“இருக்கும் போது உபயோகம் இல்லைனா அதுக்கு மதிப்பு இல்லடே. அதுவே இல்லைனா, இருக்க வர அருமை தெரியலன்னு மக்கமாறும், கட்டுனவளும் அழுவா. இவ்ளோதாம்டே” மறுவார்த்தை எதுவுமின்றி எங்கோடியா பேசுவதையே எதிரில் நின்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “விசுக்கு கோயில் நடைல இறங்குகேன், ஏத்தாப்புல நிக்கான். மாமா கைநீட்டம் கொடுன்னு கேட்டான்.நா இருவதை நீட்டுகேன், அம்பது கொடு மாமா. அடுத்த விசுக்குலாம் இருக்க மாட்டேன்னு சொன்னான். பயலுக்கு அப்போவே தெரிஞ்சுட்டு. குடிச்சு குடிச்சு உடம்ப நாசம் ஆக்கிட்டான்.” மூங்கில் கம்பு, வைக்கோல் கட்டு கொஞ்சமாய் இறங்கவும், கெண்டி வரவில்லை என யாரோ சொல்ல, சைக்கிளில் சுடுகாட்டு சுடலை கோயிலுக்கு எங்கோடியா விரைந்தார்.
கையில் கெண்டியோடு அவர் வரும்முன் கூட்டம் கூடிவிட்டது. எல்லாரையும் விலக்கி, “சொன்ன ஆட்காருலாம் வந்தாச்சா. இன்னும் அரைமணிக்கூறுல நீர் மாலைக்கு போனும்”, இறந்தவனின் கால்மாட்டில் அழுதுக்கொண்டிருந்த அவன் பொண்டாட்டியை பார்த்ததும் சட்டென நின்று ஏதோ சொல்லவந்ததை விழுங்கி, தொண்டையில் இறங்கிய கனத்தோடு வெளியிறங்கினார். “சாவுற பிராயமா, பொட்டப்பிள்ளை இருக்கு. இருக்க வர சலம் தான். ஒண்ணுக்கும் உருப்படி இல்லைனாலும், துணைக்கு கிடந்தான். சவம் போய் சேந்துட்டான்” எங்கோடியா மீண்டும் கூறினார்.
“வோய் எங்கோடி, இங்க வாரும்” கீழத்தெரு சண்முகத்தின் குரல், எங்கோடியா நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி சென்றார். “இரண்டு குப்பி எடும், நேரம் கிடக்கு, கடுக்கரைல இருக்க மருமவ வர சமயம் கிடக்கு. ” என்றபடி ருபாய் நோட்டை கையில் சொருக “சரி, நீரு நாடார்ட்ட கப்பு, தண்ணி, தட ஊறுகாய் வாங்கி வைங்கோ” கூறியபடியே சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். முத்து தியேட்டர் டைம்பாஸ் நாகர்கோயில் பிரசித்திப்பெற்ற மதுக்கடை. மணி காலை பத்தரையை கடந்திருக்காது, அதற்குள் நீண்ட வரிசையில் ஒழுங்கான கூட்டம் முன்னே நகர்ந்துக்கொண்டிருந்தது. எங்கோடியா பழக்கத்தின் காரணமாய் உள்ளே பாரின் மறுவாசல் வழியே வாங்கி விர்ரென்று விரைந்தார்.
“நல்லவன், நாலு சக்கரம் உண்டு. இருந்து என்ன மயிருக்கு, சுப்ரமணியபிள்ளை சாவுக்கு நாலு பேரு வந்தான், வந்தவனுக்க பவுச பாக்கணுமே, எழவு பாடை தூக்க ஆளு சம்பளத்துக்கு. இவன் பிச்சைக்காரன், எவ்ளோ ஆளு. பழக்கம் தானே. பழக்கத்துக்கு தானே மனுஷன் வாரான்.” சண்முகம் கூறிக்கொண்டே குப்பியை திறந்து, தண்ணீரையும் நிரப்பிக்கொண்டே “மனுஷனை என்ன சொல்ல. கட்டுனவளும், மக்கமாறும் அழுது தீர்த்து அவாள் பாவத்த கரைக்கா. குடிக்கவன என்ன சொல்ல, லெட்சுமணன் வந்துட்டான். கவனிச்சீரா”, “துஷ்டி வீட்டுல அவன் இல்லாம காரியம் உண்டா. மண்ணெண்ணெ ஊத்திருப்பான். பெகலம் உண்டு, ஆனா காரியம் நடக்கும்” என்றார் எங்கோடியா. விஷேஷம் நடந்தாலும் வருவதில்லை, மாறாக துஷ்டி வீடுகளில் ஊர்குடிமகனை விஞ்சி எல்லாமே அவனால் நடக்கும்.
குப்பி காலியானதும், இருவரும் அசைந்தாடிய நடையை இறந்தவீடு வந்ததும் சரிக்கட்டினார். “மாமா, நீர் மாலைக்கு போவோம். மாவிலை கொப்பு முறிச்சு கொண்டாந்திருக்கேன்.” என்றான் லெட்சுமணன். “சரி, மகன எங்க. கெண்டி, தேங்காய், சருவம் எல்லாம் எடுத்தாச்சா”, “எல்லாம் இருக்கு, எண்ண வச்சுருவோம்” என லெட்சுமணன் கூற, உடல் வெளியே எடுத்துவரப்பட்டு பொம்பளைகள் வரிசையாக தலைக்கு எண்ணெய், வாய்க்கரிசி போட, மக்கமாரின், கட்டியவளின், உடன்பிறந்தாளின், அம்மையின் அழுகை கூடியது. பின் தயாராய் இருந்த ஆட்கள் கூட்டம் நடந்து நாலுமுக்கு சந்தியை அடைந்தது. “மக்கா, பைப்புல தண்ணி பிடிச்சு தலைல ஊத்திக்கோ, தாய்மாமன் முன்னாடி வாப்பா”, வந்ததும் கெண்டியில் தண்ணீரை நிரப்பி, அதன் நெடுச்சாணாக வைத்த தேங்காயை சரிபார்த்ததும், ஊர்குடிமகன் நூலை சுற்றி கையில் சரிபார்த்து வைத்திருந்தான். “நெத்தில பட்டை அடிச்சுக்கோ, தாய்மாமா நூல வலதுபக்கமா மாட்டி, இடது தோள்பட்டைல தொங்கவிடு” என்றான் லெட்சுமணன். “நீர்குடம் தூக்குறவங்களும் குளிச்சு பட்டை போட்டுக்க” என்றபடியே உயரமான நால்வரை அழைத்து கையில் மாங்கொப்பை கொஞ்சமாய் கொடுத்து, வேட்டியை விரித்து அதன்முனையோடு சேர்த்து, நீர்மாலை போகும் மகனோடு போகவேண்டும் என எங்கோடியா சொல்லிக்கொண்டிருந்தார்.
சரியாய் நாலுமுக்கு சந்தியில் வைத்திருந்த கெண்டியை, அதன் மேலோடு நீட்டமாய் வைத்திருந்த தேங்காயோடு சேர்த்து தாய்மாமன் எடுத்து மகன் தலையில் வைத்தான். கூடவே உயரமான நால்வர் வேஷ்டியை கெண்டிக்கு மேலே தூக்கி செல்ல, எதிரில் என்ன வேலையாக சென்றார்களோ! அனைவரும் வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். ஒப்பாரி சத்தம் தெருவிலே சோகமாய் ஒலிக்கும் புல்லாங்குழலின் வலியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அடுத்து பிறந்தவீடு கோடியாய் சேலைகள் கட்டியவளை மேலும் அழவைக்க, மகன் கையால் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பாட்டி, ஒவ்வொன்றாய் நடக்க, செத்தவன் இனி வரப்போவதில்லை, இதோ பாருங்கள் இவன்தான் உன்னோடு வாழ்ந்து தீர்த்தான். முடிந்துவிட்டது, மகனே, மகளே, நீ இவனை அதிகம் நேசித்தாயே, இல்லை வெறுத்தாயே. பாவம் குடிகாரன். இனி குடி, குடி என அவன் நாவு துடிக்காது. அலையாத தாகம் கொண்ட இவன் குடிவயிறு, கங்குகள் பொட்டி தெறிக்கும் குழியில் கரைய போகிறது. கடைசியில் சாம்பலே மிச்சம். அதுவும் உங்களுக்கு அல்ல.
பழையாற்றின் இடப்புறமாய் கீழிறங்கி பாடை சென்றுகொண்டிருந்தது. கோழிக்கொண்டையும், செவ்வந்தியும் சாலையை நிரப்ப, கொஞ்சம் நடப்பவரின் காலில் மிதிபட்டு கதறியது, கூடவே வண்டிகளின் சக்கரமும் பூக்களை நசுக்கியது, அலங்கோலம். எங்கோடியா முன்னால் சைக்கிளில் செல்ல, லெட்சுமணன் பாதியில் காணாமல் போனான். பாடை, குழியருகே நெருங்கவும். போனவன், செய்யது பீடியை பற்ற வைத்துக்கொண்டே “பாத்து இறக்குங்கல, அவசரத்துல பொறந்தவனுகளா. பைய பைய”, குரலிலே சாராயவாடையும் குபீரென காற்றிலே வீசியது. “மண்ணு வெட்ட ஆள் உட்டாச்சா. லேய் ஊர்குடிமகன எங்க” கூட்டத்தில் ஒருவன் உரக்க கத்த “மாமா, மிஸ்டர்.பாலு, உங்கள தான் கூப்டுகானுக” லெட்சுமணன் தன்பங்கிற்கு சொல்ல “என்னா லெட்சுமணா, நாசுவன் உனக்கா மாமாவா, தப்பா போயிரும்டே”, “லேய், மக்கா. கிடக்காதோ. அவன நோண்டாத” சிரித்தபடி சொன்னார் எங்கோடி. “எங்க அம்மைக்கு அண்ணன்லா பாலு மாமன். ” பதில் வந்தது லெட்சுமணனிடம் இருந்து.
இறந்தவனின் மகன், இதையெல்லாம் கண்டபடி சிரித்துக்கொண்டிருந்தான். அடுக்கி வைக்கப்பட்ட கதம்பத்தில் பாடையை வைத்து, வாய்கரிசியும், பாலும், கொஞ்சம் சில்லறைக்காசும் ஆம்பளைகள் போட, ஒரு சிறுவன் வலது கையால் போடப்போக “மக்கா, இடது கை” என்றார் எங்கோடி. “ஆண்டவன் எதுக்கு ரெண்டு கைய கொடுத்திருக்கான். ஒன்னு தான் நல்லதுக்குனா, எதுக்குவோய் ரெண்டு. நாம என்னன்னா அதுல நல்லது, கெட்டது பாக்குறோம். நீ எந்த கைல வேணும்னா போடு மக்கா”, எங்கோடியா சிரித்த முகத்துடன் “நீ சொன்னா, மாமனுக்கு மறுபேச்சு உண்டா” என்றார்.
பாடையை கவிழ்த்து ஆண்சவம் தலைக்குப்பிற விழுமாறும், பெண்சவம் படுத்தவாறு கிடத்துவதும், எரியும் போது முதுகெலும்பு உடைந்து மேலே எலும்பு சில்லுகள் தெறிக்குமாறு போவதை தடுக்கும். இதில் லெட்சுமணன் கூட ஒத்தாசைக்கு இருந்தால் எங்கோடியாக்கு மண்டைக்கடி கிடையாது. லாவகமாக பாடையை நவுத்தி கதம்பத்தில் இறக்குவான். இறந்தவனின் மகன், கதம்பையில் கங்கை போட, எல்லாம் சரியாக்கி மேலே வைக்கோல் நிரப்பி மண்ணால் சாந்து பூசி, மூன்று ஓட்டையும் இட்டு ஒழுங்காய் பூசினார்கள்,
இதற்கிடையே இறந்தவனின் கூட்டுக்காரன் உச்சகுடியின் போதையில், வாயில் வழியும் எச்சியோடு “என்னல சடங்கு மயிரு. எல்லாம் உங்க இஷ்டமயிருக்கு மாத்துவீலோ. தேவிடியா பயக்களா. ரூவா, மயிறுனு வாங்க, கொட்டைய அறுத்து தாரேன்”. சட்டென கன்னத்தில் பளீரென ஒரு அடி, லெட்சுமணனின் வலதுகை, அடிவாங்கியவன் சாந்து எழுப்பிய குழியின் தலைமாட்டில் விழுந்தான். “ஒப்பனஓழி, இதே குழில இறக்கிருவேன். என்னல பேச்சு. என்ன சடங்கு மயிரு ஒழுங்கா செய்யல. குடிச்சா வயிறு கிடக்காதோ. கிடக்கணும், இல்ல சங்குதான்” நாக்கை மடித்து சுடலையை போல நின்றான் லெட்சுமணன். “மக்கா நாசுவனுக்காக என்னடே நம்ம ஆள அடிக்க. உம்போக்கு சரியில்ல கேட்டியா” ஏதோ கிழவனின் குரல். எங்கோடி சட்டென சுதாகரித்து இன்னும் பிரச்சனை வேண்டாம் என்பது போல “பின்ன செத்த வீட்டுல, அதுவும் குடிகாரன் செத்தா பெகலம் இல்லாம சவம் எரியுமா. லெட்சுமணா நீ ஒதுங்கு. ஊர்குடிமகனுக்கு வாய் இல்லையா. அவன் பேசட்டும். என்ன பாலு. சடங்குல குறை இருக்கா.”, “ரூவா தர்ரதுக்கு மடி இருக்க ஆட்களுக்கு இப்புடி சண்ட பிடிச்சாதான், இத சாக்கா வச்சு கடைசில குறைக்க முடியும்” பாலுவின் குரல். “குழி நிரப்ப வேலைல வாய பாத்தியால கிழடுக்கு, மண்டைய தட்டி வேல வேங்கணும் ” கூட்டத்தில் ஒரு இளைஞனின் குரல். “ஊம்புவ, தட்டுல. நெஞ்சுல திராணி இருக்க வெள்ளாளன் ஒருத்தன் இருந்தா பாலு மாமா தலைய தட்டுல.” மீண்டும் சுடலை ஆனான் லெட்சுமணன். என்ன நடக்கிறதோ, புரியாமல் இறந்தவனின் மகன் நின்றுகொண்டிருந்தான். “இதெல்லாம் கண்டுக்காத மக்ளே, உங்க அப்பன் பண்ணாத கூத்தா, லேய் பாலு அடுத்த வேலைய பாரு. “ மொட்டை போட பாலு மகனை அழைத்துச்சென்றார்.
இதற்குள் சலசலப்பு பெருகி குடிகாரக்கூட்டம் கத்தியது. எங்கோடியா இதையெல்லாம் பார்த்து சிரித்தபடி “ஊ த எங்கடே”, “யாரு ஊத்து. “ குலுங்கி சிரித்தபடி சண்முகம் கேட்டார். “ஊர்த் தலைவரு எங்க. இவ்ளோ கூத்துக்கும் ஆள காணுமே. எங்க பேள கீள போய்ட்டாரா” எங்கோடி. “அவரு பொம்பள படித்துறை பக்கம்லா நிக்காரு மாமா” லெட்சுமணன். “எல்லாவனுக்கும் வாய் கூடி தான் நிக்குடே. சரி கணக்கு எல்லாம் ஏற்கனவே போட்ருபியே எங்கோடியா . சொல்லும் உம்பங்கு என்ன. உனக்கு வரும்படி இதானையா. என்ன சொல்லுகீறு” ஊ த வின் சொல்லுக்கும் சிரிக்க ஆள் இல்லாமல் போகுமா!.
இதற்கிடையில் மொட்டையிட்ட மகனை பாலு குளித்துவர சொல்ல, ஆட்கள் மயான சுடலையின் இடப்புறம் எழுப்பிய திண்டில் உட்கார்ந்து “சரி, பாலு. எவ்ளோ ஆச்சு. கணக்க சொல்லு. லெட்சுமணா நீ பேசக்கூடாது” என்றார் ஊ த. “யாரும் பேசல. ஆனா பாடைக்கு, குழி வெட்டுக்கு உள்ள சக்கரத்தை மட்டும் கொடும்” என்றார் எங்கோடி. “உமக்க பங்கையும் சேக்கலையா ” கூட்டத்தில் ஒருவன் சொல்ல, “லேய், சக்கரம் வாங்க மனசு உண்டு. ஆனா இருக்கப்பட்டவன்ட்ட கேப்பேன். இல்லாதவன்ட்ட என்ன கேக்க. எம்பங்கு, லெட்சுமணன் பங்கு இதுல கிடையாதுவோய். நமக்கும் நாளைக்கு இதானயா நிலமை” என்றார் எங்கோடி. “மாமனுக்கு வெள்ளாளக்குடில கிடந்தாலும் அவனுக புத்தி இன்னும் விளங்களையே. நாறபயக்க”, “லெட்சுமணா வாய் கிடக்காது” காட்டமாக கூறினார் ஊர்த்தலைவர். எங்கோடியாவும், லெட்சுமணனும் வடக்காறை நோக்கி நடக்க, லெட்சுமணன் மடியில் இருந்த அரைப்பாட்டில் ஓல்ட் மங்கை வெளியே எடுத்தான். மொட்டைத்தலை மகன் மாத்திரம் அவர்கள் போகும் வழியை பார்த்துக்கொண்டிருந்தான். கூடவே, எரியும் பிணமும்.