புத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை

மெல்லிய தூறலாக ஆரம்பித்த மழை இன்னும் வலுத்துப் பெய்யத் தொடங்கியது. பக்கத்தில் எங்கோ இடி விழுந்த மாதிரி இருந்தது. அந்த அலுவலகக் கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த தென்னை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தென்னம்பாளை காற்றில் ஆடிக் கீழே விழுந்தது. முற்றம் முழுதும் பன்னீர்ப்பூக்களும் பூவரசம்பூக்களும் இரைந்து கிடந்தன. முகப்பில் இருந்த மின்விளக்கைச் சுற்றிலும் ஈசல்கள் மொய்த்தன. வரவேற்பறையின் சன்னல் வழியே நீண்ட இழுப்புகளாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் கெவின். அவனது சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. அடுத்த அறைக்குச் செல்லும் வழியில் தொங்கிய திரைச்சீலையைப் பிடித்துக் கை விரலில் சுற்றிக்கொண்டு அவனைப் பின்புறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்டலீன்.

ஊளைக்காற்றுடன் தாண்டவமாடி ஓர் உச்சத்தை அடைந்த மழை மெதுவாக அமைதியடைந்தது. அதற்குள் மூன்று நான்கு சிகரெட்டுகள் முடிந்துவிட்டன. இருவரிடையே வேண்டா விருந்தாளியாக ஒரு நீண்ட மௌனம். கலைந்திருந்த கூந்தலைப் பின்னிக்கொண்டே, “என்னக் கொண்டு வடசேரி பஸ் ஸ்டாண்ட்டுல விடுவியா கெவின்?” என்று கேட்டாள் மேக்டலீன். எப்போதும் மாறாப் புன்னகை அப்போதும் அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

திரும்பிப் பார்க்காமல், “ம்ம்..ஃபைவ் மினிட்ஸ்.” என்றான் கெவின். உள்ளே சென்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வந்தான். போனை எடுத்துப் பார்த்தபோது பதினைந்து மிஸ்டு கால்கள்..லிசாவும் அம்மாவும் அழைத்திருந்தார்கள்.

மழையீரத்தில் பைக் கிளம்ப மறுக்க சலித்துக்கொண்டு பலமாக மிதித்தான் கெவின். அலுவலக வாசலில் நின்று முகத்தில் விழும் கற்றைமுடியை ஊதியவாறு அவனை ஒரு கிண்டல் தொனியில் பார்த்தாள் மேக்டலீன்.

வண்டி ஒருவாறாகக் கிளம்ப, துள்ளிச்சென்று பின்னால் ஏறிக்கொண்டாள். ஏதும் பேசாமல் வழக்கத்தை விட மிக வேகமாக ஓட்டினான் கெவின்.

“கெவின், மழநேரம்லா, மெதுவாப் போ…ஸ்கிட் ஆகிறாம…”

“ம்…”

வண்டி வேகம் குறையாமல் தொடர்ந்து செல்ல, மீண்டும் மழை தூற ஆரம்பித்தது.

“கெவின், மழ பலத்துப் பெய்யப் போகு…எங்கயாம் நிறுத்து..மழ நல்லா விட்டப்பொறவு போவம்..”

கெவின் அடுத்திருந்த கல்லடி சர்ச் வாசலில் வண்டியை நிறுத்த, துள்ளியிறங்கி ஓடினாள் மேக்டலீன். அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் எதையோ யோசித்தவனாக வந்து நின்றான். அங்கு வேறு யாரும் இல்லை. சர்ச் முகப்பிலிருந்த மின்விளக்கு விட்டு விட்டு எரிந்தது. கெவின் மழை பெய்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேக்டலீன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் ஏதும் பேசமாட்ற?” என்று அவனது கையைப் பிடித்தாள்.

“நா ப்ரே பண்ணனும்…நீ?” என்றவாறு அவளது கையைத் தவிர்த்தான்.

“இல்ல..நீ போய்ட்டு வா…நா இங்க நிக்கேன்…” என்றவாறு மழையில் கைநீட்டி நின்றாள்.

பதற்றமாக முழங்காலிட்டு நின்று கண்களை மூடினான் கெவின்.

“சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே…” என்று ஆரம்பித்ததும் மேக்டலீனுடனான சந்திப்புகள் மனதில் வந்து நிற்க, ஜெபம் நின்றது. மனதைத் தடை செய்யாமல் அதன்வழி விட்டான்.

‘மேக்டி அவ மாமனாருக்கு ப்ளட் கொடுக்க என்ன கூப்புட்ட சமயமே எனக்கு ஒரு மாதி தோணிச்சி. ப்ளட் பேங்க்ல அவளுக்குத் தெரியாத ஆளே கெடையாது. பொறவு எதுக்கு மெனெக்கெட்டு என்னக் கால் பண்ணிக் கூப்புடணும்? அவ மாப்ளயும், அத்தயும் என்ன கால்ல விழாத கொறயா தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க… நா நெனச்சிருந்தா வேறெதாம் எடத்துல ப்ளட் அரேஞ்ஜ் பண்ணி குடுத்துருக்கலாம்..ஆனா, நா அப்டி செய்யலல்லா..அப்ப எனக்கும் அந்த சந்தர்ப்பம் தேவைன்னதாலத்தான நா போயிருக்கேன்.’

“தப்பிப்போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்…”

‘அவ கவர்ன்மென்ட் வேலக்கிப் போனதுக்கு நாந்தான் காரணம்னு அவ ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னா..எனக்கு ஷாக்காயிட்டு…எதுக்கு இவ இப்பிடிப் பொய் சொல்லுகான்னு நா கொழம்பிட்டேன்..’

“எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம்..”

‘மொத தடவ எனக்க ஆஃபீசுக்கு வந்தப்பயே ஏதோ ரொம்ப நாள் பழகுன ஃபிரெண்ட் மாதி பேசுனா..என்னதான் நா கமிட்டெடா இருந்தாலும் அப்பிடி ஒரு பொண்ணு, அவ்ளோ அழகான பொண்ணு வலிஞ்சு வந்து பேசும்போ நா பெரிய உத்தமன் மாதி நடிக்க முடியாதுல்லா..நா அப்பிடி படம் வைக்க ஆளும் இல்ல..அவ பாக்கதுக்கு காலேஜ் முடிச்ச பொண்ணு மாதிதா இருந்தா..பொறவு பேசும்போ என்ன விட ஏழு வயசு பெரியவ, கல்யாணம் கழிஞ்சி ஒரு பிள்ள இருக்குன்னு சொன்னா..என்ன கொமைக்கான்னுதான் நெனச்சேன்..ஆனா ஃபேமிலி ஃபோட்டோவ காணிச்சா…என்னால அப்பவும் நம்ப முடியல..அன்னிக்கி ஆரம்பிச்ச ஃபோன்தான்…டெய்லி கால் பண்ண ஆரம்பிச்சா..மொதல்ல ஃபார்மலா பேச ஆரம்பிச்சா…பொறவு கொஞ்ச கொஞ்சமா என்ட்ட ஃப்ளர்ட் பண்ற மாதிரி பேசுனா..எனக்கும் அவ பேசுறது, அவ நடக்கிறது, அவ அழகு எல்லாமே புடிச்சனால நானும் கம்பெனி கொடுத்தேன்..’

“உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்துவந்தோம்..”

‘அப்ப கம்பெனி குடுத்தவனுக்கு இப்ப என்ன மயித்துக்கு கில்ட்டி ஃபீலிங்ன்னு கேக்கேன்..தாயளி நீ யோக்கியன்னா அப்பவே அவட்ட, எனக்கு லவ்வர் இருக்கா, எனக்க அத்த மவதான்..எங்கிட்ட இப்படிப் பேசாதன்னு சொல்லி கட் பண்ணிருக்கணும்லா…செரி, அத விடு…அவ மாப்ள வீக்கெண்ட்ல மட்டுந்தா ஊருல இருப்பாருன்னுத் தெரிஞ்சும் அவ அன்னிக்கிக் கூப்புட்ட ஒடனே ஓடித்தானல போன?..இத்தனைக்கும் அவ யாரும் இல்லன்னு சொல்லி வேற கூப்புடுகா..அப்பிடி என்ன டே அவசரம் அவளுக்கு? மெடிசின் வேணும்னா வாங்கிக் கொடுக்க வேற ஆளே கெடைக்காதா? நீ எப்படான்னுதானல இருந்த? அதான் கூப்புட்ட ஒடன ஓடிட்ட..ஆனா அவளும் செரியான ஆளுதாம் பாத்துக்க..ஒடம்பு செரியில்லன்னு சொன்னா..வீட்டுக்குப் போயிப் பாத்தா அப்பத்தான் குளிச்சி முடிச்சி பட்டுப்பொடவ கெட்டி ஒக்காந்துருக்கா..நீயும் நல்ல சான்ஸ்னு நெனச்சிருப்ப ராஸ்கல்..செரி, போனது தான் போன, சட்டுன்னு மெடிசின குடுத்துட்டுப் பொறப்பட வேண்டியதான? பெரிய மயிரு மாதி ‘ஒரு காபி கூட தர மாட்டீங்களா’ன்னு நீ தான கேட்ட? நீ காபி மட்டுமா கேட்ட?..அஃபிசியல் ட்ரெஸ்லயே பாத்துட்டு இப்ப சாரீல பாக்கும்போ அநியாயத்துக்கு அழகா இருக்கீங்கன்னு நீ தான ஆரம்பிச்ச? ஒனக்கு நல்லாவே தெரியும்ல, அன்னிக்கி என்ன நடக்கும்னு..அவளுக்கும் அப்ப அப்டிதான தோணிருக்கும்..அதான், நீ பொறப்படும்போ வந்து கெட்டிப்புடிச்சா..நல்ல வேள, அப்ப லிசா கால் பண்ணா….இல்லன்னா நீ துணிஞ்சிருப்ப டே..பெரிய யோக்கியன் மாதி வேஷம் போடாத..’

“எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும், ஆண்டவரே, தேவரீர், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச்செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும்..”

‘அவளுக்கு ஒரு பொம்பளப் பிள்ள இருக்குல்லா ல, அதக்கூடவா நீ யோசிக்கல? நாளக்கி ஒம் பொண்டாட்டி வேறொருத்தங் கூடப் போனா ஒனக்கு எப்பிடி இருக்கும்? அவ ஹஸ்பண்ட் எவ்ளோ டீசன்டான மனுசன்? உன்ட்ட எவ்ளோ மரியாதயா பேசுனாரு? நீ ஒரு நிமிஷம் அந்தாள நெனச்சுப் பாத்தியால? செரி, அதயும் வுடு..அவ லவ் மேரேஜ் தான பண்ணிருக்கா? பொறவு என்ன மயித்துக்கு ஒனட்ட வந்தா? நீ நெனச்சது செரிதாம்ல..இவ பிட்ச் தான்…அவளுக்க நடையும் ஆட்டலும்…இன்னிக்கி எப்பிடி ஒன்ன மயக்குனா பாத்தியா? பிட்ச்..பிட்ச்..அவ ஒவ்வொரு ஸ்டெப்பும் பிட்ச் மாதிதான ல இருந்து…ஆனா இன்னிக்கி எல்லாஞ் செஞ்சிட்டு கடைசில எதுக்கு கண்ணீர் வுட்டான்னு தெரிலய? பெரிய பத்தினி மாதி…சப்புன்னு அறஞ்சிருக்கணும் நீ, என்ன மயித்துக்கு அழுகன்னு…அந்த சென்டிமென்ட்ல நீ வுழுந்துருவன்னு நெனச்சிருப்பா…அப்பிடியே தேவப்படும்போ ஒன்ன யூஸ் பண்ணலாம்னு ப்ளான் போட்ருப்பா..’

“தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்.”

‘செரி, அவதான் அப்பிடி..நீயாவது ஒழுங்கு மயிரா அவாய்ட் பண்ணிருக்கலாம்லா? ஃபோன்ல அவ கேக்கும்போதே, இல்ல, வேற வேல இருக்குன்னு சொல்லிருக்க வேண்டியதான? ஆறு மணிக்கு மேல ஆபீஸ்ல ஒனக்கு என்ன வேல? மழ வரமாறி இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிருக்க வேண்டியதான?’

“பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்படுத்தும்.”

‘எடைல என்னமோ சொன்னாள, ம்ம் … கெவின், நீ ஒரு கொழந்த மாதின்னு…மயிரு…அவ ரொம்ப நாளா இதுக்கு ப்ளான் பண்ணிருப்பா மக்கா…இல்லன்னா இப்பிடி ஒன்ன மடக்க முடியுமா?…ஆனா, அவளவிட நீதாம்ல பெரிய கள்ளன்..அவ பிட்ச்னா நீ யாருல? அவ ஹஸ்பண்ட்க்கு பண்ணது துரோகம்னா நீ லிசாவுக்குப் பண்ணதுக்குப் பேரென்னல ராஸ்கல்? அந்தப் பிள்ள ஒன்னதான் கெட்டுவேன்னு மருந்தடிச்சால்லா, அதெப்பிடி ல மறந்த நீ? அப்பிடி ஒனக்கு எடுப்பெடுக்குமா ல, தொட்டி?’

“மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும்….”

‘ஒண்ணுமே தெரியாத மாதி மூஞ்சிய வச்சிட்டு எப்பிடித்தான் நிக்காளோ? நீ மட்டும் அவட்ட இப்ப பேச்சுக் கொடுத்தன்னு வையி, தொலஞ்ச கேட்டியா..இன்னியோட போட்டும்…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….ஒரு பாடம்னு நெனச்சுக்க பாத்துக்க… இல்ல, யாருக்கும் தெரியாம மேனேஜ் பண்ண முடியும்னுல்லாம் நெனைக்காத..பேப்பர்ல எவ்ளோ கத வருகு டெய்லி..இது அத மாதிதான் போயி முடியும்..சொன்னா கேளு..ஒனக்கு வயசிருக்கு..லைஃப்ல பாக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு பாத்துக்க..ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ஒங்க அம்மாவ நெனச்சுப் பாத்தியால நீ….தொட்டி…நாளக்கி விசயம் வெளிய தெரிஞ்சா ஒங்கம்மா தாங்குவாளா சொல்லு..தொங்கிர மாட்டாளா?..நீ செஞ்ச காரியத்துக்கு நீ தாம்ல தொங்கணும் ராஸ்கல்.. கடைசியா சொல்லுகேன், நடந்தது நடந்தாச்சு, ஒழுங்கு மரியாதயா இவள இன்னயோட விட்டேன்னா பொழச்ச…இல்லன்னா, ஒந் தலையெழுத்து..தெருவுந் திண்ணையுமா நிக்கப்போற, எழுதி வச்சுக்கோ..’

“நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.”

….

வெளியே வந்தவன், மேக்டலீனின் அருகே சென்று அமைதியாக நின்றான்.

“என்ன கெவின்? கன்ஃபெஷன் குடுத்தியோ?” என்று புன்னகைத்தாள்.

அவன் முகத்தில் எரிச்சலோடு ஏதும் சொல்லாமல் நின்றான்.

“கெவின்..என்னத் தேவிடியான்னு தான நெனச்ச?”

“என்ன…என்ன பேசுக மேக்டி…இல்ல…இல்ல” என்று வேகமாகத் தலையை ஆட்டினான். ஏதாவது பேசிவிடக் கூடாதென தன்னைக் கட்டுப்படுத்தி நின்றான்.

“கெவின், நா ஒண்ணும் தேவிடியா இல்ல கெவின்…..” தீர்க்கமாக அவனைப் பார்த்துச் சொன்னாள் மேக்டலீன். அவளது பாதிமுகம் மட்டும் வெளிச்சத்தில் தெரிந்தது.

அவளது போன் அடிக்க, எடுத்து, “ம்ம்..கிருஷ்ணா…நா இப்ப வந்துருவேன்…” என்று சொன்னாள். பின், சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஃபோனில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

“கெவின், கெளம்பலாம்.” என்றாள்.

“மழ அடிச்சு பெய்யில்லா மேக்டி…கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..” என்று அவள் முகத்தைப் பார்த்தான் கெவின்.

“இல்ல, வா.. போலாம்” என்றவள் பைக் அருகே சென்றாள். கெவின் வண்டியை எடுத்தான், அவள் மெதுவாக ஏறி உட்கார்ந்தாள். மழையில் நனைந்த அவளது முகத்தில் ஒரு புன்னகை தோன்றி நீடித்தது. மழை இருவரையும் பாரபட்சமின்றி முழுக்க நனைத்தது.

மேக்டலீன் மேல் விழுந்து வழிந்த மழைத்துளிகளோடு அவளது எண்ணங்களும் சேர்ந்துகொண்டன.

‘கெவின் எங்க மாமனாருக்கு ப்ளட் கொடுக்க கண்டிப்பா வருவான்னு எனக்குத் தெரிஞ்சிச்சி. நா கூப்புட்டா அவனால நோ சொல்ல முடியாது..அவனுக்கு எம்மேல ஒரு ஈர்ப்பு..அது அவன் என்ன மீட் பண்ண மொத நாள்லயே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. ஆனா, நா அவன அதுக்கு முன்னாடி ரொம்ப தடவ பாத்துருக்கேன்..கேஸ் விசயமா ஜி.ஹெச்சுக்கு அப்பப்போ வருவான்..அவன் பேஷண்ட்ஸ்ட்ட நடந்துக்கிட்ட விதம், அவங்க மேல காட்டுன அக்கற, எப்பவுமே அவனச் சுத்தி இருந்த ஒரு கலகலப்பு எல்லாஞ் சேந்து எனக்குள்ள என்னெல்லாமோ செஞ்சிட்டு..அப்ப நா இருந்த நெலம அப்பிடி..

அவன வீட்டுக்கு வர வச்சி கெட்டிப் புடிச்சப்பக்கூட எனக்கு சொகமால்லாம் இல்ல..அப்ப நா முழு மனசா அதச் செய்யல..சொல்லப் போனா ஒடம்பு கூசிச்சு..கிருஷ்ணா மேல இருந்த கோவந்தான் மனசுல வந்துட்டே இருந்து..என்ன லவ் பண்ணித்தான கல்யாணம் பண்ணுனான், அதுக்காக வீட்டுல எவ்ளோ சண்ட போட்டான்? அத்த, மாமாக்கு என்ன ஏத்துக்க மனசேயில்ல..கிருஷ்ணா ஒத்தக்கால்ல நின்னதாலதான் சம்மதிச்சாங்க….நா நெனச்சிருந்தா கிருஷ்ணாவ கூட்டிட்டுத் தனியா போயிருக்கலாம்லா? ஆனா, அவனுக்கு அப்பா அம்மான்னா உயிருங்கறதாலத்தான எல்லாத்தயும் தாங்கிக்கிட்டு இருந்தேன்..அவன் முன்னாடி ‘மக்களே, மக்களே’ன்னு பேசிட்டு, அவன் இல்லாதப்ப என்னப் படுத்துன பாடு…ஒரு நாளாவது நான் செஞ்ச எதயாம் நல்லாருக்குன்னு சொல்லிருக்காங்களா? எதுக்கெடுத்தாலும் கொற. குத்திக் குத்திப் பேசுனா?…தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னாக்கூட நான் பொறுமையா இருந்தேன்லா? நா நெனச்சா சொகமா வீட்ல இருந்து கால் மேல கால் போட்டு சாப்பிட்டுட்டு இருந்துருக்கலாம், ஆனா, அவங்களுக்காகத்தான கஷ்டப்பட்டு கவர்ன்மென்ட் வேலக்கி ஏறுனேன்..அவங்க ட்ரீட்மென்ட்க்கு கிருஷ்ணா எஞ் சம்பளத்த வச்சித்தான சமாளிக்கான்..ஒரு மூச்சு வீட்டு வேல, பொறவு ஆஃபீஸ், பின்ன சாய்ங்காலம் மறுபடியும் வீட்டு வேல, எல்லாத்தயும் அவனுக்க அந்த உண்மையான அரவணைப்புக்காகத்தான செஞ்சேன்..பொண்டாட்டியா அவனுக்கு என்ன கொற வச்சேன்? ஒடம்புக்கு முடியலன்னா கூட மறுத்தது கெடையாத..ஆனா, அவனால எப்பிடி எனக்குத் துரோகஞ் செய்ய முடிஞ்சு?

அந்த ஃபோன் கால் மட்டும் வரலன்னா என் லைஃப் எப்பிடி சந்தோசமா இருந்துருக்கும்! மொதல்ல நா நம்பல..சே, சே.. எவனோ வேண்டாதவன் பண்ணுக வேலன்னுதான் நெனச்சேன்..ஆனா, நானே என் கண்ணால அந்த மெஸேஜ், வீடியோல்லாம் பாத்தப் பொறவு எப்பிடித் தாங்க முடியும்?

எங்கம்மாவும் அப்பாவும் என்ன எப்பிடில்லாம் வளத்தாங்க? கால தரைல பட விட மாட்டாங்களே..எல்லாமே நா நெனச்ச மாறிதா நடக்கும்..பெரிய பிள்ளையா ஆனப்பொறவுதான் என்ன அவங்க தத்தெடுத்து வளக்க விசயமே எனக்குத் தெரிஞ்சிச்சி..ஆனாலும், எப்பவுமே நாந்தான அவங்க செல்லப் பிள்ள? மாத்தாம்பிள்ளைன்னு ஒரு நாள் கூட பாத்துருப்பாங்களா? எங்கக்காவ விட என்ன எப்பவும் ஒரு படி மேல வச்சித்தான பாத்தாங்க.

நான் கேரளால வேல பாத்துப் போயிருக்கக் கூடாதோ? அப்பதான் அப்பா செத்தது.. என்னால இப்பவும் அந்த நாள மறக்க முடில. எம் ஃபோட்டோவ நெஞ்சுல கெட்டிப்புடிச்சிட்டே தூங்குனவரு அப்பிடியே போய்ட்டாரு..நா வந்து பாக்கேன், அவருக்க மேல எம் ஃபோட்டோ அப்பிடியே இருக்கு..எங்கக்கா சொல்லிச் சொல்லி அழுதா ‘ஒன்னப் பாக்காமப் போய்ட்டாரே அப்பா’ன்னு.

அப்பா போன எடத்த நெரப்ப வந்தவந்தான் கிருஷ்ணான்னு எனக்கு அடிக்கடி தோணும்.. எங்க ஆஃபீஸ்ல வந்து வேலக்கிச் சேந்தான். நா சோகமா இருக்கதப் பாத்து வலிய வலிய வந்து அவனே பேச ட்ரை பண்ணான்.. நா மொதல்ல அவாய்ட் பண்ணேன்..போகப்போக அவனப் புடிச்சிட்டு..ரொம்ப நல்ல மனுசனாத் தெரிஞ்சான்..இப்ப நெனச்சா கொமட்டிட்டு வருகு..அப்பிடி லவ் பண்ணவன் இப்ப எப்பிடி இப்பிடி ஆயிட்டான்? அந்த மலையாளத்தா கிட்ட கொஞ்சும்போ எம் மூஞ்சி அவன் கண்ணு முன்னாடி வந்துருக்கும்லா? எப்பிடில்லாம் போட்டோ எடுத்துருக்கான்..புடிக்காமலா எடுத்துருப்பான்? நான் தூங்குன பொறவு அவளுக்கு என்ன வீடியோ கால் வேண்டிக் கெடக்கு? ஒருநாள் எம் மூஞ்சிக்கிட்ட வந்து நான் தூங்கிட்டனான்னு பாத்துட்டு ஃபோன எடுத்துட்டு வெளிய போனான்..அன்னிக்கே நான் செத்துருக்கணும்.

அவன எப்பிடியெல்லாம் லவ் பண்ணேன்..எவ்ளோ பியூரா இருந்தேன்?

ஆனா, கெவின் இன்னிக்கி எல்லாம் முடிஞ்சப் பொறவு கடசீல ஒரு பார்வ பாத்தான்லா? அது தான் கொஞ்சம் கஷ்டமாய்ட்டு..அதுக்கு என்ன அர்த்தம்னு நல்லாவே தெரிஞ்சி..அவங்கூட இருந்த பத்து நிமிஷமும் வேணும்னே கிருஷ்ணாவ திரும்பத் திரும்ப நெனச்சேன்..என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு…அதோட எல்லாம் முடிஞ்சி..

செரி..எல்லாத்தயும் விடுட்டி, ஒம் பிள்ளைக்க மொகம் கூடவா ஒம் மூஞ்சிக்க முன்ன வரல்ல? அவ நாளக்கி வளந்து ஒனட்ட வந்து கேட்டா நீ நாக்கப் புடுங்கிட்டு சாவணும்லாட்டி? அவளுக்கு ஒலகம் தெரிஞ்சப்பொறவு எல்லாம் அவளுக்குப் புரியும்..அவ எம்பிள்ளல்லா, என் வீம்பு அவளுக்கும் இருக்கும்லா?

கெவின கெட்டிக்கப்போறவள நெனச்சா கொஞ்சம் சங்கடமாருக்கு…அவளுக்குத் தெரிஞ்சா இப்ப நா இருக்க மாதிதான அவளும் இருப்பா? ஆனா, நா என்னதா பண்ணுவேன்? நா ஒண்ணும் கடவுள் இல்லல்லா? செரி, நாளக்கி கிருஷ்ணா நாலு பொம்பளய கூடப் போவான்..நீயும் அப்பிடி ஊர் மேயப் போயிருவியாட்டி? அப்ப நீ தேவிடியாதானட்டி?

நா எதுக்கு அதச் செய்யணும்? நா கிருஷ்ணா கூடத்தா இருப்பேன்..ஆனா, ஒவ்வொரு நாளும் மனசுல சொல்லுவேன்..நீ எனக்க பாசத்த மிஸ் பண்ணிட்டடான்னு.

கெவின் பாவம்…’

…..

மேக்டலீனுக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. அவளிடம் ஃபோனில் பேசிவிட்டு, சாரலின் இதத்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்தான். காட்சிகளின் ஊடாக எண்ணங்கள் மிதந்து வந்தன.

‘இன்னிக்கி மேகி கிட்ட மனசு விட்டு எல்லாத்தயும் பேசிரணும்…கொஞ்ச நாளா அவ சரியில்ல…நல்லா வாடிப் போய்ட்டா….இப்ப ஃபோன்ல கூட செரியா பேசலயே! நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ்க்கு போய்ட்டு டின்னர் போலான்னு சொல்லுகேன்…ஒண்ணும் பதில் சொல்லல…ஒரு வேள நா செய்றதெல்லாம் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்…பரவால்ல…அவளுக்குத் தெரியணும்…தெரியாட்டாலும் இன்னிக்கி தெரிஞ்சிரும்…எனக்கே நெறைய கொழப்பமாத்தான் இருக்கு…சில விசயங்கள் ஏன் நடக்கு, நாம ஏன் அப்படிச் செய்யோம்ன்னுலாம் யோசிக்க முடியல…நம்மயும் மீறி நடந்திருகு…

மேகிய மொத தடவ பாத்தப்ப நா எப்பிடி ஃபீல் பண்ணனோ அதே ஃபீல் எப்ப கண்ண மூடுனாலும் எனக்கு வந்துருகு..யாரு வந்தாலும் போனாலும் அவ எம் மனசுல அதே எடத்துல அப்டியே தான இருக்கா…நா என்ன தப்பு செஞ்சாலும் அவள விட்ற மாட்டேன்..இந்த லைஃப்ல கடைசி வர அவதான்.

இன்னிக்கி என்னெல்லாமோ தோணுகு…எதோ தப்பான ரூட்ல ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி…எல்லாத்தயும் விட்டுட்டு அவ கிட்ட ஓடிப் போணும்… என் தப்பெல்லாம் அவகிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கணும்…அவ மட்டும் என்ன மன்னிச்சிட்டான்னா போதும்…இனி என்ன பண்ணப் போறேன், இதுலருந்து எப்பிடி வெளிய வருவேன்னுல்லாம் புரியல…ஆனா, அவ நெருப்பு மாதிரில்லா? அவ பக்கத்துல நின்னா, அவ கையப் பிடிச்சிக்கிட்டா, நா செரி ஆயிருவம்லா?

இதெல்லாம் வெளிய சொல்ல முடியாம அவ எவ்ளோ புழுங்கிருப்பா? அவளுக்கு எப்பிடி ஆறுதல் சொல்லன்னு எனக்குத் தெரில, அதுக்கு அருகதையும் இப்ப எனக்கு இல்ல…ஆனா, புதுசா தொடங்கணும்னு தோணுகு..இந்த ஆனிவெர்ஸரி எங்களுக்குப் புதுசா இருக்கட்டும்…’

….

வடசேரி பேருந்து நிலையம் அருகில் வந்ததும், “கெவின், கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.” என்றாள் மேக்டலீன். இறங்கிப் போய் சாலையோரம் இருந்த பூக்கடையில் இரண்டு பந்து மல்லிகைச் சரம் வாங்கினாள். ஒன்றை அவளது தோள்பையில் வைத்துவிட்டு ஒன்றைக் கெவினிடம் நீட்டினாள்.

“இந்தா கெவின், இது லிசாவுக்கு…”

கிருஷ்ணா அவர்களைப் பார்த்துக் கையசைத்து நடந்து வந்துகொண்டிருந்தான்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.