லிபரலைசேஷன், குளோபலைசேஷன், பிரை வடை சேஷன் என்ற சேஷன் கள் ஆதிக்கம் புரிந்து கொண்டிருந்த 92 இல் நம் கதாநாயகன் பாலசங்கரனுக்கு 24 வயது. அன்று எழுந்திருக்கும் போதே மனது பரபரவென்று இருந்தது பாலசங்கரனுக்கு. பின்புற வேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்த மலர்ந்தும் மலராத பொழுது. அபூர்வமான செண்பக மலரின் வாசம் எங்கிருந்தோ வீசிக் கொண்டிருந்தது. தரையில் வெள்ளை வேட்டியை விரித்து பவழ மல்லி மலரை வழக்கம் போல பங்கஜம் மாமி சேகரித்துக் கொண்டிருந்தார். இளங்காலையின் அமைதியில் அவர் பாடிக் கொண்டிருக்கும் ‘கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா’ என்ற பாடல், தென்றலின் வருடல் போல செவிகளில் எட்டி உட்புகுந்தது. மொட்டை மாடியில் நின்று பார்த்த பாலசங்கரனுக்கு நீலத் தண்டிலிருந்து இள மஞ்சள் பூவெனக் கிளம்பும் சூரியன் சொல்ல முடியாத சந்தோஷத்தை அளித்தான். இன்னமும் பிடிவாதமாக வானில் தென்பட்ட நிலா அவனை புன்னகைக்க வைத்தது. எதிர் வரிசையில் நின்ற சிறு மரக் கூட்டங்களிலிருந்து பறவைகள் உற்சாகமாகத் தங்கள் சிறகுகளை விரித்துப் பறந்து நான்கு புறத்திலும் பார்த்தன. அடக்கமாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டே ஜிவ்வென்று பறந்து செல்லமணி நாடார் கடையின் முன் சிதறியிருந்த தானியங்களைக் கொரித்தன. காக்கைகள் அரிசி மணிகளைக் கொத்தினால், குருவிகள் பயிறு வகைகளைக் கை பார்த்தன. தென்னை மரத்திலிருந்து வெகு வேகமாக இறங்கி வந்த அணில் குஞ்சு பாதியாய்க்கிடந்த கொய்யாவை முன்னங் கால்களால் பற்றி பற்களைப் பதித்து ருசி பார்த்தது. அதன் ஒய்யார வாலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கறவை மாடுகள், கன்றுகளின் வாசமாவது வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே மடி கனக்க, மணி ஒலிக்க நடந்து கொண்டிருந்தன. கோயில் யானை குளிக்கப் போகிறது போலிருக்கிறது. அதன் நடையின் விரைவும், உலகையே வென்றவனைப் போல் அதன் மீதிருந்த பாகனும் ‘உலகம் இன்பமயம்’ என்று சொல்லின.
“காலங்காத்தால மேக்கையும் கெழக்கையும் பாத்துண்டு நின்னா எப்படி வேலயாகும்? ஒரு கீத்துக் காய்கூட இல்ல; போய் வாங்கிண்டு வாங்கோ சீக்ரமா, அப்றம் ஆஃபீசுக்கு நேரமாச்சுன்னு பறப்பேள்; என்னது, இப்ப வந்திருக்காதா? தட்டி கழிச்சுடுங்கோ எல்லாத்தையும்; என்னது, காஃபி குடிச்சுட்டுப் போறேளா, டிக்காஷன் இன்னும் இறங்கல, லொட்டு லொட்டுன்னு தட்டித்தட்டி கைதான் சுட்றது; காய் வெளைஞ்சான் சந்தேலேந்து மணி மணியா இப்ப வந்திருக்கும்; போய்டு வாங்கோ. நல்ல ஸ்டராங்க் காஃபி போட்டுத் தரேன் நீங்க வந்தோன்ன.”
இப்போதைக்கு காஃபி கிடைக்காது என்றான பிறகு அவனுக்கும் வேற வழியில்லை. நடேசய்யர் கடையில் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் காஃபி கிடைக்கும் என்று சுப்புணி சொல்லியிருந்தாலும் பால சங்கரனுக்கு வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கமில்லை. அவன் வயிறு அப்படிப்பட்டது, தாகத்திற்குத் தண்ணீர் கூட வெளியில் குடிக்க முடியாது அவனால். வீட்டில் அவன் மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். அவன் மாமனார், மாமியார், அவனுடைய சின்ன மாமனார், சின்ன மாமியார். அவனுக்கு அவர்கள் தான் சீதனம். சும்மா, சொல்லக்கூடாது, அத்தனைக் கிழத்திற்கும் பயங்கர சொத்தும் அதிலிருந்து வருமானமும் வருகிறது. இவனது மனைவி அவர்கள் குடும்பங்களின் ஒரே வாரிசு. பெண் பார்க்கப் போகும் போதே அவன் மாமனார் சொல்லிவிட்டார்-‘என் தம்பிக்குக் கொழந்தேளில்லை. எனக்கும் லல்லி ஒரே பொண்ணு; அதுவும் காலம் தப்பிப் பொறந்தவ. இப்ப எம் பொண்டாட்டிக்கு கொஞ்சமாத்தான் வேல செய்ய முடியும்; எங்க தம்பி ஆம்படையா எல்லாரையும் பாத்துப்போ, எல்லாமும் செய்வோ; கூடி வாழ்ந்தா கோடி நன்ம, என்ன சொல்றேள்? எல்லாரும் உங்களோட தான் வந்திருக்கணும்; எங்களால இனி குடும்பத்தையெல்லாம் தனியா நடத்த முடியாது. சொத்து சுகமெல்லாம் உங்களுக்குத்தான், மாப்ள..’
அவன் அப்பா ‘பொண்ணத் தானடா பாத்துருக்கோம். நிச்சயமா பண்ணிட்டோம்? இது நடமுற இல்லடா; வேணாம்னு சொல்லிடு.’ என்றார். அவன் சொல்லவில்லை, அவள் அழகு அப்படி, அவளுடன் வரும் பணம் அப்படி. குடும்பக் கவலைகள் அற்று அக்கடாவென்று இருக்கலாம் என நினைத்தான்.
நடைபாதைக் கடைகள் திறந்தாகிவிட்டன. பச்சைப்சேலென்று கீரையும், மினுமினுவென்று வயலட் கத்திரியும், பிஞ்சு வெண்டையும், முற்றாத அவரையும், கொத்தவரங்காயும், நீள் புடலையும், கைகளை விட நீளமான முருங்கையும், தளதளத் தக்காளியும், பச்சைத் தாள்களுடன் முள்ளங்கியும், அசுர வளர்ச்சியில்லாத பச்சை மிளகாயும், பசும் குறு மிளகுக் கொத்தும், வாடாத கொத்தமல்லியும் கூவிக் கூவி அழைத்தன. மஞ்சள், சந்தனம், குங்குமம், கோல மாவு, தாமரை, ரோஜா, மல்லி, கதம்பம் என்று ஒவ்வொன்றின் முன்பும் சில பேர் நின்றிருந்தனர். கோயிலில் ஓதுவார் இந்தத் திருக்காட்சியைக் காணாமல் போகலாமா நீ என்ற சம்பந்தர் பதிகத்தை மனமுருகிப் பாடிக்கொண்டிருப்பது அந்தக் கம்பீரக் கோயிலின் ஞான விளக்காகப் பிரகாசித்தது. இசையும், இறையும், தமிழும் என்னவொரு ஒத்திசைவு என்று மனம் அந்தப் பதிகத்தைத் தானும் வாங்கிப் பாடியது.
‘மட்டிட்ட புன்னையம் கானல் மட மயிலைக்
கட்டிடட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’
காய்களை வாங்கிக் கொண்டான்- இதில் எந்தக் கிழம் (!) கயாவில் எந்தக் காயை விட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்வது அவனுக்கு லத்தீனை விடக் கடினம். அவன் சாப்பாட்டில் வெண்டை, முருங்கை,(சில நாட்களில் மட்டும்) கேரட் நிச்சயம் உண்டு; என்ன ஒன்று, அவை மட்டும்தான் உண்டு. வாங்கிக் கொண்டு திரும்பும் போது தள்ளு வண்டியில் அதைப் பார்த்தான். இளம் பெண்கள் அணியும் மெல்லிய ரோஸ் வண்ண தாவணி நிறம், அதைப் போலவே ஒளிபுகும் எழில், தலைப் பகுதியில் சீரான சிறு வெண் முழி சிலவற்றில், ஒட்டிப் பிறந்த பெண்கள் போல ஒரே அளவில், குவியலில், அவைகளின் உடன் பிறந்த செவ்வொளியில் சாய்வாகக் கதிர் பட்டு மின்னும் அழகோ சொல்லி மாளாது. ‘என்னையும் வாங்கேன்’ என்று அவை கெஞ்சின, கொஞ்சின; வாங்கி விட்டான் துணிந்து. அவளை எப்படியாவது சமாதானம் செய்து இன்று அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் செய்யச் சொல்ல வேண்டும். நினைக்கையிலேயே நாவில் நீர் ஊறியது. சுப்புணி செய்யும் கேலி நினைவில் வந்து ரோஷம் வந்தது. ‘அப்பா, சங்கரா, உனக்கு ஜன்மத்ல இல்லாத பலதுல வெங்காய சாம்பாரும் ஒண்ணு. மொறு மொறுன்னு ரவா தோசைல பொடிப் பொடியா ஆனியன் தூவி ராயர் மெஸ்ஸுல கொடுப்பா பாரு, அதெல்லாம் நள பாகம்ன்னா; பாவம்டா நீ, வெளில சாப்ட மாட்டேங்க்ற.’
உண்மைதான் என்று நினைத்தான் அவன். திரும்புகையில் வெயில் சற்று ஏறிவிட்டது. குரல்களென ஒலித்தவை கூட்டுக் கத்தலெனக் கேட்டது. குளித்து வந்த யானை அது அத்தனை விரைவில் முடிந்ததை எண்ணி தளர் நடையில் வந்தது. உலா முடிந்த ஏக்கத்தில் மாடுகள், வயிறு நிறையாத சோர்வில் கன்றுகள், அணில் பிள்ளையைக் காணோம், உரத்த குரலில் பங்கஜம் மாமியின் கணவர் குளிப்பதற்கு வென்னீர் கேட்டு கத்திக் கொண்டிருந்தார். செல்லமுத்து நாடார் கடையில் விளக்குமாறைப் பார்த்தவுடன் அத்தனைப் பட்சிகளும் பறந்து போயிருந்தன. அவனை சோர்வு அப்பிக் கொண்டது.
“இப்ப யாராவது வெங்காயம் வாங்குவாளா? மாளய பக்ஷம் இல்லையா? அப்புறம் சுந்தர காண்ட பாராயணம், நவராத்திரில நம்மாத்ல உண்டே? கலசம் வேற வைச்சுன்னா தேவி பூஜை? காசக் கரியாக்கறேள்.”
‘நீ முதல்ல காஃபி கொடு, அப்றமா எனக்கு அர்ச்சன செய்யலாம்; வெங்காய சாம்பார் சாப்ட என் வீட்ல எனக்கு உரிமையில்ல, நீங்க சாப்பிடாட்டி என்ன, எனக்கு மட்டுமாவது பண்ணேன்.”
அவள் பதிலே சொல்லவில்லை. அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் வெங்காயக்கூடை காலியாக இருப்பதைப் பார்த்தான். கோபம் தலைக்கேறியது. ஒரு மாதத்திற்குத் தேவையில்லையென்பதால் அது மொத்தமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போய்விட்டது என்று அவள் சொன்ன போது அவனுக்கு அவமானமாகக் கூட இருந்தது. அவன் அன்று மதியம் தான் சுப்புணியிடம் கேட்டு அரைத்துவிட்ட சாம்பார், வெங்காய வத்தக்கொழம்பு, வெங்காய கொத்ஸு, வெங்காய பக்கோடா போன்றவற்றின் சமையல் குறிப்புகளை சிரத்தையாக எழுதி வந்திருந்தான். அவள் அருகில் சென்றான்- “நா ஒரு நா செத்துப் போவேன். அப்போ, சாஸ்திரிகளுக்கு வெங்காய தானம் மட்டும் பண்ணிடு; இல்லேன்னா, பேயா உன்னப் புடிச்சுடுவேன்.” அவன் கோபம் அவ்வளவுதான் .காதுகளைப் பொத்திக்கொண்டு ‘ராம, ராம, சாயறக்ஷல பேசற பேச்சைப் பார்.’ என்றாள்.
இதுகளெல்லாம் என்ன ஜென்மம் என்று ஆற்றாமையாக வந்தது அவனுக்கு. பசிக்கு மட்டுமே சாப்பிடும் ஜந்துக்கள், ருசி தெரியுமா இதுகளுக்கு. தன் இள வயதில் இறந்து போன அம்மா நினைவில், அவனுக்கு கண்களில் தன்னிரக்கத்தால் நீர் வந்தது. ஏழு வயதில் ஒன்றும் சாப்பிடாமல் அடம் பிடித்ததும், அம்மா அவன் கேட்டான் என்பதற்காகவே கையளவு உளுந்தை அம்மியில் அரைத்து வடை தட்டித் தந்ததும் இரவு முழுதும் அவனை அரற்ற வைத்தன.
அவனுக்கு ஐம்பது வயது (சரி, 52)ஆகிவிட்டது இப்போது. இரட்டையராகப் பிறந்த பெண் குழந்தைகள்; அவர்கள் தாத்தா, பாட்டிகளின் வளர்ப்பு, வார்ப்பு. அவன் வைப்புத் தொகை இழந்த வேட்பாளன். பதினெட்டு வயதில் மாமனார் அன்ட் கோ அவர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்- ‘மாலையும் கழுத்துமா அவாளப் பாக்க வேண்டாமோ?’ என்ற டயலாக் வேறு. இந்த வாழ்வில் எல்லாம் அவனுக்குக் கிடைத்திருப்பதாக ஊரும், உறவும் சொல்லும் போதெல்லாம் அவன் உள்ளூரக் குமைவான். கேவலம் ஒரு வெங்காய சாம்பார் அவனுக்குக் கிடைக்கவில்லை, வயிற்றுக் கோளாறைச் சரி செய்யவும் முடியவில்லை, அதனால் துணிந்து வெளியிலும் சாப்பிட முடியவில்லை; என்னத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனத் தனியே நொந்து கொள்வான்.
அன்று வேலை பார்க்கும் இடத்தில் சிறு வாக்குவாதம். அவன் மூடே மாறிவிட்டது. ஏற்றாற் போல் ஸ்கூட்டரும் எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. அவனது மெக்கானிக் ‘நாளைக்குத்தான்’ என்று சொல்லிவிட்டார். பேருந்தில் வழிந்த கூட்டத்தைப் பார்த்த அவனுக்கு அதில் ஏறும் துணிச்சல் வரவில்லை. நடந்து போகத் தீர்மானித்தான். தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?வீடு, அலுவலகம்,கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகள், மனம் சரியாக இல்லாத நாள் பார்த்து மக்கர் செய்யும் ஸ்கூட்டர், பன்னிரண்டு வருஷப் பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்த மெக்கானிக்,அனுசரணை யா, கேலி யா எனப் புரியாத விதத்தில் பேசும் சுப்புணி. என்ன வாழ்க்கை உன் வாழ்க்கை என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.
எப்போதாவது அவனுக்கு வரும் கோபம் போல வானம் திடீரென்று இருண்டது. சட சடவென்று பெரும் துளிகள் மேனியை அறைந்தன. மனிதர்கள் ஓடி கடை வாயில்களிலும், வீட்டுச் சார்புகளிலும் நின்று கொண்டனர். அவன் ஓடிச் சென்று நின்ற இடத்தில் ஒருவர் மேடையில் அமர்ந்து உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். நாற்காலிகள் காலியாக இருக்கவே அவன் சென்று அமர்ந்து கொண்டான்.
“வாசன இருக்கே, அது தான் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம். நல்ல வாசன இருக்கே அது புண்யம் தரும், ஆனா, பொறப்லேந்து விடுதலயில்ல;கெட்ட வாசன, அதுவும் பொறப்லேந்து வெட்டி விட்றாது, ஈனமா நடக்க வச்சுடும். இன்னிக்கு மாரியே அன்னைக்கும் பேய் மழ. ஊழி முதல்வன் உருவம் போல மெய் கருத்து வானத்தையும், பூமியையும் மஹா சரடால அவன் நெய்யறான். இப்பத்த மாரி அப்ப வசதி கடையாது பாருங்கோ, ஊரே இருளோன்னு கிடக்கு. தக்ஷ நாகம் மாரி மின்னல் நெளிஞ்சு ஆட்றது. பீமனும், துரியோதனனும் கதையால அடிச்சுக்கற மாரி இடியான இடி. காளி ஊழிக்கூத்து ஆட்றா. அப்பப் பாருங்கோ, மச்சுல படுத்துண்டு இதையே பயமா, ஆர்வமா பாத்துண்டு ஒரு பொண்ணு. ரத்னாவளி, ரத்னாவளின்னு பேரு. அசட்டுத்தனமா அவர் ஏதும் பண்ணாதிருக்கணுமேன்னு அவ நெனைச்ச அடுத்த நொடி தடார்ன்னு ஒரு சத்தம். மாடி வரண்டாவுல ஒத்தன் குதிச்சுட்டான்; தக்ஷ மின்னல்ல தன் ஆத்துக்காரர்ன்னு அவளுக்குத் தெரிஞ்சுடுத்து. அது மட்டுமல்ல, அவர் இந்தக் கொட்ற மழல யமுனா ஆத்து வெள்ளத்ல நீந்தி தோட்ட மரத்ல தொங்கற ஏதோ ஒன்னப் புடிச்சுண்டு இப்படிக் குதிச்சிருக்கார்ன்னு தெரியறது.
மரத்ல ஏது கயிறுன்னு யோசிக்கறப்பவே ஜகஜ்ஜோதியா மின்னல் .ஒரு தடிமனான பாம்பு தொங்கிண்டிருந்தத பாத்தா ரத்னாவளி. ‘எங்கிட்ட இருக்ற மோகத்ல நூத்ல ஒரு பங்கு ராமர் கிட்ட இருந்தாத் தேறுவேளேன்னு அழுதா. சொன்னா,
“காம எஷ க்ரோத எஷ ரஜோகுண சமுத்பவ:
மஹாக்ஷணோ மஹா பாப்மா வித்யேனமிக வைரினம்.”
“ராம் போலா, கரும்புகை தீயைச் சூழும்; தூசியோ கண்ணாடிய மூடும். வாசனை மனுஷ மனசக் கெடுக்கும்”
அதுதான் அவருக்கான மந்த்ர உபதேசம். அவ கால்ல அப்படியே விழுந்தார். அப்றம் சன்யாசியாகி ‘ராம் சரித மானஸ்’ என்ற மஹா நூல எழுதின துளசிதாசரானார்.’
பால சங்கரனுக்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது. அரங்கில் ஆட்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு விளக்காய் காவலாளி அணைத்துவர இவனுக்கு ஒவ்வொரு தீபமாய் ஒளி விட்டது. அருகில் வந்த அவர் ‘கிளம்பும் நேரம், சார்’ என்றார். வெளியில் வானம் கொட்டி முடித்து வைரங்கள் சிதறிக் கிடக்க பெரும் நெசவெனக் காட்சிப்பட்டது. இருளும், ஒளியுமாக கோயில் கோபுரம் உயர்ந்து நின்றிருந்தது.’ஓம்’ என்பது ‘ஆம்’ எனக் கேட்டது.அதே நேரம் தெருவோரக் கடைகளில் மழைக்கு இதமாக எண்ணெயில் பொரித்த மசால் வடை யும் பக்கோடாவும் அவன் நாசியை துளைத்தது.
மிக இயல்பான கதை. பால சங்கரன் பாத்திரம் கச்சிதம்.அதிகாலையில் மகிழ்ச்சியாக இருப்பவை ஏறு வெய்யிலில் மாறுவதை,திட்டமிட்டு நாம் ஒன்று செய்ய அது நேரெதிராக நடப்பதை,சில உறுதிகள் உடனே நிலைகுலைவதை நன்றாக எழுதியுள்ளார். முப்பது வருடங்களுக்கு முந்தைய மயிலை அழகுதான். தமிழ்ப் பாடலும், வடமொழி கீதையும் இன்றைய எழுத்தாளர்கள் நெருங்கப் பயப்படுவார்கள்.வாழ்த்துகிறேன்.