மாரடோனாவும் சத்யாவும் பீச்சுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பீச்சுக்குப் போய்விட்டு, அருகில் எங்காவது சாப்பிட்டுவிட்டு, அருகிலிருக்கும் மாலில் படம் பார்ப்பதுதான் திட்டம். படத்துக்கு மெர்லினும் வருகிறாள் என்று சத்யா சொல்லியிருந்தாள். இருவரும் ஒன்றாக ஒரு வீடெடுத்துத் தங்கத் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. ஆனால் சத்யாவுக்கு விடுமுறைகள் குறைவென்பதால் அவர்கள் வெளியில் செல்வதும் குறைந்திருந்து. வெளியில் சென்றுதான் சந்திக்க வேண்டும் என்று முன்போல் தேவைகள் இல்லாததும் அதற்குக் காரணமாகியிருந்து. சத்யாவுக்கு அன்று விடுமுறை. மாரடோனாவுக்கு எல்லா நாட்களும் விடுமுறைதான். வண்டியை சத்யா ஓட்ட, மாரடோனா பின்னால் உட்கார்ந்திருந்தான். கடற்கரை செல்லும் சாலையில் தேவாலய வாசலில் உட்கார்ந்திருந்த ஒருவரின் கண்களைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். இவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். எங்கோ சிறுவயதில் தினமும் பார்த்துப் பரிச்சயமான ஒரு முகமாகத் தோன்றியது. சத்யாவை நிறுத்தசொல்லி, இறங்கிப் போய் அவரிடம் போய்ப் பேசலாமா என்று யோசித்தான். பின்னர் என்ன இது பைத்தியக்காரத்தனம் என்று சிரித்துக் கொண்டான்.
என்னடா சிரிக்கிற
ஒண்ணுமில்ல. ஆமா என்ன படம் பாக்கப் போறோம். டிக்கெட் புக் பண்ணிட்டியா
சொல்லமாட்டேன். சர்ப்ரைஸ். டிக்கெட் எல்லாம் அங்க போய் வாங்கிக்கலாம்
அய்யே தீர்ந்துடாதா? இல்ல எதுவும் மொக்க படமா? ஏய் என்ன ஏதாவது விமல் படத்துக்குக் கூட்டிட்டுப் போறியா! நா வரமாட்டேன்
ஏய் நாடகம் போடாம சும்மா வா
சத்யாவின் தோளில் சாயலாம் என்று கண்ணை மூடியபோது. பீச் வந்துவிட்டிருந்தது. புதிதாக வண்ணமடிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது.
*
அன்று கடற்கரையில் சின்னச்சின்ன லைட்டுகள் விற்பவர்கள் நிறைந்திருந்தார்கள். ரப்பரில் கோர்க்கப்பட்டு இறக்கைகள் வைக்கப்பட்டிருந்த அவற்றை இழுத்துவிட்டால், ஜல்லென்று உயரே சென்று, பின்னர் காத்தாடியாகச் சுற்றிக்கொண்டே மெல்ல கீழிறங்கும். மினுக்கட்டாம் பூச்சிகளைப் போல மின்னும் சிகப்பு, மஞ்சள், பச்சை, நீல விளக்குகள் கொண்டிருந்தவை. அவற்றை விற்றுக்கொண்டிருந்த ஒருவனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் மாரடோனா. மேலே செல்லும் விளக்கையே பார்த்துக் கொண்டிருந்தால், அது வேறெங்கோ கீழிறங்கும்போது சரியாக அது இறங்கும் இடத்தில் அவன் வந்து நின்றுகொண்டிருந்தான். இதே விளையாட்டு பல முறை தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவும் காத்தாடியாகச் சுற்றி சுற்றி அலைந்து சரியாக அவன் கைகளிலேயே வந்து அமர்ந்தது.
எப்போதும் போலச் சிலர் சோளம் வறுத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நெருப்புப் பொறிகள் பறந்துகொண்டிருந்தன. இவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அருகிலிருந்த சோள ஸ்டாலை ஒரு பெண் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தாள். மாலையின் கருநீலப் பின்னணியில் பொன்னிற நெருப்புப் பொறிகளும், அதை வறுத்துக் கொண்டிருப்பவரின் நீலச் சேலைக் கட்டிய நிழலுருவுமான அந்த மாதிரி ஃபோட்டோக்கள் இதுவரை எத்தனை எடுக்கப்பட்டிருக்கும். நாளை மறுநாள் இந்த ஃபோட்டோ இண்ஸ்டாவிலோ ஃபேஸ்புக்கிலோ #மெரினா என்று பதியப்பட்டிருக்கும் என்று நினைத்தான்.
மாரடோனாவுக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் எதைப் பற்றி எழுதுவது என்றுதான் தெரியவில்லை. இப்படி என்றாவது பீச்சுக்குப் போகிற நாட்களில் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் கவனிப்பான். பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்க முயல்வான். ஆனால் எதிலுமே அவன் எதிர்பார்க்கிறது மாதிரி எழுதத் தகுதிவாய்ந்த ஒரு கதை மட்டும் பிடிபடவில்லை. அது இல்லாமல் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவும் ஆசை. ஆனால் அதற்காக உட்கார்ந்து படிக்கவும் அவனால் முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் நேரம் தருகிற மாதிரி ஒரு நல்ல வேலை மட்டும் கிடைத்துவிட்டால், வீடுகுறித்த கவலைகள் இல்லாமல் போய்விடும், நிம்மதியாகக் கடகடவென்று எழுதலாமென நினைத்தான். இவனுக்கு வேலை கிடைத்துவிட்டால், சத்யாவும் இந்த ஐடி கம்பெனியில் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்குப் பிடித்த வேலைக்குப் போகலாம்.
*
படம் முடிந்து அந்த நள்ளிரவில் மாரடோனாவும் மெர்லினும் மூன்று பேப்பர் கப்புகளில் டீ வாங்கிக்கொண்டு சத்யா வண்டியை எடுத்துக் கொண்டு மாலிலிருந்து வெளியே வருவதற்காகப் பேருந்து நிறுத்தமொன்றில் அமர்ந்து காத்திருந்தனர். இருவருக்குமே படம் பிடிக்கவில்லை. சத்யாவுக்கு மட்டும் பிடித்திருந்தது, அதைப் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். சத்யா ப்ளாட்ஃபார்மை ஒட்டி வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், மெர்லின் ஃபோனைத் திறந்தபடி சரி டாக்ஸி கிடைக்குதா பாக்குறேன் என்றாள்.
ஏய் டாக்ஸி எல்லாம் எதுக்கு, உன்ன கொண்டு போய் விட்டுட்டு அப்புறம் நாங்க வீட்டுக்குப் போறோம் என்றாள் சத்யா
ட்ரிபிள்சா, வேணாம், நீ அவளக் கொண்டுபோய் விட்டுட்டு வா நா வெய்ட் பண்றேன் என்றான் மாரடோனா.
ஏண்டா
ரொம்ப பண்ணாதடா. நா ஓட்டுனா யாரும் நிறுத்தமாட்டாங்க. அப்புடியே நிறுத்துனாலும் என்கிட்ட லைசன்ஸ் இருக்கு. உன்ன மாதிரி கிடையாது சரியா.
இல்ல. இன்னிக்கு வெள்ளிக்கிழம, போலீஸ் தொல்ல இருக்கும். நீ போய்ட்டு வா. நா இப்புடியே ஜெமினி ப்ரிட்ஜ பார்க்க நடந்துகிட்டு இருக்கேன்.
ம்ம்ம். சரி, பத்திரம்
டாட்டா… பை, மெர்லின்.
பாண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி அடிமேல் அடி எடுத்துவைத்து மாரடோனா நடக்கத் தொடங்கினான். காற்றில் முடி அலைந்ததும், இன்னிக்காவது முடி வெட்டுவியா மாட்டியா, அந்த நீள முடியோட இனிமே ஊர் பக்கம் வராத என்று அழுதபடி அம்மா ஃபோன் பேசியது நினைவில் வந்தது. அம்மாவும் தங்கையும் வசிக்கும் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி ஏதோ கொலை நடந்திருக்கிறது. நீண்ட நாளாக உரசிக்கொண்டிருந்த விசயம்போல. அதற்காக போலீஸ் வந்து தெருவிலிருந்த சில பையன்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கிறது. ஊரை விட்டு வந்து வெகுநாட்களாகி இருந்தாலும் அவர்களில் சிலரை இவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இவன் பன்னிரண்டாவது படிக்கும்போது அதே ஹைஸ்கூலில்தான் அவர்கள் ஆறு படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நீண்ட சுருட்டை முடியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர், கல்லூரி போகும் வயசு. நிச்சயம் கஞ்சா பழக்கமும் சேர்ந்திருக்கும் என்று கடைசி முறை நினைத்துக்கொண்டான். ஆனால் நிச்சயம் அவர்கள் கொலை செய்யக்கூடியவர்கள் இல்லை என்றும் தோன்றியது. எப்படியோ தெருவில் அவர்களை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கின்றனர்.
வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஃபாத்திமா ஆண்ட்டி பொறுப்பாக வந்து அம்மாவிடம் உன் பையனும் இப்படித்தான முடி வெச்சிருக்குது என்று கேட்டிருக்கிறார். அந்த வீட்டுக்கு அம்மாவும் தங்கையும் குடிபோன பிறகு முதல்முறையாக இவன் போனபோது, என்னா இது பையான பொண்ணானே தெரியல என்றவரும் அவர்தான்.
லேசாகத் தனக்குத்தானே சிரித்தபடி அந்த எண்ணங்களைக் கலைத்துக்கொண்டு அவன் மேலும் நடந்தான். அவனுக்குப் பின்னால் இன்னும் மெதுவாக வந்துகொண்டிருந்த போலீஸ் வண்டியை அவன் பார்த்திருக்கவில்லை.
*
அந்தப் போலீஸ்காரர் எங்கே போகிறாய் என்றதற்கோ, எங்கு போய் வருகிறாய் என்றதற்கோ சரியாகத்தான் பதில் சொன்னான். ஆனால் சரி வண்டியில ஏறு என்றபோதுதான்
இல்ல சார் இப்ப ஃபிரண்ட் வந்துடுவாங்க பரவாயில்ல.
என்று பதட்டத்தில் பதில் சொன்னதை அவர் திமிராகக் கருதியிருக்க வேண்டும். எப்படியோ கடந்த ஒரு மணிநேரமாக மாரடோனா போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருக்கிறான். ஃபோனையும் புடிங்கிக் கொண்டார்கள். சத்யா இந்நேரம் வீடுவரைப் போய் வந்திருப்பாள். பலமுறை ஃபோன் செய்து அலுத்திருப்பாள். தெருத்தெருவாகத் தேடிக் கொண்டிருப்பாள். எவ்வளவு நேரமானால் போலீஸிடம் போய்ப் பார்க்கலாம் என்று அவளுக்குத் தோன்றும். இந்த நள்ளிரவில் நிச்சயம் தனியாக வரமாட்டாள். யாரை அழைப்பாள்.
அவன் யோசனைகளைக் கலைக்கும் விதத்தில் ஒரு இந்திக்காரர் அவசரம் அவசரமாக ஓடிவந்தார். இவனைவிட வயது குறைவாகவே இருக்குமென்று தோன்றியது. கையெல்லாம் ரத்தமாக இருந்தது. அவன் கையில் காயம்பட்டு வருகிறதா, இல்லை வேறு யாரின் ரத்தமா என்று சட்டென்று சொல்லமுடியவில்லை. ஸ்டேஷன் ஸ்டேஷன்லே சூட்கேஸ் திருட்டு சார் என்று திக்கித் திக்கி உளறினான். அதையே ஒரு நான்கைந்து முறை கூறினான். சரி சரி, தண்ணிக் குடிக்கிறியா, பானி பீயோ, குச் நஹி என்று எஸ்.ஐ ஆறுதல் படுத்த முயல. சார், வைஃப் ஆல்சோ, வைஃப் ஆல்சோ திருட்டு மிஸ்ஸிங் என்று சட்டென ஞாபகம் வந்தவனாகப் புதிதாகப் பதற ஆரம்பித்தான். மாரடோனாவுக்கு சிரிக்கலாமா என்று தெரியவில்லை. அவனைப் போலவே பிடித்து உட்கார வைக்கப்பட்டிருந்த மூன்று பையன்களும் யோசித்துக் கொண்டிருக்க, இன்னொரு பெரியவர் மட்டும் நன்றாக வாய்விட்டுச் சிரித்தார். அவரை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. எஸ்.ஐ அவர்களைப் பார்த்து முறைத்தபடி கிதர் கிதர் என்று அந்த இளைஞனை விசாரிக்க முயன்றார். பின் அவருக்கு ஃபோன் வரவும் அந்த இளைஞனை இன்னொரு போலீஸ்காரரிடம் விட்டுவிட்டு வெளியே சென்றார். சில நிமிடங்கள் கழித்துவந்து, இன்னொருவரிடம் இளைஞனை பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டுவிட்டு மேசைமேல் இருந்த தன் பர்ஸை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினார். இவனை வண்டியில் ஏற்றும்போது உடனிருந்த கான்ஸ்டபிள் ஓடிப்போய் அவரிடம் ஏதோ பேசினார்.
ஜீப் கிளம்பியதும், ரகசியமாகச் செய்வது போல அந்தக் கான்ஸ்டபிள் மாரடோனாவிடம் ஃபோனைக் கொண்டுவந்து கொடுத்தார்.
வீட்ல யாருப்பா இருக்கா கூப்டு சீக்கிரம், அவர் வரதுக்குள்ள.
சத்யா பதறிப்போய்தான் இருந்தாள். பார்த்துமா இந்த நேரத்துல எல்லாம் வெளிய சுத்தக் கூடாது சரியா என்ற கான்ஸ்டபிள் அறிவுரைக்கே படத்துக்குதான் சார் போணோம் என்றபடி அழுதுவிடுவாள் போலிருந்தது. மாரடோனாதான் அவரிடம் டாங்க்ஸ் சார் என்றபடி ஒரு இருநூறு ரூபாயைக் கொடுத்தான்.
பார்த்துப் போங்க
போகும் வழியில், அந்தப் பெரியவரை ஏன் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்கக் கூட இல்லை என்பது ஞாபகம் வந்தது. தன்னை ஏன் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்றே கேட்கவில்லை என்பது மாரடோனாவுக்கு ஞாபகம் வரவில்லை.
*
ஒரு மாதம் கழித்து சத்யா பெங்களூரு போவதாய் சொன்னாள். புதிய வேலை. நீயும் என்னுடன் வருகிறாயா என்று கேட்கவில்லை. நீ என்ன பண்ணப் போற என்று கேட்டாள். அப்படித்தான் மாரடோனா மறுபடியும் வேலை தேடத் தொடங்கினான்.
*
ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் மெல்ல வெளிவர எங்கும் மெல்லிய வெளிச்சம் படர்ந்து விடுகிறது. கண்களைக் கூச வைக்காத, எதிலும் பாகுபாடு காட்டாத வெளிச்சம். வேலை முடித்துவிட்டு, கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டின் ஒரு பெரிய கட்டடத்தில் இருக்கும் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பேருந்து நிலையம்வரை நடந்துசென்று அமர்ந்திருக்கும் அந்த நேரத்தில்தான் மாரடோனாவின் மூளை பளிச்சென்று விழித்திருப்பதாக மாரடோனாவின் மூளைக்குத் தோன்றும். புதிய புதிய எண்ணங்கள் எல்லாம் அதில் முளைவிடும். ஒருநாளை அவற்றை எழுத வேண்டும், ஒருநாள் அந்தப் பாடலைப் பதிய வேண்டும், வரைய வேண்டும், தான் எடுத்த அந்த இலையின் படம் எவ்வளவு அருமையாகக் கலையாக அமைந்திருக்கிறது என்றெல்லாம் தோன்றும். ஆனால் அந்தப் பேருந்து சோழிங்கநல்லூரில் அவன் புதிய அறையருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவந்து விடும்போது சமயங்களில் ஏழாகியிருக்கும். நேர்ப்பார்வைக்கு மேல் நிமிர முடியாதபடி சூரியன் எரியத் தொடங்கியிருக்கும். மாரடோனாவின் மூளை முழுக்க தூக்கமும் அலுப்பும் படிந்திருக்கும். அப்படியும் வீடு போய்ப் படுத்ததும் தூக்கம் வராது. பப்ஜி விளையாடத் தொடங்குவான். சமயங்களில் பேஸ்புக்கைத் திறந்து கீழே கீழே ஸ்க்ரோல் செய்யத் தொடங்குவான். தினம் சத்யாவுடன் பேசுவது, சிலசமயம் மணிநேரங்கள் நீளும். சிலசமயம் ஓரிரு நிமிடங்களில் சரி அப்புறம் பேசறேன் என்று இருவரில் ஒருவர் வைத்துவிடுவார்கள். சிலபோது அவன் தங்கை அழைத்துப் பேசத் தொடங்குவாள். அம்மா, பாட்டி, உடல்நிலை, கவலைகள், சிறு மகிழ்ச்சிகள், அம்மாவின் வேலை, கல்லூரி என்று அந்த அழைப்புகள் நீளும்.
மறுபடி மாலை நான்குக்காய் எழுந்து வெளியே சென்று கடைகளில் மீதமிருக்கும் வெரைட்டி சோறுகளில் எதையாவது தின்றுவிட்டு வந்துசேர்வான். அவனது வேலை என்பது அமெரிக்காவில் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகளுக்கு வந்து சேரும் க்ளெய்ம் படிவங்களின் ஸ்கேன்களைப் பார்த்து, அதனை டிஜிட்டல் ஃபார்மாக நிரப்புவதுதான். அவ்வளவு கடினம் என்றில்லாத சில விதிமுறைகள் அதற்கிருந்தன. அந்த வேலையிலேயே நிலைத்துவிட்ட சிவராஜண்ணன் போன்ற சிலரைப் போல் இல்லாவிட்டாலும், போதுமான வேகத்தில் அதனை அவனால் செய்யமுடிந்தது. இன்றில்லாவிட்டாலும் நாளை அந்த வேலையை விட்டுப் போகத்தானே போகிறோம் என்ற எண்ணம்தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த வேலைக்கு நீட்டான, பெரிதாக டிசைன் போடப்படாத சட்டைகள், ஷூ, சட்டையை இன் செய்ய வேண்டும் என்று ஆயிரம் விதிகள். அவற்றால் என்ன பயனென்று அவனுக்குப் புரிந்ததே இல்லை. இண்டர்வியூ போன அன்றே ஷூ இல்லை என்று அனுப்பிவிட்டார்கள், சோலிங்கநல்லூர் வரைத் திரும்பிவந்து ஷூ மாட்டிக்கொண்டு சென்றான். அப்போது வரை இன்னதுதான் வேலை என்று அவனுக்குத் தெரியாது. வெறும் டேட்டா எண்ட்ரி என்பதை வைத்து என்னவென்று முடிவுசெய்வது. ஆனால் என்னவாயிருந்தாலும் அதைச் செய்ய அப்போது மாரடோனா தயாராக இருந்தான்.
*
எந்தத் தேர்வுகளும் இல்லாமல் நேரடியாகத் தனியார் வங்கியில் பணி. இந்தியாவின் முதுகெலும்பான கிராமப் புறங்களுக்கு சேவை செய்ய ஒரு அரிய வாய்ப்பு. உடனே உங்கள் சி.வி.யை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
*
மாரடோனா கதை, ஆராய்ச்சிக் கட்டுரை போன்ற கனவுகள் மட்டுமின்றி சில வங்கிப் பரிட்சைகளும் எழுத விண்ணப்பித்திருந்தான். தான் படித்த பி.ஏ. ஆங்கிலத்தை வைத்து வேறென்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. முதலெல்லாம் அதில் பெரிதாக ஈடுபாடிருக்காது. ஆனால் சிவராஜண்ணனைப் பார்த்ததிலிருந்து… அவர் கிட்டத்தட்ட மேனேஜர் நிலையில் இருந்தார். ஆனால் மேனேஜர் இல்லை. சீனியர் டேட்டா எண்ட்ரிஸ்ட் அவ்வளவுதான். எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ. இவனைவிட மூன்று மடங்கென்று பார்த்தாலும் முப்பந்தாயிரம்தான் வரும். அவர் பையன் பனிரெண்டாவது படித்துக்கொண்டிருந்தான் இந்த வருசம். அவர் மனைவி நர்சாக இருந்தார். சிவராஜண்ணன் அதைப் பற்றியெல்லாம் எப்போதாவதுதான் பேசுவார். மீத நேரமெல்லாம் ஈஷா பற்றிதான். அவர் ஈஷாவில் யோகாவோ என்னவோ கற்றுக்கொண்டிருந்தார். அடிக்கடி குடும்பத்தோடு கோயம்பத்தூர் போய்வருவார். கடைசியாக டீ குடிக்கப் போனபோது கூடக் காவேரி நதியை மீட்க அவர்கள் தொடங்கியிருக்கும் காவேரி காலிங் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். அதற்கெல்லாம் எப்படித்தான் காசு பத்துகிறதோ என்று மாரடோனாவுக்குத் தோன்றும். டீயைக் குடித்துக்கொண்டே, அதுக்கெல்லாம் ஒரு வயசு வரணும் மாரா, அப்போ உனக்கும் புரியும் என்பார். அவனை மாரா என்று இத்தனை வருடகாலத்தில் அவர் மட்டும்தான் கூப்பிடுகிறார். இரண்டாவது சம்பளம் வந்து அவன் கொஞ்சம் செலவான ஒரு ஃபோனை வாங்கியபோது கடிந்துகொண்டே சிரித்தும்கொண்டார். ஒரு வயசு வரும் மாரா என்பதுதான் எல்லாவற்றுக்கும் அவரின் பதிலாக இருக்கும். சின்ன வயசுல நானும் உன்னமாதிரிதான், இதெல்லாம் விட என்று தொடங்கி அவர் சொல்வதெல்லாம் பொய்தான் என்பதில் மட்டும் மாரடோனாவுக்கு நம்பிக்கை இருந்தது.
எல்லாவற்றையும் தாண்டி மாரடோனாவுக்கு சென்னை பிடித்திருந்தது. அவன் ஊரும் ஒருவகையில் நகரம்தான். ஆனால் சென்னை இல்லையே. அவனுக்கு வார இறுதிகளில் வேலை உண்டு. திங்கள் முதல் வெள்ளிக்குள் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கும் நாட்கள் பெரும்பாலும் அறைக்குள் முடங்கிக் கிடப்பதிலேயே கழிந்துவிடும். எப்போதாவது வாலாஜா தெருவில் நடப்பான். அந்தப் பரந்த பெரிய தெரு, அதன் இன்னொரு முனையிலிருக்கும் கடல், இந்தப் பக்கமிருக்கும் கடைகள்…
*
தனக்கு வங்கி வேலை கிடைக்கும் என்று மாரடோனா எதிர்பார்த்திருக்கவில்லை. சட்டென்று கடிதம் வந்ததும் குழம்பிவிட்டான். எப்போதோ இணையத்தில் பார்த்து விண்ணப்பம் அனுப்பி வைத்தது. ஒருவகையில் அது வங்கி வேலை கூட இல்லை என்பதை அவன் அப்போதைக்கு யோசிக்கவில்லை. அதுவும் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த நிலையில். இப்போது வேலைக்குப் போவதைப் பற்றி யோசிக்க வேண்டும். மேலும் அம்மா, தங்கச்சி மட்டுமின்றி இதைச் சத்யாவிடமும் சொல்ல வேண்டும். நேற்று பேசும்போது கூடப் பேசாம ஏதாவது இங்கயே வேலை பாத்துக்கலாம், பெங்களூர் வந்துடுடா. நாம ஒண்ணாவாவது இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இரண்டு மாதங்களாக அவள்தான் காசு கொடுத்துக்கொண்டிருந்தாள். அதில்தான் பாதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தான். சத்யாவிடமிருந்து ஃபோன் வந்தது.
மெட்ரோ ரயிலின் அந்தக் கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்கும்போது நகரின் இந்தப் பகுதி மொட்டை மாடிகளால் ஆனதுபோல் தோன்றுகிறது. அந்நாளின் முதல் ரயில் அது. இன்னமும் லேசாக மருந்து வாசனை அதில் மிச்சமிருக்கிறது. அதற்குள் பலர் மொட்டை மாடிகளுக்கு வந்து விட்டிருக்கின்றனர். சிலர் பல் விலக்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர் ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கின்றனர். சிலர் பறவைகளுடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்னம் கொஞ்ச தூரம்தான். அதன்பின் மெட்ரோவின் இரு புறங்களிலும் பெரிய கருப்புக் கண்ணாடிகளில் மூடப்பட்ட கட்டடங்கள் எழுந்து மறைத்துவிடும். இங்கிருந்து இப்போதைக்கு எவ்வளவு தூரம் தெரிகிறதென வியந்தாள். லேசாகக் குழியுள்ள தட்டுபோல அந்த நிலப்பரப்பு, அவளிடமிருந்து தூரச் செல்கையில் மெல்ல குழிவாகி, மீண்டும் உயர்ந்தது. ஒரு கதையில், மலைமேல் நின்றுகொண்டு ஒருவர் காட்டில் மரங்கள் முளைத்திருக்கும் பாதைகளைக் காட்டி, அவையே பூமிக்கடியில் நீர் செல்லும் பாதைகளும் என்று சொல்வார். இங்கிருந்து தன்னால் அப்படி எந்தப் பாதைகளையாவது அடையாளம் காண முடிகிறதா என்று பார்த்தாள். நகரம் அப்படி எதையும் காட்டித் தருவதாகத் தெரியவில்லை. எல்லா வீடுகளின் மேலும் ஒன்று, இரண்டு, நான்கு, பல கறுப்பு, மஞ்சள், வெள்ளை தண்ணீர் தொட்டிகள் இருந்தன. பலவற்றில் காவேரி என்று எழுதியிருந்தது. நகரின் மேலோடும் காவேரி. மெல்ல சூரிய ஒளி எல்லாவற்றின் மீதும் படிந்திருந்த நற்காலையின் மங்கலான அழகை அழித்துக் கொண்டிருந்தது.
மெட்ரோ ஸ்டேஷனை விட்டு வெளியேறும்போதுதான் தோன்றியது. ஒருவேளை விமானத்திலிருந்து பார்த்தால் இந்த மெட்ரோவும், பிற ரயில் கோடுகளும் அப்படித் தெரியுமோ. ஆனால் அவற்றிலிருந்து என்ன புரிந்துகொள்வது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அவற்றைப் பற்றிப் பேசலாம் என்று யோசித்தபடிதான் மாரடோனாவை அழைத்தாள். ஆனால் சட்டென ஆஃபீஸ் ஞாபகங்கள் வந்து நிறைத்துக் கொண்டன. தன் மேனேஜர் நேற்று நடந்துகொண்டதைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.
*
எப்படியாவது மறுபடி கடல் இருக்கும் ஊருக்குப் போய்விட வேண்டும். சொல்லப்போனால் சென்னைக்குப் போய்விட வேண்டும் என்று சத்யா ஏங்கினாள். இந்த நகரில் தினசரி வாழ்க்கை ஒரு நாளைப் பிரதியெடுத்து மற்றொன்றென விரிந்துகொண்டிருந்தது. மாதம் சிலமுறை நண்பர்களோடு சாப்பாடும் குடிப்பதும் கொஞ்சம் ஆறுதலைத் தந்தாலும், சட்டென நினைத்த மாத்திரத்தில் பேருந்தேறி எங்கும் செல்லக் கூட அவளால் முடியாமல் இருந்தது. அப்படியே போனாலும் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் இருப்பது அவளை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது. எப்படியாவது நாலு பேருடன் பழகிவிட வேண்டும். இங்கே நிலைகொண்டுவிட வேண்டும். மாரடோனாவும் இங்கே வந்துவிட்டானென்றால்… இல்லை இல்லை சென்னைக்குதான் போக வேண்டும். சென்னையில் மட்டும் எண்ணி எனக்கென நாலு பேர் இருக்கிறார்களா என்ன. ஏன் ஆஃபீஸில் இருப்பவர்களோடு பழகலாமே. இல்லை. சரிவராது. சத்யா தனக்குத்தானே மறுபடியும் சொல்லிக்கொண்டாள்.
*
மாரடோனா அந்த ஊருக்கு வந்து அத்தோடு மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. ஒரு பிரபல மலை வாசஸ்தலத்திலிருந்து நான்கு மணிநேரப் பயணம். அவனது மாச சம்பளத்தைப் போல ஒரு பத்து மடங்குதான் அங்கே மொத்த வங்கிப் பரிவர்த்தனைகளும் சராசரியாக நடந்தது. அதிலும் எண்பது சதவீதம் ஒரு நாலைந்து பேரால்தான் நடந்தது. அங்கே வங்கி என்றெல்லாம் எதுவுமில்லை. அவன்தான் வங்கி. அந்த ஊரிலிருந்த சிறிய மளிகை மற்றும் மெடிக்கல் கடை ஒன்றின் மாடியில் ஒரு சிற்றறை வாடகைக்கு எடுக்கப்பட்டு வங்கியாக மாற்றப்பட்டிருந்தது. அவனிடம் கொடுக்கப்படதெல்லாம் ஒரு இணைய வசதியுள்ள தொலைபேசியும், எண்ணற்ற ஆவணங்களும் படிவங்களும் இன்னபிற காகிதங்களும், பணமும். பணத்தை அவன் மாதமிருமுறை அந்த மலைவாசஸ்தலத்தில் இருக்கும் வங்கி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். அவன் நேரடியாக வங்கியால் பணிக்கமர்த்தப்படக்கூட இல்லை. வங்கியிடம் காண்ட்ராக்ட் பெற்ற ஒரு கம்பெனி இவனை காண்ட்ராக்ட் அடிப்படையில் அங்கே பணிக்கமர்த்தியிருந்தது. ஆனால் அதெல்லாம் ஆவணங்களில்தான். இவனது தொடர்புகள் எல்லாம் நேரடியாக அந்த வங்கியுடன்தான்.
தினசரி பரிவர்த்தனைகள் அந்த ஃபோனை அடிப்படையாகக் கொண்டுதான். முதல் மாதக் கடைசியில் அந்த ஃபோனுடன் இணைத்துக்கொள்ள ஒரு விரல் ரேகைக் கருவியும் கொடுக்கப்பட்டது. பெரிதாக வேலைகளற்ற, இரைச்சல்கள் அற்ற அந்தச் சூழல் மாரடோனாவுக்கு முதலில் பிடித்துப் போனது. தினமும் காலையில் தலையில் மஃப்ளரை சுற்றிக்கொண்டு நடைபோவான். ஒரு கிலோமீட்டர் நடந்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் டீக்கடை திறந்திருக்கும். அங்கே சென்று டீ குடித்தபடி, தான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத வேண்டுமென்று யோசிப்பான். சங்க இலக்கிய பாடல்களைக் கொண்டு அந்தக் கால பொருளாதாரச் சூழலை ஆராய்வதுதான் அவனுடைய கனவு. மயிலை சீனி வேங்கடசாமி வரை வேறு யாருமே அதை ஆழமாகவும் முழுமையாகவும் செய்யவில்லை என்பது அவனுடைய குறை. ஆனால் அதற்கேற்ப சங்க இலக்கியமோ, பொருளாதாரமோ அவனால் பயில முடியாமலே இருந்தது. அவ்வ்வப்போது காசிருக்கும் பொழுதில் அமேசானில் தேடி ஏதாவது புத்தகத்தை வாங்குவான், ஒன்று அதில் பாதிக்கு மேல் புரியாது, அல்லது அது படிக்கப் படாமலேயே அவன் டிரங்குப் பெட்டியில் தூசி சேர்த்துக் கிடக்கும்.
இந்த ஆர்வமெல்லாம் தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா அல்லது சம்பந்தமே இல்லாத இந்த வங்கி வேலையில் வந்து உட்கார்ந்துகொண்டிருப்பதை நியாயப்படுத்திக்கொள்ள புதிதுபுதிதாக உற்பத்தி செய்துகொள்கிறோமா என்ற சந்தேகம் எழும் சமயங்களில் எப்போது முதல்முறையாய் இந்த யோசனை தோன்றியது என்று யோசித்து பதில் கிடைக்காமல் உழல்வான்.
*
மாரடோனா, சத்யாவோடு தன் வங்கி அலுவலகமாகிய அந்த ஒற்றை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கிழவரைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
சார் பணம் எடுக்கனும். ஆயிரத்து ஐநூறு. இன்னிக்குப் போட்ருபாங்கள்ல.
அரசுத் திட்டமொன்றிலிருந்து வரும் பணம். சென்ற மாதம் கூட இந்த முதியவர் தானாக வந்து பணம் எடுத்துப் போனதாக அவனுக்கு ஞாபகம் இருந்தது.
ஆங். போட்ருப்பாங்க என்றபடி விரல் ரேகைக் கருவியை எடுத்து ஃபோனுடன் இணைத்தான்.
வந்திருந்தவர்களில் இளையவளாக இருந்த பெண் தாத்தா கையக் கொடு என்றபடி கிழவரின் விரலைப் பிடித்து அதில் வைத்தாள். அவள் அப்படிக் கேட்டிருக்கவெல்லாம் எந்த அவசியமும் இல்லை. கிழவருக்கு நினைவென்பதே இல்லை. மாரடோனா ஆயிரத்து ஐநூறை எண்ணிக் கொடுத்தான்.
வரோம் சார் என்றபடி அவர்கள் கிழவரைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள்.
தான் செய்தது சரிதானா என்று சட்டென்று மாரடோனாவுக்கு கவலை வந்தது. சரியா தவறா என்ற மாரல் பிரச்சினை போலீஸ் பயங்களாக உருவெடுத்தது. ஒருவேளை அந்தக் கிழவர் செத்திருந்தால்? செத்தபின் கைரேகைக் கருவி வேலை செய்யுமா. மாரடோனாவின் பகற்கனவில் ஒரு மருத்துவர் வந்து அந்தக் கிழவர் செத்து எட்டு மணிநேரங்கள் ஆனதாக அறிவிக்கிறார். ஒரு போலீஸ்காரர் செத்த பிணத்தை வைத்து அவரது குடும்பத்தினர் பணமெடுக்க உதவியிருக்கிறாய் என்று குற்றஞ்சாட்டுகிறார். இன்னொரு போலீஸ்காரர் ஓடிவந்து வந்தது அவர் குடும்பத்தினரே இல்லையாம், யாரோ பிணத்தைத் திருடிவந்து காசு எடுத்திருக்கிறார்கள் என்கிறார். நீங்கள்லாம் படிச்சவங்கதான என்ற அந்த வழக்கான டயலாகை முதல் போலீஸ்காரர் சொல்கிறார். மாரடோனா பயத்தில் லேசாக உதறுவதைக் கண்டு லேசாகச் சிரித்துக்கொண்டே அமர்ந்திருக்கிறான்.
*
இன்குலாப் ஜிந்தாபாத்
மல்லி தோழரின் குரல் ஓங்கி ஒலித்தது. ஒருமுறை அந்த போலீஸ் வேன் முழுக்க அனைவரின் குரல் முழக்கமும் எதிரொத்து அடங்கியபின் சத்யா சொன்னாள்.
ஏன் தோழர் வேஸ்ட்டா தொண்டைய வீணாக்கி. இதெல்லாம் ஃபைவ் ஸ்டார் ஏரியா. இங்க எல்லாம் யாரும் நம்மள கண்டுக்கமாட்டாங்க.
அதுசரி. எப்பா டிரைவர். எதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா நிப்பாட்டி டீ வாங்கிக் குடுப்பா என்றார்.
சத்யா சிரித்தபடியே என்ன வீட்ல விட்ருங்கண்ணா என்றாள். கடந்த ஒருமாதமாக நகர் முழுக்க தினசரி போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. சத்யாவும் அவற்றில் பலவற்றுக்குச் சென்றுகொண்டிருந்தாள். மல்லியுடனும் இன்னும் சிலருடனும் சிரித்துப் பேசுமளவு பழகியிருந்தாள்.
தேவன் தோழர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் அவருக்கு எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் போட்டுவிட வேண்டும். இத்தனைக்கும் ஒருமணிநேரம் போராட்டம் நடந்து போலிஸ் எல்லாரையும் வண்டியில் ஏற்றத்தொடங்கும் பத்து நிமிடங்கள் முன்தான் வந்து சேர்ந்திருந்தார். வேனில் இரண்டு கல்லூரி மாணவர்கள் லேசாக விழித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
சீக்கிரமா அடைபடுறோம்னு வருத்தப்படக் கூடாது. இப்போ நம்ம முன்வைச்சு அங்க இன்னும் ஆயிரம் பேர் கூடுவான் அதுதான் முக்கியம் என்று தேவன் அவர்களோடு பேசத் தொடங்கினார்.
வேன் ஊரைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. இந்த ஊருக்கு வந்த நான்கு வருடங்களில் சத்யா இந்தப் பக்கமெல்லாம் வந்ததே இல்லை. இத்தனைக்கும் அது நகரின் மையப் பகுதி. அன்றைய நாள் மாலைவரை ஏதொவொரு கல்யாண மண்டபத்தில்தான் கழியப் போகிறதென்று சத்யாவுக்குத் தெரியும். அத்தோடு முடிந்துவிடும் என்று ஏறக்குறைய உறுதியாகத் தெரிந்தாலும் உள்ளொரு சிறிய பயம் மிச்சமிருந்தது.
அன்றைய மாலை, சத்யா அமர்ந்திருந்த அந்தக் கஃபேயின் சுவர்களில் கிறுக்கல் பாணி ஓவியங்களும். Wandering genius. Life is a lemon given by a tree என்பது போன்ற வாசகங்களும் நிறைந்திருந்தன. மற்றவர்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பையில் வைத்திருந்த நோட்டை எடுத்து சத்யா எழுதத் தொடங்கினாள். கோர்வையாக ஒரு வரிக்கு மேல் எதுவும் வரவில்லை. எழுத்துகளுக்குக் காலும் கையும் கண்ணும் முளைத்து அவை தவ்வத் தொடங்கின. இன்குலாப் ஜிந்தாபாத் என்று சில முறை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். அதற்கும் கிரேஸ் வந்துவிட நோட்டை மூடிப் பையில் போடப் போனாள். கிரேஸை ஒரு டேட்டிங் தளத்தில்தான் சந்தித்தாள். இருவருமாகப் பேசி அங்கே சந்திப்பதென முடிவெடுத்திருந்தார்கள். சந்திக்கும் முன்னரே தனக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டதாக சத்யா நம்பினாள். அதற்குள் இரவு மாரடோனாவை அழைக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொள்ள அந்த நோட்டில் குறித்துக் கொண்டாள்.
இரண்டு மாதங்கள் கழித்து அவள் தொலைபேசி மாரடோனாவை அழைக்கச் சொல்லி நோடிஃபிகேஷன் காண்பிக்க அதை இன்னொரு நாளைக்கு ஒத்திவைத்தாள்.
*
மாரடோனா தானாக ஒரு படிவம் உருவாக்கினான். காகிதப் படிவம். பணம் எடுப்பவர்கள் ஃபோனில் கைநாட்டு வைப்பது மட்டுமின்றி, அந்தக் காகிதப் படிவத்தையும் பூர்த்தி செய்து தர வேண்டும். அது வங்கிக்குத் தெரியாது. அவனாக ஒரு படிவத்தை வடிவமைத்து, ஒவ்வொரு முறையும் அந்த மலை வாசஸ்தல நகருக்குப் போகும்போது ஐம்பது காப்பிகள் பிரிண்ட் எடுத்துக் கொள்வான். இதனால் வங்கி அலுவலகமாக இருந்த அறைக்குக் கீழிருந்த மெடிக்கல் கடைக்காரருக்குப் புதிதாக ஒரு வேலை கிடைத்தது. பெரும்பாலும் படிக்கத் தெரியாதவர்கள், படிக்கத் தெரிந்திருந்தாலும், வங்கிப் படிவத்தைத் தவறாக நிரப்பிவிட்டால் என்ன செய்வதென்ற பயமிருந்தவர்கள் அவரிடம் கொடுத்து அதை நிரப்பிக் கொடுக்கச் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர் நிரப்பிக் கொடுத்தால்தான் அதை மாரடோனா பெற்றுக்கொள்வான் என்பது போலானது. அவனும் அதற்கேற்ப பல படிவங்களை நிராகரிக்கத் தொடங்கினான். ஒரு படிவத்துக்குப் பத்து ரூபாய் வரை மெடிக்கல் கடைக்காரர் வாங்கினார். அதில் மாரடோனாவுக்கும் ஒரு பங்கு போகும் என்றே ஊரில் எல்லாரும் நம்பினர். யாராவது வங்கிக்கு ஃபோன் செய்து எதற்கு இந்தக் காகிதமெல்லாம் என்று கேட்டு, இதெல்லாம் போலி என்று தெரிந்து அவனைக் கைது செய்திருந்தால் என்று அவ்வப்போது பயம் வரும். ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை.
மறுபடி ஒருநாள் அதே தாத்தாவும் குடும்பத்தினரும் வந்தார்கள்.
சார் பணம் போட்ருப்பாங்களா
பெரியவரே இவங்கள்லாம் யாரு
சார் நா அவ பேத்தி
பெரியவரே இவங்கள்லாம் யாரு
சார் அவரால பேச முடியாது
இப்புடி நினைவுதெரியாத மனுசன வெச்சு சம்பாரிக்கிறீங்களே வெக்கமா இல்ல
சார் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. மாச மாசம் மாத்திரை மருந்தே எவ்வளவு தெரியுமா
யாருக்கு தெரியும் என்ன மாத்திர குடுக்குறீங்களோ. சரி அவர் இந்த ஃபார்ம்ல கையெழுத்து போட்டாதான் இனிமே பணம் எடுக்கலாம்.
எதுவா இருந்தாலும் அவரால கைநாட்டுதான் சார் வைக்க முடியும்
அப்ப பணம் எடுக்க முடியாது
அத சொல்றதுக்கு நீங்க யாருங்க
நான் பாங்க் ஆஃபீசர். பணம் எடுக்க முடியுமா முடியாதான்னு நாந்தான் சொல்லுவேன்
எங்க காச எடுக்க முடியாதுன்னு சொல்லுவியா அதுக்குன்னு
ஹெலோ மரியாதையா பேசுங்க சரியா
இவ்வளவு நாளா காச கொடுத்துகிட்டுதான இருந்த, இப்போ என்ன உனக்குப் பிரச்சனை.
அந்த நாளின் முடிவில் யோசித்துப் பார்க்கையில் வந்தவர்களில் ஒருவந்தான் கைநீட்டினான் என்பது மாரடோனாவுக்கு தெளிவாக ஞாபகம் இருந்தது. மெடிக்கல் கடைக்காரரும் சத்தம் கேட்டு ஓடி வந்திருந்தார். ஆனால் சரியாக எப்போது போலீஸை அழைக்க முடிவெடுத்தோம் என்றுதான் அவனுக்கு ஞாபகமில்லை. அவனுக்குக் கொடுக்கப்பட்ட செல்ஃபோனில் உள்ளூர் போலீஸ் எண் முதற்கொண்டு பதியப்பட்டிருந்தது அவனுக்குத் தெரியும்தான். அதை அப்போதுதான் முதல்முறையாக முயற்சித்துப் பார்த்தான். ஏதாவது கண்ட்ரோல் ரூமுக்குச் செல்லும் அதற்குள் இவர்கள் பயந்துவிடுவார்கள் என்று எண்ணினான். ஆனால், அது நேரடியாக உள்ளூர் போலீஸ்காரருக்கு இணைத்தது. கடகடவெனப் பிரச்சினையையும் விலாசத்தையும் சொல்லி முடித்தான். ஒருமணிநேர தூரத்தில் இருந்தவர்கள் வந்து சாகக் கிடக்குற கிழவன ஏமாத்தி பணம் பறிக்கப் பாக்குறீங்களா என்று அந்தக் குடும்பத்தினரை மிரட்டியதும், மாரடோனாவுக்குக் கொஞ்சமாக உற்சாகம் பிறந்தது. ஒருவழியாக சமாதானம் ஆகி இந்த ஒருமுறை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அவனிடம் லேசான இரங்கல் தொனியில் கேட்டுக் கொண்டார்கள். இவனுக்குத் தெரியாமல் மெடிக்கல் கடைக்காரர் அவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினார். மாரடோனாவின் படிவங்களை மறுப்பது போலிஸால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக இப்போது ஆனது.
அவன் வீடெங்கும் வண்ண வண்ணக் காகிதங்கள் சேரத் தொடங்கின. அவன் தன்னிச்சையாகப் புதிதுபுதிதாகப் படிவங்கள் உருவாக்கத் தொடங்கினான். நீலம், பச்சை, பணமெடுக்க, பணம் போட…
*
சரியாக எட்டு மாதங்கள் கழித்து சத்யா ஃபோன் செய்தாள். எப்டி இருக்க என்று வழக்கம் போலத்தான் பேசத் தொடங்கினான். வேலை மிகவும் பிடித்திருக்கிறது. பழகிவிட்டது. அவள் வேலை எப்படியிருக்கிறது. சாப்பிட்டாளா. சாப்பிட்டானா. அவர்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய இருந்தது.
தெரியுமா, இந்த ஊர்ல ஏடிஎம் வைக்கப் போறாங்க. இந்த சப் காண்ட்ராக்ட் வழியா வந்த எல்லா ஆயிரம் பேருக்கும் இனிமே வேலை இல்ல. பெங்களூரே வந்திரலாம்னு இருக்கேன். ஏதாவது வேலை பாத்துக்கலாம். எழுத நினைச்சதெல்லாம் எழுத ஆரம்பிக்கணும்.
ம்ம்ம். வா. நா அடுத்த மாசம் சென்னை போறேன். ஆஃபீஸ்ல வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டிருக்கேன். இல்லாட்டி வேலைய விட்ரலாம்னு இருக்கேன். இங்க இருக்க முடியலடா.
ம்ம்ம்… ம்ம்ம்…
One comment