இறுதிப் படியில் – ஜீவ காருண்யன் சிறுகதை

நேரம் இரவு பத்தரை. அப்பா படுத்திருந்த கட்டிலருகில் வந்த வெங்கடேசன், “அப்பா, புரட்டாசி மூணாஞ் சனிக்கிழமைன்றதால ஊர்ல ‘வெங்கடேச பெருமாள்’ நாடகம் வச்சிருக்காங்க. அத்தைய அனுப்பி வைக்கட்டுமா?” என்றார். நெடுங்கிடையாக ஒருக்களித்துப் படுத்திருந்த வாகிலேயே, “எங்கிட்ட என்ன கேள்வி? போய் வரச் சொல்லு.” என்று வலது கையசைத்தார் பெரியவர் ரங்கசாமி. சச்சதுரமாக மடித்த நிலையிலிருந்த பச்சை நிறப் போர்வையுடன் சமையலறையிலிருந்து வந்த சகுந்தலா, ”போய்ட்டு வரண்ணா!” என்று பெரியவரிடம் விடை பெற்று வாசலுக்கு வந்தார். அத்தை வெளியில் போனதும் கதவைச் சாத்தித் தந்தையிடம் வந்த வெங்கடேசன், “போத்தி விடட்டுமாப்பா?” என்றார். ‘வேணாம்’ என்னும் பாவனையில் கையசைத்த பெரியவர் பாவனையிலேயே தன்னைத் தூக்கி உட்கார வைக்கச் சொன்னார்.

பொன்னுருகக் காயும் மண்ணுருருகப் பெய்யும் புரட்டாசில போத்திக்கிறதா?’ என்று புரட்டாசியின் முதல் நாளிலேயே போர்வையை மறுத்தத் தந்தையிடம், ‘போத்தி விடட்டுமாப்பா?’ எனக்கேட்ட தனது மடமை குறித்த யோசனையுடன் தந்தையைச் சன்னமாகப் பிடித்துத் தூக்கிய வெங்கடேசன் அவரின் முதுகுப் புறம் தலையணையை அடக்கமாக வைத்துச் சுவரில் சாத்தினார்.

தொண்ணூறு வயது முதுமையில் உலர்ந்து உருக்குலைந்து சுக்குப் போல தேகம் வற்றிக் கிடந்த தந்தையிடம், “என்னப்பா?” என்றார். பெரியவரிடம் பதிலில்லை.

பெரியவர் ரங்கசாமிக்கு தொண்ணூறு வயதுகள் பூர்த்தியாகி ஆறு மாதங்களாகி விட்டன. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒப்புக்குத் தடி வைத்துக் கொண்ட குறை ஒன்றைத் தவிர முன்று மாதங்களுக்கு முன்பு வரை அன்றாட வாழ்க்கைப் பாடுகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஆனால், இப்பொழுது நிலைமை வேறு விதமாகி விட்டது. அனைத்துக்கும் உதவி தேவையாகி விட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வயிற்றின் கீழ் இடப் புறத்தைத் தொட்டு, “ஏதோ வலி மாதிரி தெரியுது.” என்றார் பெரியவர். அன்றே அவரது வழக்கமான முன்று இட்டிலி காலை உணவு அதிரடியாக ஒன்றாகக் குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் ஒரு இட்டிலியும் மறுக்கப்பட்டு காலை உணவு அரை டம்ளர் கஞ்சி என்றானது. சில நாட்களிலேயே விரும்பி அருந்தும் காபி அறவே, ‘வேணாம்’ என புறக்கணிக்கப் பட்டது.

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!’ என்னும் வருத்தத்துடன், “ஆஸ்பத்திரிக்குப் போலாம்பா!” என்றார் வெங்கடேசன்.

வயித்துலதா ஏதோ பிரச்சன. வயசாயிடுச்சி இனிமே இன்னா ஆஸ்பத்திரி? ஆஸ்பத்திரின்னு போனா, ‘ஆப்பரேஷன் செய்யணும். அங்க அறுக்கணும். இங்க அறுக்கணும்’னுவாங்க. எதுக்குக் கடைசி காலத்துல கந்தர் கோலம்? பின்னப்படாம போய்ச்சேர வேண்டிய எடத்த சேருவோம்.” என்று மருத்துவமனையைக் கறாராக மறுத்த பெரியவர் இறுதியில், உணவு என்பது அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் என்னும் முடிவினில் வந்து நின்றார். உணவும், தண்ணீரும் குறைந்து விட்ட காரணத்தால் மல, ஜல அவதிகளும் குறைந்து விட்டன. மனிதருக்குக் குடலில் ஏதோ கோளாறு என்பது யூகத்தின் வழியில் உறுதியாகி விட்டது.

எண்பத்தைந்து வயது முதுமையிலும் ஏரிக் கழனிகளுக்கு காலால் மடை தள்ளும் உடல் நலத்தில் இருந்தவர் உருக்குலைந்து எலும்புக்கூடாகிக் கிடக்கும் காட்சியில் நெஞ்சடைத்தது வெங்கடேசனுக்கு. பெரியவர் ரங்கசாமிக்கு வெங்கடேசன் தலைப்பிள்ளை. வெங்கடேசனுடன் கூடப் பிறந்த இரண்டு தம்பிகளில் பெரியவன் அரசாங்க உத்தியோகத்திலும், இளையவன் மாமனாரின் வெல்ல மண்டி வியாபாரத்திலுமாக செங்கல்பட்டு, வேலுரில் சொந்த வீடுகளுடன் நிலையாகி விட்டனர். அனைவரிலும் கடைசியான தங்கை திருத்தணியில் ஆசிரியர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு வசதி வாய்ப்புகளுக்குக் குறைவில்லாமல் ராணி போல இருக்கிறாள். சகோதரர்களும் சகோதரியும், ‘அப்பா எங் கூடவே இருக்கட்டும். நாம் பாத்துக்கறன்.’ என்ற அண்ணனை ஆமோதித்து தங்களுக்குரிய பங்கு, பாகங்களைப் பிசகில்லாமல் பிரித்து கணக்கு தீர்த்துக் கொண்டனர். மூவருக்கும் வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஆனால், வெங்கடேசனின் வாழ்க்கை மரம் செடி கொடிகளுடன் வசதியான வீடு, நன்கு விளையக் கூடியதாக நான்கு ஏக்கர் ஏரிக் கரையடி நஞ்சை. கணிசமாகக் கிடைக்கும் ஓய்வுத் தொகை போன்ற நிறைகளுடன் நிறையக் குறைகள் கொண்டதாகி விட்டது. உள்ளூரிலும் அக்கம் பக்கம் ஊர்களிலுமாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தொழில் செய்து ஓய்வு பெற்றவருக்கு பிள்ளையில்லாக் குறை பெருங்குறையாகி விட்டது. அறுபத்தைந்து வயது முதுமையுற்றவரை அனாதையாக்கி விட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவரது அன்பு மனைவி சீதாலட்சுமியும் அகாலத்தில் போய்விட்டாள். மகனின் துயரத்தில் நிலை குலைந்து போன ரங்கசாமி அறுபது வயது மகனுக்கு, ‘மாவுக்கு ஏத்த பண்டமாக பெண்பார்த்து திருமணம் முடிக்கலாமா?’ என்று குழப்பத்துடன் யோசித்தார். வெங்கடேசன் தந்தையின் குழப்ப யோசனையைக் குழப்பமில்லாமல், ‘யாராவது சிரிக்கப் போறாங்கப்பா!’ என்று உறுதியுடன் மறுத்து விட்டார். வேறு வழியற்றவராக ரங்கசாமி, திருமணமான இரண்டு வருடத்தில் கணவனை இழந்து, ஒற்றை உயிர்நாடியாக இருந்த, மகனையும் பதினைந்து வயதில் பறிகொடுத்தத் துயரத்துடன் நெமிலியில் சின்னஞ் சிறிய கூரைவீட்டில் ஆதரவில்லாமல் தனித்துக் கிடந்த தனது சித்திமகள் சகுந்தலாவை வீட்டில் பெண்ணில்லாத குறைக்கு ஆறுதலாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, ‘அப்பா, அத்தை இருக்கிறார்கள்!’ என்னும் கணக்கில் வெங்கடேசனுக்கு விதிக்கப்பட்டதாகஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது வாழ்க்கை.

ஆனால் இப்பொழுது…?

அறுபத்தைந்து வயது நிறைவுக்கும் தந்தையாக இல்லாமல் உயிர்த் தோழனாக உடனிருந்தவர் முதுமையும் நோயுமாக மூன்று மாதங்களாக மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு தம்பிகளும், தங்கையும் குடும்ப சமேதராக வருகை செய்து, ‘வந்தார்கள். கண்டார்கள். சென்றார்கள்.’ என்னும் வகையில் பெரியவரைச் சடங்கு போல பார்த்து விட்டு வந்த வேகத்தில் அவரவர் கூடுகளுக்குத் திரும்பி விட்டனர். தம்பிகள், தங்கை மட்டுமென்றில்லாமல் ஒரு வார நெருக்கத்தில் பார்த்தவர்கள் அனைவருமே, “அன்னந் தண்ணியில்லாம மூணு மாசமாயிடுச்சி. பேச்சு மட்டும் தெளிவாருக்கு. மத்தபடி ஆத்மா அடங்கிக்கினே வந்துடுச்சி. வர்ற அமாவாசைதா முடிவா தெரியுது.” என்று கிழவரின் காதுகளில் விழாத வண்ணம் ஒருமித்தவர்களாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அமாவசைக்கு இன்னும் ஐந்து தினங்கள் தானிருக்கின்றன. அப்படியென்றால்…

அப்பா! அப்பா!’ என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது வெங்கடேசனுக்கு.

மணி பதினொன்னு ஆவப் போதுப்பா! படுப்பா!” என்ற வெங்கடேசனைக் கை காட்டி அருகில் கட்டிலில் உட்காரச் சொன்னார் ரங்கசாமி. அசப்புத் தோற்றத்தில் ரமணரை நினைவு படுத்தும் தந்தையின் ஒளி குன்றிய கண்களை உற்றுப் பார்த்தபடி கட்டில் விளிம்பில் வலது கன்னத்தைப் பொருத்தித் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார் வெங்கடேசன். இத்தனை நாட்களில் இல்லாததாக என்ன காரணத்தாலோ இன்று குரல் கம்மிற்றுப் பெரியவருக்கு.

மூணு வருஷங்களா ஊருல புரட்டாசிலயும் கூத்து வைக்கறது நல்லதாத்தாந் தெரியுது. அத்தையும் கூத்துக்குப் போயிடுச்சி. உங்கிட்ட தனியாப் பேசறதுக்கு இப்பத்தா நேரம் கெடச்சிருக்கு. இந்தப் பேச்சுதா உங்கிட்ட எங் கடைசிப் பேச்சா இருக்கப் போவுது. வெங்கடேசா, அப்பா செத்துடப் போறாரேன்னு வருத்தப் படாத! அண்ணன்தம்பி, அக்காதங்கச்சினு யாருமில்லாம பெத்தவங்க பிரியத்துக்கு ஒத்தக்கொம்பா நின்னுட்டவன் தொண்ணூறு வயசு வாழ்ந்துட்டன்! தொண்ணூறு வயசுல அறுபத்தஞ்சு வருஷம் உங் கூட இருந்துட்டன்! தொண்ணூறு வயசு வரைக்கும் நோவு நொடியில்லாம நல்லாத்தானே இருந்தன்? அரிதான மனுஷ வாழ்க்கைல தொண்ணூறு வயசுன்றது கொஞ்சமா? வெங்கடேசா, செத்துப் போவப் போறதப் பத்தி எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்ல. பூமில பொறக்கற ஜீவராசிங்க ஈ, எறும்பு உட்பட்ட அத்தினிக்கும் பொறப்போடவே இறப்புக்கும் ஓல நிச்சயமாயிடுது. சாவுக்காக அதுலயும் கெழ சாவுக்காக வருத்தப் பட்றதுல அர்த்தமில்ல. என்னோட வருத்தமெல்லாம் உன்னப் பத்தினதுதா. உன்ன அனாதையா விட்டுட்டுப் போறனேன்ற வருத்தந்தா. என்னோட அறுபத்தஞ்சாவது வயசுல உங்கம்மா போயிட்டா. உன்னோட அறுபத்தஞ்சாவது வயசுல உன்ன விட்டு நாம் போவணும்னு முடிவு போலிருக்கு. வர்ற அமாவாசைக்கு கணக்கு முடிஞ்சிடும்னு நெனைக்கறன். பாழும் பெத்த கடமைக்கு எனக்கு இறுதி செய்ய, எடுத்துப் போட நீயிருக்கற. ஆனா உனக்கு? கடைசிக் காலத்துக்குக் கூட வேணாம். மத்ததுக்கு? ஆயுசு உனக்கு இன்னும் எத்தனிக் காலம்னு தீர்மானிச்சிருக்கோ தெரியல. மிச்சமிருக்கற காலத்துக்கு யார் உனக்கு ஆதரவு?”

ஏம்பா, மனசப் போட்டுக் கொழப்பிக்கற? எனக்கென்னப்பா தம்பிங்க, தம்பிப் புள்ளைங்க, தங்கச்சிக் குடும்பம்னு ஒரு கூட்டமே இருக்கு. அத்தை இருக்கு. ஊரு ஜனம் இருக்கு. அப்றம் இன்னா? என்னப் பத்திக் கவலப்படாதப்பா! தூங்குப்பா!”

“ ‘அண்ணங் கூப்பிட்றான்’னு வந்துட்ட அத்தையே யாருமில்லாத அனாத. அத்தை இன்னிக்கி வரைக்கும் நமக்கு ஆக்கி அரிச்சிப் போட்டு நல்லாத்தாம் பாத்துக்குது. அதுக்கும் வயசு எழுபத்தஞ்சாயிடுச்சி. இன்னும் எத்தினிக் காலத்துக்கு அது உனக்கு துணையா நிக்கும்? இருக்கற வரைக்கும் துணையா இருக்கும். ஆனா, எது வரைக்கும்னு ஏதாவது உத்தரவாதம் சொல்ல முடியுமா?”

அப்பா…!”

பெத்தவங்க செஞ்ச பாவம் புள்ளைங்களுக்குனு சொல்லுவாங்க. , எறும்புக்காகவும் துடிச்சிப் போற புண்ணியவதி உங்கம்மா. இதுல அவள பழியாக்கக் கூடாது. என்னையறியாம ஏதோ நாஞ் செஞ்ச பாவம் உனக்குப் பிள்ளையில்லாக் குறையாயிடுச்சி. உனக்குனு வாழ்க்கைப் பட்டவ நல்ல மகராசிதா. அவ உசிரோட இருந்திருந்தா உன்னப் பத்தின கவல எனக்கு ஒன்னுமில்லாமப் போயிருக்கும். குடுத்து வைக்கல. புண்ணியவதி அகாலத்துல போய்ச் சேந்துட்டா. உலக நடப்புல ஆம்பள இல்லாம பொம்பள வாழ்ந்துடுவா. ஆனா, பொம்பள இல்லாத ஆம்பளப் பொழப்பு? உலகத்துலயே கஷ்டத்துலயும் கஷ்டம் ஆம்பள, பொம்பள இல்லாம வாழறதுதா.

புள்ளையில்லன்றது உறுதியானதும் ‘எதுனா ஒரு குழந்தைய எடுத்து வளத்துக்கங்க’ன்னு நா அன்னிக்கே தலப்பாடா சொன்னன். அம்மாவும் சொன்னா. ‘ஒரு தம்பிக் கொழந்தன்னு எடுத்துக்கினா இன்னொரு தம்பிக்கு வருத்தமாயிடும். ‘ஏன் எனக்குலாம் புள்ளைங்க இல்லையா?’ன்னு தங்கச்சி கோவிச்சிக்கும்’னுட்ட. ‘மச்சான் அவனோட பொண்ணு, புள்ளைய தள்ள அடி போடறான்

. ‘தம்பிங்க, தங்கச்சி, மச்சான் யாருக்கும் விரோதமில்லாமப் போவட்டும்’னு ஒதுங்கிக்கிட்ட. நா அன்னிக்கே வேறொரு யோசனையும் சொன்னன். ஆனா, அதையும் நீ காதுல வாங்கிக்கல. இன்னிக்கி எப்பிடி ஆயிடுச்சின்னு யோசிச்சிப் பாரு!”

யோசித்துப் பார்த்தார் வெங்கடேசன்.

பிள்ளையில்லாமல் போன குறை குறித்து அவர் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பே தீவிரமாகத்தான் யோசித்தார். வெங்கடேசனின் மனைவியும் கணவனுக்கும் அதிகமாகவே யோசிக்கத்தான் செய்தாள். மரணத்தின் வாசலில் நின்று இன்று மகன் தனிமைப் பட்டுப் போகும் சூழல் குறித்துக் கவலை மீதூற யோசிக்கின்ற பெரியவர் ரங்கசாமியும் அன்றும் நிறையவே யோசிக்கத்தான் செய்தார்.

தம்பிங்க, தங்கச்சி, மச்சான் கணக்குல யார் வீட்டுப் புள்ளையாவது ஒன்னு நம்மோட இருக்கட்டும்னு நான் ஒருத்தர் புள்ளைய எடுத்துக்கிட்டாலும் அது மத்தவங்களுக்கு மனஸ்தாபமாகிடும். அதுதாம்பா யோசிக்கறன்’ என்று வெங்கடேசன் சொன்னபோது இன்று மகனுக்குக் குழந்தையில்லாமல் போனது குறித்து பெரிதும் கவலையில் உழல்கின்ற இந்தப் பெரியவர் அன்று வெங்கடேசனின் யோசனை சரியானது என்பது போலத்தான் பேசினார். ஆனால் கூடவே வேறு ஒன்றும் சொன்னார்.

ஒரு வகைல நீ சொல்றது சரிதா, வெங்கடேசா. அதுவுமில்லாம அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு யார் புள்ளைய எடுத்து வளத்தாலும் அது என்னிக்கும் தாம் புள்ளையா வளராது. ‘காடைக்குக் கலம் போட்டு வளத்தாலும் அது காட்ட நோக்கித்தாம் பாக்கும்’னு பெரியவங்க சொன்னது சொல்றது பொய்யில்ல. அனுபவம். வளர்ப்பு தாய், தகப்பங் கிட்ட சிக்கிக்கிட்ற குழந்தைங்க மனசு பெரிசாக, பெரிசாக எத்தனி சீர், செனத்தில இருந்தாலும்சீர், செனத்தி செய்தாலும் தங்கத் தாம்பாளத்துல தாங்கனாலும் பெத்தவங்க, கூடப் பொறந்தவங்கள நோக்கித்தா தாவும். அவங்களுக்காகத்தா அதுங்க மனசு அலை மோதும். வளர்ப்பு தாய், தகப்பன் அதுங்களுக்கு ரெண்டாம் பட்சமாயிடும். இதுல யாரையும் குறை சொல்ல முடியாது. காரணம் ரத்த பந்தம். மனுஷ சுபாவம் அப்பிடி. அதனாலதா சிலர் பெத்தவங்க யாருன்றது தெரியாததா வெளியிலருந்து புள்ளைங்கள தத்தெடுக்கறது. இந்த வழில ஏதாவது ஒரு பொண்ணு, புள்ளைய தத்தெடுக்காலாமான்னு சீதா கிட்ட பேசிப் பாரேன்.’

பெரியவர் சொன்ன இரண்டாவது வழி கணவன், மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏற்றதாகத்தான் தெரிந்தது. ஆனால், தம்பதியர் இருவரின், ‘பார்ப்போம்!’ என்கின்ற அலட்சியத்தில் சரியென்று தோன்றிய யோசனையும் நியாயமான காரணமில்லாமல் நிறைவேறாமல் போயிற்று. ஏறக்குறைய இருபதாண்டுகள் என்னும் நீட்சியுடன் காலமும் அதன் போக்கில் கடந்து போயிற்று.

கூப்பிட்ட குரலுக்கு மறுப்பு சொல்லாம அனாத அத்த நம்மள நம்பி வந்துடுச்சி. மிச்சமிருக்கற காலத்துக்கு அத்தைய நல்லா பாத்துக்க. மத்தது ஆண்டவன் விட்ட வழி.” என்ற பெரியவர் ரங்கசாமி, சிரமத்துடன் குனிந்து கட்டிலின் விளிம்பில் கன்னத்தைச் சாய்த்திருந்த வெங்கடேசனின் தலையில் கை வைத்துப் பார்த்தார். ‘வெங்கடேசன் உறங்கி வெகு நேரம் ஆகிவிட்டது’ என்று நினைத்தவர் ஒரு சில நொடிகளின் இடை வெளியில் ஈனஸ்வரத்தில், “ வெங்கடேசா…!” என்று அலறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.