பாரங்கள் சுமந்தபடி ஓட்டமும் நடையுமாய் இடம் பெயர்ந்தபடியே இருக்கும் மனிதர்களின் கதை கழுதைப் பாதை, இந்தக் கதைகள் மேற்கு தொடர்ச்சி மலையும் அதன் அடிவாரங்களும் கண்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வின் சிறு துளி, இயற்கையால், மனிதனின் ஆசையால், விதிவசத்தால், இன்னதென்று கூறமுடியாத, பின்னிப் பிணைந்த மனித உறவுகளின் நிழல் பற்றி,தொல்கதைகளின் தொகுப்பென விரிகிறது கழுதைப்பாதை.
நாவலின் போக்கு கதை நாயகனின் தேவையை பின்பற்றியோ, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட இலக்குடனோ பயணிக்கவில்லை. மாறாக ஒரு ஆவணதொகுப்புக்கான நுண் விவரங்களின் கவனத்துடன், பலதரப்பட்ட கதைமாந்தர்களின் பார்வைக்கோணத்திலும், சிறிய பெரு நிகழ்வுகளின் துல்லிய புறவிவரிப்பின் வழி, ஒரு அட்டகாசமான காட்சியனுபாவமாக அமைந்திருக்கிறது. பூர்வகதை அல்லது ஆதி கதை என்று உத்தி வழி காலத்தின் தொடர்ச்சியை மலையின் பூடகத்தை தக்கவைத்துள்ளது.இந்த அழகியல் தேர்வுகளே இந்நாவலை குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றுகிறது.
மலை என்னும் பூடகம்
என் வீட்டின் அருகே சிறிய மலை உண்டு. மலை என்று கூட கூற முடியாது , சிறு குன்று. கல்குவாரி போக மீந்து நிற்கும் நிலமகன். சிறிய அளவினதே ஆனாலும் இம்மலையை காணுகையில் இன்னவென்று அறியாத ஒரு பணிவு போன்ற உணர்வு மனதில் எழும். கைகள் தன்னால் கூப்பித்தொழும். மலையின் கருணை குறித்த இந்தப் பணிவு, பயம், இந்நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது , ராக்கப்பன்,கங்கம்மா என்னும் தொல் தெய்வங்களின் கருணை முதுவான்களை, மலையை நம்பி வாழ்பவர்களை வழி நடத்துகிறது, இப்பணிவின் நிழலில் நாம் அறியாத அனைத்தையும் வைக்கிறோம், நமது தவறுகளின் குற்றஉணர்வையும், இயற்கையை சந்தையாகும் நம் சாமர்த்தியத்தையும் சேர்த்தே இந்நிழலில் வைக்கிறோம். இந்தப் பணிவை வெறும் கோஷங்களாக அல்லாது செயல்தளத்தில் மீட்பதே அசல் முற்போக்கான செயல்பாடாக இருக்கமுடியும். அதே நேரத்தில் இப்புனிதத்தின் பணிவின் ஆன்மீக சாயல் சமகால முற்போக்கு பாவனைகளுக்கு முரண்படுபவை.
முற்போக்கின் தராசு
மலை வாழ் முதுவான்கள், தலைச்சுமை கூலிகள், கழுதைசுமைக்காரர்கள், காபி தோட்டத்து வேலையாட்கள், முதலாளிகள், கங்காணிகள் என்ற விஸ்தாரமான கதைக்களத்தில் , இவ்வமைப்பையே நகலெடுத்து சுரண்டலின் மீதான கட்டுமானம் என்று எளிய பிரதியை வாசிக்க அளித்திருக்கலாம், ஆனால் நமக்கு படிக்க கிடைப்பது முரண்படும் ஒத்திசைவுடன் கூடிய ஒரு பிரதி.
அப்பட்டமான சுரண்டலின் அமைப்பில் இருக்கும் தலைசுமைக்காரன் தனது செயல் தர்மம் குறித்து எந்தவொரு சஞ்சலமும் கொள்ளாது தெளிவாக இருக்கிறான் , அத்தனை சுரண்டலுக்கு பிறகும் அவனை அந்த செயல் தர்மம் வழி நடத்திய விசை எது ? தொழில் வழி போட்டியாக அமைந்துவிட்டாலும் மூவண்ணா விற்கும் தெம்மண்ணா விற்குமான சுமூகமான உறவு எதன் பொருட்டு ? துரோகத்தின் வழி குலைந்த தலைச்சுமைகாரர்களின் வாழ்வும் இறுதியில் மூவண்ணாவிற்கு நேரும் நிலைக்கும் என்ன தொடர்பு ?
அரசியல் சரி தவறுகளை புறம் தள்ளி, ரத்தமும் சதையுமான வாழ்வை முன்னிறுத்தி, வெறுப்பின் நிழலை சிறிதும் அண்டவிடாது அமைந்துள்ளது இப்படைப்பு , எளிதான சரி தவறுகளில் சிக்கி நாயகன், வில்லன் என்ற இரு துருவபடுத்துதலை தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கதைமாந்தர் தம் பார்வை வழி கதை விரிகிறது. கதைமாந்தர் தம் விசுவாசம், துரோகம், காதல்,காமம், ஆற்றாமை, கனவு, ஆசை உணர்வுகளுடன் நாமும் சஞ்சாரம் செய்கின்றோம்.
சாகசம்
மனிதன் தான் கடந்து வந்த பாதையை மீண்டும் மீண்டும் எண்ணி பார்க்கிறான் , கழுதைப்பாதையில் மீண்டும் மீண்டும் மூவண்ணா தலைச்சுமைகாரர்களை பற்றி கூறியபடியே வருகிறார், நூறுமாடுகளுடன் ராவுத்தர் வந்து செல்வது குறித்து கதை சொல்கிறான் செவ்வந்தி.
நூறு மாடுகளுடன் ராவுத்தர், கொல்லத்தில் இருந்து உப்பு வாங்க வேதாரண்யம் வரை செல்லும் வழியில், ஊருக்கு வரும் நிகழ்வு, அத்தனை அற்புதமான காட்சியனுபவமாக பதிவாகி இருக்கிறது , தூரத்தில் ராவுத்தரின் ஆட்கள் வரத் தொடங்குகையில் ஏற்படும் புழுதியில் தொடங்கி , அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் கடைக்காரர்கள் , ஊர்மக்கள், அவர்கள் எந்த வகையில் தயாராகின்றனர் என்பாதான சித்திரம் அபாரம்.
நூறு தலை சுமை காரர்கள் முத்துசாமியின் சாட்டையின் கீழ் ஒரு ராணுவ தளவாடம் போல் எஸ்டேட்களுக்கு தலைச்சுமை ஏற்றி சென்று வருவதை விவரிக்கும் அத்தியாயம் மயிர் கூச்செரிய செய்வது , அரசியல் சரி தவறுகள் தாண்டி அதன் நிகழ்த்தி காட்டும் அம்சம் மிகுந்த ஜீவனுடன் அமைந்துள்ளது.
முதன் முதலில் முத்தண்ணா கழுதைப்பாதை அமைத்து செல்லும் இடம் , இரண்டு இட்டிலிக்காக உமையாள் விலாஸில் தலைச்சுமை காரர்கள் படும்பாடு, கீசருவும் தெம்மண்ணாவும் மல்லுக்கு நிற்கும் இடங்கள்,எர்ராவுவை நாகவள்ளி பின்தொடர்ந்து செல்லும் இடங்கள், மிகுந்த அர்ப்பணிப்புடன் தூரிகையால் வரைந்தது போல் வாசிக்கையில் மனக்கண்ணில் எழுகின்றன, பானை சோற்றிற்கு பதம் இவ்விடங்கள். “அனார்கலியின் காதலர்கள்” கதையில் அமையப்பெற்ற புற விரிப்பின் கூர்மை கழுதைப்பாதையில் உச்சம் பெற்றிருக்கிறது .
இந்த அழகியல் தேர்வு பக்கம்பக்கமாய் தலை சுமை கூலிகளின் துயரங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒப்பானது, நாம் கடந்து வந்த பாதையை, நாம் ஏறி மிதித்து நிற்கும் உடல் உழைப்பை, கடந்த காலத்தின் தியாகங்களை குறித்து நம் பிரக்ஞையை மாற்றி அமைக்க வல்லது.
காதல் காமம்
காதல் களியாட்டங்களும் கசப்புக்களும் நிறைந்த பயணம் கழுதைப்பாதை . காதல், துரோகம் ,குற்றவுணர்வு,ரகசியம்,நிறைவேறா காதல், கூடாத காமம்,பிறன்மனை, காரிய காதல் , ஒருதலை காதல், என அத்தனை பரிமாணங்களும் ஜொலிக்கும்படி அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக கெப்பரூவும் பெங்கியும் வரும் இடங்கள் அழகு கூடி வந்துள்ளது, செல்வம் -கோமதி காதல், இளமைக்கால நாகவள்ளி – எர்ராவு காதல் மிகுந்த ஜொலிப்புடன் கனவு உலகில் நடப்பது போல் இருக்கிறது,கெப்பரூ பெங்கியின் மறுஎல்லை முத்துசாமியும் வெள்ளையம்மாளும் , செல்வம் கோமதியின் மறு எல்லை இளஞ்சி. துரோகத்தின் நிழலில் இளைப்பாற முடியாது , குற்றவுணர்வு நீண்டு மீண்டுமொரு துரோகத்தையோ பிராய்ச்சித்தத்தையோ செய்யும் வரை துரோகத்தின் நிழலின் வெப்பம் தகித்தபடியே இருக்கும்.
கூட்டமும் தனியாளும்
நாவலின் வகைமைப்படியே தலைச்சுமை காரர்கள், கழுதைசுமை காரர்கள், தோட்ட முதலாளிகள், கங்காணிகள் என்று பொதுமையாய் அமைந்தாலும் நாம் இறுதியில் அறிவது தனி ஆட்களின் ஆளுமையை , குறிப்பாக மூவண்ணா மற்றும் தெம்மண்ணாவின் ஆளுமைகளை. தோட்டத்து முதலாளிகளை பொறுத்த வரை “தலைச்சுமை காரர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது” போல் கூறுகிறார்கள் , முத்துசாமி ஒருவனிடம் மட்டுமே முதலாளிகள் உரையாடுவார்கள் , தோட்டத்து முதலாளியை பொறுத்த வரை கழுதை சுமை மூவண்ணா அடிமைக்கு கிட்டத்தில் வருபவர், எதிர் பேச்சு பேச முடியாதவர். இந்த சூழலில் இருந்து தலை சுமை தெம்மண்ணா மற்றும் கழுதைக்கார மூவண்ணா இருவரும் வாழ்ந்த நேரிடையான, அலைச்சல் மிகுந்த வாழ்வின் ஒரு பகுதி நமக்கு காணக் கிடைக்கிறது. பல்வேறு கதை மாந்தர் குறித்து எழுத முடிவெடுத்துள்ளது ஆசிரியரின் அழகியல் தேர்வு, அத்தேர்வு இவ்விரு ஆளுமைகளின் சில கீற்றுகள் தவிர்த்து, வேறு எவர் குறித்தும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கவில்லை. இது தெரிந்தே எடுக்கப்பட்டுள்ள தேர்வாகவும் இருக்கலாம் – பிம்ப வழிபாடு மிகுந்துள்ள இந்த சமூக ஊடக காலகட்டத்தில் இத்தேர்வும் சரியானதாக இருக்க வாய்ப்புண்டு.
அற்புதமான காட்சி அனுபவம் வழியும், உறுதியான நிறைவுப் பகுதியும், கழுதைப்பாதையை மறக்க முடியாத வாசிப்பு அனுபவமாக்குகிறது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் அடிவாரமும் பற்றி செந்தில்குமார் அவர்கள் எழுத வேண்டும் , அவர் எழுத்து வழி மேலும் உருவாகும் உலகங்களை காண விருப்பம்.