ஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை

“ஆட்டோ அர மணி நேரமா நிக்கி..சொன்னா சொன்ன டைம்க்கு கெளம்ப மாட்டியோ..அவன் இன்னா போயிருவான்..வேற சவாரி இருக்குன்னு சொன்னவன மெனக்கெட்டு வரச் சொன்னா, நீ வெளாடிட்டுக் கெடக்கியா?” ஃபோனில் எரிந்து விழுந்தார் என் கணவர்.

பெரியவளுக்கு சாப்பாடு கொடுத்து அம்மாவுக்கும் எனக்கும் இட்லியும் மிளகாய்ப் பொடியும் எடுத்து சம்படத்தில் வைத்துக் கொண்டிருந்தபோது சிறியவள் தொட்டிலை ஈரமாக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.

“நீங்க வாய் பேசாதீங்க..பொண்டாட்டிய வந்து கூட்டிட்டுப் போகக் கழியல்ல…ரெண்டு பிள்ளேலயும் கூட்டிட்டு எப்பிடி வருவான்னு ஒரு அக்கற இருந்தா வந்திருப்பீங்க…ஒங்களுக்கு நாங்களா முக்கியம்?”

“திரும்பத் திரும்ப அதயேச் சொல்லாத பாத்துக்கோ..வர முடிஞ்சா நா வந்துருப்பேன்லா? வேலைக்கு ஏத்த மாதிதான எல்லாத்தயும் ப்ளான் பண்ண முடியும்?”

“ஆமா…பெரிய வேல..பிள்ளேல பாக்க ரெண்டு மாசமா வர முடியாத்த வேல..”

“நிறுத்து..மறுபடியும் ஆரம்பிச்சிராத தாயே..சட்டுன்னு கெளம்பு மொதல்ல..ட்ரெய்ன விட்றாத…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார். அதென்ன, ஒவ்வொரு முறையும் ஃபோனை வைக்கும்போது எதுவும் சொல்லாமல் சட்டென வைப்பது? சரி, வைக்கிறேன் என்று கூடவா சொல்ல முடியாது? அலுவலக அழைப்புகளிலும் ஸ்கைப் இலக்கியக் கூட்டங்களிலும் அவ்வளவு இனிமையாகப் பேச முடிகிறதே!

அவசர அவசரமாகக் கிளம்பி இரயில் நிலையத்தை அடைந்து இரயிலில் ஏறி உட்காரவும் இரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. இரண்டு பெரிய ட்ராலிகளையும் கொச்சங்கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப் பெட்டியையும் தூக்கி வைத்து பிள்ளைகளையும் அம்மாவையும் பத்திரமாக ஏற்றி உட்கார வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த ஏத்தங்காய் வத்தலும், உப்பேறியும், கைச்சுத்து முறுக்கும் என்ன கனம்! ஆனாலும் என்ன? காலையில் தேநீர் குடிக்கும்போது, “எட்டி, எதாங் கொண்டாந்தியா?” என்று கேட்பாரே!

வேண்டுமென்றால் தாய்மாமாவையோ பெரியம்மா மகனையோ கூட அழைத்து வந்திருக்க முடியும். ஒரு வீம்பில், “நா எங்கம்மா கூடயே வந்துருவேன்..நீங்க ஒங்க வேலயப் பாருங்க” என்று சொல்லி விட்டேன். அதிகமாக யோசித்தாலோ கடின வேலை செய்தாலோ இந்தக் கழுத்து நரம்பு வேறு ஒருபுறமாக இழுத்துக்கொள்கிறது. ஏறி உட்கார்ந்ததும் வெப்ராளமாக வந்தது.

இரயில் கிளம்பி அரை மணி நேரம் ஆகி விட்டது. ‘கெளம்பியாச்சா?’ என்று ஒரு ஃபோன் பண்ணிக் கேட்கக் கூடவா முடியாது? இதற்குத்தான் பன்னிரண்டு வருடம் காத்திருந்து திருமணம் செய்தேனா? வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சொல்வது, ‘ஒனக்கென்ன? லவ் மேரேஜ்..அவன் எவ்ளோ பெரிய ஆளு? எவ்ளோ பெரிய பொறுப்புல இருக்கான்? ராணி மாதில்லா வச்சிருக்கான்!’. ராணியாக இருப்பது அவ்வளவு சுகமான விசயமொன்றுமில்லை. எரிச்சலும் வெறுப்பும் ஏறிக்கொண்டே போக ஒருபுறம் அழுகை அழுகையாக வந்தது.

ஃபோனை எடுத்து வாட்ஸப்பைத் திறந்தேன். எதிர்பார்த்த மாதிரியே அவரது எண் உபயோகத்தில்தான் இருந்தது. வந்த கோபத்தில் மனதில் வந்ததையெல்லாம் டைப் செய்து அனுப்பினேன்.

‘ஒங்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி, புள்ள? இப்பிடி என்ன பரிதவிக்க விடதுக்கு நீங்க கல்யாணம் பண்ணாமயே இருந்துருக்க வேண்டியதான? ஒங்களுக்குப் புடிச்ச மாதி, ஒங்க வேலக்கி ஏத்த மாதி எவளயாம் கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதான? புள்ளத்தாச்சின்னு கூட ஒரு எரக்கம் இல்லல்லா? ஒங்களுக்குப் புடிச்சதத்தான் பண்ணுவீங்கன்னா நீங்க கல்யாணம் பண்ணிப் பிள்ள பெத்துருக்கக்கூடாது. வேல, புக்ஸ், ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்னா என்ன எதுக்கு இப்டி ஒரு வாழ்க்கைல தள்ளி ஏமாத்தணும்? நீங்க ஃப்ரீயா இருக்கும்போ மட்டுந்தா நா பொண்டாட்டியா இருக்கணுமா? எப்பவும் இப்டிதா இருப்பீங்கன்னா நா ரெண்டாவது இவளயும் பெத்துருக்க மாட்டம்லா? பெரியவ ‘அப்பா, அப்பா’ன்னு அழுகா, இப்பதான அவ பக்கத்துல இருக்கணும்? கேட்டா, வேலய எவம் பாப்பான்னு சொல்லுவீங்க..ஊர்ல அவவன் வேலயயும் பாத்துட்டு குடும்பத்தையும் கவனிக்காமலா இருக்கான்? எம் மூஞ்சில முழிச்சிராதிங்க பாத்துக்கோங்க..எம் பிள்ளைளுக்காகத்தா நா வாறேன்..நீங்க ஒண்ணும் ஸ்டேசனுக்கு வராண்டாம்..நானே பஸ் புடிச்சி வந்துருவேன்..’

இன்னும் கேட்பதற்கு எவ்வளவோ இருந்தது. வாட்ஸப்பில் இரண்டு நீல நிற டிக்குகள் வந்தன. பதில் வராது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்த விசயம்தான்.

ஒரு மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது. துண்டித்து விட்டேன். ஐந்தாறு முறை அழைத்தார். நானும் துண்டித்து விட்டேன். ஒரு மெசேஜ் வந்தது.

‘ஓவரா பண்ணாத..கடுப்பு மயிரக் கெளப்பிட்டுக் கெடக்காத பாத்துக்கோ..ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ண முடியாதோ?..எல்லாத்தயும் தூக்கிப் போட்டு ஒடச்சிருவேன்..திமிரு..மயிரு..’

அவருக்குச் சின்ன எரிச்சல் வந்தாலும் இந்த ‘மயிரு’ வார்த்தை வந்துவிடும். நானும் பேசலாம் இல்லையா? என் அப்பாவிடம் கேட்காத கெட்ட வார்த்தையா என்ன? சரியான பதில் பேச முடியவில்லை என்பதால்தானே கெட்ட வார்த்தைகள் வருகின்றன?

மீண்டும் அழைத்தார். ஃபோனை எடுத்து அமைதியாக இருந்தேன். கோவமும் வெப்ராளமும் அடங்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றையும் செய்ய மாட்டாராம், நான் மட்டும் இயந்திரமா என்ன?

“நாந்தா ட்ரெய்னிங் இருக்குன்னு சொன்னம்லா? இப்பதா கேம்ப் ஃபயர் முடிஞ்சி சாப்பிடப் போறேன்..பிள்ளேல் தூங்கியாச்சா?” என்று கேட்டார்.

“நீங்க ஒங்க வேலயப் பாருங்கப்பா…எங்களப்பத்தி எதுக்கு கவலப்படுகீங்க? நல்லா சிரிச்சி சிரிச்சி ஆட்டம் போட்டாச்சுல்லா? போயி எவ கூடயாம் சாட் பண்ண வேண்டியதான?” என்று லேசாகக் கத்த அம்மா என்னைப் பார்த்து கண்ணைக் காட்டினார். இப்படிக் கேட்டால் என் கணவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

“ஆமாட்டி..அப்டித்தாம்ட்டி ஆடுவேன்…ஒஞ் சோலியப் பாருட்டி மயிரே..பெரிய மத்தவ..என் வேலயப் பத்திப் பேசுன, பல்லு கழந்துரும் பாத்துக்கோ..” என்று எனக்கும் மேலாகக் கத்திவிட்டுத் துண்டித்து விட்டார்.

எனக்கும் கோபம் தலைக்கேறியது. என்ன செய்ய முடியும்? சிறியவளை நெஞ்சோடு அணைத்துக் கண்ணை மூடி உட்கார்ந்தேன்.

அவரது வேலையைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது நண்பர்களைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசக் கூடாது. சரி, அதையெல்லாம் கூட பொறுத்துக்கொள்ளலாம். அவரது நேரத்தையும் உடனிருப்பையும் கூட கேட்கக் கூடாதா?

ஒரு ஞாயிற்றுக் கிழமை. இறகுப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு காலை எட்டு மணிக்குச் சென்றவர் மதியம் இரண்டு மணிக்கு திரும்பி வந்தார். வியர்வையில் நனைந்து வீட்டில் நுழைந்தவர், “எட்டி, கறி வெச்சிட்டியா? பெப்பர் ஜாஸ்தியா போட்டியா? செம பசி பாத்துக்கோ..” என்றார்.

நான் பதில் ஏதும் பேசாமல் சமையலறையில் நின்றேன். பெரியவள் சென்று, “அப்பா, வாங்க வெளயாடுவோம்…நாந்தா ரோஸி மிஸ்…நீங்க ஸ்டூடண்ட்…” என்று அவரைக் கட்டிப்பிடித்தாள். சட்டென்று அவளைத் தள்ளிவிட்டவர், “தள்ளிப் போட்டி அங்க…எத்தன வாட்டிச் சொல்லது..வெளாடிட்டு வரும்போ வந்து மேலச் சாடாதன்னு…” என்று கத்தினார்.

பெரியவள் பயந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அவ கட்டிப்புடிச்சா ஒங்களுக்கு என்ன கொறஞ்சிரும்? பிள்ளய தள்ளிவிடதப் பாரு..மனசாட்சியே கெடயாது..” என்று நான் கத்தினேன்.

“தேவயில்லாமப் பேசாத பாத்துக்கோ..”

“ஆமா, நா பேசுனா ஒங்களுக்குத் தேவயில்லாமத்தா தெரியும்…ஞாயிற்றுக் கெழமையும் பொண்டாட்டி, பிள்ள கூட நேரம் செலவழிக்க முடியாது…பேட்மிண்டன் ரொம்ப முக்கியம்லா? சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுந்தா வீட்டுக்கு வறீங்க..பொறவு நீங்க தூங்குவீங்க, நாங்க தொந்தரவு பண்ணக் கூடாது..சாய்ங்காலம் மாடில போயி போன வச்சிட்டு லாந்துவீங்க…அதயும் கேக்கக் கூடாது…அப்போ, நானும் பிள்ளயும் எதுக்கு இங்க இருக்கோம்? பேட்மிண்டன் இப்ப ரொம்ப அவசியம்லா…” என்று பெரியவளைக் கட்டிக்கொண்டேன்.

“நீ அழாதம்மா…ஒங்கப்பாக்கு நம்மல்லாம் முக்கியமில்ல..” என்று சொல்ல அவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.

முறைத்துக்கொண்டே நின்றவர் சட்டென தனது இறகுப் பந்து மட்டையை எடுத்து கால் முட்டியில் வைத்து இரண்டாக உடைத்துப் போட்டார்.

“இந்தா…எடுத்துக் குப்பைல போடு…சந்தோசமா இரி…” என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

….

எதிர் படுக்கையில் அம்மா பெரியவளை தட்டிக் கொடுத்து ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி சந்திப்பு. வழக்கமாக இரயில் அங்கே நிறைந்து விடும். அன்றும் நல்ல கூட்டம். எங்களுக்கு கீழ்ப்புறப் படுக்கை ஒன்றுதான் கிடைத்திருந்தது. வருபவர்களிடம் பேசி இன்னொரு கீழ்ப்புறப் படுக்கை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் படுக்கை என்றால் இன்னும் வசதி. ஆனால், கூட்டமிகுதியால் அன்று அதுவும் RAC-யாகத்தான் இருக்கும்.

ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அந்தத் தாத்தா என்னைப் பார்த்ததுமே, “நீ கீழயே படுத்துக்கம்மா..ஒனக்கு மிடிலா? அப்பரா?” என்று கேட்டார்.

“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா..எனக்கு அப்பர்..ஒங்களுக்கு கஷ்டமா இருக்கும்லா?”

“பரவால்லம்மா..ஏறிட்டாப் போரும்..தூங்கிருவேன்..அவ மிடில் ல ஏறிருவா..பிரச்சன இல்ல..” என்று தன் மனைவியைப் பார்த்து சிரித்தார்.

அந்த ஆச்சி வந்து சிறியவளைப் பார்த்து, “ரெண்டும் பொண்ணாம்மா? அதிர்ஷ்டக்காரில்லா நீ…நல்லா இரி..” என்று என் தலையைத் தொட்டு விட்டு அவரது படுக்கையில் ஏறினார்.

அம்மா ஒரு புடவையை படுக்கைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் தொட்டிலாகக் கட்டினாள். சிறியவளுக்கு ஸ்வெட்டர் போட்டுவிட்டு அவளைத் தொட்டிலில் போட்டு ஆட்டினேன்.

குடும்பவீட்டுப் பாரம்பரிய ஊஞ்சலில் நான் படுத்திருக்க எதாவது கதை சொல்லிக்கொண்டே ஆட்டி விடுவார் தாத்தா. தாத்தா இல்லாவிட்டால் ஆச்சி. நல்ல தேக்கு மர ஊஞ்சல். கீழே தொங்கும் சின்னஞ்சிறு மணிச் சத்தமும் கதையுமாக ஆடிக்கொண்டே தூங்கிவிடுவேன்.

“எட்டி…பொம்பளப் பிள்ள..நாளக்கி ஒருத்தன் வீட்டுக்குப் போகும்போ ஊஞ்சலுக்கு என்ன செய்வ?” என்று ஆச்சி அடிக்கடி கேட்பார்.

“ஆங்…ஊஞ்சல் வாங்கித் தந்தாதான் தாலியே கெட்ட விடுவேன்…” என்று சொல்வேன். அப்படியொரு ஊஞ்சல் எனக்கே எனக்கென என் வீட்டில் இருக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை.

திருமணமான புதிதில் ஒருநாள் அவரிடம், “ஏம்ப்பா, எனக்கு ஊஞ்சல் எப்போ வாங்கித் தருவீங்க?” என்று கேட்டேன்.

“ஊஞ்சலா? எதுக்கும்மோ? சின்னப் பப்பாவா நீ?” என்று சொல்லிச் சிரித்தார்.

“நீங்க தான சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சி வாங்கித் தாறேன்னு…”

“வெளயாடாத பாத்துக்கோ…வர சம்பளத்துல பத்து ரூவா சேத்து வைக்க முடியல..இதுல, ஊஞ்சல் தான் கொற இப்போ…”

எத்தனை முறை கேட்டாலும், எவ்வளவு வசதி வந்தாலும் எனக்கொரு ஊஞ்சல் அமையவில்லை. அவரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு ஆடம்பரம். ஆனால், ஊஞ்சல் என்னுடன் பேசும், அது என்னைத் தடவிக் கொடுக்கும், எனக்கான பாடல்களைப் பாடும், தாலாட்டும், என் வலிகளை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது? பெரியவளுக்குக் கட்டிய தொட்டிலில் உட்கார்ந்து ஆடி அதையே என் ஊஞ்சலாக நினைத்துக் கொள்வேன்.

..

கைப்பையின் மேல் அம்மாவின் புடவையை மடித்து வைத்துத் தலையணையாக்கிச் சாய்ந்தேன். இரயிலில் பொதுவாக நான் தூங்குவதேயில்லை. வேலை செய்த நாட்களில் உருவான ஒரு பயம். ஏனோ இன்னும் தொடர்கிறது. நவ நாகரிகம், சமத்துவம், உரிமைக்குரல் எல்லாம் சரிதான், ஆனால் இந்த பயம் மட்டும் ஏனோ கூடவே இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் சென்ற பயணங்களில் அவர் தூங்குவதையே பார்த்துக்கொண்டு கிடப்பேன். பெரியவள் பிறந்த பிறகான பயணங்களில் அவளைத் தூங்க வைத்து எதையாவது யோசித்துக் கிடப்பேன். யோசிப்பதற்குத்தான் எப்போதும் நிறைய இருக்குமே!

சென்னை ஸ்பென்சர் பிளாசாவின் முன் அவருக்காகக் காத்திருந்தது ஞாபகம் வந்தது. அவர் எப்படி வருகிறார் என எதுவும் சொல்லியிருக்கவில்லை. திடீரென எனக்கு மிக அருகில் வந்து ஒரு அப்பாச்சி பைக் நிற்க தலைக்கவசம் போட்ட அந்த நபர் எனைப் பார்த்து தலையசைத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளுக்குள் நடுங்க, “ஏய் லூசு, வந்து ஏறு” என்றார்.

பைக்கில் ஏறிய நொடி முதல் திருவல்லிக்கேணி ஆண்டாள் சந்நிதி முன் சென்று நிற்கும் வரை நான் மனதிற்குள் பல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆண்டாள் சந்நிதியில் வைத்து எனக்கு ஒரு பரிசு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். நான் கண்மூடி வேண்டியிருக்க, “மகளே, உன் தவத்தைக் கண்டு யாம் மெச்சினோம்..என்ன வரம் வேண்டும், கேள்” என்று என் தலையில் தட்டினார். எப்போதும் போல நான் சிணுங்க ஆரம்பிக்க, அழகான ஒரு வெள்ளி மோதிரத்தை நீட்டினார். அந்த நாள் ஆண்டாள் நிச்சயித்த எங்கள் திருமண நாள் என நினைத்துக்கொண்டேன்.

என் மனத்தில் ஊற்று பெருக்கெடுத்தது போல சட்டென மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவருடனான என் அத்தனை மகிழ்ச்சிக் கணங்களும் எனைச் சுற்றிப் பெருகி நின்றன. அவரது முதல் சம்பளத்தில் எனக்காக எங்கள் பெயரைக் கவிதையாக்கி நெய்து அவர் அனுப்பிய பட்டுப் புடவை என் அப்பா கையில் மாட்டிக் கொள்ள நான் ஏதோ சொல்லிச் சமாளித்தது, தூங்கிக் கொண்டிருந்தபோது என் கண்களை மட்டும் புகைப்படம் எடுத்து அதை சட்டமிட்டுக் கொண்டு வந்து என் அறையில் எனக்குத் தெரியாமல் மாட்டியது, என் பிறந்த நாளன்று எனக்குப் பிடித்த தந்தூரிச் சிக்கன் வாங்கி அதை எனக்குத் தராமல் அவர் சீண்டியது, எனக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல் என் அத்தனை சொந்தங்களையும் சமாளித்து அவர் என்னைக் கட்டிக்கொண்டது, பிறக்கப் போவது மகள்தான் என அவர் உறுதியாக நம்பியிருந்தது, அதைப் போலவே பெரியவள் பிறக்க, அவர் செய்து வைத்திருந்த அழகான குட்டி மோதிரத்தை நாங்கள் அவளுக்குப் போட்டு விட்டது….இன்னும் எத்தனையோ கணங்கள்..

மீண்டும் வாட்ஸப்பைப் பார்த்தேன். அவர் இன்னும் தூங்கியிருக்கவில்லை.

சிறியவள் பிறந்திருந்த சமயம். ஒருநாள், வேலையெல்லாம் முடித்து அவளைத் தொட்டிலில் போட்டு நீண்ட நேரம் ஆட்டிக்கொண்டிருந்தேன். கைவிரல் முதல் தோள்பட்டை வரை பயங்கரமாக வலித்தது. அவர் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார்.

“ஏம்ப்பா, கொஞ்சம் வந்து ஆட்டுங்க…” என்று நான் அழைத்தேன். திரும்பிப் பார்த்தவர் தலையை ஒருமுறை ஆட்டிவிட்டுத் தொடர்ந்து வாசித்தார். உடல் வலியும் மன வலியும் சேர்ந்து நான் கண்கலங்கி கைமாற்றிக் கைமாற்றி ஆட்டிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடம் கழித்து வந்தவர் தொட்டில் கயிற்றைப் பிடிக்க, “நீங்க போய் ஒங்க வேலயப் பாருங்க…” என்று வெட்டி இழுத்தேன்.

“செவுட்டடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க..தள்ளிப் போட்டி அங்க…பெரிய வீம்பு காட்டுகா வீம்பு..” என்று கத்தினார்.

“ஆமா, முடியாம எல்லா வேலையுஞ் செஞ்சு கை வலிக்குன்னுதான ஒங்கள ஆட்டக் கூப்புட்டேன்…என் வலி எனக்கு..நீங்க ஒங்க புக்லயே இரிங்க…” என்று சொல்லி அழுதேன்.

“இப்பிடிக் காராடிக் காராடித்தான நா பேட்மிண்டன் வெளயாடுறத கெடுத்த..இப்ப நா புக்கும் படிக்கக் கூடாதா? இன்னா, எல்லாத்தயும் தூக்கிப் போட்டுக் கொளுத்து..” என்று கத்தி மேசையில் அடுக்கி வைத்திருந்த அத்தனைப் புத்தகங்களையும் விசிறியடித்தார்.

நான் புத்தகம் வாசிக்க வேண்டாமென்றா சொன்னேன்? வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளுடன் கொஞ்சம் விளையாட வேண்டும், எனக்கு முடியாத போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ‘செய்யட்டுமா?’ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா என்ன?

கோபத்தில், “எத்தன புக் படிச்சி என்னத்துக்கு? ஒங்க புக்லெல்லாம் பாசம்னா என்னன்னு சொல்லித் தரல்லயா? எல்லாருக்கும் வேண்ணா நீங்க பெரிய அறிவாளியா இருக்கலாம்..எனக்கு நீங்க ஒரு வேஸ்ட்டு தான் பாத்துக்கோங்க…சுயநலம்…சுயநலம்…” என்று கத்திவிட்டேன்.

“மண்ணாங்கட்டி…நீ ஒரு முட்டாளா இருக்கேன்னா அதுக்கு நானும் அப்பிடி இருக்க முடியாதுல்லா?..நா புக்க எடுக்கும்போதான் அவளுக்கு வேல மயிரு வரும்..பகல் ஃபுல்லா வேல..ராத்திரி ஒறங்கக்கூட நேரம் கெடயாது. பொறவு ஒருத்தன் எப்பதா தனக்குப் புடிச்சத செய்யது?”

“ஓ…அப்ப நானும் எனக்குப் புடிச்சத மட்டுஞ் செய்யவா? குடும்பத்த அப்போ யாரு பாப்பா? நீங்க ஊர் ஊரா சுத்தும்போ புக்க கெட்டிட்டு அழுங்க..இங்க இருக்கதே மாசத்துல பாதி நாளு…தனியா இருக்கும்போ ஒவ்வொரு நாள் ராத்திரியயும் கடக்கதுக்கு கெதம் கெதம்னு வரது எனக்குதான தெரியும்.” என்று அழ ஆரம்பித்தேன்.

மனது கனமாக ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் நுழைந்தேன்.

‘ஹேப்பி ஆஃபிஸ் வர்க் ஷாப்’ என்று தலைப்பிட்டு பல புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இவர் நடுவில் நிற்க ஒரு பத்து பெண்கள் ‘யோ யோ’ சைகை வைத்துக் கொண்டும், வாய்விட்டுச் சிரித்துக்கொண்டும் நின்றனர். அதில் ஒரு பெண் இவரது தலைக்கு மேல் கொம்பு வைத்துச் சிரித்து நின்றாள். கீழே அவரது குறிப்பு ‘வித் த பெஸ்ட் கேர்ள்ஸ் ஆன் எர்த்’ என்று. வயிறு எரிந்துகொண்டு வந்தது.

திருமணமான புதிதில் அவரது சித்தி வீட்டிற்கு மறுவீடு சென்றிருந்தபோது அவரது தங்கை ஓடி வந்து அவரது மடியில் சாய்ந்து படுத்தாள். அதற்கே சண்டை போட்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தேன் நான். நான் சொல்வது முட்டாள்த்தனமாகத் தோன்றலாம். ஆனால், காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இந்த நொடி வரை நான் அப்படித்தான் இருக்கிறேன். சும்மா குறுகிய மனப்பான்மை என்று தள்ளிவிட முடியாது.

சண்டை போட்டு நான் அழுதுகொண்டிருக்கும்போதும் எப்படி அவரால் ஃபேஸ்புக்கில் இருக்க முடிகிறது. சமாதானப் படுத்துவதற்கு ஒரு சிறிய மெசேஜ் கூட போட முடியாதா?

கோவை சந்திப்பு. நான் பிள்ளைகளை எழுப்பி ட்ராலிகளையும் அட்டைப் பெட்டியையும் எடுத்து வைத்தேன். அம்மா பெரியவளைப் பிடித்துக் கொள்ள, நான் சிறியவளைத் தோளில் போட்டுக்கொண்டு ஒரு ட்ராலியை இழுத்தேன். திருநெல்வேலித் தாத்தா எழுந்து எனது இன்னொரு ட்ராலியையும் அட்டைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டார்.

“பரவால்ல தாத்தா..அவரு வந்துருப்பாரு..” என்றேன்.

“ஒண்ணுல்லம்மா…நீ பாத்து எறங்கு..” என்றார்.

நடைமேடையில் இறங்கி நிற்க, தாத்தா என் மகள்களின் கன்னங்களைத் தொட்டு விரல்களால் முத்தமிட்டுவிட்டு ஆச்சியின் கையைப் பிடித்து நடந்தார்.

வழக்கம்போல என் கணவர் தாமதமாக வந்தார். நான் அவர் முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்காமல் நிற்க, வந்து சிறியவளைத் தூக்கி முத்தமிட்டார்.

பெரியவள் அவர் காலைக் கட்டிக்கொண்டு, “அப்பா, பால்கோவா வாங்குப்பா…பால்கோவா…” என்று கொஞ்ச ஆரம்பித்தாள்.

வாகன நிறுத்துமிடத்தில் எங்கள் கார் அழுக்குப் படிந்து நிற்க, நான் அம்மாவைப் பார்த்து சைகை செய்தேன். அம்மா தனக்குள்ளாகச் சிரிக்க, அவர் முறைத்துக்கொண்டு நடந்தார்.

வீடு சென்று சேரும் வரை அப்பாவும் மகளும் ஒரே கும்மாளம்தான். வீட்டைப் பார்த்ததும் எனக்குத் தலைவலியே வந்துவிட்டது. வீட்டு முற்றம் முழுதும் மாவிலைச் சருகுகள் குவிந்து கிடந்தன. ரோஜாச் செடிகள் எல்லாம் தண்ணீரின்றி வாடிக் கிடந்தன.

“இந்தத் தொளசிக்குக் கூட தண்ணிவிடக் கழியாதா?” என்று எனக்குள்ளாகப் புலம்பினேன். அவர் வீட்டுச்சாவியை பெரியவளிடம் கொடுத்து, “அம்மாட்டக் குடு மக்ளே” என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றார்.

எரிச்சலுடன் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தேன். வரவேற்பறையில் ஒரு புத்தம்புதிய தேக்கு மர ஊஞ்சல் என்னை வரவேற்றது. அதன் மீது பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.

2 comments

  1. நன்றாக இருந்தது.ஆண்கள் எல்லாம் ஒரே ரகம் தான்.மனைவியை புரிந்து கொள்வதில் என்று தோன்றியது. surprise ஆக ஊஞ்சல் இருந்தது மகிழ்ச்சி யாக இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.