கல்லறைத் திருநாளான நேற்று அந்த கல்லறையில் அவ்வா காறித் துப்பியதை நான் பார்த்து விட்டேன். மேற்கு வானில் சூரியன் ஆழச் சரிந்து, நூறு கிழவிகள் சேர்ந்து துப்பிய வெற்றிலை எச்சில் போல, ஒரு கொடங்கையளவு மேகம் செங்காறையாயிருந்த நேரம். ஏழுமணி திருப்பலி பூசைக்காக புனித அந்தோணியார் கோயிலில் உபதேசியார், ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற ஜெபத்தை மைக்கில் செபித்துக் கொண்டிருந்தார்.
இருள், மனிதமுகங்களின் அடையாளங்களை மறைத்திருந்த அந்தநேரத்தில் எங்கள் அவ்வா தடியை ஊன்றிக் கொண்டு ஊரின் வடக்குதிசை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று நான் கேட்டதற்கு, நடுச்சிலுவைத் திண்ணைக்கு அருகிலிருக்கும் ஜோசப் வீட்டிற்கு துவரை புடைக்க போவதாக சொன்னாள். அவ்வாவிற்கு பின்னால் போனால் வடை, காப்பி என எதற்காவது கண்டிப்பாக உத்தரவாதமுண்டு. மேலும் அவ்வா துவரை புடைக்கும் வரை அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ‘அம்லு’ நாடகம் பார்க்கலாம்.
அவ்வா நடுச்சிலுவைத் திண்ணையைக் கடந்து மேலும் வடக்கில் நடந்தாள். அவ்வா வேறேதோ வேலையாக போகிறாள் என்பது எனக்கு உறுதியானது. நல்ல பிராயமான பனைமரத்தின் உயரம் அளவுக்கு இடைவெளி விட்டு நான் பின்தொடர்ந்தேன். கிறித்தவர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்து இந்துக்கள் வசிப்பிடமருகில் சென்று கொண்டிருந்தாள். ஊரின் வடக்கு எல்லையான சம்மனசு சிலுவைத் திண்ணையையும் தாண்டி நடந்தாள். பொழுது விழுந்த பின் அந்த சிலுவைத் திண்ணையைத் தாண்டி போவது ஊரில் யாருக்கும் வழக்கமில்லை. ஊரின் பெரிய திருவிழாவின் போது, ஊர்க்காவலரான புனித வனத்துஅந்தோணியார் கூட அந்த இடத்தில் சம்மனசு மாலை போட்ட பின் தெற்கு நோக்கி திரும்பி விடுவார். சின்ன வயதில் பகலில் நான் அந்தப் பக்கமாக போனது தெரிந்தாலே அம்மா எனக்கு டின்னு கட்டுவாள். அவ்வா அந்த இடத்தையும் தாண்டி நடந்து கொணடிருந்தாள்.
அந்த மெட்டல் ரஸ்தாவின் இரு மருங்கும் ஆடாதொடை, காட்டு நொச்சி, தங்கரளி போன்ற கைப்புச்சுவைத் தாவரங்கள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன. ஐப்பசி மாதத்து வாடையை எதிர்த்து அவ்வா போய்க் கொண்டிருக்கிறாள். அதற்கு மேல் நடக்க எனக்கு பெரும் பயமாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு மர்மத்தை அறியும் ஆவலாதியில் அவ்வாவின் பின்னேயே நடந்துகொண்டிருந்தேன். எதும் பிரச்சினை வந்தால் அவ்வாவை கூப்பிட்டுவிடலாம் என்ற தைரியமிருந்தது.
உபதேசியார் செபித்துக் கொண்டிருக்கும் மைக்கின் ஒலி தேய்ந்திருந்ததால், தடக் தடக் என்ற அவ்வாவின் கைத்தடி ஓசை என் காதில் வலுத்தது. அந்த ஓசை அவ்வா நடக்கும் வேகத்தை துல்லியமாக உணர்த்தியது. அது அவ்வாவின் சராசரியான நடையல்ல. வாழ்க்கையை துச்சமாக கருதித் துணிபவனின் வேகம் அது. அவ்வாவின் நடைவேகமும், அவ்வேகத்தால் அவளின் ஊன்றுகோல் எழுப்பும் ஓசையும், அமைதியான அந்த சூழலுக்கு ஒரு அலைக்கழிப்பான திகிலை அளித்திருந்தது. தனக்குப் பின்னால் ஒரு பெரிய ஊர் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாதது போல் அவ்வா திரும்பி பார்க்காமல் நடந்தாள். அவள் ஊருக்கு திரும்புவாளா என்று கூட என்னால் அப்போது நம்பமுடியவில்லை.
சாலையின் கிழக்கே ஊரின் சிறுபான்மையினரான புராட்டஸ்டன்ட் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டமிருந்தது. சுற்றுச்சுவருக்கு உள்ளே சிறு சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. கல்லறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி, அங்கு ஊன்றப்பட்டிருக்கும் சிலுவைகளின் நிறங்களையும், அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் அறிவதற்கு போதுமானதாக இல்லை. செண்டுமல்லிப்பூ மாலையுடன் மெழுகுவர்த்தியின் திரி கருகி மெழுகுருகும் வாசனை.
தடியுடனானஅவ்வாவின் நடை, சிலுவையுடன் கல்வாரிக்கு போன இயேசுவின் நடையைப்போல தளர்ந்திருந்தது. கிறிஸ்து கைதான வழக்கில், மரியாளே முதன்மை குற்றவாளி என பிலாத்து ராஜா தீர்ப்பு வழங்கியிருந்தால், அவளும் முள்முடி தரித்தவாறு உலகின் பாரமான சிலுவையைச் சுமந்து அதே கல்வாரிக்கு நடந்திருப்பாளா தெரியவில்லை.
புராட்டஸ்டன்ட்கள் கல்லறைத்தோட்டத்தைத் தாண்டி மெட்டல் ரஸ்தாவிற்கு மேற்கே இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் கல்லறைத்தோட்டத்தை அடைந்தாள். சாலையோரமிருந்த கல்லறைத் தோட்டத்து சாவடியில் வேக வைத்த பயறு பச்சைகள் சிதறிக் கிடந்தன. சாவடியையொட்டி அமரர் தேர் நின்று கொண்டிருந்தது. எல்லா கல்லறைகளும் செடி செத்தையில்லாமல் செதுக்கப்பட்டு அனைத்து சிலுவைகளிலும் மாலைகள் சாத்தப்பட்டிருந்தன. செவ்வந்தி, சம்பங்கி, ரோஜா, செண்டுமல்லி .
காமராசர், எம் ஜியார், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் இறந்த போது, ஊரே அவர்களுக்காக ஒப்பாரி வைத்து, அவர்களின் உருவபொம்மையை அந்த கல்லறைத் தோட்டத்தில் புதைத்திருந்தார்கள். சில கல்லறைகளுக்கு உடல்களும் அனாவசியம்தான் போலும். அவர்கள் கல்லறையிலும் சிலுவைகள் நடப்பட்டிருந்தன. அவற்றில் ரோஜாப்பூ மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
தலைவர்கள் கல்லறைகளுக்கு நேர் வடக்கில் ஊர் தோட்டிகளான பறையர், வண்ணார், சக்கிலியர் கல்லறைகளிருந்தன. அவற்றுள் சிலவற்றில் சிலுவைகளிருந்தன. கிழக்கு மேற்காக போகும் பாதை, கல்லறையிலும் சமரசத்தை வெட்டி விலக்கியிருந்தது.
அந்தப் பாதையிலேயே ஒரு பெரிய புளியமரம். அந்த மரத்தின் காய்ப்பை உள்ளூர்க்காரர்கள் யாரும் ஏலமெடுப்பதில்லை. அவ்வா ஒருநாள் எங்கோ கலம் புடைத்துவிட்டு கல்லறைப் பாதை வழியாக திரும்பி வந்தபோது, இந்த புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை அலறியதாம். அடுத்த நாள் காலையில் சொட்டையன் சித்தப்பாவை பெரியாஸ்பத்திரியில் வைத்திருப்பதாக தாக்கல் வந்தது. லாரி ஓட்டிப்பழகுவதற்காக கிளீனராக போய்க் கொண்டிருந்த சொட்டையன் சித்தப்பா சாலை விபத்தில் சிக்கியிருந்தார். ஒரு வயது பயலாக இருந்த என்னை இடுப்பில் தூக்கி கொண்டு போன போது, பெரியாஸ்பாத்திரி பிணவறைக்குத்தான் போகச் சொன்னார்களாம். அந்த புளிய மரத்திற்கு அருகில்தான் சொட்டையன் சித்தப்பாவை புதைத்தது. அந்த புளியமரத்தையும், தன் மகன் புதைக்கப்பட்ட இடத்தையும் கூட அவ்வா கண்டு கொண்டதாக தெரியவில்லை. நான் புளிய மரத்தில் மறைந்து நின்றவாறு அவ்வாவை கவனித்துக் கொண்டிருந்தேன். தொடும் இடமெல்லாம் ஆணிகளும், அதனில் சிக்கிய மயிர்களுமாயிருந்தன. பேய் பிடித்தவர்களின் தலைமயிர்களை பிடுங்கி அதனை அந்த புளிய மரத்தில்தான் ஆணியால் அறைவார்கள். பேயாடுபவர்கள் எல்லோரும் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களையே தங்கள் பெயர்களாக சொல்வார்கள். அவர்கள்தான் பேய்கள் என்று ஊரில் சொல்வார்கள். பேய்களின் கல்லறைகளிலும் சிலுவைகளைத்தான் நடுகிறார்கள். வாடைக்காற்றிலும் எனக்கு வியர்த்தது. இந்தப் புளிய மரத்தில் பேயரசாள்கிறதோ என்று நான் எண்ணியதால், ஜன்னி வரும் அளவுக்கு உடல் வெடவெடத்தது. ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சிலுவைகளுக்குள் அவ்வா மெதுவாக நடந்து போகிறாள். மொச்சை, தட்டைப் பயிறு, பாசிப்பயறு, கொள்ளு, கல்லுப்பயறு, வெல்லம் அல்லது சீனி கலந்த ஊறிய பச்சரிசி போன்றவற்றுடன் பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, கஞ்சா,மது என்று பல்வேறு பாவங்களும் அவரவர் வசதி, விருப்பங்களுக்கு தக்கபடி அவரவர் கல்லறைகளில் அவரவர் வாரிசுகளால் பரிமாறப்பட்டிருந்தன. ஊன்றுகோலை தரையில் அழுத்தி பல பாவங்களை மிதித்து, பல பாவங்களைக் கடந்து சிமெண்டால் கட்டப்பட்ட அந்த உயர்ந்த கல்லறை முன்பு போய் அவ்வா நின்றாள். அந்த கல்லறையில் நிறைய மாலைகள் இருந்தன. புதைக்கப்பட்டவரின் பெயர் படத்துடன் அவரின் தோற்றமும் மறைவும் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் கல்லறை என்று எனக்குத் தெரியவில்லை. ‘க்ர்ர்’ என்று அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டி நாவுக்கு கொண்டு வந்து உக்கிரத்துடன் ஓங்கித் துப்பினாள் அவ்வா.
திரும்பி வேகமாக நடந்தாள் அவ்வா. அவளைப் பார்க்க எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஊருக்குள்ளிருந்து வருகையில் எனக்கு பின்னால் ஊரிருந்தது. அவ்வா எனக்கு முன்னாலிருந்தாள். இப்போது அவ்வாவுக்கு முன் ஊரும் எனக்குப் பின் கல்லறையும் இருப்பது அச்சமூட்டுவதாக இருந்தது. ஆகவே வேகமாக ஓடி அவ்வாவின் கையைப் பிடித்தேன். அவ்வா எந்த அதிர்ச்சியும் காட்டாமல் என்னை வீட்டுக்கு கூட்டிப்போனாள்.
அன்று வரும்படி சற்றே கூடுதல் என்பதால் அப்பா என் கால்ப்பாத அளவு நீளமான சப்பட்டை பாட்டில் பிராந்தி வாங்கியிருந்தார். எங்கள் வாதரகாச்சி மரத்தடியில் உட்கார்ந்து தண்ணீர் கலந்து பிராந்தியை குடித்துக் கொண்டிருந்தார். அப்பாவை பார்த்து ‘எனக்கிம்புட்டு குடுறா’ என்றாள் அவ்வா. முக்கா கிளாஸ் பிராந்திக்கு கால் கிளாஸ் தண்ணீர் கலந்து கொடுத்தார் அப்பா. கிளாஸை வாங்கி கண்களை சுருக்கி மூடி ஒரே வீச்சில் குடித்தாள் அவ்வா. சிறு செருமலுடன் வீட்டு பட்டாசாலில் சாக்கை விரித்து படுத்துக் கொண்டாள்.
புனித அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூசை தொடங்கியிருந்தது. அன்று கல்லறைத் திருநாளாதலால் ‘ஜீவனுள்ள வாழ்வை வாழ்ந்து மரித்தோர் யாவரும் கிறிஸ்துவுக்குள் நித்ய இளைப்பாற்றியை அடைவதாக’ என்று சொல்லிவிட்டு தன் பிரசங்கத்தை தொடங்கினார் பாதிரியார்.
எல்லோரும் உறங்க போயிருந்தார்கள். நான் வெளித் திண்ணையில் அவ்வாவருகே படுத்திருந்தேன்.அவ்வா உறக்கமின்றி புரண்டு கொண்டேயிருந்தாள்.
‘எதுக்குவ்வா அந்த கல்லறய காரித்துப்புன’ என அவ்வாவுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் தொண்டையின் ஒலியை பிரயோகித்தேன்.தூங்கும் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடந்து வந்த தாயொருத்தி, அப்பிள்ளையை தூளியில் பதுவிசாக கிடத்துவது மாதிரி பிணைப்பும், விலகலுமாய் அவ்வா பேச ஆரம்பித்தாள்.
‘சொட்டையனோட சாவ, போலிஸ் பிராதாக்கி குடுத்தா, வண்டி பேருல இருக்க இன்சூரன்ஸ வச்சு ரூவா வாங்கி குடுக்கிறதா லாரி ஓனர் சொன்னாரு. பிராது குடுக்கறதுக்காக அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தோம். அங்க நாங்களும் எங்களமாதிரி பிராது குடுக்க வந்தவுகளும் ஸ்டேசன் வாசல்ல இருந்த மரத்தடியில அங்கங்க கூட்டமா ஒக்காந்திருந்தாக . எல்லா கூட்டத்திலயும் ஆணும் பொண்ணுமா அழுகுறவுக இருந்தாக . மேனாமிக்கி பொம்பளகளும், ஆம்பளகளும் டேசனுக்குள்ள போறதும் வாரதுமா இருந்தாக . கூட்டத்துல இருந்தவுக ‘இவ அந்தூரு அவிசாரி. இவன் அந்தூரு திருட்டுப்பய. இந்தா இவன் கஞ்சா விக்கிறவன்’ அப்படின்னு அங்க வந்தவுக போனவுகளுக்கு அடையாளஞ் சொல்லிக்கிட்டிருந்தாக. மாமூல் குடுக்க வாரதா பேசிக்கிட்டாக. திருட்டு குடுத்தவுக, அவிசாரித்தனம் பண்ணுனவுக, கஞ்சா வாங்கி குடிச்சவங்கன்னு எல்லாரும் அந்த டேசன் மரத்தடியில கூடியிருந்தாங்ய போல’.
‘அங்கதே அந்த பொண்ணமூஞ்சிப்பய இன்ஸ்பெட்ரா வேல செஞ்சான். “பிள்ளய சாக குடுத்திருக்க. ஒங்கிட்ட நாங்க காசு வாங்கமாட்டம். ஆனா பிரேத பரிசோதன செய்யுறவக சும்மா செய்ய மாட்டாக. ஐநூறு ரூவா கேப்பாக. குடுத்திட்டா இன்னிக்கே சாயங்காலத்துக்குள்ள பண்ணிருவாக” அப்படின்னான். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லலாம்லேன்னு ஒங்க தாத்தா சொன்னாரு. “அங்க எம்பேச்சு செல்லாது”ன்னு இவஞ்சொன்னான். கூலிக்கு குப்ப சொமக்குற எங்ககிட்ட ஏது காசு? லாரி ஓனர் அத ஏத்துக்கிட்டாரு.
“நீங்க பிராத குடுத்திட்டு நகல் வாங்கிட்டு வாங்க. நான் போயி காச கட்டிட்டு ஆகறத பாக்குறேன்னு” சொல்லிட்டு லாரிஓனர் போயிட்டாரு.
பிள்ளய சாக குடுத்தவுக படுறதுக்கும், ஆண்டவன் கொஞ்சூண்டு ஆசுவாசத்த வச்சிருந்தான் போல்ருக்கு.
காலச்சூட்டில் சுண்டிப்போன உணர்வின் அடர் ஈரத்தில் அவ்வா பேசினாள்.
“நீங்க ஒரு உதவி செய்யணும். எங்க சரகத்து எல்லையில போனமாசம் ஒரு பிச்சக்காரி செத்துப் போயிட்டா. விளம்பரப்படுத்தியும் பொணத்த கேட்டு யாருமே வரல. அந்த பிரேதத்த போஸ்ட்மார்டம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரியில நீங்க காசு கட்டணும். ஒங்களுக்கும் அது புண்ணியமா இருக்கும். எங்களுக்கு ஒரு காசு கூட வேணாம். துக்க வீட்டுக்கு நாங்க கேடு செஞ்சிர மாட்டம்”. அப்படின்னு இந்த இன்ஸ்பெட்டரு சொன்னான். ஒங்க அம்மா காதுல கெடந்தத அடகு வெச்சிட்டு, பத்தும் பத்தாததுக்கு வீட்டுல இருந்த தெவசத்த வித்துட்டு ஒங்கப்பந்தே பெரியாஸ்பத்திரிக்கி காசு கொண்டுக்கிட்டு வந்தான்.
கண்ணீரும் கம்பலையுமா பொணத்த வாங்கறதுக்கு பெரியாஸ்பத்திரியில நிக்கிறோம். அழுதழுது அஞ்சாறுவிட்டம் சொரணையில்லாம நானு விழுந்திட்டனாம். சப்பு சப்புன்னு கன்னத்துல அடிச்சு எழுப்புனதா ஒங்கப்பன் சொன்னான்.
வெள்ளத்துணியில மூஞ்சி மட்டும் தெரியிற மாதிரி சுத்தி சொட்டையன குடுத்தாக. அங்க இருந்த புஸ்தகத்தில ஒங்க தாத்தன் கைநாட்டு வச்சிட்டு இருக்கும் போது அந்த அனாதப் பொணத்தையும் வெளில கொண்டுக்கிட்டு வந்தாக. அதுக்கு போலிஸ்காரனொருத்தன் கையெழுத்து போட்டான். சொட்டையன வண்டியில ஏத்தும் போது அந்த அனாதப் பொணத்த பாத்தேன். எனக்கு தெரிஞ்ச மொகம் மாதிரி இருந்துச்சு.
அவ்வாவின் மூச்சு அப்போது வேகப்படுவது போலிருந்தது. பிராந்தியால் ஊறிய எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.
நம்மூரு ரயிலடி பக்கத்தில கஞ்சா வித்த ஊமையவ. காதும் மந்தம். சொல்லவோ எழுதவோ ஏலாத அவ எந்தூரு, என்ன பேருன்னு யாருக்கும் தெரியாது. பத்து பதினஞ்சு வருஷமா அவள நா பாத்திருக்கேன். ஊரும் பேரும் தெரியாதவள காமாட்சின்னு கூப்புட்டா என்ன? மீனாட்சின்னு கூப்புட்டா என்ன? அவளுக்கு கேக்காதுங்குறதால எல்லாரும் அவள ஊமன்னுதே சொல்லுவாக. அதுமட்டும் அவளுக்கு கேட்டுருமா?
அவ்வா தொண்டையைக் கனைத்து செருமித் துப்பினாள். நாக்கில் என்னதான் ஊறுமோ தெரியவில்லை.
மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நா சிறுமலைக்கி கல்லொடைக்க போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். பொழுது மசமசன்னு இருட்டிகிட்டு வருது. அப்ப ரோட்டுக்கு தெக்க இருட்டுக்குள்ள ஒருத்தன் இவ கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான். நானு கிட்டத்துல போக விட்டியும் இவள விட்டுட்டு அவன் ஓடிட்டான். அதிலயிருந்து என்னய பாத்தா இவ சிரிப்பா. அவ சிரிப்பு மதுர மீனாட்சி சிரிப்பு மாதிரி அம்புட்டு அம்சமா இருக்கும். அவகிட்ட கஞ்சா வாங்குனதா ஒங்களுக்கு ஜாதகம் எழுதுன வள்ளுவரு சொல்லுவாரு. சிலருக்கு கடனா கூட கஞ்சாவ விப்பாளாம். சொந்தம், சுருத்துன்னு யாரும் இல்லாததால இவ சாப்பாட்டு அளவுக்கு காச குடுத்திட்டு, மிச்சத்த போலிஸ்காரங்ய புடுங்கிக்குவாய்ங்கலாம். எங்கியாச்சும் ரெய்டு போறதுல கெடக்கிறதயும் இவகிட்ட குடுத்து விக்க சொல்வாய்ங்கலாம். இவ கஞ்சா வித்தா இவிங்யளுக்கு ஆதாயம் ஜாஸ்திதானே! ரெண்டு மாசத்துக்கொருதரம் டேசனுக்கும், கோர்ட்டுக்கும் இவள கூட்டிக்கிட்டு போவாகளாம். அந்த ரயிலடி பக்கத்துல இருக்குற டேசன்ல வேல பாத்த இந்த வாக்காலங்கெட்ட இன்ஸ்பெட்டரு கடிக்கி, இவள டேசனுக்கு கூட்டிட்டு போறத நானொருதரம் பாத்திருக்கேன். அவள அனாதப் பொணமா பாக்க எனக்கு ஈரக்கொலயே நடுங்கிருச்சு’.
‘யாருமில்லாதவ அனாததானவ்வா?’ என்றேன்.
முறைப்பது போல என்னைக் கூர்ந்து பார்த்தாள் அவ்வா.
‘பிள்ள பெத்ததுல சரிஞ்ச வயிறுடா அவளுக்கு. எத்தன பெத்தாளோ? யாருக்கெல்லாம் பெத்தாளோ? எங்கல்லாம் பெத்தாளோ?’ என்று நெடுமூச்செரிந்தாள் அவ்வா.
‘ஒரு மாசமா பிரேதத்த கேட்டு யாரும், எங்கிருந்தும் வரலைல’ என்றேன். அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டுவது மாதிரி ஓங்கரித்து காரி எக்கித் துப்பினாள் அவ்வா. காற்றின் வீச்சுவாக்கில் என் முகத்திலும் எச்சில் தெறித்தது.
‘எத்தன பேரு போதக்கும், தினவுக்கும் அவ நாதி தேவையாயிருந்துச்சு. அவகிட்ட வாங்கி தின்டவன், மென்டவன் எல்லாருக்குமா அவ அனாத? இந்த பலவட்ற இன்ஸ்பெட்டரு கடிக்கி எம்புட்டு வாங்கித் தின்டுருப்பான்? அவ பொணத்த அனாதப் பொணமாக்க இவனுக்கு எப்புடி மனசு வந்திச்சு?’ அவ்வாவுக்கு வந்த ஆவேசத்தில் அவள் வார்த்தைகள் திக்கித் தேம்புவது போலிருந்தது.
‘தின்டவனும் மென்டவனும் எம்புட்டோ பேர் இருக்க இந்த இன்ஸ்பெக்டர மட்டும் எதுக்கு காரித்துப்புற?’ என்றேன்.
‘இன்னிக்கும் கஞ்சா கெடக்கத்தான் செய்யிது. அவ கஞ்சா வித்ததுல யாருக்கெல்லாம் ஆதாயமோ தெரியாது. ஆனா கஞ்சா விக்கிறவனையும் வாங்குறவனையும் அடக்கி, ஊர யோக்கியமா வச்சிக்கறதுக்காக சம்பளம் வாங்குனவன் இவன். அதயே அச்சாரமா வச்சிக்கிட்டு இவ யோக்கியத்த கெடுத்த நாதாரிப்பயல் இந்த இன்ஸ்பெட்டரு’
அவ்வாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
‘வாய் செத்த அவள இவன் எதாவது கோயில் கொளத்தில பிச்சக்காரியாவே ஆக்கியிருக்கலாம். பிச்சக்காரக சங்கத்திலயிருந்து நாலு பிச்சக்காரங்ய அவளுக்காக வந்திருப்பாய்ங்க. இந்த சின்னப்பட்ட வேலைக்குள்ள அவள தள்ளி, அந்த அப்புராணிய அநாதையாக்கிட்டானே பாவி. அவ பொழப்ப கன்னாசனம் காசநாசம் பண்ணிட்டு எந்த
உறுத்தலும் இல்லாம அவள காணாப்பொணமாக்கி அந்த சவங்களுக்குள்ள ‘ஒரு மாசம்’ நாறவச்சிட்டாய்ங்களே’. அந்த ஒரு மாசமென்பது யுகங்களுக்கான எடையை சுமந்த அழுத்தத்துடன் அவ்வாவின் வாயிலிருந்து வந்தது. மீண்டும் ஒருமுறை காரித்துப்பினாள் அவ்வா.
‘இவகிட்ட வாங்கி தின்டவனும் மென்டவனும் இப்ப உசுரோட இருக்காய்ங்களா போயிட்டாய்ங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா தெய்வம் இவன போட்டுப் பாத்திருச்சு. சொட்டையன் செத்த மறு வருஷம் நெஞ்சு வலியில இவன் செத்துப் போயிட்டான்.
அப்பத்தே எனக்கு கொஞ்சம் மனசாருச்சு.’
‘ஆனா இந்த சர்க்காரு இவன் குடும்பத்துக்கு ரூவாயும், இவம்புள்ளக்கி உத்தியோகமும் கொடுத்திச்சு. பாவிகள செவக்கி வக்கவா சர்க்காரு? கை, கால்ல வெறப்பு இல்லேண்டாலும், நெஞ்சுக்குள்ள ஆத்திரம் கெடக்குதே!’
‘அந்த இன்ஸ்பெக்டர அவமானப்படுத்தறதுக்கு எம்புட்டோ வழியிருக்கும் போது எதுனால காரித்துப்பணும்னு முடிவு செஞ்ச?’ என்றேன்.
‘பேச வாயில்லாம இவிங்யளால கெட்டழிஞ்சு போன அவளுக்கு அவட்டம் இருந்து, இந்த சீன்றம் புடிச்ச பயகள என்னமாச்சும் செய்யணும்னு நெனச்சா, அவளால காரித்துப்பத்தான முடியும்?’
‘எதுக்கு கல்லற திருநா அன்னக்கி துப்புற?’ என்றேன்.
‘பாவிகள் அழிஞ்சு போனாலும் அவுகவுக செஞ்ச பாவங்கள் நெனப்புகள்ல சுத்திக்கிட்டுத்தே இருக்கு. செத்தவுக அவுகவுக இரத்த வழிகளாலே நெனக்கப்படுற நாள்ல அவன் பாவங்களும் நெனக்கப்படணும்ல. அப்பறம் நியாயத் தீர்ப்புக்கு என்ன அர்த்தம்?’ என்றாள் அவ்வா. சிறிது நேரத்தில் அவ்வா உறங்கியது மாதிரி இருந்தது. உறக்கத்தால் அன்று நான் ஆசிர்வதிக்கப்படவில்லை.
நினைக்கப்பட வேண்டிய இறந்தோர் செய்கைகள் நினைவில் எழுந்து கொண்டேயிருந்தன. எவையெல்லாம் நினைக்கப்பட வேண்டும், எவையெல்லாம் நினைக்கப்பட தேவையில்லை என்பதற்கான பட்டியலும், அதனை யாருக்கு எவ்வளவில் எப்போது பரிமாற வேண்டும் என்பவற்றையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள்? மனதின் இசைவையும், இசைவின்மையையும் மனித விருப்பங்களால், முயற்சிகளால் மீற முடியாதபடிதான் இங்கு வாழ்க்கைகள் வாழப்படுகின்றன.எனக்கு இரத்த உறவுடைய அவ்வாவையே நான் பின்தொடர்ந்தேன். நான் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றதும், அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஊமைத்தாயைப் பற்றி நான் அறிந்து கொண்டது என் விருப்பமோ அல்லது என் அவ்வாவின் விருப்பமோ முயற்சியோ அல்ல. ஊமைத்தாய், அந்த இன்ஸ்பெக்டரும் என்னால் நினைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை அல்லது வாய்ப்பை விதி உருவாக்கி தந்திருக்கிறது. ஊமைத்தாயை எங்கு புதைத்தார்கள் என்று அவ்வாவுக்கு தெரியாது. அதனால் எனக்கும் தெரியாது. எனக்கு அறிவிக்கப்பட்ட செய்திக்குரிய, நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கக்கூடிய அந்த நபரை அறிய விரும்பினேன்.
பூமியில் ஒளி பரவ, இருள் தன் அனுமதியை மெல்ல வழங்கிக் கொண்டிருந்த காலை. ஊர்க்காரர்கள் காடு கரைகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நான் கல்லறைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கத்தோலிக்க திருச்சபையினரின் கல்லறைத் தோட்ட முகப்பில் நின்றவாறு கல்லறைகளைப் பார்த்தேன்.
ஆயிரக்கணக்கில் சிலுவைகள். தேவகுமாரன் சுமந்தது போன்ற பாரமான சிலுவையை பிரதி அல்லது போலி செய்த சிலுவைகள். அந்த சிலுவைகளுக்கடியில் எத்தனை எத்தனை உடல்களோ!
இறந்தவர்கள் வாழுங்காலத்தில் அவர்களை கருவிகளாய்க் கொண்டு தங்கள் ஜீவன்களை ஈன்று கொண்டவர்களால் சுமக்கப்பட்டு நடப்பட்ட சிலுவைகள். கல்லறைகளுக்குள் நடந்தேன்.
கிழக்குச்சூரியன் மேற்கு நோக்கி ஒளி வீசியதால் கிழக்கு நோக்கிய சிலுவைகளும், அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களும் துலக்கமுற்றிருந்தன. கல்லறைப்பாதைக்கு வடக்கேயிருந்த ஊர்த்தோட்டிகளின் புதைப்பிடங்களில் துளசியும், பிரண்டையும் நடப்பட்டிருந்தன. அவற்றில் சில வளர்ந்திருந்தன. சில நறுங்கியிருந்தன.
பெருந்தலைவர் காமராசரின் கல்லறைதான் சிலுவை நடப்பட்ட கல்லறைகளில் முதலாவதாக இருந்தது. அவர் பெயரையே அவரால்தான் நான் வாசிக்கிறேன். அவ்வா நடந்தது போல வேகமாக நடக்க முடியவில்லை. கல்லறைகள் முழுக்க சிலுவைகள். சிலுவைகள் முழுக்க பெயர்கள் . அதனடியில் புதைக்கப்பட்டவர்களுக்காக போடப்பட்டிருந்த படையல்கள். எல்லாவற்றிலும் மாலை, மெழுகுவர்த்தி, பயறு என சில பொதுப்பொருள்கள் படையலில் இருந்தன. ஆனால் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாதவாறு பிரத்யேகப் பொருள்களும் நிறைந்தே இருந்தன.
இரண்டாம் வரிசையில் என் வகுப்புத் தோழி யொருத்தியின் கல்லறையொன்றிருந்தது. வகுப்பிலேயே மிக அழகானவள். ஏதோ விசித்திர நோயில் இறந்து போனவள். அடுத்த வரிசையில் எனக்கு சைக்கிள் ஓட்ட பழக்கிவிட்ட நண்பனொருவனின் கல்லறை. கொஞ்சம் தள்ளி ‘சக்கிலியப்பயலுக்கு முதல்ல சோறு போட்டா, மற்ற பிள்ளக எப்பிடி சாப்புடுவாக’ என்று சொல்லி முதலில் எனக்கு சோறு போட மறுத்த பள்ளிக்கூட ஆயாவின் கல்லறை இருந்தது. அடுத்த வரிசையில் எனக்கு ஐந்தாம் வகுப்பில் நன்னெறிப் பாடம் நடத்திய ஆசிரியையின் கல்லறையை அடையாளம் கண்டு சில வினாடிகள் நின்றேன். அவர்தான் “ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிவார்கள்” என்ற திருமூலர் பாட்டை நடத்தினார்.
அவ்வா காறித்துப்பிய கல்லறை இருந்த வரிசையில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு கல்லறையில் மாலைகள் மெழுகுவர்த்திகளுடன், ஒரு பித்தளைச்சங்கும், பால் நிரப்பிய பால் புட்டியையும் பார்த்தேன். இரண்டு மாதம் முன்பு போர்வெல் குழியில் விழுந்து இறந்து போன ஒன்றரை வயது குழந்தையின் கல்லறை அது.
அவ்வா காறித்துப்பிய கல்லறையை அடைந்தேன். அது அந்த போலிஸ் இன்ஸ்பெக்டரின் கல்லறையல்ல. அது நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த இன்ஸ்பெக்டரினுடைய தந்தையை அடக்கம் செய்த கல்லறை. அவ்வா தவறு செய்து விட்டாளா என்று எனக்கு புரியவில்லை. ஆயினும் எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எங்கு பெய்வது என்பதில்தான் குழப்பமாயிருந்தது.
” மரியாளின் சிலுவைப் பாதை ” என்னும் சிறுகதையிலிருந்து நான் சுட்டிக் காட்டிட முனைவது:-
கதையின் நீதி :- பிறந்தநாள், இறந்த நாள், உத்திரித்த ஆன்மாக்களுக்கு இளைபாறுதல் வேண்டி ஜெபிக்கும் நாள் (இந்துக்களுக்கு ஆடி மாத அமாவாசை) முதலான தினங்களில் மரித்தவர் ஆற்றிய நல்வினைகளோடு தீவினைகளையும் நினைவில் ஏந்திட வேண்டும்.
அப்படியொரு பழக்கம் கற்பிக்கப்படும்போது ஒவ்வோருவரும் சுயமதிப்பீடு செய்திட தானாய் நினைவுறுத்தும். வருங்கால சந்ததி நம்மையும் நமது நல்வினை & தீவினையையும் நியாயத் தராசில் நிறுவை செய்யும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
[ நெருப்பில் சுட்டபிறகு
எடுத்து நட்டு வைத்தாலும்
முளைக்கும் தன்மை பனைக்கு உண்டு – வேள்பாரி என்னும் நூலில் சு.வெங்கடேசன் ] பாரிவள்ளலின் குல விருட்சம்.தமிழ் மாநில மரமும்கூட.
15 அடி முதல் 20 அடி வரை என்று நீட்டல் அளவை பேசாமல் ” பிராயமுள்ள பனையளவு ” என்று குறிப்பிடுகிறார். பூத்து நுங்கு காய்த்திடும் பருவத்தில் பனையின் உயரத்தைக் கணக்கிட கிராமியச் சூழலில் வாழ்ந்த அனுபவம் கைகொடுக்கும். பனையை கொண்டாட வேண்டுமென்ற படைப்பாளியின் ஆசை தெரிகிறது.
பெயர் குறிப்பிடாத ஏதோவொரு கிராமத்தில் நிலவிய அல்லது நிலவிக் கொண்டிருக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் ஊரறிய, உலகறியச் செய்திட முனைந்திட்ட படைப்பாளி , சிறுகதை என்னும் தமிழ் இலக்கியத்தில் ஆவணப்படுத்தி விட்டார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் பிறமொழி வாசகர்களும் வாசித்தறிய இயலும்.
[ஏகாதிபத்தியம் , ஏகாதிபத்தியம் தான். அதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்னும் பேதமில்லை. அடிமைத் தனம், அடிமைத்தனமே
– மானுடம் வெல்லும் என்னும் நூலில் பிரபஞ்சன் சொல்லியது ]
எரிகின்ற கொள்ளியில் எந்தக்கொள்ளி ” நல்ல கொள்ளி “.
நெருப்பை எவரிட்டாலும் எரியும். உள்ளூர்காரர்,வெளியூர்காரர் என்ற பேதமில்லை.
” ஆதிக்கம், ஏகாதிபத்தியம், அடக்குமுறை, அடிமைத்தனம் ” இந்த சொற்களை சாதாரணமாக வாசித்து செல்வதற்கும்
திரைப்படத்தில் காட்சியாய் கண்டு, கடந்து மறப்பதற்கும்
வாழ்ந்து அனுபவிப்பதற்கும் இமாலய வேறுபாடு உள்ளது . ஒரு மனிதன் சகமனிதனிடம் அடக்கு முறையை, அடிமைத்தனத்தை பின்பற்றுவதும் எத்தகைய கொடுமை?
சிறுகதையில் சுட்டிக்காட்டப்படும் சமூக முரண்பாடுகள் :-
சிறுபான்மை கிறுஸ்தவர், பெரும்பான்மை கிறுஸ்தவர் என பிரிவுகள் இருப்பது, கிறுஸ்தவர்களுக்குள்ளேயே நிலவும் ஒத்திசைவு இன்மையை காட்டுகிறது.
ஊழியத் தொழில் செய்வோர்கட்கு தனித்தனி பகுதிகள் ஒதுக்கி
கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. எல்லா ஊர்களிலும் ஊழியக்காரர்களே ஒதுக்கப்பட்டவர் தான். அவர்களின் கல்லறைகள் எப்படி ஒருங்கிணைப்பில் இருக்கும்?
விபத்துகளில் அவாண்ட சாவடைந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், சூழ்ச்சி / வஞ்சனையால் இம்சிக்கப்பட்டு மரணித்தவர்களின் ஆன்மாக்கள் பேயாய் அலைவதாக சொல்வார்கள். அவர்களின் கல்லறையிலும் சிலுவையுண்டு. தேவாலயங்களிலும் சிலுவையுண்டு. மாற்று மத, சாதியை சார்ந்த அரசியல் தலைவர்களின் உருவ பொம்மை கல்லறையிலும் சிலுவையுண்டு.
உத்திரித்த ஆன்மாக்களுக்கு இளைபாறுதல் வேண்டி
ஜெபிக்கும் நாளன்று எல்லா சிலுவையிலும் தீர்த்தம் தெளித்து சர்ச் பாதிரியார் புனிதப்படுத்துகிறார். புனித நீர் தெளிக்க
சிலுவை மட்டுமே இங்கு அவசியம்.
டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதி, Palaniyappa Brothers பதிப்பகம் வெளியிட்ட “கால்டு வெல் ஐயர் சரிதம்” பக்கம் 14 ல் நாடார்களை ” பழங்குடிகள் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரியன் பதிப்பகம் வெளியிட்ட “அய்யா வைகுண்டர்” என்னும் நூலில் மரமேறிகளாய் பிழைப்பு நடத்திய தாழ்த்தப்பட்டவர்களே நாடார்கள் என்கிறது. “நாராயணப் பெருமாள்” என்னும் சீர்திருத்தவாதியின் சீர்மிகு நடவடிக்கைகளால் அச்சமூகம் தங்களை மீட்டெடுத்துக்கொண்டது. அச்சமூகத்தில் பிறந்தவரே கர்ம வீரர் காமராஜர். அவரின் பெயரை மட்டும் இச்சிறுகதையில் ஒன்றிற்கும் மேலே படைப்பாளி பயன்படுத்தியுள்ளார்.
நேரில் கண்டிராத அரசியல் தலைவரின் உரும பொம்மைக்கு வாய்க்கரிசி போட்டு, கொள்ளி வைத்து , மொட்டை போடுகிறார்கள்
அவ்வூர் மக்கள் . ஆனால் தொண்டு ஊழியக்காரர்களை சக மனிதனாய் நடத்தப்படுவதில்லை.
புனித அந்தோணியாருக்கு சம்மனசு மாலையிட்டு மரியாதை செய்வதை படைப்பாளி குறிப்பிட்டது சிறப்பு.
சம்மனசு, இறக்கை முளைத்த பறவையினம். பறவையும் விலங்கும் ஐந்தறிவு உயிரிகள்.
ஆறறிவு மனிதனாய் பிறந்து புனிதரானவர் அந்தோணியார்.
பறவையினத்தை (சம்மனசு) வழிபடுவோர் , சகமனிதரில் வேற்றுமையை கடைபிடிப்பது புரியாத புதிர்.
” மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்….” என்னும் பாடல் என் மனதில் இசைக்கிறது.
மகாவிஷ்ணுவின் பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினார்களாம்.
.கீழ்மக்கள் கீழான பாதத்திலும் மேன்மக்கள் தொப்புள், மார்பு, சிரம் என உயரமான இடங்களில் தோன்றியதாக கதை சொல்கிறார்கள். இது போலவே கீழான மதுபானக் குப்பியை குறிப்பிட ” கால்ப்பாத அளவு” என்கிறார் படைப்பாளி.
விபத்தில் முழங்காலுக்கு கீழே இழந்தவருக்குதான் தெரியும் முழு உடலையும் தாங்கி நிற்கும் பாதத்தின் முக்கியத்துவம். தமிழக அரசையே தாங்கி நிற்பது சப்பட்டை குப்பி வியாபாரம் தான்…… ம்ம்ம்….
பெரும்பாலான உடல் கூராய்வு மையங்கள்,காவல் நிலையங்களில் நிலவும் சூழல்
அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளது.
காலங்காலமாக லஞ்சம் :
எழுதப்படாத சட்டம்
வரையறுக்கப்படாத விதி
அங்கிகரிக்கப்பட்ட தவறு
ஊமைத்தாயினால் தின்றவர்கள் எத்தனை? மென்றவர்கள் எத்தனை?
ஊமைத்தாயையே தின்றவர்கள் எத்தனை? மென்றவர்கள் எத்தனை?
சரிஞ்ச வயிறு…..
எத்தனை பெற்றாளோ…
எங்கெல்லாம் பெற்றாளோ….
எவனுக்கெல்லாம் பெற்றாளோ…
என்னும் வரியில் பெருத்த ரணம் தெரிகிறது. வாய் செத்தவளிற்க்கு நேர்ந்த கொடுமை…
பெண்ணினத்தின்மீதான பாலுணர்வு வெறி
பச்சிளங் குழந்தை வரை பாய்கிறது. மூதாட்டியையும் விட்டு வைப்பதில்லை. அறமற்றவர்களை உலவ விட்டிருக்கும் இச்சமூகம் வெட்கி தலை தாழ்த்துவதில்லை. கருணை மனு சமர்ப்பிக்க ஜனாதிபதி வாசல் வரை அழைத்துச் செல்கிறது.
விண்மீன்கள்,பிற கிரகங்கள் முதலானவற்றின் போக்கினை வைத்து கிரகசார கட்டம், அம்சக் கட்டம் வரைபவரே ஒரு கஞ்சா குடிக்கி.
பிள்ளைகளுக்கு அறம் புகட்டி வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய பணி. பிள்ளைகளின் அறப்பிறழ்வுக்கு பெற்றோரே பொறுப்பேற்ற வேண்டும் என படைப்பாளி கூறிட முனைகிறார்.
காவல் துறை ஆய்வாளர்,
ஊதியத்திற்கு உண்மையாய் உழைக்காது
மனிதத்தன்மையற்ற அதிகாரியாய் விளைந்து நின்றதற்கு இவரின் தந்தையான நீதிபதியே பொறுப்பு என நினைவிடஞ்சென்று காரித் துப்புகிறாள் அவ்வா.
அந்த ஆய்வாளருக்கு கல்வி புகட்டிய ஆசிரியருக்கும் பொறுப்பு இல்லையா?
அந்த ஆய்வாளரின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொறுப்பு இல்லையா?
அந்த ஆய்வாளரின் உயரதிகாரிகளுக்கு பொறுப்பு இல்லையா? பேய்கள் ஆட்சி செய்தால் பிசாசுகள் பிணம் தின்னாதா?
அல்லற்பட்டு ஆற்றாது
கடைசியில் காரித்துப்பத்தான் முடிந்தது அவ்வாவினால்…
உணவிடும் அறத்தை மறுத்து
பாரபட்சம் காட்டிய ஆயா…
அதே பள்ளிக்கூடத்தில் நன்னெறிக் கல்வி புகட்டிய ஆசிரியை…
ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரித்தவர்கள் எத்தனையோ ?
தமிழகத்தையே உலுக்கியது
மணப்பாறையருகே சுஜித்தின் மரணம்.
இச்சிறுகதையில் குறிப்பிடும் நீதிபதி யாராக இருக்குமென? விளங்கவில்லை.
நீதி வழங்குவோர் அனைவரும் நீதிபதியே என ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஊர்த்தலைவர், பஞ்சாயத்து தலைவர், நாட்டாமை, மணியக்காரர், பொக்கிஷ காப்பாளர்…… அல்லது அதிகாரம் செறிந்த அதிகாரி ….. இதில் எவரையோ படைப்பாளி நிச்சியம் அறிந்திருப்பார். அது நேரிடையாகவோ செய்திகளின் வாயிலாகவோ இருக்கலாம்.
அவ்வா உளற வேண்டும். உளறலின் வழியே உள்ளக் குமுறலை அறிய வேண்டுமென விரும்பிய படைப்பாளி, அவரின் தந்தையிடமிருந்து மது வாங்கிக் குடிப்பது அருவெறுப்பா ? அறமா?
மது, சுருட்டு, பீடி, புகையிலை போன்ற பாவங்களை கல்லறையில் படையல் வைப்பதாக படைப்பாளியே இக்கதையில் கூறிவிட்டார்.
அந்த பாவத்தை அவ்வா அருந்துவதால் அறம் பிறழ்வு ஏற்படாதா?
படைப்பாளியின் தந்தை குடிகாரர் (மதுப் பிரியர்) எனில் தந்தையின் பிறழ்வுக்கு படைப்பாளியின் தாத்தா & பாட்டி பொறுப்பில்லையா?
அவ்வாவின் உள்ளக்கிடக்கையை அறிந்திட ஏதேனும் மாற்றுக் காட்சியை கையாண்டிருக்கலாமோ?
புனைவு என்பது படைப்பாளியின் சுதந்திரம். வாசகர்கள் குறுக்கிட முடியாது.
படைப்பாளி அவ்வாவின் வழியே கண்டபடி காரித்துப்பி விட்டார். சிறுநீர் கழித்திட இடம் தேடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ பாரம் குறைந்தால் சரியே…
வட்டார வழக்கு சொற்கள்: –
மேனாமினிக்கி, அவிசாரி, பொண்ண மூச்சிப்பயல், கொஞ்சூண்டு, தெவசம் (தானியம்), கண்ணீரும் கம்பலையும், அஞ்சாறு விட்டம் (ஐந்தாறு முறை), கைநாட்டு (விரல் ரேகை), வாக்காலங் கெட்ட, பலவட்ற, கன்னாசனம் காச நாசம், செவக்கி, சீன்றம்.