“ராமகிருஷ்ணன் வீடு இங்க பக்கத்தில்தானே இருக்கிறது ” என என் கணவர் கேட்டவுடனேயே மனதில் திடுக்கென்றது. அவன் திருமணத்திற்கு முன் என்னைக் காதலித்தவன். பேச்சுவாக்கில் சொன்னதை மறந்திருப்பாரென நினைத்தேன். பெயரைக்கூட இந்த அளவிற்கு ஞாபகம் வைத்திருந்தது அச்சத்தை உண்டாக்கியது. “இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவரையும் பார்த்துவிட்டு போய்விடுவோம் ” என அவர் கூறியபோது முகத்தைப் பார்த்தேன். அதில் வஞ்சம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் , ஆண்களின் மனம் இம்மாதிரி விஷயத்தில் எப்படிச் செயல்படுமென யாரால் கணிக்கவியலும்.
திருமணம் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிறந்து ஆறு மாதமான பையனுடன் டவர் பார்க்கில் அமர்ந்து அந்தியில் மரத்தையடைந்த பறவைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் கேட்டார், “காதலென்றால் என்னவென்று தெரியுமா ”
“எனக்குத் தெரியாது”
“நல்லவேளை , நிம்மதியா இருக்க”
என்றவர் சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு ” எல்லோரும் காதல்னா மகிழ்ச்சி, இன்பம்னு சொல்றாங்க, இதைவிட அதில் வேதனைதான் அதிகம்னு யாருமே சொல்றதில்லை, ஏன்னா, உணராதவங்களால அதைப் புரிந்துகொள்ள முடியாது” எனக் கூறி சூரியன் மறைந்து சாம்பல் பூத்த தனல்போலத் தெரிந்த வானத்தை அமைதியாக சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவராகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.
” என் மச்சான் போன்ல பேசினான். கலா பத்தி ஏதுவும் என்கிட்ட சொல்லாதடான்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான். சரி, அவனும் தன் மனசுல இருக்கிறத யார்கிட்டதான் சொல்லுவான் ” என்று பொதுவாகப் பேசியபடி அமைதியானார். கலா இவரின் ஒன்றுவிட்ட அத்தை பெண். ஜாதகம் சரியில்லையென திருமணம் செய்துவைக்க கலாவின் அப்பா மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்துவிட்டாராம். சில நிமிடங்களுக்குப் பிறகு தன் விழிகளைத் துடைத்தபடி “நீ யாரையும் காதலிக்கலை. ஆனா, உன்னை காதலிக்கிறேன்னு யாராவது சுத்தியிருக்காங்களா” எனக் கேட்டார். அப்படியொரு மென்மையாக கேட்டபோது சொல்லலாமா என யோசிக்கத் தோன்றாமல் “ஆமா, ஒருத்தர் இருந்தார். ராமக்கிருஷ்ணண்னு ” எனக் கூறிவிட்டேன். சற்று கூர்ந்து நோக்கி “உங்க ஊர்க்காரரா ” என்றார்
“இல்ல, எங்க பெரியம்மா ஊர். பள்ளிக்கூட விடுமுறைக்கெல்லாம் அங்கதான் போவேன். பெரியப்பாவோட தூரத்து சொந்தம் அவரு. நான் அங்கே போறப்பல்லாம் ஏதாவது வேலையா வந்துட்டுப் போவாரு. எங்கிட்ட ஏதும் பேசியதில்லை. ஆனா பெரியம்மா பையன்கிட்ட சொல்லியிருக்காரு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா. தம்பிதான் என்கிட்ட சொன்னான். நான் சொல்லிட்டேன், எதுவாயிருந்தாலும் எங்கப்பாக்கிட்ட பேசிக்கட்டுமின்னு. அவருவந்து அப்பாக்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே நீங்க வந்துட்டீங்க”.
என்று சொல்லிமுடித்தேன். இப்படி லாவகமாக பேசியதற்கு என்னையே மெச்சிக்கொண்டேன், அப்போதும் இந்த நினைவுவந்த வேறு சில தருணங்களிலும்.
“அதற்குப்பிறகு அவரைப் பார்க்கவில்லையா?”
“இல்லை, நாம பெரியம்மா வீட்டிற்கு விருந்துக்காக போனப்ப, தம்பிதான் சொன்னான்.. கல்யாணத்துக்கு வந்தாராம், பின்னால நின்னு பார்த்துட்டு சாப்பிடாமலே கிளம்பிட்டார்னு”.
சற்றுநேரம் யோசித்தவர் கிளம்பலாம் என எழுந்தார்.
அதன்பின் இந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசியதேயில்லை. ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் கிளம்பி வந்து அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள , பெரியம்மாவையும் பார்த்துவிட்டுப் போகலாம் என இங்கு வந்தோம். பார்த்து நலம் விசாரித்து விட்டு கிளம்பும்போதுதான் இராமகிருஷ்ணன் வீட்டிற்கு போகலாம் எனக்கேட்டார்.
வீட்டிலிருந்த தம்பி ரமேஷைக் கூப்பிட்டபோது சற்று குழப்பத்துடன்தான் கிளம்பினான். என் பையனை தம்பி தூக்கிக்கொள்ள ஒருவயது மகளை என் கணவர் தூக்கிக் கொள்ள நடக்க ஆரம்பித்தோம். “ரமேஷ், இப்ப அவர் வீட்டில் இருப்பாருல்ல” என தம்பியிடம் கேட்டார்.
“இன்னைக்கி வேலையேதும் இல்ல, வீட்டில்தான் இருப்பார்” என்றான்.
“என்ன வேலை பார்க்கிறார்”
“அவங்க தாத்தாவழி நிலம் இருக்குது. அதுக்கு வேலிபோட்டு, போர்வெல் மோட்டார் போட்டு பாதி வாழையும் பாதி நெல்லும் போட்டிருக்கார்”.
நான் தெருவோரங்களில் இருந்த ஆடாதொடை செடிகளையும் கள்ளிச் செடிகளையும் பார்த்தபடி நடந்தேன்.
“”இந்த வீடுதான்” என ரமேஷ் காட்டிய இரும்பு கிரில் கதவருகே நின்றோம். நான்கடி உயர சுற்றுச் சுவர் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ரமேஷ் திண்ணையோடிருந்த போர்டிக்கோவைக் கடந்து சென்று வீட்டின் கதவைத் தட்டினான். நாங்களும் உடன் சென்றோம். கதவைத் திறந்த ராமக்கிருஷ்ணன் சற்று பெருத்திருந்தார் . ரமேஷைப் பார்த்ததும் புன்னகைத்தவர் உடனிருந்த என் கணவரையும் தொடர்ந்து என்னையும் பார்த்தவுடன் திகைத்தார். “அத்தான்தான் உங்களைப் பார்க்கனும்னு சொன்னார். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என ரமேஷ் சொன்னதும் திகைப்பு நீங்காமலேயே ” வாங்க, உள்ளே வாங்க ” என்றபடி இன்னொரு கதவையும் திறந்தபடி உள்ளே நுழைத்தார்.
உள்ளே ஒரு சோபாவும் மூன்று நாற்காலிகளும் இருந்தன. அவர் “உட்காருங்க” எனக் கூறவும் ரமேஷும் என் கணவரும் சோபாவில் அமர, நான் நாற்காலியில் அமர்ந்தேன். “அக்கா எங்கே அத்தான் ” என ரமேஷ் கேட்கும்போதே பின்பக்கமிருந்து தன் சிறு மகளை நடக்க வைத்தபடி வந்த ஒல்லியான பெண் “வாங்க.. வாங்க” என புன்னகைத்தாள் .தன் கணவன் முகத்தைப் பார்த்தவுடன் “இதோ வருகிறேன்” என்று அடுப்படிக்குள் நுழைந்தாள் .
இராமக்கிருஷ்ணன் என்ன பேசுவதென்று தோன்றாமல் நிற்க, ரமேஷ்தான் “இவர்தான் எங்க அத்தான். சென்னை அம்பத்தூர்ல ரெஜிஸ்டர் ஆபீசுல வேலை பார்க்கிறாரு. அம்மாவப் பார்க்கிறதுக்காக வந்தாங்க. கிளம்பும்போது உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க. அதனாலதான் கூட்டிக் கொண்டு வந்தேன்” என்றான். என் கணவர் அவரை நோக்கி புன்னகைக்க அவரும் முறுவலித்தார். இவர் பேச எத்தனிக்கும்போது அடுப்படியிலிருந்து அந்தப் பெண் காபி தம்ளர்களுடன் வந்தாள். பேசும் முயற்சியை கைவிட்டு காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். நான் காபியை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு அவர்களின் பெண்ணை கையில் பிடித்தேன். அவள் நெளிந்தபடியே அருகில் வந்தாள். அவள் பெயரைக் கேட்காமல் அவள் அம்மாவின் பெயர் என்ன என்று கேட்டேன். “ராமலட்சுமி” என இழுத்துக் கூறியது. என் கணவர் எழுந்து “பேசிகிட்டு இருங்க, இப்போ வந்துவிடுகிறோம்” எனப் பொதுவாகக் கூறிவிட்டு ராமக்கிருஷ்ணனை பார்வையாலும் கையசைவாலும் சற்று வாருங்கள் என அழைத்தபடி வீட்டின் பின்பக்கம் நகர அவரும் பின் தொடர்ந்தார்.
என் பிள்ளைகளுடன் ரமேஷ் விளையாடிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்த ராமலட்சுமியிடம் அவளின் ஊர், தந்தை ,உடன் பிறந்தவர்கள் பற்றி பொதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் கூறிய எதுவும் மனதிற்குள் செல்லவில்லை. பின்னால் சென்றவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள், அல்லது பேச்சாகத்தான் இருக்குமா , தம்பியை போய் பார்க்கச் சொல்லலாமா என மனம் படபடத்தது. கணவர் பெரிதாகக் கோபப்பட்டு பார்த்ததில்லை என்றாலும் ராமக்கிருஷ்ணனின் குணம் எனக்குத் தெரியாததால் ஏதாவது சத்தம் கேட்கிறதாவென கூர்ந்திருந்தேன்.
ஐந்து நிமிடத்திற்குப்பின் என் கணவர் முன்னால் வர தொடர்ந்து அவர் வந்தார். வந்தபோது பார்த்ததைவிட சற்று முகம் தெளிவடைந்திருந்தது போலத் தோன்றியது . என் கணவரின் முகமும் மலர்ந்திருந்தது எனக்கு ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் இருந்தது. வரும் போதே கிளம்பலாம் என சைகை காட்டியதால் நான் எழுந்தேன். ரமேஷும் பிள்ளைகளுடன் எழ, நான் மகனை கையில் பிடித்துக்கொண்டு “ஆன்ட்டிக்கு பாய் சொல்லுங்க” எனக் கூறியதும் பிள்ளைகள் டாட்டா காட்டின. வருகிறோம் என பொதுவாக நானும் கணவருடன் இணைந்து சொல்ல அவர்கள் தலையாட்டினார்கள்.
ரமேஷ் பேருந்து நிறுத்தம் வரை உடன் வந்து, பேருந்தில் ஏற்றிவிட்டுச் சென்றான். அறுவடைக்குக் காத்திருந்த பழுத்த நெற்கதிர்களில் கவனம் பதித்திருந்தவரிடம் “அவர்கிட்ட என்னங்க பேசினீங்க, ஒன்னுமே சொல்லாம திடீர்னு பார்க்கனும் பேசனும்னு சொன்னதும் என்னால மறுக்கவும் முடியல, ஏன்னு கேட்கவும் முடியல. இப்பவாவது சொல்லுங்க ” என கெஞ்சுவது போலக் கேட்டேன்.
“நீ என்ன நினைக்கிற ”
“என்னால ஒன்னும் நினைக்க முடியல. நீங்களே சொல்லுங்க”
“அதுசரி, உனக்கெப்படி தெரியும். உண்மையா காதலிச்சவங்களுக்குத்தான் தெரியும்” எனக் கூறிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். கண்கள் கலங்குவது போலத் தெரிந்தது.
“ஒவ்வொருத்தனும் ஒரு பொண்ண விரும்பறான்னா அந்தப் பொண்ண மற்ற யாரையும் விட தன்னாலதான் மகிழ்ச்சியா வச்சுக்க முடியும்னு நம்பறான். சில சமயத்துல தன்னவிட வேறொருத்தன் அவள சந்தோசமா வச்சுக்குவான்னு புரிஞ்சா விட்டுக் கொடுக்கவும் தயங்க மாட்டான். அப்படியில்லாம தடுக்க முடியாம வேறொருத்தன்கூட கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவ எப்படியிருக்காளோன்னு கவலை அவனை தினந்தோறும் கொன்னுக்கிட்டேயிருக்கும். எனக்கு மாதிரி “.
“இதெல்லாம் இருக்கட்டும் அவர்கிட்ட என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க”
” இனிமே அவன் நிம்மதியா இருப்பான்” என்ற பீடிகையுடன் சொன்னதைக் கேட்டவுடன்
நான் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன். பதட்டம் குறைந்ததில் விழி கலங்கி ஒருதுளி புடவையில் வழிந்தபோது சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லையோ என யோசித்துக்கொண்டிருந்தபோது “அவனோட பொண்ணு பேரு என்னன்னு கேட்டியா ” எனக் கேட்டார்.
“கேட்கவில்லை”
“கேட்டுத்தான் தெரிஞ்சுக்கனுமாக்கும்” என்றபடி என்னை அணைத்துக் கொண்டவரோடு ஒட்டிக்கொண்டேன்.
அவர் உண்மையை எல்லாம் சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. இப்போதே எதையாவது கூறி மழுப்பியிருக்கலாம், மனம் நிம்மதியடைந்திருக்கும். என்னாலும் இனிக் கூறமுடியாது. அவர் இப்போது சொல்லாததற்கு வேறு வஞ்சகத் திட்டம் ஏதேனும் இருக்குமோ. பிறகு எப்படியாவது தெரியும்போது இவரிடம் என் நிலைமை என்னவாகுமோ என்ற எண்ணங்கள் வளர, வெள்ளத்தில் நகரும் இலையில் சிக்கிய சிற்றுயிரென மனம் பதைக்கத் தொடங்கியது.