நான் மீண்டும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டேன். அடையார் கேட்டிலிருந்து ரெண்டாவது ஸ்டாப். அங்கே ரோட்டோரமாக சிறிய கூண்டுக்குள் ஒரு நாகாத்தம்மன் கோயில் இருக்கும்.
குனிந்து ஜன்னலோரமாக பார்த்தேன்.
இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மனி ‘தள்ளிப்போப்பா.. என்னத்த இப்படி பார்க்கிற என்றாள்..’ வெறுப்பாக,
நான் பதறியடித்து பின்னால் வந்தேன் ‘ஸ்டாப்பிங் வந்துடுச்சான்னு பார்த்தேன்..’
வண்டி இரண்டாவது நிறுத்தத்தில் நின்றது. அவசரமாக அனைவரையும் தள்ளிக்கொண்டு இறங்கினேன். நடத்துனர் பார்த்த பார்வையில் ஒரு எரிச்சலும் கோபமும் இருந்தது
இறங்கிய பின்னர்தான் அந்த இடத்தில் கோயில் ஏதுமில்லை என்று தெரிந்தது. அருகில் இருந்த பெட்டிகடையில் விசாரிக்கச் சென்றேன். அவர் ரூபாயை எண்ணிக் கொண்டிருந்தார். நான் அழைத்ததைக் கேட்கவில்லை. எண்ணி முடித்ததும் தலை நிமிர்த்திப் பார்த்தார்..
‘இங்க ரோட்டோரமா ஒரு அம்மன் சந்நிதி மாதிரி சின்னதா இருக்குமே..’
’ஆமா… அதுக்கின்னா இப்ப ‘
’அங்க போகணும்… ’
‘அதுக்கின்னாத்துக்கு சிக்னல்ல வண்டி நிக்கிறப்போ எறங்கின.. ஒழுங்கா போய் ஸ்டாப்பிங்ல எறங்கிருக்கலாமே.. ‘
‘ஸ்டாப்பிங்னு நினைச்சு..’ என்றேன் மெல்ல. இந்த ஊரின் திக்கும் திசையும் புரியவில்லை. அந்த பக்கம் சாப்பாட்டு கடையில என்று கை நீட்டினால் அது இந்தப்பக்கம்ப்பா என்று திருத்துவார்கள். ஆறு மாசம் ஆச்சு இங்க வந்து. அலைந்து திரிந்தும் இது புரியவில்லை
’சரி.. நேரா போ.. ரைட்லயே வரும்..’
அந்த அம்மன் கோயில் இருந்தது. அதை ஒட்டி வலதுபுறம் இருந்த சாலையில் திரும்பி நடக்கத் துவங்கினேன். மேலும் ஒரு பெரும் கட்டம்.. உள்ளே சிறிய சிறிய கட்டங்கள். இதில் நான் எந்தக் கட்டத்தில் நிற்கிறேன். நீண்ட சாலை.. இருபுறமும் குறுக்காக செல்லும் பல சாலைகள்.. நகரம் பெரும் முடிவற்றுப் பெருகியிருந்தது. அவர் சொன்ன ஆவின் பூத்தை எங்கு தேடுவது.. நான் முன்னே நடந்தேன். எனக்கு ஒரு பெரும் ஆற்றாமை எழுந்தது. நான் ஏன் இங்கு வந்துகொண்டிருக்கிறேன்? எந்த நம்பிக்கையில் வருகிறேன்? அவரே இப்ப நேரில் வந்தால் கூட சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்னுதான சொல்லப் போறோம். உண்மையில் நான் அதுக்குத்தான் வருகிறேனா?
அங்கு ஒரு லாண்டிரி கடைக்காரர் கடையை மூடும் தருணத்தில் இருந்தார். சூடமும் எடுத்து வைத்திருந்தார். அந்த தருணத்தில்தான் நான் அங்கு வழி கேட்டு வந்திருந்தேன்.
’அட்ரஸ் தெரியாம என்னத்துக்கு வந்து நிக்கிற இப்ப.. யாரு அவங்க.. சொந்தகாரரா.. என்னா ரோடு.. என்னா லேனு..? ஏதாவது தெரியுமா..?’
‘இல்லீங்க.. ஆவின் பூத்து நேரா போற ரோடுல நீல கலர் மாடி வீடு..’
‘நீல கலரு.. மாடி வீடா… மெட்ராஸில அட்ரஸ் ஏதுமில்லாமலா வந்து தேடுற.. எந்த ஊரு உனக்கு..’
நான் கடையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆசுவாசம் எழுந்தது
ஆதனூர் அழகன் தானங்க இது…
கடைக்காரர் அந்த படத்தைப் பார்த்தார் ‘ஆமாப்பா.. எங்களுக்கு சுவாமிமலைதான். ஆனால் அப்பா காலத்துலயே மெட்ராஸ் வந்தாச்சுப்பா.. நீயும் கும்பகோணமா..’ என்றார்
‘இல்லைங்க.. பக்கத்துல ஒரு கிராமம்தான்.. திருவாரூர் போற வழியில.. ரொம்ப உள்ள போகனூஊம்..’
என்னையறியாமல் என் பேச்சில் இழுவை வந்திருந்தது. வட்டார மொழி.. ஏதோ ஊர்க்காரரிடம் பேசுவது போல..
‘ஆனால் இந்த ஊர்லாம் வரை தெரிஞ்சு வச்சிருக்கியேப்பா.. அங்க சொந்தகாரங்க இருக்காங்களா..’
‘இல்லீங்க.. எங்க ஊருல ஒரு கோவில் இருந்துச்சி.. பெருமாள் கோயிலு.. எங்க வீட்லதான் சாமிக்கு பூ கட்டித் தருவோம்..’
‘அந்த வேலைக்குத்தான் இந்த ஊருக்கும் போனியா..’
‘அது ஒரு ட்ரிப்பு.. எங்க ஊருக்கு ஒருவாட்டி ஒரு பெரிய சாமி ஒருத்தரு வந்தாரு.. மடாதிபதி அவரு.. அவருக்கு ரொம்ப வயசாயிடிச்சி.. அவரால கார்லேந்து கோயிலுக்கு கூட போக முடியல.. அதனால கூட வந்தவங்க சக்கரநாற்காலில வச்சி தள்ளிட்டுப் போனாங்க.. பாதையெல்லாம் நிறைய முள்ளு கல்லு இருந்ததால நாங்களும் அதை விலக்கிவிட இன்னொரு வண்டில கூட போனோம்.. அவங்களுக்கு சுத்து வட்டாரத்துல வழி காட்னது ஊரைச் சுத்திக் காட்டினது எல்லாம் நாந்தான். அப்ப ரெண்டுநாளு இவருதான் அவர் கூட வந்தாரு.. மெட்றாஸ் வீட்டுக்கு வழியும் அப்பதான் சொன்னாரு. அதான் இப்ப சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்..’
அனைத்தும் முடிந்து ஊரை விட்டுக் கிளம்புகையில் அவர் என்னைக் கட்டிப்பிடித்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். எத்தனை லைக்கு பாத்தியா என்று காட்டினார். சென்னை வந்தா என்னை வந்து பாருடா என்றார். உண்மையில் அந்த ஒரு வார்த்தைக்குத்தான் நான் வருகிறேனா
‘ஒ.. சரி சரி.. அப்படித்தான் இந்த ஊருக்குப் போனியா’ என்றார் லாண்டரிகாரர்
‘ஆமாங்க.. அவங்களோடதான் இந்த கோயிலுக்குப் போனேன். அந்த ஊருக்குப் போனப்போ நான் வண்டில இருந்த மத்த பொருளெல்லாம் இறக்கி ஓரமா வச்சுகிட்டிருந்தேன். அப்பத்தான் தீவிட்டிக்கு எண்ணெய் விடற டப்பா உள்ள இருக்கு எடுத்துட்டு வான்னு என்கிட்ட கை காமிச்சாங்க.. நானும் அவசர அவசரமா போயி அத எடுத்து எண்ணெய் இருக்கான்னு பாத்திட்டு திரும்பறப்போ திக்குனு ஆயிடுச்சி…’
‘ஏம்பா.. என்னாச்சு..’
அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது.. ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது.. ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்.. அல்லது பெரும் பத்தாயம்.. ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு.. கார்மேகம்.. அல்லது காரிருள்.. அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு.. சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்.. எல்லாம் அறிந்தவன் போல புன்னகை..
‘என்ன தம்பி?’ என்றார் கடைக்காரர் ஏதும் சொல்லாமல் இருப்பது பார்த்து
‘இல்லீங்க.. என் ஊரு பக்கத்து சுத்து வட்டாரத்துல எல்லாம் வெங்கடேச பெருமாள்.. ராஜ கோபாலன்.. ராமருதான்.. நான் முதல் முதல்ல பார்த்த படுத்துகிட்டு இருந்த சாமி இதுதாங்க… முன்னாடியே காலெண்டர்ல பாத்திருக்கேன் ஆனாலும் பக்கத்துல பாத்தது அதாங்க முத தடவை.. ‘
’அதைப் பார்த்து ரொம்பத்தான் பயந்துட்ட போலிருக்கே..’ என்றபடி அந்த வீட்டுக்கு வழி சொன்னார்
நான் வெட்கமாக சிரித்த படி கிளம்பினேன்..
அதைக்கண்டபின் எனது மனம் அதன் மீதே பிடிகொண்டிருந்தது. வெறுமனே இருக்கையில் எதையாவது கிறுக்கினால்கூட அது இந்த வடிவமாகவே இருந்தது. நான் அப்படி பிரமை பிடித்தது போல இருந்ததைப் பார்த்து வீட்டார் கூட குழம்பியிருக்கின்றனர்
‘என்ன சாமி, இவன் இப்படி பைத்தியம் மாதிரி இருக்கான்.. நம்ம பெருமாள் தான் சாமி அங்கயும் இருக்கு’ என்று எங்கள் கோயில் பட்டரிடம் விசாரித்தார் அப்பா, நான் பூ கொடுக்க கோயிலுக்கு சென்றபோது..
‘இங்க நம்ம கோயில்ல கையால் அருள் பாளித்தபடி என்னை சரணடைன்னு இவன் நின்னுன்டிருக்கான். அங்க கைல எழுத்தாணியும் தலைக்கு மரக்காலும் வச்சு அவன் படுத்துண்டிருக்கான். இந்த கதை திருமங்கை ஆழ்வார் காலத்துல நடந்ததும்பா. திருமங்கை மன்னன் தன்கிட்ட வேலை பார்த்தவங்களுக்கு சம்பளம் போடனும்ங்கிறான். ஆனால் அவன்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. அப்ப வணிகன் வேஷத்துல வந்த பெருமாள் மரக்காபடி வச்சு கூலி அளந்தான்னு அவனைப் பத்தி சொல்றா. இவன் பாதுக்காகிறான். அவன் படியளக்கிறான். மத்தபடிக்கு எல்லா ஸ்வாமியும் ஒண்ணுதான். ஏதோ திடீர்னு பார்த்ததுல அந்த ரூபம் பையன் மனசுல பதிஞ்சிடுத்து போலிருக்கு’ என்றார் எங்கள் ஊர் வெங்கடேச பெருமாள் கோயில் பட்டர்
’எதாவது மந்திரிக்கணுமா.. வேணும்னா தாயத்து கூட ஏதாவது கட்டிறலாம் சாமி..’
‘மந்திரிக்கிறதுக்கு இவனுக்கு என்ன பேயா புடிச்சுண்டுருக்கு. பெருமாள்தான புடிச்சுண்டிருக்கார்.. ஏன் மந்திரிக்கணும்.. இது சின்ன பயம்தான். தானா போயிடும் ‘ என்றார் பட்டர்
நிச்சயமாக அது பயம் இல்லை. அது ஒரு திகைப்பு.. கருமையான மலைப்பாம்பு சுத்தி சுருண்டு கிடக்க அதுல ஒருத்தன் படுத்துக்கொண்டிருப்பதை திடீரெனக் கண்ட தருணம். கடத்தெரு எண்ணெய் கடை செட்டியாரு பெஞ்சுல படுத்துருக்கற மாதிரி சாவகாசமா கிடக்கிறான்.. அதுலயும் அவன் அழகன் வேற. அழகன்னுதான் பேருமே… கால் மாட்டில ரெண்டு பொண்டாட்டிங்க.. அவன் சிரிச்சுகிட்டு தலையில முட்டு கொடுத்துகிட்டு நம்மள பார்க்கிறான். எனக்கு அந்த உணர்விலிருந்து வெளியேற பல நாட்கள் பிடித்தன. இவர் அந்த கோயிலில் வைத்து தான் சென்னை வந்தால் வந்து பார்க்கச் சொன்னார். அந்த திகைப்பு நினைவுக்கு வரும்போதெல்லாம் இவர் நினைவும் வரும்.
அவர் வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.
‘பரவாயில்லையே.. லைட்டா வழி சொன்னத வச்சுகிட்டு மெட்ராஸ்ல அட்ரஸ் கண்டு பிடிச்சுட்டியே..குட் குட்.. இங்க என்ன பண்ற’
‘படிச்சு முடிச்சுட்டேன்.. ஊர்ல இருந்த ஒருத்தரு கூட ரூம்ல தங்கியிருந்தேன்.. வேலை தேடி சுத்தினப்போ இந்த கேபிள் போடற கம்பெனிகாரங்க வேலைக்கு எடுத்தாங்க.. மூணுமாசமாச்சு.. தி.நகர்ல புது பில்டிங்.. நாயுடுஹால் எதிர்ல கட்டறாங்க.. ‘
‘கேபிள் வலிப்பியாடா நீ.. பூ தொடுக்குற கையாச்சே.. கத வுடறியா.. ‘ சிரித்தார் அவர்
‘நான் ஹெல்ப்பர் சார்.. சீனியர் இருக்காங்க… சுந்தர்ராஜன் நாகப்பன்னு ரெண்டு பேரு. அதுலயும் தோண்டுற வேலை தட்டுற வேலைதான் கொடுக்குறாங்க. வேலை கத்துகிட்ட மாதிரியும் இல்ல ‘
‘ம்.. டெய்லி.. ரூம்லேர்ந்து போயிட்டு வறியா.. ரூம் எங்க இருக்கு’
’இல்ல.. ரெண்டுமாசம் முன்னாடி அவரு திரும்ப ஊருக்கே போயிட்டாரு.. ரூம் காலியாயிடுச்சி.. எங்காளுங்க பில்டிங்ல கேபிள் கிடக்குற ரூம்லயே தங்கிக்க சொன்னாங்க.. கேபிளும் காணாம போகாம பாத்துகனும்.. இந்த மாசத்தோட இந்த வேலை முடிஞ்சிடும்… கேபிள் போட்டு வச்ச ரூம்ல தரை போடறாங்க.. அதனால இந்த ரூமையும் காலி பண்ணனும்.. ’
சற்று இடைவெளி விட்டு ‘வேற வேலையும் தேடனும்.. தங்க இடமும் பாக்கனும்.. எதுவும் கிடைக்காட்டி ஊருக்கு போயிட்டு அப்புறம்தான் வரணும்’ என்றேன். அதைச் சொல்வதற்குள் சாப்பாட்டுத் தட்டில் ஆணியால் கீறுவது போல ஒரு கூச்சம் எழுந்து அடங்கியது
‘ஓ சரி சரி..’
ஒரு பெண்மனி உள்ளிருந்து தலையில் அடித்துக் கொண்டு என்ன என்று கேட்டது அவர் பின்னால் இருந்த ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலித்தது. அவர் உள்ளே எட்டிப் பார்த்தபடி ‘காபி சாப்பிடறியாப்பா’ என்றார்
‘வேணாம் சார்.. தண்ணி மட்டும் குடுங்க’
தண்ணீர் கொடுத்ததும், ‘இங்க வந்ததும் உங்க ஞாபகம் வந்தது. தெரிஞ்சவங்க வேற யாரும் இல்லை.. அதான் சும்மா பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன்..’ என்றேன் தயக்கமாக சிரித்தபடி
‘சரிப்பா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்’ என்று எழுந்தார். இந்தா என்றார் கையை நீட்டியபடி. அநிச்சையாக நான் கையை நீட்டவும் அவர் கையை விடுவிக்கவும் அது என் கையில் வந்து விழுந்தது. ஒரு சிறிய கிஃப்ட் பாக்ஸ்
என் நம்பரைக் கொடுத்திருந்திருக்கலாம். அல்லது அவர் நம்பரைக் கேட்டு வாங்கியிருந்திருக்கலாம். சில உதவிகளை நேரில் கேட்பதை விட மெசேஜில் கேட்பது எளிது. பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். ஆனாலும் ஒன்றும் நடந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. அவர் என்னை வீட்டிற்குள்ளே கூட சேர்க்கவில்லை. வாசலோடு பேசி திருப்பி அனுப்பிவிட்டார். நான் என் கையில் இருந்த சிறிய பெட்டியைப் பார்த்தேன். ஏன் அங்கு போய் நின்றேன் என்று கூச்சமாக இருந்தது. அதை ஜன்னல் வழியாக விசிறி அடிக்கலாமா என்றும் தோன்றியது.
மீண்டும் பாண்டி பஜாருக்கு வந்து சேர்ந்தேன். இந்த முறை கண்டக்டர் பதினேழு ரூபாய் வாங்கிக் கொண்டார். போகும்போது ஒன்பது ரூபாய்தான் கொடுத்தேன். வெள்ளை போர்டு என்று நினைத்து ஏறியிருக்கிறேன். வந்த இத்தனை நாளில் அந்த கணக்கும் பிடிபடவே இல்லை. பெட்டிக் கடையில் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி உண்டேன். இன்னும் மூன்று நாட்களில் சம்பளம் வரும்வரை சமாளிக்க வேண்டும். அதன் பின் இங்கு வேறு வேலை இல்லை. வேறு வேலை கிடைக்கவில்லையெனில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஊருக்குப் போக வேண்டியதுதான். ஊரில் போய் என்ன செய்வது. அது பெரும் கேள்வி. அதை இப்பொழுது யோசிக்க வேண்டாம். கட்டிடத்தை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கினேன். நாளை இந்த கேபிள் வேலை முடிந்து விட்டால் அப்புறம் அனைத்தையும் எடுத்து வைக்கும் வேலைதான்.
–X–
கட்டிடத்தை அடைந்த போது இரவு பத்து மணியாகியிருந்தது. என் சீனியர்கள் இருவரையும் கேபிள் வேலை நடந்த இடத்தில் காணவில்லை. நான் தங்கியிருந்த, எங்கள் கேபிள்களை வைத்திருந்த அறையை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு முனகல் சப்தம் கேட்டது..
உள்ளே சென்று பார்த்தபோது அடிக்கடி பஸ்டாண்டில் பார்த்திருந்த அந்தப் பெண் அங்கே சுருண்டு கிடந்த அந்தக் கருமையான தடித்த கேபிள் ரோல் மீது படுத்திருப்பதைக் கண்டேன்.
நான் திடுக்கிட்டவனாய் திரும்ப வந்து வெளியே அமர்ந்து கொண்டேன். ஒரு கணம் என்றாலும் தெளிவாக இருந்தது
அவள் அங்கு ஆடையின்றிப் படுத்திருந்தாள். அவள் கால்மாட்டில் சுந்தர்ராஜன் அமர்ந்திருந்தான். அவள் தலைமாட்டில் கழுத்துக்கு மேலே நாகப்பன் அமர்ந்திருந்தான். அவள் என் டூல்ஸ் பையைத்தான் சுருட்டி தலைமாட்டில் வைத்திருந்தாள். மங்கலாக விளக்கு எரிந்தாலும் முழுக் கருமையாய் அவளே அறைமுவதும் வியாபித்திருந்தாள்.
சிறிது நேரத்தில் ஓசைகள் அடங்கின. வெளியே வந்த நாகப்பன் என்னைக் கண்டு சற்று அதிர்ந்தான். பின் உள்ளே சென்றான். சற்றுக் கழித்து நானும் உள்ளே சென்ற போது, அவள் ஆடை அணிந்து ஓரமாக கால் மடக்கி அமர்ந்து கொண்டிருந்தாள். நாகப்பனும் சுந்தர்ராஜனும் பழங்களையும் முறுக்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் வந்ததோ கண்டதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை
’ஐய.. எத்தன வாட்டி கேக்கறது.. இன்னொரு எரநூறு ரூவா கொடு.. .. நான் என்னா சும்மாவா கேக்கிறேன்’ என்றாள் அவள்
சுந்தர் ராஜன் எழுந்து அவள் அருகில் சென்றான்.. ‘இன்னா உனக்கு.. அதான் சீக்கிரம் வேலைய முஷ்ட்டு அனுப்பறோம்ல.. என்னாத்துக்கு பணம்…’ கன்னத்தில் பளாரென ஒரு அடி வைத்தான். ஆனால் முகத்தில் சிரிப்புதான் இருந்தது
‘இந்தா.. அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத… அட் எ டைமுல ரெண்டுபேரும் பாய்ஞ்சுட்டு.. என்னா ஓவரா பண்றீங்கோ..’ என்றாள். அவள் முகத்திலும் கோபம் இல்லை ஆனால் கடுமை இருந்தது
சுந்தர்ராஜன் என்னைப் பார்த்து திரும்பினான்.. ‘டேய்.. உன் கைலை எவ்ளோடா இருக்கு.. எடுத்து எறிடா இந்த தெவ்டியா மூஞ்சிலா’
’இப்ப எங்கைல ஐம்பது ரூபாய்தான் இருக்கு..’
‘டேய்.. இத வச்சுக்கடி.. மீதி அப்புறமா வாங்க்க’
‘அப்புறம்னா.. வூட்டாண்ட வரவா.. சொல்ட்டுப்போறியா பொண்டாட்டிட்ட..’
‘யேய்.. வோத்தா.. வூட்டாண்ட வர்ற வேலைலாம் வச்சுக்காத.. ஏற்கனவே இப்படி வூட்டுக்கு வந்ததுக்கு நீ என்னா வாங்கிக்கினன்னு நினவு இருக்கா’ சிரித்தபடியே கன்னத்தில் இன்னொரு அடி வைத்தான். அதுவும் பளீரென்று விழுந்தது..
‘சரி வுடு.. அதையும் பாத்துருவோம்.. நீ தான் சூரப்புலியாச்சே..’
‘ரோதனையாப் போச்சுப்பா… டேய்.. அது இன்னாடா கைல பாக்ஸு.’
‘எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தரு கொடுத்தாரு… கிஃப்ட்டு பாக்ஸு’
அதைப் பிரித்தேன். அதில் ஒரு மரக்கால் இருந்தது. நான் அதிர்ந்தவனாய் அதையே பார்த்திருந்தேன்
‘இது மரக்காபடிண்ணா… நெல்லு அளப்பாங்கல்ல அது.. அதையே சின்ன சொப்பு சாமான் மாதிரி வெள்ளில பண்ணி கல்லு பதிச்சிருக்கு.’
‘எவ்ளோ பெறும்..’
‘ஐநூறுன்னு பாக்ஸ்லயே வெல போட்ருக்குண்ணா..’
‘யப்பா சாமி நல்ல நேரத்துல வந்தடா.. அத்த கொடு.. இந்தாடி இத வச்சுக்க.. கேட்டேல்ல ஐநூறு ரூபாயாம்.. நான் நாளைக்கு வந்து மீட்டுக்கிறேன்.. நானே போறவழீல தெருமொனேல டிராப் பண்றேன் வா. ‘
‘ஐநூறுன்னா சொல்ற.. உன்னைய நம்பலாமா’ அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.
அவர்கள் மூவரும் ஏற்கனவே வைத்திருந்த பாட்டில் மதுவை ஊற்றி சோடாவைக் கலக்கிக் குடித்தனர்.
நான் சுந்தர்ராஜனிடம் சென்றேன்..
‘நான் ஊருக்குப் போறேன்ணா.. ’ என்றேன் அந்த பாக்ஸைப் பார்த்தபடி
‘ஏன் என்னாச்சு.. ஏதுனா ந்யூஸா..’ என்றான் அவன் என்னைப் பார்த்து குழப்பமாக
‘இல்ல இந்த கேபிள் வேலை முடிஞ்சிருச்சின்னாங்க.. கம்பெனிகாரங்க…. எனக்கு இங்க ரூமும் இல்ல.. வேலையும் இல்ல.. அதான்..’
‘கேபிளீங் வேலை முடிஞ்சா அதோட போச்சா.. மத்த ஒயரிங்லாம் யாரு போடறது.. காண்டிராக்ட்டு காரங்க மாறினாலும் வொர்க்கருங்க நாமதான் இங்க. என்னா புரியுதா.. தோ பாரு.. எங்களுக்கெல்லாம் வூடு வாசல்னு இருக்கு.. அதனால பில்டிங் வேல முடியறவரை நீ இங்கதான்… நாளேலேர்ந்து ஃப்ஸ்ட் ப்ளோர் ரூம்ல தங்கிக்க.. ஒயர்லாம் வரும்.. பாத்துக்க என்னா? சாவிய வச்சுக்க கைல’
அவள் அவனுடன் பைக்கில் ஏறிச் சென்றாள். போவதற்கு முன் என்னிடம் ‘ நான் இத பத்திரமா வச்சுப்பேன். ஒண்ணியும் கவலைப் படாத. அண்ணன் சொன்னா சொன்னாமாரியே மீட்டுக் கொண்டு வந்து உன்னாண்ட கொடுத்திரும்’ என்றாள்
’அது இனிம எனக்கு தேவையில்லைங்க… நீங்களே வச்சுகங்க!’ என்றேன் நான் சிரித்தபடி
பின் என் அறைக்கு வந்து ஓரமாக படுத்துக் கொண்டேன். மெல்ல கண்களை மூடிக்கொண்டேன். இந்த இடம் பாண்டிபஜார். நான் பஸ்ல போன இடம் கிழக்கே இருக்கு. மேக்க நான் முன்னாடி தங்கியிருந்த ரூமு.. தெக்க இருப்பது என் ஊரு.. வடக்க என்ன இருக்குன்னு பாத்துடனும்.. என்று நினைத்துக் கொண்டேன். எப்பொழுது உறங்கினேன் என்று நினைவில்லை