வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வை விவரிக்கும் போது அதுவொரு வரலாற்றுத் தருணம் எனக் கூறுபவர் உண்டு. நான் எடுத்துக் கொண்டது காவியத் தருணம். ஆம், காவியத்திலுள்ள ஓர் அரிய நிகழ்வு. காதலன் தன் காதல் இணையை வர்ணித்தல் இயல்பு. கணவன் தன் மனைவியை வர்ணித்தல் அரிது. அதுவும் மற்றொரு ஆணிடம் தன் காதல் மனைவியின் உடலகை வர்ணித்தலென்பது அரிதினும் அரிதென்றே நான் கருதுகிறேன். கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காவியத் தருணம் வேறு ஏதேனும் காவியங்களில் இருப்பதாக என் சிற்றறிவிற்கு தென்படவில்லை.
வனவாசம் முடிவுறும் தருவாயில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றுவிட சுக்ரீவனின் வானரப் படைகளை சீதா தேவியைத் தேட அனுப்புகிறார்கள். அப்போது அனுமனைத் தனியே அழைத்த இராமன் தன் மனைவியை இதுவரை கண்டிராத அனுமனுக்கு அவளின் அங்க அடையாளங்களை விரிவாகக் கூறுகிறான்.
கம்பர், காவியத்தின் பல இடங்களில் சீதையின் அழகை வர்ணித்திருந்தாலும், இராமன் சீதையின் நினைவில் தனியே புலம்பியிருந்தாலும் அணுக்கன் அனுமனிடம் அவளின் அவயங்களின் அழகை விவரிப்பது அரிய அழகிய நிகழ்வு. இது கிஷ்கிந்தா காண்டத்தின் ” நாட விட்ட படலத்தில்” இடம் பெற்றிருக்கிறது. முப்பத்து மூன்று பாடல்களில் பாதாதி கேசமாக விரிவாக வர்ணித்துள்ளார்.
இந்தப் பாடல்களின் மற்றொரு சிறப்பு பெண்களின் அவயங்களுக்கு மரபாக என்னன்ன உவமைகள் கூறப்படுகின்றன என்பதை வரிசையாகக் கூறிவிட்டு அதில் சீதைக்கு எது பொருத்தமானது என்பதைக் கூறுவது போன்று அமைக்கப் பட்டிருக்கும் பாங்கு.
கம்பராமாயணப் பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண்களைத் தந்தால் அது அவரவர் கையிலிருக்கும் பதிப்புகளிலிருந்து மாறுபடக்கூடும். எனவே கிஷ்கிந்தா காண்டத்தில் ” நாட விட்ட படலத்தில்” 33-ம் பாடலில் இருந்து அடுத்த முப்பத்து மூன்று பாடல்களிலேயே நான் குறிப்பிடும் பின்வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமன் ,சீதையின் இருபத்தாறு அவயங்களின் அடையாளங்களைக் கூறுகிறான். அனைத்தையும் கூற ஆவல் எழுந்தாலும் முக்கியமானதென்று நான் கருதுவனவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
கால் விரல்கள்
‘பாற்கடல் பிறந்த செய்ய
பவளத்தை, பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி,
விரகுற நிரைத்த மெய்ய,
கால் தகை விரல்கள்–ஐய!-
கமலமும் பிறவும் எல்லாம்
ஏற்பில என்பது அன்றி, இணை
அடிக்கு உவமை என்னோ?
பாற்கடலில் தோன்றிய தெய்வப் பவளத்திற்கு பஞ்சின் மென்மையை ஊட்டி, அதன் மேல் முழு நிலவொளியை ஒளிரச் செய்து , திறமையுடன் அடுக்கி வைத்தது போன்ற எழிலுடன் சீதையின் கால் விரல்கள் இருக்கும். செந்தாமரை மலரையோ பிறவற்றையோ அப்பாதங்களுக்கு உவமையாக ஏற்க முடியவில்லையே வேறெதைக் கூறுவதென திகைக்கிறான். சொல்பவனே திகைத்துவிட்டால் கேட்பவன் நிலையென்ன.
வயிறு
ஆல் இலை, படிவம் தீட்டும்
ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக்
கண்ணாடி, பலவும் இன்ன,
போலும் என்று உரைத்த போதும்,
புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலா;
இது வயிற்று இயற்கை; இன்னும்
பொதுவாக மகளிரின் வயிறுக்கு உவமையாகக் கூறப்படும் ஆலிலை, ஓவியம் தீட்டும் பலகை, பால் போன்ற வெண்தட்டு, வட்டக் கண்ணாடி போன்றவை சீதையின் வயிறுக்கு உவமையாகாது.
தனங்கள்
‘செப்பு என்பேன்;கலசம் என்பேன்;
செவ் இளநீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள்சூது என்பென்;
சொல்லுவென் தும்பிக் கொம்பை;
தப்பு இன்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;
பலநினைத்து உலைவென் இன்னும்.
மகளிரின் தனங்களுக்கு உவமையாக சிமிழ் , பொற்கவசம் , செவ்இளநீர்க்காய் , சூதாட்ட களத்தில் வைக்கும் செப்பு , யானைத் தந்தம், சக்கரவாகப் பறவையென்று இத்தனை இருந்தாலும் சீதையின் தனங்களுக்கு ஒப்புமை கூற உலகில் ஒரு பொருளையும் காணாமல் வருந்துகிறேன்.
கைகள்
‘ஏலக் கொடு ஈன்ற பிண்டி இளந்
தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை,
நறுங் கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள்தன்
நூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால்,
கைக்கு ஒப்பு வைக்கலாமோ?
அசோக மரத்தின் கிளைகளிலுள்ள இளந்தளிர்கள் ஒருபுறம் கிடக்கட்டும், வளமையான கற்பக மரத்தின் மனங்கவரும் தளிர்களும், செந்தாமரை மலரும், நூல் போன்ற இடையுடைய சீதையின் சிலம்பு ஒலிக்கும் அழகிய கால்களுக்கே ஒப்புமை ஆகாதே அவற்றை கைகளுக்கு கூறலாமா.
கை நகங்கள்
‘வெள்ளிய முறுவல், செவ் வாய்,
விளங்கிழை,இளம்பொற்
கொம்பின்
வள் உகிர்க்கு, உவமை நம்மால்
மயர்வு அற வகுக்கலாமோ?
“எள்ளுதிர் நீரே மூக்கை” என்று
கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள், முருக்கின் பூவைக்
கிழிக்குமேல், உரைக்கலாமோ?
வெண்மையான பற்களும் சிவந்த வாயும் ஒளிரும் அணிகலன்களும் கொண்ட இளமையான பூக்கொம்பு போன்ற சீதையின் கூரிய நகங்களுக்கு உவமையை குழப்பமின்றி தெளிவாகக் கூறமுடியுமா. மகளிரின் கை நகங்களுக்கு ஒப்புமை ஆகாது என தனது மூக்கை இகழ்வதாக் கருதி மகளிரின் இதழ்கள் போலத் தோன்றும் கல்யாண முருங்கையின் மலர்களைக் கொத்தும் கிளியின் மூக்கைத்தான் உரைக்க முடியுமா.
கழுத்து
‘அங்கையும் அடியும் கண்டால்,
அரவிந்தம் நினையுமாபோல்
செங் களி சிதறி, நீலம்
செருக்கிய தெய்வ வாட் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கின்,
வளர் இளங் கழுகும், வாரிச்
சங்கமும் நினைதிஆயின்,
அவை என்று துணிதி; தக்கோய்
சீதையின் கைகளையும் கால்களையும் காணும்போது செந்தாமரை நினைவுக்கு வருவதுபோல, சிவந்த, களி பொங்கும் குவளை மலர் போன்ற விழிகள் கொண்ட சீதையின் கழுத்தைக் காணும்போது வளரும் இளம் பாக்கு மரமும், கடலில் இருக்கும் சங்கும் உன் நினைவுக்கு வருமாயின் அது குற்றமென்ற முடிவுக்கு வருவாயாக.
வாய்
‘பவளமும், கிடையும், கொவ்வைப்
பழனும், பைங்குமுதப் போதும்,
துவள்வுஇல் இலவம், கோபம்,
முருக்கு என்று இத்தொடக்கம்
“சாலத்
தவளம்” என்று உரைக்கும்
வண்ணம்
சிவந்து, தேன் ததும்பும்ஆயின்,
குவளை உண் கண்ணி வண்ண.
வாய் அது; குறியும் அஃதே
‘சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;
தேன் இல்லை; உள என்றாலும்,
கவர்ந்த போது அன்றி, நினைப்ப.
ஓர் களிப்பு நல்கா;
பவர்ந்த வாள் நுதலினால்தன்
பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்தபோது, உவந்த வண்ணம்
உரைத்தபோது, உரைத்ததாமோ?
குவளை மலர் போன்ற விழிகளுடைய சீதையின் வாய்க்கு உவமையாக பவளத்தையும் சிவந்த நெட்டியையும் கோவைப் பழத்தையும், சிவந்த அல்லி மலரையும் துவளாத இலவ மலரையும், சிவப்பான இந்திர கோப பூச்சியினையும் கல்யாண முருங்கையின் பூவினையும் உவமை கூறினால் அது உண்மையாக இருக்காது. ஏனென்றால் சீதையின் வாய் பல வண்ண மலர்களின் சிவந்த தேனால் நிறைந்த இனிமையுடன் அழகாக ஒளிர்வதாகும்.
சிவந்த நிறத்தில் அமிர்தம் இல்லை, தேனும் இல்லை. அப்படி உள்ளது என்றாலும் சுவைக்கும் போதுதான் இனிமை தருமேயன்றி நினைக்கும்போதே இனிமை தராது. ஒளி பொருந்திய நெற்றியை உடைய சீதையின் பவளம் போன்ற வாய்க்கு மனதில் உவமையை எண்ணி மகிழ்ந்து அதே மனநிலையுடன் உரைப்பது உண்மையாகுமா.
காதுகள்
‘வள்ளை, கத்திரிகை வாம
மயிர் வினைக் கருவி என்ன,
பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;
வெள்ளி வெண் தோடு செய்த
விழுத் தவம் விளைந்தது என்றே
உள்ளுதி; உலகுக்கு எல்லாம்
உவமைக்கும், உவமை உண்டோ?
வள்ளைக் கொடியின் இலையையும், கத்திரிக் கோலையும், அழகிய மயிரை ஒப்பனை செய்யும் கருவியையும் மகளிரின் காதுகளுக்கு உவமையாக இளையோர்கள் கூறுவனவற்றை
பித்துப் பிடித்த பெரியவர்கள்தான் கூறுவார்கள். சீதை அணிந்துள்ள வெள்ளியென மின்னும் வெண்காதணியின் தவமே அவளின் காதுகளாக அமைந்துள்ளது. உலகிலுள்ள எல்லாப் பொருளுக்கும் உவமையாகக் கூடிய ஒப்பற்ற ஒன்றுக்கு உவமை என்பதும் உண்டோ.
கண்கள்
‘பெரிய ஆய்; பரவை ஒவ்வா;
பிறிது ஒன்று நினைந்து பேச
உரிய ஆய், ஒருவர் உள்ளத்து
ஒடுங்குவ அல்ல; உண்மை
தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,
தேவர்க்கும் தேவன் என்னக்
கரியஆய், வெளிய ஆகும்; வான்
தடங் கண்கள் அம்மா!
தேவர்களுக்கெல்லாம் இறைவனான திருமாலின் நிறத்தின் கருமையையும் அவனிருக்கும் பாற்கடலின் நிறத்து வெண்மையையும் கொண்டு ஒளிவிடும் சீதையின் கண்களை ஆயிரம் முறை நோக்கினாலும், விரிந்து பரந்த கடலும் அதற்கு உவமையாகாது. அதைவிட சிறந்த உவமையை எவரும் உள்ளத்தால் எண்ணுவதும் அரியதாகும்.
புருவங்கள்
‘கேள் ஒக்கும் அன்றி, ஒன்று
கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;
கோள் ஒக்கும்என்னின் அல்லால்,
குறி ஒக்கக் கூறலாமே?
வாள் ஒக்கும் வடிக் கணாள்தன்
புருவத்துக்கு உவமை வைக்கின்
நாள் ஒக்க வளைத்து நிற்ப
இரண்டு இல்லை, அனங்க சாபம்.
வாள் போன்ற கண்களையுடைய சீதையின் புருவங்கள் ஒன்றுக்கொன்று உவமையாகுமே தவிர அவற்றிற்கு வேறொன்றைக் கூறுவது இழிவானதாகும். மனதிற்கு ஏற்புடைய உவமை பொருளுக்கும் பொருத்தமானதாக அமையுமா. சீதையின் புருவங்களுக்கு மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமெனில் அவனிடம் இரண்டு வில் இல்லையே.
முன் நெற்றி மயிர்
வனைபவர் இல்லை அன்றே,
வனத்துள் நாம் வந்த பின்னர்?
அனையன எனினும், தாம் தம்
அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
வினை செயக் குழன்ற அல்ல;
விதி செய விளைத்த; நீலம்
புனை மணி அளகம் என்றும்
புதுமை ஆம்; உவமை பூணா.
நாங்கள் வனத்திற்குள் வந்தபிறகு சிகையை பராமரிப்பதற்கு அப்பணியாற்றுபவர் எவருமில்லை. ஆயினும் இயற்கையான அழகுக்கு அழிவு உண்டாகாது. சீதையின் குழல் ஒப்பனையாளர்களால் குழன்றது அல்ல. நீலமணி போன்ற சீதையின் நெற்றியின் மேல் இயல்பாகவே விழும் கூந்தல் புதுமை கொண்டதாகவும் உவமை கூற முடியாததாகவும் விளங்கும்.
முகம்
கொண்டலின் குழவி, ஆம்பல்,
குனி சிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை,ஒண் தரளம் என்று இக்
கேண்மையின் கிடந்த திங்கள்–
மண்டலம் வதனம் என்று
வைத்தனன், விதியே; நீ, அப்
புண்டரிகத்தை உற்ற பொழுது,
அது பொருந்தி ஓர்வாய்.
கரிய மேகத்தின் கொழுந்தும் சிவந்த அல்லி மலரும் வளைந்த வில்லும் வள்ளைக் கொடியின் இலையும் சிறப்புடைய கெண்டை மீனும் ஒளிரும் முத்துக்களும் மேலும் இவற்றிற்கு உறவாக விளங்குகின்ற ஏனையவும் திகழ்கின்ற சந்திர மண்டலத்தை சீதைக்கு முகம் என்று பிரம்மன் படைத்தான். தாமரை போன்ற முகம் உடைய அவளை நேரில் காணும்போது நீ இதை உணர்வாய்.
( மேகம் கூந்தலுக்கும், அல்லி மலர் வாய்க்கும், வில் புருவத்திற்கும், வள்ளையிலை காதுக்கும், கெண்டை மீன் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாக கூறப்பட்டுள்ளது )
கூந்தல்
‘காரினைக் கழித்துக் கட்டி,
கள்ளினோடு ஆவி காட்டி,
பேர்இருட் பிழம்பு தோய்த்து,
நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்
சோர் குழல் தொகுதி என்று
சும்மை செய்தனையது அம்மா!-
நேர்மையைப் பருமை செய்த
நிறை நறங் கூந்தல் நீத்தம்!
நுண்மையானதை பருப்பொருளாக்கியது போன்ற சீதையின் கூந்தல், கரிய மேகத்தை துண்டுகளாக்கி கட்டி, தேனும் அகிற் புகையும் அதனோடு சேர்த்து , பேரிருள் குழம்பை அதில் தோய்த்து, அதனை நெறிப்படுத்தி, ஒளிரும் குழல் கற்றையாக்கிய பெரும் சுமையைப் போல தோன்றுவதாகும்.
இன்சொற்கள்
‘வான் நின்ற உலகம் முன்றும்
வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,
நா நின்ற சுவை மற்று ஒன்றோ
அமிழ்து அன்றி நல்லது இல்லை;
மீன் நின்ற கண்ணினாள்தன்
மென்மொழிக்குஉவமைவேண்டின்
தேன் ஒன்றோ? அமிழ்தம்ஒன்றோ?
அவை செவிக்கு இன்பம்
செய்யா.
மீன் போன்ற கண்களையுடைய சீதையின் மென்மையான இனிய மொழிக்கு உவமை கூற விரும்பினால் இனிய தேன் என்றோ பால் என்றோ கூறமுடியாது. இவை செவிக்கு இன்பம் அளிக்காது. மூன்று உலகங்கள் வான்வரை எல்லையின்றி பரந்திருந்தாலும் நாவில் பரவும் சுவைகளில் அமிர்தத்தையன்றி சிறந்ததில்லை என்றாலும் அதுவும் செவிக்கு இன்பம் அளிக்காது.
நடையழகு
‘பூ வரும் மழலை அன்னம்,
புனை மடப் பிடி என்று இன்ன,
தேவரும் மருளத் தக்க
செலவின எனினும் தேறேன்;
பா வரும் கிழமைத் தொன்மைப்
பருணிதர் தொடுத்த, பத்தி
நாஅருங் கிளவிச் செவ்வி
நடை வரும் நடையள்–நல்லோய்!
நற்குணத்தோனே, தாமரையில் வாழ்கின்ற இள அன்னப் பறவையும் அழகிய பெண் யானையும் தேவர்களும் கண்டு வியக்கும் நடையழகு உடையன. என்றாலும் சீதையின் நடையழகிற்கு இவற்றை உவமையாக சொல்லமாட்டேன். பாடல்கள் இயற்றுவதில் அனுபவம் வாய்ந்த மரபான கவிஞர்கள் இயற்றிய அடியொழுங்கும் நாவால் உரைக்கத் தக்க பாவழகும் விளங்க நடக்கும் சொற்களின் சிறந்த நடையழகு போன்றதாகும் சீதையின் நடை.
நிறம்
‘எந் நிறம் உரைக்கேன்?-மாவின்
இள நிளம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால்,
மணி நிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும்
வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்
தன் நிறம் தானே ஒக்கும்;
மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!
சீதையின் நிறத்திற்கு எதை உவமையாக உரைப்பேன். மாவின் இளந்தளிர் நிறம் மாறி முற்றிவிடும். பொன்னிறமோ இவள் நிறத்திற்குமுன் கறுத்துத் தோன்றும். நவரத்தின மணிகளோ உவமை கூறத்தக்கதல்ல. மின்னலைக் கூறுவதென்றால் அது தோன்றியவுடனேயே நாணம் கொண்டு ஒளிந்துகொள்ளும். தாமரையும் அவள் நிறம் கண்டு நாணித் தாழும். எனவே சீதையின் நிறத்திற்கு ஒப்புமை அவள் நிறம் மட்டுமே.
கட்டுரையின் நீளம் கருதி புறங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், அல்குல், இடை உந்திக்கமலம், மயிர் ஒழுங்கு, வயிற்று மடிப்பு, தோள்கள், முன் கைகள், கழுத்து பற்கள், மூக்கு மற்றும் நெற்றி போன்ற அவயங்களுக்கான பாடல்களை கூறாமல் விட்டுள்ளேன். ஆவலுடையோர் அணுகியறிந்து மகிழலாம்.
சீதையின் அடையாளத்தை விவரிக்க முயன்ற இராமன் பெரும்பாலான அவயங்களுக்கு ஒப்புமை கூறும் உவமைகள் இல்லையே என்று வருத்தமுறுகிறான். அத்துடன் எல்லாம் அறிந்த அனுமனே நீயே உணர்ந்துகொள், அறிந்துகொள் என்றும் கூறுகிறான். பிரம்மச்சாரியான அனுமன் பலவான்தான். அறிவுக் கூர்மையுடையவன்தான். ஆனால் கற்பனைத் திறனும் உடையவன் என இராமன் நம்புகிறான் போலும்.
ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு அவயத்தைப் பற்றி கூற முயலும்போது வேறு அவயங்களுக்கான உவமைகளை உரைப்பதைக் காணலாம். இவற்றை விரிவாக எடுத்துக் கூறாததற்கு காரணம் ஆர்வமுள்ள வாசகர்களின் கண்டறியும் சுவாரசியத்திற்கு தடை போடவேண்டாமே என்பதற்காகத்தான்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மற்ற அவயங்களுக்கு உவமை சொல்ல தயங்கி திகைக்கும் இராமன் , முகத்திற்கான அடையாளத்தை எந்த ஐயமோ தயக்கமோ இன்றி தெளிவாக உரைத்துள்ளான். ஒரு பெண்ணைத் தேடி செல்பவனுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடையாளம் முகம்தானே. எனவே அதனை அனுமன் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு உரைத்துள்ளான் எனப் புரித்து கொள்ளலாம்.
இக்கட்டுரையின் நோக்கம் சீதையின் பாதாதி கேசத்தை இராமன் உரைக்கும் பாங்கினை விவரிப்பதுதான் என்றாலும் இராமன் கூறிய அடையாளங்களைக் கொண்டு அனுமன் எப்படி சீதையை அடையாளம் கண்டுபிடித்தான் என்பதைக் கூறினால்தான் நிறைவடையும் என கருதுகிறேன்.
சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் இக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக தேடி மலர்த் தேன் நிறைந்த சோலை ஒன்றைக் கண்டான்.
கடக்க அரும் அரக்கியர்
காவல் சுற்று உளால்
மடக்கொடி சீதையாம்
மாதரே கொலாம்
கடல் துணை நெடிய தன்
கண்ணின் நீர்ப் பெருந்
தடத்திடை இருந்தது ஓர்
அன்னத் தன்மையாள்
//எம் அரும் உருவின் அவ்
இலக்கணங்களும்
வள்ளல் தன் உரையோடு
மாறு கொண்டில //
//அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன் இவள்
கமலச் செல்வியே //
கடல்போன்ற. தன் பெரிய கண்களில் நீர் பெருகித் தடாகமான இடத்தில் அமர்ந்த, அன்னம் போன்றவளைச் சுற்றி
கடந்து செல்ல இயலாதவாறு அரக்கிகள் காவல் காக்கிறார்களே. இளங்கொடி போன்ற அவள் சீதையாகிய பெண்தானோ?.
குற்றமற்ற இந்த உருவத்தின் இலக்கணங்கள் இராமன் கூறிய அடையாளங்களுக்கு மாறுபாடு இல்லாமல் ஒத்துள்ளது.
பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட தேவனே அவன். இவள் தாமரையில் அமர்ந்திருந்த திருமகளே.
இலங்கை முழுக்க நிறைந்திருந்தவர்கள் அரக்கர்கள். அரக்கிகளால் சீதை சூழப்பட்டுள்ளாள். வல்அரக்கிகளிடையே பெண்ணுருவில் துயருடன் இருப்பவளை கூர்ந்த அறிவுடைய அனுமன் எளிதாகவே அடையாளம் கண்டுவிடுவான். இது இராமனுக்கும் தெரியும். கம்பருக்கும் தெரியும். அதற்காக ” நீயே கண்டுபிடித்து வா” என்று கூறிவிடமுடியுமா. காவியத்தின் கூறுகளிலொன்று, காவியகர்த்தா தான் வாழும் காலத்தில் வழங்குபவற்றில் முக்கியமானதென்று கருதுவனவற்றை காவியத்தினுள் அருமணியென பொதித்து எதிர்காலத்திற்கு கடத்துவதாகும். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள் கொண்ட காவியம் இவற்றையும் உள்ளடக்கித்தான் நிறைவு பெற்றுள்ளது.
எப்படியோ, நாம் மீண்டும், மீண்டும் படித்தும், மனதில் நினைத்தும், திளைத்தும் இன்புறுவதற்கு இத்தனை இனிய பாடல்கள் கிடைத்ததற்காக மகிழ்வோம்.
கடைசியாக ஒன்று, சுட்டிக் காட்டப்பட்டு இக்கட்டுரையை வாசிக்கும் வெண்முரசு ஆசானோ, நாஞ்சில் கும்பமுனியோ முனிந்து எனக்கு சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாதென விஷ்ணுபுரத்தில் புரண்டு புரண்டு துயிலும் நீள் கரியபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.