குருத்தோலை – பிரவின் குமார் சிறுகதை

மதியம் உணவிற்காக ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பார்சல் இன்னமும் பிரிக்கப்படாமல் சுவரோரமாக அதன் இருப்பிடத்திலேயே கிடந்தது. உடலுடன் பிணைந்திருக்கும் உயிரையும் வலிமையும் தக்க வைத்துக்கொள்வதற்காகவேனும் ஆகாரம் எனும் பேரில் தினமும் எதையாவது உண்டு செரிக்க வேண்டிய நிலை. ஆனால் அதிலும் கூட மனம் ஈடுபட மறுக்கிறது. விரக்கிதியுடனே விருப்பமற்ற இவ்வாழ்வை உணவும் உறக்கமுமின்றி நடைபழக பழகிக்கொண்டிருக்கிறேன்.

மின்விசிறி, லைட் என்று எதையும் போடாமல் அந்த இருண்ட அறையுள் என்னை நானே ஒடுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

மதி அண்ணன் முகத்தில் புன்னகை தவழ நின்றிருந்தார். நீண்ட வருடங்கள் கழித்துப் பார்க்கும் நெகிழ்ச்சியும், பரவசமும் அவர் முகத்தில் தெரிந்தது. நானும் செயற்கையான புன்னகையை வரவைத்துக்கொண்டு அவரை வரவேற்றேன்.

“டேய் ஐசக்கு எப்படிடா இருக்க….? நம்ம செல்வா தான் சொன்னான் நீ ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆய்ட்டனு… அவன் தான் உன்வீட்டு அட்ரஸ் கொடுத்தான்”

பழங்களும் பிஸ்கெட் பொட்டலுமுமாக இரண்டு பக்கமும் பிடித்தபடி மதி அண்ணன் நின்றிருந்தார். சுவற்றோரம் இருந்த பாயை விரித்துப்போட்டு அவரை அமரச் செய்தேன்.

“நான் நல்லா இருக்கேன்னா… எதுக்கு இது எல்லாம் தேவ இல்லாம வாங்கிட்டு வந்த?”

“அட என்னடா நீ… ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்க வரேன் வெறும் கையோடவா வருவாங்க…?”

“சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு நான் போய் டீ வாங்கிட்டு வரேன்”

எழ முற்படும் நேரத்தில் சட்டென்று என் மணிக்கட்டை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

“அது எல்லாம் ஒன்னும் வேணாம்டா… வரும்போது தான் சாப்ட்டு வந்தேன்.. வேணும்னா ஒரு தம்மு போடுவோம்”

சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து நீட்டினார் ஆளுக்கொரு சிகரெட் ஒன்றை எடுத்து புகைக்கத் தொடங்கினோம். சிமெண்ட், பெயின்ட் என்று எதைக்கொண்டும் நிறைவு செய்யாமல் பழுதடைந்த செங்கல்களினால் ஆன அறையின் சுவற்றையே சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார். இருவருக்கும் காற்று வரும்படி ஓரமாக இருந்த டேபிள் பேனை எடுத்துப் போட்டேன்.

“ஏன் ஐசக்கு இந்த வீட்ல நீ தனியாவா இருக்க… பாத்ரூம் கூட இல்ல போல”

“ஆமானா நான் தனியா தான் இருக்கேன். சாப்புடுறதுக்கும் தூங்குறதுக்கும் மட்டும் வீடு கிடைச்சா போதும்னு இருந்தேன். இந்த வீடு சரியா இருந்துச்சு… பக்கத்துல இருக்க துணி கடைல வேல செய்யுறதுனால போக வரவும் ஈசியா இருக்கு. பாத்ரூம் எல்லாம் தெரு முனையில இருக்க கார்ப்பரேஷன் டாய்லெட்ல போவேன் ஒன்னும் பிரச்சன இல்ல”

“ம்.. அதுவும் சரி தான். நாம ஜெயில்ல வாழ்ந்த வாழ்க்கைய தானே இங்கேயும் வாழுறோம்… சரி உன் வீட்டுக்கு போய் அம்மா அப்பா கூட இருக்குறத விட்டுட்டு இங்க ஏன்டா தனியா கிடக்குற?”

மதி அண்ணன் சிகரெட்டை ஆழமாக உள்ளீழுத்து புகையை வெளியேற்றினார். சிகரெட் கரைந்துகொண்டிருக்க பதில் ஏதும் சொல்ல இயலாத நிலையில் யோசித்தபடி இருந்தேன். அந்த அறை முழுவதும் சிகரெட்டின் வாசம் பரவத் துடங்கியது.

“உன்ன தான்டா கேட்குறேன்.. உங்க ஏரியாவ விட்டுட்டு ஏன் தி.நகர்ல வீடு எடுத்து தங்கிட்டு இருக்க. சரி அம்மா அப்பாவெல்லாம் போய் பார்த்தியா… இல்லையா?”

“இல்லனாஇத்தன வருஷம் கழிச்சு மறுபடியும் நான் எங்க ஏரியாவுக்கு போக விரும்பல.. இப்போ போன என்னைய பத்தியே எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க. நான் தனியா வீடு எடுத்து தங்கிட்டு இருக்குறது அம்மா அப்பாக்கு தெரியும். அவங்கள யாரையும் என்னைய வந்து பார்க்க வேணாம்னு சொல்லிட்டேன். தங்கச்சி மட்டும் அப்போ அப்போ வந்து பார்த்துட்டு போகும்”

சிகரெட்டை புகைத்து முடித்ததும் அதை அணைப்பதற்கு சுற்றும் முற்றும் இடம் தேடி பார்த்துக்கொண்டிருந்தார். நான் அருகில் இருந்த சிகரெட்டை அணைப்பதற்கு எப்போதும் பயன்படுத்தும் கிண்ணத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன். சிகரெட்டை அணைத்தபடி

“என்னோவோ ஐசக்கு நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் வாழப்போற கொஞ்ச நாளையாவது குடும்பத்தோடு இருக்கணும்னு நினைக்குறோம். ஆனா நீ ஜெயில்ல இருந்த மாதிரி இப்போவும் தனியா இருக்கணும்னு நினைக்குற”

நான் என் வாழ்க்கையின் புராணங்களை விடுத்து அவர் வாழ்வை குறித்து விசாரித்தேன். செய்ய வேண்டிய கடமைகள் பல தவறவிட்டதால் ஊருக்கு செல்ல விருப்பமில்லாமல் பீச்சில் வேற்கடலை விற்று தொழில் செய்வதாக சொன்னார். குறிப்பிட்ட அளவு பணம் கையில் சேர்ந்ததும் ஊருக்கு திரும்பும் திட்டத்தில் இருப்பதாகவும் சொன்னார். சிறையில் கழித்த நாட்களையும், உடன் சிறையில் இருந்த நண்பர்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மதி அண்ணனும் கிளம்பத் தயாரானார். தெருவின் முனை வரை சென்று வழி அனுப்ப அவருடன் நடந்துகொண்டிருந்தேன்.

“ஐசக்கு கேட்க கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா மனசு கேட்கலஅந்த செலஸ்டினா பொண்ண போய் பார்த்தியா?

செலஸ்டினா…! நான் கழித்த சிறையின் சுவறுகளில் அவளது பெயரே நினைவின் பக்கங்கலாக பிரதிபலித்துக்கொண்டிருக்கும். அவள் பெயரை வருடுவதிலும் அதை ஆசை தீர ரசிப்பதிலும் தான் இத்தனை கால சிறை தண்டனையை என்னால் கடக்க முடிந்தது. பல கற்பனைகளோடும் ஏக்கங்கங்களோடும் எப்போதும் என் மனத்திரையில் உரையாடிக்கொண்டிருப்பவள் அவள். அவளது குரல், முகம், சிரிப்பு என்று அனைத்தும் இழந்த என்னால் மீண்டும் அவளை நேரில் சந்திப்பதென்பது இயலாது காரியம். நடையின் வேகம் தாமாக குறைந்ததை உணர்ந்தேன். மதி அண்ணன் பக்கம் திரும்பினேன்.

“இல்லனா செலஸ்டினாவ இன்னும் பார்க்கலஅவளுக்கு கல்யாணம் ஆய்டுச்சாம். ரெண்டு வயசுல ஒரு குழந்த இருக்குறதா என் தங்கச்சி சொன்னா”

ஒருவகையில் என்னிடமிருந்து வந்த பதில் மதி அண்ணன் எதிர்ப்பார்த்ததாகவே இருந்திருக்கக் கூடும். எந்தவித அதிர்ச்சியையும் தன் முகத்தில் வெளிபடுத்திக்கொள்ளாமல் இயல்பாகவே பேசினார்.

“தோ பார் ஐசக்குநாங்களாவது அப்போ அப்போ பரோல்ல வெளிய வந்து இந்த உலகம் எப்படி இருக்குனு பாத்துட்டு போனோம். ஆனா நீ அத கூட விரும்பாம உள்ளேயே இருந்துட்ட. இப்போ வெளில வந்ததுக்கு அப்புறம் இந்த உலகம் உனக்கு புதுசா இருக்கும். வாழ்க்கைய தொலைச்சுட்டதா நினைக்காத. இனிமேல் தான் உன் வாழ்க்கையே தொடங்க போகுதுனு நம்பிக்கையோடு இரு… நீயும் வேறொரு வாழ்க்கைய அமைச்சுக்கடா”

ஆட்டோ ஒன்றை பிடித்து மதி அண்ணன் அங்கிருந்து கிளம்பினார். மதி அண்ணன் சொன்னது போல் இவ்வுலகம் முற்றிலுமாக மாறி இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கென்று சிறை கம்பியைக்கொண்டும், பாதுகாப்பு சுவரைக் கொண்டும் இவ்வுலகத்திலிருந்து இன்னோர் உலகத்தை கட்டமைத்திருந்தார்கள். சிறை காலம் முடிந்து வெளியுலகை பார்க்கும் சந்தர்ப்பத்தின் பொழுது தான் இவ்வளவு வருடங்கள் சிறைவாசியாக உலகத்தோடு பிரிந்து வாழ்ந்ததை உணரமுடிந்தது. சிறையில் இருந்த நாட்களில் வெளியுலகத்தில் வாழும் மனிதர்களை சந்திப்பதற்குக் கூட விருப்பமற்றவனாய் இருந்தேன். செலஸ்டினாவையும், என் குடும்பத்தினரையும் சந்திக்கும் தருணங்களில் மீளவே முடியாத குற்றவுணர்ச்சியால் அவதிக்குள்ளானேன். மிஞ்சும் நாட்களை சிறையிலேயே கழிக்கலாம் என்று நினைத்தாலும் கூட அதற்கான காலத்தை சிறைச்சாலை எனக்கு வழங்கவில்லை. அவசர புத்தியில் அன்று நான் செய்த தவறு தான் இன்று ஒட்டு மொத்த வாழ்க்கையும் திசை திருப்பியது. வீட்டை நோக்கி நடக்கும் நேரத்தில் மனம் பன்னிரெண்டு வருடங்கள் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

பள்ளி முடிந்து வீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களின் வருகை வீதியில் தெரிந்ததும் கடையின் வாசலுக்கு வந்துவிடுவேன். செலஸ்டினாவின் பார்வை எப்பொழுதும் நான் வைத்திருக்கும் சலூன் கடை பக்கம் திருப்பத் தவறியதே இல்லை. கடையின் வாசலில் நின்று பின்கழுத்து சிகையைக் கோதிக்கொண்டு அவளைப் பார்ப்பதையே தினசரி வேலையாகச் செய்துகொண்டிருப்பேன். எங்கள் வீட்டுப் பகுதியில் வசிக்கும் இளசுகள் பலரும் செலஸ்டினாவுடனான தன் காதலை தெரிவிக்க ரொம்பவே மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் நானும் இடம் பெற்றிருந்தேன். என் தங்கை மூலமாக என் காதலை செலஸ்டினாவிடம் தெரிவித்தும் கூட அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருந்தது. ஒரு நாள் நானாகவே துணிந்து அவளைப் பின்தொடர்ந்துச் சென்றேன்.

“செலஸ்டினா நில்லு” ஆள் அரவமற்ற அத்தெருவில் என் காதலை சொல்ல இது தான் தக்க சமயம் என்று அப்போது தோன்றியது. அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை அவளிடம் நீட்டினேன். “இத பிடி செலஸ்டினா” கையில் வைத்திருந்த நோட்டை நெஞ்சோடு சேர்த்து பிடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் கண்களில் பதற்றம் தெரிந்தது “என்ன ஐசக் இது” “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே… எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” சொல்லி முடித்ததும் பின்கழுத்து சிகையைக் கோதிக்கொண்டு தரையையே பார்த்தபடி இருந்தேன்.

அவள் பதிலேதும் சொல்லாமல் நான் கொடுத்த பரிசை வாங்கிச் சென்றாள். நீண்ட நாள் சொல்ல நினைத்து தவித்துக்கொண்டிருந்த காதலை தெரிவித்ததும் அந்நாள் முழுக்க ஊசியை ஆடையாக்கொண்டு அணிவித்ததைப் போன்ற நிலைக்கு ஆளானேன். என் காதலை செலஸ்டினா ஏற்றுக்கொள்வாளாமாட்டாளாஎன்று அந்நாள் முழுக்க மனம் பிதற்றிக்கொண்டே இருந்தது. யோசித்துப் பார்க்கையில் செலஸ்டினா என்னை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை விட என்னை நிராகரிப்பதற்கான காரணங்களே அதிகம் இருந்தது. செலஸ்டினா பல நெருக்கடிக்கு மத்தியில் படித்துக்கொண்டிருந்தாலும் வாழ்வின் இலட்சியங்கள் மீது ஓர் பிடிமானத்தோடு வாழ்பவள். அவளுடன் ஒப்பிடுகையில் பல விஷயங்களில் நான் தரம் தாழ்ந்து தான் இருந்தேன். படிப்பில் ஆர்வமில்லாமல் படிப்பை பாதியிலேயே விடுத்து சலூன் கடை வைத்து பிழைப்பபவன் நான். ஆனால் செலஸ்டினா நன்றாக படிக்கக் கூடியவள் டீச்சராக வர வேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தாள். என் அம்மா வட்டிக்குப் பணம் கொடுத்து பலரிடம் வம்பு தும்பு செய்துக்கொண்டிருப்பாள். ஆனால் செலஸ்டினா அம்மாவோ சமையலறையே கதி என்று சர்ச்சுக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருப்பாள். முக்கியமாக செலஸ்டினா ஊரே மெச்சும் அளவிற்கு அழகு கொண்டவள் நான் பல அடாவடித்தனங்களைச் செய்துகொண்டு பின்கழுத்தில் சிகையை வளர்த்துக்கொண்டு பொறுக்கி எனும் அடையாளத்தோடு ஏரியாவிற்குள் சுற்றிக்கொண்டிருப்பபவன். நிச்சயம் என் காதல் நிராகரிக்கப்படும் என்றே தீர்மானம் கொண்டிருந்தேன். மறு நாள் என் காதலின் முடிவை தெரிந்துகொள்ள அவளை பின்தொடர்ந்துச் சென்றேன். நான் அவளைப் பின்தொடர்வதை தெரிந்துகொண்டதும் தன் நடையின் வேகத்தை குறைத்துக்கொண்டாள். சட்டென்று திரும்பி என்னை நோக்கி வந்தவள் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் தன் கையில் வைத்திருந்த நோட்டின் கடைசிப் பக்கத்தை திருப்பிக் காட்டினாள். “ஐசக்” “செலஸ்டினா” என்று எழுதி இருவரின் பெயரையும் ஓர் ஆர்டின் வடிவத்திற்குள் அடைத்திருந்தாள். “நீ கொடுத்த இங்க பேனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி முடித்ததும் மானின் ஓட்டமாய் என் கண்ணில் இருந்து மறைந்தாள்.

மறுநாள் வேலையிலிருந்து வந்துக்கொண்டிருக்கும் போது எதிரில் கிறிஸ்துவப் பாடல்களை ஒருசேர பாடிக்கொண்டு எதிரில் ஒரு கூட்டம் குருத்தோலை பவனி வந்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். கையில் குருத்தோலை வைத்துக்கொண்டு தலையில் முக்காடு இட்டபடி சிறியவர்களும் பெரியவர்களும் அப்பவனியில் கலந்துகொண்டிருந்தார்கள். அங்கி அணிந்திருந்த பாதிரியார்கள் இருவர் வழி நடத்த, பவனியில் கலந்துகொண்டிருந்தவர்கள் மனதுக்குள் ஜெபிப்பதபடி அவர்களைப் பின்தொடர்ந்துக்கொண்டிருந்தார்கள். குருத்தோலையால் வடிவமைக்கப்பட்ட சிலுவையை ஒவ்வொருவரும் ஏந்திச் சென்றார்கள். விழி அகலாது அந்த குருத்தோலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு பார்த்த குருத்தோலைகள் ஒவ்வொன்றும் மனதினுள் புதைந்திருந்த பழைய நினைவுகளை மீண்டும் கிளரச் செய்தன.

சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், குருத்தோலை பவனி, கிறிஸ்துமஸ், புது வருடம் என்று எந்த ஒரு பண்டிகை வந்தாலும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் அதற்கான வேலைகளை செய்ய பாதிரியார் என்னைத் தான் முதன்மையாக நிறுத்துவார். அன்றும் அப்படித்தான் குருத்தோலை பவனி நடத்த நண்பர்களுடன் சேர்ந்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தேன். சிறுசுகள் ஒரு சிலர் ஓலையில் சிலுவையைச் சரியாக வடிவமைக்கத் தெரியாமல் தினறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓலையால் சிலுவையை வடிவமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அன்றைய குருத்தோலை பவனியில் செலஸ்டினாவும் கலந்துகொள்ள வந்திருந்தாள். கையில் ஓலையை வைத்துக்கொண்டு சிலுவையின் வடிவத்தை அப்பின்னலின் வழியே கொண்டு வர எத்தனித்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என் பக்கம் திரும்புவதும், சிலுவை செய்வதுமாக அவளது பார்வை நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டே இருந்தது. அவளது முயற்சியைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் என் தங்கை அவள் கையில் இருந்த ஓலையை பிடுங்கி வந்து என்னிடம் நீட்டினாள்.

“இந்தாண்ணா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு”

சிறுவர்கள் வரிசையில் நிற்க தங்களுக்கான இடத்தைப் பிடிக்க ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு விரைந்தார்கள். அவள் கரங்களில் தஞ்சம் கொள்ள என் இதயத்தை சிலுவையின் வடிவில் மெல்ல உருமாற்றிக்கொண்டிருந்தேன். அவளது கண்களை ரசிப்பதற்கே எனது கண்கள் ஆர்வம் கொண்டிருந்தது. நான் அவளைப் பார்த்துக்கொண்டே சிலுவையை வடிவமைத்தேன். முடிந்ததும் அவளிடம் நீட்டினேன் “தாங்க்ஸ் ஐசக்” என்று மட்டும் சொல்லி அந்தக் குருத்தோலையை வாங்கிச் சென்றாள்.

குருத்தோலை பவனியின் பொழுது அவளிடம் ரகசியமாகப் பேசுவதற்கு ஓயாது அவள் பெயரை அழைத்துக்கொண்டே இருந்தேன். சிறிதும் என் அழைப்பை பொருட்படுத்தாமல் கண்டும் காணாதது போல் மனதுக்குள் ஜெபித்தபடி குருத்தோலையை இறுக்கப் பிடித்துக்கொண்டு நடப்பதிலேயே அவள் கவனமாக இருந்தாள். என் நடத்தை அவளுக்குள் ஓர் வெறுப்பை கிளம்பி இருக்க வேண்டும். பவனி முடிந்ததும் என் மீதான கோவத்தை வெளிபடுத்த தேவாலயத்தின் பின் அமைந்திருக்கும் சூசையப்பர் சிலை அருகே என்னைச் சந்திப்பதற்காக வந்தாள்.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற… என்ன அவசரம் உனக்கு…?”

“ஸாரி செலஸ்டினா… இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் பிடிக்குது. இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்ட்டேன்”

இன்று கட்டவேண்டிய வட்டி பணத்தை நானாகவே அவளுக்கு நினைவுறுத்தும்படி நேர்ந்துவிட்டது. இன்று கட்ட வேண்டிய வட்டி பணம் நினைவில் தோன்றியதும் தாமாகவே அவளது முகம் இறுகியது. கொஞ்ச நாட்களாக வட்டி பணத்தை வசூலிக்க நான் தான் அவள் வீட்டிற்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அம்மாவிடம் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர்களுக்கான நாட்களை நீடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று நான் தான் போவேன் என்று அம்மா தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். அவள் குடும்பத்தின் நிலை எனக்கு நன்கு தெரியும். இரவு நேரத்தில் அவள் வீட்டில் அரிசி பொங்குவதென்பதே அன்றாட வாழ்வில் நிச்சயிக்கப்படாத ஒன்றாக இருக்கும் பொழுது மாதம் தவறாமல் வட்டி பணத்தைக் கட்டுவதென்பது அவள் குடும்பத்தால் இயலாத காரியம். பெயிண்டர் துறையில் போதிய வருமானம் கிடைக்காமல் அவள் அப்பா அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பிடி கிடைக்கும் பணத்தில் தன் குடியின் தாகத்தை போக்கிக்கொள்ளவே மும்முறமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். தன் குடும்பத்தின் தேவையை நிவர்த்திச் செய்ய திராணியற்று திரிந்துகொண்டிருப்பதைக் குடியிருப்பு பகுதியில் பலரும் அறிந்திருந்தார்கள். செலஸ்டினா என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் மனதுக்குள் யோசித்தபடி அமைதியாக நின்றிருந்தாள். சட்டென்று பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தேன்.

“அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா”

நான் விடாப்படியாக அவள் கையில் திணித்தும் அப்பணத்தை வாங்கிக்கொள்ள செலஸ்டினா மறுத்தாள். நீண்ட நேர சமாதானத்திற்குப் பிறகு தான் அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளவே சம்மதித்தாள். ஒரு கையில் வட்டி பணத்தையும் மறு கையில் குருத்தோலையை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அவளின் நினைவாக அந்தக் குருத்தோலையை பொக்கிஷமாக பத்திரப்படுத்திக்கொள்ளத் தோன்றியது. அவளிடம் வெளிப்படையாக அந்த குருத்தோலையைக் கேட்டதும் புருவங்கள் உயர என்னைப் பார்த்தாள். சிரித்த முகத்துடன் “சரி இந்தா பத்திரமாக வெச்சுக்கோ” என்று சொல்லி என் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். என்னிடம் விடைபெறும் அந்தக் குறிப்பிட்ட இடைவேளையில் அவளது பார்வை என் பக்கம் திரும்பிக்கொண்டே இருந்தது.

வீட்டிற்க்கு வந்ததும் செலஸ்டினா நினைவாக வைத்திருக்கும் அந்த குருத்தோலையை எடுத்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழுந்தது. பச்சை நிற இரும்பு பெட்டியின் அடியில் வைத்திருக்கும் குருத்தோலையை எடுத்துப் பார்த்தேன். பல வருட கால சுயற்சியின் மாற்றத்தால் தன் வெளிர் பச்சை நிறத்தை இழந்து காய்ந்து போன நிலையில் அந்தக் குருத்தோலை காட்சியளித்தது. அதை நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு செலஸ்டினா அருகில் இருப்பது போல் கற்பனை உலகில் அவ்விரவு முழுக்க சஞ்சரித்துக்கொண்டிருந்தேன்.

ஈஸ்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் ஒரு சில நாட்களாக கடையில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போனது. காதலர்களாக திருமணத் தம்பதிகளாக வரும் வாடிக்கையாளர்கள் பலரை சந்திக்கும் நேரங்களில் செலஸ்டினா பற்றிய ஞாபகங்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். செலஸ்டினா இப்போது தன் குடும்பத்துடன் சேர்ந்து ஈஸ்டர் தினம் கொண்டாடுவாளா? தன் கணவன் குழந்தைக்கு அவள் விருப்பபடியே துணிமணிகள் எடுத்துக் கொண்டிருப்பாளா? வருடம் தவறாமல் என் வீட்டுக்கு வந்து கொடுக்கும் ஈஸ்டர் தின பலகாரங்களை இந்த வருடமும் எடுத்து வந்து கொடுப்பாளா? இப்படி ஏதேதோ கேள்விகள் எழ சேலைகளை விவரித்தபடி வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தம்பதியினர் என்னை நெருங்க அவர்கள் கேட்கும் வண்ணங்களிலான புடவைகளை காட்டிக்கொண்டிருந்தேன். தன் கணவனுடன் சேலை குறித்து பேசிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் குரல் வாழ்வில் எப்போதோ கேட்ட குரல் போல் இருந்தது. தோளில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு புடவைகளை தொட்டுத் தடவி அதன் வண்ணங்களையும் ஆக்கங்களையும் கவனித்துக்கொண்டிருந்த அப்பெண்ணையே பார்த்தேன். அவளே தான் செலஸ்டினா…! என்னை உற்று கவனித்த ஒரு சில நிமிடங்களில் அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். ஆச்சிரியத்தில் அவளது உதுடுகள் மெல்ல விரிந்தது. யாருடைய செவிகளுக்கும் கேட்காத ஐசக்…! என்று அவள் உச்சரிக்கும் அக்குரலின் ஓசையை என்னால் மட்டும் கேட்க முடிந்தது.

இதுபோன்ற சந்திப்பு அமைந்திருக்கக் கூடாது தான். ஆனால் அவள் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொண்டு இல்லறவாழ்வை மனநிறைவோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்பதை இச்சந்திப்பின் மூலம் தான் தெரிந்துகொண்டேன். சில சந்திப்புகள் வார்த்தைகளின்றிச் சில நிமிட பார்வைகளைக் கொண்டே அவரவர் வாழ்வின் நிழற்படத்தை கண்முன் விரியச் செய்யும். அவள் வாழ்வின் நிழற்படத்தில் கருப்பு, வெள்ளைகளுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது. அருகில் நின்றிருந்த அவளது கணவனும், அவள் சிறுவயது பிம்பமென தன்னை தோற்றுவித்து தனது சிரிப்பில் ஆலாபனை செய்துகொண்டிருந்த இரண்டு வயது குழந்தையும் வண்ணங்கள் பல கொண்டு அவள் வாழ்வை அனுதினமும் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டேன். பிரிவும் சந்திப்பும் அதனதன் போக்கில் நடப்பவை என்றாலும் நிராதரவாய் வாழ்ந்துகொண்டிருப்பபவர்களுக்கு அதை எதிர்கொள்வதென்பது கங்குகளுக்கு இடையில் சிக்குண்டு அவதிப்படும் நிலை போலானது. என் நிலை நிச்சயம் அவள் உணர்ந்திருப்பாள். அவள் கண்களில் கண்ணீர் மெல்ல உருபெருவதைக் கவனித்தேன்.

“இங்க எதுவுமே செட் ஆகல வேற கடைக்கு போலாம்”

சட்டென்று அவள் தன் கணவனையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அந்த ஜவுளிக்கடையை விட்டு வெளியேறினாள். மீண்டும் ஒரு பார்வை என் பக்கம் திரும்புமா என்னும் ஏக்கத்தோடு அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். இறங்கும் படிகள் ஒவ்வொன்றும் அவள் இருப்பை உள்ளிழுத்துக்கொண்டே போனது. கடைசி நிமிட கையசைவு போல் அவளது பார்வை என் பக்கம் திரும்பியது. ஏக்கம், இயலாமை, குற்றவுணர்ச்சி, பரிதவிப்பு என்று அனைத்தும் உள்ளடக்கிய பார்வை அது. அப்பார்வையில் அவள் உள்ளக் குமறலின் கேள்வியும் அடங்கி இருந்தது “இப்படி ஒரு நிலைமையிலா ஐசக் உன்ன பார்க்கனும்”

அவள் போனதில் இருந்து எந்த ஒரு வாடிக்கையாளரையும் சரிவர உபசரிக்க முடியாமல் அவதிக்குள்ளானேன். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவுகளே அவள் மனதில் ஊசலாடிக்கொண்டிருக்கும். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஏதேதோ வண்ணங்களிலான புடவைகளையும், மாடல்களையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மனம் முழுக்க செலஸ்டினாவை பற்றிய நினைவுகளே சுற்றிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை, அவர்களின் தேர்வை எதையும் கண்டுணர்ந்து நிவர்த்திச் செய்யும் மனநிலையில் நான் இல்லை. மேசையில் விரித்துப் போடப்பட்டிருந்த சேலைகள் ஒவ்வொன்றையும் மடிக்கத் தொடங்கினேன். மனதினுள் புதையுண்டு கிடக்கும் நினைவுகளும் ஒரு சேலையின் வடிவத்தை ஒத்தியது தான். தோன்றும் நேரங்களில் அதைப்பிரித்து அந்நினைவுகளில் பதிந்திருக்கும் சந்திப்புகளை மனத்திரையில் ரசித்தும், அந்நினைவுகளில் கிடைத்த சந்தோஷ தருணங்களை ஸ்பரிசம் கொண்டு அனுபவித்தும், மீண்டும் அந்நினைவுகளாலான ரணங்களையும், துயரங்களையும் மடித்து அலமாரியில் அதன் வைப்பிடத்தில் பொதித்து வைப்பதே நினைவுகள் அவ்வப்போது காலச் சக்கரங்களாக நம் வாழ்வில் செய்துகொண்டிருப்பவை.

கடந்த கால வாழ்வின் சம்பவங்களே மனதை ஓயா அலைகளாக திரும்பத் திரும்ப அதில் சுயலச் செய்துகொண்டிருந்தது. ஜவுளிக்கடைக்குள் பல வடிவங்களைக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடியில் எதேச்சையாக என் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. பாதி வளர்ந்திருந்த முடிகள் நான் மொட்டை அடித்திருந்ததை நினைவு படுத்தின. கன்னத்தசைகள் இரண்டும் உள்ளிழுத்துக்கொண்டு வெயிலில் காய்ந்த மாம்பழத்தோல் போல் சுருங்கி இருந்தது. அங்கங்கே முளைத்திருந்த வெள்ளை மயிர்கள் என் வயதினை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தன. நிமிடத்திற்கு நிமிடம் காரணங்களின்றி கண்ணாடியில் சிகையை ஒழுங்கு படுத்தும் பழக்கம் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி இருந்தது. கொஞ்ச வருடங்களாக என் முகத் தோற்றத்தை நான் மறந்திருந்தேன். கண்ணாடியில் பிரதிபலிப்பது என் முகமே அல்ல என்னும் தீர்மானத்திற்கு கூட என்னால் வர முடிந்தது. ஆனால் செலஸ்டினா என் முகத்தை நன்றாக நினைவு வைத்திருக்கிறாள். முதுமையின் வடுக்கள் தோன்றி இளமையின் அடையாளங்களை இழந்த போதிலும் அவள் என் முகத்தை நன்றாகவே நினைவில் வைத்திருந்தாள்.

சலசலப்பு இல்லாத, மனிதர்களின் குரல் கேட்காத ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும் போல் தோன்றியது. உடன் வேலை செய்யும் நபரிடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் பின்புறம் அமைந்த கடையில் பணிபுரிபவர்கள் மட்டும் உபயோகிக்கும் படிகளில் இறங்கி ஜவுளிக்கடையில் இருந்து வெளியேறினேன். தொண்டை அடைத்துக்கொண்டு கண்களில் நீர் தேங்குவதை உணரமுடிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது வழக்கமாகச் செல்லும் அந்தப் பெட்டி கடைக்கு விரைந்தேன். போதிய இடைவெளி இல்லாமல் முன்னேறிச் செல்ல பைக்குகளும், கார்களும் பிராயத்தனப்பட்டுக்கொண்டிருந்தன. வீதி ஓரத்தில் கடை விரித்திருக்கும் சிறு வியாபாரிகள் போவோர் வருவோரை தன் வியாபாரத்திற்காக அழைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நெரிசலான தெருவை கடந்துபோக நீண்ட நேரம் பிடித்தது. சர்பத்தின் நெளிவை போல் வாகனங்களுக்கு இடையில் புகுந்து அந்தப் பெட்டிக் கடையை வந்தடைந்தேன். நெஞ்சில் இருந்த படபடப்பு என் உடலை விட்டு நீங்கி இருக்கவில்லை. சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்தேன். சரியாக மூன்றாவது முயற்சியில் தான் சிகரெட்டை பற்றவைக்க முடிந்தது. கொஞ்ச வருடங்களாக சிகரெட்டை உள்ளிழுத்து வெளியிடும் புகையின் வாயிலாகத் தான் அழுகையிலிருந்தும், தனிமையிலிருந்தும் என்னை நான் விடுவித்துக்கொள்ள முடிகிறது. விரல் இடுக்குகளில் கரையும் சிகரெட்டின் சாம்பல் மெல்ல என்னை ஆசுவாசப்படுத்தியது.

சரியாக பன்னிரெண்டு வருடங்கள் கழித்து அவள் முகத்தை இன்று தான் பார்த்தேன். உடலில் கொஞ்சம் தசை கூடி இருந்தாலும் சிறுவயதில் பார்த்த அதே முகத்தை இப்பொழுதும் தனதாக்கிக்கொண்டிருந்தாள். மனம் பன்னிரெண்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

செலஸ்டினா என்னை நினைத்து இப்போது மனதுக்குள் எப்படி எல்லாம் புழுங்கிக்கொண்டிருப்பாள்… அன்று கடைசி சந்திப்பின் போது அவளிடம் நான் சொல்லிய அந்த வார்த்தை  “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வராத” இத்தனை வருடங்கள் கழிந்தும் என் வார்த்தைக்கு மதிப்பளித்து கடைப்பிடித்துக்கொண்டிருந்தவளுக்கு இது போன்ற நிலையை நான் உருவாக்கி இருக்கவே கூடாது. அந்த கடைசி சந்திப்பிற்கு பிறகு ஒருபோதும் என்னை சந்திக்க அவள் வந்ததில்லை. அவளுக்குத் தெரியும் ஒருவரின் கண்ணீரை மற்றவர் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அந்த இரண்டடி தூரத்தில் நிகழும் அந்தச் சந்திப்பு ஆறுதலற்ற வார்த்தைகளைத் தேடி மனதிற்குள் தீச்சுடராய் எரிந்துகொண்டிருக்குமென்று. அவ்வப்போது நிகழும் தன் தங்கையின் சந்திப்பின் மூலம் அவள் வாழ்வின் தடம் சீரமைக்கப்பட்டுகொண்டிருப்பதை அறிந்துகொண்டேன்.

எங்கள் இருவரின் காதல் விவகாரம் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. என் குடும்பத்தினரோ, செலஸ்டினாவின் குடும்பத்தினரோ எங்கள் காதலுக்கு தடையாக இல்லை. செலஸ்டினா படிப்பிற்கான செலவையும், அவள் குடுபத்தின் செலவையும் நானே பார்த்துகொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணத் தம்பதிகளாகவே பலரின் பார்வைக்குத் தெரிந்தோம். செலஸ்டினா கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒருமனதாக இரு குடும்பமும் எங்கள் காதல் திருமணத்தை நடத்தி வைக்க ஆசைப்பட்டார்கள்.

செலஸ்டினா கல்லூரிக்கு செல்லும் நேரங்களில் தினமும் இளைஞன் ஒருவன் காதலிக்கும்படி அவளைப் பின்தொடரும் விஷயத்தைச் செலஸ்டினா என்னிடம் சொல்லியதே இல்லை. ஆனாலும் என் நண்பர்கள் மூலமாக அவ்விஷயம் என் காதிற்கு வந்தது. எங்கெங்கோ விசாரித்து எச்சரிக்கும் முனைப்பில் தான் அவனை சந்திக்கச் சென்றேன். வெறும் பேச்சில் தொடங்கிய சண்டை இறுதியில் கைகலப்பில் போய் முடிந்தது. நான் அவனை கொலை செய்யும் அளவிற்குத் துணிவேன் என்று அப்போது நினைத்திருக்கவில்லை. கோவத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு அவனை அடித்ததும் வீட்டிற்குத் திரும்பினேன். அதிகாலை போலீஸ்காரர்கள் என்னை தரதரவென்று தெருவில் அழைத்துச் செல்லும் போது தான் அவன் இறந்து போன விஷயமே எனக்குத் தெரியவந்தது. போலிஸ் ஜீப்பில் ஏற்றும் பொழுது கூட்டத்தோடு கூட்டமாக கலங்கிய நிலையில் நின்றுகொண்டிருந்த செலஸ்டினாவை பார்த்தேன். அப்போதைய நிலையில் வெறும் பார்வையைக் கொண்டு மட்டுமே என்னால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. என் அம்மாவும் தங்கையும் ஜீப்பை தொடர்ந்து என் பின்னே ஓடிக்கொண்டு வந்தார்கள்.

அதற்குப்பிறகான நாட்களில் விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் செலஸ்டினா அலைந்துகொண்டிருந்தாள். நான் சொந்தமாக வைத்திருந்த சலூன் கடையை விற்று வழக்கை நடத்தியும் கூட என்னால் அவ்வளவு சுலபத்தில் வெளிவரமுடியவில்லை. சிறையின் இருளே நிரந்தரமென ஆகிப்போனது. நான் வாழ்வின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருந்தேன். தோன்றும் நேரங்களில் மனு போட்டு என்னைப் பார்க்க வருவதையே செலஸ்டினா தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தாள். ஒவ்வொரு சந்திப்பின் போதும் வார்த்தைகளின்றி அவள் கண்களின் மொழியால் காத்திருத்தலின் ஏக்கத்தை, பிரிவின் வலியை, இயலாமையின் தவிப்பை அனைத்தையும் அவள் கண்ணீரைக்கொண்டே எனக்கு உணர்த்திவிட்டுச் சென்றாள். என்னால் அவளின் படிப்பு பாதிக்கப்பட்டிருந்தது. அவள் வாழ்வின் பக்கத்திலிருந்து என்னுடைய அத்தியாத்தை முடித்துக்கொள்ள அப்போதே முடிவெடுத்தேன். கடைசிச் சந்திப்பின் போது “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்னை பார்க்க வராத” என்று சொல்லி அவளிடமிருந்து என்னைப் பிரித்துக்கொண்டேன்.

முழுவதும் கரைந்து விரல் இடுக்ககளில் அடைப்பட்டிருந்த சிகரெட்டின் சூட்டை உணர்ந்ததும் நிகழ் உலகிற்கு திரும்பினேன். மீண்டும் ஜவுளிக்கடைக்கு செல்ல விருப்பமில்லாமல் என் அறைக்கு திரும்பினேன். அறைக் கதவை திறந்ததும் இருளின் வாசலை வந்தடைந்ததைப் போல் உணர்ந்தேன். உடலும் மனமும் சோர்வுற்றிருந்தது. இருளின் இருப்பிடத்தைத் தேடி ஓரமாக படுத்துக்கொண்டேன்.

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. இரவு மணி ஒன்றை கடந்திருக்கும் போது கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. இந்நேரத்தில் எவர் என்னைச் சந்திக்கக் கூடும் என்று யூகிக்க முடியாதவனாய் கதவை திறந்தேன். என் தங்கை நின்றிருந்தாள். எதற்கு இந்த நேரத்தில் வந்தாய் என்று கேட்டதற்கு “ஒரு நிமிஷம் வா உன்கிட்ட பேசணும்” என்று படி இறங்கி கீழே அழைத்துச் சென்றாள்.

“அண்ணா சாயங்காலம் செலஸ்டினா அக்கா நீ வேல செய்யுற கடைல உன்ன பார்த்தாங்களாம். வீட்டுக்கு வந்து ஒரே அழ. உன்ன பாக்கணும்னு சொல்லுச்சு அதான்…”

அவள் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள், வியாபாரம் முடிந்து தார் பாயைக்கொண்டு போர்த்தப்பட்ட தள்ளு வண்டிக்கருகில் செலஸ்டினா நின்றிருப்பதைப் பார்த்தேன். மதியம் கடையில் பார்த்த அதே நீல நிற புடவையில் இருந்தாள். ஆள் அரவமற்ற அவ்விரவில் தெரு விளக்கின் துணைக்கொண்டு நாங்கள் மூவரும் நின்றிருந்தோம். என்னைப் பார்த்ததும் செலஸ்டினா சட்டென்று ஓடி வந்து என்னை அரவணைத்துக்கொண்டாள். “என்னை மனிச்சுடுடா ஐசக்…” என் மார்பின் மீது முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதாள். என் மார்பில் படிந்த அவள் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தேன். பன்னிரெண்டு வருடங்களாக விலகி இருந்த அவள் உடலின் ஸ்பரிசம் இப்போது உணர்கையில் மனதை ஏதோ கனக்கச் செய்தது. என் கரங்களும் அவளை அரவணைத்துக்கொள்ளத் துடித்தது. அவளுடன் பார்த்த அந்த மழலையின் முகமும், அவள் கணவனின் முகமும் சட்டென்று நினைவில் தோன்றியது. அவள் தாயும், மனைவியும் ஆனவள் என்பதை உணர்ந்தேன். தொண்டை அடைத்துக்கொண்டு கண்கள் இரண்டிலும் கண்ணீர் தேங்கி நின்றன. என்னை அரவணைத்துக்கொண்டு அழுகொண்டிருந்தவளை இரு பக்கமும் தோள்களைப் பிடித்து நிறுத்தினேன்.

“சென்னைல தானே இருக்க. ஏன் ஜெயில்ல இருந்து வந்ததும் என்னைய பார்க்க வரல.. என் முகத்தையே முழிக்க கூடாதுனு இருந்துடியா ஐசக் சொல்லு…”

இனி எப்போதும் அழுவதற்கு கண்களில் நீர் இல்லை எனும் அளவிற்கு தேம்பி தேம்பி அழுதாள். என்னால் அவள் கண்ணீருக்கு ஆறுதல் வார்த்தை சொல்ல இயலவில்லை.

“என்னய மறுபடியும் சந்திச்சா நீ எவ்ளோ கஷ்டப் படுவேணு எனக்கு தெரியும் செலஸ்டினாஎல்லாத்தையும் காலம் தான் முடிவு பண்ணுது. யாரும் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்ல. நான் அன்னைக்கு சொன்னத தான் இன்னைக்கும் சொல்லுறேன்… என்னைய உன்னால நினைக்காம இருக்க முடியாது ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும்… இனிமேல் என்னை பார்க்க வராத”

சொல்லி முடித்ததும் சட்டென்று படியேறி என் அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். அவள் என் உடலை விட்டு விலகிய பின்பும் கூட இன்னும் என்னை தழுவிக்கொண்டிருப்பது போல் இருந்தது. மீண்டும் அந்த பச்சை நிறப் பெட்டியை திறந்தேன். மேலிருந்த என் சட்டை, பனியன், பேண்ட் என்று அனைத்தையும் திசை எங்கும் தூக்கி எறிந்தேன். துணிகளுக்கு அடியில் அவள் நினைவாக வைத்திருந்த குருத்தோலை கையில் சிக்கியது.

அதை எடுத்துப் பார்த்த அடுத்தக்கணம் அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. கால்கள் இரண்டையும் மடக்கிக்கொண்டு, வெறும் தரையில் படுத்தபடி “என்னைய மன்னிச்சுடு செலஸ்டினா” என்று சொல்லி கதறி அழுதேன். இறுக்கமாகப் பிடித்திருந்த அந்தக் குருத்தோலை என் இரு கரங்களாலேயே நொருங்கிக்கொண்டிருந்தது. இனி அந்த குருத்தோலை உயிர்தெழப்போவதில்லை.

பூட்டிய கதவின் கீழ் வெளிப்புறத்தில் அமர்ந்துகொண்டு அழும் இன்னொரு குரல் கேட்டது. அது செலஸ்டினாவின் குரல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.