களைதல் – கா.சிவா சிறுகதை

சிறு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலுக்கு சங்கரும் குமாரும் சென்றபோது காழாஞ்சியை வாங்கிச் செல்வதற்காக ஊர்க்காரர்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள்.

என்ன மச்சான், எல்லாரோட மொகத்திலயும் ஒரு தெளிச்சி தெரியுது என சங்கர் குமாரிடம் கேட்டான்.

திருவிழாக்கு தேதி குறிச்சதிலேர்ந்து எல்லாரோட மனசுலயும் சந்தோசத்தோட, திருநா நல்லபடியா முடியனுமேன்னு கொஞ்சம் பதட்டமும் இருந்துச்சு. இன்னக்கி சாயந்தரம் மது, பாரியெல்லாம் ஊரணியில கொட்டிட்டு அங்கேயிருந்து தண்ணி மொண்டுக்கிட்டு வந்து இந்தக் கோயில் பலிக்கல்லுல ஊத்துனதோட திருவிழா முடிஞ்சிடுச்சில்லஅதான் எல்லோரட மொகமும் கனிஞ்ச மாதிரியிருக்கு“.

முக்கால் வட்டமாய் கோவிலைப் பார்த்து அமர்ந்திருந்த கூட்டத்தில் இடத்தைத் தேர்ந்து அமர்ந்த குமாரின் அருகில் சங்கரும் அமர்ந்தான். ” ஏன் இங்க வந்து ஒக்காந்த. அங்க கூட எடமிருக்கேஎன சங்கர் கேட்டான்.

சுத்தி இருக்கறவனெல்லாம் என் வயசுப் பசங்க. என் சேக்காளிங்க. மஞ்சவெரட்டு, சேவச்சண்டைக்கெல்லாம் சேந்துதான் போவோம். அங்க போயி அந்த பெருசுகக்கிட்ட ஒக்காந்தா வாயமூடிக்கிட்டு தேமேன்னுதான் இருக்கனும்என்றான் குமார்.

இப்ப எதுக்கு மச்சான் இங்க வந்திருக்கோம். பெரியாத்தாதான் ஓங்கூட கோயில் வரைக்கும் போயிட்டு வாப்பான்னு அனுப்புச்சு“.

காழாஞ்சி வாங்கறதுக்காக வந்திருக்கோம்

காழாஞ்சியா

இந்தத் திருவிழா நடத்த தேவப்படுற பணத்தை கணக்குப் பண்ணி ஒவ்வொரு புள்ளியும் இவ்வளவு பணம் தரனும்னு முடிவு பண்ணுவாங்க

புள்ளியா

வெளியூர்ல இருக்கறதால எதுவுமே தெரியாமத்தான் இருக்கிறியா. ஒவ்வொரு குடும்பத்திலேயும் இருக்குற ஒவ்வொரு கல்யாணமான ஆம்பளயும் ஒரு புள்ளி. அப்படி வரி கொடுத்து திருவிழா நல்லபடியா முடிஞ்சதுக்கு நன்றி சொல்ற மாதிரி ரெண்டு பழம், ஒரு மூடி தேங்கா, சாமிக்கி போட்ட பூவுல ஒரு இணுக்கு, வெத்தல பாக்குன்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க“.

.”இதான் காழாஞ்சியா. இதுக்கா வந்து காத்துக்கிட்டிருக்கோம்

இதோட பண மதிப்பு கம்மியா இருக்கலாம். ஆனா இது ஒரு கௌரவம். சபைக்கு நடுவுல கூப்பிட்டு நிகழ்ச்சி நல்லபடி நடந்ததுக்கு நீயும்தான் காரணமுன்னு சொல்றது பெரிய மரியாதைதானே என்றான் குமார்.

அப்போது மூன்று பேர் கோவிலுக்குள் இருந்து வெளிவந்து கூட்டத்தின் முன்பாக கூட்டத்தைப் பார்த்து அமர்ந்தார்கள். அமர்ந்திருந்தவர்களெல்லாம் சற்று நிமிர்ந்தார்கள். ” இவங்கதான் திருவிழா கமிட்டியா என்று கேட்டான் சங்கர்.

கமிட்டியில்லநம்மவூர்ல டிரஸ்டினு சொல்வாங்க . அவங்கள்ல மூத்தவர் செங்கல்வராய அம்பலம் . பக்கத்துல இருக்கிறவர் கணேசக் கோனார். ரெண்டு பேரையும் விட. எளசா சுறுசுறுப்பா இருக்கிறவர் மணிப்பிள்ளை

பரவாயில்லையே மூனு சாதியிலேயும் ஒவ்வொருத்தரப் போட்டுட்டாங்களா

ஆமாம்மா. இந்த மாதிரி விசயங்கல்ல பிரச்சனை வந்துடக் கூடாதில்ல. ஒரு பேரு விட்டுப் போனாக்கூட அடுத்த வருசத் திருவிழா சந்தேகந்தான்என்றான் குமார்.

சற்று தள்ளி விரிந்து படர்ந்திருந்த இலுப்பை மரத்தில் சிறு வெண்கதையைப் போல மலர்ந்து தொங்கிய பூக்களிலிருந்து பரவிய வாசம் கூட்டத்தினரிடம் மெல்லிய கிறக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தனை புள்ளிகளுக்குமான காழாஞ்சி பிரிக்கப்பட்டு கொடுக்க தாயாரானபோது அமர்ந்திருத்த ஆண்களுக்கு மத்தியில் இருந்து கந்தன் எழுந்தான். அவன் முகம் கோபத்தில் கொந்தளித்தது. முகத்தினை சரியாக கவனிக்காத செங்கல்வராய அம்பலம்

பேரக் கூப்பிடறதுக்கு முந்தி ஏப்பா எந்திரிக்கிற என கேட்டார்.

தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து அம்பலத்தையும் கந்தனையும் நோக்கினார்கள்.

அய்யா, நான் ஒரு பிராது கொடுத்திருக்கேன். அத பைசல் பண்ணின்டு அப்பறம் காழாஞ்சியக் கொடுங்கஎன்றான் கத்தன்.

என்ன பிராது. யார்க்கிட்ட சொன்னஎன்றவாறு திரும்பி மற்ற டிரஸ்டிகளைப் பார்த்தார் அம்பலம்.

கணேசக் கோனார் அவர் காதருகே குனிந்து இவம் பொண்டாட்டி கைய செந்தியம்பலம் மவன் பாலன் இழுத்துட்டானாம். அத விசாரிக்கனும்னு மூனு நாளைக்கு முன்னாடி சொன்னான். நாந்தான் செவ்வா முடிஞ்சதும் விசாரிச்சுக்கலாம்னு சொல்லி அடக்கி வச்சேன்என்றார்.

கூட்டத்தில் கலவையான ஒலி எழுந்தது. விபரம் தெரியாதவர்கள் என்னாச்சு என அருகிலிருந்தவர்களிடம் கேட்க தெரிந்தவர்கள் நடந்ததை விளக்க முயல , பெருகி வரும் காட்டாற்றின் ஓசையென சத்தம் வேகமாக உச்சத்தை நோக்கிச் சென்றது.

செங்கல்வராய அம்பலம் கையை உயர்த்தி அமைதியா இருங்கப்பா. விசாரிப்போம்.. அமைதியா இருங்கஎன ஓங்கிக் கூறியதும் சத்தம் மட்டுப்பட்டது.

கூட்டத்தினரைப் பார்த்து செந்தியம்பலம் மவன் பாலன் இங்க வந்திருக்கானா எனக் கேட்டார். அமர்ந்திருந்த. செந்தியம்பலம் எழுந்து வரலிங்கய்யா, வீட்லதான் இருக்கான்என்றார்.

அப்படீன்னா அவஞ் சேக்காளிங்க ரெண்டு பேரு போயி அவனக் கூட்டிக்கிட்டு வாங்கஎன்று கட்டளையாகக் கூறினார். கூட்டத்தின் வெளிவட்டத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்து ஊருக்குள் சென்றார்கள்.

சீக்கிரம் வாங்கப்பா.. இந்த பிரச்சனையை முடிச்சுட்டுதான் அடுத்த வேலைக்கு போக முடியும்என்று கூறிவிட்டு கந்தா நீ உக்காரு. அவன் வந்ததும் விசாரிப்போம்என்றதும் கந்தன் அமர்ந்தான்.

கூட்டத்தின் நடுவிலிருந்த

குமார் , தலையை குனித்தபடி கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது. ஒரு வருசத்துக்கு அப்பறம் வந்து அவன் கையப் பிடிச்சான். இவன் அங்க தடவுனான்னு சொல்றதுஎன்று அருகிலிருந்த சங்கரிடம் கூறினான்.

ஊர்க்காரங்கள நம்பித்தானே விட்டுட்டு போறாங்க. ஊர்தானே பாதுகாப்பு கொடுக்கனும்

ஒவ்வொருத்தருக்கும் வேறவேற ஆசையும், கொணமுமிருக்கும். எல்லாத்தையும் ஊர் கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா. பிராதுன்னு வந்தாத்தான் தலையிட முடியும்

குமாருக்கு முன்பாக இருந்த பேன்ட் சட்டை அணிந்திருந்த சந்திரன் திரும்பி இந்த மாதிரி பிரச்சனைக்கு போலீஸுக்கிட்ட போகாம ஏன் இங்க சொல்றாங்கஎனக் கேட்டான்.

போலீசு நாளு முச்சூடும் அந்தப் பொண்ணுக்கு பந்தோபஸ்து கொடுக்க முடியுமாஎன சிரித்தபடி கேட்டுவிட்டு வலப்பக்கம் அமர்ந்திருந்த சிங்காரத்தை நோக்கி நீ ஏன் மச்சான் ரொம்பத் துடிக்கிறஎனக் கேட்டான்.

நானே ஆறு மாசத்துக்கப்புறம் இப்பதான் வந்திருக்கேன். ரெண்டு நாளு கோயில்லேயே போயிடுச்சு. இன்னிக்கும் இவனுவ விட மாட்டானுங்க போலருக்கேஎன்றான் சிங்காரம் சலிப்புடன். ராமன் சங்கரின் பக்கம் திரும்பி சத்தமின்றி சிரித்தான்.

காழாஞ்சி பிரித்துக் கொடுத்தவுடன் ஊரின் தெருவிலெல்லாம் போட்டிருந்த குழல் விளக்குகளை கழட்டலாம் என காத்திருந்த சின்னய்யா கோவிலோரம் படுத்திருந்த அவன் வேலையாட்களை வேகமாக எழுப்பி டேய், ஊருக்குள்ள போட்டிருக்கிற பல்புகளையெல்லாம் உடனே கழட்டுங்கடாஎன்று கூறித் துரத்தினான். இரண்டு வருடங்களுக்கு முன் நிலம் தொடர்பான பிராதை இதேபோல விசாரித்தபோது இரு தரப்பின் கைகலப்பில் ஐம்பது பல்புகளுக்கும் மேல் உடைந்திருந்தது.

பாலனை அழைக்கப் போனவர்கள் மட்டும் மெதுவாக நடந்து வந்தனர்.

ஏய் வேகமா வாங்கன்னா ஆடி அசஞ்சுக்கிட்டு வர்றீங்க. அவன் எங்கேஎன செங்கல்வராய அம்பலம் வந்தவர்களைக் கேட்டார்.

அவன் ஒடம்பு சுகமில்லாம படுத்திருக்கான். அவனால எந்திரிக்க முடியலங்கய்யாஎன்று ஒருவன் சொன்னான்.

இதனைக் கண்டதும் கந்தனின் அருகிலிருந்த அவன் பங்காளிகளில் சிலர் வேகமாக எழுந்து நாங்க போயி இழுத்துக்கிட்டு வர்றோம்என்று கூறியபடி தாவினார்கள்.

ஏய்பொறுங்கப்பா. லேய் செந்தீ நீ போயி உடனே ஒம் மவனக் கூட்டிக்கிட்டு வா. இல்லேன்னா வேற முடிவு எடுக்க வேண்டியிருக்கும். அது ஒங்குடும்பத்துக்கு நல்லதில்ல ஆமா…” என்று செந்தியம்பலத்திடம் கூறினார் செங்கல்வராயன்.

இந்தா.. கூட்டியாறேன்யா என்று செந்தி எழுந்தவுடன்

ஏப்பா, யாராவது சைக்கிளக் கொடுங்கப்பா. இவன் சீக்கிரம் வரட்டும் என்று கூறவும் சாலையின் மேல் நின்றிருந்த சைக்கிளை ஒருவன் தள்ளிக் கொண்டுவந்து செந்தியிடம் கொடுத்தான். வேகமாகத் தள்ளியபடி ஓடி குதித்தமர்ந்து ஓட்டிச் சென்றார்.

கூட்றதுக்குப் போனவனுங்க , நேரத்தக் கடத்துறதுக்காக மெதுவாப் போயிட்டு வந்தானுங்க. இப்ப இவரு போயி கூட்டிட்டு வர்றப்ப இன்னும் நேரமாயிரும்குமார் சங்கரிடம் கூறினான்.

ஆனா என்னசங்கர் கேட்டான்.

நேரமாயிடுச்சுன்னா ஆவுஆவுன்னு விசாரிச்சு வேகமா முடிச்சிடுவாங்கல்ல“.

சரியா தீர்ப்பு சொல்லுவாங்களா

சரியா இருக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா தப்பா இருக்காது. காலங்காலமா எப்படி சொல்றாங்களோ அப்படியே இருக்கும்சொல்லியபடி கைகளை நீட்டி சோம்பல் முறித்து, கால்களை முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களுக்கிடையே நீட்டினான். முன்னால் இருத்தவர் முறைத்தார்.

கொஞ்சம் தள்ளிக்க மாப்ளே. ரொம்ப நேரமா ஒக்காந்து காலு மரத்துப்போற மாறி இருக்குஎன்றான் கொஞ்சம் குழைந்தவாறு.

கூட்டம் முழுக்கவே கை கால்களை நகர்த்தியும் நீட்டியும் சோம்பல் முறித்தது பெரிய அலையொன்று புரள்வதுபோலத் தோன்றியது. கோவிலுக்கும் இலுப்பை மரத்திற்கும் இடையே வடக்கிலிருந்து வந்த காற்று அமர்ந்திருந்தவர்களின் உடலில் துளிர்த்திருந்த வியர்வையின்மீது பட்டு அவர்களுக்கு மெல்லிய மயிர்க் கூச்சத்தை அளித்தது.

கந்தனைச் சுற்றியிருந்தவர்களும் சாலையோரமாக நின்றிருந்த பாலனின் நண்பர்களும் சிறு வட்டமாக தனித்தனியாகக் குழுமி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

பின்பக்கம் சைக்கிளின் அரவம் கேட்டதும் எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். செந்தியம்பலம் பின்னால் அமர்ந்திருக்க பாலன் ஓட்டிக்கொண்டு வந்தான்.

அங்க பாரு, எந்திரிக்க முடியாம கெடந்தவன்தான் இப்ப சைக்கிள ஓட்டிக்கிட்டு வர்றான்என்றான் குமார்.

பாலன், பேன்ட் சட்டை அணிந்திருந்தான். சட்டையில் பாதி பொத்தான்கள் போடப்படவில்லை. முடியை முன்பக்கம் ஒட்ட வெட்டி பின்பக்கம் தொங்கவிட்டிருந்தான்.சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு யாருக்கும் பயப்படாத தன்மையுடன் நடந்துவந்து நின்றான்.

அவனை நோக்கிய செங்கல்வராய அம்பலம் கூப்பிட்ட உடன வரமாட்டீயா. சைக்கிள் வச்சு அழச்சாத்தான் வருவியாஎனக் கேட்டார்.

அதான் வந்தாச்சுல்ல. என்ன விசயம்னு சொல்லுங்க என்றான்.

பாலனின் நடத்தை கந்தனின் துணைவர்களிடம் சிறு கொதிப்பை உண்டாக்கியது. ” பஞ்சாயத்துல கூப்பிட்டு இருக்காங்க. கொஞ்சம் மரியாதயா பேசுஎன்று ஒரு குரல் எழுந்தது.

மரியாத கொடுத்துதான் வந்திருக்கு. விசயத்தச் சொல்லுங்க தூக்கம் வருதுல்லஎன்றான் கேலித் தொணியில்.

ஏப்பா, பேச்ச நிறுத்துங்கப்பா. கந்தா ஒன்னோட புகாரச் சொல்லு

போன புதன்கெழம அன்னிக்கி என் பொண்டாட்டி ராணி கம்மாய்ல குளிச்சிட்டு வந்திருக்கா. அப்போ இந்தப் பய எதிரே வந்திருக்கான். இவன் வர்றானேன்னு அவ ஒதுங்கி நின்னுருக்கா. இவன் அவ கையப் பிடிச்சு வாயேன் இன்னொருதரம் குளிக்கலாம்னு கூப்பிட்டுருக்கான். எம் பொண்டாட்டி கையப் பறிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டாளாம். அன்னயிலேர்ந்து குளிக்கிறது தொவக்கிறது எல்லாமே வீட்லதான். வெளிய போகவே பயந்துக்கிட்டு வீட்லேயே கெடக்கிறா.நான் ஊர்லேர்ந்து வந்தவுடனே சொன்னா.போயி இவன வெட்டனும்னுதான் தோணுச்சு. ஆனா புள்ளங்களப் பார்த்து மனச மாத்திக்கிட்டேன். நீங்கதான் கேக்கனும்என்று கோபமாகவும் தழதழப்பாகவும் சொல்லிமுடித்தான்.

கந்தன் சொல்லிக் கொண்டிருந்தபோது , பாலன் எதையும் கேட்காத பாவனையில் கூட்டத்தையும் காற்றிலாடிய மரக்கிளைகளையும் பார்த்தபடி இருந்தான்.

கந்தனின் உடனிருந்தவர்களில் ஒருவன் தாயோளி.. இவனை ஊரவிட்டு ஒதுக்கி வைக்கனும். இவன் ஊருக்குள்ளே இருந்தா பொண்டு புள்ளங்க எப்படி வாழ்றதுஎன்று பாலனை அடிப்பது போலப் பாய்ந்தான்.

பாலனின் நண்பனொருவன் நீ மூடிக்கிட்டு இருடா. சபைக்கு நடுவுல பெரிய இவனாட்டம் பேச வந்துட்டான். நீ என்னென்ன பண்றேன்னு எங்களுக்குத் தெரியாதா என்றபடி எகிறி வந்தான்.

கணேசக் கோனார் எழுந்து குறுக்கே வந்து ஏய் ஆளாளுக்குப் பேசாம சும்மா இருங்கப்பா.. ஒக்காருங்க.. ஒக்காருங்கப்பா என்று அமரவைத் கைகலப்பு ஆகாமல் தடுத்தார். செங்கல்வராய அம்பலம் பாலனைப் பார்த்து கந்தன் சொல்றது நெசந்தானா. அவம்பொஞ்சாதி கையைப் பிடிச்சியாஎனக் கேட்டார்.

கையையெல்லாம் புடிக்கல. சாயந்திர நேரமாயிருந்துச்சு. கம்மாயில யாரும் இருக்கமாட்டாங்கன்னு தோணுச்சி. எனக்கு தனியா குளிக்கப் பயமாயிருந்ததால அவங்கள தொணக்கி கூப்புட்டேன். இது பெரிய தப்பா. இதுக்குப் போயி பஞ்சாயத்து வேறஎன்று விட்டேத்தியாக கேட்டான் பாலன்.

டேய்.. ஒன்னய அன்னிக்கே வெட்டிப் போட்டிருக்கனும். வெட்டியிருந்தா என்ன தப்புன்னு இப்பக் கேப்பியாஎன்று கந்தன் பாய்ந்தான். பாலனின் நண்பர்கள் குறுக்கே வந்து கந்தனைப் பிடித்து தடுத்தார்கள். ” போய் உக்காரு. விசாரிக்கிறாங்கல்லஎன்று பின்னால் தள்ளினார்கள்.

கணேசக் கோனார் எழுந்து ஏலே..வெலகுங்கப்பா. கந்தா நீ ஒக்காரு. விசாரிக்கிறமுல்ல.. ஒக்காரு என்று அமர வைத்தார்.

ஏப்பா கந்தா இவன் கையப்பிடிக்கலைனு சொல்றானேப்பாஎன்று அம்பலம் கந்தனைக் கேட்டார்.

பொய் சொல்றான்ங்க. கையப் பிடிச்சத இந்த சுப்பையாவும் பாத்திருக்கான்என்று ஆவேசமாகக் கூறினான் கந்தன்.

ஆமாங்க. நான் வயல்லயிருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தப்ப பாலன், கந்தன் பொஞ்சாதியோட கையப் பிடிச்சு இழுத்ததப் பாத்தேன்என்றான் கந்தனுக்கு அருகிலிருந்த சுப்பையா.

குமார் குனிந்தபடி அதானே பாத்தேன். விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னுஎன்றான் சங்கரிடம்.

ஏலே பாலா. இப்ப என்ன சொல்ற. சுப்பையா பாத்தேன்னு சொல்றானேஎன்றார் அம்பலம்.

பயத்துல அவசரமா கூப்பிட்டப்ப கை லேசா மேல பட்டிருக்கும். இப்ப அதுக்கென்ன. இது அவ்ளோ பெரிய குத்தமாஅசராமல் பதில் சொன்னான்.

டேய் என்னடா பேசற. பண்றதயும் பண்ணிட்டு இவ்ளோ திமிரா அதுக்கென்னங்கிறகூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்ததும் மொத்தக் கூட்டமுமே அதானேஎன வழிமொழிந்தது.

சாதாரணமாக இம்மாதிரி பஞ்சாயத்துகளில் இரு தரப்புக்கும் ஏறக்குறைய சமமான ஆதரவுக் குரல்கள் எழும். இப்போது கூட்டம் ஒட்டு மொத்தமாகவே ஒரே தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டதாகத் தெரிந்தது. இது தீர்ப்பிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

கூட்டத்தின் குரலைக் கேட்டதும் சற்று நடுக்கத்துடன் எழுந்த செந்தியம்பலம் தன் மகனை நோக்கி எலே பாலா செஞ்சது தப்புதான்னு ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டுர்றாஎன கை கூப்பியபடி கெஞ்சினார்.

இவரு ஏன் இப்படி நடுங்குறாருஎனக் குமாரிடம் கேட்டான் சங்கர்.

தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டா தண்டனை கம்மியாயிருக்கும். இப்படியே திமிறிக்கிட்டு நின்னா ஊருக்குள்ள வரக்கூடாதுங்கற மாதிரி பெரிய தண்டனையா கொடுத்திடுவாங்க. அத நீக்கனும்னா அதுக்கு ஒரு வருசங்கூட ஆயிடும்என்றான் குமார், சங்கருக்கு மட்டும் கேட்குமாறு.

கைகூப்பிக் கெஞ்சிய தன் தந்தையைப் பார்த்தபோது பாலனின் உடல் பாவனை சற்று மாறியது. “இல்லையினே சொல்லு, அவங்களால என்ன செஞ்சிட முடியுமென நண்பர்கள் உறுவேற்றக் கூறியவையெல்லாம் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது . எந்த வம்புக்கும் போகாமல் எல்லோரும் மதிக்கும் வகையில் வாழ்பவர் அப்பா. எவ்விதமான சுவாரசியமும் இல்லாத அவரின் வாழ்க்கையைப் பார்த்து இவனுக்கு ஏளனமாகத் தோன்றும். அதனாலேயே அவர்மீது பெரிதாக இவனுக்கு மதிப்பில்லை. இவ்வளவு நாளாக அப்பாவின் பேச்சைக் கேட்டதேயில்லை. அவர் சொல்கிறார் என்பதற்காகவே படிப்பின் மீது வெறுப்பு வந்தது. போகக் கூடாதென்று அவர் கூறியதாலேயே திருப்பூருக்குச் சென்று பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு மாதம் வேலை செய்து வாங்கிய சம்பளத்துடன் ஊருக்கு வந்து அடுத்த இரண்டு மாதம் பசங்ளுடன் சேர்ந்து செலவு செய்வான். அப்பாவை பிடிக்காமல் போனதேன் என பலமுறை யோசித்திருக்கிறான். அப்போதெல்லாம், இது நல்லதை மட்டுமே போதிப்பதனால் வந்த வெறுப்பு என்ற முடிவுக்குதான் அவனால் வரமுடிந்தது. அப்பாவின் மீதான அவன் வெறுப்பு அந்தரங்கமானது ஆனால், இவ்வளவு கூட்டத்தின் நடுவே அப்பா கெஞ்சியதைப் பார்த்ததும் இதுவரை தோன்றாத கூச்சம் ஏற்பட்டது. தன் மேலேயே கடும் வெறுப்பு உண்டானது. உடலில் இருந்த மிதப்பு மறைந்து லேசான பணிவு தோன்றியது.

தன் அப்பாவைப் பார்த்து நீ உக்காருப்பா..உக்காரு. நான் மன்னிப்புக் கேக்குறேன்என்று கூறிவிட்டு டிரஸ்டிகளை நோக்கி கைகூப்பிய பாலன் அய்யா .. நாந் தெரியாம செஞ்சுட்டேன் என்னய மன்னிச்சிடுங்கய்யா

என்றான்.

செங்கல்வராய அம்பலம் கந்தனை நோக்கி ஏப்பா கந்தாசெஞ்சது தப்புதான்னு மன்னிப்புக் கேக்குறானே நீ என்ன சொல்றஎன்றார்.

அய்யா, ஒத்துக்கிட்டா செஞ்சது சரின்னு ஆயிடுமாங்கய்யா. இன்னொரு தடவை செய்யாத மாதிரி தண்டனை கொடுக்கனுங்கஎன்றான் கந்தன்.

மற்ற இரண்டு டிரஸ்டிகளையும் நோக்கி நீங்க என்ன சொல்றீங்கஎனக் கேட்டார் பெரிய அம்பலம்.

சின்னப் பயதான். ஏதோ புரியாம செஞ்சிட்டான். அவராதம் கட்டச் சொல்லலாம் என்றார் கணேசக் கோனார்.

அவராதம் மட்டும் பத்தாது. இதுமாரி இன்னொருத்தன் செய்யாம இருக்கனும்னா தண்டனையும் கொடுக்கனும் என்றார் மணிப்பிள்ளை.

கூட்டத்தைப் பார்த்தார் செங்கல்வராய அம்பலம். பாலனின் நண்பர்களெல்லாம் அபராதம் மட்டும் போடுங்க எனக் கூவினார்கள். கந்தனைச் சுற்றியிருந்தவர்கள் தண்டனை கொடுக்கனும் என்றார்கள். கூட்டத்திலிருந்து கலவையான குரல்கள் எழுந்தன. கூட்டத்தினரை முழுமையாக நோக்கியபின் அமைதியா இருங்கப்பா என்று கூறி கையாலும் சைகை செய்தார்.

மரத்தினை சிறிது நேரம் பார்த்துவிட்டு கோவில் பக்கம் பார்த்து உதடுகள் அசைய மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

கூட்டம் முழுக்க அவரின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தது. அவரது தீர்க்கமான முகம் அவர் என்ன சொல்வதென்று முடிவு செய்துவிட்டார் என்பதைக் காட்டியது. அனைவரும் அவர் கூறப்போவதை கேட்க ஆயத்தமானார்கள். காற்றோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

செங்கல்வராய அம்பலம், கூட்டத்தையும் கந்தனையும் ஒருமுறை பார்த்துவிட்டு, பாலனைப் பார்த்து அடுத்தவன் பொஞ்சாதிய தப்பான நோக்கத்தோட கையைப் புடிச்சு இழுத்ததால அபராதமா இந்த மாரியம்மனோட உண்டியல்ல நூறு ரூபாயப் போடனும்என்று கூறி நிறுத்தினார்.

பாலனின் ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. கந்தன் தரப்பினரிடேயே இறுக்கமான கையறு நிலை புலப்பட்டது.

கைகளால் அமைதியாக இருங்க என சைகை செய்த அம்பலம் தனது தீர்ப்பை தொடர்ந்தார் இது மாதிரி தொடரக் கூடாதுங்கிறதுக்காக இந்த பாலன் கந்தனோட பொஞ்சாதியோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க வேணும்னு இந்தப் பஞ்சாயத்து முடிவு பண்ணியிருக்கு என்று முடித்தார்.

பாலன் முகம் அவமானத்திலும் கோபத்திலும் வெளிறியது. கணத்தில் முகத்தில் வியர்வை கொப்பளித்து தாடையிலிருந்து வழிய ஆரம்பித்தது. அவன் நண்பர்களும் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து பின் சற்று சுதாரித்து பாலனை அணுகி அவன் தோளை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டு முகத்தை துண்டால் துடைத்தார்கள். செந்தியம்பலம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் உடல் லேசாகக் குலுங்கியது.

கந்தன் தரப்பில் லேசான திருப்தியுடன் குழப்பமும் தெரிந்தது. கந்தன் எழுந்து அய்யா , இந்த நேரத்துல ராணியை எப்படிக் கூட்டியாரதுஎன்று பெரிய அம்பலத்தை நோக்கிக் கேட்டான்.

அவள ஏன் இங்க கூட்டியார. அவ சார்பா நீ அவன் மன்னிப்ப வாங்கிக்கஎன்று கூறிவிட்டு மணிப்பிள்ளையை நோக்கி ஏலம் விடுறதுக்கு வச்சிருக்கிற அம்மனோட பூசைச் சாமான்களோட இருக்கிற அம்மனுக்குச் சாத்துன சேலய எடுத்துக்கிட்டு வா. போன வருசம் ஏலம் போன தொகைக்கே இப்ப கந்தன் ஏலம் எடுத்ததா எழுதிக்கஎன்றார்.

மணிப்பிள்ளை கோவிலுக்குள் சென்று எலுமிச்சம் பழ மாலை, பூமாலை, தாம்பாளத் தட்டு வாழைப்பழம், பூசணிக்காய் என பரப்பி வைத்திருத்த இடத்திலிருந்த லேசான ஒளியில் மின்னிய வெள்ளிச் சரிகையிழைத்த சிவப்புக் கரையுடன் கூடிய பச்சைப் புடவையை எடுத்து வந்தார்.

போன வருசம் ஏலம் போன தொகை என்னன்னு நோட்டப் பாத்து பிறகு சொல்றேன்என்றபடி கந்தனிடம் நீட்டினார். கத்தன் எழுந்து அம்மன் இருக்கும் திசையை நோக்கி வணங்கியபின் குனிந்து புடவையை வாங்கிக் கொண்டான்.

கந்தா அந்தப் புடவையைக் கொண்டுக்கிட்டு இங்க வா என பெரிய அம்பலம் அழைத்தார். புடவையை கட்டிக் கொள்ளச் சொல்வாரோ என்ற யோசனையுடனேயே அவர் அருகில் சென்றான் கந்தன்.

பயப்படாதகட்டிக்க வேண்டாம். தோள்ல இருந்து உடம்புக்கு குறுக்கால முந்தானை மாதிரி போட்டுக்கிட்டு அந்த ஓரமா நில்லுஎன. கோவிலின் ஓரத்தை கைகாட்டினார்.

கந்தன் புடவை மடிப்பை நீள வாட்டமாகப் பிரித்து முந்தானையைப் போல தோளிலிட்டு இடுப்பு பெல்ட்டை தளர்த்தி புடவைக்கு மேல் பொருத்தி இறுக்கினான்.

தீர்ப்பை முதலில் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தாலும் ராணியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டாம், கந்தனிடம் கேட்டாலே போதுமென்றதும் ஆசுவாசமடைந்தான் பாலன். புடவையை மேலில் போர்த்தியதைப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. புடவை இருந்தாலும் அவன் கந்தன்தானே. எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்புக் கேட்க தயாரானான்.

பெரியம்பலம் ஏன் இப்படியெல்லாம் பண்றாரு. இப்படி மன்னிப்புக் கேக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லஎன்று முனங்கிய சங்கரைப் பார்த்து ஏனிப்படி சொல்ற எனக் கேட்டான் குமார்.

கந்தன் பாலனவிட மூத்தவருதான். படிச்ச மரியாதைக்குரியவர்தான். அவர்கிட்ட எந்தத் தயக்கமும் இல்லாம மன்னிப்புக் கேட்டுவான் பாலன் என்றான் சுந்தரம்.

இதுலதான் அனுபவத்தோட பக்குவத்த நீ உணரனும். மன்னிப்புக் கேக்க வச்சிட்டோம்னு இவங்களும் மன்னிப்புக் கேட்டாலும் மீசையில மண்ணொட்டலையின்னு அவனும் நெனக்கிற மாதிரி தீர்ப்புக் கொடுத்தாலும் தேவையான பலனும் கெடச்சிடுமில்ல

அதென்ன தேவையான பலன்

பாத்துக்கிட்டேயிருஉனக்கே புரியும் என்று சொல்லிவிட்டு அமைதியானான் குமார்.

தண்டனை பெற்றதன் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி நினைத்த பெண்ணுக்கே தாலிகட்ட தயாராயிருப்பவனின் மலர்ச்சியான எதிர்பார்ப்புடன் இருந்தான் பாலன். இந்தச் சடங்கு எப்போது முடியும் எப்போது வீட்டில் போய் படுப்பது என்று எண்ணத் தொடங்கினான். செங்கல்வராய அம்பலம் பாலனை அழைத்தார். இதோ முடியப் போகிறது என்று ஆவலுடன் அருகில் சென்றான்.

கந்தனப் பாரு. இப்ப அவன் கந்தனில்ல. நம்ம அம்மனோட சேலையக் கட்டியிருக்கிற கந்தம் பொஞ்சாதி ராணி. அத மனசில நிறுத்திக்க

அங்க நிக்கிற ராணியோட காலத்தொட்டு இனிமே எம் பொஞ்சாதியத் தவிர வேற பொண்ணத் தொட மாட்டேன்னு சொல்லி மூனுதடவ விழுந்து கும்பிட்டுட்டு நூறு ரூபாய உண்டியல்ல போட்டுட்டு வாஎன பாலனை நோக்கிக் கூறினார்.

கூட்டத்தினர் எந்தச் சத்தமும் எழுப்பாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கந்தனை நெருங்கும் போதே பாலனின் முகம் மலர்ச்சியெல்லாம் வடிந்து இறுகியது. புடவையை அருகில் பார்த்தபோது ராணி இழுத்துச் செருகியிருப்பது நினைவில் தோன்றியது. ராணியை நினைக்கக் கூடாது. இது கந்தன்தான். என்னைவிட மூத்தவர். ஆசீர்வாதம் பெறுவது போலத்தான். எந்தத் தாழ்வும் இல்லை. எதுவும் மாறப் போவதில்லை என அழுத்தமாக மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தபோதே அவள் சிரிக்கும் போது உயர்ந்து இழுபடும் புருவம் அணுக்கத்தில் தெரிந்தது. லேசாக புன்னகைக்கும்போது மடியும் கீழுதடின் கோடுகள் நெளிந்தன.

பாலா ஏன் நிக்கிற. வேகமா ஆகட்டும் வேல கெடக்குதுஎன்று கணேசக் கோனார் பாலனின் தோளை அழுத்தினார்.

கீழே குனிந்து இனிமே எம் பொண்டாட்டியத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தொடமாட்டேன்என்று கூறியவாறு காலைத் தொட்டான். மிளிரும் கரு வண்ணத்தின் பூசினாற் போன்ற இடையுடன் ஒரு காலை நேராகவும் மற்றொரு காலை சற்று வளைத்தபடியும் நின்று கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டு நின்றவனைப் பார்த்து பாலனின் நண்பன் அருகில் வந்து என்ன மச்சான். யோசிச்சிக்கிட்டு நிக்கிற. நம்ம நெனச்ச மாதிரிதானே நடக்குது. எதுவும் மாறாது. சட்டுனு முடிஎன்று காதோடு கூறி தோளில் தட்டினான்.

தலையை உலுக்கிக் கொண்டு வேகமாகக் குனிந்து இனிமே எந்தப் பொண்ணையும் தொடமாட்டேன் என்றபோது கட்டை விரலைவிட நீண்ட பக்கத்து விரலில் இருந்த மெட்டி ஒளிர்ந்து கரண்டைக் காலின் வளவளப்பு தெரிந்தது.

வேகமாக நிமிர்ந்தபோது கந்தன் லேசாக நகர கோவிலுக்குளிருந்த அம்மனின் முகம் தெரிந்தது. ஒரு கணம் மின்னல் வெட்டியதென அருகில் நிற்பவளெனத் தோன்ற, உடல் நடுங்கியது.

நண்பன் மீண்டும் முதுகை அழுத்தியவுடன் அம்மா தாயே, என்ன மன்னிச்சிடு இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன் என்றவாறு நெடுஞ்சான்கிடையாக விழுந்தான். அவன் நண்பன்தான் அவனை தூக்கி கையில் நூறு ரூபாயைக் கொடுத்து மணிப்பிள்ளை நீட்டிய உண்டியலில் போட வைத்தான். போட்டதும் கைத்தாங்களாக பெரியம்பலத்திடம் கூட்டி வந்தான். “இனிமே ஒன் வாழ்க்க குறையில்லாம இருக்கும் என்று கூறியபடி கையிலிருந்த திருநீறை பூசினார். அவன் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க தப்பு பண்ண மாட்டேன் .. தப்பு ..பண்ணமாட்டேன்என உதடு துடித்துக் கொண்டிருந்தது. செந்தியம்பலமும் எழுந்து அவன் தோள் மேல் கை போட்டபடி கூட்டிச் சென்றார்.

பாலன் சோர்ந்து கலங்கியபடி மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த கந்தனின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்ட சுப்பையா நிம்மதியாக உணர்ந்தான்.

என்னதான் ஆச்சு பாலனுக்கு எனக் கேட்ட சங்கரிடம் அதையெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது எனக் கூறிவிட்டு பெரியம்பலத்தைப் பார்த்து அய்யா, காழாஞ்சியக் கொடுக்க ஆழம்பிங்கய்யா.. நேரமாச்சு என்று குரல் கொடுத்தான் குமார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.