புலம்பெயர் இலக்கியத்தில் முதல் தலைமுறையினரின் எழுத்துக்கள் பலவகையிலும் முக்கியமானவை. அடையாள சிக்கலின் ஆவணங்களும் கூட. பிறந்து வளர்ந்த மண் அவர்களை வடிவமைத்திருக்கும். வாழ்வையும் வளத்தையும் கனவில் சுமந்தபடி புதியநிலத்தில் வேர்விட அத்தனை ஆண்டுகாலம் அவர்களை வடிவமைத்த வார்ப்புகளை உடைத்துக்கொண்டு புதிய வார்ப்புகளுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் புறத்தில் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் அகத்தில் இவை நிகழ்வது அத்தனை எளிதல்ல. பொருந்தா காலனியின் கட்டைவிரல் வலியைப்போல், அல்லது அளவுகுறைந்த சட்டையின் பிதுக்கங்கள் போல் சில தொந்திரவுகள் வெளிப்படவே செய்யும். ஒன்றை கைவிட்டு மற்றொன்றை கைக்கொள்ளும்போது ஏற்படும் உராய்வுகள் வலுவான கதைகளை உருவாக்க உதவும். இந்த பின்புலத்தில் எட்டு கதைகள் கொண்ட அழகுநிலாவின் சங் கன்ச்சில் ஒரு நல்ல வரவாக கருத முடியும்.
புலம்பெயர் எழுத்தை பற்றி பேசும்போது இயல்பாக பெண்களின் வாழ்வியல் எழுத்தும் (இது பெண்கள் எழுதுவதல்ல) சேர்த்தே வாசிக்க முடியும். இந்திய சூழலில் திருமணம் வழியாக பெண் புலம் பெயர்கிறாள். தன் அடையாளங்களை மறுவரையறை செய்துகொள்கிறாள். கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற ஒரு நாவலை அஞ்சலையின் புலம்பெயர்வு மற்றும் அடையாள சிக்கலாக வாசிப்பதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். ஆகவே வெளிநாட்டிற்கு வரும் பெண் குடும்பத்திலிருந்து திருமணத்தின் வழியாக புலம்பெயர்ந்து பின்னர் தேசத்தை விட்டும் புலம் பெயர்கிறாள். புலம்பெயர்வை ஆண்களை விட பெண்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடிகிறது என தோன்றுகிறது. பதின்மம், முதல்தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக அழகுநிலாவின் கதைகளை வாசிக்கலாம்.
அழகுநிலாவின் இரண்டாம் தொகுப்பான சங் கன்ச்சில் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் அவருடைய முதல் தொகுப்பான ஆறஞ்சு வாசித்தேன். ஆறஞ்சு வாசித்து முடிக்கும்போது சங் கன்ச்சில் தொகுப்பு அவருடைய முதல் தொகுப்பிலிருந்து ஒரு பெரும் தாவல் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வை அனைத்து தளங்களிலும், அனைத்து கோணங்களிலும் அள்ளிவிட் வேண்டும் எனும் முனைப்பு இருந்த அளவிற்கு மொழியும் சித்தரிப்பும் முதல் தொகுதியில் வசப்படவில்லை. ‘ஒற்றைக்கண்’ ஒரு நல்ல படிமமாக நிலைபெற்று வளர சாத்தியமுள்ள கரு எனினும் மொழியின் தேய்வழக்குகள், உணர்வுகளின் தேய்வழக்குகள் கதைக்கு தடையாகி விடுகின்றன. இவற்றை மீறி முதல் தொகுப்பில் எழுத்தாளரின் ஆதார கேள்விகள் நிச்சயம் வெளிப்படும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆறஞ்சு தொகுதியில் சில நுட்பமான அவதானிப்புகளை காண முடிகிறது. உதாரணமாக ஒரு கதையில் ஊரில் வியர்வை உழைப்பின் அடையாளமாக கருதப்படும் போது சிங்கப்பூரில் அது நாகரீக குறைவாக பார்க்கப்படுவது பற்றிய ஒரு குறிப்பை எழுதி இருப்பார். தலைப்பிற்குறிய கதையான ‘ஆறஞ்சு’ அழகுநிலாவின் வலுவான கதைபுலத்தின் துவக்க புள்ளியை அடையாளம் காட்டுகிறது என சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி முறை அளிக்கும் அழுத்தத்தின் மீதான சன்னமான விமர்சனத்தையும் பதின்மவயதினரின் சிக்கல்களையும் பேசுகிறது. இந்த தொகுப்பில் சங் கன்ச்சில், முள்முடி, விலக்கு ஆகிய மூன்று கதைகளும் பதின்மவயதினரை சுற்றி நிகழ்கிறது. பொங்கல், வெள்ளெலிகள் கதையிலும் சிறுவர்கள் வருகிறார்கள். பதின்மத்தின் தயக்கங்கள், கொந்தளிப்புகள் வெறும் வயது சார்ந்த அக தத்தளிப்புகள் என்ற அளவில் சுருக்கிவிடாமல் அவை பண்பாட்டு தளத்தில் விரிகிறபோது பதின் பருவத்தை முதல்தலைமுறை புலம்பெயர்வுக்கு இணையாக, அதன் குறியீடாக வாசிக்க இயலும் என தோன்றுகிறது. புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் அழகுநிலா வெற்றிபெறுகிறார்.
சங் கன்ச்சில், தொகுப்பின் தலைப்பிற்குறிய கதை. சிங்கப்பூரில் வளரும் பதின்ம வயதினனின் கதை. விகாசம், பொன் முகத்தில் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ ஆகிய கதைகளுடன் சேர்த்து வாசிக்க முடியும். தொழில்நுட்பம் மனிதர்களை அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்ற பயன்படுத்த முடியும். வாழ்வர்த்தத்தை அழிக்கவும் அவற்றை ஏவ இயலும். ஸ்ரீதர் நாராயணனின் ஒரு கதையும் பதின்ம வயது பெண் குழந்தை பாலியல் படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்படுவதை களமாக கொண்டது. புலம்பெயர் எழுத்தாளர்களின் முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இது உருவாகி வருவதை காட்டுகிறது. முதலை மீது தாவி கரையை கடக்கும் கன்ச்சிலின் கதையும் பாம்பின் தலைமீது நடனமாடும் கிருஷ்ணனின் கதைக்கும் இடையே சுவாரசியமான ஒரு முரணை உருவாக்க முயன்றுள்ளார். இரண்டு பாட்டிகள், வெவ்வேறு சமூக படிநிலைகளை சார்ந்தவர்களாக வருகிறார்கள். ஆனால் அது அத்தனை துல்லியமாக உருபெறாமல் சற்றே அலைவுரும் கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ரத்னாவின் பாத்திர விவரிப்பு அனாவசிய சுமை என தோன்றியது. சிவாவின் நடத்தை இரண்டு வகையில் எனக்கு முக்கியமாக தோன்றியது. அவனுடைய தந்தை அடித்திருந்தாலும், தாய் திட்டியிருந்தாலும் மனக்காயத்தை மீறி அவர்களுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. அவனுடைய நடத்தையை தொலைபேசியில் வெளியே எவருடனோ பகிர்ந்து கொண்ட, இறந்து போன பாட்டியின் இடத்தில் இருக்கும் லட்சுமியிடம் தான் அவன் கணக்கை நேர் செய்து பழி தீர்க்கிறான். ஒருவகையில் மனிதர்கள் ஆக பலவீனமான புள்ளியில் தங்கள் வெற்றிகளை நிலைநாட்டுவார்கள் என சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மூன்று தலைமுறையினரிடையே உள்ளே உறவு சிக்கல்களை பக்க சார்பற்று சித்தரிக்க முடிந்தது இக்கதையின் வெற்றி.
விலக்கு இந்த தொகுதியில் உள்ள நல்ல கதைகளில் ஒன்று. சென்றாண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது சிறுகதை முகாமிற்காக வந்த கதைகளில் இக்கதையை வாசித்தது நினைவில் இருந்தது. பதின்ம வயது பெண் பூப்படைவதில் உள்ள பண்பாட்டு சிக்கலை சொல்லும் கதை. லாவண்யாவின் அம்மா தமிழ் அடையாளங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டிருப்பவள். லாவண்யா அடையாள கலப்பின் மீது ஈர்ப்புடைய பதின்ம வயது பெண். சீன இந்திய ஜோடியை காணும்போது சூசன் பூக்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு ஏக்கமாக வெளிப்படுகிறது. காதலிக்க சீனனை விழையும் பெண் வகுப்பில் இந்திய நட்புகளையே எதிர்பார்க்கிறாள் என்பது சுவாரசியமான முரண். பள்ளியில் தான் ஏற்கனவே வயதடைந்ததாக காட்டிக்கொள்பவள். அவளுடைய ரகசியத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால் அம்மாவின் ஆசைகள் வேறாக உள்ளன. பருப்பு சோறை நண்பர்கள் கேலி செய்ததை மனதில் கொண்டு அவளும் சுணங்கி சிக்கன் கேட்கிறாள். இந்த கதையில் முக்கியமான இடம் என்பது தமிழ் வாத்தியார் கூற்றாக வரும் ஒரு வரி- தமிழை நாம் விலக்க கூடாது. தமிழ் அடையாளத்தை பேண நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் அதை விட்டு விலகி வெளியேற நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் இடையிலான முரணை சொல்லும் கதை. முள் முடி இந்த தொகுதியின் மற்றுமொரு பதின்ம வயதினரின் கதை. தொகுப்பின் பலவீனமான கதையும் கூட. கதைக்குள் முரண் போதிய அளவு வலுவாக உருவாகவில்லை என தோன்றியது.
கீலா, இத்தொகுப்பின் முதல் கதை. அல்ஷிமர் நோய் வந்து கணவரை, லிக்வான்யூவை, கவனித்து வந்த மகளை என எல்லோரையும் மறக்கிறாள். ஆனால் மரண தருவாயில் ‘கீலா’ அதாவது மலாயில் பைத்தியம் என பொருள் வரும் ஒரு சொல்லை மட்டும் மகளிடம் விட்டுச்செல்கிறாள். அந்த சொல் ஒரு செய்தியாக மகளை துரத்துகிறது. அம்மாவின் வாழ்விலிருந்து அதற்கான விடையை கண்டடைகிறாள். அம்மாவின் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் கடந்தகால சம்பவம் வலுவான ஒரு முடிச்சை கொண்டிருக்கிறது. யார் கீலா? என்பதே கேள்வி. கீலா என்று முத்திரையிடப்பட்டு அடைக்கப்பட்ட பெண் அல்ல தானே என அம்மா புரிந்து கொள்கிறாள். இறுதி வரி இதை மகளும் உணர்ந்து கொண்டதை குறிப்புணர்த்துகிறது. அம்மாவின் முன் கதைக்கு இருக்கும் கணம் மகளின் பகுதிக்கு இல்லை என்பதே இக்கதையின் ஒரு எல்லை என கூறலாம். ஆகவே அந்த இணைப்பு உத்தியாக மட்டும் நின்றுவிடுகிறது. அம்மாவின் கதை மகளுக்கு, அவளுடைய வாழ்க்கைக்கு என்ன அளிக்கிறது? என்ன இடையீட்டை நிகழ்த்துகிறது? அம்மாவை அறிந்துகொள்கிறாள் என்பதோடு நின்றுவிடுகிறது.
அக்ரோன், உயரம் அல்லது உச்சி என பொருள். இந்த தொகுப்பில் எனக்குபிடித்த கதைகளில் ஒன்று. ஜொலிக்கும் உயர்ந்த கோபுரத்தின் அடியில் ஓடும் கறுப்பு ரத்தம் எனும் கரு புதிதல்ல. ஆனால் சொல்லப்பட்ட முறை இதை முக்கியமாக்குகிறது. கதைகளின் இயங்கு தளம் மிக குறுகியதாக, சரியாக சொல்லவேண்டும் என்றால் வளரிளம்பருவத்து நினைவுகள் மற்றும் அக தத்தளிப்புகள் சார்ந்ததாக மட்டும் கதைப்புலம் இயங்கும்போது எழுத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. அழகுநிலா பெண் தன்னிலை கதை சொல்லலை முதல் தொகுப்பிலேயே தாண்டுகிறார். ஆண்களின் அகவுலகிற்குள்ளும் பயணித்து, புற உலகத்துடனும் உறவுகொண்டு தனது எல்லைகளை கடக்க முயல்கிறார். நண்பனை இழந்தவனின் ஒருநாளை நுணுக்கமாக சித்தரிக்கிறார். அவனுடைய வெறுமை, மிரட்சி, வாழ்க்கை சிக்கல், நண்பனின் நினைவுகள் என எல்லாமும் இயல்பாக கடத்தப்படுகிறது. போலியான கரிசனம் அல்லது உரத்து வலிந்து மிகையாக்காமல் வாழ்க்கை பாடை சொல்ல முடிந்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்வு குறித்து விமர்சன குரல்கள் எழுவது மிக முக்கியம் என எண்ணுகிறேன். வேறு யாரும் சொல்லாத, சொல்ல தயங்கும் விமர்சனங்களை எழுப்ப வேண்டியது எழுத்தாளரின் கடமை. வர்ணங்களில் ஜொலிக்கும் சிங்கப்பூரை சிங்கப்பூர் ப்ளையரில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் அவன் காலடியில் எல்லா வண்ணங்களும் கலந்து கறுப்பாக தெரிவதாக முடித்திருப்பார். ஆறஞ்சு தொகுப்பில் இல்லாத ஒரு கூறு என இப்படி வலுவான படிமத்தை கதையில் கையாளும் திறன் இக்கதைகளில் வெளிப்படுவதை கூறலாம். யோசித்துப் பார்த்தால் நாம் கதைகளை மறக்கக்கூடும் ஆனால் கதையின் ஆன்மாவை கடத்தும் ஒற்றை படிமம் கதையை நினைவில் தூக்கி நிறுத்தும். காலந்தோறும் வாசிப்பில் விரியும். அர்த்த அடர்வுகளும் கூடும். இந்த தன்மை அபாரமாக வெளிப்பட்ட கதை என வெள்ளெலிகள் கதையை சொல்லலாம். இத்தொகுதியின் சிறந்த கதை என இதையே சொல்வேன். மகனின் வளர்ப்பு பிராணி ஆசை மற்றும் சிக்கல்களை பற்றி பேசும் கதையாக தொடங்கி அதன் இறுதியில் ஒரு பெண்ணின் அளவுகடந்த ஆத்திரத்தை பறைசாற்றி முடிகிறது. பிரேமா நான்கறை கொண்ட தன் வீட்டை கணவரின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியருக்கு தற்காலிகமாக உள்வாடகைக்கு விடுகிறாள். ஊரிலிருந்து ஒவ்வொருவருடமும் மூன்றுமாதம் மனைவி மாலதியை அழைத்து பிள்ளை பேறுக்கு இருவருமாக முயற்சிகிறார்கள். பிரேமாவின் மகன் ஆகாஷ் செல்லப்பிராணியாக வெள்ளை எலிகளை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவை குட்டிகள் ஈனுகின்றன. அவற்றை விற்று, இதை தொழிலாகவே கருத தொடங்குகிறான். மாலதிக்கு வெள்ளெலிகளின் இனப்பெருக்கத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. இரவெல்லாம் முழித்துக்கொண்டு அதையே பார்க்கிறாள். மாலதி மூன்றுமாத வாசம் முடித்து ஊர் திரும்புகிறாள். ஆண் எலியை காணவில்லை என தேடுகிறார்கள். கதை இப்படி ஒரு காட்சியுடன் முடிகிறது- ‘துணிகளை தொங்கவிடும் நீண்ட கம்பியில் ஒரு வெள்ளெலி தூக்கிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.’ ஒவ்வொரு வருடமும் பிள்ளை பேறுக்காக மூன்றுமாதம் வந்து வெறுமனே செல்லும் மாலதியின் ஆற்றாமை, ஆத்திரம் என எல்லாவற்றையும் இந்த ஒரு வரி முழு தீவிரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஒரு படிமமாக துணிக்கம்பியில் தொங்கும் வெள்ளெலி ஆழ்ந்த மன தொந்தரவை அளிக்கிறது. அக்ரோன் மற்றும் வெள்ளெலிகள் என இவ்விரு கதைகளுமே உள்ளுறையும் வன்மத்தை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக கடத்துகிறது. சங் கன்ச்சில் கூட வன்மத்தையே உள்ளுறையாக கொண்டிருக்கிறது.
பொங்கல், சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மீதான எள்ளல் கலந்த விமர்சனம் என இந்தக்கதையை வாசிக்க முடியும். பொங்கல் பானையில் happy deepavali என எழுதுவது, மாடு குட்டி என கன்றை சொல்வது, பொங்கல் போட்டியில் எப்போதும் வெல்லும் சீன பெண், மாட்டை பார்த்து குழந்தைகள் ஈயஈயவோ பாடுவது, விவசாயத்தை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் கிழவர் அருகே அமர்ந்திருக்க விவசாயி சேத்துல கால வெச்சாத்தான் நாம சோத்துல கால வைக்க முடியும் என வீர வசனம் மேடையில் பேசுவது என எல்லாமும் அபத்தமாகவும் மிகையாகவும் சித்தரிக்கப்படுகிறது. ‘பொங்கல்’ என பொருத்தமாகவே தலைப்பிட்டிருக்கிறார். உள்ளீடற்ற வெற்று உணர்ச்சி பொங்கல். பண்பாடும் கூட சந்தை பொருளாக மாற்றப்பட்டு விற்கப்படும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. முதல் தொகுப்பில் இருந்த தமிழ் பெருமிதம் எல்லாம் மறைந்து மறுபக்கத்தை அணுகும் பார்வையை இக்கதைகளில் அடைந்திருக்கிறார் அழகுநிலா. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலில் அங்கதம் தெறிக்கும் மதுக்கூட உரையாடலை நாம் மறக்க முடியாது. எதன் மீது நமக்கு மெய்யான அக்கறையும், உள்ளார்ந்த மதிப்பும் உள்ளதோ இயல்பாக அதை பகடிசெய்யும், விமர்சிக்கும் உரிமையையும் நாம் அடைகிறோம். ஒன்றை இயல்பாக தயக்கமின்றி நம்மால் பகடி செய்ய முடிகிறதோ அப்போது அதை நாம் நம்முடையதாக ஏற்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
வெண்ணிற இரைச்சல் ஒரு மகாபாரத கதை. ஆறஞ்சு தொகுப்பிலும் தர்மனை மையமாக கொண்ட ஒரு கதை உண்டு. ஆனால் இக்கதை மொழிரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் மேலான ஆக்கமாக ஆகிறது. போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை சொல்கிறது. ஒரு பக்கம் உபபாண்டவர்களை இழந்த சோகமும் மறுபக்கம் போரின் அழிவுக்கு தான்தான் காரணம் எனும் குற்ற உணர்வும் அவளை வதைக்கிறது. சமையல் பாத்திரத்தில் குருதி தெரிவது கடோத்கஜன் தெரிவது என மாயத்தன்மையும் கதைக்கு வலு சேர்க்கிறது. போரின் இரைச்சல் அவளுக்கு தாலாட்டாகிறது. தன்னிலை மறந்து உறங்குகிறாள். கிருஷ்ணனும் கிருஷ்ணையும் அழிவின் கடவுள்கள். அழிவின் கடவுளே எப்போதும் அறத்தின் கடவுளும் கூட. மகாபாரதம் போன்ற கதைகளை மறுஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு மனித அகத்தினுடையதாக இருக்க வேண்டும். இக்கதையில் அப்படியொன்று நிகழவில்லை என்பது இதன் எல்லை.
‘மண்வாசனை தேடும் வலசை பறவை’ என அழகுநிலா அவருடைய முதல் தொகுப்பின் முன்னுரைக்கு தலைப்பிட்டிருந்தார். தானொரு வலசை பறவை எனும் தன்னுணர்வும் இங்கே தனது வசிப்பிடத்தை கண்டடைய வேண்டும் எனும் பதட்டமும் ஒருங்கே வெளிப்படும் தலைப்பு. இந்த இரண்டாம் தொகுதியில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும் எனும் பதட்டம் தணிந்து அமைதலின் நிதானம் கைகூடி வந்திருக்கிறது. சிங்கப்பூர் பற்றி அவருடைய முதல் தொகுதியில் வெளிப்பட்ட கற்பனாவாத எதிர்பார்ப்புகள், யோசனைகள் இந்த தொகுப்பில் சுத்தமாக இல்லை. சட்டென வெகுளித்தனம் மறைந்து அறிதலின் கசப்பு விமர்சனமாக வெளிப்படுவதை கண்டுகொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த இடத்தில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை நிராகரித்தும் பயணிக்கிறார். இந்த ஏற்பும் நிராகரிப்பும் முழுக்க தர்க்கப்பூர்வமான முடிவாக இருப்பதில்லை. பதின்ம வயது மகனின் முள் முடியை ஏற்கும் அன்னையால் மகளுக்கு பூப்பெய்தல் சடங்கு நடத்த வேண்டும் எனும் அவாவை கைவிட இயலவில்லை. இதை கொண்டாட்டமாக அணுகக்கூடாது என கருதி லாவண்யாவிற்கு விலக முடிந்தது போல் எளிதாக சிவாவிற்கு தான் கேட்டு வளர்ந்த கிருஷ்ணனின் கதைகளை விட்டு வரமுடியவில்லை. இந்த ஏற்பிற்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான ஊசலாட்டமும் திட்டமின்மையுமே அழகுநிலாவின் கதை மாந்தர்களை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். அழகுநிலாவின் சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்.
வாழ்த்துக்கள்..