பழுது – பாவண்ணன் சிறுகதை

“இந்தாங்க எளநி. சூடு சூடுனு ரெண்டு நாளா பொலம்பினேங்களேன்னு ஒங்களுக்காவத்தான் வாங்கியாந்தன். குடிங்க”

ரேவதியின் குரலைக் கேட்டபிறகுதான் திரும்பிப் பார்த்தேன். அவள் கொடுத்த சொம்பிலிருந்து இரண்டு வாய் குடித்த பிறகுதான் கோவிலுக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்த அவள் திரும்பி வந்ததை நான் கவனிக்கவே இல்லை என்பது உறைத்தது.

“எப்ப வந்த நீ? நான் ஒன்ன பாக்கவே இல்லியே.”

“அது சரி, ரெண்டு கதவயும் தெறந்து போட்டுட்டு, இங்க வந்து அறைக்குள்ள ஒக்காந்துகினா யாரு வரா யாரு போறானு எப்பிடி தெரியும்?”

“க்வார்ட்டர்ஸ்க்குள்ள யாரு வரப்போறா? வெளிச்சம் உள்ள வரட்டும்னுதான் தெறந்து வச்சேன்.”

“டேபிள்ல இருந்ததயெல்லாம் எடுத்து எதுக்கு இப்பிடி கலச்சி போட்டு வச்சிருக்கிங்க. என்ன தேடறிங்க?”

“ஆயிரம் ரூபா அட்வான்ஸ் எடுத்திருந்தன். எண்ணூறுக்குதான் பில் இருக்குது. மிச்சம் எரநூறு ரூபாய்க்கி பில்லுங்கள காணம். அர மணி நேரமா தேடறன். கண்ணுலயே படமாட்டுது. சூட்டுல மண்டயே வெடிச்சிடறமாதிரி இருக்குது.”

“எத்தன தரம் சொன்னாலும் ஒரு எடமா வச்சி எடுக்கற பழக்கமே ஒங்களுக்கு இல்ல. ஆபீஸ் ஊடு எல்லாமே ஒங்களுக்கு ஒன்னுதான். எங்கனாச்சிம் புஸ்தக்கத்துக்குள்ள, பீரோவுக்குள்ளதான் வச்சிருப்பிங்க, நல்லா பாருங்க.”

“அத தேடற கடுப்புலதான் நீ வந்தத நான் பார்க்கலை.”

“நேத்து கழட்டி போட்டிங்களே ப்ரெளன் பேன்ட். அதுல ஏதாச்சிம் வச்சிட்டு எடுக்க மறந்துட்டிங்களா.”

“அதான் அதோ ஆணியில மாட்டி வச்சிருக்கே. அதுலயும் நல்லா தேடிப் பாத்துட்டன். எங்கயும் இல்ல. அதுக்குள்ள இந்த ஏ.இ. வேற நாலுதரம் போன் பண்ணி அக்கெளன்ட குடு, அக்கெளன்ட குடுனு உயிர எடுக்கறாரு.”

“மாசம் பொறந்தா ஆயிரம் ரூபாய குடுத்துட்டு அடுத்த ஒன்னாம் தேதிவரைக்கும் நீங்க நூறுதரம் கணக்கு கேக்கறிங்களே, அந்த மாதிரிதான் அவரும் இருப்பாரு. ஜே.இ. என்கிட்ட கணக்கு கேக்கறாரு. ஜே.இ.கிட்ட ஏ.இ. கேக்கறாரு.……”

ரேவதி சிரித்துக்கொண்டே சொன்னாலும் எனக்குக் கோபம் வந்தது. ”ஊட்டுக்கணக்கும் ஆபீஸ் கணக்கும் ஒன்னா?” என்றேன். அதற்குள் சட்டென ஒலித்த ஃபோன் மணி என் கவனத்தைத் திருப்பிவிட்டது. “ஒரே கேள்விய எத்தன தரம்தான் திருப்பித்திருப்பி கேப்பாரோ தெரில” என்று எரிச்சலுடன் ரிசீவரை எடுத்தேன்.

“சார், ஏ பேனல்ல அலாரம் அடிக்குது சார்.”

அது மாணிக்கத்தின் குரல் என்பது சற்று தாமதமாகத்தான் உறைத்தது. கோஆக்சியல் கேபிள் ஸ்டேஷன் மஜ்தூர். மறுகணமே உடம்பு சூடு ஏறியது. “என்னடா சொல்ற மாணிக்கம்? அலாரமா?”

“ஆமா சார். ஏ பேனல்ல.”

“சரி. சஞ்சனா மேடமும் திரிவேணி மேடமும் இப்ப டூட்டிதான. காலையில பாத்தனே. அவுங்க அங்க இல்லியா?”

“ரெண்டு பேரும் டூட்டிலதான் சார் இருக்காங்க. திரிவேணி மேடம் பேங்க் வரைக்கும் போயிட்டு வரேனு போயிட்டாங்க. கொஞ்சம் பாத்துக்க மாணிக்கம்னு சொல்லிட்டு சஞ்சனா மேடம் பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்னு போயிட்டாங்க.”

“நீ மட்டும் ஏன் அங்க இருக்கற? நீயும் பூட்டிட்டு எங்கனா போ.”

“சார், அலாரம் அடிச்சிகினே இருக்குது சார்.”

“ஒன்னதான பாத்துக்க சொன்னாங்க, அப்படியே நாற்காலிய இழுத்து போட்டு ஒக்காந்து பாத்துகினே இரு. ஏன் என்ன கூப்புடற?”

“சார். டேஞ்சர் வெளக்கு எரியுது. பயமா இருக்குது சார்.”

அவனுடைய உடைந்த குரலைக் கேட்டதும் மனம் இளகிவிட்டது. “ஒன்னும் ஆவாது மாணிக்கம். பயப்படாத. அங்கயே இரு. இதோ நான் கெளம்பிட்டேன். ரெண்டு நிமிஷத்துல வந்துடுவேன்.”

ஃபோனை வைத்ததும் தானாகவே பெருமூச்சு வந்தது. “என்னவாம்?” என்றாள் ரேவதி. “தெரில. ஸ்டேஷனுக்கு போனாதான் தெரியும்” என்றபடி லுங்கியைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டு பேன்ட் எடுத்து அணிந்துகொண்டேன். “அந்த பில்ங்க எங்க இருக்குதுனு கொஞ்சம் பாத்து தேடி எடுத்து வை ரேவதி, சரியா. ப்ளீஸ்?” தம்ளரில் எஞ்சியிருந்த இளநீரைக் குடித்துவிட்டு கூடத்துக்கு வந்தேன். ”சாய்ங்காலம் ஒதியஞ்சாலை மைதானத்துல இந்திரா காந்தி மீட்டிங் பேசறாங்க. அழச்சிட்டு போய் அவுங்கள காட்டறன்னு சுனிதாகிட்டயும் அனிதாகிட்டயும் சொல்லியிருந்தன். இப்ப இருக்கற நெலையில அவுட்டோர் கெளம்பிட்டா வீட்டுக்கு எப்ப திரும்பி வருவேன்னு எனக்கே தெரியாது. பசங்களுக்கு பக்குவமா எடுத்துச் சொல்லு”

வேகமாக படியிறங்கி வெளியே வரும்போது இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய வெள்ளரிப்பழங்களோடு டிரைவர் கேசவன் வந்துகொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் தங்கப்பல் தெரிய வாய்கொள்ளாத சிரிப்போடு “பழம் மூனு ரூபா சார். உரிச்சி சக்கர போட்டு ஊறவச்சி சாப்ட்டா அருமயா இருக்கும் சார்” என்றான். அவன் சொற்கள் எதுவுமே என் மனசுக்குள் இறங்கவே இல்லை. “கேசவன், நம்ம ரூட்ல கேபிள் ஃபால்ட். வெளிய கெளம்பணும். நம்ம டீம் பசங்களுக்கும் தகவல சொல்லி சீக்கிரமா வரச் சொல்லுங்க” என்றேன். ‘நான் இன்னும் சாப்படல சார்” என்றான் அவன். “சரி, சீக்கிரமா சாப்டுட்டு வாங்க”

வாசலிலேயே நின்றிருந்தான் மாணிக்கம். “நான் ஒன்னுமே செய்யல சார். இப்பிடி ஸ்டூல்ல ஓரமா ஒக்காந்துட்டிருந்தன். திடீர்னு ஃபயர் எஞ்சின் மாதிரி மணியடிக்க ஆரம்பிச்சிட்டுது” அவன் பேனல் அலாரம் பெட்டியின் திசையில் கைகாட்டினான்.

“அலாரம் வந்தா எப்பிடி நிறுத்தணும்னு ஒனக்கு மேடம் சொல்லித் தரலியா?”

“இல்ல சார்”

“சரி, பயப்படாத. இங்க வா. லேடர்ல ஏறி, இங்க இருக்குது பாரு ஸ்விட்ச். அத நிறுத்தணும்” என்றபடி செய்து காட்டினேன். அலாரம் நின்றுவிட்டது. அவன் கண்கள் அமைதி கொண்டு குளிர்வதைப் பார்த்தேன். விளக்கு மட்டும் எரிந்தது. எட்டடி உயரத்தில் அலமாரிபோன்ற தோற்றம் கொண்ட இணைப்புத்தொகுப்புச் சட்டகத்தில் செந்நிற மாதுளைமுத்துகள் போன்ற வட்டவிளக்குகள் வரிசையாக ஒளிர்ந்தன. எங்கோ இணைப்பு அறுந்துபோனதன் அடையாளம்.

“நீ ஒருதரம் செஞ்சிப் பாக்கறியா?”

“ஐயையோ, வேணாம் சார்.”

“ஷாக் எதுவும் அடிக்காது, இங்க வா.”

திரிவேணி ஸ்டேஷனுக்குள் வரும்போதே என்னைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள். வேகமாக அருகில் வந்து “சாரி சார், ஃபால்டா?” என்றாள். நான் பதில் சொல்லாமல் தலையசைத்தேன். “இந்த மாச ஆர்.டி.ய இன்னும் கட்டாம வச்சிருந்தன். தேதி இருவத்தொன்னு ஆய்டுச்சேனு கட்டிட்டு வர போயிருந்தன்”. அப்போது சஞ்சனாவும் அமைதியாக வந்து குடையை சுருக்கி மேசை ஓரமாக வைத்துவிட்டு நின்றாள்.

“பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் அவுட். திரிவேணி, மொதல்ல லாக் புக்ல என்ட்ரி போடுங்க. சஞ்சனா, நீங்க ஆசிலேட்டர ரெடி பண்ணுங்க. ஒரு ஃபிரிக்வன்சி டெஸ்ட் எடுத்துரலாம்.”

நான் சட்டகத்துக்கு அருகில் சென்று ஆர்டர் ஒயர் வழியாக விழுப்புரத்தை அழைத்தேன். “குட் ஆஃப்டர்நூன், பாண்டிச்சேரி காலிங். விழுப்புரம்” என்று மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தேன். சட்டென ஒயர் உயிர்பெற்று “குட் ஆஃப்டர்நூன். விழுப்புரம் ப்ளீஸ்” என்று பதில் வந்தது.

“சந்திரசேகர். எப்பிடி இருக்கிங்க?”

“நல்லா இருக்கேன் ஜே.இ.சார். பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் அவுட். அலாரம் வருது சார்.”

“அதத்தான் பாத்துட்டிருக்கேன். எந்த செக்‌ஷன்ல ஃபால்ட்டுனு தெரிலை. கொஞ்சம் ஃப்ரிக்வன்சி டெஸ்ட் எடுத்து பாத்துட்டு சொல்றீங்களா? லயன்லயே இருக்கட்டுமா, கூப்பிடறீங்களா?

“நீங்க வச்சிருங்க சார். பாத்துட்டு நானே கூப்புடறேன்.”

பாண்டிசேரி விழுப்புரம் கேபிள் பாதையின் நீளம் நாற்பத்திரண்டு கிலோமீட்டர். ஒரு வசதிக்காக பத்து செக்‌ஷன்களாக பிரித்திருந்தோம். நாலு கிலோமீட்டர் ஒரு செக்‌ஷன். ஒவ்வொரு செக்‌ஷனையும் ஒரு ரிப்பீட்டர் இணைக்கிறது. அலைக்கற்றையின் திறனை அதிகரிக்கும் எந்திரமும் ஒரு க்ரிஸ்டலும் ரிப்பீட்டரில் உள்ளன. ஒவ்வொரு க்ரிஸ்டலும் ஒரு குறிப்பிட்ட ஃப்ரிக்வன்சியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அதற்குரிய ஃப்ரிக்வனிசியை மட்டுமே அது ஏற்று பிரதிபலிக்கும். பிரதான முனையிலிருந்து க்றிஸ்டலை நோக்கி அனுப்பப்பெறும் ஃப்ரிக்வன்சி, க்றிஸ்டலால் பிரதிபலிக்கப்பட்டு திரும்பவும் பிரதான முனைக்கே கிடைத்துவிட்டால் அந்த செக்‌ஷன் சரியாக இருக்கிறது என்பது பொருள். கிடைக்கவில்லை என்றால் அந்த செக்‌ஷனில் பிரச்சினை. ஃபால்ட்டை தோராயமாக ஓர் எல்லைக்குள் மட்டுமே தேடுவதற்கு இது ஒரு வழி.

சஞ்சனாவும் திரிவேணியும் ஃப்ரிக்வன்சி டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

“சார், நாலாவது செக்‌ஷன் வரைக்கும் சிக்னல் க்ளீனா வருது. அதுக்கப்பறம் இல்லை”

பதினாறாவது கிலோமீட்டரிலிருந்து தொடங்கும் ஊர்களை நான் மனக்கண்ணில் வரிசைப்படுத்திப் பார்த்தேன்.

“ஜே.இ.சார்” சந்திரசேகரின் குரல் ஆர்டர் ஒயரில் ஒலித்தது. “சொல்லுங்க சந்திரசேகர். நான் லயன்லதான் இருக்கேன்”

”சார், பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, அஞ்சு வரைக்கும் ஓகே சார். அதுக்கப்பறம் கெடைக்கலை.”

“சரி, சந்திரசேகர். அங்கயே இருங்க. ஃபால்ட் நாலுக்கும் அஞ்சிக்கும் நடுவுலதான். தேவைப்பட்டா கூப்படறேன். இதோ, நாங்க கெளம்பிட்டம்.”

“திரிவேணி. டெஸ்ட் டீடெய்ல்ஸ் எல்லாத்தயுமே என்ட்ரி போட்டுடுங்க.”

“சார். எல்லாமே பெங்களூரு, மெட்ராஸ், பாம்பே சர்க்யூட்ஸ் சார். ஹெவி ட்ராஃபிக் ரூட்.” அவள் குரலில் நடுக்கம் இருந்தது. “அதுக்கு நாம என்ன செய்யமுடியும் திரிவேணி? கேபிள் ஃபால்ட்ங்கறது ஒரு ஆக்சிடென்ட். ஆக்சிடென்ட்டே இல்லாம வண்டி ஓட்டணும்னுதான் எல்லாருக்குமே ஆசை. ஆனாலும் நம்ம கவனத்த மீறி ஒரு சில சந்தர்ப்பங்கள்ல ஆக்சிடென்ட் நடந்துடுது இல்லையா? என்ன செய்யமுடியும் சொல்லு. சரிபண்ணிட்டு மறுபடியும் வண்டிய ஓட்டவேண்டிதுதான்”

“சார். ஆர்.டி. கட்டிட்டு உடனே திரும்பி வந்துடலாம்னுதான் பேங்க்குக்கு போனன். ஏகப்பட்ட கூட்டம். இப்பிடி ஆகும்னு நான் நெனச்சிகூட பார்க்கலை சார்.” அவள் கண்கள் தளும்பின. குரல் நடுங்கியது.

“ஒங்களால எதுவும் நடக்கலை திரிவேணி. ரிலாக்ஸ். ரிலாக்ஸ். மாணிக்கம். மேடத்துக்கு ஒரு க்ளாஸ் தண்ணி கொண்டாந்து குடு”

தகவல் சொல்வதற்காக நான் ஏ.இ.யை அழைத்தேன். அவர் டி.இ.ஆபீஸ் போயிருப்பதாக சொன்னார்கள். நான் உடனே டி.இ.ஆபீஸ் நெம்பரை அழைத்து ஏ.இ.யை இணைக்கும்படி சொன்னேன். இரண்டு மூன்று நொடிகளிலேயே அவர் இணைப்புக்கு வந்துவிட்டார். “என்னங்க தயாளன், நான் லோகநாதன் பேசறன். சொல்லுங்க” என்றார். ஃபால்ட் விஷயத்தை நான் சுருக்கமாக சொல்லிமுடித்தேன்.

“ஐயையோ, எட்டு க்ரூப்க்கு மேல அதுல ட்ராஃபிக் இருக்குதே தயாளன். என்ன செய்யறது? ஃபால்ட் எடுக்க எத்தன நாள் புடிக்குமோ தெரியலையே?” அவர் பதற்றம் கொள்ளத் தொடங்கினார்.

“மண்ணாடிப்பட்டு, முண்டியம்பாக்கம் வழியா விழுப்புரத்துக்கு இன்னொரு மாத்து ரூட் இருக்குது சார். இந்த கேபிள்ல இருக்கற ட்ராஃபிக் எல்லாத்தயும் அதுல மாத்திடலாம். அஞ்சி நிமிஷத்துல இண்டோர க்ளியர் செஞ்சிடலாம். எல்லா ட்ராஃபிக்கும் ரிஸ்டோராய்டும். ஒங்க பர்மிஷன் வேணும்.”

“வேற வழி இல்ல தயாளன். நான் பர்மிஷன் குடுத்துட்டன்னு நெனச்சிக்குங்க. திரிவேணி இருந்தா குடுங்க. நான் சொல்றன். நீங்க ஃபால்ட் என்னனு போயி பாத்துட்டு வந்து ரிப்போர்ட் பண்ணுங்க. தேவைப்பட்டா நானும் நாளைக்கி வரன்…”

“சார், இன்னொரு ஆயிரம் ரூபா தேவைப்படும். இப்பவே டி.இ. ஆபீஸ்ல அப்ளை பண்ணி வச்சிடுங்க. தற்சமயத்துக்கு சொந்த பணத்த போட்டு செலவு செய்றன். நீங்க அப்பறமா குடுங்க”

“போன அக்கெளன்டயே இன்னும் நீங்க எழுதிக் குடுக்கல தயாளன்.”

“இப்பதான் எழுத உகாந்தன். அதுக்குள்ள புதுசா இந்த ஃபால்ட் வந்துட்டுது. நான் என்ன செய்யறது சார்?”

“சரி சரி, பணம்தான? எடுத்து வைக்கறன். நீங்க திரிவேணிகிட்ட ஃபோன குடுங்க.”

நான் திரிவேணியிடம் தொலைபேசியைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

கேசவனும் மஜ்தூர்களும் வேனுக்கு அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அருகில் நெருங்கியதும் அவர்கள் உரையாடல் நின்றது. மஜ்தூர்களைப் பார்த்து ”எல்லாரும் சாப்டிங்களாடா?” என்றேன். அவர்கள் தலையைசைத்தார்கள். “வண்டில சாமான்ங்க எல்லாம் இருக்குதா பாத்துட்டிங்களா? அங்க போனப்பறமா அது இல்ல சார் இது இல்ல சார்னு தலய சொறியக்கூடாது” என்றேன். “எல்லாத்தயும் எடுத்து வச்சிட்டேன் சார்” என்றான் சண்முகம். நான் அவனிடம் “சரி, நீ போய் குப்புசாமி ஜாய்ண்டரையும் வரச்சொல்லு. க்வார்ட்டர்ஸ்லதான தூங்கறாரு. அவரயும் சேத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றேன்.

கூடத்தில் ஒரு செய்தித்தாளில் கோதுமையைக் கொட்டி உலரவைத்துக்கொண்டிருந்தாள் ரேவதி. என்னைப் பார்த்ததுமே “என்ன, ஒங்க கேபிளுக்கு அடி பலமா? பொழைக்குமா பொழைக்காதா?” என்று சிரித்தாள். “ஒனக்கென்னம்மா, நீ இதுவும் சொல்வ. இதுக்கு மேலயும் சொல்வ. என் பொழப்பு அப்பிடி” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றேன். என் மேசை மீது காலையில் தேடிக்கொண்டிருந்த பில்கள் பென்சில் பாக்ஸ்க்கு கீழே வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ”எங்க இருந்தது பில்ங்க? அவ்ளோ நேரம் தேடனன். என் கைக்கு கெடைக்கவே இல்ல. உன் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சிட்டுதே. ஒனக்கு நல்ல கைராசி” என்றபடி ரேவதியைப் பார்த்தேன். “கைராசி உள்ள கைக்கு ரெண்டு தங்க வளையல் வாங்கியாந்து போட்டுட்டு அந்த வார்த்தய சொல்லணும்” என்று சிரித்தாள் ரேவதி. “ரெண்டு என்ன, போனஸ் வரட்டும், நாலாவே போட்டுடலாம்” என்றேன் நான். “டெலிபோன் டைரக்டரிக்குள்ளேருந்து எடுத்தன். அதுக்குள்ள ஏன் வச்சிங்கன்னுதான் தெரியலை” என்றாள் ரேவதி.

சமையலறையிலிருந்து ஒரு தட்டில் சோறும் தயிரும் எடுத்து வந்து கொடுத்தாள். நான் வேகமாக சாப்பிட்டு முடித்து எழுந்தேன். ஒரு பைக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து “இத வச்சிக்குங்க. கண்ட எடத்துல தண்ணி குடிச்சிட்டு வந்து ராத்திரி பூரா கக்குமுக்குனு இருமாதீங்க” என்று கொடுத்தாள்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் குப்புசாமி ஜாய்ண்டர் “எந்த செக்‌ஷன் சார்?” என்று கேட்டான். “அஞ்சாவது செக்‌ஷன்” என்று சொன்னேன் நான்.

“மதகடிப்பட்டா?” என்று கேட்கும்போதே அவன் முகம் பிரகாசமுற்றது. மதுக்கடைகளுக்கு பிரபலமானது அந்த வட்டாரம்.

“வேல முடியறவரைக்கும் மாமா கட மச்சான் கடன்னு எங்கயும் போவக்கூடாது குப்புசாமி” நான் கண்டிப்புடன் அவரைப் பார்த்துச் சொன்னேன். அவன் வேகமாக தலையசைத்தான். “சார், இப்ப எந்த பாட்டலயும் தொடறதில்ல சார். என் பொண்டாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. குடிச்சிட்டு போனா சோறு கெடைக்காது சார். நான் அவளுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன்” என்றான். ”அது சரி, சத்தியம் செய்யறது ஒனக்கு சக்கரபொங்கல் சாப்புடறமாதிரிதான” என்றேன். மெதுவாக பேச்சை மாற்றும் விதமாக அவனே “லெட் ஸ்டிக் எடுத்துக்கலயா சார்?” என்று கேட்டான். “இப்பவே எதுக்கு குப்புசாமி? மொதல்ல ஃபால்ட் எங்கன்னு கண்டுபுடிப்பம்” என்றேன் நான்.

”ஒரு ஜாய்ண்ட்டுக்கு அஞ்சி ஸ்டிக் சார். மறந்துடாதீங்க.”

”நீ மூனுலயே முடிக்கற ஆளுதான, எதுக்கு அஞ்சி?”

“அது என் கெப்பாசிட்டி சார். என் உழைப்பு. ஆனா ஆபீஸ் கணக்குக்கு அஞ்சி. அத எம்.ஜி.ஆரே வந்து சொன்னாகூட மாத்திக்க மாட்டன். நீங்க வேணும்ன்னா பழய ரெக்கார்ட பாருங்க. நம்ம அன்புக்கனி ஜேஇ சார் இருந்த போது கூட அஞ்சிதான் குடுப்பாரு. நம்ம பசங்ககிட்ட வேணும்ன்னா கேட்டு பாருங்க.”

”சரி சரி. மொதல்ல ஃபால்ட்ட கண்டுபிடிப்பம். வா”

ஸ்டேஷனைவிட்டு எங்கள் வண்டி புறப்பட்டது. சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியே வரும்போது ஏ.இ. வண்டி வந்து நின்றது. நான் இறங்கிச் சென்று விவரங்களைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன். வண்டி புறப்பட்டது.

“பூமிக்கு கீழ மூணு நாலடி ஆழத்துல இருக்கற கேபிள் எப்பிடி அடிவாங்கும்?”

“நிச்சயமா இது யாரோ ஒரு குடிகாரன் செஞ்ச வேலதான்.”

“அது எப்பிடி அவ்வளவு தீர்மானமா சொல்ற?”

“குடிபோதையில இருக்கறவன் என்ன வேணுமானாலும் செய்வான் சார். கேபிள நோவாம எடுத்து அழகா ஓட்டய போட்டு மறுபடியும் குழியில போட்டு மூடியிருப்பானுங்க சார்.”

“அப்பிடி ஒரு அற்ப சந்தோஷத்துக்கு மனுஷன் ஆசப்படுவானா?”

“சார், குடிச்சதும் ரத்தத்துல ஒரு கிர் ஏறும் சார். மனுஷன் குடிக்கறதே அந்த கிர்ருக்காக. அந்த கிர் வண்டுமாதிரி தலய கொடயும். அது ஒரு சுகம். அந்த நேரத்துல அவன் எத வேணும்னாலும் செய்வான். குடிக்காத ஒருத்தனால பூமியில இத புரிஞ்சிக்கவே முடியாது.”

மஜ்தூர்களும் ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.

”அந்த கலால் செக்போஸ்ட்டுக்கு பக்கத்துல நெறய வண்டிங்கள ஓரம் கட்டி அடிக்கடி செக் பண்றதுண்டு சார். ஹெவி வண்டிங்க எதுவாச்சிம் நம்ம கேபிள் குழிக்கு மேல நின்னு, அந்த அழுத்தத்துல கேபிள் வெடிச்சிருக்கலாம்னு தோணுது.”

“நம்ம கேபிள் குழி மொத்தமும் பல எடங்கள்ல மண்ணு இல்லாம உள்ள வாங்கியிருக்குது சார். யாராச்சிம் கடப்பாறையால குத்தியிருக்கலாம்.”

“பன்னி புடிக்கறவங்க இப்படிதான் பள்ளத்துல பன்னிய ஓடவிட்டு வசமா ஒரு எடத்த பாத்து வேல்கம்பால குத்தி சாவடிப்பாங்க. ஏதாவது ஒரு கம்பு பன்னிக்கு பதிலா கேபிள குத்தியிருக்கலாம்”

நாலாவது ரிப்பீட்டரில் வண்டி நின்றது. அருகில் இருந்த தேநீர்க்கடையில் எல்லோரும் முதலில் தேநீர் அருந்தினோம். குப்புசாமியையும் இரண்டு மஜ்தூர்களையும் அங்கிருந்து கேபிள் பாதையைச் சோதித்தபடியே நடந்து வருமாறு சொல்லிவிட்டு ஐந்தாவது ரிப்பீட்டரை நோக்கிச் சென்றோம். அங்கு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நானும் இரண்டு மஜ்தூர்களும் நாலாவது ரிப்பீட்டரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

பாதையிலிருந்து வெகுதொலைவில் ஓரமாக பள்ளமெடுத்து கேபிள் போட்டிருந்தார்கள். சரிந்தும் ஒடுங்கியும் பள்ளம் உள்வாங்கியிருந்தது. குறைந்தபட்சமாக பத்து பதினைந்து லாரி லோட் மண் வேண்டும். அதை வாங்கி நிரப்ப பணம் வேண்டும் என பல முறை குறிப்பெழுதி அனுப்பிவைத்தும் ஒரு பைசா கூட மேலிடத்திலிருந்து வரவில்லை. பல இடங்களில் கன்னங்கரேலென தார் பூசப்பட்ட கேபிள் கரும்புத்துண்டுபோலத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடலே நடுங்கிவிட்டது.

பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு கேபிள் பற்றி பாடமெடுத்த ஒரு டெக்னீஷியன் “ஒரு நல்ல கேபிள் ரூட்ங்கறது யார் பார்வையிலும் படாத படிதாண்டாப் பத்தினி மாதிரி இருக்கணும்” என்று நகைச்சுவையோடு சொன்ன சொற்கள் நினைவில் எழுந்தன. யாரோ ஒருவன் அப்போது “பார்வையில படறமாதிரி இருந்தா என்ன ஆவும் சார்?” என்று வேண்டுமென்றே ஒரு கேள்வியெழுப்ப, அந்த டெக்னீஷியன் “வாடியம்மா வாடின்னு யாராச்சிம் ஒருத்தன் கைய புடிச்சி இழுத்தும் போயிட்டே இருப்பான்” என்றார். வகுப்பே அதைக் கேட்டு சிரிப்பில் மூழ்கியது.

“என்னடா இது? வாய்க்கா மாதிரி இருக்குது கேபிள் ரூட்.”

“இதுக்குள்ள காப்பர் இருக்குதுனு தெரிஞ்சவன் யாராவது இந்த ஊருக்குள்ள இருந்தான்னு வைங்க சார், இந்நேரத்துக்கு வெட்டி உருவி எடுத்தும் போயிருப்பானுங்க…”

அதைக் கேட்கும்போதே எனக்கு நெஞ்சை அடைத்தது.

“வேணும்னா, நீயே ஊருக்குள்ள போயி தண்டோரா போட்டு சொல்லிட்டு வாயேன்.”

“கோச்சிக்காதிங்க சார். சும்மா வெளயாட்டுக்கு சொன்னன்”

ஒரு பள்ளத்துக்கு மேல் அருகிலிருந்த உணவு விடுதியின் எச்சிலைகளும் காய்கறிக்கழிவுகளும் குப்பைமலைபோல குவிந்திருந்தன.

“நம்ம கேபிளுக்கு ரொம்ப சேஃப்ட்டி”

மூக்கை மூடிக்கொண்டு ஒதுங்கி நடந்தோம்.

அரசமரத்தடியில் ஒதுங்கியிருந்த ஆறேழு பாறைகள் மீது அமர்ந்தபடி காலாட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர். எங்களைப் பார்த்ததும் “என்ன சார், சர்வேயா?” என்று கேட்டார்கள். “ரோடு அகலப்படுத்தப் போறீங்களா? மொதல்ல இருக்கற ரோட்ட ஒழுங்கா மெய்ன்டெய்ன் பண்ணுங்க சார். நீங்களே பாருங்க. எவ்ளோ குண்டும் குழியுமா கெடக்குது”

நான் அதை மறுத்தபடி மெதுவாக “நாங்க டெலிபோன்ஸ். பிஅன்ட்டி” என்றேன். “அப்படியா சரிசரி” என்றார் ஒருவர். உடனே இன்னொருவர் எழுந்து நின்று “நம்ம கவுண்டர் ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு அப்ளிகேஷன் போட்டு ரெண்டு வருஷமாச்சி தம்பி. ஒன்னும் வரமாட்டுது. நீங்க பாத்து ஏதாச்சிம் செஞ்சா ஊருக்கு நல்லது” என்றார் இன்னொருவர். “நாங்க வேற ஆபீஸ். ஆனாலும் நீங்க சொன்னத அந்த ஆபீஸ்ல தெரியப்படுத்தறேன்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

இன்னொரு அரசமரத்தடிக்கு முன்னால் நானும் குப்புசாமியும் சந்தித்துக்கொண்டோம். கண்ணுக்குப் புலப்படுகிறமாதிரி கேபிள் பாதையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

“கேபிள்ல எங்கோ லீக் இருக்குது சார்.”

“அத எப்படி உறுதியா சொல்ற?”

“எரநூறு மீட்டர் கேப்ல ஒரு நாலு எடத்துல வால்வ் வச்சிட்டு கேஸ விட்டம்னா லீக்க கண்டுபுடிச்சிடலாம்.”

என் தலை குழம்பியது. எதுவும் பதில் சொல்லாமல் குப்புசாமியின் முகத்தையே பார்த்தேன் நான்.

“நம்ம அன்புக்கனி ஜேஇ சார் அப்பிடித்தான் செய்வாரு சார். நான் அவர் கூடவே இருந்திருக்கன் சார்”

பனைவரிசைக்கு அப்பால் எங்கோ சூரியன் மறைந்துகொண்டிருந்தது. நாவறட்சி தாங்கமுடியவில்லை. பையிலிருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரைப் பருகினேன். எல்லோரும் வண்டியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

யாரோ வெட்டியிருப்பார்கள். அல்லது துண்டாக்கி இழுத்துப் போட்டிருப்பார்கள். என் அனுபவத்தில் அந்த மாதிரி பழுதுகளை மட்டுமே சரிபார்த்து இணைத்திருக்கிறேன். இதே பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் பாதையில் ஒருமுறை யாரோ சிலர் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் மீதிருந்த சிமெண்ட் கட்டையை உடைத்து கேபிளை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார்கள். அத்துண்டுகளை கச்சிதமாக இணைத்து ஒரே நாளில் சீரமைத்த அனுபவம் உண்டு. ஆனால் இந்த மாதிரியான பழுது எனக்கு முதல் அனுபவம்.

ரம்பா ஒயின்ஷாப் அருகிலிருந்த தர்மலிங்க உடையாரின் தேநீர்க்கடைக்குச் சென்று வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு வேனில் ஏறி ஸ்டேஷனுக்கு வரும்போது மணி எட்டாகிவிட்டது. “குப்புசாமி, நீங்க சொல்றமாதிரியே நாளைக்கு செஞ்சி பாக்கலாம். எப்படியாவது ஃபால்ட்ட எடுக்கணும். சிலிண்டர், வால்வ் என்னென்ன வேணுமோ எல்லாத்தயும் எடுத்துக்குங்க” என்றேன்.

நாலடி தொலைவு நடந்துவிட்டவரை நிறுத்தி “அன்புக்கனி ஜே.இ.ய வரவழைக்கலாம்ன்னு தோணுதா?” என்று மெதுவாகக் கேட்டேன். ”நாளைக்கு ஒருநாள் போவட்டும் சார். முடியலைன்னா அதுக்கப்பறமா கூப்புடலாம்” என்றார் குப்புசாமி. “கண்டுபிடிக்க முடியாதவங்கன்னு நம்ம மேல பழி வந்துடக்கூடாது குப்புசாமி. அத நெனச்சாதான் கொஞ்சம் டென்ஷனா இருக்குது” என்றேன். “சார், நீங்க கவலைப்படாம போங்க. நம்மால முடியும் நம்மால முடியும்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டிருங்க. கண்டிப்பா முடியும்” என்று அவர் சொன்ன சொற்கள் எனக்கு ஓரளவு தைரியத்தை அளித்தன. “சரி, ஏ.இ.க்கும் ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துர்ரேன்” என்று குப்புசாமியை அனுப்பிவைத்துவிட்டு, ஏ.இ. க்வார்ட்டர்ஸ்க்குச் சென்றேன். அவர் வாசலில் ஈச்சர் போட்டு உட்கார்ந்துகொண்டு மனைவிக்கு பிரபந்தம் படித்து பொருள் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஃபால்ட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் விஷயம் அவருக்கும் சோர்வையளித்தது. நாளைய திட்டங்களையும் அவருக்கு விளக்கினேன். பேச்சோடு பேச்சாக அன்புக்கனி ஜே.இ. பற்றியும் சொன்னேன். “நல்ல அருமையான வேலைக்காரன் அவன். இங்கதான் மொதல்ல இருந்தான். இப்ப கடலூர்ல இருக்கான். வேணும்ன்னா நானே அவுங்க ஏ.இ.கிட்ட பேசறன்” என்றார். எனக்கு அவர் அப்படிச் சொன்னது ரொம்ப ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலை பத்துமணிக்கு மதகடிப்பட்டுக்குச் சென்றுவிட்டோம். இரண்டு ரிப்பீட்டருக்கும் இடைப்பட்ட தொலைவில் கேபிள் பாதையில் நான்கு இடங்களில் ஒரு ஆள் இறங்கி வேலை செய்கிற அளவுக்கு அகலமான பள்ளம் தோண்டப்பட்டது. தேரிழுக்கும் வடக்கயிறுபோல உள்ளே கேபிள் முறுக்கிக்கொண்டிருந்தது. குப்புசாமி பள்ளத்தில் இறங்கி கேபிள் மேல்கவசங்களை நீக்கிவிட்டு ஊசியால் ஒரு துளையிட்டு அதில் சைக்கிள் டியூப் வால்வைப் பொருத்தினார். நான்கு இடங்களிலும் அதைச் செய்து முடிக்கவே மதியமாகிவிட்டது. அவசரமாக அருகிலிருந்த ஒரு கடையில் சாப்பிட்ட பிறகு ரிப்பீட்டர் முனையில் ஆக்சிஜன் உருளையை இணைத்து கேபிள் வழிக்குள் காற்று செல்வதற்கு வழி செய்தார் குப்புசாமி. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் காற்று கேபிளுக்குள் பாய்ந்து சென்றது. பிறகு உருளையை விலக்கிவிட்டு ரிப்பீட்டர் முனைகள் உட்பட ஆறு இடங்களிலும் காற்றின் அழுத்தத்தை அளந்து சொன்னார். நான் அந்த அளவுகளைக் குறித்துக்கொண்டேன்.

“இத வச்சிகிட்டு ஒரு க்ராஃப் போடுங்க சார். கேபிள்ல எங்க ஓட்டைன்னு அத வச்சி கண்டுபுடிச்சிடலாம் ”

நான் குப்புசாமியின் முகத்தையே பார்த்தேன். அவர் தொடர்ந்து “நம்ம அன்புக்கனி சார் அப்பிடித்தான் கண்டுபிடிப்பார். இந்த வட்டாரத்துலயே கேபிள் லீக் கண்டுபிடிக்கறதுல வில்லாதிவில்லன் அவரு” என்றார்.

குறித்துவைத்த அளவுகளை ஒருமுறை பார்த்தேன். கிட்டத்தட்ட எல்லாமே சமமாகவே இருந்தன. க்ராஃப் போட்டால் அது ஒரு கோடு போலத்தான் வருமே தவிர ஓட்டை இருக்கும் இடத்தைக் காட்டாது என்று தோன்றியது. எனக்கு தலை சுற்றியது. பள்ளங்களை மூடிவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டோம். அதற்குள் எங்கள் கேபிள் பாதை பழுதான கதை தில்லி வரைக்கும் தெரிந்துவிட்டது. ஏகப்பட்ட கேள்விகள். விசாரணைகள்.

மறுநாள் ஏ.இ., டி.இ. இருவருமே எங்களோடு வந்துவிட்டார்கள். முதல்நாள் போலவே பள்ளங்களைத் திறந்து காற்றைச் செலுத்திவிட்டு இரண்டு மணி நேரம் காத்திருந்து அழுத்த அளவுகளைக் குறித்துக்கொண்டேன். மாற்றமே இல்லை. எல்லா அளவுகளும் நேற்று போலவே இருந்தன.

ஏ.இ., டி.இ. இருவருடைய முகங்களும் இருண்டுவிட்டன. “ரிட்டயர்மென்டுக்கு எனக்கு இன்னும் பத்து மாசம்தான் இருக்குது. இந்த நேரத்துல எனக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று தலையில் அடித்துக்கொண்டார் டி.இ. “ஆல் ஆர் இன்கேப்பபள் பீப்பள். இதுக்கா கவுர்மென்ட் நமக்கு சம்பளம் குடுக்குது?” என்று எல்லோர் மீதும் எரிந்து விழுந்தார். இறுதியாக “லோகநாதன், வேற வழியில்ல. அந்த அன்புக்கனி ஜே.இ. நாளைக்கே இங்க வரதுக்கு ஏற்பாடு செய்யுங்க. இப்பிடியே இழுத்தும் போனா நமக்குத்தான் அசிங்கம்” என்று சொல்லிவிட்டு தன் வண்டியில் புறப்பட்டுச் சென்றார் டி.இ.

ஸ்டேஷனுக்குத் திரும்பியதுமே “வாங்க தயாளன். இப்பவே பேசி அன்புக்கனிய அரேஞ்ச் பண்ணிடலாம்” என்று தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். நானும் கூடவே சென்று அவருடைய அறையில் அமர்ந்தேன். அவர் எஸ்.டி.டி.யில் கடலூர் ஏ.இ.யை அழைத்தார். கேபிள் பழுதைப்பற்றி சுருக்கமாகத் தெரிவித்தார். அன்புக்கனியை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒருகணம் மறுமுனையில் அமைதி நிலவியது. பிறகு “சார், அவருக்கு ஒரு பெர்சனல் ப்ராப்ளெம். மெடிக்கல் லீவ்ல இருக்காரு” என்று நிதானமாகச் சொல்வது காதில் விழுந்தது.

ஏ.இ. திகைப்புடன் என்னைப் பார்த்தார். நான் தொலைபேசியை வாங்கி “ஊர்ல இருக்காரில்லயா சார்?” என்று கேட்டேன். “ஆமாமாம். க்வார்ட்டர்ஸ்லதான் இருக்காரு” என்றார் அவர். பேச்சு அத்துடன் முடிந்தது.

குழப்பத்தில் எங்களுக்கு தலையில் இடி இறங்கியதுபோல இருந்தது. ஏ.இ.யின் தலை தளர்ந்து தொங்கிவிட்டது. என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை. பிறகு ஏதோ ஒரு வேகத்தில் ”சார், நீங்க கவலப்படாம போங்க. நானே நாளைக்கு நேரா போயி அன்புக்கனி ஜே.இ.ய அழச்சிட்டு வரன். எனக்கு வண்டி மட்டும் குடுங்க” என்றேன். “உங்களால முடியுமா? மெடிக்கல் லீவ்னு சொல்றாரே. என்ன கண்டிஷன்னு தெரியலையே” என்று இழுத்தார். ஒரு வேகத்தில் “சார், அதயெல்லாம் நான் பாத்துக்கறேன். அன்புக்கனிய அழச்சிட்டு வரவேண்டியது என் பொறுப்பு” என்றேன். “சரி, போய்வாங்க தயாளன். நமக்கு ஃபால்ட் சரியாவணும். அதுதான் முக்கியம். நான் இப்பவே டிரைவர்க்கு சொல்லிவைக்கறேன்” என்று ஃபோனை எடுத்தார்.

மறுநாள் பத்து மணிக்கு பாண்டிச்சேரியிலிருந்து புறப்பட்டு பதினோரு மணிக்கெல்லாம் கடலூருக்குச் சென்றுவிட்டேன். முதலில் ஸ்டேஷனுக்குத்தான் சென்றேன். இரவில் தொலைபேசியில் பேசிய ஏ.இ.யைப் பார்த்தேன். அவர் மறுபடியும் மெடிக்கல் லீவ் என்று ஆரம்பித்தார். “இருக்கட்டும் சார். நான் ஒன்னும் அவர டிஸ்டர்ப் பண்ணமாட்டன். ஒரு சந்தேகம். அத கேக்கணும். அவ்ளோதான். அவர் க்வார்ட்டர்ஸ் நெம்பர் சொல்லுங்க” என்றேன்.

அவர் தயக்கத்துடன் “இங்க வாங்க தயாளன்” என்று என்னை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்துவந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு “இது ஃபோன்ல சொல்ற விஷயமில்ல. நம்ப அன்புக்கனிக்கு மூனு புள்ளைங்க. ரெண்டு ஆண். ஒரு பொண்ணு. தெரியுமில்லயா?” என்று சம்பந்தமில்லாமல் எதையோ அவர் சொல்லத் தொடங்கினார். பிறகு சட்டென அடங்கிய குரலில் “அவரு ஒய்ஃப் போன வாரம் திடீர்னு ஒரு ஜவுளிக்காரனோட கெளம்பிப் போயிடுச்சி தயாளன். அன்புக்கனி அப்பிடியே ஒடஞ்சி போயி ஊட்லயே கோழிமாதிரி சுருண்டு கெடக்கறாரு. ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னே தெரியலை. விஷயத்த கேள்விப்பட்டு அவுங்க பேரண்ட்ஸ்கூட இங்க வந்துட்டாங்க. ஆனா அன்புக்கனிதான் இன்னும் ஒரு நெலைக்கு வரலை….” என்றார். அந்த அதிர்ச்சியை என்னாலும் தாங்கமுடியவில்லை. இருவருமே ஒரு நிமிடம் எதையும் பேசாமல் பக்கத்தில் வெட்டப்பட்டு கிடந்த மரக்கிளையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

“சரி சார். எங்க ஸ்டேஷன்ல வேல செஞ்சவரு அவரு. சீனியர். இவ்ளோ தூரம் வந்துட்டு அவர பாக்காம போக மனசு வரலை. ஒரு நிமிஷம் பாத்து பேசிட்டு கெளம்பிடறேன்”

அந்த ஏ.இ.யிடம் விடைபெற்றுக்கொண்டு க்வார்ட்டர்ஸ் பகுதியில் நடந்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தேன். அழைப்புமணியை அழுத்தியதும் அவரே வந்து கதவைத் திறந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “பாண்டிச்சேரி ஸ்டேஷன்ல உங்கள பத்தி பேசிக்காத நாளே இல்ல சார். ஏ.இ.யில ஆரம்பிச்சி மஜ்தூர் வரைக்கும் உங்கள பத்தி கதகதயா பெருமயா சொல்வாங்க” என்றேன். அன்புக்கனி புன்னகையோடு என் தோளைப் பற்றி அழுத்தினார். தன் அம்மாவிடம் எனக்காக தேநீர் தயாரிக்கும்படி சொன்னார்.

நான் குப்புசாமி ஜாய்ன்டர் சொன்ன விஷயங்களை அவரிடம் சொன்னபோது ”நல்ல வேல தெரிஞ்சவர். எதயும் நறுவிசா செய்யத் தெரிஞ்ச ஆளு. ஆனா லெட் ஸ்டிக் மேல ஒரு பித்து உண்டு அவருக்கு. ஒரு ஜாய்ன்ட்ட்க்கு அஞ்சி ஸ்டிக் கண்டிப்பா குடுக்கணும் அவருக்கு. மூனுல வேலய முடிச்சிட்டு ரெண்ட எடுத்தும்போயி வித்து காசாக்கிடுவாரு. அது ஒன்னுதான் அவருக்கு பலவீனம்” என்று சிரித்தார். “உலகத்துல பலவீனம் இல்லாத மனுஷங்க யாரு இருக்காங்க தயாளன்? ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு பலவீனம்.”

பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் பாதையில் ஏற்பட்ட பிரச்சினையைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி பையிலிருந்த காற்றழுத்தக் குறிப்புகளை அவரிடம் காட்டினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே மடித்துவைத்துக்கொண்டார். “எத்தன மணிக்கு எடுத்த ரீடிங் இது?” என்று கேட்டார். நான் “ஒரு ரீடிங் மத்யானம் மூனு மணிக்கு. இன்னொரு ரீடிங் மத்யானம் நாலு மணிக்கு” என்றேன்.

“ப்ரெஷர் ரீடிங்க எப்பவுமே நடுராத்திரியில எடுக்கணும். இல்லைன்னா அதிகாலை நாலு மணி, அஞ்சு மணிக்குள்ள எடுக்கணும் தயாளன்.”

“குப்புசாமி அதப்பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலை சார்”

தேநீர் வந்தது. அருந்திக்கொண்டே அவரை எப்படி பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்வது என்று மனசுக்குள் திட்டமிடத் தொடங்கினேன். எப்படி பேச்சைத் தொடங்குவது என்பது புரியாமல் தவிப்பாக இருந்தது.

“தயாளன், நான் இப்ப லீவ்லதான் இருக்கேன். ஒன்னும் வேல இல்ல. உங்க கூட வந்து ஃபால்ட்ட க்ளியர் பண்ணி குடுக்கறேன். தைரியமா இருங்க.”

அன்புக்கனி தானாகவே முன்வந்து சொன்ன வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. மகிழ்ச்சியில் என் கண்கள் தளும்பின. “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றபடி அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “மதியம் சாப்ட்டுட்டு கெளம்பலாம்” என்றார். நான் மறுக்கவில்லை.

நான் அங்கிருந்தே லோகநாதன் ஏ.இ.யை அழைத்து நாங்கள் வரும் தகவலைச் சொன்னதால் மாலை நான்கு மணிக்கு அனைவருமே ஸ்டேஷனில் காத்திருந்தார்கள். மாணிக்கம் ஓடி வந்து அவர் காலிலேயே விழுந்துவிட்டான். அன்புக்கனி அவனை எழுப்பி நிறுத்தினார். ”மாணிக்கம் நம்ம புள்ள. நான்தான் இங்க இவன சேர்த்து விட்டன்” என்று என்னைப் பார்த்துச் சொன்னார். ஏ.இ. எல்லோருக்கும் தேநீர் வரவழைத்தார். அவர் அறையிலேயே உட்கார்ந்து அனைவரும் அருந்தினோம்.

அன்புக்கனி அப்போதே மதகடிப்பட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். “காலையில போவலாமே” என்றார் ஏ.இ. “இல்ல இல்ல. இப்பவே போவலாம். எல்லாருக்குமே இன்னைக்கு சிவராத்திரி” என்றார் அன்புக்கனி.

“ரெண்டு எட்டுக்கட்ட டார்ச் லைட் எடுத்துக்குங்க. டெண்ட்டும் தார்ப்பாயும் கூட வேணும். ராத்திரி ரெஸ்ட் எடுக்க உதவும்” என்று மஜ்தூர்களிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார். நானும் குப்புசாமியும் மஜ்தூர்களும் சேர்ந்துகொண்டோம். நகரைத் தாண்டும்போது ஒரு ஸ்டேஷனரி கடையில் வண்டியை நிறுத்தி ஒரு க்ராஃப் நோட்டும் பென்சிலும் வாங்கிக்கொண்டார் அன்புக்கனி.

பள்ளங்களைத் திறந்து தயார் செய்வதற்குள் மணி ஏழாகிவிட்டது. ரிப்பீட்டர் முனையில் ஆகிசிஜன் உருளையை நிறுத்தி சீரான வேகத்தில் காற்று செலுத்தப்பட்டது.

தர்மலிங்க ரெட்டியார் கடையில் எல்லோரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். இரண்டு மஜ்தூர்களை மட்டும் விழித்திருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை ஓய்வெடுக்க அனுப்பினார். அவர்கள் பாதையோரமாக மரத்தடியில் கூடாரமடித்து தார்ப்பாய் விரித்து படுத்துக்கொண்டார்கள். வண்டிக்குள்ளேயே உட்கார்ந்து கேசவனும் குப்புசாமியும் பழைய டிப்பார்ட்மெண்ட் கதைகளைச் சிரிக்கச்சிரிக்கச் சொல்லத் தொடங்கினார்கள்.

“நான் மஜ்தூரா சேர்ந்த புதுசு. நான்தான் அப்ப ஆபீஸ்ல இருந்தன். திடீர்னு போன் மணி அடிச்சிது. எடுத்து அலோனு சொன்னன். ஒங்க ஏஇ இருந்தா குடுப்பான்னு சொன்னாங்க. யார் என்ன கேட்டாலும் ஆபீஸ்ல இல்ல, ரூட்டுக்கு போயிருக்காருனு சொல்லணும்னு இவரு ஏற்கனவே சொல்லி குடுத்திருந்தாரு. நானும் அது மாதிரியே அவர் இல்ல சார்னு சொன்னன். அந்த ஆள் உடறமாதிரியே தெரிலை. எங்க எங்கன்னு கேட்டாப்ல. நான் ரூட் ரூட்னு சொன்னன். அங்கதான் படுத்திட்டிருக்காரு, எனக்குத் தெரிது, நீ இல்லைனு சொல்றயே, இப்ப அங்க வந்தன்னா பாருன்னு மெரட்டனாரு. பயத்துல எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. நீங்க போன்ல தெரியறீங்களாம் சார் எனக்கு பயமா இருக்குது சார்னு இவர பாத்து ஓன்னு அழுதுட்டன். அந்த ஏஇக்கு வந்திச்சி பாரு ஒரு கோவம். அடிஅடின்னு அடிச்சி தொவச்சிட்டாரு..”

மாற்றிமாற்றி கதை கேட்டதில் பொழுது போனதே தெரியவில்லை. பதினோரு மணிக்கு ஒரு மஜ்தூரை மட்டும் அழைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் ரீடிங் எடுத்தோம். இரண்டு மணிக்கு மேல் விழித்திருந்தவர்கள் கூடாரத்துக்கு சென்றுவிட, உறங்கி முடித்தவர்கள் எழுந்து வந்து டார்ச் லைட்களை வாங்கிக்கொண்டார்கள். அன்புக்கனி மூன்று மணிக்கு ஒரு ரீடிங் எடுத்தார். தொடர்ந்து ஐந்து மணிக்கு ஒரு ரீடிங் எடுத்தார்.

பிறகு ஸ்டேஷனுக்குத் திரும்பினோம். ஸ்டேஷனில் இருந்த விருந்தினர் அறையிலேயே தங்கிக்கொள்வதாக அன்புக்கனி சொன்னபோதும், நான் அவரைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் குளிக்கச் சென்றுவிட்டார் அன்புக்கனி. நான் பால் வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன். திரும்புபோது நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிய ஏ.இ.ஐப் பார்த்தேன். இரவு நடந்த வேலைகளைப்பற்றியெல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். இறுதியில் “சொந்த பிரச்சனைய கூட பெரிசா நெனைக்காம நமக்காக வந்திருக்காரு சார். உண்மையிலேயே பெரிய மனுஷன் சார்” என்று சொல்லத் தொடங்கியதுமே எனக்கு குரல் தழுதழுத்தது.

“அது என்ன சொந்தப் பிரச்சினை?” என்று ஏ.இ. கேள்வி கேட்ட போதுதான் நான் செய்த பிழை புரிந்தது. வேறு வழியில்லாமல் நான் அவரிடம் சொல்லவேண்டியிருந்தது. அதைக் கேட்டுவிட்டு அவரும் வருத்தப்பட்டார். “நல்லவங்களுக்குத்தான் தயாளன் இப்படிப்பட்ட சோதனைகள்” என்று பெருமூச்சு விட்டார். பேசிக்கொண்டே நடந்ததில் க்வார்ட்டர்ஸ் வந்ததே தெரியவில்லை.

”பத்து மணிக்கு நானும் வரேன் தயாளன். புறப்படும்போது சொல்லுங்க” என்று விடைபெற்றுக்கொண்டார் ஏ.இ.

வீட்டுக்கு வந்தபோது காற்றழுத்த அளவுகளை வைத்து அன்புக்கனி வரைந்த வரைபடங்கள் மேசை மீது தயாராக இருந்தன. ஒவ்வொரு வரைபடத்தின் அமைப்பும் தரைமீது வைக்கப்பட்ட குழம்புச்சட்டி போல இருந்தது அந்த வரைபடம். மூன்று வரைபடங்கள். மூன்றிலும் கீழ்விளிம்புப் புள்ளி கிட்டத்தட்ட ஒரே நீளத்தைக் குறிப்பதாக இருந்தது.

“ரிப்பீட்டர்லேர்ந்து ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டு மீட்டர்ல ஃபால்ட் இருக்குது தயாளன்.”

அந்தத் துல்லியமான கணக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு பத்து மணிக்கு எல்லோருமே ஸ்டேஷனில் கூடினோம். டி.இ., ஏ.இ. எல்லோருமே வந்துவிட்டார்கள். அன்புக்கனி காட்டிய வரைபடங்களை அனைவரும் நம்பமுடியாதவர்களாக ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஐம்பது மீட்டர் நீளமுள்ள ஒரு கேபிள் காயிலும் வண்டியில் ஏற்றப்பட்டது.

”நெஜமாவே அங்கதான் ஃபால்ட் இருக்குதா?”

“ஆமாம் சார்.”

குப்புசாமி வேகமாக என்னிடம் வந்து “பழைய கேபிள எடுத்துட்டுதான் இந்த புது பீஸ போடணும். அப்ப ரெண்டு ஜாய்ண்ட் கணக்கு. பத்து ஸ்டிக் எடுத்துக்குங்க” என்று ரகசியமாக சொன்னார். நான் ஸ்டோர் டெக்னீஷியனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவரோடு குப்புசாமி சென்று ஸ்டோரிலிருந்து நேரிடயாகவே ஸ்டிக்குகளை வாங்கிக்கொண்டு வந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டார்.

பதினோரு மணிக்கு மதகடிப்பட்டை அடைந்துவிட்டோம். ரிப்பீட்டரில் ஆக்சிஜன் உருளையை இணைத்தோம். பிறகு அங்கிருந்து நீளத்தை அளக்கும் ரோடோமீட்டரை மெதுவாக உருட்டிக்கொண்டே நடந்தான் ஒரு மஜ்தூர். அவனுக்குப் பின்னால் துப்பறியும் கூட்டத்தைப்போல நாங்கள் அனைவரும் படபடக்கும் நெஞ்சுடன் நடந்தோம்.

மீட்டர் ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டு காட்டியதும் மஜ்தூர் நின்று காலால் ஒரு கோடு இழுத்து அடையாளமிட்டான். அந்தப் புள்ளிக்கு அருகில் சென்ற அன்புக்கனி அங்கிருந்து விழுப்புரம் பக்கமாக பத்து தப்படி நடந்து சென்று ஒரு கோடு கிழித்தார். பிறகு மீண்டும் மையப்புள்ளிக்கு வந்து பாண்டிச்சேரி பக்கமாக பத்து தப்படி நடந்து சென்று . ஒரு கோட்டைக் கிழித்தார். நாங்கள் அனைவருமே ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பதுபோல அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இந்த இருபது தப்படிக்குள்ளதான் சார் ஃபால்ட்.” என்று எங்களைப் பார்த்துச் சொன்னார். மஜ்தூர்களைப் பார்த்து “ரெண்டு கோடுங்களுக்கும் நடுவுல தோண்டுங்க” என்றார்.

“நெஜமா ஃபால்ட் இங்கதானா?” டி.இ. பக்கத்திலிருந்த ஏ.இ.யைப் பார்த்துக் கேட்டார். ”ஆமா, நிச்சயமா இங்கதான் சார்” என்று சொல்லிக்கொண்டே டி.இ.ஐ வண்டிக்கு அருகில் அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். கன்னங்கரேலென கரி படிந்த மூங்கில் கழியைப்போல பள்ளத்துக்குள் கேபிள் விளிம்பு தெரிந்தது. மஜ்தூர்கள் பிக் ஆக்ஸை வெளியே வைத்துவிட்டு குனிந்து கையாலேயே மணலை இருபுறமும் தள்ளி கேபிளை தெளிவாகப் பார்க்கும் வகையில் செய்தார்கள்.

ஸ் என்று எழுந்த சீறலைக் கேட்டு ஒரு மஜ்தூர் “சார்” என்று பீதியில் பின்வாங்கி அலறினான். நாங்கள் அனைவரும் அவனுக்கு அருகில் ஓடினோம். எங்கள் சத்தத்தைக் கேட்டு டி.இ.யும் ஏ.இ.யும் மறுகணமே ஓடி வந்தார்கள். மஜ்தூர் சீய்த்துத் தள்ளிய மண்ணுக்கு அடியில் கேபிள் துளை வழியாக காற்று பீய்ச்சியடித்தபடி வெளியேறியது. நான் நிமிர்ந்து சாலையில் ஏற்கனவே போட்டிருந்த கோட்டைப் பார்த்தேன். சரியாக ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டாவது மீட்டர். ஓட்டை வழியாக வெளியேறும் காற்றை ஏதோ ஓர் அற்புதத்தைப் பார்ப்பதுபோல நாங்கள் கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தோம்.

டி.இ. ஓடி வந்து அன்புக்கனியைத் தழுவிக்கொண்டார். ”யூ ஆர் ரியலி க்ரேட், யூ ஆர் ரியலி க்ரேட்” என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

“தயாளன், இங்க வாங்க” என்று அவசரமாக என்னை அழைத்தார். நான் போய் நின்றதும் பையிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்து “எல்லாருக்கும் தம்ஸ் அப் வாங்கி குடுங்க” என்றார். இரு மஜ்தூர்களோடு நான் கடைக்குச் சென்று தம்ஸப் பாட்டில்கள் வாங்கி வந்தேன். ஒரு பெரிய பிரச்சினை நல்லவிதமாக முடிந்ததில் எல்லோருக்குமே ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியோடு தம்ஸப் அருந்தினோம்.

“அப்ப நான் கெளம்பட்டுமா சார்?” என்று டி.இ.யிடம் கேட்டார் அன்புக்கனி. “இருங்க அன்புக்கனி, ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி “வண்டியிலயே அன்புக்கனிய கடலூருக்கு அழச்சிட்டு போய் விட்டுட்டு வாங்க” என்று சொன்னார்.

குப்புசாமியிடமும் மஜ்தூர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தார் அன்புக்கனி. ”போற வழியில எங்கள ஆபீஸ்ல எறக்கி விட்டுடுங்க” என்று டி.இ.யும் ஏ.இ.யும் ஏறிக்கொண்டார்கள். கேபிள் ஓட்டையிலிருந்து காற்று பீறிட்ட காட்சியை டி.இ.யால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதை விவரித்தபடியே வந்தார்.

ஸ்டேஷன் வாசலில் இருவரும் இறங்கிக்கொண்டார்கள். நாங்களும் இறங்கினோம். வண்டியைத் திருப்புவதற்காக கொஞ்ச தூரம் வரைக்கும் முன்னால் ஓட்டிக்கொண்டு சென்றார் டிரைவர்.

டி.இ. அன்புக்கனியின் தோளைத் தொட்டு கனிந்த குரலில் “நீங்க எப்படிப்பட்ட பிரச்சினையில இருக்கிங்கன்னு எனக்குத் தெரியும் அன்புக்கனி. கடலூர் இன்ஸ்பெக்டர் என் க்ளோஸ் ப்ரண்ட். நீங்க ஒரு வார்த்த சொன்னிங்கன்னா, எங்க இருந்தாலும் ரெண்டு நாள்ல அந்த பையன கண்டுபுடிச்சிடலாம்.” என்று மெதுவாகச் சொன்னார். அதைக் கேட்டு அன்புக்கனியின் கண்களும் கலங்கிவிட்டன.

“வேணாம் சார். அப்பிடிலாம் செய்ய அவசியமில்ல சார். அவளுக்கு ஏதோ ஒரு சபலம். கெட்ட நேரம். அவனோட போய்ட்டா. அவ்ளோதான். ஆனா அவ கெட்டவ கெடயாது. என்னைக்காவது ஒரு நாள் நிச்சயமா திரும்பிவந்துடுவா சார். எனக்காக இல்லைன்னாலும் புள்ளைங்களுக்காகவாவது வந்துடுவா. நிச்சயம் ரிஸ்டோர் ஆயிடுவா” என்றார் அன்புக்கனி. பிறகு “வரேன் சார். பாக்கலாம்” என்றபடி வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். நானும் அவருக்கு அருகில் உட்கார்ந்தேன்.

One comment

  1. பழுது அரசு ஊழியரின் தொழில் நேர்த்தையைக் காட்டும் கதை. பாவண்ணன்பாலும் இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் எழுதுவதில்லை. இக்கதை சாதாரணமானவர்க்கும் புரியும் வண்ணம் இருக்கிறது. தன் வாழ்வில் நேர்ந்துவிட்ட பழுதைக் கூடப் பெரிதாக எண்ணாமல் அச்சூழலிலும் வாடிக்கையாளருக்குச் சேவை நின்று விடக் கூடாது என்று பணியாற்றும் அன்புக்கனி போன்றவர்களின் சேவை மகத்தானது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.