கறந்து நொதிந்த சாற்றின் மிடறுப் பாதையாக உருக்கொண்டான். காட்சிக்கென்ன கர்வமோ, சாட்சிக்கென்ன சர்வமோ, அப்படி ஒரு துய்தல் கருக்கொண்டது. கோப்பை, நாவின் நர்த்தன மேடையானது. ரசபாசம் பொங்கி வழியும் இந்த உணவுப் பண்டங்கள் எவ்வளவு சுவைத்தும் தீர்வதில்லை. அப்போதைக்கு பசியாற்றுகின்றன. எப்போதைக்கும் பசியேற்றுகின்றன. காலப் புதருக்குள் ஒளிந்திருக்கும் காவிய போதை எட்டி எட்டி மட்டும் பார்த்துத் தயங்குகிறது. முட்டி முட்டி வேர்த்து முயங்குகிறது ஆவி. கண்டதெல்லாம் பொக்கிஷம் உண்டதெல்லாம் மாமிசம் என்றாகிறது. பெரிதினும் பெரிது கேட்கிறது சிற்றின்பம். சிறிதினும் சிறிது காட்டுகிறது பேரின்பம். ஞானத்தின் மோனம் கானமாகிறது. கருந்துளை வாயிலில் சிக்கிய கலம் ஆளவும் முடியாமல் மீளவும் முடியாமல் பரிதவிக்கிறது. திரை விலகியதும் முப்பரிமாணத்தின் தாக்கம் நாவுகளின் இனத்தை இரண்டின் இலக்கங்களில் பெருக்கிக் கொண்டே போகிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிக்கு முன்னாடியும் தெரியவில்லை பின்னாடியும் தெரியவில்லை. இப்போது அறையெங்கும் நிறைந்திருக்கும் நாவுகள் தம்மையே சுவைத்துக் கொள்கின்றன. கண் திறந்தால் ஒரே பார்வை தான் ஆனால் மெய் மறந்தால் முடிவில்லா தரிசனங்கள் கிடக்கின்றன. ஆழம் நீளத்தை அகலம் பார்க்கிறது. உறிஞ்சுகுழல் மனித ரூபம் கொள்கிறது. அமைந்தாலும் விடாது அமைதி. கற்றது உலகளவு பெற்றது கையளவு. ஓதும் நாவு இன்னும் போதும் என்று சொல்லவில்லை. அவையடக்கம் என்றால் அவையை அடக்குவது என்று யாரும் அதிகாரத்தின் புதிராக்கத்தைச் சொல்லவில்லை. உள்ளிருக்கும் கள்ளிறக்கும் வித்தைக்கு தந்திரம் தான் துணை. ஞானத்திற்குப் பாதையே இல்லை. கடவுள் இல்லை என்றால் எல்லாம் கடவுள் என்பது போல. மாறு மனம் வேறு குணம் கேட்கிறது வாசிப்பின் வாழ்வு.
தனித்திருக்கும் ஒவ்வொருக்கும் ஒருவிதமான அனுபவம் இது.
நன்றி