சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை

வீரபாகு முதலியார் குளித்து முடித்து கிணற்றங்கரையிலிருந்து இடுப்பில் ஈரத் துண்டோடு தோட்டத்துப் பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். உள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கூடம் அளவுக்கு இருக்கும் அறையின்( அது அறை அல்ல. ஒரு பெரிய கூடம்தான். ஒரு மூலையில் மாட்டுத் தீவனம் மூட்டை;. ஒரு பக்கம் பெரிய வென்னீர்த்தவலை வைத்து விடுவது மாதிரி முக்கூட்டி அடுப்பு’ இன்னொரு மூலையில் பாத்திரங்கள் என்னவோ பறத்தினாற்போல வைக்கப்பட்டிருந்தது). மேலோரம் உயர்த்தி கட்டியிருக்கும் கொடியிலிருந்து நேற்றுத் தோய்த்துக் காயப் போட்டிருக்கும் வேட்டியை ஒரு கம்பினால் ஏதோ தொரட்டிக் கம்பினால் மாங்காய் பறிப்பது போல எடுத்தார். வெள்ளாவி வைத்தது போல, தும்பைப் பூப் போல வெண்ணிறமாக இருந்த வேட்டியை எடுத்து உதறி இடுப்பில் சுற்றிக் கொண்டு இடது கையை வேட்டிக்குள் நுழைத்து ஈரத் துண்டினை உருவி எடுத்தார். மீண்டும் கிணற்றடிக்குப் போய் பிழிந்து வைத்த வேட்டியோடு, இந்தத் துண்டினையும் ஒரு அலசு அலசி எடுத்து வந்தார். வேட்டியைக் கொசுவி மீண்டும் அதே கொடியில் பறித்த மாங்காயை வைப்பது போல கையில் இருந்த கழியினாலேயே விரித்து விரித்து காயப் போட்டார். கையை கொஞ்ச நேரம் உயர்த்தி வைத்துக் கொண்டே இருந்ததில் தோள்பட்டையும், மணிக்கட்டுப் பக்கமும் வலித்தது. தலையைத் தூக்கியே வைத்திருந்தது, மீண்டும் தலை அதன் இடைத்திற்கு வந்தவுடன் ஒரு மாதிரி கிர் ரென்று சுற்றியது. மெதுவாக சுவற்றைப் பிடித்தாவாறு அந்த பெரிய தொட்டிகிட்டைத் தாண்டி, நிலா முற்றத்தைத் தாண்டி, கூடத்திற்கு வந்தார்.

கூடத்திற்குள் அடியெடுத்து வைத்தார் அவர். வலது பக்கம் திரும்பி சுவாமி அலமாரி முன் நின்று, இரண்டு கைகளையும் தூக்கி ஒரு கும்பிடு போட்டு, கண் மூடி நின்றார். எண்பத்தைந்து வயதுக்கும் மூப்பு தெரியாத தேகக் கட்டு. விபூதிக் கப்பரையில் இருந்து விபூதி எடுத்து, பஞ்சபாத்திரத்திலிருந்து கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும், இரண்டு கைகளிலும், நெஞ்சின் குறுக்கேயும் பட்டைகளை போட்டுக் கொண்டார். ஆழி மழைக் கண்ணனாய் கறுத்த உடம்பில், காய்ந்தவுடன் விபூதிப் பட்டைகள் பளிச்செனத் தெரிந்தன.. இது மாலையில் அவர் முகம் கழுவுவது வரை அப்படியே இருக்கும். மூன்று தோப்புக்கரணம் போட்டார்; இரண்டு ஊதுபத்தியை எடுத்து ஏற்றி, ” ஐந்து கரத்தனை” சொல்லி முடிக்கும்போது ஊதுபத்தியை எல்லாப் படங்களையும் சுற்றி, ”ஓம்” என்று எழுதுவது போல் சுற்றி முடித்து ஊதுபத்தி ஸ்டேண்ட்டில் குத்தினார். இவர் போட்ட ஊதுபத்தி “ஓம்” வளையத்தில் அப்படியே மயிலோடு முருகன் வந்து நின்ற மாதிரி இருந்தது. ”துதிப்போர்க்கு வல்வினை போம்” என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தார். அப்புறம், “ பால் நினைந்தூட்டும்” ஆரம்பிப்பார். அது முடித்து, “கலையாத கல்வியும்” தொடர்ந்தது.. அதைத் தொடர்ந்து “ ஒருமையுடன் உனது திருவடி நினைக்கினற உத்தமர் தன் உறவு வேண்டும்” எனத் தொடர்ந்தார். இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டே, ஏற்கனவே மருமகள் செங்கமலம் பறித்து வைத்திருந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களை ஒவ்வொரு படத்திற்கும் வைத்து முடித்தார். கடைசியில், நெருக்கித் தொடுத்திருக்கும், முல்லைச் சரத்தை எடுத்து, தங்க ஃப்ரேம் போட்ட சதுரத்திற்குள் மங்கலமாய்ச் சிரிக்கும் மங்கலட்சுமி படத்திற்குச் சாற்றினார். கண்ணில் நீர் துளிர்த்தது. “என்ன இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டேயேடி பாவி மனுஷி” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். அவ்வளவுதான், பூஜை முடிந்தது.

மாமனாரின் “ஒருமையுடன்” காதில் விழுந்தவுடனேயே செங்கமலம் சிற்றுண்டியைத் தயாராக கூடத்தில் இருக்கும் உணவு மேசையில் கொண்டு வைத்து விடுவாள். நாற்காலியை பின்னுக்கு இழுக்கும் சத்தம் வந்தவுடன், அவள் வந்து அவருக்குப் பரிமாறுவாள். மூன்று இட்டிலிகளோ, இரண்டு தோசைகளோ சாப்பிட்டு, தொண்டைக்கு இதமாக சின்னச் செம்பில் வென்னீர் குடித்து விட்டு, அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு, வெளித்திண்ணையில் வந்து இரண்டு பக்கமும், கையை நன்றாக ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கும் மர நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் வந்து உட்கார்ந்தால் மணி 9.25.

முதலியார் திண்ணையில் வந்து உட்காருவார். செய்தித்தாளைப் பார்ப்பார். நடு நடுவே தலையை நிமிர்த்தி சாலையில் போவோர் வருவோரையும் பார்த்துக் கொள்வார். அவர்கள் வீடு, கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி போகும் பிரதான சாலையில் உள்ளது. இரண்டு நகருங்களுக்குமிடையே வழி நெடுக அழகான பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் நிறைந்த கிராமங்கள். வியாபாரிகள், நரிமேட்டு ஜோஸ்யர்களைப் பார்க்கச் செல்பவர்கள், பாலூர் பண்ணைக்கு விதையோ, மரக் கன்றுகளோ வாங்கச் செல்பவர்கள், காய்கறிகள் அப்படியே புதிதாகக் கிடைக்கிறதே என்று வாங்க வருபவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அக்கம் பக்கத்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவ மாணவிகள் என எப்போதும் சாலை சுறுசுறுப்பாகவே இருக்கும். அதனால், வீரபாகு முதலியாருக்கு நேரம் போவதே தெரியாது.

அன்று வீரபாகு முதலியார் திண்ணையில் வந்து அமர்ந்து நிமிரும்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் போனதைப் பார்த்தார். அந்தப் பெண், வழக்கமாக முன்னால் உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஆணின் தோளையோ, தொடையையோ பிடித்துக் கொள்ளவில்லை. என்னவோ, பேருந்தில் உட்கார்ந்து செல்பவள் மாதிரி, மடியில் கைப்பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தன் வீட்டு வாசலை அந்த வண்டி கடக்கும் அந்த ஒரு நிமிடத்தில் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவருக்குக் கண்கள் மலர்ந்தன. ”ஐயோ….அப்படியே மங்கா மாதிரியே இருக்கா” என்று நினைத்துக் கொண்டார். இன்னொரு தரம் பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போது வண்டி அவர் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அதன் பின், முதலியாருக்கு செய்திகளில் மனம் செல்லவில்லை.

மங்கலட்சுமி போய்ச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஓடியே விட்டன. ”யாராரோ என்கேர்ந்தெல்லாமோ திருக்கடையூர் வந்து அறுபது, எண்பதும் செஞ்சிக்கிட்டுப் போறாங்க; இந்தா நம்ப இவ்வளவு கிட்ட இருந்துக்கிட்டு செஞ்சுக்காட்டா எப்படி” என்று சிதம்பரத்தில் இருக்கும் மச்சினிதான் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்ளத் தூண்டினாள். அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டார்கள்தான். அப்போது அலுவலக நண்பர்கள் தூண்டுதலினால் செய்து கொண்டார். அவருக்கென்னவோ அதிலெல்லாம் ரொம்ப ஈடுபாடு இல்லை. மங்காதான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாள் அவளுக்கு எப்போதும் குழந்தைகள் மாதிரி மகிழ்ச்சிதான். தன்னிடம் அவள் அதிகமாகக் கோபப் பட்டது கூட இல்லை. தான் எது சொன்னாலும் முதலில் ஒப்புக் கொள்வாள். அதில் அவளுக்கு வேறு யோசனை இருந்தால் அதைப் பக்குவமாக, அப்புறம்தான் சொல்வாள். அவளுக்கு எதுவும் தெரியாத மாதிரி இருக்கும். ஆனால், அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். அது மாதிரி, மனுஷாளுடன் பழக அவளை மதிரி முடியாது. வாசலில் வரும் பூக்காரியிடமும் சரி, அக்கம் பக்கம் வீடுகளிலும் சரி, தன் வீட்டு சொந்தம், அவள் வீட்டு சொந்தமாகட்டும், நண்பர்களாகட்டும் யாருடனும் அவளுக்குப் பகையில்லை. எப்பப் பார்த்தாலும் “மனுஷா வேணும் காலத்துக்கும். பணம் வரும், போகும், மனுஷாள் கிடைப்பாங்களா”: என்று சொல்லிக் கொண்டே .யிருப்பாள் அது மாதிரி எந்த விசேஷங்களூக்கு யார் வீட்டுக்குப் போனாலும் சரி, உடனே, அது என்னவோ தன் வீட்டு விசேஷம் மாதிரி ஒன்றி விடுவாள். அவளே பந்தி பரிமாறுவாள். அவர்கள் வீட்டுக்கு என்ன உறவு முறையோ அதை வைத்தே இவளும் அவர்களை விளிப்பாள். அந்தக் குடும்பத்தினர் யாரும் இவளை மறக்க முடியாதபடிச் செய்து விடுவாள்.

தான் கூட அவள் என்னவோ அதீதமாக நடந்து கொள்கிறாளோ எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால். அவள் இறந்து போய், கடந்து விட்ட இந்த ஐந்து வருஷத்தில், யார் வீட்டு விசேஷங்களூக்குப் போனாலும், அவர்கள் மங்காவை ஞாபகப்படுத்துவது இருக்கட்டும், இவருக்கே மங்கா இல்லாத அந்த விசேஷ வீடு வெறிச் சென இருப்பது மாதிரி இருக்கும்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே இப்படி யோசனைகளில் மூழ்கிப் போனவரின் கண்ணோரம் கசிந்திருந்தது. வாசலில் எரிவாயு உருளை கொண்டு வருபவர்களின் வண்டிச் சத்தமும், உருளைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும், உருண்டு கொண்டும் வருகிற ஓசையும், “சார்…கேஸ்” என்ற குரலும்தான் அவரது நினைவுகளை அறுத்தன. வீட்டினுள்ளே திரும்பிப் பார்த்தார். அதற்குள் மருமகளே கையில் பதிவேட்டுப் புத்தகத்துடன் வந்து விட்டாள். உருளையை உருட்டி உள்ளே வைத்து விட்டு அதை வைத்தவன் வெளியேறிப் போனான். வீரபாகுவும் எழுந்து உள்ளே சென்றார். தன்னுடைய அறையில் போய் ஈசிசேரில் சாய்ந்து கொண்டார். அங்கும் மங்கா புகைப்படத்தில் சிரித்தாள். என்னவோ, இன்று காலை, அந்த இருசக்கர வாகனத்தில் கடந்து போன அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்காவின் நினைவு அதிகமாகத் தோன்றுகிறது. மருமகளுக்கு வேலைகள் ஆகி விட்டன போலும். தொலைக்காட்சியில் அவள் தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டாள். மகன் சாப்பிட வர இரண்டு மணி ஆகும்.

மங்காவுக்கும் தனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ஏதோ தூரத்து சொந்தம். வீரபாகுவுக்கு இரண்டு அக்காக்கள் மூன்று தங்கைகள். எல்லோர்க்கும் இவர் செல்ல சகோதரன். பாலூரில் தாத்தா பார்த்திருந்த விதைப்பாடு கொஞ்சமும், ஒரு வீடும் இருந்தது. அப்பா, பாலூர் காய்கறிப் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இரண்டு அக்காவுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணம் முடித்த பிறகு இறந்து போனார். மற்ற இரண்டு தங்கைகளின் திருமணத்தை இவர்தான் செய்து முடித்தார். அப்பா இறந்துபோனவுடன், இவருக்கும் அந்தப் பண்ணையிலேயே வேலை கிடைத்தது. வயதும் முப்பத்தந்தை நெருங்கியது. அப்போதுதான் பெரிய அக்கா மூலமாக கடலூர் கரும்புப்பண்ணையில் வேலை பார்க்கும் தண்டபாணி என்வருக்கு பெண் இருக்கும் விஷயம் தெரிய வந்தது. மங்காவின் கரம் பிடித்தார். பாலூர் வாசம். வந்த கொஞ்ச நாட்களிலேயே மங்கா இந்த வீட்டு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டதோடு, வயல், விதைப்பாடு பற்றியும் தெரிந்து கொண்டாள். பண்ணை அலுவலக வேலைகளோடு, வீரபாகுவும் வீட்டு விதைப்பாடு வேலைகளையும் கவனித்துக் கொண்டார். மங்கா வந்த நேரமோ என்னவோ, தொட்டதெல்லாம் துலங்கிற்று. கொய்யா போட்டாலும், நிலக்கடலை போட்டாலும், மிளகாய் போட்டாலும் எல்லாம் நல்ல விளைச்சல் கொடுத்தன. மங்கா பக்குவமாக சொந்தக் காரர்களுக்கும் அள்ளிக் கொடுத்தாள். தன் குடும்பத்துக்கும் லாபம் வருவது மாதிரி பொருட்களை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்தாள்.

தெருவில் யாரோ மாடு விரட்டிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. வளையல் விற்பவர் “ கண்ணாடி வளையல்” “கண்ணாடி வளையல்” என்று விட்டு விட்டு ராகமாகச் சொல்லியபடியே தள்ளு வண்டியை உருட்டும் சத்தம் கேட்டது. கண்ணை மூடிக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்த வீரபாகு கண்ணைத் திறந்து பார்த்தார். கடிகாரம் சரியாக பனிரெண்டு மணியைக் காட்டியது. கடிகாரத்தின், “சிக்’ “சிக்” என்ற சத்தம் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மருமகள் செங்கமலம் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சமையற்கட்டுக்குப் போயிருப்பாள் போல. அருகிலிருக்கும் மேசை மீதிருந்த செம்பிலிருந்து அதன் மூடி விலக்கி, பக்கதிலிருந்த தம்ளரில் விட்டுத் தண்ணீர் குடித்தார்.

மூடி வைத்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத்தான் வெற்றிவேல் பிறந்தான். அதற்குள் எத்தனை பேச்சுகள், சந்தேகங்கள். எல்லாவற்றையும் மங்கா சகித்துக் கொண்டாள். தான் தளர்ந்த போது கூட “எப்பவும் நல்லதையே நினைங்க..நடக்கும், நடக்கும்னு நாம்ப நினைக்க நினைக்கத்தான் நல்லது நடக்கும். நம்ப எண்ணங்களுக்கு அப்பிடி ஒரு வலிமை இருக்கு தெரியுமா” அப்படினு சமாதானப்படுத்துவா. அவ எவ்ள நல்லவ. எதிலுமே அவளுக்குக் குத்தம் கண்டுபிடிக்கத் தெரியாது. யாரையும் கெட்டவங்கனு அவ ஒரு நாளும் சொன்னது கிடையாது. யார் என்ன சொன்னாலும்” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி” அப்படினு சொல்லிடுவா. மீண்டும் வீரபாகு முதலியாருக்கு ரொம்ப அழுகையாக வந்தது. “ஏண்டி….மங்கா…என்ன விட்டுட்டுப் போன” என்று மனதிற்குள் நினைத்து கண்ணீர் சொரிந்தார். குளிச்சிட்டு வந்த ஈரம் காயறதுக்குள்ள காபியக் குடிச்சுட்டு, ஊஞ்சல்ல உட்கார்ந்தவ அப்படியே போயிட்டியே…மகராசி….ஒரு வார்த்தை என்கிட்ட பேசலையே…. ஈசி சேரில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்கா நினைவு அதிகமாக வருகிறது. அவள் முகம் அப்படியே மங்கா முகம் மாதிரியே இருந்தது. அவள் எங்கிருந்து எங்கு போகிறாள்? மீண்டும் இந்த வழி வருவாளா? அப்படியே அங்கு தங்குபவளா? இல்லாவிட்டால், நெல்லிக்குப்பம் வழியாக மீண்டும் கடலூர் சென்று விடுவாளா? மீண்டும் அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

வெற்றிவேல் பிறந்தபோது இங்கு பாலூரிலேயே இருந்தோம். அவனைப் படிக்க வைக்க வேண்டும் எனும்போது, கடலூர்தான் சரிப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மஞ்சக்குப்பத்தில் வீடு பார்த்து, மங்காவும், வெற்றிவேலும் அங்கிருப்பது என்றும், தான் மட்டும் வாரத்திற்கு இருமுறை கடலூர் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மங்கா புளிக் குழம்பு, பொடிகள், இட்டிலி மாவு எல்லாம் செய்து தருவாள். வீரபாகு பாலூருக்கும், கடலூருக்கும் அலைந்து கொண்டிருந்தார். வெற்றிவேல் நன்றாகப் படித்தான். அவன் விவசாயம் சார்ந்தே வளர்ந்ததால் அதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றான். முடித்து விட்டு வந்தவுடன் அவன் கிராமத்திலிருந்து விவசாயம் பார்க்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லி விட்டான். படித்த படிப்பையும், அனுபவத்தையும் இணைத்தான். விவசாயம் பெருக்கினான். உரக்கடை வைத்தான். திருமாணிக்குழியிலிருந்து திருவதிகை வரை விதைப்பாடு வைத்திருக்கும் அத்தனை ரெட்டியார்களும் இவனிடம் வந்து ஆலோசனை கேட்டார்கள். செழித்தார்கள். வீரபாகுவுக்கும், மங்கலட்சுமிக்கும் அளவிட முடியாத சந்தோஷம். அவனுக்கு புவனகிரியிலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்களுக்குத் தங்களைப் போல தாமதமாகாமல் திருமணம் முடிந்த அடுத்த வருடமே ராஜா பிறந்தான். இப்போது அவன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான்.

வீரபாகு எழுந்து தோட்டத்துப் பக்கம் போய் சிறுநீர் கழித்து வந்தார். சமையற்கட்டைத் தாண்டும்போது செங்கமலம் அப்பளம் பொரிக்கும் வாசனை வந்தது. இப்போது செங்கமலம் இவரைச் சாப்பிடக் கூப்பிடுவாள். வெற்றிக்கு அவன் வரும் வரை தானும் காத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும்.” ஏம்ப்பா சாப்பிடாம இருக்கீங்க. நான் வர முன்னப்பின்ன ஆகும். நீங்க அது வரயிலும் சாப்பிடாம இருக்க முடியுமா” என்று கேட்பான். செங்கமலத்திடம் அப்பாவிற்கு வேளையோடு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அதனால், வீரபாகு, தான் மட்டும் முன்னாலேயே சாப்பிட்டு விடுவார். சாப்பிட்டு, மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாரானால், ஒரு தூக்கம் போடுவார். அப்புறம் நாலு மணி வாக்கில்தான் எழுந்திருப்பார். அதிகம் பேசவே மாட்டார்.

அன்று மதிய உறக்கத்திலும் கனவு வந்தது. மங்காதான். பைக்கில் இருவரும் உல்லாசமாக பாலூரிலிருந்து கடலூர் கடற்கரை வரை போகிறார்கள். கடற்கரையில் மணலில் அம்ர்கிறார்கள். மங்கா அலையில் கால் நனைக்க வேண்டும் என்று அழைக்கிறாள். இவருக்கோ அது பிடிக்காது. பிடிக்காது என்றால் கால் எல்லாம் நனைந்து, மீண்டும் மணல் ஒட்டிக் கொள்ளுமே என என்னவோ ஒரு விருப்பமின்மை. மங்கா குழந்தை மாதிரி புடவையை முட்டி வரை தூக்கிக் கொண்டு அலையில் நிற்கிறாள். மொத்தப் பல்லும் தெரியும்படி சிரித்தபடியே களிக்கிறாள். மீண்டும் கரைக்கு வந்து தன்னோடு ஒட்டி உட்கார்ந்து கொண்டு, பேசுகிறாள். என்ன சொல்கிறாள்?

’ இப்டியே நம்ப ரெண்டு பேரும் கடசி வரக்கும் சந்தோசமா இருக்கணும்.நீங்க என் கூடவே இருக்கணும்ங்க கடசி வரைக்கும்.”

“சீ…என்ன பேச்சு இது. நம்ப ரெண்டு பேரும் ஜாலியா பைக்குல பீச்சுக்கு வந்திருக்கோம். என்ன பேசற நீ? அவள் கையைப் பிடித்துக் கொண்டார். மல்லிகைப் பூ விற்கும் சிறுமி ஒருத்தி பக்கத்தில் வந்தாள். அவளிடம் இரண்டு முழம் தேவணாம்பட்டினம் மல்லி வாங்கிக் கொடுத்தார். அப்பா…என்ன மணம்….மூச்சை இழுத்தார். மல்லிகை வாசனை. அடித்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். வாசலில் செங்கமலம் பூ வாங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. வெற்றி வந்து சாப்பிட்டுச் சென்று விட்டான் போல. மணியை பார்த்தார். 4 30 என்று காட்டியது. எழுந்து, தோட்டத்துப் பக்கம் போய் வந்தார். செங்கமலம் தேநீரும், ஒரு தட்டில் கொஞ்சம் ஓமப் பொடியும் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிட்டு, காலையில் படிக்க விட்ட செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வாசலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். மாலை நேர சம்சா, பஜ்ஜி வியாபாரங்கள், பூக்காரிகள், பள்ளி விட்டு பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மாணவர்கள்.

ஹா….காலையில் பண்ருட்டி போன அந்தப் பெண்…அதோ…அவர்கள் வண்டி வந்து விட்டது. அவள் முக தரிசனம்…ஒரு விநாடி இருக்குமா..ஒரு நிமிஷம் இருக்குமா…பளிச்….மின்னல் போல மறைந்து போனாள். மனசுக்குள் உற்சாகம் பெருக்கெடுத்து வந்தது. கொஞ்ச நேரம் நடக்கலாம் போல இருந்தது. மெல்ல கடை வீதி வரை நடந்து விட்டுத் திரும்பினார். அன்று நல்ல உறக்கம் வந்தது.

மறு நாள்…… இன்று அவள் வருவாளா எனக் காத்திருக்க ஆரம்பித்தார். சரியாக 9 30க்கு வாசலில் வந்து அமர்ந்தார். அவள் வந்தாள். மாலையும் அவள் திரும்பினாள். ஒரு நிமிட தரிசனம்தான்.மனசெல்லாம் பொங்கியது. இரண்டு மாதங்களாக வீரபாகு உற்சாகத்தில் மிதந்தார். செங்கமலம், வெற்றிவேலிடம் ஒரு நாள் சொன்னாள் .” மாமா இப்ப ரெண்டு மாசமா ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி இருக்கு. நல்ல சாப்புடறாங்க” .

வீரபாகுவுக்குக் காலையில் ஒன்பது மணியாகி விட்டால், இப்போது அவள் சுந்தரவாண்டி தாண்டியிருப்பாளா, வானமாதேவி வந்திருப்பாளா, என்று மனசு அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மாலையிலோ திருவதிகை தாண்டியிருப்பாளா, நரிமேடு வந்திருப்பாளா, எழுமெடு வந்திருப்பாளா என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்க ஆரம்பித்தார். மழை வரும் மாதிரி இருந்த ஒரு நாளில், அடடா…அவள் நனையாமல் இருக்க வேண்டுமே என கவலைப்பட்டார். மாலையில் மழை வந்து விட்டால், அவர்கள் நம் வீட்டுத் திண்ணையில் ஒதுங்க நேர்ந்தால், அவர்களுக்கு செங்கமலத்தை காபி தரச் சொல்ல வேண்டும். அவள் முகத்தை அருகிருந்து பார்க்க வேண்டும்.

இரண்டு மாதமாக போகும்போதும், வரும்போதும் பார்க்கிறாரே தவிர அவளைப்பார்த்து ஒரு புன்னகை கூடப் பூத்தது கிடையாது. ஆனால், அந்தச் சனிக்கிழமை மாலை அவள் தன் வீட்டைக் கடக்கும்போது அவளைப் பார்த்து சிரித்தார். அவளும் சிரித்துக் கையசைத்தாள். அவருக்கு மனசெல்லாம் சந்தோஷம் பொங்கிப் பிரவகித்தது.

அன்று இரவு மகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவளைப் பற்றிச் சொன்னார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள்தான் என்றும், எனவே ஞாயிறு வர மாட்டார்கள் எனவும், திங்கள் கிழமை மாலை அவர்கள் தங்கள் வீட்டைக் கடக்கும்போது அவர்களை நிறுத்தி, கொய்யாப் பழமும், கடலைக்காயும் தர வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்.

ஞாயிறு காலை செய்தித்தாள் பார்த்த பிறகு, தன் அறையில் போய் ஈசி சேரில் சாய்ந்து கொண்டவர் கண்ணை மூடியிருந்தார். ஒரு முறை மங்கலட்சுமியின் படத்தை கண் விழித்துப் பார்த்தார். மங்கலட்சுமி, நேற்று அவள் கையசைத்தது போல் அசைத்த மாதிரி இருந்தது. செங்கமலம், மாமனார் சாப்பிட உள்ளே வரவில்லையே எனப் பார்த்தாள். அவர் அறையில் போய் கூப்பிட்டு வரச் சென்றாள்.

திங்கள் கிழமை அவனும். அவளும் வந்து கொண்டிருந்தார்கள். பாலூர் கடை வீதியில் பெரிய தட்டி வைத்திருந்தது. அவள் பார்த்தாள். அதில் வீரபாகு பட்டை பட்டையாக திருநீறு பூசிய வடிவில் சிரித்திருந்தார். ” ஐயோ…இந்தப் பெரியவரா? “ சனிக்கிழமை கூட பார்த்தோமே” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். கடைவீதி தாண்டி, வீரபாகு வீடு நெருங்கும்போது, போடப்பட்டிருந்த ஷாமியானாவும், கிடந்த நீல நாற்காலிகளும், மரண வீட்டின் லட்சணங்களைச் சொன்னது. ஒரு கறுப்பு நாய் குறுக்கே வந்தது. வண்டியின் ஒலிப்பான் சத்தம் கேட்டு திண்ணையில் நீர்மாலைக்கு மண்குடம் தூக்கி நின்றிருந்த வெற்றிவேல் பார்வையைத் திருப்பினான். அதில் உட்கார்ந்திருந்த பெண் அவன் அம்மா மங்கலட்சுமியின் சாயலில் இருந்தாள்.

அது வரை அழாமல் இறுக்கமாய் இருந்தவன் அழ ஆரம்பித்தான்.

3 comments

  1. யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும் வீரபாகுவுக்குத் தன்மனைவியின் சாயல் இருப்பது தெரிய வருகிறது. அதிலேயே மூழ்கி விடுகிறார். அந்தப் பெண்வராதது அவருக்கு உறுத்துகிறது . மகனிடமும் கேட்கிறார். அவனுக்கும் ஓரளவு புரிவதால்தான் அச்சுவரொட்டிகள் அவனுக்கு அழுகை வரவழைக்கின்றன. சாயல் பெயருக்கேற்ற நல்ல கதை. ஓரிடத்தில் கடவுளைக் கொண்டுவந்து மனிதனுக்கு உவமை சொல்வது நெருடுகிறது

  2. சாயல்……நெஞ்சின் நினைவுகள் கடைசி வரை கரையாதோ?!😥😢

  3. சாயல் கதை துணை இழந்து விட்ட ஆண்குயிலின் சோகராகம். நெஞ்செல்லாம் விரவி வருகிறது.வாழ்த்துகள் ஜெயஸ்ஸ்ரீ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.