அதிகாலை ஐந்து மணிக்கு தெருமுனைக்கு வந்திருந்தேன். அங்கே ஒரு கடை இருக்கிறது. நாளிதழ் கடை. அன்றைய தினத்துக்கான அத்தனை பத்திரிக்கைகளும் அங்குதான் வரும். அங்கிருந்து வெவ்வேறு கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.
“திலகா வந்துடுச்சா?” என்றேன்.
“ஒங்க கதை வந்திருக்கா?” என்றார் கடைக்காரர். ஆம் என்பதாய் தலையாட்டினேன். திலகா வாராந்திரியை எடுத்து நீட்டினார். ஏழு ரூபாய் தந்துவிட்டு வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்தேன். முப்பத்தியிரண்டாவது பக்கத்தில் என் சிறுகதை வெளியாகியிருந்தது. நான் எழுதிய கதையை யாரோ வாசிக்கிறார்போல் ஒரு முறை வாசித்துப்பார்த்தேன். எனக்கு திருப்தியாக இல்லை. சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. நாம் எழுதியது நமக்கே திருப்தியாக இருந்துவிடவே கூடாது. அப்போதுதான் அந்த திருப்தியை எட்டிவிடும் முயற்சியாக இன்னுமொரு கதை எழுதத் தோன்றும். அதையும் சற்றே குறையாகத்தான் எழுதவேண்டும். அதுதான் நம்மைத் தொடர்ந்து எழுதவைக்கும். இது ஒரு தந்திரம் தான்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் பத்திரிக்கையில் எழுதுவதற்கான அசலான காரணம் வேறு.
என் வீடு ஒரு மத்தியவர்க்க அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது மாடியில் இருந்தது. குடும்பம், மாதா மாதம் சம்பளம், அந்த சம்பளத்துக்குள் சந்தோஷம், துக்கம் இப்படியானவர்களுக்கு மத்தியில் வாழ ஒரு தகுதி இருக்கிறது. அது இருப்பதாகக் காட்டிக்கொள்ளத்தான் இந்த ‘எழுத்தாளன்’ பிம்பம்.
நான் திருடன் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்வரை ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அங்கே நான் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் போகாமல் விட்டுவிட்டார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் கல்லூரி ஒரு அங்கீகாரம் பெறாத கல்லூரி. என் விஷயத்தைப் பெரிதுபடுத்தினால், அவர்களின் முகத்திரையை நான் கிழிக்க வேண்டி வரும். ஜென்டில்மேன்கள் போல் அவரவர் பாதையில் விலகிக்கொண்டோம்.
இந்தத் தந்திரம், அதிலிருக்கும் புத்திசாலித்தனம் என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தது. என் தகப்பனார் (அப்படித்தான் எனக்கு அவர் அறிமுகப்பட்டிருந்தார்) ஒரு அக்மார்க் நாடோடி. அப்போது இந்திய பிராந்தியத்தில் முகலாயர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அது சுமார் எழுநூறு ஆண்டுகள் இருக்கலாம். அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. காட்டு வாழ்க்கை எந்த ஆட்சியையும் சாராதது. அத்திப்பூ பூத்தாற்போல் அவ்வப்போது எந்த அரசனாவது, படை பரிவாரங்களுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.
என் தந்தை எனக்கு முன்பே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியின் வாழ்ந்துகொண்டிருப்பதால், காடுகள் தாம் தமக்கேற்ற இடம் என்று அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். காடுகளில் தான் அவர் மூப்படையாததை யாரும் பார்க்க முடியாது. காடுகள் மூப்படைவதில்லை. அதே நேரம் காடுகள் வெளி உலகு குறித்த தகவல்களைப் பூடகமாகச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவர் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். அதன் படி அவர் நாகரீகங்களை பகுத்தார். அதன்படி முதலில் காடுகள் ஆதிக்கம் செலுத்தும் நாகரீகங்களே உருவாகும் என்றார். அதுதான் கற்காலமாக இருந்திருக்கிறது என்று நான் புரிந்துகொள்ள அது உதவியது. எகிப்தின் கீசா பிரமிட் கட்டுமானத்தின் போது நைல் நதிக்கரையில் இருந்தபடி கூலி ஆளாக அவர் வேலை பார்த்த கதைகளை அவர் சொல்ல நான் பல முறை கேட்டிருக்கிறேன்.
பின், நாகரீகங்கள் காடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என்று கணித்தார். அதைத்தான் முகலாயர்கள், பின் அவர்களைத்தொடர்ந்து கிருத்துவ மதத்தினர் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாக நான் புரிந்துகொள்ள அந்த கணிப்பு உதவியது. இந்தக் காலகட்டங்களில், அவ்வப்போது போர்களின் நிமித்தம் இரவுகளிலும் இரண்டு பிரதேசங்களின் போர் வீரர்கள் காடுகளுக்குள் பதுங்கித் திரிய நானும் என் தந்தையும் அவதானித்திருக்கிறோம். அப்போதெல்லாம் காட்டு விலங்குகள் தங்களை அண்டாமல் இருக்க, மிகச் சத்தமாக தண்டோரா போட்டபடியே காடுகளுக்குள் செல்வார்கள். அப்படித்தான் இசை எனக்குப் பரிச்சயமானது. தொடர்ந்து, மூங்கிலைக் கொண்டு புல்லாங்குழல் மூலமும், மூங்கிலை கொடியால் வளைத்துக் கட்டி அந்தக் கொடி நரம்பை மீட்டுவதன் மூலமும் இசையை என் தந்தை என் பொருட்டு விரித்துக் காட்டினார். பொழுது போகாத தருணங்களில் நாங்கள் அவைகளைக் கொண்டு இசையை உருவாக்கி மகிழ்வோம்.
பின் ஒரு கட்டத்தில், பூட்சு அணிந்த வெள்ளை மனிதர்கள் காட்டுக்குள் வந்து வன விலங்குகளை வேட்டையாடிவிட்டுச் செல்வதை அவர்கள் வீசி எறிந்த மது போத்தல்களை வைத்து கண்டுகொண்டிருக்கிறோம். அந்த மது பொத்தல்களில் எழுதியிருக்கும் வாசகங்களை அவர் படித்துக் காட்டுவார். அவ்விதம் ஆங்கிலத்தை எனக்கு அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் எனக்கு அந்த மொழியை கற்றுக்கொடுக்கவும் செய்தார். நான் பிறக்கும் முன்பே அவர் பல கண்டங்கள் நாடோடியாகச் சென்று வந்திருக்கிறார் என்பதை எனக்கு புரிய வைத்த கணமும் அதுவே. அப்போதெல்லாம் நாங்கள் காட்டை விட்டு வெளியே செல்ல நான் ஆலோசனை சொன்னபோதெல்லாம், காடுதான் பாதுகாப்பு என்று என் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி நான் பார்த்திருக்கிறேன். காடுகளை வைத்து நகர மாற்றங்களை பகுத்ததை வைத்து, பின், நாகரீகங்கள் காடுகளை ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்தார்.
என் தகப்பனார் என்னைக் காட்டிலேயே வளர்த்தார். குடகு மலையில் சில பொந்துகள் இருந்தன. ஒரு காலத்தில் போர்களின் போது மறைந்திருந்து தாக்கப் பயன்பட்டிருக்கலாம். புதர்களால் மறைக்கப்பட்ட அந்த பொந்துகளில் ஒன்றில் தான் எங்கள் வசிப்பிடம். காட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை அவர் எடுத்து வந்து தருவார். தானும் உண்பார். சில நேரங்களில் அணிலோ, முயலோ எது கிடைத்தாலும் வேட்டையாடி நெருப்பில் சுட்டுத் தின்போம். அவர் எனக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தார். தமிழில் என்ன எழுதியிருந்தாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு மட்டுமே இருந்தது என் கல்வி ஞானம். அதை அடிப்படையாக வைத்து, கிரகங்கள், சூரியன், சந்திரன், கிரகணம் என்று என் தந்தை தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எனக்குக் கற்றுத்தந்தார். அவருக்கு அதெல்லாம் எப்படி தெரிந்தது என்று நான் சமயத்தில் வியந்திருக்கிறேன். தான் சுமார் மூவாயிரம் வருடங்களாக இப்பூமியில் உலவிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் ஒரு தீவொன்றில் பிறந்ததாகவும் அது தற்போது கடலுக்கடியில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு தமிழ்ப்பெண் மீது முதலும் கடைசியுமாக வந்த காதலில் நான் பிறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
அமாவாசை பவுர்ணமி தினங்களில் திடீரென காணாமல் போய்விடுவார். நான் அவரைக் காடு முழுக்கத் தேடித்தேடி அலைவேன். அலைந்து அலைந்து சோர்ந்து கிடைத்த இடத்தில் தூங்கிவிடுவேன். முதல் முறை அப்படி ஆனபோது கிட்டத்தட்ட அவரைத் தேடி நான் சோர்ந்திருந்த சமயம் அவராகவே என்னை வந்தடைந்தார். அன்று நான் அவர் முகத்தில் ஒரு வித்தியாசமான ஒளியை முதன் முதலாகப் பார்த்தேன்.
அதை எப்படி விளக்குவது என்று எனக்கு இப்போதும் தீர்மானமில்லாமல் இருக்கிறது. ஆனால், ஏதோ ஞானமடைந்தவன் போல, ஏதோ பிரபஞ்ச ரகசியங்களை உணர்ந்துகொண்டவன் போல இருந்தது அவர் முகம். அதன் பிறகு பல முறை காணாமல் போயிருக்கிறார். நானும் கண்டுகொண்டதில்லை. எப்படியேனும் திரும்பிவிடுவார் என்று நான் அறிந்தே இருந்தேன். என்னை அவர் ஏமாற்றியதே இல்லை.
ஒரு முறை ஓர் இரவில் என்னை என் தந்தை எங்கோ அழைத்துப்போனார். அது ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. நாங்கள் மெல்ல இறங்கினோம். பாறைகளுக்கிடையே முளைத்திருக்கும் செடியொன்றில் வேரைப் பற்றி, கற்களின் மேடு பள்ளங்களில் இருந்த இறுக்கங்களையும், தளர்வுகளையும் லாவகமாகப் பயன்படுத்தி நான் இறங்கிக்கொண்டிருக்க, எனக்கு வழிகாட்டும் முகமாய் அவர் எனக்குக் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என் கால்களை எதுவோ பற்றி இழுக்க நான் குனிந்து கீழே பார்த்தேன். விக்கித்துப்போனேன். என் கால்களைப் பற்றி இழுத்தது என் தந்தை தான்.
இருவரும் கீழே விழுந்தோம். கும்மிருட்டாக இருந்தது. அது எங்களுக்கு வழமை தான் குகைக்குள் இரவுகளில் அப்படித்தான் இருக்கும். என் தந்தைக்கு அந்த இடம் பரிச்சயமாகியிருந்தது. பசிக்கு அங்கிருந்த சில இலைகளைப் பிடுங்கி சாறு பிழிந்து தந்தார். அதை உட்கொண்டதும் நான் சுய நினைவை இழந்துவிட்டேன். நான் திரும்ப எழுந்தபோது வாய் கசந்தது. மற்றபடி வேறெந்த பக்கவிளைவுகளும் இல்லை. இனிமேல் எனக்கு வயதே ஏறாது என்றார். ஒரு நாள் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டு பின் திரும்பி வராமலேயே போய்விட்டார்.
அவரின்றி காட்டில் இருக்கப்பிடிக்காமல், தான் நான் நாடடைந்தேன். என் தந்தை கணித்தது போல், நகரங்களை காடுகளைச் சிறிது சிறிதாக விழுங்கி ஜீரணித்தே வளர்ந்தன. என் போன்ற சக மனிதர்களைப் பார்த்தேன். பழகினேன். அவர்கள் தங்களைப் போல் உள்ள ஒருவனையே தங்களுக்கிடையே அனுமதிக்கிறார்கள் என்று அறிந்து அவர்களைப் போல் நடிக்கத்துவங்கினேன். அதில் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. எனக்கு என் தந்தை அந்த பச்சிலைச்சாற்றைப் புகட்டியபிறகு எனக்குப் பசிப்பதே இல்லை. ஆனால், மற்றவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் போனால் நானும் உணவகம் போகிறேன் என்று எழுந்து கொள்ளத்துவங்கினேன். எங்கேனும் ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு திரும்பிவிடுவேன். மற்றவர்கள் போல் ஏதேனும் ஓர் வேலையில் ஒண்டியிருக்க முனைந்தேன். இப்போது வரை பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன்.
பிரியாணி மாஸ்டராக, லாரி டிரைவராக, கணக்கு வாத்தியாராக, சாமியாராக, மருத்துவராக, செவிலியராக, போர் வீரனாக, துப்புறவுத் தொழிலாளியாக, கொலைகாரனாக, இரவுத்திருடனாக, அலைபேசிகள் மற்றும் கணிணி முதலான சாதனங்கள் விற்பவனாக, இப்படி எத்தனையோ வேலைகள். ஒரே இடத்தில் வெகு நாட்கள் இருப்பதில்லை. இருந்தால் நான் மூப்படையாததை யாரேனும் கண்டுபிடித்துவிடக்கூடுமென்று இடம்மாறிக்கொண்டே இருப்பேன். இந்த காரணத்துக்காகவே நான் திருமணமும் செய்துகொண்டதில்லை, அந்தந்த காலகட்டத்தில் சரித்திர நிகழ்வுகளில் பங்கேற்றதில்லை. ஏனெனில் என் போன்றவர்கள் மூப்படையாதது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது. நிரந்தரமாக வீடு இல்லை. வாடகை வீடு தான். வாடகை தர, மின்சார கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்பட்டது.
என் தந்தை எனக்குப் பரிச்சயப்படுத்திய மூங்கில் இசை, வெகுவாக பரிணமித்து இசையை ஒரு சிறிய டேப்பில் சேகரித்து, தேவைப்படும் போது கேட்டுக்கொள்ளும் வகைக்கு வேறொரு கட்டத்தை அடைந்திருந்தது. எனக்குப் பிடித்த இசையைக் கேட்க வானோலி, டேப் ரிக்கார்டர், சி.டி, பென் டிரைவ், கணிணி போன்ற மிண்ணனு சாதனங்கள் வாங்க வேண்டி இருந்தது. இதற்கெல்லாம் பணம் தேவைப்பட்டது. எத்தனையோ விதமான இசையை பல நூற்றாண்டுகளாக அவற்றின் பரிணாம வளர்ச்சியோடு அவதானித்தது, இசை என்பது முறையாகச் சேர்க்கும் பிழைகளோ என்றே எனக்கு தோன்றியிருக்கிறது.
வேலை நேரம் போக, குடும்பம் என்று ஏதும் இல்லாததால், வீட்டில் பெரும்பாலும் ஓய்வு நேரங்களாகவே இருக்கும். அதில் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். இசை கேட்பேன். அதன் மூலம் நிறைய கற்றிருந்தேன். அதை வைத்துத்தான் அந்தப் பச்சிலைச்சாறு என்னை என்ன செய்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. நம் உடல் செல்களால் ஆனது. அது தினம் தினம் பிறக்கும், தினம் தினம் இறக்கும். சாதாரண மனிதர்களுக்கு அந்தச் செல்கள் இறக்கும் வேகத்தில் மறுபடி பிறப்பதில்லை. மறு பிறப்பு விகிதம் குறையக் குறைய உடல் மூப்படைகிறது. ஆக, மூப்பு என்பது நம் உடலில் உள்ள செல்களின் மறுபிறப்பு விகிதத்தைப் பற்றிக்கூறுவது. அந்தச் சாறு என் உடல் செல்களின் இறப்பு விகிதத்தையும், மறுபிறப்பு விகிதத்தையும் ஒன்றாக்கிவிட்டது. அந்த மூலிகை எது என்று எனக்கு என் தந்தை சொல்லித்தரவே இல்லை. ஆனால் அந்த மூலிகை என் உடலில் ரத்தத்தில் கலந்திருக்கிறது என்பதால் நான் யாருக்கும் ரத்த தானமோ, உடல் உறுப்பு தானமோ செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்பொது என் பிரச்சனையே வேறு.
தேனீக்களை எடுத்துக்கொண்டால், அவைகள் சதா பூக்களை அண்டி அவற்றிலிருந்து மகரந்தங்களை சேகரித்துக்கொண்டே இருக்கும். ஏன் சேகரிக்கிறோம், எதற்கு சேகரிக்கிறோம் என்ற எந்த கேள்வியும் இல்லை. இறுதியில், அவைகள் பாடுபட்டுச் சேர்த்த அத்தனை தேனையும் மனிதர்கள் வந்து அள்ளிக்கொண்டு போவார்கள். இந்த தேனீக்கள் மீண்டும் வேறொரு கிளையில் மகரந்தங்கள் சேகரிக்கப் போய்விடும். இதை ஒரு குறியீடாகப்பார்க்கிறேன். இப்படி சில மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிப்பார்கள். வேலை, வீடு, குடும்பம் தவிர வேறொன்றும் தெரியாது. இறுதியில் சேர்த்த பணத்தையெல்லாம் நகையாக்கி பெண்ணின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டு ஓட்டாண்டியாய் நிற்பார்கள்.
யானைகளை எடுத்துக்கொண்டால், அவைகள் அச்சமூட்டும் உருவத்தைக் கொண்டிருந்தும், இரண்டு கால் மனிதனுக்கு கட்டுப்பட்டு கோயில் வாசலில் கடந்து செல்லும் மனிதர்களைக் கும்பிட்டு நிற்கும். இதையும் ஒரு குறியீடாகப் பார்க்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன் அசலான பலமே தெரியாமல் அடுத்தவனுக்கு சலாம் போட்டு நிற்பார்கள்.
சிலர் கடினமாக உழைத்து மிகப்பெரும் செல்வம் சேர்த்து உயர்ந்த இடத்துக்குச் செல்வார்கள். சட்டென அத்தனை செல்வத்தையும் இழந்து திருவோடு ஏந்தும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களைக் குறிப்பால் சுட்டுவதாகவே நான் சர்ப்பங்களைப் பார்க்கிறேன்.
மற்றவர்கள் ஏங்கும் ஒன்று கிடைத்துவிடுவதாலேயே, வாழ்வின் அத்தனை பேறுகளையும் பெற்றுவிட்டதாக வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டே எந்த பேறுமற்ற ஒரு சாப வாழ்வை, அது சாப வாழ்வென்றே தெரியாமல் வாழ்ந்து தீர்த்துவிடுவார்கள் சிலர். இவர்களை பொந்துக்குள் தலைவிட்டுக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே நான் பார்க்கிறேன்.
இப்படி நிறைய சொல்லலாம். இப்பூலகில் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டேன். நான் அவதானித்த வரையில், மனித வாழ்வின் மையம் என்பது ஒரு உயிரினத்தின் இயங்குமுறையோடு ஒப்பிட இயலுவதாகத்தான் எக்காலமும் இருந்திருக்கிறது. வேறு விதமாகச் சொல்வதானால், ஒரு உயிரினத்திடம் ஒரு குறிப்பிட்ட இயங்குமுறை காணப்பட்டால், அது ஏதாவதொரு மனிதனின் வாழ்க்கையின் மையமாக இருக்க மிக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.
என் அவதானங்களை மூன்றாகப் பகுத்துவிட முடியும். இந்த மூன்று விஷயங்களே என்னை, இப்பூவுலகில் என் இருப்பை அச்சுறுத்துவதாக இருக்கிறது.
முதலாவது, எனக்கு இந்த பூவுலகில் ‘விழிப்பு’ ஏற்பட்ட போது எனக்கு தந்தை என்று ஒருவர் இருந்தார். அப்போது முகலாயர்கள் இங்கே ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போதே பண்டமாற்று ஒழிந்து பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மக்கள் விவசாயம் செய்தார்கள். நிலச்சுவாந்தார்கள் கூலிகளை உருவாக்கினார்கள். நிலச்சுவாந்தார்களை சிற்றரசர்களும், சிற்றரசர்களை பேரரசர்களும், பேரரசுகளை சூழ்ச்சியால் வியாபாரிகளும் கட்டுப்படுத்தினார்கள். எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அமைப்பில் பெரிய மாற்றங்கள் உருவாகவில்லை. இது, பெரிய மாற்றங்கள் உருவாக மீக நீண்ட காலம் ஆகும் என்ற எண்ணத்தை எனக்குள் வலுவாக விதைத்துவிட்டது.
இரண்டாவது, இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் குணாதிசயத்திற்கும் ஒரு உயிரினத்தை என்னால் சுட்டிவிட முடியும். நான் இந்த எழுநூறு வருடங்களில் எண்ணற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். இந்த அவதானத்தைக் கொண்டு, என்னால், ஒரு மனிதனை, அவனை முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் அவனது பூவுலக வாழ்வின் மைய இயக்கத்தை எட்டிவிடமுடியும். அதை எட்டிவிட்டபிறகு எனக்கு அந்த மனிதன் சலித்து விடுகிறான். அதற்கு மேல் அவனிடம் புதிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை என்றாகிவிடுகிறது. இந்த என் அவதானத்தை பொய்பிக்கும் ஒரு மனிதனை நான் இதுகாறும் பார்த்ததே இல்லை. அவன் தனக்கு முன் வாழ்ந்த தன்னைப் போன்ற ஒருவனிடமிருந்து அதிகம் வேறுபடுவதில்லை. இதுவே என்னை சலிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கு திரும்பினாலும் இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.
இது பரவாயில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். அங்குதான் மூன்றாவதுக்கான காரணங்கள் உருவாகிறது.
மூன்றாவது என்னவெனில், இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களையெல்லாம் தாண்டி பிரத்தியேகமான, ஊகிக்கவே முடியாத சில மனிதர்களும் இந்தப் பூமியில் பிறக்கிறார்கள் தான். ஆனால், இரண்டாவதாக வரும் சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்கள் இந்த மூன்றாமவர்களை வாழவே விடுவதில்லை. இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல், எளிதில் ஊகித்துவிடக்கூடிய ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது.
இவர்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை சுவாரஸ்யப்படுவதில்லை. யாரைப் பார்த்தாலும் சலிக்கிறது.
சரி, ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துவிடலாமென்றால், என் தந்தை எனக்களித்த மூலிகைச்சாறு இறப்பையே நெருங்க அனுமதிப்பதில்லை. இரண்டு மூன்று முறை விஷமருந்தியும் பார்த்தாகிவிட்டது. என் உடலில் செல்கள் மறுபிறப்பு விகிதம் நூறு சதம் என்பதால் விஷம்தான் தோல்வி அடைகிறதே ஒழிய என்னுடல் அப்படியே தானிருக்கிறது. விபத்துக்களில் சிக்கி வலியெடுத்துச் சாக எனக்கும் விருப்பமில்லை.
எத்தனையோ யோசித்துவிட்ட பிறகு ஒரு திவ்விய தருணத்தில் அது எனக்குத் தோன்றியது. உடல் இயங்க பிராணவாயு முக்கியம். அதை மட்டுப்படுத்திவிட்டால்? மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் மூளை இறக்க நேரிடும். மூளை இறந்தபிறகு உடல் உயிருடன் இருந்து என்ன பயன்?
ஆம்.
அதைத்தான் செய்ய இருக்கிறேன். என் மூளையைக் கொல்ல இருக்கிறேன். அதற்கென ஒரு பெட்டி செய்யத்துவங்கியிருந்தேன். அது இந்த நாளின், திலகாவில் என் சிறுகதை வெளியான தினத்தில் தான் பூரணமாகவேண்டுமென்று இருந்திருக்கிறது. இதைக்கூட நான் ஒரு வாரம் முன்பே கணித்துவிட்டிருந்தேன். பார்த்தீர்களா? இந்தச் சின்ன விஷயத்தில் கூட எனக்கு எவ்வித ஆச்சர்யமோ, எதிர்பாராத தன்மையோ இருக்கவில்லை.
நான் இரவு வரும் வரை காத்திருந்தேன். இரவாகி நகரம் அடங்கிவிட்டபிறகு சற்று தொலைவிலிருந்த மயானத்திற்கு அந்தப் பெட்டியுடன் சென்றேன். இறந்த ஒருவரைப் புதைக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துப் புதைப்பது தானே தமிழர் மரபு. அதன்படி, நான் பயன்படுத்திய மடிக்கணிணி, நூல்கள் ஆகியவைகளையும் எடுத்துச்சென்றிருந்தேன். மயானத்தில் ஆறடி ஆழத்தில், இரண்டடி அகலத்தில் குழி தோண்டினேன். அதில் அந்தப் பெட்டியைக் கிடத்தினேன். அதனுள் நான் பயன்படுத்திய அனைத்தையும் கிடத்தினேன். பிறகு நானும் என்னை அதில் நிறைத்துக்கொண்டு பெட்டியை இறுக மூடி உட்புறமிருந்து ஆணியால் காற்று கூட புக முடியாத அளவிற்கு அந்தப் பெட்டியை அறைந்து மூடினேன்.
என்னிடம் திட்டம் தெளிவாக இருந்தது. அது ஒரு பழைய மயானம். அருகாமையிலிருந்த மலையொன்றிலிருந்து உருவாகி கடலை நோக்கிச்செல்லும் ஒரு ஆற்றின் ஓரமாய் அமைந்திருந்தது அந்த மயானம். நாளை அந்த மலை மீது அமைந்திருந்த நீர்த்தேக்கத்தைத் திறக்க இருக்கிறார்கள். மதகைத் திறந்தவுடன் பெருகி வரும் நீர் நான் வெட்டிய குழியின் மீது மண்ணையும், குப்பைகளையும் கொண்டு மூடிவிடும். பிராணவாயு இன்றி என் மூளைக்கு மரணம் சாத்தியமாகிவிடும். வேறெப்படியும் என்னால் இந்த வாழ்வை முடித்துக்கொள்ள முடியாது.
பெட்டியை இறுக மூடிய கொஞ்ச நேரத்தில் எனக்கு மயக்கம் வந்தது. கண்களை மூடிக்கொண்டேன். எழுநூறு ஆண்டுகள்!! தேவைக்கும் அதிகமாய். இந்த பூவுலக வாழ்வை தரிசிக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் தந்தைக்கும் என் நெஞ்சார்ந்த நன்…………………………………………………………………………………………………………………………..
உடலில் வெய்யிலின் வெக்கை படிவதைப் போல் உணர, மங்கலாய் எதுவோ தோன்றி அதனிலிருந்து உயிர்ப்பெறுவது போல் நான் திடுக்கிட்டு எழுந்தபோது அது ஒரு பாரிய நிலப்பிரதேசமாகத்தான் இருந்தது. எங்கும் வெறும் பாறைகள். மலைகள். என் நரம்புகள் புடைத்து, விரைத்தன. முயங்க வேண்டுமென்று ஒரு உத்வேகம் உடலில் எந்தப் பகுதியிலிருந்தோ முளைத்து உடல் முழுவதும் வியாபித்துக்கொண்டிருந்தது. வானில் சூரியன் பிரகாசமாய்த் தோன்றியது.
என்னைச்சுற்றி என் மடிக்கணிணி சிதைவுண்ட நிலையில் கிடந்தது. ‘சுவர்க்கம் இப்படியா இருக்கும்?’ என்றெண்ணியபடி நடந்தேன்.
அதுகாறும் உறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, புதிதாக நடை பயிலும் குழந்தை போல, நான் நடந்து கொண்டே இருந்தேன். நிற்கவேண்டும் என்றோ, அமர வேண்டும் என்றோ தோன்றவே இல்லை. நடக்க நடக்க எங்குமே ஒரு சின்னச் செடி கூட இல்லை. பூமி முற்றிலுமாக மலடாகிப்போனது போலிருந்தது. நீரின் சுவடு கூடத் தெரியவில்லை. காகம், ஈக்கள், பூச்சிகள் என எந்த சிற்றுயிரும் கண்ணில் தென்படவில்லை. ஏதோ வரண்ட பாலைவன மலைப்பகுதியில் நடப்பது போலிருந்தது. நடந்து நடந்து ஒரு மலையை அடைந்தேன். அது ஏதோ பரிச்சயமான மலை போல் தோன்ற கூர்ந்து கவனித்ததில் அது என் தந்தை என்னை அழைத்துச்சென்று ஒரு பள்ளத்தாக்கில் கால் பிடித்து இழுத்தாறே அதே மலை தான் என்பது புரிந்தது.
‘அப்படியானால் இன்னமும் பூமியில் தான் இருக்கிறோமா? எங்கே எல்லோரும்?’
கேள்விகளுடன் எதுவும் புரியாமல், மலையை நோக்கி நடந்தேன். இது தான் நான் முன்பு வாழ்ந்த பூமியின் தற்போதைய நிலை எனில், நான் குறைந்தபட்சம் பத்தாயிரம் வருடத்திற்காவது புதையுண்டே இருந்திருக்கவேண்டும். அந்த மலையைத் தொடர்ந்து சுற்றிவர, நான் என் தந்தையால் இடறப்பட்டு விழுந்த பள்ளம் தென்பட்டது. என் தந்தையின் நினைவு உந்த நான் அந்தக் பள்ளைத்தை எக்கி முழுமையாகப் பார்த்தேன். பின் பள்ளத்திற்க்குள் இறங்கினேன். சிறிதாய், மிகம்மிகச் சிறிதாய் ஒரு செடி முளைத்திருந்தது. அந்தச் செடியின் இலைகளைக் கண்ணுற்றேன். அருகே நெருங்கிப் பார்க்கையில் அந்த இலையிலிருந்து வந்த வாசம் எனக்கு முன்பே பரிச்சயமாகியிருப்பதை உணர முடிந்தது. என் வாய் கசந்தது.
அதில் நான் பார்த்தது என்னை மலைக்க வைத்தது. அவைகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அவைகள் விட்டத்தில் ஒன்றரை மில்லிமீட்டர் அளவே உள்ள எட்டு கால்களைக் கொண்ட சின்னஞ்சிறு ஜந்துக்கள். பெயர் டார்டிகிரேட்.
டார்டிகிரேட்கள் மைனஸ்272 டிகிரி குளிரிலும் உயிர்வாழக்கூடியவை. பிராணவாயுவே இல்லாத வெற்றிடத்தில் விட்டால், க்ரிப்டோபையோசிஸ் எனப்படும் நீள் உறக்கம் கொள்ளக்கூடியவை. சாதகமான சூழல் வரும்போது மீண்டும் உயிர்பெற்று வாழக்கூடியவை. இத்தகுதிகளுடன் அவைகள் கிரகம் விட்டு கிரகம் கூட பயணிக்க வல்லவை.
நான் இத்தனை காலமும் சாகவே இல்லை என்பதும், இதுகாறும் வெறும் ஒரு நீள் உறக்கத்தில் தான் இருந்திருக்கிறேன் என்பதும் இப்படித்தான் எனக்குப் புரிய வேண்டுமென்றிருந்திருக்கிறது. என் தந்தை இந்த இலைகளைக் கசக்கி சாறு பிழிந்து எனக்குத் தந்திருக்க வேண்டும். இந்த இலைகள் மீதுள்ள டார்டிகிரேட்களின் மரபணுக்களை இந்த இலைச்சாறு என் மரபணுவில் கலந்து விதைத்திருக்க வேண்டும். இந்த இயக்கங்களின் கூட்டு பலனாய் நான் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு நீள் உறக்கத்தில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். என்ன நடந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
சாவு என்ற ஒன்றே இல்லாமல் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக நான் வாழ்ந்திருந்தபோதான வாழ்க்கை என்பது ஒரு இசைக்குறிப்பை, அதன் முழுமைத்தன்மையை வெளியிலிருந்து அவதானிப்பது போலாகிவிட்டிருந்தது. அந்த இசை எனக்குப் புரியாதவரை, அந்த இசை என்னை ஈர்த்தது. அந்த இசையை நான் கேட்கத்தலைபட்டேன். அதில் திளைத்தேன். அதில் பிரபஞ்சத்தை உணர்ந்தேன். அதில் கடவுளை உணர்ந்தேன்.
ஆனால், அந்த இசைக் கோர்வையின் ரிஷிமூலம், நதிமூலம் தெரிந்தவிட்டபிறகு, அந்த இசை, அதன் முழுமைத்தன்மை, அதன் ஏற்ற இறக்கங்கள் என எல்லாமும் தெரிந்துவிட்டபிறகு, அந்த இசைக்கோர்வை ஒரு இசைக்கோர்வையாக உருவாக எதையெல்லாம் உள்ளடக்க வேண்டும், அப்படி உள்ளடக்க வேண்டியதன் நிமித்தம் எதையெல்லாம் தவர விட வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்பது என் கண்களுக்கு தென்படலாயிற்று. எந்த இசைக்கோர்வையும் எல்லாவற்றையும் உள்ளடக்கி உருவாகலாகாது, அது சாத்தியமல்ல என்கிற பேருண்மை எனக்கு உரைத்தபோது நான் அதிர்ந்துபோனேன். ஏமாற்றமாய் உணர்ந்தேன். இந்த அதிர்ச்சி, ஏமாற்றம் இறைவன் என்பவன் அப்படி ஒன்றும் எட்டிவிடமுடியாத கலை ஞானம் கொண்டவனல்ல என்பதைப் புரியவைத்தபோது அது என் ஏமாற்றத்தை பன்மடங்கு கூட்ட மட்டுமே உதவியது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இசையை ரசிக்க வேண்டுமானால், அதன் முழுமைத்தன்மையைத் தெரிந்துகொள்ளக்கூடாதோ என்கிற தோற்றம் வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால், ஒரு ரசனை என்பது அறிவின் மூலமாக பெறுகவேண்டுவது தான் எனும்போது, அறிவின் பெறுக்கம் ஒரு கட்டத்தில் ரசனையைக் கொன்றுவிடும் எனும்போது, இசைக்கோர்வையின் நோக்கம் தான் என்ன?
இப்போது என் முன் பூமி என்கிற இந்தக் கிரகமும், கொஞ்சம் டார்டிகிரேட்களும், ஒரு செடியும் இருக்கின்றன. இந்த பிரபஞ்சம் இனி தன் கையிலிருப்பவற்றை வைத்து உருவாக்க இருக்கும் எந்த இசைக்கோர்வையின் எந்த அசைகள் நானும், பூமிக்கிரமும், அந்தச் செடியும், டார்டிகிரேட்களும் என்கிற கேள்வி ஒரு கரையான் போல என் சிந்தையை அரிக்கத்துவங்கியிருக்கிறது.