நான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை

நான் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தேன். கடந்த சிலநாட்கள் போல ‘நான்’ என்றால் ‘நான்’ மாத்திரம் அல்ல. பூனையும், நாயும் மற்றும் நானும் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தோம். நடப்பதற்கு ஏதுவான காலநிலை, கருத்திருந்த வானம் சாரலை மட்டுமே அவ்வப்போது தெளித்துக்கொண்டு இருந்தது, முச்சூழ் மலையும் நேரடியாய் வானில் இருந்து இறங்கிய காற்றை நிலம் எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. எங்கே நடக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கில்லை, நாயோ அங்கும் இங்கும் வெறித்தபடி வந்துகொண்டு இருந்தது. ஒருவேளை அதற்கு பிரக்ஞை இருக்கலாம். இப்போதெல்லாம் நாக்கு வெளிநீட்டி எச்சில் ஒழுக நான் அனுமதிப்பதில்லை, எனவே வாய் மூடியே இருந்தது, ஆயினும் மூச்சு பலமாக வாங்கிக்கொண்டு இருந்தது. இங்கே பூனையும் இருக்கிறது, சாலையில் வேகமாய் வாகனங்கள் சீறிப்பாய்வதால் பத்திரமாய் வந்துக்கொண்டு இருந்தது. நான் என்றுமே எதிரே வருபவரை கூர்மையாய் கவனிப்பதில்லை, கடந்து போகும் காட்சிகள் மட்டுமே. உயிரற்ற பொருட்கள் மட்டுமே என் கண்களில் நுழையும். அவையும் வெறும்குப்பைகளாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொருட்களின் மீது பதியுமாறு, இங்கே ஒரு பொருளின் மதிப்பு தீர்மானிக்கப்படுவது அது என்னிடம் இருக்கிறதா? என்பதனை பொறுத்தது. நாய் வித்தியாசமானது, அதன் கண்கள் எந்நேரமும் நாலாபக்கமும் சுழன்று கொண்டேவரும். ஆனால் காட்சிகள் நினைவில் நிற்காது. பூனைக்கு எதிலுமே நாட்டம் இல்லை. அதன் நடையை, ஆம் அதன் நடையை மாத்திரம் கவனிக்கிறது, தன்னை மட்டுமே ஆழமாக, எவ்வளவு ஆழம் என்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினை காண விழைவதை போல. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் முதல்மாதிரி வைக்கிறது. உண்மையிலே ஒவ்வொரு அடிக்கும் ஒரே சீரான இடைவெளி இருக்கிறது. நாய் இந்நேரம் மாத்திரம், பூனையை போல சீராக நடக்கிறது. பூனை எதையும் உற்றுநோக்காது, இருப்பினும் பதிந்தவை என்றாகியும் தெளிவாய் கண்முன் விரியும். ஆக நான், நாய், பூனை சாலையில் நடந்துக்கொண்டிருந்தோம், வேகமாக, இன்னும் வேகமாக. ஏன் நடக்கிறோம் எனக்கு ‘அது’ உடனடியாக தேவைப்படுகிறது.

எதிரே, அகண்ட பெருவெளியில் சுழலும் பந்தின் ஒருசுழற்றியின் ஈடுக்கு இணையாய் வேகமாய் பருத்த, தோள் கடந்து தொங்கும் பெரும் கூந்தல்காரர் வந்தார். அதிகம் உயரம் இல்லை என்றாலும், குள்ளம் என குறைக்கூற முடியாது. அவரின் வேகத்திற்கு காரணமாக கரும்பரி அவரிடம் இருந்தது, கூடவே குள்ளநரி ஒன்றும். வந்தவரில் இருவர் எங்களை நோக்காது இருப்பினும், நரி கண்டுவிட்டது. என் பூனை ஒளிய முயற்சிக்க, நாய் அதற்கு முன்னே பேச்சை கொடுக்க எத்தனித்தது. நரியின் பார்வை நாயிடம் திரும்ப, பூனை ஒளிந்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. எனக்கு எதிரே நின்றவரின் தோற்றம் பழைய கௌபாய் திரைப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. நீலநிற ஜீன்ஸ் மிகவும் வெளிறி இன்னும் சிலதினங்களில் பழுப்பு நிறத்தை அடைந்துவிடும் போல, காலின் கரண்டை தொடும் பேண்டின் விளிம்பு நூல்பிரிந்து இருந்தது. கோடு போட்ட நீலமும் சிவப்பு வடிவம் சட்டையின் கசங்களை குறைத்துக்காட்டியது. அவரில் இருந்து எழும்பிய வியர்வை வாடை பூனைக்கு ஒவ்வாமையை கொடுத்தாலும், அதன் கண்கள் குதிரையை நோக்கியே இருந்தது. குதிரையோ இங்கே எதிரே நிற்பவர், எவரின் மீதும் பார்வையை திருப்பாது கர்வமாய் நின்றது. இன்னும் சிறிதுநேரம் இங்கே நிற்பதால் இழக்க ஏதுமில்லை என்ற எண்ணமே பூனையை நிற்க அனுமதித்தது. நாயோ எப்போது பேசலாம் என்பது போல வாயை திறந்ததால் , நானும் அமைதியாய் நின்றேன். என்னிடம் இருந்த நாயைப்போல அவரிடம் இருந்த, நரியும் ஆசைப்படுகிறது போல, அதுவும் முன்னங்காலை உயர்த்தி ஏதோ சமிக்கை கொடுத்தது. நாய்தான் அவரிடம் ‘அது’ இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது,

“டோப் இருக்கா அண்ணாச்சி”, நாய் எடுத்த எடுப்பிலே நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டது. வெளிப்படையாக கேட்டதை குதிரையும் பூனையும் விரும்பவில்லை போலும், பூனை என் காலுக்கு இடையே குலைந்து, காலிடுக்கில் நெளிந்து என்னை அதன்பக்கம் இழுக்க, குதிரை வந்தவரை கனைத்து, முன்னங்கால்களை தூக்கி, மகாபலியின் தலையை ஒரு அடியில் மிதித்த குள்ளனின் பாத பதிஅதிர்வை பரப்பியது. அவரும் நானும் எங்களிடம் இருந்த இரண்டையும் ஓரம்கட்டி,

“டோப் இருக்கு அண்ணாச்சி, ஆளு லேகை தெரியு. அதுக்குன்னு பொசுக்குன்னு கேட்டுட்டிலே” என்றார்.

“மண்டகனம், பொறுக்கல. வெளியே ரவுன்சு வருவோம்னு வந்தேன். நீரு எதிர நிக்கேறு. சரி வந்தது வகை, எத்தன இழுப்புக்கு அயிட்டம் இருக்கு”

“பத்து, பதினஞ்சு இழுப்பு வரும். நாம உரிஞ்சத பொறுத்து. வச்சு இருபதும் இழுக்கலாம். ஆனா உம்ம இழுப்புக்கு அஞ்சு தாண்டுமானா சந்தேகம் தான்”

அவரின் குதிரை, ராமரின் அசுவமேத யாகத்தில் வருவது போல கர்வமாய் நின்றது. நரியும், நாயும் அசையாமல் நின்றது. பூனை, யாரின் விழிகளிலும் தன் உருவம் பதியாமல் என் காலிடுக்கில் நின்றிருந்தது. நாய் அங்கும் இங்கும் தலையை சிலுப்பி, ஓரமாய் இறங்கியிருந்த இந்தியாவின் நீண்ட கழிப்பறையை நோக்கி கண்களை செலுத்தவும், நரியும் அதனை உணர்ந்துகொண்டு எங்களை அங்கே செல்ல நிர்ப்பந்தித்தது. உள்ளே சென்றவுடன், தண்டவாளத்தின் மறுப்பக்கம் ஆற்றை நோக்கி இறங்கும் பாதையில் ஒற்றையாய் இருந்த வேம்பின் அடியில் அமர்ந்தோம். கருக்கள் நேரம் ஆகிவிட்டது, கூட காலநிலையும் சேர்ந்து வானம் இருட்டிக்கொண்டு இருந்தது.

இருவரும் எதிரெதிரே அமர, பேண்டின் மேல்பட்டை வழியே இடுப்பின் கீழே கைவிட்டு சிறிய பொதி ஒன்றை வெளியே எடுத்தார். அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்தார், நான் வேகமாக கீழே கிடந்த சிறுக்குச்சியை எடுத்து புகையிலை அனைத்தையும் வெளியே எடுத்தேன். அதற்குள் அவர், பொதியில் இருந்த இலைகளையும், விதைகளையும் உள்ளங்கையில் பெருவிரலால் அழுத்தி தேய்த்து கொடுத்தார், விதைகளை மட்டும் நீக்கி, இலைகளை தேய்த்து சிறுசிறு துகளாய் பின் அனைத்தையும் சேர்த்து பொடிபோல் ஆக்கிக்கொண்டார். நாயும் நரியும் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. பூனையும் குதிரையும் மட்டுமே அங்கிருக்கிறது. சிலநொடிகளில் கையில் இருந்தவற்றை சிகரெட்டில் நுழைத்து பற்றவைத்தார். பின் எனக்கும் கொடுத்தார். ஆளுக்கு ஒரு இழுப்பு வீதம் இழுத்துக்கொண்டே இருக்க, கால்கள் தரையில் மோதி, உந்தி என்னை அத்துவானவெளிக்கு அனுப்ப, என்னிடம் கனமாய் தொங்கிக்கொண்டிருந்த என் ஆன்மா நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த கூட்டை நொறுக்கி, என்னிடம் இருந்து எழும்பியது. கைகள் பலமாய் உணர, எதையும் பொருட்படுத்தாது என் உதடுகள் புன்னகையில் விரிந்தது. அதேவேளை என்னிடம் இருந்த பூனை ஒவ்வொரு இழுப்புக்கு உருவத்தில் பெரியதாக மாறிக்கொண்டு இருந்தது. மாறாக குதிரை உருவம் சிறுத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இரண்டும் ஒரே உருவத்தில் இருந்தது.

நான் “எங்கயோ போய்ட்டு இருந்தீரு. நான்தான் இங்க திருப்பிட்டேனோ”.

அவர் “எங்க போக. எங்க போனாலும் ஏத்தமும் இறக்கமும் உண்டுலா அண்ணாச்சி.”

“அது சரிதான், ஏறும்போது பைய போறோம், இறங்கும் போதும் ஓட்டமாலா இருக்கு. ஆனா கடைசி ஓட்டம் நின்னுதானே ஆகணும்”

“சரியா சொன்னீரு, ஆளு இளசுட்டேரே, உடம்புக்கு ஏதும் சோமில்லையா”

“அதுலாம் ஒன்னும் இல்லை” எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் என் நிலை அவ்வளவு பரிதாபகரமான தோற்றத்திலா இருக்கிறது. நினைத்துக்கொண்டே தாடையில் கை வைக்க அது கழுத்தை தாண்டி முள்முள்ளாய் நீண்டு நிற்கும் தாடியை ஒதுக்கி கன்னத்தை தொட்டது, கடந்து போய்க்கொண்டே இருக்கிறேன். எல்லாமுமே, பகற்கனவு போல உறுத்தினாலும் என்னுடைய நிலைக்கு யாரும் பழியேற்க முடியாது. நானே வருத்தி ஏற்றுக்கொண்டது. ஆயினும் சிலகேள்விகள் நிலைகுலைய செய்யுமல்லவா,

“சாப்பாட்டுக்கே வழி இல்லையோ”

இக்கேள்வி மேலும் ஆத்திரத்தை பெருக்குகிறது. இருப்பினும் மென்மையாக பதில் அளித்தேன். காரணம் ‘அது’.

“சோத்துக்கு நிறைய வழி இருக்கு. டெய்லி நாராஜா கோயில்ல மதியம் சாப்பாடு. பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மணி நேரம் நின்னேனா நூறு ரூவா தேத்திரலாம்.”

ஆற்றங்கரையின் ஓரமாய் நின்ற தென்னம்பிள்ளைகள் காற்றில் அசைந்து இன்பமான ஒலியை பரப்பிக்கொண்டு இருந்தது. உள்ளே சென்ற ‘டோப்’ இறகை போல மனதை மெலிதாக்க, இனி நடப்பவை எல்லாம் எளிதாக முடியும் என்பது போலவிருந்தது. இந்த நாயும், பூனையும் சிலநாட்களாக என்னிடம் தொற்றிக்கொண்டது. வந்த புதிதில் யாரிடமும் இவை உங்கள் பார்வைக்குள் விழுகிறதா? எனக்கேட்க வசைகள் தான் பதிலாய் வந்தது. சரி, அவரோடு வந்த குதிரையும், நரியும் எனக்கு மட்டுமே தெரிந்திருக்கும், அவரே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

“வேற காரியம் என்ன” என்றார் வேம்பில் உடலை சாய்த்தபடி அவர், வேம்பின் அருகே பாறாங்கல் ஒன்று கிடந்தது. ஒருவன் தூக்குமளவுக்கு எடை இருக்கும். என் கண்கள் அதை சட்டென நோக்கியது. பின், மீண்டும் அவரிடம்,

“காரியம் ஒன்னும் இல்லவோய். சட்டுனு திரும்பாதையும். பின்ன ஆத்துக்கு அந்தப்புரம் பாரும். ஒரு கருத்த குண்டன், முறுக்கு மீசைக்காரன், எருமை கூட நிக்கானா”

அவர், தலையை திருப்பி ஆற்றின் மறுப்பக்கம் கண்களை சுழற்றினார். அங்கே எருமைக்கூட்டம் போய்க்கொண்டு இருந்தது. அருகே இவர் சொன்ன லேகையில் ஆள் யாரும் நிற்பதாய் தெரியவில்லை. ‘எவன் நின்னா நமக்கென்ன, இழுத்தாச்சு போவோம்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே,

“நாலஞ்சு எரும தான் நிக்கு அண்ணாச்சி, நா கிளம்புறேன்.இன்னொரு நாளைக்கி பாப்போம்” என்றார்.

“கொஞ்சம் இருவோய். சொல்லத கேளு.” ஆக, குண்டனும் எனக்கு மட்டுமே தெரிகிறார்கள்.

நான், பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவர் எழுந்து இங்கிருந்து நகர ஆரம்பித்தார். உருவத்தில் பெரிதான பூனை, புலி போல நின்றிருந்தது. சட்டென, உறுமி அவர் சட்டை காலரை பிடித்து கண்களால் அமரச்செய்தது. பூனை, இல்லையில்லை இப்போது புலி. தேவைப்படும் நேரம் மாத்திரம் காரியத்தை செய்யும்.

உடனே, ‘சல்ல எடவாடுகிட்டலா மாட்டிகிட்டேன்’ என எண்ணிக்கொண்டே எரிச்சலோடு அமர்ந்தார், ஆமாம் அவர் உதடுகள் முனங்குவது எனக்கு தெரிகிறது. ஆனால், இவரை இங்கே அமர்த்தியாக வேண்டும்

“நாலஞ்சு வாரம் இருக்கும், ஒரு நாலு ஆராம்பலி போயிருந்தேன். அங்க நம்ம கூட்டு உண்டு. தெக்கூறுல வடக்கால போனா ஒரு பெரிய குளம் வரும். பக்கத்துல பழைய இடுகாடு உண்டு. குளம் உமக்கு தெரியும், இடுகாடு தெரிய வாய்ப்பில்லை.” அமர்ந்திருந்தவர் என்னை கவனிக்கிறாரா என்பதை புலி அடிக்கடி உறுதிப்படுத்திக்கொண்டது.

“ஆராம்பலி பழைய நாஞ்சில் நாட்டு வாசலு அப்போ, அங்க ஒரு பிள்ளைமாரு திருவாங்கூருக்கு சிங்கி போட்டு, காவலுக்கு நிக்கேனு உத்தரவு வாங்கிருக்காரு. காவலுக்கு ஆள வச்சுக்கிட்டு, ராசட்ட இருந்து வாராத பாதி ஆட்டைய போட்டுட்டு மீதி காவக்காரனுக்கு போகும். ஆளுக்கு வயசு உண்டு, ரெண்டு மூணு பொண்டாட்டி. சாராயம் கீராயம் எந்த பழக்கமும் கிடையாது. ஆனா பாத்துக்கிடுங்க பிள்ளைக்கு அவருக்கு பொறவு வாரிசு இல்லை” சற்று அமைதியானேன். தூரத்தில் இன்னும் எருமையோடு குண்டன் நிற்பது தெரிந்தது.

“சரி உமக்கு கல்யாணம் ஆகலையே” அவரிடம் கேட்டேன்.

“யோவ், நா இப்போ உள்ள பயக்க சொல்லுகாம்ல நைன்டீஸ் கிட்டுனு. அத மாதிரி”

“அப்போ வயசு முப்பதா உமக்கு கத அடிக்காதையும்” என்றேன் சிரித்தபடி.

“இல்லவோய், அது நாப்பது ஆகு. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றேன்”

“சரி, கதையை பாதில விட்டுட்டேன். அவருக்கு பிள்ள இல்லையா. வயசு ஆகியும் அரிப்பு நிக்கல. அப்போ கிழக்கே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க ஆட்காரு வருவா. அதுல கிளி மாதிரி இருக்கிற பிள்ளைகள தூக்கிருவாரு. பிள்ளையும் இல்லை, அரிப்பும் நிக்கல. கண்டவள்ட்டயும் அவரு குட்டி வளரதுல பிடித்தக்குறவு. நல்ல ஓத்துட்டு வெளிய சொல்லலைனா விட்ருவாரு. இல்ல நா சொன்னமலா குளம், அதுக்கு மறுகரைல பொதச்சருவாரு”

“சண்டாள பாவியாலா இருக்கான், இந்த வெள்ளாள பயக்களே இப்படித்தான். நான்லாம் அரிப்பு எடுத்தா போய் கைல பிடிச்சுட்டு வந்துருவேன். கதம் கதம்” என்று மேலே கதை கேட்க ஆர்வமாய் இருந்தார். புலியும், அவரிடம் இருந்த குதிரை இல்லை சிறுத்துப்போய் இப்போது கழுதையும் அமைதியாய் நின்றது. நாயும் நரியும் எங்கு சென்றதோ இன்னும் காணவில்லை.

“அப்புறம் என்னாச்சு, ஆளு கொஞ்ச நாளுல மெலிஞ்சி போய், பொன்டாட்டிலாம் வேற யாருகூடயோ போய், ஒருநாள் அவரு வீட்டு பக்கமா போனவன் பொண நாத்தம் அடிக்க உள்ள போய் பாத்திருக்கான் ஆளு செத்து அஞ்சு ஆறு நாலு ஆயிருக்கும். இவரு சங்கதி ஊருக்கு தெரியுமே. பயக்க வீட்டோட சவத்தை போட்டு எரிச்சுட்டானுங்க. வீடு இப்போவும் பாக்கலாம் இடிஞ்சு போய் கிடக்கும்”

“ஆளுக்கு வந்தது எய்ட்ஸா இருக்கும். அப்போ உள்ள ஆட்காருக்கு இதுலாம் தெரியாதுலா. ”

“ஆமா, என்ன எழவோ. பின்ன அவரு செத்து கொஞ்ச நாலு கழிச்சு. இன்னொருத்தன் குளத்துக்கு மறுகரைல நிலம் வாங்கி மாங்கா போட்ருக்கான். எழவு அவ்வளவு கசப்பு மாங்கா, நாரு நாரா சவுரி மாங்கா. உரம் கிரம் போட்ருக்கான். ஒன்னும் எடுபடல. அப்புறம் மேற்கே ஒரு மந்திரவாதியை பிடிச்சு, சொக்கரான் எவனோ செய்வினை வச்சுட்டானான்னு பூச போட்ருக்கான். தோப்பு முழுக்க இசக்கி நிக்கா. எல்லாம் அந்த பிள்ளைமாரு ஓத்த பொம்பள. ”

“யோவ், இருட்டிட்டு வேற வருகு. நாம இருக்கிற இடமும் சரியில்ல. நீ வேற இசக்கி மயிறுனு பயம் காட்டாதவோய். ”

“மோண்டுராதா. நா சொன்னேன்ல நாலஞ்சு வாரதுக்கு முன்னாடி போனேன்னு. அப்போதான் ஒரு பய இந்த கதையை சொன்னான். அந்த பிள்ளைமாரு பணமா எதையும் சேக்கலையாம், எல்லாம் பவுனு. சாவதுக்கு முன்னாடி எங்கயோ பொதச்சருக்காரு. ”

“எல்லாத்தயுமா பொதச்சு வச்சுட்டாரா”

“ஆமா, நம்ம பய ஒருத்தன் சொல்லித்தான் நா அரிஞ்சது. ஆராம்பலி நம்ம ஜில்லாவுக்கே டோப்க்கு நடுசென்டரு, அங்கேர்ந்துதான் மொத்த சப்ளை. டோப் வாங்க போய் ரகசியம்லா கிடச்சருக்கு. ”

“அதுக்குன்னு வீட்லயும், குளத்துலயும், இடுக்காட்டுலயும் போய் தோண்டுவீரா. வேற வேலைய பாரும். நேரமாச்சு நா போனும்”

“இருக்கு, குலசேகரத்துல ஒரு மந்திரவாதியா பார்த்தேன். பவுனு இருக்கது இசக்கிக்கு தெரியும். அத சாந்திபடுத்தினா ரகசியம் தெரியும்”

“இந்த காலத்துலயும் நீரு இதுலாம் நம்புகீரே. இதுலாம் பிராடு, காச சீரழிக்காதேயும். மந்திரவாதி பயக்க இப்படித்தான் அலையான் ஊருக்குள்ள”

“அப்போ, இசக்கினு நா சொன்னதுக்கு எதுக்குவே அரண்டேயீரு. எல்லாம் நிசம், நாம கண்டுக்காம போற வர ஒன்னும் புரியாது. நின்னு கவனிச்சா எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும். நீ இருக்க வேப்பமரத்துலே ஒரு இசக்கி உண்டு. சின்னதுல இந்தப்பக்கம் ஒரு பய வெளிக்கி இருக்க வரமாட்டோம். நா அப்போவே சீம, ஒருநாள் வந்துட்டு அதுவும் கருக்கள் நேரத்துல, இங்க வெளிக்கி இருந்துட்டு போறேன். கொஞ்சம் நடந்திருப்பேன். ஓங்கி ஒரு அடி குறுக்குள்ள, எடுத்தேன் வீட்டுக்கு ஓட்டம். நமக்கு நடந்தா அது நிசம், அடுத்தவனுக்கு நடந்தா அது பிராடு. ” நான் சொல்லிமுடிப்பதற்குள் அவர் எழுந்துவிட்டார். அவர் முகத்தில் பயம் அப்பியிருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு பொட்டலத்தை வெளியே எடுத்தார். நான் எதிர்ப்பார்க்கவில்லை இன்னொரு டோப் பொட்டலம். நான் சிரிக்க, அவர் “நயிட்க்கு வச்சுருக்கேன். கிளாரா இருக்கு. சிரிக்காதையும் வாரும் இழுப்போம்”.

அவரே, எல்லாவற்றையும் செய்தார். அவரிடம் சிகரெட் இல்லை, கையில் இருந்த பீடியிலே முன்பு போல தேய்த்து சுருட்டி ஆளுக்கு இழுக்க ஆரம்பித்தோம். இப்போது கருத்த குண்டன் இன்னும் அருகே, அவர் தலைமாட்டில் நின்றிருந்தான். புலி முன்பக்க கால்களை நீட்டி பாய்வது போலவிருந்தது. கழுதை படுத்தேவிட்டது.

“ஏதோ மந்திரவாதி வழி இருக்குன்னு சொன்னானே, என்னது”

“இசக்கிய சாந்திபடுத்த நட்டசாம பூச பண்ணனும். இளங்கிடா, சேவலை அறுக்கனும். வேற மை ஒன்னும் கேட்டாரு”

“கண்ணுக்கு வைக்கிற மையா”

“இல்லையா, உமக்கு தெரியுமா. குடுகுடுப்பைக்காரன் பச்சைபிள்ளைக செத்தா நைட் சுடுகாட்டுல கிடையா கிடப்பான். எதுக்கு தெரியுமா. பொணம் எரிக்கும் போது, மெதுவா அதுக்க மூளையை மட்டும் எடுத்து வச்சுப்பான். அதுல செய்ற மைக்கு முன்னாடி பேய்க ஒன்னும் பிடுங்க முடியாது”

“சரி, இதுவும் அதே மாதிரி மையா”

“ஏறத்தாழ ஒரேமாரிதான். ஆனா, இவாளுக்கு சக்தி அதிகம், எல்லாமே மோசமான சாவு, தலைநசுங்கி, எரிச்சு கொன்றுக்காண் சண்டாளப்பய. சக்தி அதிகம். அதுக முன்னாடி நிக்கும் போது, நம்மள அடிச்சர கூடாது. அதுக்கு தான் மை தேவ, அப்புறம் தான் அதுக தேவைய கேட்டு செய்யமுடியும். இசக்கி அடிக்காம நிக்க கன்னி கழியாத ஆம்பள மை வேணும். அதுவும் அஞ்சு ஆம்பளையோடது வேணும்”

“அப்போ, நீரும் இனி சுடுகாட்டுலே கிடையா கிடக்க போறியா” என்று கூறியபடியே சிரித்தார்.

நான் எழுந்து நின்றேன். அவர் பார்வையை எங்கோ திருப்பி இருந்தார். நான் நகர்ந்து பாரங்கல்லுக்கு அருகே குனிந்தேன்.

“கன்னி கழியாத அஞ்சு பொணத்துக்கு எங்க போவீரு. வருஷம் ஆகும். அதுக்குள்ளே இசக்கியே போயிருவா”

நான் நிதானமாய் “இனி நாலுதான் தேவ” என்றபடி கல்லை அவர் தலையில் போட்டேன். புலியின் வாயில் கழுதையின் கழுத்து இருந்தது. எங்கோ சென்ற நாய், ஓநாய் போல திரும்பிவந்தது. அதன் வாய் சிவந்த இரத்தம் படிந்து இருந்தது. கருத்த குண்டனும் அங்கிருந்து நகர, தேவையான ‘அதை’ எடுத்துக்கொண்டு நானும், புலியும், ஓநாயும் சாலையில் ஏறி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஆம், இன்னும் வேகமாக, எனக்கு ‘அது’ வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.