“அப்பா நான் பாத்துக்கறேன் நீங்க போயிட்டு வாங்க ”
“ சரிப்பா ”
“ஹாஸ்பிட்டல் கேண்டீன் வேணாம். அஞ்சரை மணி ஆச்சுல்ல பஸ்ஸ்டாண்ட் கிட்ட இருக்கும் கடைல போய் காபி சாப்பிடுங்க”
“சரிப்பா ”
“மறுபடியும் ப்ரிண்ட் போட்டு கொண்டு வந்துருக்கேன் நீங்களே போய் வீட்ல வச்சுருங்க”
இதயத்தின் கனம் இருமடங்காக அப்போது கூடியிருந்தது அவருக்கு. தொங்கிய முகத்துடன் அறையிலிருந்து வெளியேறினார்.
*
மருத்துவமனை நெடி அவர் மீது வீச ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. காபி மிடறு மிடறாய் இறங்குவதைப் போலவே அந்த சில மணித்துளிகளில் கடந்த இரண்டாண்டுகளும் உருளத் தொடங்கியது. ரகு நைட் ஷிஃப்ட் பார்த்திருப்பதால், சனிக்கிழமையாவது ஓய்வு எடுக்கவேண்டும் என்று குளித்துவிட்டு உணவு எடுத்துக்கொண்டு முடிந்தமட்டும் விரைவாகத் திரும்ப வேண்டும் என்கிற பதட்டத்தில் அவர் இருந்தார்.
பேருந்து நகரை விட்டு ஆற்றுப்பாலத்திற்கு வந்திருக்கும் வேளையில், கதிரவனின் ஒளி ஆரங்கள் கலங்கிய ஓடை போல் தன்னைச் சுருக்கிக்கொண்ட நதியின் வண்ணத்தை மாற்றியிருந்தது. ஆற்றின் மறுகரையில் படித்துறை, ஏழெட்டு புரோகிதர்கள் டோக்கன்படி காத்திருக்கின்ற வாடிக்கையாளர்களின் இறந்து போன உறவுகளுக்கு பிண்டங்களை வைத்து சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.
‘ஆடி அமாஸ்யை’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். கண்ணனுக்காக தர்ப்பணம் கொடுத்த நாள் வந்து போனது. சாகுற வயசாடா உனக்கு என்று அவர் உச்சரித்த ஸ்லோகங்களையெல்லாம் கண்ணனைத் திட்டுவதாகவே தோன்றியது. தனது வாழ்வின் ஒருபாதியை முழுமையாக அர்த்தமிழக்கச் செய்துவிட்டான் என்கிற வேதனை.
செல்பேசி.
“ப்ரகாஷா? நல்லாருக்கியாப்பா”
“ ”
“உன் வீட்டுக்காரி சவுக்கியமாப்பா?”
“ ”
“அம்மா. இருக்காப்பா. இப்ப பஸ்ல போயிட்ருக்கேன். வீட்டுக்குப் போனதும் கூப்டட்டுமா? ”
இப்போதெல்லாம் பொசுக்கென அவருக்கு கண்ணீர் வந்துவிடுகிறது.
அண்டை வீட்டில் உள்ளோரோடு நல்ல பழக்கம் உடையவர் என்றாலும், சில காலமாக யாரோடும் பேசுவதில்லை. அவர்களும் இவரைத் தொந்தரவு செய்வதில்லை. வீட்டிற்குள் வந்ததும் சோஃபாவில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.
*
தீராத ஆனால் வெளிப்படுத்த முடியாத கோபம் அவர் முதுமையைக் கூட்டிக்கொண்டே இருந்தது. உண்மையில் உடலில் இல்லாத திராணி அது, தன் மனைவி கீழே விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களாகிறது. எல்லாமும் இவர் தான். ரகுவிற்குப் பெண் பார்த்து முடிவாகிவிட்ட நேரம் இப்படி நடந்துபோக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம் ஒத்திப்போட முடியும் என்கிற கவலை அவரையும் தளர்த்த ஆரம்பித்து இருந்தது.
அவரது மனைவி ஐ.சி.யுவிலிருந்து தனி அறைக்கு வந்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. திருமணத்திற்காக வைத்திருந்த பணம் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும். அவரது மனைவி விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என டாக்டர்கள் சொல்கிறார்கள். தவிர இரத்தக்கொதிப்பும் கட்டுக்குள் வாராததால் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கப் பணித்து விட்டார்கள். சந்திராவும் யாருடனும் பேசவில்லை, அவரது கணவரின் கேள்விகளுக்குக்கூட தலை மட்டும் தான் ஆட்டுவார். ரகு எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன். திருமணம் தள்ளிப்போகும் அழுத்தமும் அம்மாவின் உடல்நிலையை பாதிக்கும் என்பதால் அவனும் ஒன்றும் நடக்காதது போலவே இருந்தான்.
சந்திராவின் ஒரே செய்கை, ஜன்னலை நோக்கிக் கை உயர்த்துவது. கை உயர்த்தியபடியே பல நிமிடங்கள் வைத்திருப்பார். தன் மனைவி என்ன கேட்கிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. சில சமயம் கடிந்துகொள்ளவும் செய்வார். ஏ.ஸி அறையில் எப்படி ஜன்னலைத் திறப்பது என்று தெரியாதவள் அல்ல என்று அவருக்குத் தெரியும். இருந்தபோதும் சந்திராவின் அடம் அவருக்குப் பல நேரங்களில் கோபத்தையே தந்தது.
“என்னன்னு சொல்லித் தொலை”
சந்திராவால் பேச முடிந்தும் ஏன் பேசாமல் இருக்கிறார் என டாக்டர்களே குழம்பினர். ஐ,சி.யுவிலிருந்து மாறியதைத் தவிர ஒரு முன்னேற்றமும் காணாமல் ரகுவும் இவருமாக மாறி மாறி சந்திராவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
*
அவர் குளியலறையில் இருக்கும்போது இருமுறை அழைப்பு வந்தது, ப்ரகாஷ் தான்.
“ப்ரகாஷ் என்னப்பா. ஸாரி குளிச்சிட்டு இருந்தேன். கூப்ட்டத மறந்துட்டேன்”
“ ”
“ரகுட்ட பேசுனியாப்பா. ஆமாப்பா அவளை விட எட்டு வயசு பெரியவன். முதல்ல நான்தான் போகணும்னு சொன்னா உன் அம்மா கேட்கிறாளா”
“ ”
“அப்படியா.. நானா..? ”
“ ”
“இல்லப்பா அழலாம் இல்லை, அதயெல்லாம் கடந்தாச்சு. இன்னொரு பிள்ளையும் இருக்கறான்னு சந்திராதான் நினைக்கல. ஆனா நானும் அப்படியே இருக்க முடியுமாப்பா?”
“ ”
“அவனுக்கென்ன படிச்ச உடனே சம்பாதிக்க ஆரம்பிச்சான். இந்த இன்னிக்கு வரை ஆறு லட்சமாகியிருக்கு. மொத்தமும் அவன் கல்யாணத்துக்கு சேர்த்து வச்சதுதான். அவ சித்தபிரம்மை புடிச்சது மாதிரி கண்ணனைத்தான் நெனச்சுக்கிட்டு இருக்கா. நீயே சொல்லு .. செத்தவன் என்ன திரும்பியா வருவான்”
“ “
“ தெரியும். எனக்கு நீ வேற கண்ணன் வேற கெடையாதுப்பா.. ”
“என்னது இந்தியா வந்துருக்கியா. இங்க வர்றியா.. ”
“ ”
“ சரி உனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரேன்.. இல்ல இல்ல.. எடுத்துட்டு வரேன்”
அவன் பேசி முடிப்பதற்குள் துண்டித்தார்.
**
மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர வேறு எதற்கும் வெளியே வராத சந்திரா. பிரகாஷின் திருமணத்திற்கு முன்னின்று வேலைகள் செய்தாள். வேலைகள் செய்தாளே தவிர அவள் யாரோடும் பேசவோ சிரிக்கவோ இல்லை. ஆனால் அவள் அழுததும்தான் இல்லை. கண்ணனின் மரணச்செய்தியை ப்ரகாஷ் மூலம் அறிந்த போது அவன் பெயரைச் சொல்லி அமர்ந்தவள்தான். இறுதிச்சடங்கு முடித்து அவன் உடலை எடுத்துச் செல்லும்போதும் அழாமல் வெளியே வந்து நின்று இருந்தாள். எல்லோருக்கும் சந்திராவின் மீது பயம் வந்தது. அப்போது அவள் பலரோடும் பேச்சை நிறுத்திவிட்டாள்.
சந்திரா, ப்ரகாஷ் வருவதற்கு முன்பே கண்ணன் வந்து தன்னை ஆற்றுப்படுத்திவிட்டுப் போய்விட்டான் என்று சொன்னால், அதை யாரும் நம்ப மாட்டார்கள். தான் உயிரோடு இருக்க கண்ணன்தான் காரணம் என்றும் தன் இதயத்தை பலமானதாக்கிவிட்டவன் அவன்தான் என்றாலும் வீட்டில் பிரச்சனைதான் மிஞ்சும். சந்திராவை குணப்படுத்த வேண்டுமெனில் கண்ணன் வாசித்த புத்தகங்கள், உபயோகித்தப் பொருட்கள் எவையும் வீட்டில் இருக்கக்கூடாது என எல்லாவற்றையும் பழைய பொருட்கள் கடையில் விற்று விட்டார்கள். அன்றிலிருந்து ரகுவிடமும் அவள் பேச்சு வார்த்தை குறைந்துபோனது.
டாக்டரிடம் அழைத்துச் சென்றதில், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார். மனநல மருத்துவர் எந்தவிதமான ட்ரீட்மெண்ட்டையும் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவரிடம் சகஜமாகப் பேசினார். அது கண்ணனும் மனநல ஆலோசகர் என்கிற காரணத்தால்தான் என டாக்டரே பதில் சொன்னார். சந்திராவின் தூக்கத்திற்கான மருந்துகளை மட்டும் பரிந்துரைத்தார். சந்திராவிடம் பரிசோதித்ததில் சந்திரா இன்னமும் கண்ணனுடன் பேசிக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருப்பதாகச் சொன்னதை தெரிவித்தார். ரகுவுக்குமே அம்மா மீது முதலில் கடுங்கோபம் இருந்தது. டாக்டர் அவரது நிலையை சொல்லவும் துடித்து விட்டான். அன்று முதல் அவர்களது வீட்டில் சந்திராவை ஒரு குழந்தையைப்போல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.
தூக்க மாத்திரை போட்டு இருந்தாலும் அவ்வப்போது தூக்கம் கலைந்து எழுந்துவிடுவார். பெரும்பாலும் அவர்களது வீட்டின் டைனிங் டேபிளில் இருள் கவிழ்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பார். என்னதான் சந்திராவின் நிலை தெரிந்தாலும், சந்திராவின் கணவர் ஒருநாள் கண்ணனின் போட்டோவைக் கீழே போட்டு உடைத்துப் போடவும், சந்திராவின் அழுகை சப்தம் முதன் முறையாக அந்த தெருவிற்குள் கேட்டது. அடுத்த நாளே சமையலறையில் கீழே விழுந்து இடுப்பிலும் தலையிலும் காயம்.
**
மர பெஞ்சை தூக்க முடியாமல், டைல்ஸ் தரையில் இழுத்துக்கொண்டே வந்து அதன் மீது தடுமாறியபடி ஏறி, கண்ணனின் போட்டோவை மாட்டினார். அப்படியே தள்ளாடி கீழிறங்கினார். சப்தமே இல்லாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கண்ணாடியில் தன் முதுமையின் கோரம் இத்தனை வலிமையானதாக இருந்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியிருந்தது. வெடித்து அழ ஆரம்பித்தார்.
ஏ கண்ணா… கண்ணா!!! என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டுருக்கியே
அம்மா பிள்ளை… அம்மா பிள்ளைன்னு… அவளையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதடா. உன் தகப்பனை ஏண்டா இப்படி தெனம் தெனம் கொடுமைப்படுத்தற, அந்தப் பைத்தியக்காரிக்கு நான் வேணாம போகட்டும், இன்னொரு புள்ளை இருக்குதுன்னு தெரியாதா?
தன்னை மீறிய கோபத்தில் அழுதபடியே அருகிலிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தார். திடீரென எங்கிருந்தோ வந்த காற்றின் வேகம், திறந்திருந்த வீட்டின் கதவை சாத்தியது. அதேநேரம் பெட்ரூமின் ஜன்னல் வழி வந்து கொண்டிருந்த அதே காற்று பெட்ரூமின் கதவை தள்ளியது கீழே வைத்திருக்கும் தக்கை சிக்கி பாதி மட்டும் கதவை சாத்தியிருந்தது. அந்த கணமே மின்சாரம் போக, வீட்டில் சொற்ப வெளிச்சம் பெட்ரூமின் ஜன்னல் வழி மட்டுமே வந்தது. சரியாக அவ்வெளிச்சம் டைனிங் டேபிளில் தலை வைத்திருந்த அவரது மீதும் குறுக்காக விழுந்தது. எதிர்புறமிருந்த இருட்டிலிருந்து மெல்லிதாய் ஒரு குரல்.
“ அப்பா.”
“யாரது.. யாரதெ”
“அப்பா நாந்தான்ப்பா…”
“எ… என். என்னது”
ஈஸ்வரா…. என்னால நம்ப முடியலை…. “யார் நீ”
நிசப்தமாய் சில விநாடிகள்
“கண்ணா… நீயா. என்ன வாழ்க்கடா இது”
“பதட்டப்படாதிங்கப்பா… இதுதான் வாழ்க்கை. ஒரு மரணத்தால் கூட சில சங்கிலிகள் அறுபடாது அப்பா ”
“ஐயோ வேண்டாம்ப்பா போயிடு..”
“நான் தான் போய்ட்டேனேப்பா”
அவருக்கு இப்படியான சண்டை கண்ணனோடு எப்பவும் இருக்கறதுதான். கண்ணன் இறந்த அன்றுகூடப் போய்த்தொலை என்று திட்டினேனே அது உண்மையாகிடுச்சே என்று தலையில் அடித்தபடி அழுதார்.
காற்றின் பலம் கூடுதலாக இருந்தது, அவர் உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தியது.
“ அப்பா, இந்த ஒருமுறையாச்சும் கவனிங்கப்பா. அம்மாவவிட நான் உங்களை எண்ணித்தான் அதிகம் கவலைப்படுறேன். நானும் அம்மாவும் ரகுவை விட உங்களப் பற்றிதான் அதிகம் பேசுவோம். ”
“ என்னால எதையுமே கேட்க முடியலை.. எப்படி என் உடல் இந்த உசுரை இன்னும் தாங்குது. தயவு செஞ்சுப் போயிருடா கண்ணா ”
”போகும் காலம் வந்துருச்சு அப்பா. உடல் உசுரை தாங்குறதுன்னு சொல்றது தப்புப்பா. நம்ம உசுர்தான் உடலைத் தாங்குது. இன்னும் ஒரேயொரு விசயம் தான் சொல்வேன். நீங்க விரும்புற மாதிரி நான் புறப்படும் காலம் வந்துவிட்டது”
“ … ”
அவன் அவற்றைச் சொன்னான்.
*
ரகு போனில் அழைத்து, ப்ரகாஷ் வந்திருப்பதாய்ச் சொல்லும்போதே அப்பாவும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுவிட்டதை சொன்னார்.
“ அப்பா!!”
“ப்ரகாஷ் எங்க ரகு”
“அம்மாக்கிட்ட”
“ நீ வேணும்னா கிளம்பு”
“இல்லப்பா ப்ரகாஷ் பார்த்துட்டு வரட்டும். அவனை வீட்ல விட்டுட்டு, நம்ம வீட்டுக்குப் போறேன்.”
“ அவனை வீட்ல விட்டுட்டு அப்படியே படித்துறைக்குப் போறியா”
“அப்பா..”
“ஆடி அமாஸ்யைக்குத்தானே ரகு”
“அண்ணனுக்குப்பா ”
“அப்போ அவனும்…. ”
அதற்குள் ரகுவுக்கு அட்வகேட்டிடம் இருந்து போன் வந்தது.
“அப்பா MCOP கேஸ் ரிவார்ட் ஆகிருச்சாம்”
ரகு சொன்ன பதிலை முழுவதுமாக உள்வாங்கிடாது, சந்திராவின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ரகுவும் கண்ணீர் விட்டபடியே அப்பாவைத் தொடர்ந்தான்.
உள்ளே சந்திரா ப்ரகாஷின் தலையில் கை வைத்தபடி ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரகாஷ் சப்தமில்லாமல் அழுதுக்கொண்டிருந்தான். மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த அவரது கணவரின் நெற்றியில் குங்குமம் இருந்ததை கவனித்தார். உடல் சிலிர்க்கத் தொடங்கியது. ப்ரகாஷும் அவரைக் கண்டதும் அப்பா என எழுந்தான். அவன் தோளில் கைவைத்து அமர்த்திவிட்டு சந்திராவின் அருகில் சென்று பாக்கெட்டிலிருந்த காகித பொட்டலத்தை திறந்து குங்குமம் எடுத்து சந்திராவின் நெற்றியில் வைத்தார்.
இத்தனை நாட்களில், ஏன் கண்ணனின் மரணத்திற்கு பின்னர் இதுவே முதல் முறை. சந்திராவுக்கு கண்ணீர் வருவது இரண்டாம் முறை.
“உன் வீட்டுக்காரி எங்கப்பா”
“ஸ்டேட்ஸ்ல இருந்து வந்து இது மூணாவது நாள். அவளுக்கு இன்னமும் ஜெட்லேக் போகல. காலைல வரேன்னுதான் எழுந்தா. ஆனா மயக்கமா இருக்குன்னு படுத்துட்டா”
“பரவால்லப்பா.. அது” வேறு ஏதோ கேட்க வந்து நிறுத்திவிட்டு, சந்திராவைப் பார்த்து திரும்பினார். சந்திராவின் முகத்தில் குழப்பங்கள் தென்பட்டன. அவள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தார். அதற்குள் ரகு உள்ளே வந்து அப்பா அண்ணன் கேஸ்ல ரிவார்ட் ஆகிருக்குப்பா.
”ப்ச்ச்ச் ”
“ஸாரிப்பா ”
“எனக்கு ஏன்டா ஸாரி சொல்லுற” என்றபடியே ரகுவின் தோளைத் தட்டிக்கொடுத்தார். ப்ரகாஷின் போனிலிருந்து சப்தம். அழைப்பை எடுத்தபடி அறையை விட்டு வெளியேறினான். ரகுவும் அவனோடு நகர்ந்தான். இருவரும் வெளியேறிய பின்னர் மெதுவாக வந்து சந்திராவின் காதருகே சன்னமான குரலில் கேட்டார்.
“நம்ம ப்ரகாஷ் கல்யாணம் பண்ண பொண்ணு, கண்ணனுக்கும் ஃப்ரண்டு தானா?” என்று கேட்டார்.
அவர் மனதில் பிரகாஷ் கல்யாணத்தில் சந்திரா அத்தனை வேலைகளையும் முன்னின்று செய்தது நினைவில் திரையாக ஓடியது. சந்திரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென சந்திராவின் நெற்றியில் முத்தமிட்டார்.
“என்ன மன்னிச்சுடு சந்திரா ”
அதற்குள்.
“அப்பா” ப்ரகாஷின் குரல், உற்சாகமாய் வெளிப்பட்டது. அறையை விட்டு வெளியே வந்து ப்ர்காஷிடம் என்னவென்று விசாரித்தார்.
“நல்ல விசயம் தான் ப்ரகாஷ்… ”
“அம்மா கிட்ட நம்ம கண்ணன் திரும்பவும் வருவான்னு சொல்லவாப்பா. அம்மா ஒருவேளை உளவியலா மாறலாம்லயா?”
“அது தேவைப்படாதுப்பா. ஒரு உசுரு புதுசா உன்னையும் உன் மனைவியையும் தேர்ந்தெடுத்துருக்கு. நீங்க அதற்கு உடல் கொடுக்கப்போறீங்க. இந்த செடி, விருட்சமாகி, அதுவும் விருத்தியடைஞ்சு புது வனம் உண்டாகும். அத ப்ரகாஷோட புள்ளையாவே நாங்களும் எடுத்துக் கொஞ்சுவோம். கண்ணன் நம்ம எல்லோரோடைய ஆரோக்கியத்துலயும், சந்தோசத்துலயும் ஒருநாள் எதுவாகவோ மாறுவான். அதுவரை கண்ணன் இன்னொரு உரு எடுக்கமாட்டான். ”
“அப்பா ”
“கண்ணன் எங்களோடதான் பா இருக்கறான் ”.
மீண்டும் சந்திராவின் அறைக்குச் சென்று, அவள் எப்பவும் கை தூக்கி காண்பிக்கும் ஜன்னலை முழுமையாகத் திறந்துவிட்டார்.
“என்னங்க”
சிரித்தபடியே கதவை சாத்திவிட்டு வெளியேறினார். ஏற்கனவே ப்ரகாஷையும், ரகுவையும் காரில் காத்திருக்க சொல்லியிருந்ததால் விரைவாகவே பார்க்கிங் நோக்கிச் சென்றார்.
மாலை நேரத்திலும் படித்துறையில் பிண்டங்களை வைத்து தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்கள். கண்ணன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், அவருக்குள்ளே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
பெயரென்ன : கண்ணன்
ராசி, நட்சத்திரம் :
இருவருமே சொன்னார்கள்.
*
சந்திரா கொஞ்சம் எழுந்து அமர்ந்தபடி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அணைத்துப் போட்டிருந்த விளக்கொளியையும் மீறி கதவின் இடுக்குகளின் வழி ஒளி கீற்றாகக் கோடு போட்டது.
“ அம்மா”
அதுவே கடைசி முறை எனச் சந்திராவுக்கு அவன் சொல்லிவிடுவான்.