அவர் கையிலிருந்த அந்தச் சங்கிலி அப்படியொன்றும்உறுதியானதாக இல்லை. சங்கிலியோடு இணைக்கப்பட்டிருந்த கழுத்துப்பட்டி அந்த நாயின் கழுத்தை கவ்வியிருந்தது. ஒரு நேரம்அவர் நாயை பிடித்தபடி முன்னே செல்வார். நாய் அவருக்குக் கட்டுப்பட்டுஇலகுவாக நடக்கும். அப்பொழுது சங்கிலி தொய்வாக இருக்கும்.
மற்றொரு நேரம் அது அவரை இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது அவர் நாயின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்ஓட்டம், நடைக்கு இடைப்பட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பார்.
நாய் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல நிற்கும். அவரும் அதற்கு அனுமதியளித்து இடுப்பில் கைவைத்து காத்திருப்பார். சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் நடைபயிற்சி ஆரம்பிக்கும். காலை ஆறுமணி காட்சி அது.
” ஆறு மணியானா நாய்சார் வாக்கிங் கிளம்பிடுவார். அதை வச்சு மணி ஆறுன்னு தெரிஞ்சிக்கலாம்” என்றாள் பானு.
தெரு L வடிவிலானது தெருக்கோடியில் அவர் வீடு உள்ளது. மூன்றுஆண்டுகளுக்கு முன்பு அவர் அங்கு குடி வந்தார். தெருவுக்குஅடிக்கடி சாமான்கள் ஏற்றிய லாரி வருவதும், தெருவிலிருந்துஅதேபோல் சாமான் ஏற்றி டெம்போக்கள் வெளியேறுவதும்வழக்கம்தான்.
யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வப்படாத நடுத்தர வர்க்கத்து சனங்கள் வசிக்கும் நகரத்தின் தெருக்களில் அதுவும் ஒன்று. ஒரு மத்தியான பொழுதில்தான் நாய்சார் குடிவந்தார். அவரோடு அந்த நாய், குட்டியாக வந்தது.
” வர்ற வழியில கிடைச்ச குட்டி இது. ரோட்டோரமா நின்னுகிட்டிந்தது. வெள்ளரிக்கா வாங்க இறங்கின என்னைப் பார்த்துட்டு கத்துச்சு. தூக்கிட்டு வந்துட்டேன்.”
பின்னொருநாள் நாய்சார் சொன்னார். அவர் காலையில் நாயோடுவாக்கிங் போவார். பிறகு எட்டரை மணிக்கு இருசக்கர வாகனத்தில்அலுவலகம் செல்வார். அப்போது தெருமுனை வரை நாய் அவர்பின்னோடு ஓடிப்போகும்.
அவர் சாலையில் கலந்த பிறகு சிறிதுநேரம் நின்று கொண்டிருந்துவிட்டு திரும்பி வந்து அவர் வீட்டுவாசலில் படுத்துக்கொள்ளும். மாலையில் அலுவலகம் முடிந்து வந்தபிறகு நாய்சார், நாயை மறுமுறை வாக்கிங் கூட்டிப் போவார்.
அந்தியின் மஞ்சள் வெயில் படிந்த சாலையில் அவர் நாயைப் பிடித்தபடி நடந்து கொண்டிருப்பார். நடைப்பயிற்சிக்கு தோதாக அதன் கழுத்தில் சங்கிலி கட்டிவிடுபவர் வீட்டுக்கு வந்ததும் அவிழ்த்துவிட்டுவிடுவார்.
கட்டப்பட்ட சங்கிலியிடத்தில் கட்டுப்பாடு இல்லை என்று நாய் புரிந்து வைத்திருந்ததோ என்னவோ, வாயில் காப்போன் போல இருந்த இடத்தை விட்டு அசையாமல் அங்கேயே கிடந்தது.
வாசற்கதவு கிறீச்சிட்டால் தலையுயர்த்திப் பார்க்கும். தெரிந்த முகமாயிருந்தால் முன்னங்கால்களுக்கு மத்தியில் முகத்தை பதித்துப் படுத்துக்கொள்ளும். புது ஆளாக இருந்தால் ஜாக்கிரதை உணர்வோடு விருட்டென்று எழுந்து நின்று குரைக்கும்..
” நாயைக் கட்டிப்போடுங்க சார். பயமாயிருக்கு ” என்று யாராவது கூறினால் நாய்சார் சிரிப்பார்.
” கட்டிப்போட்டு வெறித்தனத்தை அதிகப்படுத்தக்கூடாது. நீங்க பயப்படாம வாங்க. நானிருக்கேன்” என்பார்.
நான் ஒருமுறை சென்றபோது நாய் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டது.
” நீங்க, நம்ம தெருவாசின்னு அதுக்கு தெரிஞ்சிருக்கு. அதான் சிநேகமா ஒருபார்வை பார்த்துட்டு படுத்துகிச்சு…..” என்றார் நாய்சார்.
அவர் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்கிறார். பட்டா சம்மந்தமாக அவரிடம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. அப்படித்தான் நாய்சார் அறிமுகமானார்.
” நாயைக் கட்டிப் போடற பழக்கம் இல்லையா…..?” என்று நான் கேட்டபோது,
” அதுக்கென்ன அவசியம்….?” என்று அவர் திரும்பக் கேட்டார்.
” ஆரம்பத்துல அது பகல்ல வெளியில சுத்திட்டு வரட்டும்னு கட்டாம விட்டிருந்தேன். ஆனா அது வீட்டை விட்டு எங்கேயும் நகரலை. பழியா வீட்டு வாசல்லயே கிடந்தது. அப்புறம்தான் வாக்கிங் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சேன். உங்களுக்கொண்ணு தெரியுமா……இந்த நாய் இதுநாள் வரைக்கும் வீட்டுக்குள்ள வந்ததேயில்ல. ”
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் தலையசைத்து சிரித்தார்.
” ஆமா….வளர்ப்பு நாய்ங்க காலுக்கடியிலேயே கிடக்கறத நான் பார்த்திருக்கேன். ஆனா இது தெருவோட சரி. உள்ளே வரவழைக்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். பலிக்கல. ஊர் எல்லையில காவல் காக்கற அய்யனார் சாமி மாதிரிதான் இதுவும். அப்படித்தான் நான் நினைச்சிக்கிட்டிருக்கேன் ” என்றவர் எழுந்து சென்று ஃபிரிட்ஜிலிருந்து குளிர்பானம் எடுத்து வந்தார். வாசற்படி நிலையருகில் நின்று நாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.
” இனி நீங்க கிளம்பற வரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகரவே நகராது. அப்படியே வெறிச்சு பார்த்துக்கிட்டு நிக்கும். ஒரு பிடி சோறு போட்டதுக்கு எவ்வளவு நன்றியுணர்ச்சி பாருங்க….”
அவர் குளிர்பானத்தை தம்பளரில் நிரப்பித் தந்தார். வீடு சுத்தமாயிருந்தது. அனாவசிய அடைசலில்லை. வலது மூலையில் டிவி, பிரம்பு சோபா தவிர வேறு சாமான்களில்லை. திரைச்சீலைக்கு அப்பாலிருந்த அறைக்குள் அவர் மனைவி இருந்திருக்க வேண்டும். லேசாக இருமல் சத்தம் கேட்டது.
” அவ கொஞ்சம் சுகவீனமாயிருக்கா” என்றார் நாய்சார்.
என்ன, ஏதென்று விசாரிக்குமளவுக்கு பழக்கமில்லாததால் நான் எதுவும் கேட்கவில்லை. நாலைந்து சந்திப்புகளுக்குப் பிறகு அவரே சொன்னார்.
” குழந்தையில்லாத கவலை மனசை அரிச்சு உடம்பை பலவீனமாக்கிடுச்சு. காலையில மெல்ல எழுந்து சமையல் செஞ்சு வச்சிட்டு படுத்துக்குவா. மறுபடியும் சாயங்காலம் விளக்கேத்தற நேரத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்து நாலைஞ்சு சுலோகம் சொல்லிட்டுப் படுத்துக்குவா. வெளிவேலைகளுக்கு ஆள் வச்சிக்கிட்டேன். நானும், அவளும் ஒண்ணா சேர்ந்து வெளியில போய் இருபது வருஷமாயிடுச்சு.”
நாய்சார் இதைச் சொன்னபோது அவர் குரல் நடுங்கியது. சிறிது நேரத்தில் சகஜமான அவர், தெருவாசிகள் தன்னை நாய்சார் என்று அழைப்பதாக சொல்லி சிரித்தார். அவருக்கு அந்தப்பெயர் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னபோது வியப்பாக இருந்தது.
” நான் படிச்ச பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் எப்பவும் கையில பிரம்போட இருப்பார். அந்தப் பிரம்பு நல்லா மழுமழுன்னு பார்க்கவே வசீகரமா இருக்கும். அதால ஒண்ணு வச்சாருன்னா சுளீர்ன்னு வலி தெறிச்சுவிடும். வாத்தியார் அந்தப் பிரம்பை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் எடுத்துட்டு வருவார். அதனால எல்லாரும் அவரை தடி வாத்தியார்ன்னு கூப்பிடுவாங்க. அந்த மாதிரி எனக்கும் நாய்சார்ன்னு பேர் கிடைச்சிருக்கு ” என்ற நாய்சாரை எதிர் ஃப்ளாட் வாட்ச்மேன் அந்தப் பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்கிறான்.
” நாய்சார் வாக்கிங் கிளம்பியாச்சா……?”
வாய்தவறி கேட்டுவிட்ட. அவன் திருதிருவென்று முழித்திருக்கிறான். பின் அதை மறைக்க ஏதேதோ பேசி மழுப்பியபோது நாய்சார் விடவில்லையாம். துருவித்துருவி கேட்டு தெரிந்து கொண்டாராம்.
” நாயோட. நீங்க வாக்கிங் போறதப் பாத்து நாய்சார்ன்னு ஒருத்தர் சொல்லப்போக பின்னாடி அதுவே பேராயிடுச்சு ” என்றானாம் அவன்.
நாய்சார் சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
” நாய் துஷ்டமான மிருகமில்ல. அதுக்கிருக்க நன்றியுணர்ச்சியில கால்வாசி நமக்கிருந்தா போதும். நமக்கு உதவி செய்தவங்களை நாம மறக்கவே மாட்டோம் ” என்றார் நாய்சார்.
அலுவலகம் முடிந்து வர தாமதமானால் நாய் காம்பவுண்ட் கதவருகில் நின்று தெரு முனையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்குமாம். தூரத்தில் அவரது வண்டிச் சத்தம் கேட்டால் பாய்ந்தோடி எதிர்கொண்டு அழைத்து வருமாம்.
” முன்னாடியெல்லாம் அலுவலகத்துக்குப் போகும்போது என் மனைவியை தனியா விட்டுட்டுப் போறேனேன்னு கவலையோட கிளம்புவேன். இந்த ஊருக்கு வந்தப்புறம் அந்தக் கவலை இல்லாம போச்சு. வரும்போதே இன்னொரு ஜீவனையும் அழைச்சிட்டு வந்ததுல தைரியமா ஆபீஸ் போறேன். ”
நாய்சார், நாயின் முதுகை பாசமாய் தடவிக் கொடுத்தார். அது தலையை பட், பட்டென்று இரண்டுமுறை உலுக்கிக் கொண்டது. செம்பழுப்பு நிற நாய் அது. நாட்டு நாய்க்கே உரிய மெலிந்த தோற்றம் கொண்டிருந்தது.
” இதுக்குன்னு தனியா எதுவும் சமைக்கிறதில்ல. நாங்க சாப்பிடறததான் இதுவும் சாப்பிடுது. மத்தியான சோறு என் மனைவி வைப்பா. மெல்ல எழுந்து வந்து அவ சோறு வச்சதும் அவளை ஒரு பார்வைப் பார்க்குமாம். அது, நீ சாப்பிட்டியான்னு கேட்கிற மாதிரி இருக்குமாம். ஒருநாள் என் மனைவி சொல்லிட்டு அழுதா. ”
நாய்சார் சொன்னபோது எனக்கு வியப்பாக. இருந்தது.
” நாமகூட ஒரு நாய் வளர்க்கலாம்ங்க…..” என்றாள் பானு. எனக்கும் ஆசைதான். இருந்தும் முறையாக அதைப் பராமரிக்க முடியுமா என்று சந்தேகமாயிருந்தது. மேலும் ஃபிளாட்டில் அதற்கு அனுமதி பெறவேண்டும். தனி வீட்டில் நாய் வளர்ப்பதைக் காட்டிலும் ஃபிளாட்டில் வளர்ப்பது சிரமமானது. அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
” வெளிநாட்டு நாய் வளர்க்கணும்னு இல்ல. நாட்டு நாயே வளர்க்கலாம். ரெண்டுமே விசுவாசத்துக்கு குறைச்சலில்லாதது” என்றார் நாய்சார்.
நான் அதிலுள்ள சிரமத்தைச் சொன்னதும் ஒத்துக்கொண்டார். அன்று மாலைநேர நடைப்பயிற்சியின்போது நானும் அவருடன் இணைந்து கொண்டேன். நாங்கள் சாலையோரமாக நடந்தோம்.
நாய் இலக்கை குறிவைத்து முன்னேறும் தீவிரத்துடன் நடந்து கொண்டிருந்தது. நாய்சார் சிறு வயதில் தன்னுடைய வீட்டிலிருந்த நாய் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்.
” கிராமத்துல பார்த்தீங்கன்னா, வீட்டுக் கொல்லையிலயோ, தெருவுலயோ ஒரு நாய் எப்பவும் படுத்துக் கிடக்கும். அப்படி எங்க வீட்டுலயும் ஒரு வெள்ளைநாய்
இருந்தது. எங்கம்மா அதுக்கு ஒரு பிடி சோறு வைப்பாங்க. தின்னுட்டு ஊரைச் சுத்திட்டு எங்க வீட்டு வாசல்ல வந்து படுத்துக்கும். நான் பள்ளிக்கூடம் போகும்போது என் கூடவே வரும். பள்ளிக்கூட காம்பவுண்டு வரைக்கும் வரும். நான் உள்ளேப் போயிட்டேன்னு உறுதி செஞ்சுக்கிட்டு மெதுவாத் திரும்பிப் போகும். அதேமாதிரி சாயங்காலம் பெல் அடிக்கிறப்ப காம்பவுண்டு கிட்ட வந்து நின்னு என்னைக் கூட்டிட்டுப் போக காத்திருக்கும். ஆச்சரியமா இருக்குல்ல…….?”
நான் தலையசைத்தேன். பின் என் பெரியப்பா வீட்டில் வளர்ந்த நாயைப் பற்றி சொன்னேன்.
” மனிதன் தன் புத்திசாலிதனத்தைக் கொண்டு யானையைக் கூட அடிமையாக்கிடறான். யானை தன்னோட பாகன் சொல்படி காசை வாங்கி அவன்கிட்ட கொடுக்குது. ஆனா நாய்கிட்ட நாம அடிமைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது. அன்பா தடவிக் கொடுத்தா அது உசுரையே தரும்” என்றார் நாய்சார்.
நாய் நடப்பதை நிறுத்திவிட்டுசுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வெறித்தது. பின் என்ன நினைத்ததோ மெதுவாக நடக்க ஆரம்பித்தது. சாலையில் போக்குவரத்து மிகுதியாயிருந்தது.
கடைகள் நிறைந்திருந்தன. பிள்ளையார் கோவில் வாசலில் சிறு கூட்டம்கூடியிருந்தது. அன்று ஏதாவது விசேஷ நாளாயிருக்கும் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
நாய்சார் செருப்பைஅவிழ்த்துவிட்டு சங்கிலியைப் பிடித்தபடியே கையெடுத்துக்கும்பிட்டார். நாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. கோவில்வாசலில்நின்றிருந்த பெண்மணியின் கையிலிருந்தகுழந்தை நாயைக் கண்டதும் துள்ளியது.
மழலை மொழியில் ஏதோ பிதற்றியது. நாய் திரும்பிப் பார்த்தது. குழந்தை உதைத்து இடுப்பிலிருந்து இறங்க முற்பட்டது. அதன் தாய் விடவில்லை.
” நாய்கடிச்சிடும்” என்று பயமுறுத்தினாள்.
நாய் நகர்ந்து நாய்சார் பக்கத்தில் நின்று கொண்டது தான், வளர்ப்புநாய் என்று உறுதிபடுத்த நினைத்ததோ என்னவோ. நாய்சார் நாயை தடவிக் கொடுத்தபடியே குழந்தையைப் பார்த்து சிரித்தார். குழந்தை கைகளை நீட்டித் தாவியது.
” பேசாம இரு. இல்லேன்னா அம்மா அடி கொடுப்பேன்.”
அந்த அம்மா நகர்ந்து போனாள்.
” குழந்தைகளுக்கு நாய்னா ரொம்ப இஷ்டம். எங்க வீட்டுக்குப்பக்கத்துல இதேமாதிரி ஒருகுழந்தை இருக்கு. அதுக்கு எப்பவும் நாயைத் தொட்டுத், தடவி விளையாட ஆசை. அவங்கம்மா ஒரு அடி எடுத்து வைக்க விடமாட்டாங்க. கையில ஒரு கரடி பொம்மையோட அந்தக் குழந்தை ஜன்னல் வழியா ஏக்கமா பார்த்துக்கிட்டேயிருக்கும். சில பேருக்கு வளர்ப்பு மிருகங்கள்னா ஒவ்வாமை” என்றார் நாய்சார்.
இருட்டத் தொடங்கியிருந்தது. நாங்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
நாய் ஒரு விளக்குக் கம்பத்தில் ஒதுங்கிவிட்டு நடந்தது. சகமனிதன் போல் பாவித்து ஒரு தோழமை உணர்வோடு நாய்சார் அதனுடன் நடந்து கொண்டிருந்தார். எஜமானரின் பிடிக்குள் திமிரும் நாய் போலன்றி அதுவும் இயல்பாக நடை போட்டது.
சாலையோர மின்விளக்குகள் பளிச்சிட த் தொடங்கின. கடந்து சென்ற கடலை வண்டியில் வறுபட்ட கடலையின் மணம் நாசியை வருடியது. நாய்சார் இரண்டு கடலைப் பொட்டலங்கள் வாங்கி ஒன்றை என்னிடம் தந்தார்.
” அவளுக்குக் கடலைன்னா ரொம்பப் பிரியம். வறுபட்ட சூடு ஆறிப் போறதுக்குள்ள சாப்பிடணும்னு சொல்லுவா ” என்றவர்,
” ஆனா இந்நேரத்துக்கு கடலை சாப்பிட்டா அவளுக்கு செரிக்கிறதில்ல. அதனால பிற்பகல் எடுத்துக்குவா ” என்றார்.
” உங்களுக்கு வாங்கிக்கலையே…..”
நான் என்னிடமிருந்ததை நீட்டினேன். வேண்டாமென சைகை செய்தவர் ஃபிளாட்டுக்கருகில் வந்ததும் விடைபெற்றுக் கொண்டார்.
” நாளைக்கு நேரமிருந்தா வாங்களேன்.”
நான் அவரது அழைப்பைஏற்றுக்கொண்டேன். காலைநேர நடைபயிற்சி எனக்கு அவ்வளவாக ஒத்து வருவதில்லை. அலைபேசியில் அழைப்புகள்வந்தவண்ணமிருக்கும். ஒவ்வொருஅழைப்பும் கால்மணி, அரைமணி என்று நேரத்தை சாப்பிட்டுவிடும். என் வேலை அப்படி.
அதனால் மாலை நேரத்தை தோதாக்கிக் கொண்டேன். வேலை முடிந்து நேரமே வீட்டுக்கு வரும் நாட்களில் நாய்சாருடன் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தேன். பானுவுக்கு பரம திருப்தி.
” நீங்க, நாய்சார், நாய் மூணுபேரும் வாக்கிங் போறது பார்க்க சிரிப்பா இருக்கு” என்று கிண்டல் வேறு செய்தாள்.
இரவு உணவை நாய்சார் தயாரிப்பாராம்.
” பெரும்பாலும் இட்லி அல்லது தோசைதான் ராச்சாப்பாடு. அதனால நானே தயார் பண்ணிடுவேன். இட்லியோ, தோசையோ கொஞ்சம் பால் சேர்த்துப் பிசைஞ்சு வட்டில்ல வச்சுட்டா நாய் சாப்பிட்டுடும்.”
அன்றைய நடைப்பயிற்சியின்போது நாய்சார் சொல்லிக்கொண்டே அந்த சாலையோரப் பூங்காவிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். என்னையும் அருகில் அமரச் சொன்னார். நாய் பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றி அமர்ந்து கொண்டது.
“ நாய்களை கவனிச்சிருக்கீங்களா…….நான் பார்த்தவரைக்கும் அதுங்க பெரும்பாலும் அஞ்சு விதமான போஸ்ல தான் இருக்கும். ”
நாய்சார் சொல்லிவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார். கடந்த ஒரு மாதமாக அவருடன் நடைப்பயிற்சி வருவதில் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். அதிலும் குறிப்பாக நாய்களைப் பற்றி அதிக தகவல்களைக் கூறினார். நாய்சார் அருகில் அமர்ந்திருந்த நாயின் தலையைத் தடவிவிட்டார். அது பெருமையாக என்னைப் பார்த்தது.
” சார், சொல்லுங்க…….”
நான் ஞாபகமூட்டினேன்.
” அஞ்சு விதமான போஸ். முதலாவது இதோ இப்படி, பின்னங்கால்களை மடக்கி தரையில பதிச்சு முன்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்திருக்கறது, ரெண்டாவது முழு உடம்பையும் தரையில கிடத்தி கால்களை நீட்டிப் படுத்துக்கறது, மூணாவது பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை முன்னால நீட்டி உட்கார்ந்துக்கறது, நாலாவது அப்படியே முன்னங்கால்களுக்கு மத்தியில முகத்தைப் பதிச்சு படுத்துக்கறது, அஞ்சாவது உடம்பைக் கிடத்தி கால்களை நீட்டிப் படுத்தவாக்குல தலையை உயர்த்திப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கறது. இதைத்தவிர வேறமாதிரி இருந்து நீங்கப் பார்த்திருக்கீங்களா……?”
நான் யோசித்தேன். எதுவும்ஞாபகத்துக்கு வரவில்லை. இல்லையென்று தலையாட்டினேன். அவர் சொன்னபோது கண்ணுக்கெதிரே காட்சிகள் வந்து போயின. நாய்சார் தொடர்ந்தார்.
“ நாய் கால்களை நீட்டி உடம்பைக் கிடத்தி படுத்துத் தூங்கும்போது ஆழ்ந்த உறக்கத்துல இருக்கும். அதுவே பின்னங்கால்களை மடக்கி முன்னங் கால்களை நீட்டி நடுவுல முகத்தைப் பதிச்சு தூங்கறப்ப எப்பவும் தாக்கத் தயாராயிருக்க ராணுவவீரன் மாதிரி உஷார் நிலையிலயே இருக்கும். சின்னதா ஒரு சத்தம் கேட்டாலும் விருட்டுன்னு எந்திரிச்சு நிக்கும். இதெல்லாம் என்னோட கணிப்புதானேயொழிய நிரூபிக்கப்பட்ட உண்மையில்ல ” என்றார் நாய்சார்.
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். தன்நாய் மீதான அன்பில் அவர்எவ்வளவு யோசித்திருக்கிறார்என்று தோன்றியது. மறுநாள்நான் அவருடன் நடைப்பயிற்சிக்கு செல்லவில்லை.
அதற்கடுத்த நாட்களும் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததில் செல்ல முடியவில்லை. நாய்சாரிடம் அலைபேசியில் சொன்னபோது,
” விடுங்க பார்த்துக்கலாம்” என்றார் அவர்.
கிட்டதட்ட ஒரு மாதமாகியிருந்தது அவருடன் நடைபயிற்சி சென்று. காலையில் பால்கனியில் நின்று அவர் போகும்போது கையசைப்பதோடு சரி.
” ஒழுங்கா வாக்கிங் போயிக்கிட்டிருந்தீங்க. அதுவும் போச்சு…….” என்று பானு புலம்பினாள்.
மழை நாட்கள் தொடங்கிவிட்டன. அப்படியொன்றும் பெரிதாக கொட்டி விடவில்லை. மழை ஓரிரு நாட்கள் கனத்து பெய்தது. மற்ற நாட்களில் நினைத்துக் கொண்டாற்போல் தூறல் போட்டது. விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கின்ற அளவுக்கே இருந்தன மழை நாட்கள்.
” நல்லவேளையா காலைநேரத்துலமழை பெய்யறதிலல” என்றார் நாய்சார்.
அவர் நடைபயிற்சிக்கு போக மழை பெறும் ஒத்தாசை செய்தது. மழை கொட்டும்போது கார் பார்க்கிங்கில் நாய் படுத்துக் கிடக்குமாம்.
” நாய்க்கு தடுப்பூசி போட்டுட்டு வந்தேன். ”
ஒருநாள் மாலை அலுவலகம் முடிந்து திரும்பியபோது தெருமுனையில் எதிர்ப்பட்ட நாய்சார் சொன்னார்.
” நாய் வச்சிருக்கறவங்களுக்கு இதெல்லாம் கூடுதல் சுமை இல்லையா…….?”
நான் கேட்டபோது நாய்சார் மறுத்து தலையாட்டினார்.
” குழந்தையை கவனிச்சிக்கறதை சுமையா நினைப்போமா…… அப்படித்தான் இதுவும்” என்றார்.
அன்று காலை எழுந்தபோது நாய்சார் மனைவி இறந்துபோன செய்தி வந்தது. கடந்த ஒருவாரமாக அவரைப் பார்க்கசந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பார்த்திருந்தால் அவர் மனைவி உடல்நலம் பற்றி தெரிந்திருக்கும். நான் பதறி அவர் வீட்டுக்குஓடினேன்.
தெருவாசிகள் இயந்திரம் போல வருவதும், போவதுமாயிருந்தனர்.
நாய்சார் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
” எப்போதும் போலதான் இருந்தா. அதிகாலை மூணு மணியிருக்கும். உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைக்கறதுக்குள்ள சட்டுன்னு நின்னுடுச்சு. சிவியர் அட்டாக்குன்னு டாக்டர் சொல்றார். ”
நாய்சாரின் கண்கள் கலங்கியிருந்தன. துக்கம் விசாரிக்க வந்த அனைவரிடமும்அவர் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார். தெருவாசிகளில் பலர் முன்பின்அறிமுகமில்லாதவர்கள். அவர்களிடமும் அவர் அதைச்சொல்ல வேண்டியிருந்தது.
நாய்அவர் காலருகில் நின்றுகொண்டிருந்தது. சிலநேரம்வாசற்படியில் நின்று கூடத்தில்கிடத்தப்பட்டிருந்த நாய்சாரின்மனைவியை அதுவெறித்தது. பின் திரும்பி வந்து ஓரிடத்தில் படுத்துக்கொண்டது. உடனேமறுபடியும் எழுந்துபோய் வாசற்படியருகில் நின்று உள்ளே பார்த்தது. இருப்புகொள்ளாதன்மையுடன் அது அங்குமிங்கும்அலைபாய்ந்ததைக் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது.
நாய்சாரின் உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். நாய்சார் காதல் மணம் புரிந்தவர். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மனைவியை கரம் பிடித்திருக்கிறார். அதனால் இரு பக்கமும் சொந்தங்கள் விலகிக் கொண்டனவாம். ஒருநாள் நடைப்பயிற்சியின்போது பகிர்ந்த செய்தி இது. வந்திருந்தவர்கள் ஒப்புக்கு உட்கார்ந்துவிட்டு போய்ச் சேர்ந்தனர். அவர் அலுவலக ஆட்கள் மட்டுமே இறுதிவரை உடனிருந்தனர். நான் நாய்சாருக்குத் துணையாக மயானம் வரை சென்று வந்தேன். வீட்டில் அவரைத் தனியே விட மனமில்லாது சிறிதுநேரம் உடனிருந்துவிட்டு கிளம்பினேன்.
” நாளைக்குக் காலையில வரேன் சார்.”
நான் விடை பெற்றுக் கொண்டபோது அலுவலக பியூன் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கி வந்தான். நான் சாப்பாடு கொண்டுவந்து தருவதாக சொன்னபோது நாய்சார் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
” பக்கத்துல நல்ல மெஸ் இருக்கு. அங்கே வாங்கிக்கறேன் சார். உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்….” என்று விட்டார் .
மறுநாள் நான் அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. நாய்சாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நான்குநாட்கள் இருந்து முடிக்கவேண்டிய வேலை. வேலை முடிந்து ஊர் திரும்பியபோது மாலை ஆகியிருந்தது. நான் வந்ததையறிந்து நாய்சார் பதட்டத்துடன் ஓடி வந்தார்.
” நாய் செத்துப் போச்சு சார். ”
” எ……எப்ப சார்……?”
” அரைமணி நேரமிருக்கும். கொஞ்சம் வீட்டுக்கு வாங்க சார். ”
நான் அவரைத் தொடர்ந்தேன். நாய் வாசற்படியருகில் கிடந்தது.
” நாலுநாளா ஒருவாய் சாப்பிடல சார். ஒரு அடிகூட அடிச்சுப் பார்த்துட்டேன். பிடிவாதமா பட்டினி கிடந்து உயிரை விட்டுடுச்சு. “
மிக அருமை அக்கா… வாழ்த்துகள்…
நாய்க்கு அவர் உள் மனம் புரிந்திருக்கிறது. அவர் படும் மகிழ்ச்சி வேதனை எல்லாமே அதற்கும் உள்ளே வந்திருக்கின்றன. அது தன் இரக்கத்தைக் காட்ட அவர் மனைவி இறந்த வருத்தத்தைக் காட்டத் தன்னையே தியாகம் செய்து விட்டது. உருக்கமான கதை
சொல்லாமலே…..!😥😢