்டிய நிறுத்துனேன்.
அன்னிக்கு அவன தூங்க சொல்லிட்டு நானே ஓட்டிட்டு, அடுத்த நாள் அவன்ட்ட வண்டிய கொடுத்தேன். அந்த ட்ரிப்பு முழுக்க எப்பவும் போலதான் இருந்தான். நிக்கற இடத்துல எல்லாம் எவளயாவது புடிச்சி போட்டுகிட்டு. சொல்லப் போனா வழக்கத்தவிட அதிகமா ஆடிக்கிட்டு இருந்தான். ஊருக்கு திரும்பி வர ரெண்டு நாள் இருக்கும் போது லைட்டா காய்ச்சலா இருக்குனு படுத்தான். சேலத்துக்குள்ள நுழையும் போது அவன் ஒடம்பு ஓவர் ஹீட்டான ரேடியேட்டர் மாதிரி கொதிச்சிகிட்டு இருந்துச்சு. அவன ஆஸ்பித்திரில சேத்துட்டுதான் நான் லோடே எறக்க போனேன்.
ஒரு வாரம் ரெஸ்ட் எல்லாம் முடிஞ்சு வண்டியேற வந்தா மோகன காணம். மொதலாளி இன்னும் அவனுக்கு ஒடம்புக்கு முடியல , எயிட்ஸ் ஏதாவுது இருக்குமோனு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே கஷ்டமா போச்சு. வண்டி ஏறனும் , போய் பாக்கவும் முடியாது. சரி ட்ரிப் முடிஞ்சு வந்தப்புறம் போய் பாத்துக்கலாம்னு கெளம்பிட்டேன்.
பதினெட்டு நாள் கழிச்சு நான் வண்டி இறங்குறேன் அப்பவும் ஆஸ்பத்திரிலதான் இருக்கானு சொன்னாங்க. ஆனா எயிட்ஸ் இல்ல, வேற ஏதோ சொல்றாங்க, காச்ச மட்டும் கொறய மாட்டேங்குதுனு சொன்னாங்க.
அன்னிக்கு வெள்ளிக்கிழம. வீட்டுக்கு போயி குளிச்சிட்டு தொழுவ கூட போகாம அவன பாக்க பெரியாஸ்பித்திரிக்கு போனேன். அங்க அவன் இருந்த கோலம்.
ஜலீல் சொல்வதை நிறுத்திவிட்டார், சற்று நேரம் இன்ஜினின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததது. தொண்டையை செருமி கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்
அப்படி எல்லாம் யாருக்குமே வர கூடாதுடா தொர. வெறும் எலும்பா கெடந்தான். வெறும் எலும்பு. அவனால எதையும் சாப்பிட முடியல. சாப்டாலும் வாந்தி வந்திருது இல்ல பேதி ஆகுது.
என்ன பாத்ததும் பாயி பாயினு ஒரே அழுக. எனக்கும் கண்ணுல இருந்து தண்ணி ஊத்திகிட்டே இருக்கு. எல்லாம் செரியாயிரும் மோகா எல்லாம் செரியாயிரும்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தேன். எனக்கு வேற என்ன சொல்றதுன்னும் தெரியல.
அவம் பொண்டாட்டிய டீ வாங்கிட்டு வானு அனுப்பி வெச்சுட்டு என் கிட்ட சொன்னான், “எனக்கு செரியாவாது பாயி, அவ மொத்தமா உறிஞ்சி எடுத்துட்டா,” னு சொல்லிட்டு அழுவறான்.
“எவடா, என்னத்த உறிஞ்சினா,”ன்னேன்.
“அமாச அன்னிக்கி கணவாக்குள்ள. கணவாக்கு முன்னால வண்டி எதுவும் வெயிட்டிங்ல இல்ல, நம்ம வண்டிதான் மொதல் வண்டி. கூட்டம் சேத்த நின்னா ஒரு மணி நேரமாவது ஆவும். எனக்கு ஊத்தங்கர போவனும்னு இருந்தது. சீக்கிரமா போனா நல்ல கிராக்கி ஏதாவது மாட்டும் இல்லாட்டி கெழுடுங்கதான் கெடக்கும். நீ நல்லா தூங்கிட்டிருந்த , அப்படியே வண்டிய கணவாகுள்ள உட்டுட்டேன். கொஞ்ச தூரம் கூட போகல தீடீர்னு ஒண்ணுக்கு முட்டிகிட்டு வந்தது. வண்டிய நிறுத்தி இறங்கி ஒண்ணுக்கடிச்சிட்டு திரும்புனா , ஐட்டங்காரி ஒருத்தி பேக்க மாட்டிகிட்டு போய்ட்டு இருந்தா. விசிலடிச்சி கூப்டேன், பக்கத்துல வந்தா. இந்த காட்ல என்ன பண்றனு கேட்டேன். ஒரு லாரிக்காரன் ஏத்திகிட்டு வந்தான், வேல முடிஞ்சு திரும்ப ரோட்டு பக்கம் போறேன்னா. சின்ன வயசுக்காரி , பாக்க வேற அம்சமா இருந்தா. ஒற போட்டானானு கேட்டேன், போட மாட்டேனு சொல்லிட்டான்னா. கழுவ தண்ணி குடுக்கலாம்னா லாரிக்கு வரணும், நீ எந்திரிச்சா சத்தம் போடுவ, விடவும் மனசில்ல. வாய் வெக்கறியானு கேட்டேன். சரின்னா.
முடிஞ்சதும் காச குடுத்துட்டு வந்துட்டேன். வண்டிய கொஞ்ச தூரம் ஓட்டிக்கிட்டு வந்தப்புறம்தான் கவனிச்சேன் எந்திரிச்சது எறங்கவே இல்ல, நெட்டு குத்தலா நிக்குது. தொடய ரெண்டயும் சேத்து அழுத்தி நசுக்குனா எறங்கும்னு அழுத்துனேன், வண்டி எது மேலயோ ஏறி ஆப் ஆயி போச்சு.
அப்புறம் நீ எந்திரிச்ச. திரும்ப நின்னப்பவும் இதே கததான். சரி வண்டிய குடுத்துட்டு தூங்கி எந்திரிச்சா சரி ஆயிரும்னு படுத்தேன்.
அடுத்த நாளும் அப்படியேதான் இருந்தது. ஆனா அதுக்குள்ள எனக்கு இது ஒரு மாதிரி பழகிருச்சி. ஆந்திரால போனன்ல, அவ கையெடுத்து கும்புட்டு கதறிட்டா. எனக்கு சந்தோசம் தாங்கல. எப்பவும் போறதவிட அதிகமா போனேன். ரெண்டு மூணு தாட்டி போனப்புறம்தான் கவனிச்சேன் எனக்கு கஞ்சி வரவே இல்ல, கணவாய்ல தூக்குனது எறங்கவே இல்ல.
ஒரு பத்து நாளைக்கப்புறம் அங்க நரம்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சி பாயி. வலி கொஞ்சங் கொஞ்சமா அதிகமாயி காய்ச்ச வந்தது. நீ ஆஸ்பத்திரில சேத்தப்புறம் குறையவேயில்ல , அப்படியேதான் இருக்கு”
“இப்ப கீழ எறங்கிருச்சானு,“ கேட்டேன்.
லுங்கிய தூக்கி காட்னான், பனை மரம் மாதிரி நெடுக்கா நின்னுகிட்டிருக்கு. அவன் உடம்புக்கும் அது இருந்த இருப்புக்கும் துளி கூட சம்மந்தமில்லடா தொர.
எனக்கு உடம்பெல்லாம் ஆடி போச்சி.
ரொம்ப வலிச்சா டாக்டரு வந்து அங்க ஊசி போட்டு ரத்தத்த எடுப்பாங்க. அப்ப வடிஞ்சிரும். திரும்ப பெருத்து பெருத்து ரெண்டு நாள்ல இப்ப இருக்க மாரி ஆயிரும். அங்க அடிபட்டா இப்படி ஆவுமாம். ஏதோ வாயில நொலயாத வியாதி பேரு சொன்னாங்க.
இப்படி யாருக்காச்சும் வந்தா நாலைஞ்சு நாள்ல செரியாயிருமாம். எனக்குதான் செரியாவே மாட்டேங்குது . அவங்களும் என்னன்னமோ மாத்திரையும் ஊசியும் போட்றாங்க , குடுக்கும் போது கேக்குது அப்புறம் திரும்ப வந்துருதுன்னான்.
நான் கொஞ்ச நெரம் இருந்துட்டு கெளம்பி வந்துட்டேன். அந்த ரெஸ்ட் வாரம் முழுசும் தெனமும் அவனைப் போய் பாத்தேன். அங்கயே கெடந்தனு வையேன். டாக்டருங்க வந்து வந்து பாத்தாங்க, ஆபரெசன் பண்லாம் அது இதுனு பேசுனாங்க. மோகனுக்கு நாங்க பேசற பேச்செல்லாம் காதுல உழுந்த மாரியே தெரில. அவம் பாட்டுக்கு ஒரு ஒலகத்துல இருந்தான்.
நான் அடுத்த ட்ரிப் போய்ட்டு வண்டி எறங்கும்போது அவன் செத்து நாலு நாள் ஆயிருந்தது.
மீண்டும் சற்று நேரம் லாரி இன்ஜின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல, “அந்த பொம்பள மோகினிப் பிசாசா?” என்றான் துரை
“ஒவ்வொரு அமாச அன்னிக்கும் ஒரு மலைல இருந்து இன்னொரு மலைக்கு இந்த கணவா வழியாதான் பேய்ங்க, காத்து கருப்புங்க போவும்னு சொல்றாங்க. அப்படி போவும் போது அதுங்க மனுசங்கள அடிச்சிற கூடாதுனுதான் வெள்ளகோவில் முனிப்பன அங்க நிறுத்தி வெச்சிருக்காங்க. ஆனா எல்லா பேயும் எல்லா நேரமும் முனிப்பன் பேச்ச கேக்கறதில்ல,“
சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்
“இப்படி க்ராஸ் பண்ணி போற பேயிங்க மனுசனுக்குள்ள ஆட்டம் போட்டுகிட்டு இருக்கற பேய உறிஞ்சு எடுத்துட்டு மனுசன சக்கயா உட்டுட்டு போயிரும்.”
துரை திடுக்கிட்டு கண்கள் விரிய, “அப்ப அவருக்குள்ள ஒரு பேயி இருந்திச்சா?” என்றான்
“பேயில்லாத மனுசன் ஏதுறா தொர. அதுங்கள ஆட உடறவன் அல்லாடி சாவறான். அடக்கி வெச்சிருக்கவன் அமைதியா சாவறான்,” என்றார் ஜலீல்.
துரைக்கு சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. பாயை வண்டியை நிறுத்த சொல்லலாமா என நினைத்தான். ரோட்டோரத்தை பார்த்தான், அமாசை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஊத்தங்கரைகே போய்விடலாம் என்று அடக்கி கொண்டு உட்கார்ந்து விட்டான்.