புள்ளில் தொடங்கி புள்ளில் முடியும் ஒரு சிறுகதைத்தொகுப்பு ரமேஷ் கல்யாண் அவர்களின் ”திசையறியாப் புள்” தொகுப்பு. ஊரில் ஓர் காணியில்லை; உறவு மற்றொருவரில்லை என்ற ஆழ்வாருக்கு பரமனின் பத்ம பாதமே தன் துணை என்ற தெளிவு இருந்தது. ஆனால், எத் திசையில் செல்வது என்ற எவ்விதத் திட்டமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தன் சிறகுகளையும் இழந்த நிலையில் ஒரு பறவை என்ன செய்யும்? ரமேஷ் கல்யாணின் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருக்கும் விடுதலை கதையில் வரும் சிறகுகள் வெட்டப்பட்ட (ஜோசியம் சொல்லும்) கிளியும், தொகுப்பின் கடைசிக் கதையில் வரும் சிறுமியும் அடுத்து என்ன செய்வது எனத் திசை தெரியாது தவிக்கும் திசையறியாப் புட்கள்தான். பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருக்கும்போது அவை தங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மனிதன் தனக்காக இழுத்து வந்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு, வேண்டாமெனும்போது கை விட்டு விடும்போது, அவை தங்கள் பழைய வாழ்க்கையையும் வாழ முடியாமல், குறைப்பட்டுப்போன அவற்றுக்கு ஓர் ஆதரவையும் தேடிக் கொள்ள முடியாமல் செல்லும் திசை தெரியாமல் அபலை நிலையில் நிற்கின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒருவரை மற்றவர் சார்ந்த வாழ்க்கை வாழவே பழகியிருக்கிறான். சொந்தம், பந்தம், பாசம், அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்னும் சிறகுகளால் ஆன பறவையாயிருக்கிறான். இந்தச் சிறகுகள் வெட்டப்படும்போது அவனும் வாழ்க்கையில் திசை தெரியாமல்தான் தவிக்கிறான்.
முதல் கதையில் வரும் கிளியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அழைத்து வந்த சோதிடன், பால் பழம் கொடுத்து வளர்க்கிறான். தன்னுடைய மகனைத் தான் இழக்கப் போகிறோம் என்பதைத் தன்னால் கணிக்க முடியாத வருத்தமோ, கிளி மீது ஆசையாக இருந்த தன் மகனே இறந்து விட்டான், இனிமேல் இந்தக் கிளி எதற்கு என்ற வெறுப்போ, தன் மகன் ஒரு தீ விபத்தில் மரணித்தவுடன், இந்தக் கிளியைக் கொண்டு போய் அத்துவானத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறான். தன் மகன் செய்து வந்த முறுக்கு வியாபாரத்தைத் தொடர விரும்புகிறான். கிளியின் மீது அவன் காட்டிய அன்பு எங்கே போனது? சோதிடத் தொழிலையே விட்டு விட்டால் கூட, அந்தக் கிளி அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகக் கூடாதா? என்ற கேள்விகள் வாசிப்பவர் மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை உருவாக்குகிறது. அந்தக் கிளி திசையும் தெரியாமல், தான் செல்ல வேண்டிய இடமும் தெரியாமல், தவித்து நிற்கிறது.
தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசிக் கதையில் பள்ளிச் சிறுமி ஒருத்தி, பள்ளியில் ஒரு கல்வி உதவி பெறுவதற்காக நேர்காணல் செய்யப் படுகிறாள். அந்த உதவித் தொகை தாயில்லாப் பெண் குழந்தைகளுக்கே கிடைக்கும். இவள் தந்தையுடன் இருக்கிறாள். அவளது தாய், அவர்களுடன் இல்லாமல், வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டு விட்டாள். இந்தச் சிறுமியிடம் அவள் தந்தை, தாயை இழந்தவள் என்று சொல்லச் சொல்கிறான். ஆனால், அந்தச் சிறுமி, புரியாமால் தவித்து, தன் தாய் இருக்கிறாள் என்றே சொல்கிறாள். இந்தச் சிறுமிக்கு அந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா? என்பது பொருட்டல்ல. தாயன்புக்கு ஏங்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு தன் தாய் தங்களுடன் ஏன் இல்லாமல் போனாள் என்றோ, தன் தாய்க்கும், தந்தைக்கும் இடையேயான பிணக்கு பற்றியோ என எதுவுமே தெரியாத நிலையில், தாய் இருக்கிறாள் என்றே சொல்லத் தெரிகிறது.. அந்தப் பிஞ்சு மனது என்ன செய்வது என தவித்து நிற்கிறது. முதலில் அனாதரவாக விடப்பட்ட கிளியும், இந்தச் சிறுமியும் ஒரே மாதிரியான நிலைமையில் நம் முன் வந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.
காற்றின் விதைகள், ந்யூரான் கொலைகள் இரண்டு கதைகளும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான அன்பு, பாசம், அனுசரணை எல்லாமான மெல்லிய சிறகுகள் பணம், பொருள், சொத்து, சுகம் இவற்றால் சிதைக்கப்படுகிறது.. இந்தக் கதைகளில், பிள்ளைகள்,வளர்ந்து முன்னேறி, தமக்கென ஒரு வாழ்க்கை கிடைத்த பிறகு, தம் பெற்றோர் தமக்காக பட்ட கஷ்டங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கிய அத்துணை பேறுகளையும் மறந்து அவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய பொருள் சார்ந்த பயனையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதே போல. பெற்றோரின் எதிர்பார்ப்பு எப்படி பிள்ளைகளின் வாழ்க்கை சிதைய காரணமாகிறது என்பதை ”சாலமிகுத்து “ கதை பேசுகிறது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும், அதற்காக மட்டுமே பதற்றமாகவே இருக்க வேண்டியதில்லை என்றும், மதிப்பெண்கள் குறைந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்றெல்லாம் நம்பிக்கை கொடுக்க வேண்டிய பெற்றோரே, பிள்ளைகளை மதிப்பெண், மதிப்பெண் என்று ஓட விட்டு, மனச் சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், மனிதன் வாழ்வில் உயர்வதற்குமே கல்வி என்பது மதிப்பெண்வயமான கல்வியாக மாறி, மகிழ்ச்சியாகக் கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் மனங்களின் ஆனந்தச் சிறகுகள் சிதைக்கப்பட்டு மதிப்பெண் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது.
மனித குலத்தின் ஒரு பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேலடுக்கைத் திறந்து விட்டால், அதற்கும் கீழே எத்தனை பேர் எத்தனையோ காலமாக ஒடுக்கப்பட்டு எழும்ப முடியாமல் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பது புரியும். இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கு ஒரு யானை பலம் தேவையாய்த்தானிருக்கிறது. ஒசூரை அடுத்த பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல் சக்கரங்கள் காணப்படுவதை வைத்து புனைவாக தேரோட்டத் திருவிழா நடக்கும் கதை ஒரு விரிவினைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
. இப்படிக் குறிப்பிடும்படியாக பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. அதோடு, பல கதைகளில் ஆசிரியர் கையாளும் உதாரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.
பிரமிடுகளின் படிக்கல் போல நிறைய அட்டைகள் ( விடுதலை )
வானிலிருந்து விழும் மழை மணிச்சரங்கள் ( அபேதம் )
சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின்
தேய்வுக்கும், அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான். ( நெனப்பு )
பொசுங்கியபலாக்கொட்டைகள் போன்ற மங்கலான வறண்ட கண்கள் ( எரிகற்கள்)
ஒழுகும் மெழுகு போல கனத்த பேச்சற்ற மௌனம் ( எரிகற்கள்)
வாழைப்பழத்தை வெட்டும்போது கசியும் மௌனம் ( வுல்லன் பூக்கள் )
கல்லுப் பிள்ளையார் கதையில் மனிதம் என்பது மதம் கடந்தது என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். கடைசி வரிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. மற்றப்படி, தொகுப்பிலுள்ள 17 கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ரமேஷ் கல்யாண் அவர்கள் முதல் சிறுகதைத் தொகுப்பில் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதை அழகான முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
—————————————
( திசையறியாப் புள் – ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் – பவித்ரா பதிப்பகம் – வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை )