ரா. கிரிதரனின் காற்றோவியம் நூல் குறித்து பானுமதி

காற்றிசை ஆறு. பொங்குமாங் கடல் போன்ற பிரமிக்கவைக்கும் பிரவாகம்.

அகலமும், ஆழமுமான இசையறிதலெனச் சொல்லலாம். வரலாறும், இசைப் பிரிவுகளும், இசையின் நுணுக்கங்களைப் பற்றிய அறிவுமின்றி இதை எழுத முடியாது. இக்கட்டுரை பல நினைவுகளை எழுப்பியது.

பள்ளி இளம் பருவத்தில் சினிமாப் பாடல்களும், வானொலி கச்சேரிகளும், வீதியில் வரும் கல்யாண ஊர்வலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் பேண்ட் இசையும், சிவன் கோயில் ஓதுவார் பாடும் தேவரங்களுமென இசை ஒரு சிறு வட்டத்தில் இருந்தது. சென்னை வானொலி ‘பி’ ஒலிபரப்பிய ஆங்கில மேற்கத்திய இசை’அல்ஜீப்ரா’ போல பயமுறுத்தியது. ஆனால், கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்துஸ்தானி இசையும், பாப், ராக்,,பீட்டில்ஸ் போன்றவற்றிலும் பிடித்தம் வந்தது. திரையரங்குகளில் காட்சிக்கு முன் இசைக்கப்படும் ஆங்கிலத் திரைப்பட இசை கால்களால் தாளமிட வைத்தது. ஆனால், அது தொடரவில்லை. எப்படியோ விட்டுப் போய்விட்டது. பங்கஜ் உதாஸ், ரவிசங்கர், பனாரஸ் கரானா மற்றும் குவாலியர் கரானா, குமார கந்தர்வா, பீம் சென் ஜோஷி, ஜஸ்ராஜ், கௌசிகா சக்ரவர்த்தி, சுபா முத்கல், மன்னா டே, முகம்மது ரஃபி, சங்கர் மஹாதேவன், பிஸ்மில்லா கான், அல்லாராக்கா,(இடம் கருதி பலப் பெயர்களைக் குறிப்பிடவில்லை) சில நேரங்களில் ரவீந்திர நாத்தின் சங்கீதம் எல்லாமே, ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனத்தில், முடிந்த போது கேட்டவை தான். தமிழகத்தில் பெரும் தலைகளைத் தவிர எம்.பி சீனிவாசன் போன்ற பரிசோதனையாளர்களும் அதிகம் கவர்ந்தார்கள். பால முரளி க்ருஷ்ணா, எம்.எஸ் கோபாலக்ருஷ்ணன், குன்னக்குடி, எம் எல் வி போன்றவர்கள் எப்போதுமே பிடித்தமானவர்களானார்கள். அதிலும் கிரஹ பேதம், ஸ்ருதி பேதம், தாள மாற்றம் செய்வது பாலமுரளிக்குக் கைவந்த கலை. அவர் அதைச் செய்கிறார் எனப் புரிவதற்கே எனக்கு நேரமெடுக்கும். ஆனாலும், தமிழ், ஹிந்தி திரையிசைப் பாடல்களும், கர்னாடகசங்கீதமும் தான் மிகப் பிடித்தமாக இன்று வரை இருக்கின்றன.

இனி ரா. கிரிதரனின் நூலைப் பற்றி.

செல்லோ இசைப் புரட்சி: மிகவிரிவாகவும், தெளிவாகவும்,எழுதப்பட்டுள்ள சிறந்தகட்டுரை இது. பார்சலோனா, பாப்லோ கசல்ஸ் என்ற பேராளுமை உருவெடுக்க உதவுகிறது. பாக்கின் செல்லோவைத் தேடிய கடும் பயணம் மெய் சிலிர்க்க வைத்தது. பாரிஸ் ஒபரா அரங்கத்தின் வெளியே அவர் வாசித்தது எனக்கு தில்லானா மோகனாம்பாளில் மதுரை மணியின் நோட்ஸை ஷண்முக சுந்தரம் வாசித்ததை நினைவு படுத்தியது.

அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சூழல்களிலிருந்து கலைஞன் தப்பிப்பது சற்றுக் கடினம். கசல்ஸ் விதிவிலக்கல்ல. இன்றளவும் காடெலோனியா தனித்தன்மையைக் கோரிக்கொண்டு இருக்கிறது. அவரது ‘Expressive Intonation’ பற்றி ஒரு சிறு சித்திரம் மனதில் எழுந்தது. நான்கு தந்திகளிலும் விரல்களை ஒருங்கே வைத்து வெவ்வேறு ஸ்தாயீயில் வீணை வாசித்த பாலசந்தர் நினைவிற்கு வந்தார். உலகப் போர்களும், தாய் நாட்டுப் பற்றும் கசல்சை அலைக்கழித்ததில் வியப்பில்லை, பெரும் வருத்தம்தான். உலகம் இப்படித்தான்; கலையை அவனது திறனிற்காக மதிக்காது ‘இஸம்’களின் பின்னே ஒட்ட வைக்கும் மனிதப் புரிதல். கானிக்யூ மலையடிவாரம் அவரை ஆற்றுப்படுத்தியிருக்கும். அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் செய்த அருஞ்செயலால் இன்று கசல்ஸ், பாக், அதைப் பற்றி எழுதும் கிரிதரன் ராஜகோபாலனைத் தெரிந்து கொண்டேன்.

மாபெரும் ஆபரா

நம் சேர்ந்திசையில் மேல் கீழ் ஸ்ருதியில் பாடுவது வழக்கம் தான். சரியான ஒத்திசைவு இல்லாவிட்டால் அது ஒலிக்கேடாகிவிடும். நம் இசை நாடகங்கள் தேய் மொழி,தொல் கதையில் சிக்குண்டு கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. பள்ளியில் இசையைப் பயிற்றுவிப்பது சீனாவைப் போல் இங்கே கட்டாயமாக்கப்பட்டால், அரசியல் வெகு வேகமாக அதில் நுழைந்து விடும். கனவுகளுக்குத் தடையில்லை, அவ்வளவுதான். ஒரு கருத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர் – இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்தில் அமரும். ஏ.ஆர். ரெஹ்மானுக்குக் கேட்கிறதா?

லண்டன் கலை நிகழ்ச்சிகள்

முதலில் கட்டுரையாளரின் அலுவலுகத்தை நினைத்து பொறாமை வந்தது. பின்னர் தோன்றியது- நேரமிருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் வேண்டுமே? இசைக்கெனவே கட்டப்பட்டுள்ள தேவாலயப் பகுதிகள், கேட்பதை அனுபவமென மாற்றும் அந்த நோக்கம் மிகச் சிறந்தது. ஆதார ஸ்ருதியும், மற்ற ஸ்வரங்கள் அதிலிருந்து கிளம்பி திசை மாறிப் பயணித்து பின்னர் ஆதாரத்தில் சேர்வதை அழகாக எழுதியுள்ளார்.

மொசார்ட் உலக அளவில் அறியப்பட்டவர்- என்னைப் போன்றவர்களுக்கு பெயர் மட்டும் தெரியும். செயிண்ட் சான்ஸ் பெத்தொவனுக்கு இணையானவர் என்று இதில் அறிந்து கொண்டேன். ‘அடோனல்’ என்ற பெயரே கற்பனைக் கதவுகளைத் தட்டுகிறது. வயலினும், பியானோவும் உரையாடுவதை, குன்னக்குடியும், ராஜேஷ் வைத்யாவும், சஞ்சய் சுப்ரமணியமும் தங்கள் கச்சேரிகளில் செய்து வருகிறார்கள்.

லட்சண இசை, லட்சிய இசை இரண்டைப் பற்றிய விளக்கம் சிறப்பு.

டெபுஸியின் இசையைக் கேட்பதற்கே ஒரு மன நிலை தேவைப்படும் போலிருக்கிறதே! வாக்னர் பின்பற்றிய பாணியல்லவா? எதுவாக இருந்தாலும் அபஸ்வரத்தை மேற்கிசை என்பதால் இரசிக்க முடியுமா என்ன? கால் மாத்திரை ஸ்ருதி விலகினாலே இந்துஸ்தானியில் பொறுக்க மாட்டார்கள். ‘ச’வில் தொடங்குவது ‘ரி’ யில் தொடங்கலாம், ஆனால், ஆதாரத்தை விட்டு விலகக் கூடாதல்லவா? இந்திய சங்கீதத்தின் அடிப்படை சாம வேதம் என்று சொல்வார்கள். இராகங்கள், அதன் ஸ்பரூபங்கள், கமகங்கள், பிர்க்காக்கள், தொனி, லயம் போன்றவை கிருதிகளுடன் இணைந்து நம்முள் கலந்து விடுகின்றன. இந்துஸ்தானி சங்கீதத்தில் விளம்ப காலமும், மூன்று ஸ்தாயிகளும் அடிப்படை. ஆதார ஸட்ஷமம்தான் (ச) தொடக்கம் என்பதில்லை அதில். ஆனால், ஸ்வர ஸ்தானங்கள், அதாவது அந்த இராகத்தின் ஜீவ தாதுக்கள், அனுஸ்வரங்கள் மிக மிக முக்கியம். ஒரு கச்சேரி கேட்ட நினைவு; பாடகரும், ஆர்மோனியமும் பாடவும், வாசிக்கவும் நடுவில் சந்தூர் புகுந்து அதிசயமான கோர்வையைக் கொடுத்தது. சரத்(பாலமுரளியின் சீடர்), சேஷ கோபாலன் இவ்வகையைக் குரலிலேயே கொண்டு வரும் விற்பன்னர்கள். வட இந்திய இசையின் தோடி நமது சுபபந்துவராளி; நம்முடைய தோடி அங்கே பைரவி தட். சில ஸ்வரங்கள் சேரும் இராகங்களை எடுத்துக்கொண்டு இரு இசைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஃப்யூஷன் இசையை முயற்சிக்கிறார்கள். ஜுகல் பந்தியில் இராக ஒற்றுமைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அசாத்தியமாக ஸ்ரீராம் பரசுராம் ‘காந்தம் ஸ்கொயர்’ என்று ஒரு நிகழ்ச்சியில் கர்னாடக, ஹிந்துஸ்தானி பாடல்களை ஜோடியாய் இணைந்த இராகங்களிலும், ஸ்வரங்களிலும் பாடிப் பரவசமூட்டினார்.(முத்ரா நிகழ்ச்சி டிச 2019)

திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசைத் துணுக்குகள் அடிப்படைத் தேவையே! ஹிந்தோள ராகமா, மாமவது ஸ்ரீ ஸரஸ்வதி பாட்டா, இரண்டில் எது சுலபமாக நினைவில் நிற்கிறது? இளையாராஜா, ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனி பற்றிய குறிப்பு அபாரம்.

வாக்னர், மாஹ்லர் போன்றவர்கள் வட துருவமென்றால், மாக்ஸ் ஜேகப், புலென், ராஜா தென் துருவமெனப் புரிந்து கொண்டேன். நவீன டாங்கோ பகுதியில் இடம் பெற்றுள்ள பேட்டி சிறியதாக இருந்தாலும் முக்கியமான கேள்விகளும், பதில்களுமாக நிறைவாக இருந்தது.

லண்டன் கலைமையம் அமைந்துள்ள இடத்தைப் பற்றிய இவரது வர்ணனைகள் உள்ளே இருக்கும் எழுத்தாளரின் கைவண்ணம். டேட் காலரி வாசலில் பிள்ளையார் கோயில்! விரைவில் வந்தாலும் வந்துவிடும். தேங்காய் பழக் கூடையுடன் அடுத்தமுறை தயாராகச் செல்லுங்கள்!! கிளாரினெட் தரும் இறுக்கம் சற்று அதிகம் தான் எப்போதும்.

‘ஹெள டு நேம் இட்?’ வந்த போது என் சகோதரி அந்த வயலினைக் கேட்டு அழுது விட்டாள். அவள் தான் அதை முழுதாக உள் வாங்கியவள் எங்கள் குடும்பத்தில். ஆனால், ஒரு உறவினருடன், வி.எஸ். நரசிம்மனை அவரது சென்னை இல்லத்தில் பல வருடங்களுக்கு முன் நேரில் சந்தித்தது நான் தான். என் உறவினரும் அவரும் இசை நுணுக்கங்களை விரிவாக விவாதித்துக்கொண்டிருக்க நான் கருவறை முன் நிற்கும் பாமரனாக இருந்தேன். கடைசி வரை ஒரு வார்த்தை என்னால் பேச முடியவில்லை. அவருடனான ஆசிரியரின் பேட்டி ஒரு பொக்கிஷம். நரசிம்மனை நான் சந்தித்ததும் ஒரு முறைதான். ஹார்மெனியும், மெலடியுமான கலவை அவர்.

எஸ்.ராஜம் மிக அபூர்வமானவர். முழுமையான கலைப் பார்வை கொண்டவர். இன்றும் கர்னாடக மும்மூர்த்திகளை அவரது ஓவியத்தின் வழிதான் அறிகிறோம். சிலப்பதிகார ஆபரா, சத்யஜித் ரே இயக்கிய பால சரஸ்வதி படம் போல எடுபடவில்லை போலிருக்கிறது. ராஜத்தைப் பற்றிய அரிய செய்திகளை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.

கலைஞன் மண் சார்ந்தவன்; ஆனால், கலை அப்படியல்ல. இதை வாக்னரின் நிலை உணர்த்துகிறது. இசை நாடக உலகின் தந்தை, ஹிட்லர் விரும்பிய இசையாளர், நிகரற்ற பெய்ஹோய்ட் அரங்கத்தை அமைத்தவர், இனச் சார்பு தன்மையால் யூத வெறுப்பாளரென அடையாளப் படுத்தப் படுபவர், ஆனாலும் அவர் கலைஞர்.

தொழில் நுட்பம் சார்ந்த சவால்களால் நிரம்பியிருக்கும் சிம்பொனியில் ஜீவன் இருக்குமா என்பது எனக்குப் புரியாத ஒன்று. வடிவமைக்கப்பட்ட இசையில் கச்சிதம் இருக்கலாம், இனிமை இழையலாம், லயங்கள் பொருந்தலாம், மனோதர்மம் வடிவமைக்கையில் இருந்திருக்கலாம், அதில் ‘ஸ்பான்டேனிடி’ இருக்குமா எனக் கேள்வி எழுகிறது. ஆனால், நான் சிம்பொனி ஒன்றைப் பொருந்திக் கேட்டதில்லை. என் கேள்விகள் தவறாக இருக்கலாம். விரிவாக்கம் என்பது இதற்கு மிக அவசியம் எனப் புரிந்து கொள்கிறேன்.

இளையராஜாவை கர்னாடக சங்கீதக்காரர்கள் பலரும், ஒரு சிலரைத் தவிர நேசித்துக்கொண்டே வெறுத்தார்கள், வெறுத்துக்கொண்டே நேசித்தார்கள். அந்த மாபெரும் கலைஞனின் அபார ஞானம் இவர்களைப் பயமுறுத்தியிருக்கலாம். நாட்டுப்புற இசை, இராக சங்கீதம், மேற்கத்திய இசை என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து திரையிசையின் போக்கினையையே மாற்றியவர். இராக ரூபம் சிதையாமல் சிறு மாற்றம் செய்து அதையே மெலடியெனக் காட்டியவர். ஒரே பாடலில் பலராகங்கள் வரும், ஆனால், ராக மாலிகை அல்ல. அவரது திரைப் பாடல்களைப் போல், தனியான ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. திருவாசகம் கூட அருமையான படைப்பு. சுஜாதா ‘நான் ஏற்கெனவே ஆழ்வாரில் மயங்கியதால், வாசகத்திற்கு உருகவில்லை’ என்று அனியாயமாக எழுதினார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, அல்லவா? கல்யாணி ராகத்தை ராஜா பலவிதமாகக் கையாண்டுள்ளார். தியாகராஜ ஸ்வாமிகளை அவர் வரவேற்ற ‘Chamber welcomes Thyagaraja’ என்ற குறிப்பு நெகிழ்த்தியது.

ராகசாகா எனக்கு மிகவும் பிடித்த பகுதி. பட்டிணப் பிரவேசம் என்ற படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற ஒரு பாடலில் வயலின் தான் பிரதானம். அதை இசைத்தவர் நரசிம்மனா? முதலில் மட்டுமல்ல இன்றும் இனிக்கும் இசை அது.

சிபேலியஸ் கட்டுரையில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ரசனைகள் விமர்சனங்களால் உருவாக்கப்படுகின்றன. இசை ஆர்வலர்களின் தற்சார்பிற்கும் அதிக இடம் இதில் உள்ளது. அவர் வாழ்வு பாம்பு-ஏணி ஆட்டமாக ஆகிவிட்டது. அன்னப் பறவைகளைக் கண்டு அவர் அமைத்த சிம்பொனி பற்றிய செய்தி எனக்கு இயற்கை ஒலிகளைக் கொண்டு இயற்கைச் சூழலில் டி.எம்.க்ருஷ்ணா பாடிய ஒரு இசைத் தொகுப்பை நினைவில் கொண்டு வந்தது.

நிசப்தத்திலிருந்து சப்தத்திற்குச் செல்லும் இசை, மனதின் சத்தத்தைக் குறைத்து அமைதிப்படுத்துவது ஆச்சர்யம். இசை வழி சமாதானம் ஏற்படலாமே? இஸ்ரேல்- பாலஸ்தீன அரசியல் களேபரங்களின் இடையே அவ்விரண்டு இசையையும் இணைக்கும் முயற்சி மகத்தானது. இசை ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு இவ்வகையில் அத்தியாவசியமானது.

கலை வேர்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்பவர்கள் காலத்தை நம்முன் நிகழ்த்திவிடுகிறார்கள். ஜி.என்.பியின் நூற்றாண்டு மலர் பற்றிய கட்டுரை சுவையானது.

நல்ல இசையமைப்பாளராக வந்திருக்க வேண்டியவர், நல்ல இசை ஒருங்கிணைப்பாளராக ஆகிப்போனார் என்ற எண்ணம் சுபின் மேத்தா கட்டுரையில் எனக்கு வந்தது.

சூசன் டோம்ஸ் மென்மையாகப் பியானோவைத் தொட்டதைப் படிக்கையில் வயலின் தந்திகளை அளவிற்கு அதிகமாக அழுத்தி சுகத்தைக் கெடுக்கும் சிலர் நினைவிற்கு வந்தனர்.

மெதுவாகத் தொடங்கி நிதானமாகப் பயணித்து மத்திம காலம் அமைத்து சரணத்தில் சிறு சரணத்தை வேகமாக அமைத்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒவ்வொரு பாடலிலும் இசைப் பகுதிகளை மாறுபட அமைத்துள்ளார். வட இந்திய இராகங்களை, கர்னாடக இசைக்குக் கொண்டு வந்தவர் அவரே. பல்வேறு தாளக்கட்டுகளை தனது நவக்ரஹ கிருதிகளில் அமைத்துள்ளார். இவரது கிருதிகள் மற்றும் அமைப்பு முறைகளை எடுத்துக்கொண்டு சரத், ஸ்ரீராம் பரசுராம், சிக்கில் குருசரண், பாம்பே ஜெயஸ்ரீ, மாண்டலின் ராஜூ மற்றும் அவர் மனைவி நாகமணி, புல்லாங்குழல் ஷசாங், கிடார் பிரசன்னா, ரவிகிரண், கணேஷ் குமரேஷ், ராஜேஷ் வைத்யா, கடம் கார்த்திக், மிருதங்கம் சிவராமன், சௌராசியா, சிவகுமார் பண்டிட், கௌசிகா சக்ரவர்த்தி, ஜாஹீர் ஹூசேன், செல்வ கணேஷ் போன்றவர்கள் இணைந்து செயல்பட்டால் நம்மால் ஒரு ஆபராவைக் கொண்டு வர முடியலாம்.

இசை கேட்டால் மட்டுமல்ல, இசையைப் பற்றி தரமாக எழுதினாலும் கூட, புவி அசைந்தாடுமென அறிந்து கொண்டேன். கட்டுரைத் தொகுப்பில் ஃப்யூஷன், ஜூகல்பந்தி போன்றவற்றைப் பற்றி ஒரு பகுதி வந்திருக்கலாம். இசைப்பவர்கள், இசை விமர்சகர்கள், இசை ஆர்வலர்கள், இசை அமைப்பாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக இதைச் சொல்வேன். அட்டை முகப்புப்படமும், கட்டுரைகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள காணொலி இணைப்புகளும் நூலோடு இணக்கமாக உள்ளன.

காற்றோவியம் என்னைப் புரட்டிப் போட்டது. என் மன அலைவுகளைப் பதியச் சொன்னது.

புத்தகம் வாங்க: அமேசான் கிண்டில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.