காந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை

1.

“எங்க மரகதம்.. பேருக்குத்தான் இது வீடு.. ஒத்த ரூமுதான் இருக்கு.. இதுல எங்க..?”

“இதென்ன பேச்சு இது… நீங்க என்ன நடு ராத்திரல எந்திரிச்சு எட்டியாப் பாக்கப் போறீங்க… -இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் இந்த வீட்டுக்கு இன்னைக்குத்தானா வந்தீங்க.. இப்பத்தான் புதுசா பாக்குறாப்ல ஒத்த ரூம்தான் இருக்குனு கவலப்படுறீங்க…ஒத்த ரூம்ன்னாலும் நல்லா நீட்டமாத்தான இருக்கு.. குறுக்கால ஒரு குச்சியப் போட்டு ஒரு சேலையத் தொங்கவிடுங்க.. நம்ம தலைல இம்புட்டுதான் எழுதிருக்கு.. எல்லாம் இருக்குறதுக்குள்ளத்தான் குடும்பம் நடத்தனும்.. எதயாவது மனசுல வச்சுக்கிட்டு இனிமேலும் தள்ளிப்போடாதீங்க.. நடந்தது நடந்துபோச்சு..நல்லக் காரியம் நடந்துருச்சுன்னா எல்லாம் மறந்து போயிடும்”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது செந்தில் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அவன் அம்மாவும், அத்தையும் பேச்சை நிறுத்தினர். அவர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் சட்டை, வேட்டியைக் கழட்டிப்போட்டுவிட்டு லுங்கி ஒன்றைக் கட்டிக்கொண்டான். வெளியே விட உள்ளே புழுக்கம் அதிகமாய் இருந்தது. முகம் கழுவ வாசலுக்கு வந்தான். காலிப் பாத்திரங்கள்தான் கிடந்தன. திரும்ப வீட்டிற்குள் வந்து தண்ணீர் குடிக்கலாம் என்று மூடியிருந்தக் குடத்தைத் திறந்தான். அதுவும் காலியாகக் கிடந்தது.

“வீட்ல ஒரு பொட்டுத் தண்ணி இல்ல..” குடங்களை உருட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து அம்மா சொன்னாள். கடந்த ஒரு மாதத்தில் அவள் அவனிடம் பேசுவது குறைந்துபோயிருந்தது. என்ன சொல்லி அவனைச் சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் தவித்து வந்தாள். ஓடிப்போனவள் திரும்பி வந்தது ஒரு வகையில் அவளுக்குச் சந்தோசம்தானென்றாலும் அதைப் பற்றித் தன் மகனிடம் பேசுவதற்கு அவளுக்குத் தைரியம் வரவில்லை.

“எங்க அவ?”

“அவள எதுக்கு இப்ப கேக்குற…?”

“எங்கன்னு கேட்டேன்?” பொறுமை இழந்தவனாய் கத்தத்தொடங்கினான் செந்தில்.

“டேய்.. இப்போ எதுக்கு கத்துற.. அவ கடைக்குப் போயிருக்கா.. அம்மாசிக் கோனார் கிணத்துல தண்ணி கொடுக்குறாங்களாம். சைக்கிள எடுத்துட்டு ஒரு நட போய்ட்டு வா போ…” அவளாலேயே அவள் குரலைச் சகிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று மரகதம் சொல்லும்போது ஏன் இப்படி ஒரு மருமகளை இன்னமும் விட்டுவிடக் கூடாதென்று தவிக்கிறோம் என்று கேட்டுக்கொள்வாள்.

சிறிது நேரம் அமைதியாக குடத்தையும், அவன் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான். பின் விறுவிறுவென்று சட்டையைப் போட்டுக்கொண்டு, இரண்டு குடங்களோடு வெளியே வந்தான்.

செந்திலுக்கு திருமணம் ஆகி போன ஞாயிற்றுக்கிழமையோடு ஒரு மாதம் ஆகிறது. திருமணம் ஆன மறுநாளே அவன் மனைவி ஓடிப்போய்விட்டாள். ஆறு வருட பெண் பார்க்கும் படலத்திற்குப் பின் நடந்த திருமணம் அது. “ஹோட்டல்ல சப்ளையரா வேல செய்றாங்களா” என்ற கேள்வியோடு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நின்றுபோகும். ஒருக்கட்டத்தில் திருமணமே வேண்டாமென்று அவன் முடிவெடுத்த நிலையில்தான் அந்த சம்பந்தம் நடந்தது. பெண் வீட்டுக்காரர்களும் பெரிதாக இருக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் அவர்கள் பக்கமிருந்து கேள்விகள் அதிகம் வரவில்லை.

செந்திலை பொறுத்தவரை முதன் முதலாகப் பெண் பார்க்கப் போனபோதே அவளைப் பிடித்துவிட்டது. அதீத ஒப்பனைகளின்றி பார்க்க நல்ல லட்சணமாக இருந்தாள். “நல்லக் களையான முகம்” என்று பார்த்தவுடன் அவன் மனதில் தோன்றியது. எல்லோருக்கும் காப்பி குடுத்துவிட்டு அவள் அவனை ஒரே ஒரு முறைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனுக்கு எவ்வித உணர்ச்சியும் தெரியவில்லை. யாரும் எதுவும் அதிகம் பேசவில்லை. மரகதம்தான் அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். “பொண்ணுக்கிட்ட தனியா பேசனும்ன்னா பேசுங்க” என்றார் பெண்ணின் தந்தை. இருவரையும் வீட்டு மாடியில் இருந்த ஒரு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன பேசுவதென்று தெரியாமல் செந்தில் அமைதியாகவே இருந்தான். அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்க்க விரும்பினான். ஆனால் தைரியம் வரவில்லை. அவள் அவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலெல்லாம் “போலாம்” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.

முதலிரவின் போது அவனையும், அவளையும் விட்டுவிட்டு அவன் அம்மா மரகதம் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வீட்டிற்குள்ளே அவன் நுழைந்தபோது விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. செந்திலின் மனைவி கை கால்களை குறுக்கித் தூங்கிக்கொண்டிருந்தாள். களைப்பாய் இருக்குமென்று அவனும் படுத்துவிட்டான். மறுநாள் அவன் எழுந்திருந்தபோது அவளின் படுக்கை விரிப்புகள் அப்படியே கிடந்தன. வீடு திறந்துகிடந்தது.

அவள் ஒரே வாரத்தில் திரும்பி வந்தாள்.

ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைந்தார்கள் அம்மாவும், மகனும். ஒரு நாள் காலை விறு விறுவென உள்ளே வந்தவள் கையில் வைத்திருந்த பெட்டியை சுவரோரமாக போட்டுவிட்டு பாத்ரூமிற்குள் போய் கதவடைத்துக்கொண்டாள். அவள் வந்தபோது செந்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் அம்மாதான் வந்து எழுப்பி விசயத்தைச் சொன்னாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. பொங்கி வந்த அழுகையையும், ஆத்திரத்தையும் அவர்கள் கட்டுப்படுத்திக்கொண்டனர். அவளை ஒரு வார்த்தைக் கேட்க்கவில்லை. இன்றுவரை. செந்திலுக்கு அதை நினைத்துதான் அவ்வபோது ஆத்திரமாக இருக்கும். நியாயப்படி வர வேண்டியக் கோபம் கூட வராவிட்டாலும் பராவயில்லை திரும்பி வந்ததை நினைத்து சந்தோசப்படும் தன் மனதை நினைத்து ஆச்சர்யப்பட்டான். “நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கண்ணாடியைப் பார்த்துத் திட்டினான். எவ்வளவு முயற்சித்தும் அவளைக் கோபமாகக் கூட பார்க்கக் முடியவில்லை அவனால்.

3.

“பக்கத்து வீட்டுக்கு ஒரு பெரியவர் வந்துருக்கார்டா.. அவரையும் கூட்டிட்டுப் போ” வீட்டுக்குள்ளிலிருந்து அம்மா கத்தினாள்.. “ஆன்.. போறேன்.. போறேன்” வேண்டா வெறுப்பாய் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு படி இறங்கினேன். சில மாதங்களாகவே ஊரில் தண்ணீர்ப் பிரச்சனை. வாரம் ஒரு முறை வந்துகொண்டிருந்த கார்ப்பரேசன் தண்ணீர், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்றாகி, பின் மாதம் ஒரு முறை என்றாகி அதுவும் போன மாதத்தோடு நின்றுவிட்டது. லாரி வாங்கி கட்டுப்படி ஆகவில்லை என எல்லோரும் புலம்பிக்கொண்டிருந்தபோது அம்மாசிக் கோனார் தன் கிணற்று நீரை “பத்து ரூபாய்க்கு மூன்று குடம்” என தருவதாக அறிவித்தார். அப்பா இருந்திருந்தால் அவர்தான் போயிருப்பார். எரிச்சலை அடக்கிக்கொண்டு சைக்கிளை எடுத்தேன். “இதுல பக்கத்து வீட்டுக்காரங்கள கூட்டிட்டுப்போ.. எதிர்த்த வீட்டுக்காரங்கள கூட்டிட்டுப் போன்னு தொல்ல..”

“சார்.. சார்”

காலையிலேயே வெயில் தலைக்கேறிக்கொண்டிருந்தது. பெரியவரென்றால் எத்தனை வயதோ தெரியவில்லை.. தனியாகப் போனால் சீக்கிரம் வந்துவிடலாம்.. மற்றவர்களோடு போனால் அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்… புலம்பி என்னாகப் போகிறது..” யாரும் பதில் கொடுக்காததால் சைக்கிள் பெல்லை விடாமல் அடித்தேன். இரண்டு நிமிடங்களுக்குப் பின் வழுக்கைத் தலையோடு சற்றே கூன் போட்ட, அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் “வரேன் வரேன்”. என்பதுபோல் தலையாட்டிக்கொண்டே வந்தார். “இவரால் ஒரு சொம்பைக் கூடத் தூக்க முடியாதே இவர் எங்கிருந்து குடத்தைத் தூக்குவது” என்று யோசித்துக்கொண்டு நின்றவனைப் பார்த்து புன்னகைத்தார். மெலிந்த தேகம். சட்டைப் போடவில்லை. இடுப்பில் ஒரு வேட்டியும் தோளில் ஒரு துண்டும் மட்டுமிருந்தது. கையில் தடியும், கண்ணாடியும் கொடுத்தால் காந்தி மாதிரி இருப்பாரென்று தோன்றியது.செருப்பு போடுகிறாரா என்று பார்த்தேன்.

“தண்ணி புடிக்கப் போறேன்.. அம்மா நீங்க வந்தா உங்களயும் கூட்டிட்டுப் போ சொன்னாங்க” காதில் வாங்குகிறேனென்று தலையாட்டிகொண்டே வீட்டின் வெளிக்கேட்டைப் பூட்டினார். கையில் ஒரு குடம் இருந்தது. எப்படியும் நம்மைத்தான் சைக்கிளில் வைத்துக்கொண்டு வரச்சொல்லுவார் என்று நினைத்துக்கொண்டேன்.

“உங்க பேரு?” என்னால் அந்தக் கேள்வியைக் கேட்க்காமல் இருக்க முடியவில்லை.

“காந்தி”

உண்மையானப் பெயரே காந்தியாய் இருக்குமா என்று குழம்பிப் போய் நின்றவனைப் பார்த்து “போலாம்” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினார்.

“காந்தியிடம்” என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். காந்தி தாத்தாவே பேச்சை ஆரம்பித்தார்.

“பேரு என்னப்பா.. அம்மா சொன்னாங்க.. மூ.. மூர்த்தில்ல?” என் பெயரைக் கேட்டார்.

“இல்ல தா.. சார்… சேகர்” சார் என்று கூப்பிடுவதா தாத்தா என்று கூப்பிடுவதாவெனக் குழப்பம்.

“சேகர்.. சேகர்” இரு முறைச் சொல்லிப் பார்த்துக்கொண்டார். “இனி மறக்க மாட்டேன். என்ன படிக்கிற?”

“பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி.. பாரதிதாசன் யுனிவர்சிட்டி”

“வெரி குட்..”

தாத்தா நிச்சயம் காந்தியின் ஆவியாய் இருக்கவேண்டும் அல்லது அவரின் மறுபிறப்பாய் இருக்கவேண்டும் என்று நினைக்கும்வகையில் அவரின் நடை இருந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடுவது சிரமம் என்பதை அவருக்கு எப்படி எடுத்துச் சொல்வதென்று தெரியவில்லை.

“இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க..?” குஜராத் என்று சொன்னால் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடலாம் என நினைத்தேன்.

“பெங்களூர்” என்றார். அப்போது கூட என் சந்தேகம் முழுதாய்ப் போகவில்லை. வேறெதுவும் கேட்க்காமல் சைக்கிளை உருட்டினேன்.

அம்மாசிக் கோனாரின் கிணறு எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. ஊரே அங்குதான் போய்க்கொண்டிருந்ததால் சாலையின் இரு புறங்களும் மக்களால் நிறைந்து வழிந்தது. அவரவருக்கு வசதிப்பட்ட வண்டிகளில் குடங்களை வைத்து எடுத்துப்போய்க்கொண்டிருந்தனர். “ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கரண்ட்ட கட் பண்ராய்ங்க.. இப்போ தண்ணியயும் நிறுத்தியாச்சு மனுசங்க வாழ்றதா இல்லயா” எனத் திட்டிக்கொண்ட பெண்கள் தலையில் ஒன்றும் இடுப்பில் இரண்டுமாய் மூன்று குடங்களை சுமந்துகொண்டு சென்றனர். எனக்கு சைக்கிளில் வைத்துச் சிந்தாமல் கொள்ளாமல் எடுத்துச் வர முடியுமாவென்று சந்தேகமாகவே இருந்தது. பெரியவர் துணைக்கு இருப்பது ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

காந்தியும் நானும் தொடர்ந்து நடந்தோம். இல்லை..காந்தி நடந்தார். நான் பின்னால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினேன் என்றுதான் சொல்லவேண்டும். பேசாமல் அவரை முன்னால் போகவிட்டுவிடலாம் என்றெண்ணி மெதுவாக நடந்தால் பின்னால் திரும்பி திரும்பி பார்த்து மனிதர் விடாமல் இழுத்துச் சென்றார்.

சம்பந்தமேயில்லாமல் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது காதலன் பட பாடல். இப்படித்தான் அன்றொரு நாள் பேங்கில் கேஷியர் முன்னால் நின்றுகொண்டிருக்கும்போது எதையோ பாடிவிட்டேன். வீடு வந்து சேரும்வரை அவர் திட்டியதுதான் காதில் ஓடியது. “என்னவளே அடி என்னவளே” என்று பல்லவியை ஆரம்பித்தபோதே காந்தி திரும்பிப் பார்த்தார். முறைக்கிறாரா.. சிரிக்கிறாரா என்று தெரியவில்லை. பாடலைக் கேட்டிருப்பாரா என்பதே சந்தேகம்தான். ஏற்கனவே எந்தப் பாடலிலும் முதல் நான்கு வரிகளுக்குமேல் தெரியாது, இந்த லட்சணத்தில் இவரைப் பற்றிய யோசனையில் மூன்றாவது அடியிலேயே பாடல் தொலைந்துபோனது.

“ரகுமான் பாட்டுதான”

“ம்ம்” ஆச்சர்யம்தான் என்று முணுமுணுத்தேன்.

ஒரு நொடி இடைவெளிவிட்டு “ரகுமான் பிடிக்குமா” எனக் கேட்டார்.

“ரொம்ப புடிக்கும்”

“இப்ப பாடுனியே அந்தப் பாட்டு என்ன ராகம்ன்னு தெரியுமா” இம்முறை அவர் முகத்தில் லேசான சிரிப்பு இருந்தது நிச்சயம்.

“ராகமா… ராகமெல்லாம் கர்நாடக சங்கீதத்துலதான வரும்.. இவர் என்ன சினிமா பாட்டுல கேக்குறாரு” சைக்கிளின் கேரியரில் இருபுறமும் மாட்டியிருந்த குடங்கள் போடும் சப்தம் அவை சிரிப்பதைப்போல் இருந்தது. எனக்கு சத்தியமாய் சினிமாப் பாடல்களையும் ராகங்களில்தான் பாடுகிறார்கள் என்பது அதற்கு முன் தெரியாது.

“கேதாரம்” எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. மரகதம் ஆன்ட்டி. சாதரணமாக என்னப் பேசினாலும் காதில் விழாதவளுக்கு இது மட்டும் எப்படி விழுந்தது என்று எரிச்சலாக வந்தது. பேசாமல் சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டாலென்ன என ஒருகணம் யோசித்தேன்.

“வாங்கய்யா… நீங்கதான் புதுசா நம்ம ஏரியாவுக்கு வந்துருக்க டீச்சரா?” மரகதம் ஆன்ட்டி பெரியவரிடம், பார்த்த முதல் நொடியே நெடு நாள் பேசிப்பழகியவரிடம் பேசுவதுபோல் பேச ஆரம்பித்தாள். இந்தப் பெரியவர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படித்தான் உடனுக்குடன் பேச ஆரம்பித்துவிடுகிறார்களோ.. எங்கிருந்தாவது தொடங்கி எங்கெங்கோ போகிறார்கள்..

“ரிட்டயர்ட் டீச்சர்மா” காந்தி பதிலளித்தார்.

“என்ன..கொஞ்சம் சத்தமா சொல்லுங்கய்யா.. காது கொஞ்சம் கேக்காது”

“அதான பாத்தேன்” எனக்கு அவர் அப்படிச் சொன்னதும் சந்தோசமாகிவிட்டது. என்னையறியாமல் சிரித்துவிட்டேன். அதை மரகதம் கவனிக்கவில்லையென்றாலும் காந்தி தாத்தா கவனித்துவிட்டார்.

மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டே உடன் வந்த மரகதம், “சரிங்கய்யா.. நான் முன்னாடிப் போறேன் வாங்க..“ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிச் சென்றாள். நான் அவள் போவதை வெறுப்போடு பார்ப்பதையும் காந்தி கவனித்துவிட்டார். மரகதத்தை எனக்கு மட்டுமல்ல ஏரியாவில் யாருக்கும் பிடிக்காது. பெரியக் காரணங்கள் ஒன்றுமில்லை. வேக வேகமாக சைக்கிள் ஓட்டுவார். லாட்டரிச் சீட்டு வாங்குவார். டீக்கடைகளில் அடிக்கடித் தென்படுவார். சுருட்டுப் பிடிப்பார். கேட்டால் அப்போதுதான் “இரண்டுக்கு” ஒழுங்காகப் போகிறது என்பார். சுருட்டுப் பிடிக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்கும்.

“அவங்கள உனக்குப் பிடிக்கதா?” எதிர்பார்த்ததுபோலவே பெரியவர் கேட்டார்.

“அப்படி சொல்ல முடியாது…”

“பரவால்ல.. சொல்லு.. ஏன் அவங்களப் பிடிக்காது உனக்கு?” சொல்லாமல் விடமாட்டார் என்பதால் நான் காரணங்களை அடுக்கினேன். ராகத்தின் பெயரைச் சொன்னதுபோல் எப்போதும் எப்படி பதில்களை முந்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதையும் சேர்த்துக்கொண்டேன்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட வந்தவர் கடைசியாகச் சொன்னதைக் கேட்டவுடன் சிரித்துவிட்டார். என் கோபத்தை அவர் சிரிப்பு அதிகப்படுத்தியது. இப்படித்தான் மரகதம் ஆன்ட்டியும் எதற்கெடுத்தாலும் சிரிப்பாள். “இந்தப் பெருசுங்களுக்கு பெரிய இதுங்கன்னு நெனப்பு.. எதுக்கெடுத்தாலும் சிரிக்க வேண்டியது” சீக்கிரம் திருப்பிப் திட்டும் வயதை அடைய வேண்டும் என்று மனதில் பொருமினேன்.

சொன்னதையெல்லாம் கேட்டவர் ஏதேனும் பதில் சொல்லுவாரென்று பார்த்தால் வாயே திறக்காமல் நடந்துவந்துகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. சிறிது தூரம் அவரையே பார்த்துக்கொண்டே வந்தவனைப் பார்த்து “என்ன?” என்றார்.

“நீங்க ஒன்னுமே சொல்லலையே?”

“எதப் பத்தி?”

“மரகதம் ஆன்ட்டியப் பத்தி சொன்னதுக்கு”

“ஓ.. அதுவா.. அவங்கதான் போய்ட்டாங்களே.. அவங்களப் பத்தி ஏன் இன்னும் நெனச்சுட்ருக்க” “அவ்வளவுதானா”.. நான் எதிர்பார்த்த பதிலாக இல்லாததால் மேற்கொண்டு என்ன கேட்பதென்று தெரியாமல் நடந்தேன்.

அம்மாசிக் கோனாரின் கிணறு வருவதாய் இல்லை. “செந்தில் அண்ணே..” அப்போது எங்களைக் கடந்து போனவரைக் கூப்பிட்டேன். மரகதம் ஆன்ட்டியின் சொந்தக்காரர்தான் செந்தில் அண்ணன். எங்கள் கிரிக்கெட் அணியின் ஸ்டார் ப்ளேயர். சிறப்பான ஆல்ரவுண்டர். கல்யாணம் ஆனதிலிருந்து விளையாட வருவதில்லை. கடைசியாக அவரின் கல்யாணத்தில் பார்த்தது.

செந்தில் அண்ணன் திரும்பிப் பார்த்தார். என்னையும், காந்தியையும் ஒரு முறைப் பார்த்தவர் பின் சைக்கிளில் இருந்து இறங்கினார்.

பெரியவருக்கு செந்தில் அண்ணனை அறிமுகம் செய்துவைத்தேன். “சூப்பர் கிரிக்கெட் ப்ளயேர்” என்று சொன்னபோது ஒரு சிரிப்போடு “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க” என்றார் காந்தியிடம்.

செந்தில் அண்ணன் வீட்டில் ஏதோ பிரச்சனை என்று தெரியும். என்னவென்று சரியாகத் தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டபோது “அதெல்லாம் உனக்கெதுக்கு” என்று திட்டினாள். அவர் சிரித்தது சந்தோசமாக இருந்தது.

முத்தாளம்மன் கோவில் வந்தது. சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலமான கோவில். சக்தி வாய்ந்த தெய்வம். அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பலபேர் வந்து வழிபட்டுச் செல்வார்கள். திருவிழா அன்றைக்கு கோவிலுக்கு வருபவர்கள் ஆயிரங்களில் ஆரம்பித்து போன வருடம் லட்சத்தைத் தொட்டுவிட்டது. காப்பு கட்டியதிலிருந்து முடியும்வரை எப்போதும் ஜேஜே என்று இருக்கும் ஊர் இந்த வருடம் தண்ணீர்ப் பிரச்சனையால் களையிழந்திருந்தது. மைக் செட் கட்டி மண்டகப்படி நிகழ்ச்சிகளுக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்கள். பேசியது எனது முன்னாள் நண்பன் குமரேசன். சில வாரங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பேசிக்கொள்வதில்லை.

“அன்பான பக்த கோடிகளுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.. இரண்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு இன்றிரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். எனவே அன்பான பக்த கோடிகள் அனைவரும் தாங்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்து விழாவைச் சிறப்பிக்குமாறு விழாக் கமிட்டியினரின் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்” என்று அறிவித்தான்.

“வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறோமா…ஹி ஹி கேட்டுக்கொள்கிறோம்ன்னுதான சொல்லனும்”

“ஆமாம்” என்று காந்தி சொன்னபோதுதான் என்னையறியாமல் சத்தமாகச் சொல்லிவிட்டேன் என்பது உரைத்தது.

உடனே பேச்சை மாற்ற வேண்டுமென்று விரும்பினேன்.

“நீங்க என்னப் பாடம் எடுத்தீங்க..?”

“ம்..?”

“டீச்சர்ன்னு சொன்னீங்களே..என்ன சப்ஜெக்ட்?”

பதில் சொல்லப்போனவரை இடித்துக்கொண்டு ஒருவன் முன்னால் போனான். விழப்போனவரை இடது கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டேன்.…” செந்தில் அண்ணனும் சட்டென்று அவரைப் பிடித்துக்கொண்டார். “யோவ்.. பாத்துப் போ மாட்ட?” இடித்தவர் கண்டுகொள்ளவில்லை. “இப்படித்தான் தம்பி இருக்காங்க.. காதுல போன வச்சா உலகத்தையே மறந்தர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே பின்னால் ஒரு பெரியவரும் வந்து காந்திக்கு கை கொடுத்தார்.

“ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல..” சற்றே பதட்டப்பட்டாலும் காந்தி சமாளித்துவிட்டார். உடனேயே இயல்பு நிலைக்குத் திரும்பினார். முகத்தில் அந்தச் சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது

காந்தி அமைதியாய் இருந்தாலும் பின்னால் வந்து தாங்கிப் பிடித்தவர் விடுவதாய் இல்லை. “இந்த செல்போன எதுக்கு கண்டுபிடிச்சிருக்கானுங்கன்னு நெனக்கிறீங்க.. குடும்பத்த அழிக்கத்தான்.. பொய்யா பேசுறானுங்க சார்.. வீட்ல இருந்துக்கிட்டே வெளிய இருக்கன்றான்.. வெளிய இருந்துக்கிட்ட வீட்ல இருக்கன்றான்… அந்தக் காலத்துல நாங்கள்ளாம் பொய் சொல்லனும்ன்னா அம்புட்டு பயப்படுவோம்.. இப்போலாம் சர்வ சாதாரணமா போச்சு..”

“ஒவ்வொரு காலத்துலயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்…. அதான் உலகம்”

“பாருங்க. நீங்க எவ்ளோ தன்மையா பேசுறீங்க.. ஆனா இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமா மரியாதையே தெரியறதில்ல..” சொல்லி முடிக்கும்போது அவர் என்னைப் பார்த்தார்.

மரகதம் ஆன்ட்டியின் இடத்தை இப்போது இன்னொரு பெரியவர் எடுத்துக்கொண்டார். காந்தியோடு சிறிது தூரம் பேசிக்கொண்டு வந்தார். பேச்சில் பலரைப் பற்றிக் குறை ஓடிக்கொண்டிருந்தது. தன் பிள்ளைகளைப் பற்றி, எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளைப் பற்றி, தனது சொந்தக்காரர்களின் பிள்ளைகளைப் பற்றி என அவருக்குத் தெரிந்த எல்லா இளைஞர்களைப் பற்றியும் புகார் வாசித்தார். எனக்கு அவர் என் நண்பன் ஒருவனின் தாத்தாவை நினைவுபடுத்தினார். நண்பனின் தாத்தா தீவிரக் கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக சச்சின் ரசிகர். அவரோடு சேர்ந்து உட்கார்ந்து மேட்ச் பார்ப்பது மிக சுவாரசியமாய் இருக்கும். எதிரணியினரின் ஒவ்வொரு பந்தையும் சச்சின் சிக்ஸர் அடிக்க வேண்டும், போர் அடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார். நூறு அடித்து அவுட்டானாலும் “காசு வாங்கிட்டான்” என்பார். ஒருவழியாய் தன் புகார்கள் அனைத்தையும் தபால் பெட்டியில் போட்டுவிட்ட திருப்த்தியோடு ஒரு வீட்டைக் காட்டி.. என் வீடு வந்துருச்சு.. அப்போ நான் வாரேன்ங்க.. வேணா ஒரு வாய் தண்ணிக் குடிச்சுட்டுப் போறீங்களா..பட படன்னு வரப்போவுது” என்றழைத்தார். அவர் பேச்சில் நிஜமான அக்கறைத் தெரிந்தது.

காந்தி “இல்லங்க. பரவால்ல.. இன்னொரு நாள் வர்றேன்” என்றவரை அனுப்பி வைத்தார். எப்படி எல்லோரிடமும் பேசுகிறீர்கள் என்று கேட்க்கவேண்டுமென்று விரும்பினேன்.

எனக்கு வெயிலில் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடப்பது மிகுந்த சோர்வைத் தந்தது. அதோடு இடையிடையே அந்தப் பெரியவரைப் போல, மரகதம்போல யாரேனும் வந்து இன்னமும் கோபத்தைக் கிளறிக்கொண்டே வந்தனர். எப்படா தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குப் போவோம் என்றிருந்தது.

எதுவும் பேசாமல் வருவதைப் பாத்த காந்தி, “என்ன அவர் மேலயும் கோவமா” எனக் கேட்டார்.

“இல்ல.. அதெல்லாம் ஒன்னுமில்ல” எப்படித்தான் மனதில் ஓடுவதைக் கண்டுபிடிக்கிறார்களோ….

“ம்ம்” காந்தி ஒரு நிமிடம் நின்று மூச்சு வாங்கிக்கொண்டு பின் மீண்டும் நடந்தார்.

பரமேஸ் அண்ணன் எதிர்த்தாற்போல் டிவிஎஸ் 50-யில் குடங்களோடு வந்தார். பின்னால் மூன்று குடங்கள், மடியில் ஒன்று என நான்கு குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றார். அவர் வீட்டில் அவருக்கு இன்று ராஜ மரியாதை கிடைக்குமென்று நினைத்துக்கொண்டேன்.

“என் பேரச் சொன்ன உடன உங்க முகத்துல ஏற்பட்ட மாற்றத்தப் பாத்தேன்.. வழக்கமா நடக்குற ஒன்னுதான்” பாதி தூரம் வந்திருப்போம். அதுவரை அதிகம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக்கொண்ட காந்தி செந்தில் அண்ணனைப் பார்த்து முதன் முறையாகப் பேச ஆரம்பித்தார்.

“இல்ல… அப்படிலாம் எதுவும் இல்லைங்க ஐயா” செந்தில் அண்ணன் சற்று அதிர்ச்சி அடைந்தவராய்ச் சொன்னார்.

“பரவால்ல…”

“எங்கப்பா சுதந்திரப் போராட்ட தியாகி… தீவிர காந்தி பக்தர்.. அதுனாலதான் எனக்கு காந்தின்னு பேர் வச்சார்.. இப்போ கமல், ரஜினின்னு பேரு வைக்கிறாங்களல்ல.. அது மாதிரி.. காந்தி, காமராஜ், போஸ்ன்னு பேரு வைப்பாங்க” அவர் நடையில் சற்று வேகம் குறைந்தது.

“இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினைய ஒட்டி நாடு முழுக்க கலவரம் நடந்துச்சுத் தெரியுமா”

தெரியாதென்றேன். பள்ளியிலோ, கல்லூரியிலோ அப்படி யாரும் சொல்லிக் கேள்விப்படவில்லை. செந்தில் அண்ணனைப் பார்த்தேன். அவரும் உதட்டைப் பிதுக்கினார்.

“ம்ம்… ரெண்டு பக்கமும் நிறைய மக்கள் இறந்துபோனாங்க.. அப்போ எங்கப்பாவும் அம்மாவும் கல்கத்தால இருந்தாங்க…. நான் எங்கம்மா வயித்துல மூனு மாசம்”

எனக்குப் பள்ளியிலிருந்தே கதைக் கேட்பதென்றால் மிகவும் பிடிக்கும், அதிலும் நிஜமான கதையென்றால் சொல்லவே வேண்டாம். முதல் ஆளாக அங்கிருப்பேன். காந்தியிடம் கதைக் கேட்க்கத் தயாரானேன்.

“அவங்க இருந்த கிராமத்துலயும் பெரிய அளவுல கலவரம் நடந்திருக்கு.. அப்பாவும், அம்மாவும் எப்படியோ உயிரக் கையிலப் பிடிச்சுக்கிட்டு ஒவ்வொரு இடமா ஓடி ஒளிஞ்சு தப்பிச்சிருக்காங்க.. அப்போ அந்த ஊருக்கு காந்தி வந்தாராம்.. அவர் வர்றான்னு செய்தி கேட்டதும்தான் எங்கப்பாவுக்கு பொழச்சுட்டோம்ன்னு தைரியம் வந்துச்சாம்.. அன்னைக்கு அவர் அடஞ்ச சந்தோசத்தப் பல நாள் எங்கம்மா சொல்லிட்டே இருந்தாங்க.. பித்துப் புடிச்ச மாதிரி அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சார்… சிரிச்சுக்கிட்டே இருந்தார்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்ன்னு இப்ப நினச்சுப் பாத்தாக் கூட உடம்பெல்லம் என்னவோ பண்ணுதுன்னு ஒவ்வொருவாட்டியும் சொல்லுவாங்க” அதைச் சொன்னபோது அவர் குரலைச் சரி செய்துகொண்டதை நான் கவனிக்கத் தவறவில்லை.

“சந்தோசமான அடுத்த நிமிசமே எங்கப்பாவுக்குள்ள அதுவர அடக்கி வச்சுருந்த கோவம் வெறியா மாறிருக்கு.. வீட்ல இருந்த ஒரு அருவாளத் தூக்கிக்கிட்டு வெளியே கிளம்பிருக்கார்.. எங்கம்மா போகாதீங்கன்னு அழுது கெஞ்சிருக்காங்க..அவர் கேக்கல”

“காந்தி இருந்த இடத்துக்கு அருவாளோட போயிருக்கார்.. அவர சுத்தி ஆட்கள்… கிட்டயே போக முடியலயாம்.. தூரத்துல இருந்தேதான் பாத்துருக்கார்.. இந்தக் கதையக் கேக்குறப்பல்லாம் எங்கப்பா அருவாள எடுத்துக்கிட்டு காந்திய ஏன் பாக்கப் போனார்ன்னு எனக்குப் புரியாது.. அவர்ட்டயே ஒரு நாள் கேட்டேன்…”

“தெரியல.. அவரு ஊருக்கு வர்றார்ன்னு கேள்விபட்டதும் அழுகையும், ஆத்திரமும், சந்தோசமுமா வந்துச்சு.. அதுவர ஒவ்வொரு ராத்திரியும் உயிரோட இருப்போமா இல்லையான்னு பயந்து ஓடுனதுக்கு எதுனா திருப்பி செய்யனும்ன்னு தோணுச்சு… காந்திட்ட உத்தரவு வாங்கப் போனேன்னு நினைக்குறேன் என்றார்”

“காந்தி என்ன சொன்னாராம்” எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“அவர் காந்தியப் பாத்ததோட சரி.. பேசல” சப்பென்று போய்விட்டது. “அப்றம் என்னாச்சு?” செந்தில் அண்ணன் ஆர்வமாய் கேட்டார்.

“அவர் கூட்டத்தப் பாத்து கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டே போனாரம். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவரால காந்திக்கிட போக முடியல..”

“நல்ல வேளப் போகல” என்றேன். அதைச் சொன்னவுடன் சட்டென்று என்னைப் பார்த்தார் காந்தி.

“இல்ல.. கைல.. அருவாளோட காந்திக்கிட்ட போயிருந்தா அவர தப்பா நினச்சுருப்பாங்க எல்லாரும்” என்றேன்.

“சரிதான்” சிரித்துக்கொண்டே முதுகில் தட்டிக்கொடுத்தார் காந்தி. எனக்குப் பெருமையாக இருந்தது.

“எங்கப்பா அப்றம் என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கே திரும்ப்பிப் போயிருக்கார்.. அப்பாவ பாத்ததும் அம்மவால சந்தோசத்தக் கட்டுப்படுத்தவே முடியலயாம்.. அவர் வீட்டுக்குள்ள கால எடுத்து வைக்கும்போதே ஓடிப்போய் கட்டிபிட்டிச்சுக்கிட்டு அழு அழுன்னு அழுதாங்களாம்.. நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட அன்னைக்கு கூட நான் அவ்ளோ சந்தோசமா இல்லடா.. உயிரோட இந்த மனுசன் திரும்பி வந்த நாள என்னால என்னைக்கும் மறக்க முடியாதும்பாங்க.. உங்கம்மா எங்க மொத ராத்திரல கூட எனக்கு அவ்ளோ முத்தம் கொடுக்கல.. அன்னைக்கு என் முகத்த உண்டு இல்லன்னு பண்ணிட்டா”

“ச்சீ.. என்ன இது.. புள்ளைக்கிட்ட என்ன சொல்றதுன்னு இல்லாம.. அதச் சொல்லும்போது அம்மாவோட முகத்துல வெக்கம் நிறஞ்சு வழியும்.. அம்மா அப்போவோட காதலப் பாத்து வளர்ந்த பிள்ளைங்களுக்கு வாழ்க்கைல கொண்டாடுறதுக்கு நிறைய விசயங்கள் கிடைக்கும்..”

காந்தி மீண்டுமொரு முறை தன் தொண்டையைச் சரிசெய்துகொண்டார். அதன் பிறகு எதுவும் பேசவில்லை. எனக்கு “கதை அவ்ளோதானா?” என்றிருந்தது. அவரிடம் என்ன கேட்பதென்று தெரியாமல் சங்கடமாய் உணர்ந்தேன்.

“என்னாச்சு.. சார்?”

“என்ன.. ஓ.. ஒன்னுமில்ல.. பழைய நினைவுகள்.. கதை நல்லாருந்துச்சா?” சிரித்துக்கொண்டே கேட்டார். “உனக்கு ஏன் இதச் சொன்னேன்னு புரிஞ்சதா?” என்றார். எனக்குப் புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது. எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. செந்தில் அண்ணனும் தீவிரமாக யோசிப்பவர்போல் முகத்தை வைத்திருந்தார். “அண்ணே” என்றேன். “ம்ம்..?” ஏதோ சொல்ல அவர் வாயெடுத்தார். அதற்குள் அம்மாசிக் கோனாரின் கிணற்றை அடைந்திருந்தோம்.

காந்தி குடத்தோடு லைனில் போய் நின்றார். நான் அவரின் சொன்னக் கதையைப் பற்றியே யோசித்துக்கொண்டு நின்றேன்.

காந்தி திரும்பிப் பார்த்து “வாங்க.. வந்து நில்லுங்க” என்று என்னையும் செந்தில் அண்ணனையும் அழைத்தார்.

*

4.

செந்திலுக்கும் காந்தி ஏன் அந்தக் கதையைச் சொன்னாரென்று புரியவில்லை. காந்தி, சுதந்திரப்போராட்டம், வன்முறை என அவர் சொன்ன எதுவுமே அவன் மனதில் தங்கவில்லை. ஒரே ஒரு வரியைத் தவிர… “அம்மா அப்போவோட காதலப் பாத்து வளர்ந்த பிள்ளைங்களுக்கு வாழ்க்கைல கொண்டாடுறதுக்கு நிறைய விசயங்கள் கிடைக்கும்..”

செந்தில் பிறந்ததிலிருந்து அவன் வீட்டிற்குள் முழு வெளிச்சம் வந்ததேயில்லை. அவன் தன் அப்பாவையோ, மரகதம் அத்தையின் மாமாவையோ பார்த்ததில்லை. அவன் வாழ்க்கையில் எப்போதும் நிறைவின்மைதான் நிறைந்து வழிந்தது. ஓட்டைக் குடத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல்தான் ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் ஓழுகியோடியது.

“காதல்” என்கிற வார்த்தையைக் கேட்டபோது அவன் மனம் லேசானதை உணர்ந்தான். திருமணம் நிச்சயம் ஆகும் வரை யார் எப்போது காதலைப் பற்றிப் பேசினாலும் “அது ரொம்ப காஸ்ட்லியான விசயம்.. நம் வாழ்க்கையில் அதற்கு இடமில்லை” என்று நினைப்பான். இப்போதும் உறுதியாக எதையும் சொல்ல முடியாத நிலைதான். அவளைப் பார்த்த நாளில் இருந்து இது நாள் வரை ஒரு வார்த்தைக்கூட அவளிடம் பேசியதில்லை என்பது அவன் நினைவுக்கு வந்தது.

நிறைந்தக் குடங்களோடும், ஒரு முடிவோடும் வீட்டிற்குத் திரும்பினான்.

*

2.

மேகலை கடையில் ஓல்ட் சிந்தால் சோப்பு இரண்டு வாங்கினாள். வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து அடிக்கடி முகம் கழுவகிறாள் அல்லது குளிக்கிறாள். இப்போதெல்லாம் அவள் எதையும் அதிகம் யோசிப்பதில்லை. எவ்வளவு யோசித்து செய்தாலும் நடப்பவை எல்லாம் நினைப்பதற்கு நேர் எதிராய் முடியும்போது அவளும்தான் என்ன செய்வாள். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும் என்று தெரிந்தும் தன் மனம் விரும்பிய விசயத்தை அடைய முயன்றாள். அது நடக்கவில்லை. இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்று சாவை எதிர்பார்த்து வீட்டிற்குள் நுழைந்தாள். அப்படியும் எதுவும் நடக்கவில்லை. முன்னதைக் கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது, செந்திலும் அவன் அம்மாவும் அமைதியாக இருந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டுகின்றனர் என நினைத்தாள்.

செந்தில்.. செந்திலை பார்க்கும்போதெல்லாம் அவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வீடு திரும்பிய நாளை அவளால் நினைக்காமல் இருக்க முடியாது… கேத்ரீனையும்…

*

ஒரே சீரான வேகத்தில் போகும் பேருந்தின் சத்தம் சகிக்க முடியாததாய் இருந்தது மேகலைக்கு. இரவின் ஒழுங்கினால் உருவாகும் அமைதி அவளை எதற்கோ தயார் செய்வதைப் போலிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இரண்டு இருக்கைகள் பின்னால் உட்கார்ந்திருந்தாள். வண்டியில் கூட்டம் அதிகம் இல்லை. இருந்தவர்களும் தூங்கிக்கொண்டு வந்தார்கள். “இன்னும் மூன்று மணி நேரத்தில் மற்ற எல்லோர்க்கும் விடிந்துவிடும்.”

எப்போதுமே தவறு நடந்து முடிந்தபின்னர்தான் அறிவுரைகள் கேட்க்கும். அவளுக்கு அவளின் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் மனதில் ஓடின. “ஓடுற ஆறுக்கு பாக்குற பக்கமெல்லாம் வழிதான். ஆனா அப்படி நெனச்சு தெச மாறுனா அது கடல போய் சேராது” மேகலையை பொறுத்தவரை அவளின் திசையை மாற்றியது அவள் குடும்பம்தான். சிறு வயதிலிருந்தே திரைப்படங்களைப் பார்த்துவிட்டு கதாநாயகர்களை புகழந்து தள்ளும் தோழிகளைப் பார்க்கும்போதெல்லம் தனக்கு மட்டும் ஏன் கதாநாயகிகளைப் பிடிக்கிறது என்ற அவளின் குழப்பம் கேத்ரீனை முதன் முதலாகக் கல்லூரியில் பார்த்தபோது தீர்ந்தது.

ஏதேச்சையான முதல் சந்திப்பில் இருவருக்குமே ஒருவரை ஒருவர் எப்படி பிடித்தது என்று அதன்பின் நடந்த பல சந்திப்புகளில் பேசித் தீர்த்தார்கள். இருவரின் கல்லூரி நேரங்களும் வேறு வேறு என்றாலும் ஒருவருக்காக மற்றவர் காத்திருந்தார்கள். சந்திக்க முடியாத நாட்களில் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள். இருவருமே தங்களின் உறவைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. கேத்ரீனை விட மேகலைதான் மயக்கத்தில் இருந்தாள். “கண்ணா அது.. ஆம்பளைங்க தோத்தாங்க..பாத்து பாத்தே மயக்கிட்டா பாவி” கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் மேகலையின் முகம் சிவக்கும்.

இளங்கலை முடித்தப் பின் படிப்பைத் தொடர முடியாத மேகலையிடம், “முதுகலை இரண்டு ஆண்டுகள் மட்டும்தான், அதன் பிறகு ஒரு வருடத்தில் வேலை, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேனென்றாள்.” மேகலை கண்ணீர் வழிய சிரித்தாள். உடனேயே அழுதாள். கேத்ரீன் அவளை அள்ளி மார்போடு போட்டுக்கொண்டாள். பிரிவு உபச்சாரவிழா இனிதே நிறைவேறியது.

கேத்ரீனை அன்று வீட்டில் சந்தித்தப் பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை மேகலை. அவளிடமிருந்து கடிதங்கள் மட்டும் வந்துகொண்டிருந்தன. எல்லாக் கடிதங்களிலும் “எப்போதும் எது நடந்தாலும் சந்தோஷமாக இரு” என்ற வரி தவறாமல் இருக்கும். மேகலையின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடிதங்கள் வருவது நின்றுபோனது.

மேகலையின் எந்தப் போராட்டமும் அவளுக்கு உதவவில்லை. கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். முதலிரவு அறைக்குள் நுழைந்த உடனேயே விளக்கை அணைத்துப் படுத்திவிட்டாள். “இந்த ஒரு இரவைத் தாண்டிவிட்டால்போதும் தன் வாழ்க்கையில் அதன் பிறகு எப்போதுமே மகிழ்ச்சிதான்”. அவளைப் பெண் பார்க்க வந்த செந்தில் வந்த அன்று தனியாக இருவரையும் பேசிவிட்டு வருமாறு சொன்னபோது அவளின் விருப்பமின்மையைச் சொல்லத் துடித்தாள். வீட்டில் செத்துவிடுவோம் என்று மிரட்டி சம்மதிக்க வைத்தார்கள்.

கேத்ரீனின் வீட்டுக் கதவைத் தட்டியபோது அவள் மனதில் வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. தன்னைத் தேடி கணவன் வீட்டார்கள் வருவார்களா, கேத்ரீனின் வீட்டில் என்ன சொல்வது, வேறு என்னப் பிரச்சனைகள் வரும் என எதையும் அவள் யோசிக்கவில்லை. அவளைப் பார்த்துவிட்டால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று நம்பினாள்.

மேகலையை பார்த்த கேத்ரீன் சந்தோஷமாகவே வரவேற்றாள். மேகலைக்குத்தான் அதிர்ச்சி காத்திருந்தது. கேத்ரீனுக்கும் திருமணம் ஆகியிருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை. தனக்கு வந்த கடைசி கடிதத்தில் கூட “நான் இருக்கிறேன் மறந்துவிடாதே” என்றுதான் எழுதியிருந்தாள். ஒருவேளை அவளுக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் தனியறையில் தூங்கியபோது, கேத்ரீன் ஒரு முறைக் கூட அறையில் தனியாய் வந்து பார்க்காதபோது மேகலைக்கு புரியத் தொடங்கியது.

கேத்ரீன் அந்த ஒருவாரத்தில் பகல் முழுவதும் மேகலையோடுதான் இருந்தாள். மூன்றுவருடக் கதைகள் ஒன்றுவிடாமல் சொன்னாள். அவளையும் சொல்ல வைத்தாள். எதற்கு வந்திருக்கிறாய், எப்படி கல்யாணம் ஆனது, உன் நிலமை என்ன என எதைப்பற்றியும் ஒருவார்த்தை பேசாமல் மற்ற எல்லாக் கதைகளையும் ஒரு அடி தள்ளி நின்று கண்களைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் கேத்ரீனை பார்க்க பார்க்க பயமாய் இருந்தது மேகலைக்கு. அவர்கள் பிரிந்திருந்த நாட்களைவிட அவளின் வீட்டில் தனி அறையில் இருந்த நாட்கள் தாங்க முடியாத வேதனையை அளித்தன.

தூக்கம் வராத ஒரு இரவில் தன் அறையை விட்டு வெளியே வந்தவளை கேத்ரீனின் அறையில் இருந்து வந்த சத்தங்கள் முற்றிலுமாக உடைத்துப் போட்டது. மறுநாள் காலை சரி நான் கிளம்புகிறேனென்றவளிடம் அடுத்த முறை வரும்போது குறைந்தபட்சம் பத்து நாட்களாவது தங்கவேண்டும் என்றாள் கேத்ரீன்.

*

பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன்னரே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் மேகலை. நடப்பது நடக்கட்டும் என்று வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

மாமியார் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமால் வீட்டிற்குள் நுழைந்தாள். செந்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் வெளியேறிய அன்று எப்படி இருந்ததோ அப்படியேதான் அன்றும் இருந்தது வீடு. தன் பெட்டியை ஒரு மூலையில் வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். யார் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தைத் திரும்ப பேசக்கூடாதென்று சொல்லிக்கொண்டே குளித்தாள்.

ஆனால் அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாய் அவளை யாரும் எதுவும் பேசவுமில்லை கேட்க்கவுமில்லை…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.