தக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை

எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் பிள்ளை. வாங்கிய ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாமல் சொல்லித் தந்தனர் என மொழிவதைக் காட்டிலும் வாங்கிய ஊதியத்துக்கு மூன்று மடங்கு பாடம் நடத்தினர் என்பது பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால் அறுபதாண்டுகள் கடந்தும் அவர்களின் பெயரினைச் சொல்வேனா? அகப்பையில் கோரக்கோர வருவதற்கு அவர்கள் பானையிலும் தாராளமாக இருந்தது. அல்லாது நாம் மாப்புலவர் குடும்பத்து, மூப்புத் தமிழறிஞர் குடும்பத்துக் குலக்கொழுந்து அல்லவே!

ஏழாவது வகுப்பில் வாசிக்கும்போது எமக்கு அறிமுகமான திருக்குறளின் ஒரு சொல்லே ஈண்டு கட்டுரையில் முயலப்படுவது! வேறு என் செய? திக்கற்றவனுக்குத் திருக்குறளே துணை. திருக்குறளின் அறத்துப்பாலின் நடுவுநிலை அதிகாரத்துக் குறள் அது.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

என்பதந்தக் குறள். வயக்காட்டிலிருந்து நேரே வகுப்புக்கு வரும் எங்களுக்கு அர்த்தமாகும்படிப் பாடம் நடத்துவார்.

ஒருவர் தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா அல்லது புன்மகனா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்பார் திருவள்ளுவர். பறவைகள் கழிக்கும் மலத்தை யாம் எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். வாசம் அல்லது துர்நாற்றம்.

சமூகமே நற்சான்று உரைக்கும், “நல்ல மனுசன் பா!” என்று அபிப்பிராயம் வரும். “மனுசனா அவன்?” என்ற பழிச்சொல்லும் வரும். அதாவது ஒருவன் செய்த நல்லவையோ, அல்லவையோ அவனது எச்சம் எனப்படும். அதுவே அவனைத் தக்காரா அல்லது தகவிலரா என்பதைத் தீர்மானிக்கும்.

தக்கார் என்பது இன்று நமக்கோர் பதவியின் பெயர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற அமைப்பால் நியமிக்கப்படுவதல்ல. ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கான பதவி. இந்து அறநிலையத்துறை ஆலயங்களை நிர்வகிக்க அரசு நியமிக்கும் அறங்காவலரே தக்கார் எனப்படுபவர். TNPSC–க்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக்கேட்டால், முன்னதற்குப் போட்டித் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலும் அஃதோர் சடங்கு அல்லது சம்பிரதாயம். பணம் பாதாளம் வரை பாயும். தக்கார் என்போரில் பெரும்பான்மையோர் ஆற்றும் அரும்பெரும் இறைப்பணி, சமூக நற்பணி, எவை என நாமிங்கு பேசாதிருப்பதே பெருமை. இந்துக் கோயில்களின் தக்கார் இறை மறுப்பாளராக இருக்கலாம், மாற்று மதத்தவராயும் இருக்கலாம் என்பது சமூக நீதியின் விதி.

அதற்காகத் தக்காருக்கு உண்டியலில் பங்கு, சொத்துக்களை வேண்டியவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுதல், சிலைகளை ஆபரணங்களை காணாமல் போக்குதல், தம்மைப் பதவியில் அமர்த்திய அரசியல் கட்சித் தலைவருக்கு அத்தக்கூலியாகப் பணிசெய்தல் என்பவை தொழில் என்று நீங்கள் வீணாகக் கற்பனை செய்து கொள்ளலாகாது! இதெல்லாம் செய்வதாயின் அவர் எங்ஙனம் தக்கார்?

எச்சம் எனும் சொல் பற்றியும் நாம் பேசல் வேண்டும். ஒருவன் செய்த தான தருமங்கள், கல்விக்காக மருத்துவத்துக்காக செய்த சேவைகள், தான் சம்பாத்தியத்தையும் மூதாதையர் சொத்தையும் தன் பிள்ளைகளுக்குப் போக மிஞ்சியதை அறக்கட்டளை நிறுவி சமூகத்துக்கு ஆற்றிய பணிகள், மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்த ஆய்வுகள், கலை இலக்கியம் இசைக்கு என ஆற்றிய ஊழியங்கள், எழுதிய நூல்கள், செய்த திருப்பணிகள், உடுக்கை இழந்தவன் கையெனப் பிறர்க்குச் செய்த உதவிகள் எனும் எண்ணற்ற காரியங்கள் ஒருவனின் எச்சம்.

தமிழாசிரியர் சொல்வார், “பெத்த பிள்ளைகளும் எச்சம்தான்டா!” என்று. பெரியவர்கள் இலகுவாக அறிவுறுத்துவார்கள், “எலே! அப்பன் பேரைக் காப்பாத்தணும் கேட்டயா?” என்று. “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கான்” என்பார்கள் பாராட்டாகவும் வசவாகவும்.

இன்றோ அறக்கட்டளைகள் என்பன பெரும்பாலும் வருமானவரி விலக்குக்கும், மறைமுகமான வெளிநாட்டுப் பணங்கள் பெறவும், செலவுக்கணக்கு எழுதவும் என்றே ஆகிப்போயின.

ஒருவனுடைய நல்ல காரியங்கள் யாவுமே அவனுடைய நல்ல எச்சங்கள். தக்கார் என்பது அவரது எச்சத்தால் காணப்படும். தகவிலர் என்பதுவும் அவரது எச்சத்தினாலேயே அறியப்படும். எவரும் அரசுப் பணியை உதிர்ந்த மயிர் என வீசிவிட்டுத் தம் இன மக்களுக்குப் போராட அரசியல் களமாட வரலாம். போற்றுதலுக்குரிய செயல். ஆனால் களமாட எனும் சொல் எழுத்துப் பிழையாகக் களவாட என்று மாறி இருபது ஆண்டுகளில் எழுநூறு கோடி சம்பாத்தியம், ஆயிரத்து இருநூறு கோடி சம்பாத்தியம் என்றால் எச்சத்தால் அவர் தக்காரா, தகவிலரா?

தகவிலர் என்றால் உண்மையற்றவர், நேர்மை அற்றவர், ஒழுக்கம் கெட்டவர், அறத்துக்கே கூற்றானவர், அரசியல் பிழைத்தவர், கூட்டிக் கொடுத்தவர், காட்டிக் கொடுப்பவர், வஞ்சகர், எத்துவாளி, ஏய்ப்பன், பொறுக்கி… என்ற குருவாயூரப்பா!

“நல்லோரு மனுசன்… பொட்டுனு போயிட்டான்” என்று சமூகம் வருந்துமானால் அவர் தக்கார். “பேப்பய… நீசப் பாவி… இப்பமாவது செத்தானே!” என்று சமுகம் ஆசுவாசப் பெருமூச்சு விடுமானால், அவர் தகவிலர். நெஞ்சில் ஈரம் கொண்டு, நியாயமாகப் பொருள் சேர்த்து, தன் சந்ததியாருக்கும் பொருள் ஈட்டி, ஏழை எளிய மக்களுக்கும் கொடுத்துச் சாகிறவன் தக்கார். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் பேரன், தன் சின்ன வீடு, வைப்பாட்டி, கூத்தியார், தன் கொழுந்தியாள், மைத்துனர், தன் சகோதர சகோதரிகள் அவர் எல்லோரது மக்கள், மருமக்கள் என்று நாட்டைக் கொள்ளையடித்துப் புன்மையான செல்வம் சேர்த்தவர் தகவிலர். இது நம் வசவல்ல, சாபமல்ல, வள்ளுவன் வாய்மொழி.

முன்பே சொன்னேன், எங்கள் தமிழாசிரியர் கற்பித்தார் என. எச்சம் என்பதற்குப் பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் என. அடாவடியாகத் திரியும் சிலரைப் பார்த்து ஊரில் பெரியவர் சொல்வார், “அப்பன் பேரைக் கெடுக்கதுக்குன்னே வந்து வாச்சிருக்கான், கழுதைக்கு மத்தது வாச்சது மாதிரி” என்று. “எப்படியாப்பட்ட மனுசனுக்கு இப்படியாப்பட்ட பிள்ளை!” என்பார்கள். எனவே நன்மக்கட்பேறு வாய்த்தவர் தக்காரும் வாய்க்காதவர் தகவிலருமா? சரி, மக்கட்பேறு இல்லாமற் போனவர்? திருமணமே செய்து கொள்ளாதவர்? எனவே எச்சம் எனும் சொல்லுக்கு மக்களையும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, மக்கள் மட்டுமே என்று பொருள் கொளல் பொருந்தாது.

மற்றுமோர் கேள்வியும் உண்டு. தலைவன் ஒருவனுக்கு அவனது தளபதிகள், உப தளபதிகள், சிறு தளபதிகள், குறுந்தளபதிகள் என்போர் எச்சங்களா? காந்தியின், அம்பேத்காரின், மார்க்சின், செகுவேராவின், மாவோவின், பெரியாரின், காமராசரின் வழிவந்தவர் என்று தம்மை அறிவித்துக் கொண்டு கொலையும், கொள்ளையும் வஞ்சகமும் சூதும் தரகும் சுரண்டலும் அரசியல் வாணிபமும் செய்பவரைக் கணக்கில் கொண்டு அவர்களது தலைவர்களைத் தகவிலர் எனக் கொள்ளல் தகுமா? அந்தக் கணக்கில் பார்த்தால் கொண்டாடப்படும் மத குருக்களில் எவரை இன்று தக்கார் எனலாம்? எனவே எச்சங்களைக் கணிக்கும்போது தொண்டர்களையும் விலக்கி நிறுத்துவது தலைவருக்குப் பெருமை.

என்றாலும் தகவிலர் என்று வள்ளுவர் பேசும் குப்பைமேடுகளை, மலக்கிடங்குகளை, கழிவுநீர்க் கால்வாய்களை எத்தகு பட்டங்கள் சூட்டி, எங்கெங்கு சிலை நாட்டி, எப்படி ஆரவார அந்திமங்கள் செய்திருக்கிறோம் என்பதை சிந்தை தெளிவுள்ளோர் ஓர்மைப்படுத்திப் பார்க்கலாம்.

தகவு வேறு தகவல் வேறு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தகவல் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்களைத் தாழே தருகிறேன்.

தகவல் : 1. Information, Intimation, செய்தி.

‘ஒரு தகவலும் வரவில்லை எனக்கு’ என்று தினமும் புழங்குகிறோம். அரசாங்கமும் ஆளுங்கட்சியும் சொல்ல விரும்புவதை மாத்திரமே பேசுகிற ‘தகவல் தொடர்புத் துறை’ உண்டு. ஊடகங்களும் தமது முதலாளிகள் கட்டளையிடும் தகவல்களை மட்டுமே அரித்துத் திரித்துச் சாயமேற்றி வெளியிடும்.

2. திருட்டாந்தம். திருஷ்டாந்தம் எனும் சமற்கிருதப் பிறப்பு. Citation, Illustration, Example.

3. Appropriate Answer. நேருத்திரம். அதாவது நேர்+உத்திரம். உத்திரம் என்றால் பதில். மலையாளத்தில் உத்திரம் எனும் சொல் புழக்கத்தில் உண்டு. நேர்விடை எனலாம் தமிழில்.

தகவல் எனும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் என்றால், தகவு எனும் சொல்லுக்கு பதினோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில், நிகண்டுகளில். பதிவுகள் கீழ் வருமாறு.

தகவு : 1. Suitability, Fitness, Worthiness. தகுதி.

தகுதி எனும் சொல் திருக்குறளில் உண்டு. நடுவுநிலைமை அதிகாரத்தின் முதற்குறள் –

‘தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்’

என்று பேசும். அனைத்துப் பகுதி மக்களிடமும் முறை தவறாமல் நடந்துகொள்ளும் நேர்மை போற்றுதற்கு உரியது என்பது பொருள். மணிமேகலை சக்கரவாளம் உரைத்த காதையில் “தகவிலை கொல்லோ?” என்கிறது. தகுதி என்ற பொருளில்.

2. Similitude, Resemblance, Comparison, உவமை.

3. Quality, State, Condition, Manner, குணம்.

4. Emminence, Greatness, பெருமை.

திருவாசகத்தில் யாத்திரைப் பத்து பகுதியில் மாணிக்கவாசகர் ‘தகவே உடையான் தனைச் சாரத் தளராதிருப்பார்’ என்பார். பெருமை உடையவன் தன்னைச் சார்ந்தவர் என்றும் தளர்வடைய மாட்டார் என்பது பொருள்.

5. Mercy, Kindness, அருள்.

தகவுக்கு அருள் எனப் பொருளுரைப்பது சூடாமணி நிகண்டு.

6. தெலுங்கில் தகவு எனும் சொல்லுண்டு. பொருள் Justice, Equity, நடுவு நிலைமை.

7. Strength, Ability, வலிமை.

கம்ப ராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்தில் கம்பன் பேசுவான் –

“நீலன் முதல்பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர்,
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை”

என்று. ‘நீலன், அங்கதன், சாம்பன் முதலாய போரில் சொல்லுவதற்கு அரிய ஆற்றல் காட்டும் கொற்ற நெடுவீரர் உறுதியாக உரைத்தனர், தமக்குக் கடல் கடக்கும் வலிமை இல்லை என’ என்பது பொருள்.

8. Knowledge, Wisdom, அறிவு.

தகவு எனும் சொல்லுக்கு அறிவு என்ற பொருள் தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு. கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில் வசிட்ட மாமுனிவன் தயரதனிடம் கூறும் பாடல், “தக்கதே உரைத்தனை; – தகவோய்!” என்பது. ‘தகுந்ததையே உரைத்தாய் அறிவுடையவனே’ என்று பொருள் எழுதினார்கள்.

9. Clarity, தெளிவு.

தெளிவு என்ற பொருளைத் தகவுக்கு தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு.

10. Chastity, கற்பு.

பரிபாடலில் வைகையைப் பாடும் நல்லந்துவனார்,

‘தகவுடை மங்கையர்’ என்கிறார். கற்புடைய மங்கையர் என்று பொருள் சொன்னார்கள்.

11. Good Behaviour, Morality, Virtue, நல்லொழுக்கம்.

இந்தப் பொருளைத் தருவது யாழ்ப்பாண அகராதி.

ஆக தகவு எனும் சொல்லுக்கு நாமறியும் பொருள்கள் – தகுதி, உவமை, குணம், பெருமை, அருள், நடுவு நிலைமை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம் எனப் பதினொன்று. இவற்றுள் உவமை, கற்பு எனும் இரு பொருள்கள் நீங்கலாகப் பிற ஒன்பதுமே திருவள்ளுவர் பேசும்

‘தக்கார் தகவிலர் என்பது அவர்தம்
எச்சத்தால் காணப் படும்’

எனும் குறளுக்குச் சிறப்பாகப் பொருந்துகின்றன. வியப்பாக இருக்கிறது! திருவள்ளுவர் எப்படியாகப்பட்ட சொல்லைக் கையாள்கிறார் பாருங்கள்! அவரே சொல்வன்மை அதிகாரத்தில் கூறுகிறார் –

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’

என்று. ஐந்து ‘சொல்’ கையாள்கிறார் இந்தக் குறளில். ஆமாம்! தகவிலர் எனும் சொல்லை வெல்லும் சொல் எது?

Recommendation என்ற ஆங்கிலச் சொல் நமக்கு அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகள் ஆயின. சமூகத்தில் செல்வாக்கு உடையவர்கள் கல்விக்கும் வேலைக்கும் பணி உயர்வுக்கும் ஒப்பந்தங்களுக்கும் நீதிக்கும் இதனைச் செய்து தகவுடைய எளியவர் வறியவர் வயிற்றில் அடித்தனர். பின்னர் Recommendation உடன் இலஞ்சமும் தாலிகட்டிக் கொண்டது. கல்வித்தகுதி எல்லாம் இருந்தாலும் நன்கொடை என்னும் புனைபெயர் பூண்ட இலஞ்சம் என்னை நந்திபோல் வழிமறித்து நின்றது. கோரப்பட்ட இருபத்தைந்தாயிரம் கொடுக்க வக்கில்லை 1970-களில். கல்லூரியில் கணித விரிவுரையாளர் வேலை மறுக்கப்பட்டது. வேலை கிடைத்திருந்தால் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். புல்கானின் என்பதுபோல் மறைபெயர் ஒன்று தரித்து முற்போக்குப் புரட்சிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பேன்.

Recommendation என்ற சொல்லை சிபாரிசு என்று தமிழாக்கினர். ‘பெரிய சிவாரிசு இல்லாட்டா கெடைக்காது லே! நமக்கெல்லாம் எங்க? நரி சிவலோகம் போன கதைதான்!’ என்றார் அப்பா. Recommendation என்ற சிபாரிசு ஊழலின் முதல் காலடி. “பையன் நம்ம அக்காளுக்கு மகனாக்கும்… பாத்துச் செய்யுங்கோ!” போன்ற சொற்களே ஊழலின் வாசற்படிதான். இன்று ஊழல், லஞ்சம் எனப் பெருங்கூச்சல் இடுபவர்கள் அதனை மறத்தல் ஆகாது.

இன்று அமைச்சர்களாக, ஆளுநர்களாக, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாக ‘மக்கள் பணி’ ஆற்றுபவரில் பெரும்பான்மையோரும் கட்சித் தலைமகனுக்கு வந்த சிபாரிசுகள் இல்லாமல் சாத்தியமா? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சிபாரிசு எனும் சொல்லின் அர்த்தம் அறியாதவர்களா? பேரூராட்சி தேர்தலுக்கு உறுப்பினர் பதவிக்கு நிற்பவர் ஐம்பது லட்சம் பணம் செலவு செய்கிறாராம். எந்த சிபாரிசுக்கும் செவிமடுக்காமல், அதைப்போல் நூறுபங்குப் பணம் எங்ஙனம் ஈட்டுவார்?

சிபாரிசு என்பது சமற்கிருதச் சொல் என்பதால் அதனைப் பரிந்துரை என்று தமிழ்ப்படுத்தினார்கள். சிறப்புரை, கருத்துரை, தகுதியுரை, அணிந்துரை, முன்னுரை, தலைமையுரை, வாழ்த்துரை, பணிந்துரை, அருளுரை, பரப்புரை போலப் பரிந்துரை. பரிந்து+உரை = பரிந்துரை. அற்புதமான சொல். ஆனால் சிபாரிசு, பரிந்துரை என எச்சொல் பயன்படுத்தினாலும் அது அநீதியின் அடுத்துள்ள சொல்தானே!

ஊழலுக்கான பாதையில் பல படிகள் கடந்து பரிந்துரை எனும் சொல்லில் வந்து தாவளம் போட்டுள்ளோம். Night Soil என்றாலும், சண்டாஸ் என்றாலும், கழிவு என்றாலும், மலம் என்றாலும், உண்மையில் அது பீ தானே நாயன்மாரே!

‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும் என்றுஎழிற் கனிவாய் திறந்தார் நம் அருள்வள்ளல்’

என்பது இரட்சணிய யாத்திரீகத்தில் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய பாடல். இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் காட்சியில். அங்கு பேசப்படும் சொல், பரிந்து.

பரிந்து எனும் சொல்லின் பிறப்பே பரிந்துரை. ஆனால் இன்று பரிந்துரை எனும் சொல் வந்து சேர்ந்திருக்கும் இடம் பரிதாபத்துக்குரியது. பரிந்துரையும் பணமும் இருந்தால்தான் இன்று கல்வி, வேலை, பணி உயர்வு, பதவி, ஒப்பந்தங்கள் and what not? நாம் தக்காரா தகவிலரா?

பேரகராதி தகவுரை என்றொரு சொல் தருகிறது. தகவு+உரை. தகவுரை என்பதன் பொருள் Recommendation, சிபாரிசு என்கிறது பேரகராதி. தொகுக்கப்பட்ட காலத்தில் பரிந்துரை எனும் சொல் பிறந்திருக்காது போலும். ஆனால் தகவுரை எனும் சொல் பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சொல்.

வைணவ இலக்கிய நூல்களில் அஷ்டப் பிரபந்தம் என்று ஒன்று. அஷ்டம் என்றால் அட்டம், எட்டு. அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியது. இத்தொகை நூலுக்கு, நூலாசிரியர் அஷ்டப் பிரபந்தம் என்று பெயரிடவும் இல்லை, இவற்றில் அடங்கிய எட்டுப் பிரபந்த நூல்களைச் சேர்த்தும் எழுதவில்லை. பின்னர் தொகுத்தவரோ, பதிப்பித்தவரோ இந்தப் பெயரைச் சூட்டி இருக்கலாம். சோழ நாட்டில் திருமங்கை என்னும் திருத்தலத்தில், அந்தண குலம் என்னும் யாவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் குலத்தில், வைணவ சமயத்தில் பிறந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்மனார் புலவ!

அஷ்டப் பிரபந்தம் என்றறியப்படுகிற இந்நூற்றொகையின் உறுப்புக்களான பிரபந்தங்கள் அதாவது சிற்றிலக்கியங்கள் எட்டு. திருவரங்கக் கலம்பகம் திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல். ஆக ஒரு கலம்பகம், இரண்டு மாலை, நான்கு அந்தாதி, ஒரு ஊசல். கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல் முதலாய சிற்றிலக்கியங்கள் பற்றி அறிய விரும்புபவர் எனது, ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலைப் பார்க்கலாம். தமிழினி வெளியீடு, 2013.

அஷ்டப் பிரபந்தத்தில் ஏழாவது நூலான நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் நூலில், திருப்பாடகம் எனும் திருத்தலம் பற்றிய பாடல் :

‘தவம் புரிந்த சேதநரை, சந்திரன், ஆதித்தன்,
சிவன், பிரமன், இந்திரனைச் செய்கை – உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே’

என்பதாகும். முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் உரை – ‘திருவுள்ளத்தில் மகிழ்ந்து திருப்பாடகம் என்னும் திருத்தலத்தில் நித்திய வாசம் செய்கின்ற சிவந்த கண்களை உடைய திருமால், தவம் செய்த ஆத்மாக்களை சந்திரனும், சூரியனும், சிவபிரானும், பிரமதேவனும், தேவேந்திரனும் ஆகச் செய்வது, தனது வலத் திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது தகவுரையாலே ஆகும்!’ பாடலில் இருக்கும் தத்துவச் செய்திகளினுள் போக விரும்பாமல் எனதுள்ளம் நிலை கொள்வது, ‘தன் மார்பில் இருப்பாள் தகவுரையாலே’ என்னும் தொடரில்.

தகவுரை எனும் சொல்லின் பொருளாக நாம் சிபாரிசு, பரிந்துரை எனும் சொற்களையே நாடவேண்டியது இருக்கிறது. தகவுரை எனும் சொல் இன்னும் தூய்மையாக இருக்கிறது. சிபாரிசு, பரிந்துரை போல் ஆபாசப்படவில்லை. தக்கார் தகவிலர் என்பது அவரவர் தகவுரையாலும் காணப்படும். பரிந்துரைக்கு மாற்றாக, சகல தகுதிகளுடனும் தகவுரை எனும் சொல்லை அறிமுகம் செய்வதில் எமக்கு கர்வம் உண்டு.

தகவிலார் என்கிறார் திருவள்ளுவர். தகவின்மை என்றுமோர் சொல்லுண்டு. தகவு+இன்மை = தகவின்மை. அறிவு+இன்மை = அறிவின்மை, கரவு+இன்மை = கரவின்மை என்பது போல.

தகவின்மை என்றால் Unworthiness, Un suitability, தகுதி இன்மை என்பது ஒரு பொருள். Injustice, Partiality, நடுநிலை இன்மை என்பது இரண்டாவது பொருள். Trouble, Anxiety, வருத்தம் என்பது மூன்றாம் பொருள். தஞ்சைவாணன் கோவையின், ‘தணிவாய் நின் தகவின்மை’ என்ற பாடல் வரி மேற்கோள். உனது வருத்தம், பதற்றம் தணிவாயாக என்பது பொருள். முதல் இரண்டு பொருள்களுக்கும் மாற்றாக அரசியல்வாதித்தனம் என்றொரு சொல்லை உபயோகித்துவிடலாம்.

தகவோன் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. One who is eminently fitted என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். Suitability of worthy என்றும். அதாவது தகவோன் என்றால் தகுதியுடையவன். தகவிலன் என்பதற்கு எதிர்ப்பதம் தகவோன். மறுதலையாகவும் சொல்லலாம்.

நாம் முன்பே குறித்த பதினோரு பொருள்களிலும் தகவு எனும் சொல்லை ஆள்கின்றன சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு முதலானவை. சில பாடல் வரிகளை மேற்கோளாகத் தர தன்முனைப்பு ஏற்படுகிறது.

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல். பாலைத் திணையில் அமைந்தது. இயற்கைப் புணர்ச்சியில் இன்பம் தந்த தலைமகன் பிரிந்து போய் விடுவானோ எனும் அச்சத்தில் வருந்தும் தலைவியிடம் தலைவன் உரைத்தது.

‘மெய் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நின் துறந்து அமைகுவென் ஆயின் எல் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே’

என்பது பாடல். ‘மெல்லியல்புகளை உடைய அரிவைப் பருவத்துப் பெண்ணே! நீ மனதினுள் வருந்திப் புலம்பாதே! உன்னைத் துறந்து வாழ்வேன் என்றால் என்னிடம் விரும்பி வந்து பொருள் பெற்றுச் செல்லும் இரவலர் என்னை நாடி வராது தவிர்க்கும் நாட்கள் பலவாக ஆகும்படியான தகுதியைப் பெற்றேன் ஆகுக!’ இது ஓர்நேர் உழவனார் மகனார் கோயம்புத்தூரில் உறையும் நாஞ்சில் நாடனார் உரை.

நற்றிணையில் பெயரறியாப் புலவன் ஒருவனின் பாலைத்திணைப் பாடல், ‘விசும்பின் தகவே’ என்று மழைமேகம் பொழியத் தகுதியுடையதாக நிற்கும் தன்மை உரைக்கிறது.

தகவு எனும் சொல்லின் பொருள்களை வரிசைப்படுத்தும்போது பரிபாடல் வரியொன்றை மேற்கோள் காட்டினோம். புறநானூற்றில் ஒரு பாடல் ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. திணை வஞ்சி. துறை துணை வஞ்சி. வஞ்சித்திணை என்பது பகையரசர் இடத்தைக் கொள்ளக் கருதி வஞ்சிப்பூ சூடிச் செல்வது. துணை வஞ்சித்துறை என்பது பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்கும் வீரனைச் சில கூறி அமைதிப்படுத்துதல். பதின்மூன்று வரிப்பாடலின் கடைசி வரி, ‘‘நாணுத் தகவு உடைத்தே!” என்று முடியும். பொருள், ‘நாணமுறச் செய்யும் தகுதியை, தன்மையை உடையது’ என்பது. கோவூர்கிழார் புறநானூற்றில் நெடுங்கிள்ளியைப் பாடும்போது, இதே சொற்றொடர் பயன்படுத்தியுள்ளார், ‘நாணுத் தகவுடைத்து’ என்று.

புறநானூற்றிலேயே சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் குண்டுகட்பாலியாதனார் –

‘என் சிறுமையின் இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை கனவு என மருள,வல்லே, நனவின்
நல்கியோனே, நசை சால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெருமகன்’

என்று பாடுகிறார்.

‘என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து பாராது, தனது சொந்தப் பெருமையும் தகுதியும் நோக்கி, குன்றென நிமிர்ந்த களிறுகளையும், மிடுக்குடன் தலை அசைக்கும் குதிரைகளையும், மன்றம் நிறைந்து போகும்படியாக ஆநிரைகளையும், வீட்டுப் பணி செய்யவும் களப்பணி செய்யவும் ஆட்களையும், நானிது கனவோ என மயங்கும்படி உண்மையில் வழங்கினான். அவன் என்னில் விருப்பம் மிகுந்த அன்புத் தலைவன், பூழி நாட்டுத் தலைவன். அவன் கடையூழிக்காலம் வரை நீடு வாழ்க’. இது பாடலின் பொருள்.

இங்கும் நமது தேடல், தகவு எனும் சொல் குறித்தே! தகுதி என்ற பொருளில் இங்கு தகவு ஆளப்பட்டுள்ளது. ஆகவே தகவு எனும் சொல் மிகவும் ஆழமான பொருளுடைய தமிழ்ச் சொல்லென அறிகிறோம்.

எனவே தகவு எனும் தன்மை, தக்கார் எனும் சிறப்பு, கடற்கரையில் புதைக்கப்பட்டு நினைவு மண்டபங்கள் எழுப்பப்படுவதிலோ, விரல்களை நீட்டிக்கொண்டு முச்சந்தி நாற்சந்திகளில் காகங்கள் இளைப்பாறச் சிலைகளாக நிற்பதிலோ, பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைக்க இடம் கோரிப் பெறுவதிலோ, விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அரசுக் கட்டிடங்கள் எனப் பெயர் சூட்டுவதிலோ, இல்லை, இல்லை, இல்லவேயில்லை. கால் குப்பி மட்டரக மதுவுக்கும் காக்கா பிரியாணிக்கும் கூலிக் கூட்டம் ‘அம்மாடி தாயரே!’ அடிப்பதிலும், நடந்து வா, நடந்து வா என்று மேல்வலிக்காமல் கூக்குரல் இடுவதிலும், வாடகைக் கவிஞர் கூட்டம் இரங்கற்பா பாடுவதிலும், கொள்ளையின் சிதறிய எச்சில் துணுக்குகள் நக்கித் தின்றவர் கரைத் துண்டால் கண்ணீர் துடைப்பதிலும், பெத்த தகப்பன் செத்துப் போனது போல் மொட்டை அடிப்பதிலும் இல்லை.

தகவுடையவன், தக்கார் என்பவன் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

புறநானூற்றில் நரிவெரூஉத் தலையன் என்ற புலவர் பாடுகிறார் –

‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்’

என்று. நம்மால் இயலுகிற காரியம் தக்காராக இருக்கிறோமோ இல்லையோ, தகவிலராக இல்லாது இருக்க முயலுவோம்!

3 comments

 1. வழக்கம் போல நாஞ்சில் கட்டுரை அருமை என்று சொல்ல வேண்டும். கதைகள் எழுதுவதையே குறைத்து விட்ட ஏன் நிறுத்தி விட்ட அவர் கட்டுரையில் யாரும் அருகில் அணுக இயலா நிலைக்குச் சென்று விட்டதால் கட்டுரைப்புலி என்னும் விருதை அவர்க்கு அளிக்கலாம் அவர் விரும்பாவிடிஞும். பெரும்பாலும் இக்காலத்தில் கட்டுரைகள் படிக்கவே முடியாமல் வெறும் தரவுகளாகவே இருக்கின்றன, ஆனால் நாஞ்சிலின் கட்டுரைகளின் ஊடே புழங்கும் எள்ளல்கள் வாசிப்புத் தன்மையை ஊக்குவிக்கின்றன. தக்கார் தகவிலர் என்பனவற்றை வைத்துகொண்டு ஓர் முனைவர் பட்ட ஆய்வினிலும் மேலான ஓர் ஆய்வையே நடத்தி விட்டார்

 2. என்ன ஒரு ஆளுமை!
  குறுக த் தரித்த குறள் என்றோம்!
  ஐயா! தவறு!
  ஏற்றுக் கொள்கிறோம்!
  என்ன ஒரு ஆய்வு!
  வள்ளு வருக்கும் நன்றி?
  நாடன் புகழ் வாழ்க!!

 3. தகவிலர் என்ற வார்த்தையில் துவங்கி தகவு என்பதன் பொருளில் விரிந்து சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு என விரிந்து கம்பன், இரட்சணிய யாத்ரிகம், திருவாசகம் தொட்டு — தக்கார் என தற்கால தக்காரையும் காட்டி – அஷ்டப் பிரபந்தம் தாண்டி – எவர் தக்காராய் இருக்க இயலாது என்று முடித்திருப்பது சிறப்பு. நாஞ்சில் நாடனின் ஆன்று அகழ்ந்த சொல்லாராய்ச்சி கட்டுரை எல்லா இடத்திலும் பொருத்தமான அன்றாட அரசியலையும் சேர்த்துரைக்கும் அங்கதம், எள்ளல் எல்லாமே வாசிப்போரை சிந்திக்கச் செய்யும். ஓர் கணமேனும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.