“நான் ஒருவரையும் கொலை செய்ததில்லை. அது உண்மைதான். எனக்கு அதைச் செய்வதற்கு துணிச்சலில்லை என்பதுதான் காரணமே தவிர, விருப்பமில்லை என்பதல்ல”. Eduardo Galeano
கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெறப்போகும் ஒரு பெண்ணை சந்திக்க மனநல மருத்துவர் ஒருவர் சிறைச்சாலைக்கு செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அந்த பெண் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். மருத்துவரின் தொடர் முயற்சிக்குப் பிறகு சந்திக்க உடன்படுகிறார். “நானொரு வெற்றிகரமான விபச்சாரி. ஒரு விபச்சாரி எத்தனை வெற்றிகரமானவளாக இருப்பினும், அவளால் அனைத்து ஆண்களையும் அறிந்திருக்க முடியாது. எனினும், நான் சந்தித்த அனைத்து ஆண்களின்மீதும் எனது கையை உயர்த்தி, அவர்களின் முகத்தில் ஓங்கி அறைய வேண்டும்” என்ற ஒரு பெருவிருப்பம் மட்டும் தனக்கு இருந்ததாகக் கூறி தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
எகிப்தில் ஒரு கிராமத்தில் பிறந்த “பிர்தவ்ஸ்” சிறு வயதிலேயே தன் தாயை இழந்து விடுகிறாள். குழந்தைகளைப் பொருட்படுத்தாத தந்தை மற்றும் சித்தியுடன் வாழ்கிறாள். அவளுக்கான ஒரே ஆறுதல் கிராமத்திற்கு வரும் அவள் மாமன் மட்டும்தான். அவள் உடலுடன் அவன் விளையாடினாலும் அவனின் கனிவான தன்மை அவளை ஈர்க்கிறது. மாமனுடன் கிளம்பி நகரத்திற்கு வருகிறாள். மாமன் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறான். நன்றாகப் படித்து பொறுப்புள்ள பணியில் சேர விருப்பப் படுகிறாள். நல்ல மதிப்பெண்களும் பெறுகிறாள் . ஆனால் பிர்தவ்ஸின் மாமனும் அவர் மனைவியும் அவளை அறுபது வயதுகளில் இருக்கும் ஒருவனுக்கு மணமுடித்து விடுகிறார்கள். இதுவரை துன்பங்களைச் சந்தித்த பிர்தவ்ஸ் கொடூரங்களைச் சந்திக்க ஆரம்பிக்கிறாள். அவள் கணவனுக்கு உதட்டின்கீழே மோவாயில், ஒரு பெரிய வீக்கம் இருக்கிறது. அதில் இருந்து துருப்பிடித்த குழாயின் வழியாகத் துளிகள் ஒழுகுவதுபோல இரத்தச் சிவப்பிலோ அல்லது சீழ்போன்று வெண்மஞ்சள் நிறத்திலோ திரவம் வெளியேறியபடியே இருக்கும். செத்துப்போன நாயின் உடலில் வீசும் துர்நாற்றத்தைப் போன்ற கடுமையான வீச்சத்துடன்கூடிய திரவத்தை அந்தத் துளை வெளியேற்றும். இரவுகளில், அவன் கால்களும் கைகளும் அவளை வளைத்துப் பிணைத்து கொள்ளும். பல வருடங்களாக நல்ல உணவைக் காணாதவன் ஒரு பருக்கையைக்கூட மிச்சம்வைக்காமல் கிண்ணத்தை வழித்து உண்பதைப்போல, அவனது கரடுதட்டிப்போன விரல்கள் அவள் உடல் முழுவதும் தடவிப் பார்க்கும். பெரிய கஞ்சனான அவன் ஒரு முறை அவள் உண்ணும்போது ஒரு பருக்கை கீழே விழுந்ததற்காக, தன் காலனியால் அவள் உடல் முழுதும் அடித்து விளாசி விடுகிறார். வலி தாங்க முடியாமல் தன் மாமனிடம் வந்து முறையிடுகிறாள். அதற்கு மாமனோ, மதத்தின் கட்டளைகள் இத்தகைய தண்டனைகளை அங்கீகரித்துள்ளது. ஒழுக்கமான பெண்மணி எவரும் , தன் கணவனைப்பற்றி குறைகூறமாட்டார்கள். பூரண பணிவுடன் இருப்பதே அவளது கடமை என்று சொல்லித் திரும்ப அனுப்பி விடுகிறார். செல்வதற்கு இடம் இல்லாது எகிப்தின் வீதிகளில் நடந்து செல்கிறாள். தன்னுடைய பள்ளிச் சான்றிதழைப் பார்த்து யாரவது தனக்கு வேலை கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குகிறாள். ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். இதுவரைக் கொடூரமாக இருந்த பிர்தவ்ஸின் வாழ்க்கை குரூரமாக மாறுகிறது.
அடைக்கலம் கொடுத்தவன் அவளைப் பிய்த்துத் தின்கிறான். தான் தின்றது மட்டுமில்லாமல் தன் நண்பர்களுக்கும் அவளை உணவாக்குகிறான். அங்கிருந்த தப்பித்த அவளைப் பல ஆண்கள் அவளின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது ஒரு முடிவுக்கு வருகிறாள். இத்தனை நாளும் தன்னைத் தானே அவள் உயர்வாக மதிக்கவில்லை என்பதை உணர்கிறாள். ஒரு ஆணுக்கு எப்போதுமே ஒரு பெண்ணின் மதிப்பு தெரியாது. தன் மதிப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். எத்தனை அதிகமாக தனக்கு ஒரு விலையை நிர்ணயித்துக்கொள்கிறாமோ, அத்தனை அதிகமாக அவர்கள் நம் மதிப்பை உணர்ந்து கொள்வார்கள். மேலும் தனக்குரிய விலையை எப்பாடுபட்டேனும் கொடுத்துவிடவும் தயாராக இருப்பார்கள். தன் உடலுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறாள். உண்மையில் தான் வாழும் சமூகத்தில் ஒரு மனைவியின் வாழ்வைவிடவும் ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்வு மேலானது. நாம் அனைவருமே வெவ்வெறு விலைகளுக்கு நம்மை நாமே விற்கும் பாலியல் தொழிலாளிகள்தான் என்பதையும் விலைமதிப்புள்ள ஒரு விலைமாது, மலிவானதொரு விலைமாதுவை விடவும் மேலானவள் என்கிறாள். தன்னைத் தேடி வரும் பல ஆண்களை வேண்டுமென்றே நிராகரிக்கிறாள். ஒரு ஆண், தன்னைத்தானே நிராகரிப்பவனாய் இருக்கிறான். அதனாலேயே ஓர் பெண் அவனை நிராகரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இரட்டை நிராகரிப்பை ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பாலியல் தொழிலாளி தன்னை மறுக்கும்போது, அவளை அதிகம் வற்புறுத்துவான். எவ்வளவு அதிகமாய் விலையை ஏற்றினாலும் அதைத் தர தயாராய் இருப்பான் என்பதை புரிந்துகொள்கிறாள். ஏனெனில், ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படுவதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்நகரின் வெற்றிகரமானதொரு பாலியல் தொழிலாளியாக உருவெடுக்கிறாள். ஒரு சாதாரண பெண்ணாக இருந்தபோது அவள் சந்தித்த துயர் நிறைந்த வாழ்வை விடவும், ஒரு பாலியல் தொழிலாளியாக அவள் வாழ்வு ஓரளவு நன்றாகவே இருந்தது.
ஆண்களின் ஒற்றைச்சுவடுகூட தன்னிடமிருந்து மறைந்து போகவேண்டும் என்று விரும்புகிறாள். ஒருவனைக் கொல்கிறாள். “நீயொரு குற்றவாளி” என்றவர்கள், தொடர்ந்து “உன் தாய் ஒரு குற்றவாளி” என்றனர். “என் தாய் குற்றவாளியல்ல. உண்மையில், எந்தவொரு பெண்ணுமே குற்றவாளியல்ல. ஒரு ஆண்தான் குற்றவாளியாக இருக்கமுடியும். நீங்கள் அனைவருமே குற்றவாளிகள். தந்தைகள், மாமன், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்துத் தொழில்களையும் புரியும் அனைத்து ஆண்களுமே குற்றவாளிகள்தான்.” பிர்தவ்ஸுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அவள் புரிந்த குற்றத்திற்கு மன்னித்து விடுவிக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை மனுவை எழுதினால், விடுதலைக்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். “இங்கிருந்து விடுதலை அடைய எனக்கு விருப்பமில்லை. எனது குற்றத்திற்காக எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. ஏனெனில், நீங்கள் அனைவரும் எனது குற்றம் எனக்கூறும் ஒன்று என்வரையில் குற்றமே அல்ல. விடுதலையாகி மீண்டும் வெளியே சென்றாலும் கொலை செய்வதை நான் நிறுத்த போவதில்லை.” நீயொரு குற்றவாளி நீ சாகத்தான் வேண்டும் என்கின்றனர். “அனைவரும் சாகத்தான் வேண்டும். நீங்கள் செய்த எதோவொரு குற்றத்திற்காக நான் இறப்பதைவிடவும் நான் செய்த குற்றத்திற்காக இறப்பதையே நான் விரும்புகிறேன்.” என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுத மறுத்துவிடுகிறாள்.
நூற்று ஐம்பதுக்கும் குறைவான பக்கங்களை கொண்ட நாவலாக இருந்தாலும், வாசிக்கும் நம்மால் அவ்வளவு எளிதாக இதைக் கடந்துவிட முடியாது. சசிகலா பாபு மிக எளிய மொழியில் அதன் வீரியம் குறையாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொத்த நாவலில் ஒரு இடத்தில் மட்டுமே நான் சிரித்தேன். அது பிர்தவ்ஸ் ஒரு வெற்றிகரமான பாலியல் தொழிலாளியாக உருவான பிறகு அவளுக்கு உயர்ந்த விலை வழங்கப்படுகிறது. பெரும் பதவிகளில் இருக்கும் மனிதர்கள்கூட அவளுக்காகத் தங்களுக்குள் போட்டியிட்டு கொள்கிறார்கள். ஒருநாள் வெளிதேச பிரமுகர் ஒருவர் அவளைப் பற்றி கேள்விப்பட்டு தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லுவார். பிர்தவ்ஸ் அவரை சந்திக்க மறுத்துவிடுகிறாள். அவளின் நிராகரிப்பு அந்தப் பிரமுகருக்கு பெருத்த அவமானமாகி விடுகிறது. நாட்டின் உயர் காவல்துறை அதிகாரியை தூது அனுப்புகிறார். காவல்துறை அதிகாரி வெவ்வேறு விதங்களில் அவளைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறார். நிறைய பணம் கொடுப்பதாகவும், கெஞ்சியும், மிரட்டியும் பேசுகிறார். பிர்தவ்ஸ் எல்லாவற்றையும் மறுத்து விடுகிறாள். கடைசியாக ஒரு பிரஜைக்கு இருக்க வேண்டிய நாட்டுப்பற்றை பற்றி பேசுகிறார். ஒரு வெளிமாநிலத் தலைவரை மறுப்பதென்பது அத்தனைப் பெரிய மனிதருக்கு நீ இழைக்கும் பெரும் அவமதிப்பு எனவும், இதனால் இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசல் உண்டாகலாம் எனவும் கூறுகிறார். தொடர்ந்து நீ நமது நாட்டை உண்மையிலேயே விரும்பினால், நீயொரு தேசப்பற்றாளர் என்றால், உடனடியாக அந்த வெளிதேசப் பிரமுகரிடம் செல்லவேண்டும் என்கிறார். அதற்கு பிர்தவ்ஸ் நாடு இதுவரை தனக்கு எதையுமே தந்ததில்லை என்பதோடு, தனது கௌரவம், மதிப்பு உட்பட அனைத்தையும் பிடுங்கிக் கொண்டது. தேசப்பற்று என்றெல்லாம் ஒன்று தனக்குக் கிடையாது என்கிறாள்.
பிர்தவ்ஸ் தன் வாழ்க்கையில் இருமுறை மட்டும்தான் இளைப்பாறுகிறாள். ஒன்று தான் காதலிக்கப்பட்டதாய் உணரும் தருணம். மற்றொன்று அவள் வாடிக்கையாளன் ஒருவன் அவளிடம் “உனக்கு உறக்கம் வருகிறதா? ஆம் என்றால் என்னை அணைத்துக்கொண்டு உறங்கு” என்ற தருணம். இவ்வரிகளை படித்தபோது எனக்குத் தோன்றிய ஒரே பெயர் “சதத் ஹசன் மண்டோ”. அவரின் ஒரு கதையில் விலைமாது ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். அப்போது அந்த அறைக்கு வந்த அவளின் தரகன் வெளியே ஒரு வாடிக்கையாளன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று கூறி அவளை உடனே கிளம்புபடி கூறுவான். ஆனால் அவளோ தன்னால் கிளம்ப முடியாது என்றும் தான் உறங்க விரும்புவதாகவும் கூறுவாள். இப்படித் தூங்கி கொண்டிருந்தால் உணவு கிடைக்காமல் சாக வேண்டியதுதான் என்றும், அது மட்டுமில்லாமல் வந்திருக்கிற வாடிக்கையாளர் ஒரு உயர்ந்த மனிதர். இப்படிச் செய்வது அவரை அவமானப்படுத்துவது போல இருக்கும் என்று கூறி அவளைக் கட்டாயப்படுத்துவான். தான் பசியால் இறந்தாலும் பரவாயில்லை, தனக்கு தேவை தூக்கம் மட்டுமே என்று கூறி மறுத்துவிடுவாள். இருவருக்கும் கைகலப்பு நடக்கும். அங்கே இருந்து கூரான ஒரு பொருள் பட்டு தரகன் தலை உடைந்து கீழே விழுந்து விடுவான். அந்தப் பெண் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து அவனை பார்ப்பாள். அவன் இறந்துவிட்டானா அல்லது மயக்கத்தில் இருக்கிறானா என்று அவளுக்கு எதுவும் தெரியாது. எந்தச் சலனமுமின்றி அவள் படுத்துத் தூங்கி விடுவாள் என்பதாகக் கதை முடியும். பாலியல் தொழிலாளிகளுக்காக எவ்வளவோ பேர் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஏக்கம், காதல், வலி போன்றவற்றிற்காக மட்டுமல்லாமல்அவர்களின் உறக்கத்திற்காகவும் பேசிய ஒரே எழுத்தாளன் “மண்டோ” மட்டும்தான்.
ஆரண்ய காண்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வயதான வில்லன் ஒருவன் தன் ஆசை நாயகியாக ஒரு சின்னப் பெண்ணை வைத்திருப்பான். அவளைப் பலவிதங்களில் கொடுமை செய்வான். அங்கிருந்து எப்படியாவது தப்பித்து போனால் போதும் என்று சரியான நேரத்திற்காகக் காத்திருப்பாள். அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு இளைஞன் இருப்பான். அங்கிருப்பவர்கள் எல்லாரும் அவனை “சப்பை” என்று அழைப்பார்கள். அந்த இளைஞனை பயன்படுத்தி அவள் அங்கிருந்து தப்பித்து விடுவாள். வெளியேறும்போது அவள் சொல்லுவாள், ” என்னை பொறுத்தவரை சப்பையும் ஆம்பிளைதான். எல்லாம் ஆம்பிளையும் சப்பதான்”. தான் இறக்கும் தருவாயில் பிர்தவ்ஸும் அப்படிதான் சொல்லி இருப்பாள்.
பிர்தவ்ஸ் போன்ற எண்ணிலடங்காப் பெண்களை பாலியல் தொழிலாளிகளாக்கிய ஆண்மையின் எச்சம் எனக்குள்ளும் மிச்சம் இருக்கிறதா என்று நாவல் முடிந்த நேரத்திலிருந்து கேட்டு கொண்டிருக்கிறேன். ஒருவேளை இருந்தால் கண்ணீரை தவிர எதைக்கொண்டு என் அழுக்கைக் கழுவுவது?
சூன்யப் புள்ளியில் பெண் (Women at Point Zero)
நூல் ஆசிரியர்: நவல் எல் சாதவி (Nawal el Saadawi)
தமிழில்: சசிகலா பாபு
பதிப்பகம்: எதிர் வெளியீடு