அரவான் – வளவ.துரையன் கட்டுரை

பாண்டவர்கள் திரௌபதியை மணம் முடித்தனர், இந்திரப்பிரஸ்தம் என்னும் அழகிய நகரை அமைத்தனர். அங்கே தங்கியிருந்து தருமன் தாயின் சொல்லைக் கேட்டும், தம்பியரை மதித்தும் நீதி தவறாது ஆட்சி செய்தான். அந்நாளில் ஒரு நாள் நாரதமாமுனிவர் அங்கு வந்தார். அம்முனியை வரவேற்ற அவர்கள ஆசனத்தில் இருத்தி வணங்கினார்கள்.

அப்போது அவர், பாண்டவர்களுக்கு ஒரு வரலாற்றைக் கூறினார். “முன்னொரு காலத்தில் சுந்தன், உபசுந்தன் என்னும் இரு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் இந்திரனின் ஏவலால் அங்கு வந்த திலோத்தமை என்னும் அழகியைக் கண்டனர். அவள் மீது காமம் கொண்டு இருவருமே அவளை அடைய விரும்பினார்கள். அதனால் இருவரும் போர்செய்து மாண்டனர்”

இந்த வரலாற்றைக் கூறிய நாரதர், “நீங்கள் ஐவரும் முற்பிறவியின் பயனாக திரௌபதியை ஒருங்கே மணம் புரிந்துள்ளீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டுக்கு, உங்களுள் ஒருவர் ஒருவராகத் திரௌபதியைக் கூடி வாழ்வீர். மேலும் திரௌபதி ஒருவருடன் சேர்ந்திருக்கும் காலத்தில் மற்றவர் அவளைக் காணுதல் முறையாயாகாது. மாறாகக் கண்டுவிட்டால் அப்படிப் பார்த்தவர், ஓர் ஆண்டு வரையிலும் தன் வடிவம் மாறிப் பரிகாரமாகப் புண்ணிய தேசங்களைக் கண்டு நீர்நிலைகளில் நீராடச்செல்லவேண்டும் என்பதே முறையாகும்.

“எண்ணுறக் காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி

புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே உறுதி”

நாரதர் இப்படி அறிவுரைகள் கூறிச் சென்றபின் பாண்டவர் ஐவரும் அந்நெறிப்படியே இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் ஓர் அந்தணன், இந்திரப் பிரஸ்த அரண்மனையின் முன்னால் வந்து, “வேடுவர்கள் என் பசுக்களை எல்லாம், அவற்றைக் காப்பவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்” என முறையிட்டான்.

இதைக் கேட்ட அருச்சுனன், “நீ வருந்தாதே! அச்சப்படாதே! நான் உன் பசுக்களை மீட்டுத் தருவேன் என்று கூறினான். வேடர்களுடன் போரிடத் தன் காண்டீபத்தை எடுக்கப் படைக்கலக் கொட்டிலுக்குச் சென்றான். அப்படிச் செல்லும் வழியில் சோலை ஒன்றில் தருமனுடன் விளையாடிக் கொண்டிருந்த மயில் போன்ற திரௌபதியின் சிறிய அடிகளைக் கண்டான்.

“வெஞ்சாயம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்

மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்”

அப்படித்தான் பார்த்ததால் அருச்சுனன் உடல் நடுங்கினான். நாணம் கொண்டான். இருப்பினும் தான் வந்த செயலை மேற்கொண்டு வில்லையும், அம்புகளையும் விரைவாக எடுத்துக் கொண்டு சென்றான். வேடர்களிடம் சென்று அவர்களை வென்றான். பசுக்கூட்டத்தை மீட்டான். பின் அருச்சுனன் தான் செய்ததற்குப் பரிகாரமாக, நாரதர் சொன்னபடி அரச கோலத்தை விட்டு நீங்கி, வைதீகக் கோலம் கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.

அருச்சுனன் கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போது அங்கே ஆதிசேடனுக்கு உரிய நாகர் உலகத்து மகளிர் நீராட வந்தனர். அவர்களில் மிக அழகாக இருந்த உலூபி என்பவளின் மீது அருச்சுனன் காதல் கொண்டான். அவள் பின்னால் சென்று பாதாள லோகத்தை அடைந்து அங்கே உலூபியை மணந்து கொண்டான். அவர்கள் இருவருக்கும் அரவான் பிறந்தான்.

”செம்மென்கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்

அம்மென்கொடி அனையாளும் இராவானை ஈந்தாள்”

[வில்லி பாரதம் அரவானை இராவான் என்றே கூறும்] மகனை உலூபியிடமே விட்டுவிட்டுத் தன் தீர்த்த யாத்திரையை அருச்சுனன் தொடர்ந்து சென்றான்.

அரவான் தன் தாயிடத்திலேயே நாகலோகத்தில் வளர்ந்து பெரியவானான். சில ஆண்டுகள் சென்றன. பாண்டவர் சூதுபோரில் தோற்று நாடு இழந்து வனவாசம் சென்று மீண்டபின்னும், துரியோதனன் அவர்களுக்கு அவர்கள் நாட்டைத் திருப்பித் தராததால் குருச்சேத்திரப் போர் நிகழ்வது உறுதியாயிற்று. கௌரவரும் பாண்டவரும் படைகளைத் திரட்டினார்கள். அச்சமயத்தில் அரவான் தன் படையுடன் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்து அவர்கள் பக்கம் சேர்ந்தான்.

தருமன் அனைவரையும் ஆலோசித்துத் தன் பாண்டவர் படைக்குச் சேனைத்தலைவனாக சிவேதன் என்பவனை நியமித்தான். அப்பொழுது அரவான், ”நான் பகைவரின் அனைத்துப் படைகளையும், ஒரே நாளில் ஒரே அம்பினால் கொல்வேன்” என்று வீரச் சொற்கள் உரைத்தான்.

“அரவமின் நகன் தெவ்வர்

கொற்ற வெம்படை அனைத்தும் ஓர் அம்பினால்

கொல்லன் ஓர் தினத்து என்றான்.

ஆக, போர் நடப்பது உறுதியாகிவிட்டது. போர்தொடங்க நாளூம் குறித்தாகி விட்டது. அடுத்துப் போர் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சிறந்த வீர்ரைக் களப்பலி கொடுப்பது மரபாகும். துரியோதனன், வீடுமனிடம் என்று, “போர்க்களத்தில் போர் தொடங்கு முன் களப்பலி தருவதற்கு உரியவர் யார்?” எனக் கேட்டான். அதற்கு வீடுமன், “பாண்டவர் பக்கத்தில் இராவான் என்பவன் இருக்கிறான். அவன் நம் படைகள் அனைத்தையும் ஒரு பகலில் கொல்வேன் என்று உறுதிமொழி சொல்லி உள்ளான். அச்சிறந்த வீரனிடம் சென்று, நீ வேண்டி நின்றால், அவன், “கொன்று எனைப் பலிகொடுப்பாயாக” என்று கூறிச் சம்மதிப்பான். நாம் அவனைப் பலிகொடுத்துப் போர் தொடங்கினால் அரசாட்சியையும் நல்வாழ்வையும் அடையலாம்” என்று கூறினான்.

அதைக் கேட்ட துரியோதனன், அரவானிடம் சென்று வேண்டினான். அரவானும், தந்தை முறையில் உள்ள துரியோதனன் உயிர் பிழைத்தற்குக் காரணமான வரம் கேட்பதால், மறுக்காது சம்மதித்து ‘என்னைக் கொன்று பலியிடுவாயாக” என்றான்.

“தாதை உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்”

இவ்வாறு நடந்ததெல்லாம் கண்ணபிரான் அறிந்தார். அவர் இச்செய்திகளைத் தருமனிடம் கூறினார். மேலும். “நீ துரியோதனனுக்கு முன்னால் களப்பலி கொடுக்க வேண்டும்; அப்போதுதான் அவனை வெல்ல முடியும். ஆகவே விரைவாக நீ என்னைக் களப்பலியாய்க் கொடுப்பாயாக” என்று கூறினார். அதைக் கேட்ட தருமன் அதிர்ச்சி அடைந்து, மனம் வருந்தி, “எங்களுக்கு உம்மைப் பலிகொடுத்துப் போரில் வெற்றி வேண்டாம். நாங்கள் இறப்பதே சாலச் சிறந்த்தாகும்” என்று கூறினான்.

உடனே அங்கிருந்த அரவான், ”முன்பு துரியோதனன் வேண்டிக் கேட்டபோது நான் என்னைப் பலியாகக் கொடுக்கச் சம்மதித்து உடன்பட்டேன். இப்போது நீங்கள் என்னைப் பலியாகக் கொடுங்கள்” என்றான். அப்போதும் கண்ணன், “உன்னைத் தவிர எனக்குச் சமமானவர் உலகில் எவரும் இல்லை. ஆகவே நம் இருவரில் ஒருவர்தாம் பலியாக வேண்டும்” என்றார். அப்போது அரவான். “நீ பகைவரை அழித்துப் பாண்டவர்க்குப் போரில் வெற்றியையும், அரச வாழ்வையும் அளிக்கக்கூடியவன்; அப்படி இருக்க நீ ஏன் பலியிடப்பட வேண்டும்? என்னையே பலியாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

மேலும் அச்சமயத்தில் அரவான் கண்ணனிடத்தில் ஒரு வரம் கேட்டான். ”அதாவது என்னை பலியாய்க் கொடுத்தாலும் சிலநாள்கள் நான் இப்போரைக் கண்டு பகைவர் அழிவதைப் பார்த்தபின் இறக்குமாறு அருள் செய்யவேண்டும்” எனக் கேட்டான்.

‘கடிய நேர்பலி தந்தாலும் காய்அமர் சிலநாள் கண்டு

முடிய நேரலர் வெம்போரில் முடிவு எனக்கு அருளுக என்றான்”

கண்ணபிரான் அவ்வரத்தை ஈந்தார். பின்னர் பாண்டவர் அனைவரும் யாரும் அறியாவண்ணம் தம் பிறப்பிடமான குரு நாடு சென்றனர். அங்கு அதே இரவில் அரவான் காளிதேவியின் முன்னால் தன் உடலின் உறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக அறுக்க வேண்டிய முறைப்படித் தன் வாளால் அறுத்துத் தன்னைப் பலி தந்தான்..

அடுத்து அரவானைப் பார்ப்பது எட்டாம்நாள் போரில்தான். அன்றைய போரில் அரவான் பல ஆயிரம் வடிவங்கள் கொண்டு எதிரிப் படைகள் எல்லாம் சிதறி ஓடும்படி அம்புகள் விடுத்தான். தான் ஒருவன் மட்டுமே ஒரு பகலில் பகைவர் அனைவரையும் அழிப்பேன் என முன்னர் சொன்னதால் அரவான் பல பெரிய வடிவங்களுடன் போர் செய்து கொண்டிருந்தான். அப்போது துரியோதனனுக்காகப் படைகொண்டு வந்த அலம்புசன் என்னும் அரக்கன் தன் அண்ணன் பகாசூரனைக் கொன்றதால் பீமனைப் பழிவாங்கப் பெரும்படையுடன் வந்தான்.

அவனை இராவான் எதிர்த்துப் போரிட்டு, அவனுடன் வந்த படைகள் அனைத்தையும் அழித்தான். அலம்புசனும் புறமுதுகிட்டு ஓடினான். அப்படி ஓடிய அலம்புசன் மீண்டும் மாயையால் கருடனின் வடிவம் எடுத்துப் போரிட வந்தான். அரவான் நாகர் குலத்தைச் சேர்ந்தவன். அதனால் கருடனைக் கண்ட அளவில் தன் வலிமை அனைத்தும் ஒரு சேர ஒடுங்கியதைப் போன்று ஒடுங்கி நின்றான். அப்படி அஞ்சி நின்ற அரவானை, அலம்புசன் தன் கூரிய வாளை வீசிக் கொன்றான்.

”நின்றவன் தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சிக் கொன்றனன்”

இவ்வாறுதான் வில்லிபுத்தூரார் தாம் எழுதிய பாரதத்தில் அரவானைக் காட்டுகிறார். இதில் கூட தன்னைப் பலியிட்டுக் கொண்ட அரவான் எப்படி மீண்டும் முழு வடிவம் எடுத்துப் போர் செய்தான் என்பதற்கு எந்த விவரமும் இல்லை. வியாச பாரதத்தில் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது உலூபியைக் கண்டு மனம் புரிந்து அரவானை மகனாகப் பெற்றான் என்ற அளவில்தான் உள்ளது. வேறு செய்திகள் இல்லை.

 

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்குப் பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் அரவானைப் பற்றிய குறிப்பு முதன்முதலில்   பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பாவில்தான்   காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை காணப்படுகிறது.

கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலில் அரவான் கதை எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இராவான் எனும் பெயர் அரவான் என்று தென்னிந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபு மற்றும் திரௌபதி வழிபாட்டு மரபு என்றும் அவை கூறப்படுகின்றன.  கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று வழிபடப்படுகிறார். . கூத்தசுரன் என்ற அரக்கன் ஒருவனைக் கூத்தாண்டவர் வதம் செய்வதாகக் கூறும் ஒரு புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

தமிழில் அரவு என்பது பாம்பைக் குறிக்கும். தமிழ்ப் பெயரான அரவான் அரவு என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் கூறலாம். அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.]

 

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் ஒரு முக்கியமான கடவுளாக இருக்கிறார்.. திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு கொண்டு விளங்குகிறர். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை என்று கூறலாம். அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார்.

அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் காட்டப்படுகிறார். ஒன்று விஷ்ணு புராணம் மற்றொன்று பாகவத புராணம் எனலாம்.

பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற ஒருவரத்தை மட்டுமே வேண்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரண்டு மரபுகளிலுமே, அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாகக் கூறப்ப்டுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

இந்தப் பதிப்பில்தான், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புறக்கதைகளில் மட்டும்தான் உள்ளன. தான் தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்ய எண்ணுகிறார்.

மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர். ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் அவர் தன்னைப் பலியிட்டுக் கொள்வதால் மணமாகும் பெண் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க முடிவெடுத்த கிருஷ்ணர், உடனே மோகினி என்னும் ஒரு பெண்ணின் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் கழிப்பதாகக் கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது.

அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாளில் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் தன் கணவன் இறந்துவிட்டதால் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறிய அரவான் போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது. தெருக்கூத்துக் கதைகளில் சிறப்பான முறையில் அரவானின் திருமணச் சடங்குகள் நடைபெறுவது காட்டப்பட்டு, மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காட்டப்படுகிறது.

இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதைவழங்குகிறது. அதில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது கூறப்படுகிறது.] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை எனலாம்.

இன்னும் சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

இப்படி அரவானின் வாழ்வில் பல புதிர்களைப் பல பாரத நூல்களும் நாட்டுப்புறக் கதைகளும் கூறினாலும் அரவான் ஒரு தியாக வாழ்வு வாழ்ந்தான் என்பதில் ஐயமில்லை எனலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.