முதல்துளி – கமலதேவி சிறுகதை

ராமச்சந்திரன் என்ற அழைப்பு முடியும் முன்பே, “ ப்ரசன்ட் டீச்சர்,” என்ற குரல் எழுந்தது. “என்ன அவசரம்?” என்ற கவிதா அவனை பார்த்துக்கொண்டே, “ ரவி..”என்றாள்.ராமச்சந்திரன் அவளைப் பார்த்தபடி நின்றான்.அவள் தலையசைத்ததும் அமர்ந்தான்.

ப வடிவிலாக அமைந்த மூன்று கட்டிடங்களின் வகுப்பறைகளில் இருந்து வெளிவந்த குரல்கள் இரைச்சலாக ஒலித்தது.சிறிது நேரத்தில் வெவ்வேறு ஒற்றை இரட்டை குரல்களாக மாறியது.அவை எங்கோ வேறு இடத்தில் அதற்கும் இங்குள்ள அவர்களுக்கும் தொடர்பில்லை என்று இருந்தது.

பூட்டப்பட்ட பழைய வகுப்பறையின் முன்னிருக்கும் அகன்ற நடைப்பாதை அவர்களின் தற்போதைய வகுப்பறை.நேற்று மழை பெய்திருந்ததால் ஆஸ்பெட்டாஸின் காந்தல் குறைந்திருந்தது.சமேதா மைதானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.அளக்கும் கண்கள் அவளுடையது.கண்களை உருட்டி உருட்டி பார்ப்பாள்.முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மூளையும் ஒரு ரகம்.வழக்கம் போல முதல் வேலையாக வாய்ப்பாடு எழுதத் தொடங்கினார்கள்.

அவளுக்கு படித்துமுடித்ததும் வேலைக்கு செல்லும் துறுதுறுப்பு பத்துநாட்களாக காலைநேரங்களில் மாறாமல் இருக்கிறது.காலையில் புடவை தேர்வதிலிருந்து குளியலறை முன்னுரிமை,அதிகபடியாக கிடைக்கும் பால் என்பனவற்றால் துடியாகும் மனம், அவள் இங்கு வந்து அமர்ந்ததும் அசைவிழந்துவிடும்.அதை வலுக்கட்டாயமாக தட்டி தட்டி எழுப்ப வேண்டும்.மழைபெய்து முடித்த புழுக்கம் கசகசத்தது.

ரவியின் சிறுவிரல் எழுதுபலகையின் சட்டங்களில் மெதுவாக ஒரே நேரஇடைவெளியில் தொட்டு தொட்டு எழுந்தது.ஓசையில்லாத தாளம்.சிறிய நகம்.. கருத்த சிறு விரல்.

“எல்லாரும் காலையில சாப்பாட்டாச்சா…”என்று கவிதா கேட்டவுடன் சொல்லி வைத்ததைப்போல நிமிந்த அவர்கள், “ சாப்டாச்சு டீச்சர்,” என்றனர்.பத்திலிருந்து பன்னிரெண்டு வயதிற்குள்ளான பிள்ளைகள்.

அவர்கள் மீண்டும் எழுதத்தொடங்கியதும் கவிதா கற்றல்படிநிலை குறிப்பேட்டை எடுத்தாள்.எடுத்த கையோடு மூடி வைத்துவிட்டு அவர்களைப் பார்த்தாள்.சிவா அவளைப் பார்த்து விழித்தப்பின் குனிந்து எழுதினான்.மூன்றாம் வாய்பாடு வரைக்கும் அவன் வண்டி பறக்கும்.சிவானி வாசிப்பு வரைக்கும் வந்து விட்டாள்.

அருண் விசுக்கென்று எழுந்ததில் பதறி, “என்னடா..”என்றாள்.

“அவன் என்னைப்பாத்து எழுதறான் டீச்சர்..”

“நீ என் பக்கத்துக்கு வா..நீ நல்லபையன் தானே…அவன் தெரியாம செஞ்சிருப்பான்,”

இப்படி பேசாவிட்டால் சாயுங்காலம் வரை கொதிநிலையிலேயே இருப்பான்.ஆங்கார மூர்த்தி.

ராமச்சந்திரன் குனிந்து அமர்ந்திருந்தான்.இரண்டாம் வாய்ப்பாட்டின் பாதியில் நிற்பான்.சிவாவின் முகத்தை பார்த்ததும் மூன்றாம் வாய்ப்பாட்டை முடித்து நான்கிற்கு திணறுகிறான் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

கவிதா,“போதும்..ஒவ்வொருத்தரா எழுதினத காட்டு,”என்றாள்.

அருண் எழுந்து வந்தான்.ஒவ்வொரு முகமும் சிறுத்திருந்தது.தங்களால் மற்றவர்கள் போல படிக்கமுடியவில்லை என்ற தெளிவும்,சோர்வும் உள்ள பிள்ளைகள்.எங்கேயோ ஒரு பின்னல் அவிழ்ந்த கூடை.இவர்களுக்கு பள்ளிக்கூடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டே இருக்கிறது.

இந்த வேலைக்காக அழைத்த அன்று கவிதா பரவசமாக பள்ளிக்கு வந்து நெட்டிலிங்க மரத்தடியில் நின்றபோது நம்ம பள்ளிக்கூடம் என்ற துள்ளலும் பழைய முகங்களும் நினைவில் வந்து கொந்தளிக்க செய்தன.சமநிலையில் இருக்க படாதபாடுபட்டாலும் வியர்த்து வழிந்தது.

அன்று தலைமையாசிரியர், “என்ன பண்ணியாச்சும் இந்தப் பிள்ளைகள தினமும் பள்ளிக்கூடத்துக்கு வர வைக்கனும்மா.பிள்ளைக இங்க இருந்தா போதும்..இல்லன்னா ஊர்சுத்தி சீரழிஞ்சிரும்.எல்லாம் வயக்காட்டு வேலைக்கும், வெளியூர்ல கூலி வேலைக்கும் அலையறவங்களோட பிள்ளைக.படிக்கமுடியலன்னாலும் பாதுகாப்பா இருக்கட்டும்.ரூல்ஸ்ல வரமாதிரில்லாம் ரொம்ப சிக்கல் உள்ள பிள்ளைகள் இல்ல…நடத்தை குறைபாடுகள் ரொம்ப குறைவு..”என்றார்.

இந்த பத்துநாட்களில் நேற்றும் இன்றும் தான் அனைத்து பிள்ளைகளும் வந்திருக்கிறார்கள்.தனியாக பள்ளிக்கூடம் நடத்துவதைப் போன்று இவர்களுக்கென இருபது பதிவேடுகள். ‘ரெக்கார்டை பக்காவா மெயின்டெயின் பண்ணும்மா’ ஒன்னும் சிக்கலில்லை என்று சகஆசிரியர்கள் அவளின் மிரண்ட விழிகளைப் பார்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள்.

கவிதா,“தமிழ் அட்டைகள எடு,”என்றதும் சிவா கற்றல் அட்டைகள் இருந்த பிளாஸ்டிக் ட்ரேயை எடுத்து வந்தாள்.இரண்டிரண்டு பிள்ளைகளாக சேர்ந்து அமர்ந்து சொல்லிக்கொடுத்த வார்த்தைகளை எழுத்துக்கூட்டினார்கள்.

ராமச்சந்திரனை பார்த்தாள்.அவன் பரபரவென்று எழுத்துக்கள் மீது விரல் ஓட்டினான்.சிட்டுக்குருவி மாதிரியானவன் என்று அவளுக்கு தோன்றியது.முதல் மணி அடித்ததும் சமேதா ஆங்கில அட்டைகளை எடுத்து முன்னால் வைத்தாள்.எழுத்துக்களின் அட்டைகள்.

அவர்களே எடுத்துக்கொண்டார்கள்.வாசவன் அமர்ந்திருந்த பாயின் அடியில் எதுவோ அசைவு தெரிந்தததும், “ எழுந்திரிச்சு நகந்து போங்க..பிள்ளைகளா,”என்று பதறி எழுந்தாள்.மூன்று பாய்களையும் தள்ளிப்பார்த்தால் அடியில் பூரான் நெளிந்து கொண்டிருந்தது.அருண் நெட்டிலிங்க மர இலையால் அதை எடுத்து மைதானத்தில் விட்டான்.

வழக்கம் போல ராமச்சந்திரன் கவிதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.கீழே கிடந்த கைக்குட்டையை எடுத்துக்கொடுத்தான்.

“எ”

“பி”

“சி”

“டி”

“டி…”

“அடுத்து…”

“எ”

“இ…பத்துதடவை சொல்லி எழுது..”

எழுதுபலகையை கையின் வியர்வை ஈரத்தால் அழித்துவிட்டு எழுதினான்.இதுவரை இருந்த ராமச்சந்திரன் இனிமேல் சாயுங்காலம் வரை வரமாட்டான்.ஆங்கில வகுப்பிலிருந்து அவன் வேறொரு பையனாக மாறுவதை தினமும் பார்ப்பது அவள் மனதை துவர்ப்படைய செய்கிறது.மென்சிறுமுடிகள் வியர்வையில் படிந்த அவன்முகம் கசப்பில் சட்டென விழும்.

அவனிலிருந்து தலைநிமிர்த்தி மைதானத்தை பார்த்தாள்.மழையில் நப்புத்தட்டி உதிர்ந்தஇலைகள் பரவிய அரவமற்ற மைதானம் மனதை துணுக்குற செய்தது.தலைமையாசிரியர் மைதானத்திலிருந்து அவர்களை பார்த்தபடி நின்றார்.அவர் அருகில் சென்றாள்.

“என்ன கவிதா..ராமசந்திரன் ‘டி’ ய தாண்டலயா?”என்றபடி புடவையை சரி செய்தார்.

“ஆமா டீச்சர்.அவன் ட்ரை பண்றான்.முடியல.அடிப்படை கணக்கும், தமிழும் கூட தெரியாம இவங்க லைஃப் என்னாகும் டீச்சர்..வாழனுமில்ல,”

“அல்லாவின் பெயரால எல்லாருக்கும் எதாச்சும் ஒரு வழியும்,துணையும் உண்டும்மா, ”

“ பாய்க்கு அடியில பூரான் இருக்கு டீச்சர்.பிள்ளகள கடிசிட்டா?”

“பூட்டியிருக்கற கிளாஸ்ல விறகு இருக்கு அதான்..”

“மேற்குகட்டிட வராண்டாவுக்கு போகட்டுங்களா…”

அவர் திரும்பி அங்கு பார்த்தவாறு,“அங்க ரோடு தெரியும்..தெருவுல நிக்கிற பயலுக கண்டதையும் பேசுவானுங்க..”

“பாத்துக்கலாம் டீச்சர்…”

“கருப்புப்புடவை உனக்கு எடுப்பா இருக்கும்மா,”

“தேங்ஸ் டீச்சர்..அம்மாவோட புடவை,”என்றவளின் கன்னத்தில் தட்டிவிட்டு அடுத்ததாக இருந்த ஓட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தார்.

நேற்று பாலுவுடன் பேசியது நினைவில் எழுந்தது.மாற்று சான்றிதழ் வாங்க வர வேண்டும் என்று கல்லூரி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.பாலுவின் குரல்.

“நம்ம காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்கேன்..அப்படியே எம்.எட் பார்ட் டைமா பண்ணாலான்னு..நீ என்ன பண்ற..”

“எங்கவூர் ஸ்கூலுக்கு போறேன்.சர்வ சிக்க்ஷா அபியான் ஸ்கீம்ல..”

“சம்பளம் தரைத்தட்டுமே.உனக்கு ஒரு நாள் சம்பள கணக்கு என்னன்னு யோசிச்சியா? வயல் வேலைக்கான கூலியில மூணுல ஒருபங்குதான் தெரியுமா?”

“நான் படிச்ச பள்ளிக்கூடம் பாலு..சும்மா கூப்டாங்கன்னு வந்தேன்.விட மனசில்ல..”

“போகலாம் நல்லவிஷயம்தான்.ஆனா வருஷா வருஷம் ரூல்ஸ் மாறலாம்.கோர்ஸ் முடிச்சு ரெண்டு வருஷமாயிட்டா பிரைவேட்ல எடுக்கமாட்டாங்க.டி.சி வாங்க வரப்ப பேசலாம்..”

மைதானம் மௌன ஏகாந்தத்தில் இருந்தது.

இடைவேளையில் பிள்ளைகள் மைதானத்தை நிரப்பினார்கள்.பள்ளிக்கு பின்னால் பாசனவாய்க்கால்.அதற்கடுத்து ஐயாறு.கரைஒட்டிய வெளியில் கழிப்பிடம் இருந்தது.ஆனால் வாய்க்காலில் தான் பசங்க சிறுநீர் கழிப்பார்கள்.அது ஒரு விளையாட்டு.

மறுபடியும் ஆங்கில அட்டைகளுடன் போராடத்துவங்கினார்கள்.ராமச்சந்திரன் மீண்டும் ‘ இ’யை மறந்துவிட்டு கவிதா முகம் நோக்கி அமர்ந்திருந்தான்.வெயில் குறைந்து வானம் அடைத்துக்கொண்டிருந்தது.

பள்ளிக்கு வெளியில் இருக்கும் கடைக்காரஅண்ணன் வேகமாக வருவது தெரிந்தது.நடைபாதை தூணைப்பிடித்தபடி, “நான் பெரிய டீச்சருக்கிட்ட போய் சொல்றேம்மா…உம்முகத்துக்காக பாத்தேன். இன்னிக்கி இந்த மணிப்பய சிப்ஸ் பாக்கெட்ட தூக்கிட்டான்.நெதமும் இவனுக்கு நான் போலீஸ்காரனா வைக்கமுடியும்..”

மணி எழுந்து நின்றான்.அவன் நிற்பதிலிருந்தே எடுத்திருந்தான் என்பது தெரிந்தது.அவள் எழுந்துநின்று, “இந்த ஒருதடவை மன்னிச்சிருங்கண்ணா..இனிமே எடுக்கமாட்டான்..நான் சொல்லிக்கறேன்,”என்றாள்.

“நீ என்னாம்மா எங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு..இன்னொரு தடவ கைவைடா அப்பறம் தெரியும்,”என்று வேகமாக திரும்பி பனியன் மீது போர்த்தியிருந்த துண்டை சரிசெய்தபடி நடந்தார்.

“காசு வச்சிருக்க தானே மணி..”

“ஐஞ்சுரூபா…”என்று கால்சட்டை பையிலிருந்து எடுத்தான்.

“கடைக்குபோய் அந்த சிப்ஸ் பாக்கெட்ட காசுகுடுத்து வாங்கிட்டு வா…”

“அவரு கைய ஓங்குவாறு…”

“நீ போ. பின்னலேயே சுரேஷ் வருவான்..”

சுரேஷ் பக்கத்தில் வந்தான்.அவனிடம் மணியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியப்பின், பிள்ளைகள் அனைவரிடமும் மணி எங்கும் கைவைத்தால் மெதுவாக சொல்லி அழைத்து வர வேண்டும் என்று சொன்னாள்.

அவர்கள் தலையாட்டுவதை கவனிக்கையில்தான் ஸ்னேகா இன்னும் வரவில்லை என்பது உறைத்தது.

“ஸ்னேகா எங்கடா…”என்று உரக்கக் கேட்டு எழுந்தாள்.

“அந்தப்பிள்ள பைய எடுத்துக்கிட்டு ஆத்தோரமா போனுச்சு டீச்சர்…”

“ஏண்டா என்னிட்ட சொல்லல..”

“அது எப்பவும் அப்பிடித்தான் டீச்சர்…”

கவிதா அவசர அவசரமாக தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தாள்.

தலைமையாசிரியர்,“அருண அனுப்பும்மா..”என்றபடி வகுப்பிற்கு சென்றார்.

திரும்பி வரும்போது சமையற்கூட கட்டிடத்திற்கான இடைவெளியில் அருண் ஆற்றை நோக்கி ஓடுவது தெரிந்தது.சிறிது நேரத்தில் ஸ்னேகாவுடன் வந்தான்.

“புத்தகப்பை எங்க ஸ்னேகா..”

அவள் பேசவில்லை.

அருண்,“கேணியில தூக்கிப்போட்ருச்சு டீச்சர்..ஆழமான கேணி..படியில்லை.எறங்கி எடுக்க முடியாது,”என்றான்.

“எதுக்கு ஸ்னேகா அங்க போன..”என்று கேட்டதற்கும் பதிலில்லை.

“இவங்க ரெண்டாவது அப்பாவும், அம்மா, தம்பியும் காலையில கோயிலுக்கு போறத பாத்துட்டு நானும் வரேன்னு சொன்னுச்சாம். கூட்டிட்டு போவலன்னு கோவத்துல இருக்கு..”

“கோவம் வந்தா கேணிக்குப் போவியா..”

“இல்ல டீச்சர்..காலையில சோறு திங்கல..அதான் கொய்யாப்பழம் பறிக்க போனேன்,”

“காலையில வந்ததும் கேட்டனே..ஏன் சொல்லல?”

அமைதியாக நின்றாள்.பர்ஸை திறந்தால் ஒருபத்தும் ஐந்தும் இருந்தது. பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வர மணியை அனுப்பினாள்.

“அருண் கூப்டாதான் வருவியா ஸ்னேகா..”

அவள் தலையாட்டினாள்.

சிவானி,“ஆமா ..டீச்சர்.அவன்தான் மதியானம் பள்ளிக்கூடத்து சோறு வாங்கி அதுக்கூட சேந்து திம்பான். அவங்க பக்கத்துவீடு.அவங்கவீட்ல தீனி செஞ்சா இந்தப்பிள்ளைக்கி குடுப்பான்.அவங்கம்மா எந்நேரமும் வயல் வேலைக்கி போயிரும்..”என்றாள்.

ஸ்னேகா தலையை குனிந்தபடி நின்றாள்.

“இங்க வா ஸ்னேகா..” என்றதும் அருகில் வந்து அமர்ந்தாள்.அவள் தோளில் கைவைத்து , “இனிமே கேணி பக்கம் போகக்கூடாது.கோவம் வந்தா..பசிச்சா.. என்னிட்ட சொல்றியா..”

“அருண்பயட்டதான் சொல்வேன்…”

“சரி…கேணிக்கு போகக்கூடாது…”என்ற கவிதா பெருமூச்சுவிட்டாள்.

‘வேலைக்கு செல்லும் முதல் ஆண்டில் எத்தனை மாணவர்களை சரியா கையாளமுடியுதுங்கறது தான் உங்க திறமை’ என்று செல்லபாண்டியன் ஐயா கல்லூரியில் அடிக்கடி சொல்வது நினைவிற்கு வந்ததும் அழுகை வந்தது.எழுந்து நெட்டிலிங்க மரம் வரை நடந்தாள்.

இன்று மதியம் தோட்டவேலைக்கு பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று நேற்றே தலைமையாசிரியரிடம் கேட்டிருந்தாள்.அந்த வழக்கம் இப்பொழுது இல்லை என்றப்பின் போறதுன்னா போங்க என்றார்.உணவு இடைவேளையில் சமையல்கூடத்திலிருந்து இரண்டு வாளிகளை வாங்கி ராமச்சந்திரனிடம் கொடுத்தாள்.

தலைமையாசிரியரின் அறைக்கு சென்று வருவதற்குள் பிள்ளைகள் தோட்டத்திற்கு சென்றிருந்தனர்.கவிதா படித்த நாட்களில் இன்னும் நிறைய இடமும் செடிகளும் மரங்களும் இருந்தன.கவிதா சற்று தூரத்திலேயே நின்று கொண்டாள்.

அருண் பாசனவாய்க்காலில் இருந்து தண்ணீரை வாளியில் அள்ளி மாற்றி கொடுக்க ஸ்னேகாவும் ராமச்சந்திரனும் தென்னைமரங்களுக்கு ஊற்றினார்கள்.புதராக படர்ந்து மலர்ந்திருந்த மல்லிகைசெடியின் பக்கத்தில் சமேதாவும்,சிவானியும் பூக்களை பறித்துக்கொண்டிருந்தார்கள்.

சிவா, “பிள்ளைகளா மல்லியப்பூ செடிக்கும் தண்ணி ஊத்தலாம்..”என்றான்.வாசவன் வாய்க்காலின் சிமெண்ட் கட்டையில் அமர்ந்து தண்ணீரில் கால்களை அலைந்து கொண்டிருந்தான்.தண்ணீர் நிறைந்து ஓடியது.ஓரத்திலிருந்த நெல்லிக்காய் மரத்தினடியில் நின்ற ரவி உச்சியில் இருந்த காய்களை பார்த்தபடி மரத்தை உலுக்கினான்.

மணி தென்னைமரத்திற்கு அடியில் வட்டமாக பறிக்கப்பட்டிருந்த நீர்பிடி குழியை ஆழமாக்கி அதில் கிடந்த தாள்களை எடுத்து ஓரமாக வீசினான்.சுரேஷ் விழுந்திருந்த மட்டைகளை இழுத்துச் சென்று சத்துணவு கூடத்திற்கு அருகில் போட்டான்.விவசாயவேலைகள் ரத்தத்தில் ஊறிய பிள்ளைகள்.

கவிதா நிமிர்ந்து மேற்கே பார்த்தாள்.கொல்லிமலை முகடுகள் மேகம் சூடியிருந்தன.வெயிலும் மழையும் பனியும் உச்சத்தை அடையும் நிலம்.மலையின் வண்டல் வந்து படிந்து கொண்டேயிருக்கும் பூமி.தின்று,உயிர்த்து,வாழ்ந்துகிடக்க இதைவிட பேரருள் பிறிதில்லை என்ற எண்ணம் வந்ததும் பார்வையை இறக்கி பிள்ளைகளைப் பார்த்தாள்.சாரல் கடந்து சென்றது.

அவர்கள் அருகில் சென்று, “புதுசா எதாச்சும் செடி நட்டு வளக்கலாமா? ஆளுக்கு ஒரு செடி..அந்த ஓரமா மரக்கன்னு கூட நடலாம்.நம்மளே எரு தயாரிக்கனும்,”என்றாள்.அனைவரும் சிரித்தபடி ஒரே குரலில், “ சரிடீச்சர்,”என்றார்கள்.

ராமச்சந்திரன், “எருவுகுழி போடறதுதானே டீச்சர்….ரொம்ப ஈசி டீச்சர்,”என்றான்.அவன் படபடத்த கண்களுடன்,அலட்சியமான பேச்சுடன்,இயல்பான சிரிப்பும் உற்சாகமுமாக நின்றான்.கவிதா புன்னகைத்தாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.