அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.
என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?
கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.
சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.
நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.
அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.
கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.
அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.
எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.
பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.
நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.